Wednesday, July 31, 2013

தெலங்கானா - போராட்ட வரலாறும், கோரிக்கை நியாயங்களும்

தெலங்கானா - போராட்ட வரலாறும், கோரிக்கை நியாயங்களும்

தங்கள் மீதான ஒடுக்குமுறைகளை எதிர்த்து பல ஆண்டுகளாக வீரம் செறிந்த பல போராட்டங்களை நடத்திக்கொண்டிருப்பவர்கள் தெலங்கானா மக்கள். தங்கள் உழைப்பைச் சுரண்டி கடுமையான அடக்குமுறைகளைத் தங்கள் மீது ஏவிய நிலப்பிரபுக்களையும், நிஜாம் மன்னனையும் எதிர்த்து, கம்யூனிசப் பாதையை பற்றிக்கொண்டு, ஆயுதம் தாங்கிய வீரமிக்க போராட்ட வரலாற்றை எழுதியவர்கள் தெலங்கானா விவசாயிகளும் பழங்குடிகளும். தங்கள் கண் முன்னேயே, கணவன்மார்களையும், சகோதரர்களையும், குழந்தைகளையும் கொன்ற போதும், பாலியல் வன்முறைகளுக்கும், கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளான போதும், ஆயுதம் ஏந்தி காட்டிலும் மேட்டிலும் அலைய நேரிட்ட போதும், ஆண்களோடு சமமாய் நின்று துணிச்சலோடு போராடியவர்கள் தெலங்கானா பெண்கள். இந்தியா 1947இல் சுதந்திரம் அடைந்த போது, இந்தியாவோடு இணைய மறுத்த நிஜாம் மன்னரின் முடிவை எதிர்த்து, நிஜாமின் ரசாக்கார் என்ற கொடூரமான படை அணியை விரட்டி அடித்தவர்கள். அடக்குமுறைக்கான போராட்டத்தில், நூற்றுக்கணக்கில் தங்கள் இன்னுயிரை ஈந்தவர்கள். வரலாற்றுத் தொடர்ச்சியில் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில், ஒரே மொழி, பண்பாடு என்ற அடையாளத்துடன் இருப்பதால் ஓர் இன மக்களாகத் தங்களை உணர்பவர்கள்.


தெலங்கானா மாநிலமும்- அதில் உள்ள 10 மாவட்டங்களும்

500 வருடங்கள் நிஜாம் மன்னர்களின் ஒடுக்குமுறை ஆட்சியின் கீழ் இருந்த தெலங்கானா மக்கள், கல்வி, தொழில் வளர்ச்சி, அடிப்படை கட்டமைப்பு, மொழி, பண்பாட்டு வளர்ச்சி போன்றவற்றில் பின் தங்கிப் போயினர். அதே கால கட்டத்தில், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் கீழ் இருந்த ஆந்திரா மக்கள் கல்வி, விவசாயம், மொழி, பண்பாடு வளர்ச்சியில் முன்னேறிய நிலையில் இருந்தனர். இந்த நிலையில், காஷ்மீர், திருவிதாங்கூர் உள்ளிட்ட சமஸ்தானங்களை எப்படி இராணுவ பலத்தைக் காட்டி இந்திய அரசு இணைத்ததோ, அதேபோல், இந்திய யூனியனுடன் ஹைதராபாத் மாநிலம் என்ற பெயரில், தெலங்கானா பகுதியை 1948இல் இணைத்துக் கொண்டது. ஹைதராபாத்தைக் கைப்பற்ற வந்த இந்திய இராணுவத்தினரை தங்களை நிஜாம் மன்னனின் ஒடுக்குமுறையில் இருந்து காப்பாற்ற வந்தவர்கள் என்று வரவேற்று மகிழ்ந்தனர் தெலங்கானாவின் உழைக்கும் மக்கள். ஆனால், நிஜாம் மன்னனுக்கும், நிலப்பிரபுக்களுக்கும் எதிரான அவர்களின் போராட்டத்தை நிலப்பிரபுக்களின் நலன்களுக்காக அழித்து ஒழித்தது இந்திய அரசு. 1952இல் தெலுங்கு மொழி பேசும் பகுதிகளை இணைத்து ஆந்திரா தனி மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்த பொட்டி ஸ்ரீராமுலு இறந்து போனார். 1955இல் ஆந்திரா மாநிலத்துடனான இணைப்பு குறித்துக் கேட்டபோது, பின்தங்கிய நிலையில் இருந்த தெலங்கானா மக்கள், தங்கள் எதிர்கால வளர்ச்சி குறித்த கவலையை மாநில மறுசீரமைப்பு ஆணையத்திடம் முன் வைத்தனர். தெலங்கானா மக்களின் கவலையை கருத்தில் கொண்ட ஆணையம் '1961இல் நடக்கும் பொதுத் தேர்தலுக்குப் பிறகு, ஹைதராபாத் மாநில சட்டமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் விருப்பம் தெரிவித்தால், ஹைதராபாத் மாநிலத்தை ஆந்திரா மாநிலத்துடன் இணைக்கலாம்' என்றது. ஆனால், இந்திய ஆளும் வர்க்கத்தில் அங்கம் வகித்துக் கொண்டிருந்த ஆந்திர முதலாளிகள், நிலப்பிரபுக்களின் நலன்களுக்கு முன்னால் தெலங்கானா மக்களின் கோரிக்கையைத் தாங்கி வந்த இந்த அறிக்கை காணாமல் போனது. 'ஜென்டில்மேன் ஒப்பந்தம்' என்ற முக்கிய நிபந்தனைகள் கொண்ட ஒப்பந்தத்தின் மூலம் தெலங்கானா பகுதியை ஆந்திராவுடன் இணைத்தனர்.


மக்கள் தொகையில் 40% உள்ள தெலங்கானா மக்களுக்கு கல்வியில், அரசு வேலைவாய்ப்பில் மூன்றில் ஒரு பங்கு, அமைச்சரவையில் 60 : 40 என்ற வீதத்தில் தெலங்கானா மக்களுக்குப் பிரதிநிதித்துவம், முதல்வர் அல்லது துணை முதல்வர் வாய்ப்பு, தெலங்கானா பகுதி நில வர்த்தகத்தை கண்காணிக்க மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய பிராந்தியக் குழுக்கள், புதிய நீர் பாசனத் திட்டங்கள், புதிய கல்வி நிறுவனங்கள், தொழில் வளர்ச்சித் திட்டங்கள், தெலங்கானா பகுதியில் உள்ள கல்வி நிறுவனங்கள், அரசு நிறுவன வேலைவாய்ப்பில் தெலங்கானா பகுதி மக்களுக்கே முன்னுரிமை (முல்கி விதிகள்) போன்ற முக்கிய நிபந்தனைகள் 'ஜென்டில்மேன் ஒப்பந்தத்தில்' வைக்கப்பட்டன. இந்த நிபந்தனைகளை நடைமுறைப்படுத்த 1955 தொடங்கி 2009 வரை அண்மையில் அமைக்கப்பட்ட ஸ்ரீ கிருஷ்ணா ஆணையம் உள்ளிட்ட 9 ஆணையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆந்திர அரசின் ஆணைகள், அனைத்துக் கட்சிக் கூட்டங்கள், இந்திரா காந்தி தொடங்கி ப.சிதம்பரம் வரை அளித்த பல்வேறு வாக்குறுதிகள் என இவை அனைத்தும் காகிதத்தில் எழுதப்பட்டதாக மட்டுமே இருக்க, 1969 தொடங்கி இன்று வரை பல்வேறு வகையான போராட்டங்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. 1969இல் நடந்த போராட்டத்தில் மட்டும் 370 மாணவர்கள், இளைஞர்கள் காவல் துறை துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர். இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் 6 பேர் தீக்குளித்ததுபோல், ஈழத் தமிழர்கள் மீதான போரை நிறுத்த வலியுறுத்தி முத்துக்குமார் உள்ளிட்ட 17 பேர் தீக்குளித்ததுபோல், தெலுங்கானா மாநிலம் கோரி இது வரை 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்துள்ளனர். இப்படி தெலங்கானா இளைஞர்கள் தீயில் தங்களை மாய்த்துக் கொள்வதும், அதை இந்தியத் துணைக்கண்டம் மௌனமாகக் கடந்து செல்வதும் வாடிக்கையாக உள்ளது.



ஆந்திர மாநிலத்தின் 45 விழுக்காடு காடுகளையும், நாட்டின் நிலக்கரி வளத்தின் 20 விழுக்காட்டையும், பாக்சைட், மைக்கா போன்ற கனிம வளங்களையும், சிமெண்ட் உற்பத்திக்கான மூலப்பொருட்களான சுண்ணாம்பு கற்களையும், கிருஷ்ணா, கோதாவரி போன்ற ஆறுகளின் 50 விழுக்காட்டிற்கு மேலான நீர்ப் பிடிப்புப் பகுதிகளையும் கொண்ட வளமான பூமி தெலங்கானா. எல்லா வளங்களையும் பெற்ற வளமான பகுதியாக இருந்தாலும் இன்றளவில் ஆந்திர மாநிலத்தின் 15 லட்சம் அரசு பணியிடங்களில் வெறும் 2 லட்சம் பணியிடங்களில் மட்டும் தெலங்கானா மக்கள். 21 பல்கலைக் கழகங்களில் ஹைதராபாத்தைத் தவிர்த்து ஒரே ஒரு பல்கலைக்கழகம் மட்டும் தெலங்கானா பகுதியில். கிருஷ்ணா ஆற்று நீரில் 80 விழுக்காடு கடலோர ஆந்திர விவசாயத்திற்கும், 15 விழுக்காட்டிற்குக் குறைவான நீர் மட்டும் தெலங்கானா விவசாயத்திற்கு. கோதாவரி ஆற்று நீரைப் பயன்படுத்தி கடலோர ஆந்திராவில் 12 லட்சம் ஏக்கர் நிலங்களில் நீர்ப்பாசனமும், தெலங்கானாவில் வெறும் 4 லட்சம் ஏக்கர் நிலங்களில் மட்டும் விவசாயம். பின்தங்கிய தெலங்கானா பகுதியின் பெயரில் வாங்கப்படும் உலக வங்கியின் கடன், மத்திய அரசின் நிதி உதவி, ஆந்திராவின் வளர்ச்சிக்குச் செலவிடப்படுகிறது - கடன் சுமை மட்டும் தெலங்கானா மக்களின் தலையில். தொடங்கப்படும் புதிய தொழில் நிறுவனங்கள் எல்லாம் ஆந்திரப் பகுதிகளில். தொடங்கப்படும் புதிய நீர்பாசன வசதிகள் எல்லாம் ஆந்திரப் பகுதிகளின் விவசாய மேம்பாட்டிற்கு. தெலங்கானா மக்கள் இப்படி பல்வேறு வகையில் ஒடுக்குமுறைக்கு உள்ளாகியும், மொழி, பண்பாட்டு அடிப்படையில் சிறுமைப்படுத்தப்பட்டும் இரண்டாம் தரக் குடிமக்களாக தங்கள் சொந்த மண்ணில் வாழ்ந்து வருகின்றனர். ஆற்று நீரை, கனிம வளங்களை, நிதி உதவிகளை, உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை, வேலைவாய்ப்புகளை என எதையும் தங்கள் மக்களின் வளர்ச்சிக்குப் பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.


இவ்வண்ணம், தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கை நியாயங்களின் மீது நிமிர்ந்து நிற்கின்றது!

வாழ்க தெலங்கானா!



***************
தெலங்கானா - சில கேள்விகளும், பதில்களூம்.


ஒரே மொழி பேசும் மக்களுக்கு எதற்காக இரண்டு மாநிலங்கள்?

ஒரு மொழி பேசுபவர்களுக்கு ஒரு மாநிலம்தான் என்பது விதியாக இருந்தால், எதற்காக இந்தி மொழி பேசுபவர்களாக சொல்லப்படுபவர்களுக்கு 9 மாநிலங்கள் உள்ளன? இந்திக்கு அடுத்து, அதிகப்படியான மக்களால் பேசப்படும் மொழி தெலுங்கு. அம்மக்களுக்கு இரண்டு மாநிலங்கள் இருப்பதால் என்ன தவறு? மேலும் ஆந்திர மக்களில் சிலர் தெலங்கானா பகுதியில் பேசப்படும் தெலுங்கு சரியான தெலுங்கு இல்லை என்றும், சிலர் அது தெலுங்கே கிடையாது என்றும் கூறி, எள்ளி நகையாடி வருகின்றனர். தெலங்கானா மக்கள் தனி மாநிலக் கோரிக்கை எழுப்பும்போது தெலுங்கு பேசுபவர்களுக்கு எதற்கு இரண்டு மாநிலங்கள் என முட்டுக்கட்டை போடுவதும் இவர்கள்தான்...


ஹைதராபாத்தை ஆந்திர மக்கள் உருவாக்கினார்கள். அவர்களை இப்பொழுது அங்கிருந்து வெளியேறச் சொல்வது சரியா?

நிஜாமின் ஆட்சிக்காலத்தில் தெலங்கானா கிராம மக்களின் வியர்வையினாலும் உழைப்பினாலும் உருவாக்கப்பட்டது ஹைதராபாத் நகரம். தெலங்கானாவை ஆந்திராவுடன் சேர்க்கவேண்டும் என ஆந்திர மக்கள் முடிவு செய்ததற்கு ஒரு காரணம் ஹைதராபாத் நகரம். இதனால் அவர்களுக்கு ஏற்கெனவே உருவாக்கப்பட்ட ஒரு தலைநகரம் உடனடியாகக் கிடைக்கும் (1956 வரை ஆந்திராவின் தலைநகரம் கர்னூல்) என்பதுதான் காரணம். மேலும் தெலங்கானாவின் மீது உள்ள பாசத்தினால் அல்ல; தங்களது தேவை கருதியே பணக்கார ஆந்திரர்கள் ஹைதராபாத்தில் வந்து தங்கத் தொடங்கினர். ஹைதராபாத் இன்றும் வளர்வதற்குக் காரணம் ஆந்திரர்கள் அல்ல, தங்கள் வாழ்வாதாரத்திற்காக அங்கு வந்து வேலை செய்யும் தெலங்கானா கிராம மக்களின் உழைப்பினால்தான். ஏனென்றால் ஆளும் வர்க்கத்தின் தொடர்ந்த புறக்கணிப்பினாலும், பருவ மழைகள் பொய்த்ததாலும் தெலங்கானா கிராமப் பொருளாதாரம் முற்றிலுமாகச் சிதைந்துவிட்டது. அதுமட்டுமின்றி ஹைதராபாத்தில் இருந்து யாரும் வெளியேறத் தேவையில்லை. இந்தியாவில் யார் வேண்டுமென்றாலும் எங்கு வேண்டுமென்றாலும் சென்று வாழலாம். மேலும் ஹைதராபாத் ஒரு பல்கலாச்சார நகரம். அங்கு பல மொழி பேசும் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். அங்கு நடப்பது இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை அல்ல, தெலங்கானா மக்கள் தங்களைத் தாங்களே நிர்வகித்துக் கொள்ளவும், அரசியல் செய்து கொள்வதற்குமான ஒரு மாநில உருவாக்கம் மட்டுமே. அங்கு போய் தங்குபவர்கள் தாராளமாகத் தங்கி தெலங்கானாவின் வெற்றிக்கு அவர்கள் பங்களிப்பை கொடுக்கலாம்...


சிறிய மாநிலங்கள் தோன்றினால் அவை நீடித்தும் உறுதியாகவும் இருக்குமா?

இந்தியாவில் தற்பொழுது மொத்தம் 35 மாநிலங்கள் உள்ளன (28 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள்). இதில் உள்ள 70% மாநிலங்களை விட அதிகமான மக்கள் தொகையை (3 கோடிக்கும் மேல்) தெலங்கானா கொண்டுள்ளது. தெலங்கானாவை விடக் குறைந்த மக்கள் தொகை கொண்ட 25 மாநிலங்கள் நீடித்தும் உறுதியாகவும் இருக்கும் போது தெலங்கானா மட்டும் நீடித்து இருக்க முடியாதா?


தெலங்கானா பகுதி வளர்ச்சியில் பின்தங்கிய / புறக்கணிக்கப்பட்ட பகுதி என்ற காரணத்திற்காகவே தனி மாநிலம் கேட்பது சரியா?

பின்தங்கிய நிலை என்பது தெலங்கானா தனி மாநிலம் கேட்பதற்கான ஒரு காரணம் மட்டுமே. ஆனால் அதுவே முழுமையான காரணமல்ல. தெலங்கானாவில் உள்ள பத்து மாவட்டங்களும் ஒரே வரலாற்றுப் பின்புலமும், தொடர்ச்சியான நிலப்பரப்பும், பண்பாட்டுத் தொடர்பும், ஒரே மொழியும், நாம் என்ற ஓர்மையும் கொண்டுள்ளன. இதன் காரணமாகவும்தான் தெலங்கானா மக்கள் தனிமாநிலம் கோருகின்றார்களே தவிர வெறும் வளர்ச்சிப் புறக்கணிப்பு மட்டுமே அதற்குக் காரணமல்ல...


தெலங்கானா கோரிக்கை வேலையில்லாத சில அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்டது என்று சொல்கின்றார்களே?

வேலையில்லாத அரசியில்வாதிகளின் வெற்று முழக்கமல்ல "தெலங்கானா". இது மக்கள் கோரிக்கை என்பதை அவர்களின் போராட்ட வரலாறு சொல்லும். இக்கோரிக்கைக்காக இதுவரை பல நூறுபேர் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். எந்த ஒரு மக்கள்திரள் போராட்டத்திலும் வேலையில்லாத அரசியல்வாதிகள் நுழைவது இயல்பே. ஆனால் அவர்கள் இருந்தாலும், போனாலும் கோரிக்கை நிறைவேறாமல் மக்கள் போராட்டம் ஓயாது.


ஒரே மொழி பேசும் மக்களைப் பிரிப்பது தேசியத்திற்கு எதிரானது இல்லையா?


தேசியம் என்பது வரலாற்று வழியில் உருவாவது. தொடர்ச்சியான நிலப்பரப்பிலிருந்தாலும் ஒரே மொழி பேசும் 21 அரபு நாடுகள் இருக்கின்றன. எனவே ஒரே மொழி மட்டுமே தேசியத்திற்கான வரையறை அல்ல என்ற சிக்கலான கோட்பாடு இங்கு நினைவுகூரத்தக்கது. மேலும், மக்களை யாரும் பிரிக்கவில்லை. ஆந்திர மாநில உருவாக்கத்தின் பின்னர் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்ட மக்கள் தங்களைத் தாங்களே நிர்வகிக்கவும், ஆளவும் ஆன ஒரு மாநிலத்தைத் தான் கோருகின்றார்கள். ஒரே மொழி பேசுகின்றார்கள் என்பதற்காக பிடிக்காத இரண்டு பகுதி மக்களை சேர்ந்து வாழச் சொல்வதுதான் எதிர்காலத்தில் தேசிய ஓர்மையோ அல்லது மேலான ஒற்றுமையோ உருவாவதற்கு இருக்கும் வாய்ப்புகளைச் சிதைக்குமே அன்றி அவர்கள் அரசியல்ரீதியாகப் பிரிந்து போவதல்ல.

குறிப்பு-தெலங்கானா மாநிலம் ஒரு வரலாற்று தேவை என்ற தலைப்பில் சேவ் தமிழ்சு இயக்கம் நடத்திய அரங்க கூட்டத்தின் துண்டறிக்கைக்காக எழுதப்பட்ட இக்கட்டுரையை காலத்தின் தேவை கருதி மீள்பிரசூரிக்கின்றோம்.

சேவ் தமிழ்சு இயக்கம்.

Tuesday, July 30, 2013

பெண் இயங்கியலின் மீதான வன்முறையே ஆணாதிக்கம்



பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், சமூகக் கட்டுப்பாடுகள், உளவியல் பாதிப்புகள் மற்றும் சட்ட உரிமைகள் - பற்றிய அரங்கக் கூட்டம் சேவ் தமிழ்சு இயக்கத்தின் பெண் உறுப்பினர்களால் ஒருங்கிணைக்கப் பட்டு, கடந்த வாரம் சனிக்கிழமை, சென்னை தியாகராய நகரில் நடந்து முடிந்தது. கூட்டத்தின் தொடக்கமாக, ”உங்களுள் ஒருத்தி” என்ற ஆவணப்படம் திரையிடப் பட்டது. அப்படத்தின் இயக்குனரும் பெண்ணிய செயற்பாட்டாளருமான தோழர் ரேவதியும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.


தோழர் பரிமளா :

சேவ் தமிழ்சு இயக்கத்தின் தோற்றம் பற்றிய அறிமுக உரையுடன் தொடங்கிய தோழர் பரிமளா, பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்முறைகளுக்கு எதிரான களச் செயல்பாடுகளில் சேவ் தமிழ்சு இயக்கத்தின் பங்கிணை குறிப்பிட்டார். சில மாதங்களுக்கு முன்பு பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து சென்னை சோலிங்க நல்லூரில் ஒருங்கிணைக்கப் பட்ட மனித சங்கிலி பற்றி நினைவு கூர்ந்தார். பெண்கள் வேலைக்கு போகிறார்கள்.ஆணுக்கு நிகராக எல்லா துறைகளிலும் சிறந்து விளங்குகிறார்கள். இன்னுமா பெண்ணுரிமை பற்றி பேச வேண்டும் என்ற பொதுபுத்தியில் உறைந்திருக்கும் ஒரு தவறான கருத்தியல் பற்றி பேசும் போது, திருப்பூர் போன்ற நகரங்களில் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே பெண்களை படிக்க வைத்து, சுமங்கலி திட்டத்தில் கொத்தடிமைகளாகவும், ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்களின் நிலை பற்றியும் குறிப்பிட்டார். நவீன துறைகளான தகவல் தொழில் நுட்பத் துறைகளிலும் கூட இந்த பாலின பாகுபாடு அதிகமாக இருக்கிறது. மேலும் ஒரு பெண் தன் மீது நிகழ்த்தப் படும் பாலியல் வன்கொடுமை பற்றி பொது வெளியில் சொல்ல முடியாதவளாகவே இன்னும் இருக்கிறாள். அப்படியே அவள் தனக்கு இழைக்கப் பட்ட கொடுமை பற்றி பேசும் போது,ஆணாதிக்க சமூகம் எத்தகையதொரு உளவியல் தாக்குதலை அவள் மீது தொடுக்கிறது ? மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட மற்ற அனைத்து தொடர் நிகழ்வுகளும் ஆணாதிக்க சமூகத்தின் துணையோடு தான் நடக்கிறது. ஒருமுறை ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி, பல்வேறு இன்னல்களைத் தாண்டி நீதித்துறையை அணுகும் போது, மீண்டும் பலமுறை அவளை சொற்களால் பாலியல் வன்முறைக்குள்ளாக்குகிறது இச்சமூகம்.



நடைமுறையில் இருக்கும் நீதித்துறை வழிமுறைகளில், தனக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைகளுக்கான நீதியைப் பெற, ஒரு பெண் என்பதனாலேயே பல்வேறு போராட்டங்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. இப்படியான சூழலில் ஒரு பெண் வெளியில் உண்மைகளைச் சொல்வதற்கே முடியாத நிலை தான் எஞ்சுகிறது. மேலும் தனது உடல் ரீதியான விஷயங்களைக் கூட அவள் வெளியே சொல்ல முடியாமல் தவிக்கும் சூழலும் இங்கு இருக்கிறது. மாதவிடாய் ஏற்பட்டாலோ, சிறுநீர் கழிக்க வேண்டுமென்றாலும் கூட, நவீன அலுவலக‌ங்களில் கூட தன் உடன் பணி புரியும் ஆண் நண்பர்களிடமோ, மேலாளரிடமோ கூட சொல்ல முடியாமல் தவிக்கிறாள் பெண்.


அண்மையில் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் சென்னைக்கு வரும் பேருந்தில் இரண்டு ஆண்களால் சீண்டப் பட்ட போது, அவர் எதிர்த்து போராடிய நிகழ்வையும், அதனால் அவர் எதிர்கொண்ட வசவுகளையும் பற்றி குறிப்பிட்டார். பொதுவெளியில் ஒரு பெண்ணுக்கு நிகழும் கொடுமைகளை எதிர்த்து, மற்ற பெண்களும் குரல் கொடுக்க வேண்டிய அவசியமிருக்கிறது. அத்தகையதொரு சமூக மாற்றத்தையும் வளர்ச்சியையும் சேவ் தமிழ்சு இயக்கம் விரும்புகிறது. அதன் தொடர் முயற்சியாகத் தான் இக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருப்பதாக தனது தொடக்க உரையை பதிவு செய்த தோழர் பரிமளா, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி பேராசிரியையும், பெண்ணிய செயற்பாட்டாளருமான தோழர் அ.மங்கையை பேச அழைத்தார்.


தோழர் அ.மங்கை :

திரையிடப்பட்ட ஆவணப்படம் ஆற்றாமையையும் கோபத்தையும் துயரத்தையும் தனக்குள் ஏற்படுத்தியதாக தெரிவித்தார் தோழர் மங்கை, தந்தைமை ஆதிக்க உணர்வுப் பற்றி தனது கருத்துகளை பதிவு செய்தார். அவரின் உரையில் இருந்த சில முக்கிய கருத்துகளை மட்டும் இங்கே தருகிறோம்.


தந்தைமை ஆதிக்க உணர்வு சிக்கல்களில் முதன்மையானதாக, ஒரு பெண் ஆணிலை நோக்கோடு ( Male Gaze) பார்க்கப் படுவதே. உதாரணமாக, ஒரு பெண் ஒரு உடையை தேர்ந்தெடுக்கும் போது கூட, ஆண்கள் இதை எப்படி பார்ப்பார்கள், எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று தான் முதலில் சிந்திக்கிறாள். ஒரு பெண்ணுக்கு ஒரு பாலியல் வன்கொடுமை நிகழும் போது, அவள் ஏன் அந்த மாதிரியான உடையை உடுத்தினாள் அதனால் தான் அப்படி நடந்தது? என்ற கேள்விகள் வரும் போது நாமும் நியாயந்தானே என்று கடந்து செல்கிறோம்.


நகரத்தின் மையத்தில் இருக்கக் கூடிய ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரிகளில் கூட, மாணவிகள் இரவு தாமதமாகும் கல்லூரி விழாக்களுக்கு தனது சகோதரர் அல்லது தந்தை துணையோடு தான் வருகின்றனர். இதற்கு காரணம் ஒரு பெண் பாதுக்காக்கப் பட வேண்டியவள் என்ற கருத்தியல் தான். ”ஒரு பெண் பாதுகாக்கப் பட வேண்டியவள்” என்ற கருத்தியல் இருக்கும் வரை, பெண் விடுதலை சாத்தியமில்லை.

காதலனாக இருப்பவர்கள் கூட பெண்களிடன் வரதட்சணை கேட்கிறார்கள். ஒரு பெண்ணுக்கு திருமணம் செய்து வைப்பதே, அவளை முழுமையாக்குகிறது ( complete women) என்று தான் எல்லா பெற்றோர்களும் நினைக்கின்றனர்.அதனால் நிச்சயம் ஆன பெண்ணை, மூளைச் சலவை செய்து, அவளை வீட்டை விட்டு வெளியே அனுப்பாமல், பாதுக்காக்கப் பட வேண்டிய பொருளாக மறைத்து வைக்கிறது இச்சமூகம். சமூக நியதி என்பது, ஒரு பெண்ணின் புனிதத்தில் இருப்பதாக அவர்கள் கருதுகின்றனர்.பெண்ணின் புனிதத்தில் தான் அவர்களின் குடும்ப அஸ்திவாரமே இருக்கிறது. திருவள்ளுவரின் பெய்யென பெய்யும் மழை திருக்குறள் இதே கருத்தை வலியுறுத்துவதையும் குறிப்பிட்டார் தோழர் மங்கை.



சமூக மாற்றம் (Social Mobility) நிகழ்ந்து, பெண்கள் வேலைக்கு போய் ஒரு இயங்கியல் உருவானாலும் கூட, கட்டப்பட்ட மூக்கணாங்கயிற்றின் நீளம் அதிகரித்திருக்கிறதே தவிர, அது வெட்டப்படவில்லை. பெண்ணின் புனிதத்தின் மீது கட்டப்பட்ட சாதியத்திலிருந்து தான், “எங்கள் பெண்ணை அந்நிய ஆண்கள் தொடுவதை அனுமதிக்க மாட்டோம்” என்ற ஆணாதிக்க பேச்சுகள் வெளி வருகின்றன.

ஆவணப் படத்தில் இருந்த ரீட்டா மேரி துவண்டு போயிருந்த நிலையில், அவரோடு போராட ஒரு பெண்கள் இயக்கமே நட்பாக இருந்த நிலைமை, ஏன் இளவரசனுக்கும், திவ்யாவுக்கும் கிடைக்க வில்லை? பெண்கள் தமக்கான சட்ட உரிமைகளைப் பெற ஒரு பெரிய போராட்டமே நடத்த வேண்டியிருக்கிறது. குடும்ப வன்முறை பற்றி நாம் என்ன புரிந்து வைத்திருக்கிறோம்? பக்கத்து வீட்டில் அதிக சத்தம் கேட்டாலும், குடும்ப வன்முறை சட்டத்தின் மூலம் நாம் புகார் கொடுக்கலாம் என்ற சட்டத் திருத்தமும் இருக்கிறது.


இறுக்கமான சாதிய கட்டமைப்புகளை நிலை நிறுத்துவதற்கு, பெண்ணின் புனிதம் தேவைப்படுகிறது. தாழ்வு மனப்பான்மையோடு இருக்கும் ஒரு பெண் தான், தான் பெண்மையோடு இருப்பதாக நம்புகிறாள். உதாரணமாக, ஒரு பெட்டியை என்னால் தூக்க முடியாது. காரணம் நான் பெண் என்று தன்னையே கட்டுப் படுத்திக் கொள்ளும் பெண் தான், தன் பெண்மையை நம்புவதாக அவர் குறிப்பிட்டார். மேலும் முற்போக்கு வட்டாரங்களிலேயே ஆணாதிக்கம் என்பது இலை மறை காயாக மறைந்திருக்கிறது. “நீங்க சொல்றதெல்லாம் கரெக்ட்டு தோழர். ஆனா நீங்க அப்படி கத்தியிருக்கக் கூடாது” என்று சமயங்களில் தங்கள ஆணாதிக்கத்தை வெளிப்படும் முற்போக்கு வாதிகளும் இருக்கின்றனர். ஆக எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு என்பது, பரஸ்பர மரியாதை கொடுப்பதிலிருந்து தான் கிடைக்க முடியும் என்று தனது கருத்துகளை பதிவு செய்தார் தோழர் அ.மங்கை.


உளவியல் மருத்துவர் தோழர் ருத்ரன்:

பெண்கள் தெய்வமாக இருந்தாலும் கூட அப் பெண் தெய்வங்களுக்கு ஆண் துணை தேவைப் படுகிறது என்பதை சித்தரிக்கும் மாமல்லபுர துர்கை சிலையை பற்றி குறிப்பிட்டு தனது உரையை தொடங்கினார் ருத்ரன். ஆகவே ஒரு பெண் எத்தனை துறைகளில் முன்னேற்றமடைந்தாலும், ஆண் தன் பார்வையில் தனக்கு கீழ் தான் பெண் என்று நினைக்கிறான். தற்போதுள்ள சமூகத்தில் திரைப்படம் சார்ந்த அறிவு தான் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.பொறுக்கித்தனம் தான் இங்கு ஹீரோயிசமாக போற்றப் படுகிறது.


மேலும் சில உளவியல் தகவல்களையும் பகிர்ந்து கொண்டார் தோழர் ருத்ரன். தனக்கெதிராக ஒரு கொடுமை நடக்கும் போது மனித மனம் அதை எப்படி எதிர்கொள்கிறது. ஒன்று பின்வாங்குகிறது அல்லது மோதிப்பார்க்க தலைப்படுகிறது. பின்வாங்கும் மனம் தாம் எங்கே தோற்றுப் போய் அவமானப் படுத்தப் படுவோமோ என்று பயந்து, பின்வாங்குகிறது. மோதிப் பார்க்க நினைக்கும் மனம், அச்சவாலை ஏற்றுக் கொண்டு, சம்பந்தப் பட்டவரோடு வாக்கு வாதத்திலோ, எதிர்த்து போராடுவதிலோ இறங்குகிறது.

பெண்கள் தமக்கு எதிராக ஒருவர் மோசமாக நடந்து கொள்ளும் போது, சற்றே பின்வாங்கி, நிலைமையை ஊகித்து , அடுத்த அடியை எடுத்து வைத்தலே சிறந்த வழிமுறை. எடுத்துக்காட்டாக, அலுவலகத்தில் ஒருவர் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ளும் போது முதன் முறையே கடுமையாக எதிர்க்காமல், அவனது அடுத்தடுத்த செய்கைகளை அவதானித்தலும், தன்னிடம் மட்டுமே இப்படி நடந்து கொள்கிறானா அல்லது எல்லோரிடமும் இப்படி நடந்து கொள்கிறானா? என்று கணக்கிட்டு மோதுதல்.

அலுவலங்களில் எப்படியான ஒடுக்குமுறைகளை ஒரு மேலாளர் தன்னை எதிர்க்கும் ஒரு பெண்ணிடம் காட்டுவார் ? திறனாய்வில் குறைவான மதிப்பெண்களைத் தருதல், பதவி உயர்வை மறுத்தல், அணிச் சந்திப்புகளின் போது தனிமைப்படுத்துதல், அல்லது கூட்டத்தில் அப்பெண்ணைப் பற்றி தவறாக பேசி, நல்லெண்ணத்தை சிதைக்க முற்படுதல் ( Image carnation )


பாலியல் வன்முறையால் பாதிக்கப் பட்ட பெண்களிடம் இருக்கும் மாற்றங்கள் எப்படி இருக்கும் ? காரணமின்றி நிறைய விடுப்புகள் எடுத்தல், பணித்திறன் குறைவு, அடிக்கடி சிறுநீர் கழிக்கச் செல்லுதல், உடன் பணிபுரிவோருடன் தேநீர் அருந்தவோ, மதிய உணவு சாப்பிடச் செல்லவோ மறுத்தல், தனிமையில் அழுதல்,தான் அடிக்கடி விரும்பிச் செய்யும் செயல்களின் மீது நாட்டமின்றி இருத்தல். மனச்சோர்வு (Depression) அடைந்த பெண்ணிடம் காணப்படும் மாற்றங்கள் குறித்து அவர் பேசும் போது, தூக்கமின்மை, கவனக் குறைவு, நாட்டமின்மை, தனது உடலழகின் மீது ஆடைகளின் மீதோ அதிக கவனமின்றி இருத்தல், சாப்பாட்டின் அளவு குறைதல், இறுதியில் அந்த மனச்சோர்வே அவரை மரணம் வரை இழுத்துச் செல்லும் ஆகவே பாலியல் வன்கொடுமைக்கு பாதிக்கப் பட்ட எந்த ஒரு பெண்ணும் தற்கொலை செய்து கொள்ளக் கூடிய அபாய மனநிலை இருக்கிறது என்று தோழர் ருத்ரன் தனது உரையில் குறிப்பிட்டார்.



தோழர் ரேவதி:

திரையிடப்பட்ட “உங்களில் ஒருத்தி” ஆவணப் பட இயக்குனரான தோழர் ரேவதி, மருத்துவர் ருத்ரன் கேட்ட கேள்விக்கான ஒரு விடையை தனது உரையில் தெரிவித்தார். அதாவது ஒவ்வொரு பெரு நிறுவனங்களிலும் “பாலியல் வன்கொடுமைக்கான புகார் அமைப்பு” ( Sexual harassment Complaiane Cell ) எனும் ஒரு அமைப்பு, பிரத்யேகமாக பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகளை விசாரிக்க அமைக்கப் பட வேண்டும் என்ற விகாஷ் கமிஷனின் பரிந்துரை பற்றி குறிப்பிட்டார்.


பாலியல் வன்கொடுமைகளை வெளியே சொல்வதற்கு அப்பெண் மட்டுமின்றி, அப்பெண்ணின் குடும்பத்தாரே வெளியில் சொல்ல தயங்கும் சூழலில் தான் இச்சமூகம் இருக்கிறது. இந்நிலைமைகளை மாற்றத் தான், மகளிர் காவல் நிலையங்களும், ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஒரு பெண் வரவேற்பாளரும் அமைக்கப் பட்டிருப்பதாக தெரிவித்தார். மேலும் 2013ல் ஏற்பட்ட பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சட்டத் திருத்தங்களைப் பற்றியும் பேசினார் தோழர் ரேவதி.


2013 ஆம் ஆண்டுக்கு முன் இருந்த சட்டங்களில், இருவிரல் சோதனை ( Two finger Test ) எத்தனை அபத்தமானது என்றும், கன்னித்திரை சேதமடைந்திருந்தாலோ, ஒரு பெண்ணின் பிறப்புறுப்பில் இரு விரல்களையும் நுழைக்க முடிந்தாலோ அப்பெண் ஏற்கெனவே பலமுறை உறவு கொண்டவள் என்ற அபத்தமான தீர்ப்புகள் வரலாற்றில் பிறப்பிக்கப் பட்டிருக்கின்றன என்று கூறினார். ஒரு பெண் அதிகமான உடலுழைப்பில் ஈடுபடும் போதும், அப்பெண் ஒரு தடகள வீராங்கனையாகவோ அல்லது விளையாட்டு வீராங்கனையாகவோ, அதிக சூட்டில் வேலை செய்யும் ஒரு பெண்ணாகவோ இருப்பின் விரைவில் அவளது கன்னித் திரை கிழிய வாய்ப்பிருக்கிறது. இந்நிலையில் ஒரு சாதாரண சவ்வின் மாற்றங்களை வைத்து பெண்ணின் பாலியல் உறவுகளை கேள்விக்குள்ளாக்குதல் எத்தகையதொரு ஆணாதிக்க சமூகத்தின் முட்டாள்தனமாக இருக்கும்?ஆகவே பாலியல் வன்முறை என்பது பெண் இருத்தலியன் மீது, பெண் இயங்கியலின் மீது ஏற்படும் ஆதிக்கமே என்று தனது அழுத்தமான கருத்துகளை பதிவு செய்தார் தோழர் ரேவதி.


உடல் நல குறைபாடுகளால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத வழக்கறிஞர் தோழர் அஜிதா, எழுத்து மூலமாக தனதுசட்டக் குறிப்புகளை நம்முடையே பகிர்ந்து கொண்டிருந்தார். பெண்களுக்கு எதிராக‌ இழைக்கப்படும் பாலியல் வன்கொடுமை சட்டங்களையும் அதன் முக்கிய குறிப்புகளையும் சேவ் தமிழ்சு இயக்கத் தோழர் மேரி வாசித்தார்.

இடம்: தியாகராய நகர் வெங்கடேசுவரா மண்டபம், சென்னை
நாள்: 20 யூலை 2013



அ.மு.செய்யது
சேவ் தமிழ்சு இயக்கம்


=========

Thursday, July 25, 2013

தருமபுரி தாக்குதல் - இளவரசன் இறப்பு - சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முதன்மையாக்குவோம்!




பா.ம.கவின் சாதி வெறி அரசியல் தான், முழுக்க முழுக்க தலித்துகளுக்கு எதிரான சாதிய ஒடுக்குமுறைகளுக்கு காரணமாகியுள்ளது என்று தமிழக மக்களிடையே வெட்ட வெளிச்சமாக அம்பலமாகியிருக்கிறது. இவ்வழக்கை முறையாகவும் விரைவாகவும் விசாரித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியைப் பெற, சிறப்பு தனி நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து நாம் போராட வேண்டும்.

இளவரசனின் மரணம் கொலையாக இருந்தாலும்,தற்கொலையாக இருந்தாலும் அதற்கு முழு பொறுப்பு வன்னியர்களிடையே சாதி வெறியை தூண்டி விட்டு ஆதாயம் தேட நினைத்த ராமதாசும்,1990-க்குப் பின்னான தலித் மக்களின் எழுச்சியையும் வளர்ச்சியையும் பொறுத்துக் கொள்ள முடியாத இடைநிலை சாதிகளின் காழ்ப்புணர்ச்சியும் தான் என்று ஏற்கெனவே முந்தைய சேவ் தமிழ்சு இயக்கக் கட்டுரைகளில் முன் வைத்திருந்தோம்.இந்நிலையில் இளவரசன் மரணம் தற்கொலையே என்று நிரூபிக்கப் படும் நிலையில்,அது உண்மை குற்றவாளிகளான பா.ம.க தலைவர்களைச் சட்டத்தின் பிடியில் சிக்காமல், இந்திய நீதித்துறையின் எல்லா ஓட்டைகளின் துணையுடன் தப்பிக்க வைத்து விடும்.இளவரசன் இறப்பை வெறும் ஒரு காதல் திருமண தோல்வியால் நடந்த தற்கொலையாக மட்டும் பார்க்காமல்,இளவரசன் திவ்யா திருமணம் நடந்த நாளிலிருந்து நடந்த சம்பவங்களையும், ஆதிக்க சாதி வெறியாட்டங்களையும் சேர்த்தே இந்நிகழ்வை அணுக வேண்டியிருக்கிறது.

2012 ஆம் ஆண்டுகடந்த ஆண்டு மாமல்லபுரத்தில் நடந்த சித்திரைத் திருவிழாவின் போது ஆயிரக்கணக்கான வன்னியர்கள்,பா.ம.க ராமதாசு அன்புமணி,காடு வெட்டி குரு தலைமையில் ஒன்று கூடுகின்றனர். பெருந்திரளாக கூடியிருந்த வன்னியர்களிடையே மக்களிடையே, தலித்துகளுக்கு தலித் மக்களுக்கு எதிராக நா கூசும் வகையில் வெறுப்பு பேச்சைக் காடு வெட்டி குரு பேசுகிறார். ’வன்னியப் பெண்களைக் கட்டும் அன்னிய ஆண்களை வெட்டு’ காடு வெட்டி குரு உதிர்த்த பொன்மொழி. இந்த பேச்சுகளின் மூலம் வன்னிய சாதி வெறியை தூண்டி விட்டு, வன்னிய மக்களிடையே ஓட்டு வேட்டையாடலாம் என்கிற கணக்கின் அடிப்படையில் அமைந்த கூட்டம் தான் அது. சித்திரை திருவிழா நடந்து முடிந்த சில நாட்களில் தான்,தலித் சமூகத்தை சேர்ந்த இளவரசனும், வன்னிய சமூகத்தைச் சேர்ந்த திவ்யாவும் காதல் திருமணம் செய்கின்றனர். ஏற்கெனவே தருமபுரி கிராமங்களில் இருக்கும் தலித் மக்களின் வாழ்வில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சி,ஆதிக்க சாதி சமூகத்தால் சகித்துக் கொள்ளப் படவில்லை.இந்நிலையில் தலித் காவல்துறை அதிகாரி தான், திவ்யாவின் தந்தையிடம்
கேவலமாக பேசி அவரை அவமானப்படுத்தி தற்கொலைக்கு தூண்டினார் என்று பா.ம.க சார்பில் குற்றம் சாட்டப் பட்டாலும்,
அங்கே நடந்த சாதிப் பஞ்சாயத்துகளே திவ்யாவின் தந்தை தற்கொலைக்கு அதிக காரணமாகி இருக்கின்றன. திவ்யா என்ற பெண்ணின் காதல் ஒரு தனிப்பட்ட ஒரு பெண்ணின் தேர்ந்தெடுக்கும் உரிமை ஆனால் பல காதல் திருமணங்களை முடிவு செய்யும் இடத்தில் குடும்பங்களே இருக்கின்றன.ஆனால் குடும்ப பிரச்சினையையும் தாண்டி இங்கெ தேர்ந்தெடுக்கும் சக்திகளாக சாதிக் குழுக்களும் உள்ளூர் பஞ்சாயத்துகளும் இருந்திருக்கின்றன.அங்கே அப்பெண்ணின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்திகளாக அங்கே சாதிப்பஞ்சாயத்துகளே இருக்கின்றன. இப்பஞ்சாயத்துகளின் தொடர் நெருக்கடிகளால் தான்
திவ்யாவின் தந்தையும் தற்கொலைக்கு தூண்டப் பட்டிருக்கிறார். ஆனால் அவர் தற்கொலைக்கு காரணமாக பொய்க்குற்றம் சாட்டப் பட்டு தலித்துகளின் மீது வழக்குகள் பதிவு செய்யப் பட்டிருக்கின்றன. நாகராஜ் தற்கொலைக்கு காரணமாக இளவரசனின் பெயரும் இவ்வழக்கில் குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் இளவரசன் தற்கொலைக்கு காரணமாக ஏன் பா.ம.க ஒருவர் மீது கூட இன்னும் வழக்கு தொடரப் படவில்லை?

இந்த தற்கொலைக்கு பொறுப்பாக தலித் மக்களை குற்றம் சுமத்தி, 2000க்கும் அதிகமானவர்கள் நத்தம், அண்ணா நகர், கொண்டம்பட்டி ஆகிய கிராமங்களில் இருக்கும் முன்னூறு தலித் மக்களின் 300 குடிசைகளை வீடுகளை எரித்து, அவர்களின் உடைமைகளை சேதமாக்கி ஒரு மாபெரும் வெறிச்செயலை கட்டவிழ்த்து விடுகின்றனர்.திவ்யாவின் தந்தையின் தற்கொலைக்கு பகரமாக தான் இச்சம்பவம் நடந்தது என்றால் இளவரசனிடம் வீடு மட்டும் தான் தாக்கப் பட்டிருக்க வேண்டும் அல்லது இளவரசனின் கிராமம் மட்டும் தான் தாக்கப் பட்டிருக்க வேண்டும்.மாறாக மூன்று கிராமங்கள் சூறையாடப்பட்டுள்ளன.

உண்மையான காரணம் என்ன? காலங்காலமாக தங்கள் வயல்களில், தங்களுக்கு கீழே அடிமைகளாக வேலை செய்த தலித் மக்கள், இன்று படித்து வெவ்வேறு அரசு வேலைகளில் வளர்ச்சியடைந்து நிமிர்ந்து இருப்பதையும், நகரங்களுக்கு சென்று வேலை பார்த்து வாழ்வதையும் வாழ்வதை, பொறுத்துக் கொள்ள முடியாத வன்னிய ஆதிக்க சாதி வெறி, சரியான நேரத்தில் பா.ம.க கும்பலால் திரி தூண்டப்பட்டு, திட்டமிடப்பட்டுட்டு அந்த தாக்குதலை நிறைவேற்றியிருக்கிறது. தாக்குதலின் போது குறிப்பாக TNPSC தேர்வுக்கு சொல்லித் தரும் ஆசிரியர்கள் வீட்டில் தான் இன்னும் கடுமையான தாக்குதல்கள் நடந்திருக்கின்றன என்பது இதை உறுதி செய்யும் ஒரு சான்று.

சிறப்பு தனி நீதிமன்றத்தின் முக்கியத்துவம் என்ன ?

வழமையான குற்றவியல் நீதி விசாரணை முறைகளில் ஏராளமான நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன.அதில் ஒரு மிகப்பெரிய சிக்கல், குற்றவாளியை நீதிமன்றத்திற்கு கொண்டு வருதல்.தருமபுரி தாக்குதல் சம்பவத்தில் நூற்றுக்கணக்கானோர் குற்றவாளிகளாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் அனைவரையும் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து விசாரித்தல் என்பது நடைமுறையில் சாத்தியமே இல்லை. ஒன்பது மாதங்களென்ன.. ஒன்பது வருடங்களானாலும் நடக்கவே நடக்காது. ஆனால் இதற்கு ஒரு சரியான மாற்றுத் தீர்வு இருக்கிறது. அது தான் சிறப்பு தனி நீதிமன்றம்.சிறப்பு தனி நீதிமன்றத்தின் பயன்கள் என்னென்ன என்று பார்ப்போம்.

1. விரைவாக வழக்கை விசாரித்து தீர்ப்பு கூறுதல்

2. இந்த சிறப்பு தனி நீதிமன்றத்தில் வழக்கை நடத்த ஒரு அரசு வழக்கறிஞர் நியமிக்கப்படுவார். அந்த அரசு வழக்கறிஞர், ஒரு குடிமுறை உரிமைகள் வழக்கறிஞராக இருத்தல் வேண்டும் என்று பாதிக்கப் பட்டோர் கேட்கலாம். வழக்கு நடந்து முடியும் வரை அரசே அவ்வழக்கறிஞருக்கு ஊதியத்தையும் வழங்க வேண்டும்.

3. சம்பவம் நடந்த ஊரிலேயோ, அல்லது கிராமத்திலோ சிறப்பு நீதிமன்றத்தை அமைக்கலாம்.

உதாரணமாக தருமபுரி தாக்குதல் வழக்கில், தாக்குதல் நடந்ததலித் கிராமங்களில் ஒன்றினுள்ளேயே இச்சிறப்பு நீதிமன்றத்தைஅமைக்கலாம். இதன் மூலம்,தலித்துகள் அச்சமின்றி நீதிமன்றத்திற்கு வந்துபோக முடியும்.மற்றபடி, இவ்வழக்கு எந்த ஊரில் நடந்தாலும் தலித் மக்கள், வன்னிய பகுதிகளை தாண்டித்தான் செல்ல வேண்டியிருக்கிறது.இதனால் தங்கள் உயிருக்கே பாதகம் ஏற்படலாம் என்று அஞ்சியே பெரும்பாலான தலித் மக்கள் நீதிமன்றத்திற்கு செல்ல முடியாமல் போகக் கூடும்.

4.வழக்கை விரைவாக விசாரித்து நடத்தும் வகையில் தமிழக அரசே, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் தலையீட்டின் பேரில் அரசு இதழில்இதனை வெளியிட்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் இத்தகைய தனி சிறப்பு நீதிமன்றங்களை, சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் (The scheduled castes and scheduled Tribes - Prevention of Atrocities Act -1989) மூலம் அமைக்கலாம்.

ஒவ்வொரு தனி சிறப்பு நீதிமன்றத்திற்கும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின்தலையீட்டின் பேரில் அரசு இதழில் வெளியிட்டு, ஏழு ஆண்டுகள் வழக்கறிஞராக பயிற்சி பெற்ற ஒரு வழக்கறிஞரை இச்சிறப்பு தனிநீதிமன்றத்தில் வழக்குகளை நடத்த நியமிக்க வகை செய்கிறது.

சிறப்பு தனி நீதிமன்றம் இதற்கு முன்னர் அமைக்கப்பட்டிருக்கிறதா ? அமைக்கப்பட்டு வெற்றியடைந்திருக்கிறதா ?

சுந்துர் படுகொலை: ( Tsundur Massacre )

குற்றங்கள் வெவ்வேறாக இருந்தாலும் நோக்கங்கள் ஒன்றாகவே இருக்கின்றன. சுந்துரு படுகொலையைப் பற்றி படிக்கும் போது கீழ்வெண்மணியும் தருமபுரியும் வரிக்கு வரி நினைவுக்கு வந்தால், தருமபுரி வன்கொடுமை வழக்கிலும் சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நோக்கித் தான் நாம் வந்து சேர்வோம். காரணம் சுந்துர் படுகொலையும் தருமபுரி தாக்குதலிலும் குற்றங்கள் வெவ்வேறு தன்மை கொண்டவைகளாக இருப்பினும் இங்கு நோக்கங்கள் ஒரே அளவைகளில் தான் இருக்கின்றன.

ஆகஸ்டு 6, 1991, எட்டு தலித்துகள் பட்டப்பகலில், 400 ஆதிக்க சாதி வெறியர்களால் படுகொலை செய்யப் பட்டனர். நீர்பாசன கால்வாய் ஓரமாக அவர்களை துரத்திச் சென்ற அந்த ஆதிக்க சாதி வெறி கும்பல், அவர்களை ஈவு இரக்கமின்றி படுகொலை செய்து, பிணங்களை துண்டு துண்டாக வெட்டி சாக்குப் பையில் அடைத்து, ஆற்றுப் படுகையில் வீசிச் சென்றது. 13 ஆண்டுகள் இடைவிடாத தலித் மக்களின் போராட்டத்திற்கு பிறகு இவ்வழக்கை விசாரிக்க சுந்துரு கிராமத்திலேயே சிறப்பு தனி நீதிமன்றம் அமைக்கப் பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, மரண தண்டனை வழங்குமளவு இச்சம்பவம் அரிதினும்அரிதான வழக்கு இல்லை என்பதால், 21 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியும் 35 பேருக்கு ஓர் ஆண்டு கடுங்காவல் தண்டனையும், தலா 2000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.அரிதினும் அரிதான வழக்கு இல்லை என்பதற்கு நீதிபதி சொன்ன காரணம்,ஆதிக்க சாதி இந்துக்கள் தாழ்த்தப் பட்ட மக்களை படுகொலை செய்தல் காலங்காலமாக இந்துஸ்தானில் நடந்து வரும் ஒரு கொடுமையாகத் தானிருக்கிறது என்று தாம் ஆயுள்தண்டனை தீர்ப்பளித்தாக தெரிவித்தார்.சுந்துர் படுகொலை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட ஒரு வன்கொமை தாக்குதலாக மட்டும் அமைந்து விடாமல்,ஆந்திர மாநிலத்தின் வரலாற்றில் இச்சம்பவம் ஒரு மாபெரும் தலித் இயக்கம் எழுச்சி பெற காரணமாக அமைந்தது.


1985 ஆம் ஆண்டு நடந்த கரம்ச்சேடு படுகொலைக்கு பின் உருவான தலித் இயக்கமான “தலித் மகாசபா”, சுந்துர் படுகொலைக்கான நீதியைப் பெற்றுத் தந்ததில் முக்கியத்துவம் பெறுகிறது. தலித் மகாசபாவின் தன்னிகரற்ற உழைப்பின் மூலம், இவ்வழக்கு சிறப்பாக கையாளப் பட்டது. அவ்வியக்கத்தின் தலைமையின் கீழ்,கொல்லப் பட்ட தலித்துகளின் உடல் சுந்துர் கிராமத்திலேயே சிதையூட்டப் பட்டு, அவ்விடத்திற்கு ”இரக்த ஷேத்ரம்” ( உதிரத்தின் மண் ) என்று பெயரிடப்பட்டு, அப்படுகொலைகளுக்கான நினைவேந்தலை அம்மக்கள் மனதில் உறுதியாக ஏந்தியது. இப்படுகொலையின் போது, தத்தம் வீடுகளிலிருந்து துரத்தப்பட்ட பல நூறு தாழ்த்தப்பட்ட மக்கள் ஆந்திராவின் வெவ்வெறு பகுதிகளில் தஞ்சமடைந்தனர்.சிதறுண்டு போன ஒரு சமூகத்தை ஒன்று திரட்டி தலித் மகாசபை இயக்கம்,அம்மக்களுக்காக ஒரு சிறப்பு முகாமை ஏற்படுத்தி வளர்ச்சி பணிகளை செய்து கொடுக்க ஆரம்பித்தது.. அரசுகளின் எவ்வுதவியை கிடைக்கப் பெறாமல், இரண்டே வருடங்களில் 450 வீடுகளை தலித் மக்களுக்காக கட்டி கொடுத்து, அதில் ஏழு பேருக்கு அரசு வேலையும் வாங்கிக் கொடுத்தது அவ்வியக்கம். மேலும் நிலங்களை இழந்த விவசாயிகளுக்கு நிலங்களும் வழங்கப் பட்டன.ஒரு தொண்டு நிறுவனம் செய்யக் கூடிய பணியாக இருந்தாலும், முடமாகிப் போன ஒரு சமூகத்தை சமூக பொருளாதார ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் வலுப்பெறச் செய்து அவர்கள் புத்துணர்வு பெற ஏதுவாக இவ்வுதவிகள் அமைந்தன. சுந்துர் தாழ்த்தப் பட்ட மக்களின் இவ்வெழுச்சியே, படுகொலைக்கான நீதியைப் பெற ஆதிக்க சாதி வெறியினரை எதிர்த்து வீரமுடன் அவர்களை போராட வைத்தது.இறுதியில் நீதியையும் பெற்றுத் தந்தது.

தலித் மக்களை ஒன்றிணைத்து, வழக்காட அவர்களை உறுதியாக்கிய தலித்மகா சபை வெவ்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க ஆரம்பித்தது. ஆனால் சுந்துர் மக்கள் தங்கள் கோரிக்கையில் உறுதியாக நின்றனர். இவ்வழக்கில் சிறப்பு தனி நீதிமன்றம் அமைப்பதற்கு முன்பான கால கட்டம் என்பது நீண்ட ஒரு இரத்தம் தோய்ந்த வரலாறு.வழக்கின் முக்கியகுற்றவாளிகள் கைது செய்யப் படாமல்,போராடிய தாழ்த்தப் பட்ட மக்களும்அவர்களின் தலைவர்களுமே கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.சாதி வெறியர்களை கேள்வி கேட்காமல், எதிர்த்து போராடும் தலித்துகளையும் ஜனநாயக சக்திகளையும் எப்படி நம்மவர்கள் சாதி வெறியர்களாக சித்தரிக்கின்றனரோ அப்படியான சித்தரிப்புகள் அங்கும் நடந்தன.சுந்துர் வழக்கிற்காக, சில இளம் தலித் செயற்பாட்டாளர்கள் தங்கள் கல்வியை இழந்தனர்.தங்கள் திருமணங்களைக் கூட மறுத்து வழக்கிற்காக முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டனர்.இப்படுகொலை சம்பவத்தின் நேரடி சாட்சியாளரான அனில் குமாரை,ஒரு போராட்டத்தின் போது காவல்துறை சுட்டுக் கொன்றது. இப்படியாக தலித் மக்களின் இயக்கம் தங்களையே முழுமையாக அர்ப்பணித்து, நீதிக்காக போராடத் துணிந்தது.

தலித் இயக்கங்களின் பேரெழுச்சி, ஆந்திர இடது சாரி அரசியலில் ஒரு வியத்தகு மாற்றத்தை ஏற்படுத்தியது. பெரும்பாலான இடது சாரி கட்சிகள், சாதிய ஒடுக்குமுறைகளுக்கான செயற்திட்டங்களை முன்வைத்து ஒரு சிறப்பு அணியை தத்தம் கட்சிகளில் உருவாக்கினர். பாதிக்கப்பட்ட சுந்துர் மக்களின் அணியில் எம்.எல் கட்சிகளும் ஒன்றிணைந்தன. ஜனசக்தி கட்சியும் தலித் சிறுபான்மையினருக்காக ஒரு மன்றத்தை உருவாக்கியது. குல விவாக்சா வியதிரேகா போராட்ட சமிதி மற்றும் குல நிர்முலனா போராட்ட சமிதி ஆகிய இரண்டு இயக்கங்களையும் CPI-M உருவாக்கியது. அவ்விரண்டு இயக்கங்களும் பல பகுதிகளில் நடக்கும் தலித்துகளுக்கு எதிரான ஒடுக்குமுறைக்கு முகம் கொடுக்குமளவு வளர்ச்சி அடைந்தன. தலித் மகா சபையின் சட்டப்பூர்வமான அணுகுமுறை, தலித் இயக்கங்களை வலுப்பெறச் செய்தது என்றால், எம்.எல் குழுக்களின் தலைமை இளைஞர்களை வழிநடத்தியது. ஜனநாயக சக்திகளும் தலித் மற்றும் உழைக்கும் பிற்படுத்தப்பட்ட மக்கள் ஒன்றிணைந்து போராடும் போது தான், நமக்கான குரலை ஓங்கி ஒலிக்கச் செய்ய முடியும் என்ற அரசியல் புரிதலை ஏற்படுத்தவே,சுந்துர் படுகொலைக்கு பிறகான அரசியல் நிகழ்வுகளை இங்கே நினைவு கூறுகிறோம்.

13 ஆண்டு கால இடைவிடாத போராட்டம்:

சுந்துர் பகுதியானது ஆதிக்க சாதியினரான ரெட்டிகளின் வசம் இருந்தது. ரெட்டிகளே அங்கே நிலப்பிரப்புகளுக்காக இருந்தனர். ஆண்டாண்டு காலமாக அவர்களின் நிலங்களில் வேலை செய்த தலித்துகளின் இன்றைய வளர்ச்சி ரெட்டிகளுக்கு அஜீரணக் கோளாரை ஏற்படுத்தியது. பெரும்பாலான தலித்துகள் அரசுப் பணிகளில் இருந்தனர்.குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புபவர்களாக அவர்கள் இருந்தனர். வீடுகளில் மின் இணைப்பு இருந்தது. ஆண்கள் ஜீன்ஸ் அணிபவர்களாக இருந்தனர். பெண்களும் அங்கே கல்லூரிக்கு சென்றனர். ரெட்டிகளின் நிலங்களில் வேலை செய்யும் தலித்துகள், நியாயமான கூலி கேட்க ரெட்டிகளை எதிர்த்து நிற்கும் துணிவு பெற்றிருந்தனர். தலித்துகள் அதிகம் வாழும் பகுதியான "அம்பேத்கர்" நகரில் மட்டும் 5000 தலித்துகள் வாழ்ந்தனர். நவீனமயமான தலித்துகள் மீண்டும் சமூக அடிமைகளாகவே இருக்க வேண்டுமென்பது தான் ரெட்டிகளின் அதி உயர் விருப்பமாக இருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக கிளம்பிய பூதங்கள் ஒன்றிணைந்து, ஆகஸ்டு 6 1991ல், அந்த வெறியாட்டத்தை நடத்தி முடித்தது. வெட்டப் பட்டு துண்டு துண்டாக ஆக்கப் பட்ட உடல்களைப் பார்த்த தலித் குடும்பத்தினர் தற்கொலை செய்து கொண்டனர். உடற்கூறு ஆய்வு செய்த ஒரு மருத்துவரும் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு மேல் இப்படுகொலையின் கோரத்தை விவரிக்கத் தேவையில்லை.

13 ஆண்டுகளுக்கு பிறகு, 2004ல் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கியது. வழக்கு நடைபெறும் காலம் முழுவதும் பல்வேறு இன்னல்களையும் தடைகளையும் தாமதங்களையும் அம்மக்கள் சந்திக்க நேர்ந்தது.

அரசு, சுந்துருக்கு வெளியே சிறப்பு நீதிமன்றம் அமைத்த போது, அதை புறக்கணித்ததோடு மட்டுமல்லாமல்,சுந்துருவிலேயே சிறப்பு நீதிமன்றம் அமைக்கக் கோரி போராட்டத்தை ஆரம்பித்தனர் பாதிக்கப்பட்ட தலித் மக்கள். போராட்டத்திற்கு பணிந்த அரசு,சுந்துர் கிராமத்திலேயே சிறப்பு நீதிமன்றத்தை அமைத்தது. இருப்பினும்,ஆதிக்க சாதியினர் நீதிபதியை இடமாற்றம் செய்ய வைத்தனர்.புதிய நீதிபதி நியமிக்கப்பட்டவுடன், குற்றவாளிகள் அனைவரும் அறுவடை காலத்தையும் திருவிழாவையும் காரணம் காட்டி வழக்கை ஒத்தி வைக்க கோரினர். ஆதிக்க சாதியினரின் கைப்பாவையான நீதிபதியும் வழக்கு விசாரணையை தள்ளி வைத்தார். தங்களுக்கு நம்பிக்கையான ஒரு அரசு வழக்கறிஞரை நியமிக்க, தலித் மக்கள் மீண்டும் போராட வேண்டியிருந்தது. அப்படியொரு வழக்கறிஞரை நியமிக்க அரசு இசைந்த போது, புதிதாக மற்றுமொரு சிக்கல் காத்திருந்தது. சுந்துர் கிராமத்தில் இருந்த பெரும்பாலான தலித் மக்கள் கிறிஸ்துவ மதத்தை தழுவியிருந்தனர்.எனவே, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான வழக்கு, கிறிஸ்துவர்களுக்கு செல்லுபடியாகாது என்று ஆதிக்க சாதியினர் வாதிட்டனர்.ஆந்திர உயர்நீதிமன்றம் அவ்வாதத்தை நிராகரித்தாலும், வழக்கு விசாரணை பல நாட்களுக்கு தாமதமானது. பல தருணங்களில் சாட்சிகளை கலைக்கவும் முயற்சிகள் நடந்தன.இவ்வாறான இழுத்தடிப்புகளை எதிர்த்து, பொறுமையிழந்த தலித் இளைஞர்கள் போராடிய போது தான், அனில் குமார் என்ற இளைஞர் காவல்துறையால் சுட்டுக் கொல்லப் பட்டார்.

ஆக இவ்வழக்கு நடைபெற்ற காலம் முழுவதும் எண்ணிறாத தடைக்கற்களை அம்மக்கள் சந்திக்க வேண்டியிருந்தது.ஆதிக்க சாதியினரிடமிருந்து, தங்கள் உயிருக்கான அச்சுறுத்தலை அக்காலம் முழுதும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எல்லா வலிகளையும் கடந்து, சுந்துர் கிராமத்து தலித் மக்கள் ஒரு இயக்கமாக ஒன்றிணைந்து, மன உறுதியோடு போராடி,ஆதிக்க சாதிகளுக்கெதிரான தங்கள் நீதியை நிலை நாட்டியிருக்கின்றனர். இடையறாத அப்போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி தான் சிறப்பு தனி நீதிமன்றம் அமைக்கப் பெற்றதும்,அதன் மூலம் அம்மக்கள் நீதியை வென்றெடுத்ததும்.

இளவரசன் மரணம், தருமபுரி தலித் மக்களின் வீடுகள்,உடைமகள் எரிப்பு, மரக்காணம் வன்முறை இவையனைத்திற்குமான நீதியைப் பெற வேண்டுமாயின், சிறப்பு தனி நீதிமன்றங்கள் அமைக்கப்படல் வேண்டும். குறிப்பாக தருமபுரி வெறியாட்டத்தை விசாரிக்க, இளவரசனின் மண்ணான நத்தம் கிராமத்திலேயே அச்சிறப்பு தனி நீதிமன்றம் அமைக்கப்படல் வேண்டும்.சாதியொழிப்பு களத்தில் நின்று போராடும் அனைத்து ஜனநாயக அமைப்புகளும் தலித் அமைப்புகளும், மனித உரிமை ஆர்வலர்களும் சிறப்பு தனி நீதிமன்றம் அமைப்பதை நமது முதன்மைக் கோரிக்கையாக வைத்து போராட வேண்டும்.சிறப்பு தனி நீதிமன்றம் என்ற கோரிக்கையை போராட்டக்களத்திற்கு கொண்டு செல்வோம்!

இளவரசன் வழக்கில் சிறப்பு தனி நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுப்போம்.இடைநிலை சாதி மக்களின் சாதி வெறியை முறியடித்து அவர்களைச் சனநாயகப்படுத்துவதற்கு களமிறங்குவோம் !

அ.மு.செய்யது,
சேவ் தமிழ்சு இயக்கம்

தரவுகள்:

1. ஹைதராபாத் பேராசிரியர் தோழர்.சத்யநாராயணிடமிருந்து
பெறப்பட்ட குறிப்புகள்,

2. தாழ்த்தப் பட்ட மற்றும் பழங்குடியினருக்கெதிரான வன்கொடுமை தடுப்புச்சட்டம் – 1989




=======

Tuesday, July 23, 2013

பசுமை தீர்ப்பாயம் - பசுமை ஸ்டெர்லைட் - பசுமை பாரதம்



23, மார்ச், 2013 - கந்தக டை ஆக்சைடு வாயு வெளியேறி மக்களுக்கு மூச்சுத் திணறலையும், கண் எரிச்சலையும் ஏற்படுத்தியது.

29, மார்ச், 2013 - ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது, தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம்(த.மா.க.வா.).

1, ஏப்ரல், 2013 - த.மா.க.வா. வின் உத்தரவை சவால் விடும் விதமாக கோடீசுவரர் அணில் அகர்வால் பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார்.

2, ஏப்ரல், 2013 - வேறொரு வழக்கில், சுற்றுசூழலை மாசு படுத்திய குற்றத்திற்காக ஸ்டெர்லைட் ஆலைக்கு ரூபாய் 100 கோடி அபராதம் விதித்து தீர்ப்பளித்தது, உச்ச நீதிமன்றம். மேலும் 2010ல் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவான ஸ்டெர்லைட் உலையை மூடத் தேவையில்லை, என்றும் அதில் கூறப்பட்டது.

12, ஏப்ரல், 2013 - நடுவர் மன்றம், தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை நேரில் சென்று பார்வையிட நிபுணர் குழுவை நியமித்தது.

31,மே, 2013 - ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட்டது தேசிய பசுமை தீர்ப்பாயம்.

சுற்றுசூழல் தொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்கும் விதமாக, 2010ல் அறிவியலாளர்களும், சட்ட நிபுணர்களும் நிறைந்த தேசிய பசுமை தீர்ப்பாயம் என்னும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. நடுவண் அரசால் அமைக்கப்பட்ட இந்த தீர்ப்பாயமும் தனியார் பெருநிறுவனங்களின் ஏவல் அமைப்பாகவே செயல்பட்டு வருகிறது. வழக்குகளின் தீர்ப்புகளும், தனியார் முதலாளிகளுக்கு உகந்ததாகவே வழங்கப்படுகிறது. இதன் பெயரோ பசுமை தீர்ப்பாயம். ஆனால், இத்தீர்ப்பாயத்தில் பசுமைக்காக பரிந்து பேச நாதியில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால் பசுமைக்கு முன்னுரிமை கொடுப்பது போல் தங்களது சின்னத்தை(படத்தில் காண்க) ஆவணங்களில் பொறித்து கொண்டு, சுற்றுசூழலை பாழாக்கும் நிறுவனங்களுக்கு, பச்சை கொடி காட்டுவதை பணியாக செய்துவருகின்றது.





31,மே, 2013 அன்று தேசிய பசுமை தீர்பாயத்தின் முதன்மை கிளை ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கை நீதி செய்த பாங்கை இக்கட்டுரை ஆய்வு செய்கிறது.
ஸ்டெர்லைட் நிறுவனத்தில் வாயு வெளியேறுவதை கணக்கிட்டு பதிவு செய்ய பகுப்பாய்வி (analyser) எனப்படும் கருவி பயன்படுகிறது. மார்ச் 23ஆம் தேதி, நிறுவனத்தின் பகுப்பாய்வியின்(analyser) தரவின்(data) அடிப்படையில் மிகவும் அதிக படியான அளவில் கந்தக டை ஆக்சைடு(Sulphur di-oxide)வெளியேறியதாக பதிவாகியுள்ளது. ஆனால் இந்த தகவல் உண்மையிலே அதிக நச்சு வெளியேற்றம் காரணமாகவா? அல்லது calibration எனப்படும் அளவு திருத்தத்தின் விளைவாகவா? என்று கேள்வி எழுப்பி, தீர்ப்பாயம் போதிய அறிவியல் ஆதாரம் இல்லாமல் ஸ்டெர்லைட் நிறுவனத்தை மூட உத்தரவு பிறப்பித்த தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியத்தை கண்டிக்கிறது. இந்த பகுப்பாய்வி(analyser) என்பதை நம் வீடுகளில் பொருத்தியுள்ள மின்சாரத்தை அளவிடும் கருவிக்கு(மீட்டர் என பொதுவாக அழைக்கபடும்) ஒப்பிட்டு பார்க்கலாம். வீடுகளில் இந்த மீட்டரை இயங்காமல் செய்து, மின்சாரதிற்கு ஆகும் செலவை குறைக்கும் சாமானியர்கள் விஞ்ஞானிகள் ஆகும் விந்தையை பார்த்திருப்போம். விஞ்ஞானிகளையே தன்னுள் கொண்டுள்ள ஸ்டெர்லைட் பற்றி கூற தேவையேயில்லை. இதற்கு வலுசேர்க்கும் விதமாக மாசு கட்டுபாட்டு வாரியத்தின், காற்று தரத்தை கண்டறியும் கருவி, இரண்டு ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் உள்ளது.


தீர்ப்பில் : கந்தக டை ஆக்சைடு வெளியான இடத்தில பல தொழிற்சாலைகள் நிறைந்துள்ளது, அதனால் ஸ்டெர்லைட் நிறுவனத்தில் இருந்து தான் வாயு வெளியாகியது என்று எவ்வாறு கூற முடியும் ?

இதை விட ஸ்டெர்லைட் ஆலைக்கு வெளிப்படையாக உதவ முடியாது. இந்த நிறுவனத்தை காப்பாற்றும் முயற்சியில், இந்த நிறுவனத்தின் நாட்டிற்கு விளையும் நன்மை என ஒரு பெரிய பட்டியலை விரித்த தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் நிறுவனம், வரி ஏய்ப்பால் நாட்டிற்கு ஏற்படுத்தும் பொருளாதார இழப்பை விளக்காதது ஏன்?.

நச்சு வாயு வெளியேறியதற்கான போதிய அறிவியல் ஆதாரம் இல்லை! என்கிறது தீர்ப்பாயம். போபால் நச்சுவாயு போன்ற அவலத்தை சந்தித்த பின்னும் இந்தியாவின் நீதித்துறை, அறிவியல் ஆதாரங்களை கேட்டு வழக்கை நீர்க்க செய்வது, மேலும் ஒரு பேரழிவை மக்களிடம் திணிக்கும் செயலாகும். பல உயிர்களை இழப்பதையே அறிவியல் ஆதாரம் என கருதிறதா, நம் நீதித்துறை?

நிபுணர் குழு அளிக்கும் தகவலில், நிறுவனம் மேலும் தன்னை மேம்படுத்திக்கொள்ள பரிந்துரை செய்யலாம் என்கிறது பசுமைதீர்ப்பாயம். அதாவது மேம்படுத்தப்படாத கருவிகள் இருந்தாலும், அவை ஏற்படுத்திய விளைவு குறித்து கவலை இல்லை. நிறுவனம் இயங்குவதற்கு உகந்த தகவலை அளிக்குமாறு கோருகிறது தீர்ப்பாயம். இது, நிறுவனம் திறக்க வேண்டும், அதற்கு சார்பாக நீதியை நகர்த்த வேண்டும் என்ற முனைப்போடு செயல்படுவதையே காட்டுகிறது.

மார்ச், 23ஆம் நாள் நச்சுவாயு வெளியேறியதாக கூறப்பட்டாலும், மார்ச் , 29ஆம் நாள் தான் மூட உத்தரவு பிறப்பித்தது மாசு கட்டுபாட்டு வாரியம், இந்த ஆறு நாள்களும் தொடர்ந்து அதிகபடியான நச்சுவாயு வெளிப்பட்டதற்கான ஆதாரம், மாசு கட்டுபாட்டு வாரியதிடமிருந்தோ, ஸ்டெர்லைட் நிறுவனத்திடமிருந்தோ வழங்கபடவில்லை என தீர்ப்பாயம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. ஒரு நாள் நச்சுவாயு வெளியான உடனே, பெரிய விபத்தை தடுப்ப‌தற்காக ஆலையை மூட உத்திரவிட்ட தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியத்தை, எதிர்த்து ஆலைக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியுள்ள பசுமை தீர்ப்பாயம், ஆறு நாட்களுக்கான‌ ஆதாரம் கிடைத்து அவை அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருந்தால் உடனே தடையை நிரந்தரமாக்கிவிடுமா?. மேலும் இந்த ஆறு நாட்கள் எவ்வளவு கந்தக டை ஆக்சைடு வெளியேறியது என்ற அளவை ஏன் ஸ்டெர்லைட் வழங்கவில்லை, அதை ஏன் விசாரணையின் போது கேட்காமல், ஏன் தீர்ப்பில் ஒரு ஓரத்தில் குறிப்பிட வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது.



கண்காணிக்கும் கருவிகுளும், பகுப்பாய்விகளும் சரியான முறையில் இயங்குவது, நிறுவனத்தின் பொறுப்பாகும் என்கிறது பசுமை தீர்ப்பாயம். குற்றம் புரியும் நபரே தன்னை விசாரித்து கொள்ளட்டும் என்பதுபோல், பின், இதில் மாசு கட்டுபாட்டு வாரியதிதின் பணி என்னவாக இருக்க முடியும்?


பசுமை தீர்பாயத்தின் உத்தரவு, நம் மனதில் பல கேள்விகளை எழ செய்கிறது:

நிபுணர் குழு ஒரு குறிப்பிட்ட காலம் மட்டும் ஆய்வு செய்யும் அதன்பிறகு யார் செய்வார்?

மாசுகட்டுபாட்டு வாரியம் மேற்கொண்ட நடவடிக்கையை தீர்ப்பாயம் கண்டிக்கும் நிலையில், வரும் காலங்களில் வாரியம் துணிந்து எவ்வாறு பெருநிறுவனங்களை எதிர்கொள்ளும்?

ஒரு தவறு நிகழும் சூழலில், தவறுக்கான காரணத்தை கண்டறிவது, நீதி செய்யும் விதமா? அல்லது தீர்ப்பில், குற்றம் நிகழ்ந்ததாகவோ, அதற்கான விசாரணை குறித்தோ, ஒரு வரி கூட இடம் பெறாவண்ணம், குற்றம் தொடர்வதற்கான வேலையில், ஈடுபடுவது நீதி செய்யும் விதமா?

இனி இது போல் ஒரு வழக்கு தொடரும் நிலையில், இந்த தீர்ப்பையே மேற்கோளாக காட்டி, மக்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் நிறுவனகளுக்கு சாதகமான தீர்ப்பை பெரும் நிலையை தீர்ப்பாயம் ஏற்படித்தியிருக்கிறது. இது முழுக்க முழுக்க மக்களுக்கு எதிரான உத்தரவாகும்.
நாளை, நச்சுவாயுவால் மக்களுக்கு துன்பம் விளையும் சூழலில், அது விபத்து என்று எப்படி கொள்ள முடியும். அது தீர்பாயத்தால், திட்டமிட்டு நிகழ்த்தப்படும் படுகொலையே ஆகும்.


காசம் கொடுத்து சுவாசம் மறுக்கும்
மேகம் வருந்தி அமிலம் சுரக்கும்
புலப்படா புகையது, காட்சியை உறிஞ்சும்
உடல் உறுத்தும் உடுத்தும் பஞ்சும்
சுற்றுசூழலை காக்க முனைவீர் கொஞ்சம் - பின்
செயற்கை வாயிலாவது, இயற்கை மிஞ்சும்!

ஏர்வளவன்
சேவ் தமிழ்சு இயக்கம்(Save Tamils Movement)

(ஸ்டெர்லைட் ஆலையை பல மாநிலங்களில், நிறுவ முயற்சித்து முடியாமல் , பின் தமிழகத்தில் முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் நிறுவபட்டது, இப்போது நிகழும் அ.தி.மு.க. ஆட்சியில் அதை மூட முயற்சித்தும் முடியவில்லை என்பது கூடுதல் தகவல்.)


Monday, July 22, 2013

மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடுவோம்

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு ஆகஸ்டு 5-ல் சென்னையில் போராட்டம்


700 நாட்களாக அறவழியில் போராடிக்கொண்டிருக்கும் இடிந்தகரை மற்றும் சுற்றியுள்ள பகுதி மக்களின் நியாயமான உணர்வுகளை புறந்தள்ளியும் தமிழ்நாட்டின் பல அரசியல் கட்சிகள், அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளை நிராகரித்தும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அலகு (unit) ஒன்றை இயக்கத் தொடங்கியிருப்பதாக வந்துள்ள அறிவிப்பு, கடும் கண்டனத்திற்குரியது.

உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள 15 நிபந்தனைகளை நிறைவேற்றாமல், உச்சநீதிமன்றத்தை ஏமாற்றும் வகையிலான ஒரு அறிக்கையை நீதிபதிகளிடம் தருவதற்கு பதில், நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் கொடுத்துவிட்டு அவசர அவசரமாக யாருக்கும் தெரியாமல் அணுக்கரு பிளவுக்கான முதல் படிமத்துக்கான உத்தரவை (First Approach to Criticality) பிறப்பிக்க வேண்டிய நிலையில் மத்திய அரசு இருப்பது பல நியாயமான சந்தேகங்களை கிளப்புகிறது.

கூடங்குளம் அணுஉலை வழக்கில் உச்ச நீதிமன்றம் மே மாதம் 6 ஆம் தேதி தந்த தீர்ப்பில், “அணுஉலையில் 15 நிபந்தனைகளைச் செயல்படுத்த வேண்டும்; அந்த அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும், அதன்பிறகே அணு உலையை தொடங்க வேண்டும்” என்று திட்டவட்டமாகக் கூறியது. அதன்படி இந்திய அணுமின் கழகம், இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம், மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தங்கள் அறிக்கைகளை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருக்க வேண்டும்.

உச்ச நீதிமன்ற நிபந்தனையின்படி, அறப்போராட்டக்காரர்கள் மீது தமிழ்நாடு காவல்துறை போட்ட வழக்குகளைத் திரும்பப் பெறவும் இல்லை. தவிர அணுவுலை அமையவிருக்கும் பகுதியில் இருந்து 16 கிலோமீட்டர் சுற்றுவட்டார மக்களுக்கு பேரிடர் மேலாண்மைப் பயிற்சி கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்கிற அடிப்படை விதியை தமிழக அரசும், நெல்லை மாவட்ட பொறுப்பு அரசு ஊழியர்களும் இதுவரை கடைபிடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அணுஉலை பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அணு உலையில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஒவ்வொரு உதிரிப் பாகத்தின் தரத்தையும் பாதுகாப்பு அம்சங்களையும் மறு ஆய்வு செய்து உறுதிப்படுத்தி அதன் அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்க வேண்டும்.
கூடங்குளம் அணுஉலையில் பல இலட்சக் கணக்கான உதிரி பாகங்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே.; ஒவ்வொன்றையும் சோதனை செய்து தரத்தை உறுதிப்படுத்த பல மாதங்கள், ஏன் வருடக்கணக்கில் ஆகும். ஆனால், இரண்டு மாதத்துக்குள்ளாக அணுஉலையை இயக்கப் போகிறோம் என்கிற மத்திய அரசின் அறிவிப்பு மக்களை ஏமாற்றும் ஒரு செயலே.

நாட்டின் அனைத்துத் துறைகளையும் பற்றிப் படர்ந்திருக்கும் ஊழல் பூதம், அணுவுலையையும் விட்டு வைக்கவில்லை. பல்லாயிரக்கணக்கான தமிழக மக்களின் உயிரோடு விளையாடும் கூடங்குளம் அணுவுலைத் திட்டத்தின் ஊழல் முறைகேடுகளை சரிசெய்யாமல் அணுவுலையை இயக்கத் தொடங்கியுள்ளதாக சொல்கின்றார்கள்.

•ரஷியாவைச் சேர்ந்த அணுவுலை பாகங்கள் விற்கும் நிறுவனமான ஜியோ பொடோல்ஸ்க் (Zio Podolsk) - ன் இயக்குனர் செர்கை சுடேவ். இலாபத்தை அதிகரிப்பதற்காக தரமற்ற இரும்பை வாங்கி, அதனைக் கொண்டு அணுவுலை பாகங்களை தயாரித்து, மிகப் பெரிய ஊழல் செய்ததற்காக சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ஜியோ பொடோல்ஸ்க்-ன் தாய் நிறுவனமான ரோசாட்டம் (Rosatom)-ன் தலைவர் டெனிஸ் கோச்ரேவும் இந்த ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ளார்.

• போலியான தரமற்ற பாகங்களை அணுவுலைகளுக்கு விற்பனை செய்த மற்றொரு ரஷிய நிறுவனமான இன்ஃபோர்ம்டெக் (INFORMTEK)-ன் தலைவர் அலெக்சாண்டர் முரேச்சும் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ளார்.


இவர்கள் அணுவுலை பாகங்கள் விற்பனை செய்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. மற்ற நாடுகளில் இந்த ஊழல் குற்றச்சாட்டுகள் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்திய அரசும், இந்திய அணுசக்திக் கழகமும் இதை அப்பட்டமாக மூடி மறைத்து மக்கள் உயிரோடு விளையாடுகின்றன. போராட்டக்காரர்களின் நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பிறகே கூடங்குளம் அணுவுலைகான பாகங்களை ஊழல் நிறுவனங்களான ஜியோ பொடோல்ஸ்க், இன்ஃபோர்ம்டெக்கிடம் இருந்து வாங்கியதாக அணுசக்திக் கழகம் ஒப்புக் கொண்டுள்ளது !
மேலும், கூடங்குளம் அணுவுலைகள் 1 & 2 - ல் பொருத்தப்பட்டுள்ள தரமற்ற கருவிகள் மற்றும் உதிரிபாகங்களால் தவறான பொருத்தமற்ற சமிஞ்கைகள் வருவதாகவும், இவை அணுவுலை இயக்கத்தில் மிகப் பெரிய சிக்கல்களையும், பெரும் விபத்துகளையும் தோற்றுவிக்கும் என்று இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் (Atomic Energy Regulatory Board -AERB) முன்னாள் தலைவர் டாக்டர்.ஏ.கோபாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

இடிந்தகரை மக்களுக்கு ஆதரவான ஜப்பான் மக்களின் போராட்டம்



தரமற்ற பாகங்களால் மிகப்பெரிய விபத்து காத்திருக்கிறது என்றும், கூடங்குளம் அணுவுலையின் பாதுகாப்பின்மை குறித்தும் இந்தியாவின் தலைசிறந்த ஆராய்ச்சி நிறுவனங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் பணியாற்றும் 60 விஞ்ஞானிகள் தமிழ்நாடு மற்றும் கேரள முதலமைச்சர்களுக்கு அச்சம் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளனர். அணுவுலை பாகங்களை வினியோகம் செய்த ஊழல் நிறுவனங்களின் தரமற்ற பாகங்கள் கூடங்குளம் அணுவுலைகளில் பொருத்தப்பட்டுள்ளதை கடுமையாக ஆட்சேபிக்கும் அவர்கள் அனைவரும் அணுசக்திக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால், அவர்கள் அனைவரும் போராடும் மக்களின் நியாயமான கேள்விகளுக்கு ஆதரவானவர்கள்.

இவை தவிர, சுனாமியால் வரும் ஆபத்து, கூடங்குளம் பகுதிக்கு அருகிலேயே கடலுக்கடியில் எரிமலை இருப்பது, அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்படும் பகுதியில் அணுவுலைகளைக் கட்டக் கூடாது என்னும் விதியை மீறி சுண்ணாம்புப் பாறைகள் நிரம்பிய, அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்படும் நெல்லை மாவட்டத்துக்குள் இருக்கும் கூடங்குளத்தில் அணுவுலை கட்டியிருப்பது, அணுக்கழிவுகளை என்னப் செய்யப் போகிறார்கள் என்று அரசுக்கே தெரியாமல் இருப்பது என்று நீண்டு கொண்டே போகும் மக்களின் கேள்விகள் எதற்குமே யாரும் பதில் தரவில்லை.


கூடங்குளம் அணு உலைகளைப் பொறுத்தவரையில் நாளொன்றுக்கு தோராயமாக 650 கோடி லிட்டர் தண்ணீரை கடலிலிருந்து எடுத்து அணு உலையில் குளிர்விப்பதற்கு பயன்படுத்திய பிறகு அந்த நீர், அதிக வெப்பத்துடனும் கதிர்வீச்சுத்தன்மையுடனும் மீண்டும் கடலில் கொட்டபடும். இது அந்தப் பகுதி மக்களையும் அவர்களது வாழ்வாதரத்தையும் கடுமையாக பாதிக்கும். இதனாலேயே சுற்றுசூழல் ஆலோசனைக் கமிட்டி கடலுக்கடியில் பைப் மூலமாக இரண்டு கி.மீ உள்ளே சென்று நீரை கலக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறது. இவ்வளவு கொள்ளளவு தண்ணீரை அதிக வெப்பத்துடன், கதிர்வீச்சுடன் கடலில் கலப்பது எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது வெட்டவெளிச்சம். கடற்கரையிலேயே அதை கொட்டுவது மேலதிக பாதிப்பையே ஏற்படுத்தும்.

இத்தனை பாதுகாப்பின்மை நிரம்பிய கூடங்குளம் அணு உலையை எதிர்க்கும் கிராம மக்கள் மீதும், அதற்கு ஆதரவு தெரிவிக்கும் தலைவர்கள் மீதும் 2,27,000 வழக்குகளைப் போட்டுள்ளது தமிழக அரசு. இந்திய வரலாற்றிலேயே ஒரே ஒரு காவல் நிலையத்தில் இவ்வளவு வழக்குகள் பதியப்படுவது இது தான் முதல் முறை. அதுமட்டுமின்றி போராடும் மக்கள் மீதான அனைத்து வழக்குகளையும் அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்புச் சொல்லியும் கூட இன்னும் ஒரு வழக்கு கூடத் திரும்பப் பெறப்படவில்லை.



எப்படி செர்னோபில்லில் பேரழிவு ஏற்பட்ட பிறகு இந்தியா இரசியாவுடன் அணு உலை ஒப்பந்தம் செய்து கொண்டதோ, அது போல இன்று புகுசிமாவில் பேரழிவில் அந்த அணு உலையில் ஏற்பட்ட இடர்பாடுகள் கூட இன்னும் சரிசெய்யப்படாத நிலையில் சப்பான் சென்ற பிரதமர் மன்மோகன் சிங் சப்பானுடன் பல அணு உலை ஒப்பந்தங்களை செய்து வந்துள்ளார். ஆனால் சப்பான் அரசோ தங்களிடம் உள்ள அணு உலைகளை 2030ற்குள் மூழுவதுமாக மூடிவிடுவாதாகவும், அணு மின்சாரத்திற்கு பதிலாக காற்றாலை போன்ற மரபு சாரா எரிசக்திக்கு மாறுவதாகவும் கூறியிருக்கின்றனர். அணு உலை எதிர்ப்பு மக்கள் திரள் போராட்டங்களுக்கு அரசு மதிப்பளிப்பதை அது காட்டுகின்றது, ஆனால் இங்கு பிரதமர் முதல் கடைக்கோடி அரசு ஊழியர் வரை போராடும் மக்களின் மேல் பொய்யான அவதூறுகளை வைப்பது மட்டுமே இங்கு பார்க்க முடிகின்றது. அப்படி அணு உலை பாதுகாப்பானது தான் என்றால் சப்பான் அரசு ஏன் தன் நாட்டில் அனு உலைகளை மூடிவிட்டு நமக்கு விற்கிறது?. சப்பானிடம் இல்லாத தொழில் நுட்பமா இந்தியாவிடம் உள்ளது ?

ஏகாதிபத்தியங்களின் நலன்களைக் காக்கவும், அமெரிக்கா, உள்ளிட்ட நாடுகளுடன் போடப்பட்டுள்ள ஆறு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான அணுவுலை வர்த்தகத்தில் கிடைக்கப்போகும் தரகு (Commission) பணத்தைச் சுருட்டுவதற்காக கூடங்குளம் மக்களின் 700 நாட்களைக் கடந்த மகத்தான மக்கள் போராட்டத்தை அலட்சியப்படுத்துகின்றது இந்திய அரசு. கூடங்குளம் மக்களின் போராட்டத்தால் அணுவுலை மூடப்பட்டால், இந்தியாவில் எங்குமே இனி அணுவுலையை திறக்க முடியாது என்பதைப் புரிந்து கொண்ட இந்திய அரசு ஒட்டுமொத்த இந்திய மக்களையும் முட்டாளாக்கி கூடங்குளம் அணு உலையை இயக்கத் துடிக்கின்றது.

பல்லாயிரக்கணக்கான தமிழர்களை ஒட்டுமொத்தமாகக் கொன்றழித்துவிடும் அணு உலை ஊழல் பற்றி கூட வாய் திறக்க மறுக்கும் இந்திய அரசின் அயோக்கியத்தனத்தையும், அதற்குத் துணை நிற்கும் விதமாக போராடும் மக்களை ஒடுக்கும் தமிழக அரசையும் தமிழக மக்கள் எக்காலத்திலும் மன்னிக்கவே மாட்டார்கள்.


அணு உலையை எதிர்த்துப் போராடும் மக்கள் ஒய்ந்து விடப்போவதில்லை...!

தமிழக மக்களின் வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் துச்சமென மதித்து, தமிழர்களின் போராட்டத்தை காலில் போட்டு மிதித்து, கூடங்குளம் அணுவுலையை இயக்கத் தொடங்கியிருக்கும் இந்திய அரசின் செயல் தமிழினத்திற்கு விடப்பட்ட நேரடியான சவால் !

1945 ஆம் ஆண்டு ஆகத்து 6 ஆம் நாள் ஜப்பானின் ஹிரோஷிமா மீதும் அதனை தொடர்ந்து நாகசாகி மீது அணு குண்டு வீசி பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்றொழித்தது அமெரிக்கா. அணு குண்டினால் ஏற்பட்ட பேரழிவைக் கண்டதால் அந்த நாள் உலகெங்கும் உள்ள மனித நேயமிக்கவர்களால் அணு சக்தி எதிர்ப்பு நாளாக பாவிக்கப்பட்டு வருகின்றது. அத்தகைய சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த நாளில், அணுவுலையை இயக்கத் தொடங்கியிருக்கும் இந்திய அரசையும், துணை போகும் தமிழக அரசையும் வன்மையாகக் கண்டித்து கூடங்குளம் அணுவுலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சென்னையில் உள்ள மத்திய அரசு அலுவலகம் முன் மக்கள் திரள் போராட்டம் நடத்த இருக்கின்றது.

இந்திய , தமிழக அரசுகளே!

•உச்சநீதி மன்ற ஆணையின்படி போராடும் மக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பபெறு!

•உரிய பாதுகாப்பு அம்சங்களை நிறைவேற்றாமல் அணு உலையை இயக்கத் தொடங்காதே!

•வெப்பமும் அணுக்கதிர்வீச்ச்ம் கலந்த நீரைக் கடலில் கலந்து கடல் வளங்களை அழிக்காதே!

•கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு!

நாம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தின் மிக முக்கியமான கட்டத்தில் இருக்கின்றோம். இடிந்தகரையில் நெஞ்சுரத்தோடு போராடிக் கொண்டிருக்கும் மக்களோடு கரம் கோர்த்து அணு உலைக்கு எதிரானப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய வரலாற்று கடமை நமக்கு இருக்கின்றது என்பதை உணர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அணு உலை எதிர்ப்பாளர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று அறைகூவல் விடுக்கின்றோம். இப்போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் விதமாக, சென்னை, தஞ்சை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் எதிர்ப்பு இயக்கம் நடத்தப்படும்..


வைகோ,பொதுச் செயலாளர், ம.தி.மு.க
த.செ. மணி, ஒருங்கிணைப்பாளர்,கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு.

ஜவாஹிருல்லா,சட்டமன்ற உறுப்பினர்,மனித நேய மக்கள் கட்சி

மீ.த.பாண்டியன்,பொதுச் செயலாளர்,கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ),மக்கள் விடுதலை

வன்னியரசு,செய்தித் தொடர்பாளர்,விடுதலைச் சிறுத்தைகள்

தெஹலான் பாகவி,தலைவர், SDPI

வேல்முருகன்,தலைவர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி

அருண்சோரி,செய்தித் தொடர்பாளர்,தமிழ்நாடு மக்கள் கட்சி

அய்யநாதன்,நாம் தமிழர்

செந்தில்,சேவ் தமிழ்சு இயக்கம்

ஆனூர் ஜெகதீசன்,தலைவர்,பெ.தி.க‌

சுந்தரராஜன், பூவுலகின் நண்பர்கள்.
---------------------------------------------------------------------------
தொடர்புக்கு : தி.வி.க தலைமை அலுவலகம், அம்பேத்கர் பாலம்,(சிட்டி சென்டர் எதிரில்),மயிலாப்பூர், சென்னை. 9443184051

Tuesday, July 16, 2013

பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள்: சமூகக் கட்டுப்பாடுகள்,உளவியல் பாதிப்புகள்,சட்ட உரிமைகள்

பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள்: சமூகக் கட்டுப்பாடுகள்,உளவியல் பாதிப்புகள்,சட்ட உரிமைகள்

ஈவ் - டீசிங்கால் இறந்து போன சரிகா ஷா..

ஆசிட் தாக்குதலில் கொல்லப்பட்ட வித்யா..

டெல்லி பாலியல் வன்முறைக்கு பலியான நிற்பயா ...

இவை நாம் அன்றாடம் எதிர்கொண்டு வரும் பாலியல் வன்முறைகளில் உலகிற்கு தெரிய வந்த சில.


இவற்றைப் பத்திரிக்கைகளில் படிக்கும் போது அனுதாபமும், கோபமும், இயலாமையும் சேர்ந்த ஓர் உணர்ச்சி நம் நெஞ்சில் எழுகிறது. இதை ஒப்பிடும் பொழுது வீட்டில், தெருவில், பேருந்தில், வேலை செய்யும் இடத்தில் பார்வையால், உடல் உரசல்களால், அத்துமீறிய பேச்சுக்களால் நம் மீது தொடுக்கப் படும் பாலியல் வன்முறைகள் சாதாரணமானவையாக ஆகிவிடுகின்றன.



ஆனால், இந்த சமூகமோ பெண்களைப் பார்த்து இப்படியெல்லாம் அறிவுரை கூறுகிறது.

”பெண்கள் இரவு நேரத்தில் தனியா வெளியில போகக் கூடாது.
பெண்கள் போடும் அரைகுறை ஆடைதான் இதுக்கெல்லாம் காரணம்.
இவுங்கதான் தூண்டுறாங்க”


பல நேரங்களில் நாமும் இது தான் ’சரி’ என்று கடந்து போகிறோம். குற்றம் செய்பவர்களை விட்டு விட்டு பாதிக்கப்பட்டவரைக் குற்றஞ் சொல்லும் விசித்திரம் பெண்களுக்கு மட்டுமே நேர்கின்றது. பெண்களின் பிறப்பு முதல் இறப்பு வரை இந்த பாகுபாடு தொடர்கின்றது. நவீனத் துறைகளைச் சார்ந்த அலுவலகங்கள் கூட இதற்கு விதி விலக்கல்ல. பதவி உயர்வு, வெளிநாட்டுப் பயணம், திறன் மதிப்பீடு(performance appraisal) என்று எல்லாவற்றிலும் பாகுபாடு.பெண் ஆணுக்கு சமம் இல்லை என்பது மட்டுமல்ல. பெண் ஆணின் உடைமை. அதாவது, பெண்ணின் உடல், உயிர், சுயசிந்தனை என்று அனைத்தும் ஆணுக்கு கட்டுபட்டது.வீட்டில், சமூகத்தில், வேலை செய்யும் இடத்தில் என ஆணுக்கும்,பெண்ணுக்குமாக நிர்ணயிக்கப்பட்ட தனித்தனி வரையறைகள்(rules),அது உருவாக்கும் பாலினப் பாகுபாடுகள்(gender discrimination), பெண்ணின் மீதான எல்லாவித வன்முறைகளுக்கும் அடிப்படையாக இருக்கிறது.


இந்நிலையில் பாலியல் வன்முறைகளுக்கு எதிராக சட்டத்தில் நமக்கென்று உள்ள பாதுகாப்பு என்ன?

பெண் என்பவள் ஆண் பார்த்து ரசிக்க,ஆணின் சொத்து என கருதும் சமூக உளவியல். இதை எதிர்கொள்வது எப்படி?

பாலியல் வன்முறைகளுக்கு எதிராக போராடுவதில் உள்ள மனத்தடைகளை உடைத்தெரிவது எப்படி?

என நமக்கு எழும் பல்வேறு கேள்விகளுக்கு விடை கண்டறியும் ஒரு சிறு முயற்சியே இந்த கருத்து மற்றும் விவாத அரங்கம்.

வாருங்கள் நண்பர்களே,விடை காண்போம் !

--------------
ஆவணப்படம் திரையிடல், கலந்துரையாடல்

சிறப்பு பேச்சாளர்கள்
அ.மங்கை,பேராசிரியர்,ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி
ஆர்.கே.ருத்ரன்,உளவியல் மருத்துவர்.
அஜிதா,வழக்கறிஞர்

20-07-2013 | சனிக்கிழமை,மாலை 3-6 வரை
வெங்கடேஸ்வரா திருமண மண்டபம் | பனகல் பூங்கா எதிரில் | தி.நகர் | சென்னை – 17
ஒருங்கிணைப்பு : பெண்கள் குழு - சேவ் தமிழ்சு இயக்கம் | 9840713315

Wednesday, July 10, 2013

தாராளமயமும், தனியார்மயமும்- மக்களைச் சுரண்டவே!!!



* எண்ணெய் இறக்குமதியை குறைக்கக்கூடாது என்று மிரட்டுகிறார்கள்- பெட்ரோலியத்துறை அமைச்சர்.

* விதிகளைப் பின்பற்ற மறுத்து மக்களைத் தண்ணீரில்லாமல் தவிக்கவிட்ட குடிநீர் விற்பனை நிறுவனங்கள்.

* ஆங்கில வழிக்கல்வியை கட்டாயமாக்கி, மக்களை தனியார் பள்ளிகள் நோக்கித் தள்ளும் தமிழக அரசின் ஆணை.

* இயற்கை எரிவாயு விலையை இரண்டு மடங்காக்கி, அம்பானிக்கு ஆதரவான முடிவை எடுத்தது மத்திய அரசு.

இவையெல்லாம் நாம் எப்போதும் போல கடந்து சென்ற அண்மைச் செய்திகள்.

குடிநீர், எரிவாயு,பெட்ரோல் என பல்வேறு துறைகளிலும் தனியாருக்கு ஆதரவாகவும், இன்னும் ஒரு படி மேலே சென்று அரசாங்கத்தையே மிரட்டும்,மிரட்டிக் கொண்டிருக்கும் உண்மைகள்.

என்னுடைய சிறுவயதில் அரசாங்கத் துறைகளில் யாரும் சரியாக வேலை பார்ப்பதே இல்லை, தனியாரிடம் இப்படி எல்லாம் வேலை பார்க்காமல் ஏமாற்ற முடியாது.அத்தோடு தனியாரின் சேவை என்றுமே தரத்தோடு இருக்கும் என்று என்னைவிட பெரியவர்கள் பேசி கேட்டிருக்கிறேன்.

ஆனால், 1991ல் இந்திய நடுவண் அரசு தாராளமயக் கொள்கையை புகுத்தி, இருபதாண்டுகள் ஆகியும் மக்களுக்கான அடிப்படை வாழ்வாதாரத் தேவைகள் இன்னும் எட்டாக்கனியாகவே இருக்கிறது. தாராளமயக் கொள்கையை புகுத்தும் போது, பல்வேறு துறைகள் சுற்றி இருக்கும் சந்தையை தனியாருக்கு திறந்துவிடும் போது உருவாகும் கடும் போட்டியால் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை குறைந்து மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றே நம்ப வைக்கப்பட்டோம்.

ஏறும் விலைவாசியும், நாம் மேலே குறிப்பிட்டுள்ள செய்திகளும் இந்த கொள்கை யாருக்கானது என்பதைச் சொல்லும்.

இந்த தாராளமயக் கொள்கையாலும், தனியார் லாப வெறியாலும் சீரழிக்கப்பட்ட மக்களின் உரிமைகளில் ஒன்றான ஒரு பொதுத்துறையின் நிலைமையை கொண்டு விளக்க முயற்சித்துள்ளேன்.

இந்தத்துறை பற்றியும்,இதன் தேவைப் பற்றியும் 18 மணி நேர மின்வெட்டில் தவித்து, இப்போது மின்வெட்டை சட்டையே செய்யாமல் வாழப் பழகிவிட்ட நம் தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும். பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே இனி மின்சாரம் என்பதற்கான முதல் மணி தமிழ்நாட்டில் அடிக்கப்பட்டுவிட்டது.

2008 அக்டோபர் மாதத்தில் இருந்து வீடுகளில் எந்த அத்தியாவசியத் தேவைக்கும், மாணவர்கள் படிக்கவும், சிறுதொழில்கள் நடைபெறவும், மருத்துவமனைகளிலும் மின்சாரம் இல்லாமல் நம் மக்கள் பட்டபாடு கொஞ்சம் நஞ்சமில்லை.அதுவும் மின்வெட்டு காலநேரம் அறிவிக்கப்படாத ஒன்று, எப்போது மின்சாரம் கிடைக்கும் என்று அறிவிக்கப்படாமல் இருந்தது.இப்படியொரு சூழல் ஒரே நாளில் வந்திருக்காது என்பதே நிதர்சனம்.


இப்படிப்பட்ட இருண்ட சூழ்நிலைக்கான தொடக்கப் புள்ளி 1991ஆம் ஆண்டில் இந்திய அரசால் எட்டவது ஐந்தாவது திட்டத்தின் மூலம் கொண்டு வரப்பட்ட புதிய தாராளமயக் கொள்கையினால் இடப்பட்டது.

மின்தேவை அதிகரிப்பு:

புதிய சந்தைப் பொருளாதாரமானது நவீன மின்னணு உபயோகப் பொருட்களை கொண்டு வந்து இந்திய மக்களிடம் கடை விரித்தது.இதனால் வளர்ந்த நுகர்வு கலாச்சாரமும், சந்தை விற்பனையும் மின்சாரத்தின் தேவையையும், முக்கியத்துவத்தையும் அதிகரித்துவிட்டது. 2000 ல் அரசால் வழங்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டிகளும், நடுத்தர குடும்பங்களினால் தேவை என்று கருதப்பட்ட குளிர்சாதன பெட்டிகளும், சந்தை திறப்பால் புதிதாக வந்த வாகன உற்பத்தித் தொழில்களும்,தகவல் தொழில்நுட்பத் துறையும் மின்சாரத்துக்கான தேவையை பலமடங்கு உயர்த்திவிட்டது.

கடந்த கால மின்வெட்டு பிரச்சனைகள்:

1969-71 ஆண்டுகளில் அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் என்ற கொள்கையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. அப்போதுதான் முதல்முறையாக மின்தட்டுப்பாடு ஏற்பட்டு மின்வெட்டு அமலுக்கு வந்தது. அப்போது நம்முடைய மொத்த மின் உற்பத்தி வெறும் 1965 மெகாவாட் மட்டுமே.மத்திய மின்தொகுப்பான நெய்வேலி மின்நிலையத்தில் இருந்து பெறப்பட்ட 600 மெகாவாட் மின்சாரமும் இதில் அடக்கம்.

அதன்பிறகு 1980-82 ஆண்டுகளில் கடுமையான மின்வெட்டு புழக்கத்திற்கு வந்தது.1982 ஆம் ஆண்டின் இறுதியில் இந்த மின்வெட்டு 100 விழுக்காடு எட்டி மூன்று நாட்கள் மாநிலமே இருளில் தவித்துள்ளது.

இந்த காலத்தில் எப்போது மின்சாரம் வரும் என்றே தெரியாத நிலை இருந்தது ஆனால் வரையறுக்கப்பட்ட காலஅளவிற்கு மின்சாரம் வழங்கப்பட்டது. இப்படியாக இருந்த மின்வெட்டின் நிலைமை தமிழ்நாடு மின்சார வாரியம் எடுத்த சிரத்தையான முயற்சிகளால் படிப்படியாக குறைக்கப்பட்டு நாளுக்கு சில மணி நேரங்கள் என்ற நிலை 1998 ஆம் ஆண்டு கோடை மாதங்களான மூன்று மாதம் மட்டுமே அமலில் இருந்தது.

இந்த நிலைமை மீண்டும் 2008ல் எந்த நேரம் மின்சாரம் கிடைக்கும் என்பது தெரியாமல், கொடுக்கப்படும் கால அளவும் தெரிவிக்கப்படாமல் 18 மணி நேர மின்வெட்டு அமலில் உள்ளது.கடந்த ஒரு மாதமாக மட்டும் காற்று காலம் நம்மைக் காப்பாற்றத் தொடங்கியிருக்கிறதே ஒழிய நாம் இன்னும் மின்தட்டுப்பாட்டிற்கு தீர்வை நோக்கி நகர தொடங்கவில்லை.

1991-ல் ஏற்பட்ட பொருளாதார கொள்கைகள் லாபத்தில் இயங்கிக் கொண்டிருந்த தமிழ்நாடு மின்வாரியத்தை சுரண்டி தற்போது வாரியத்தின் கடன் தொகை ஐம்பதாயிரம் கோடிக்கு மேல் உள்ள நிலைக்கு தள்ளியது.1990க்கு முன் மின்வாரியத்தால் தொடங்கப்பட்ட உற்பத்தி நிலையங்கள் மூலம் 2000ஆம் ஆண்டு வரையிலான காலம் மின்தேவை பூர்த்தி செய்யப்பட்டது.அதற்குப் பிறகுதான் தனியாரிடமும், திறந்த வெளிச் சந்தையிலும் மின்சாரத்தை வாங்கத் தொடங்கினர்.

தாராளமயக் கொள்கைகளினால் ஏற்பட்ட மாற்றங்கள்:

1. 1992-97 ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட எட்டாவது ஐந்தாண்டு திட்டத்தில் அதுவரை புதிய மின் உற்பத்திக்காக ஒதுக்கப்படும் மூலதன ஒதுக்கீடு நடுவண் அரசால் ரத்து செய்யப்பட்டது.

2. பொதுத்துறை நிறுவனங்களான மாநில மின் வாரியங்கள்,தேசிய அனல் மின்உற்பத்திக் கழகம் (என்.டி.பி.சி) போன்றவை புதிய மின் உற்பத்தி திட்டங்களைத் தொடங்க அனுமதி மறுத்தது நடுவண் அரசு.

3. அனைத்து மின் உற்பத்தி திட்டங்களும் தனியாருக்கே வழங்கப்பட வேண்டும்.

4. 1948 மின் வழங்கல் சட்டத்தில் திருத்தத்தை கொண்டு வந்து தனியாரிடமிருந்து மின் கொள்முதல் செய்யும் விலை நிர்ணயிப்பிற்க்கான வரையறையை கொண்டு வந்து, அதை தனியார் நிறுவனங்களின் விருப்பத்திற்கு ஏற்ப நான்கு முறை மாற்றியமைத்தது.


இந்த கொள்முதல் கட்டணம்தான் மின்வாரியங்களைச் சுரண்டி, பொது மக்கள் வரிப்பணத்தை லாபம் மூலம் கொள்ளையடிக்கும் முக்கிய முடிவாக அமைந்தது.


இம்முடிவின்படி, மின்சார உற்பத்தி விலையுடன் மூலதனக் கட்டணம் என்று ஒரு தொகை சேர்க்கப்பட்டு அதுவே ஆண்டின் கொள்முதல் விலையாக நிர்ணயிக்கப்பட்டது.மொத்த மூலதனத்தில் 24 விழுக்காடு ஒவ்வொரு ஆண்டும் மூலதனக் கட்டணமாக கொள்முதல் விலையில் சேர்க்கப்படும்.


அதாவது, மின்வாரியமானது ஒரு மின் உற்பத்தி நிலையத்திற்கான மொத்த மூலதனத்தையும் நான்கு ஆண்டுகளில் திருப்பி செலுத்த வேண்டும்.


தனியார் மின் உற்பத்தித் திட்டங்கள்:


புதிய பொருளாதார மாற்றங்களால் புதிய மின் உற்பத்தி திட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தனியார் முதலீட்டை நோக்கி நகர்ந்தது தமிழக அரசு. தொடக்கத்தில் மொத்தம் 42 ஒப்பந்தங்கள் தனியார் நிறுவனங்களுடன் செய்யப்பட்டன, ஆனால் தனியாரின் லாப நோக்கத்திற்காக மின் கொள்முதல் விலை நிர்ணய சட்டம் பல்வேறு முறை திருத்தப்பட்டதால் 1996 ஆம் ஆண்டு வரை எந்த தனியாரும் முதலீடு செய்ய முன்வரவில்லை.1996ல் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு ஆறு புதிய ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. இந்த ஒப்பந்தங்களிலும் தனியாருக்கு ஆதரவான கொள்கைகளே கடைப்பிடிக்கப்பட்டது.


தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்த நிறுவனங்களில் ஒன்றான வீடியோகான் 2000ஆம் ஆண்டு வரை எந்த முதலீட்டையும் செய்து பணிகளைத் தொடங்கவில்லை.அதனால் மின்வாரியம் அந்த நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்தது. ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதால் உற்பத்தி தொடங்கப்படாத நிலையத்திற்கு இழப்பீடு கோரி உயர்நீதிமன்றத்தை அணுகி வழக்கில் வெற்றியும் பெற்றது !!! இவ்வழக்கின் மூலம் பணிகள் தொடங்கப்படாத போதும் மின்வாரியம் 150 கோடி இழப்பீடு தரவேண்டி வந்தது. இந்த வழக்கில் வீடியோகான் நிறுவனத்திற்காக வாதாடியவர் வேறு யாரும் அல்ல, தற்போது நிதி அமைச்சராக உள்ள ப.சிதம்பரம் ஆவார்.


இந்தியாவின் தென்கோடி மாநிலமான தமிழகத்திற்கு தேவைப்படும் உபரி நிலக்கரி பிற மாநிலங்களில் இருந்து கப்பல் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு பின்னர் தொடர்வண்டியின் மூலம் மேட்டூர் அனல் மின்நிலையத்திற்குக் கொண்டு சேர்க்கப்படும்.நிலக்கரியை கொண்டு வரத்தேவைப்படும் போக்குவரத்து செலவு எரிபொருளுக்கான செலவை இருமடங்காக உயர்த்திவிடுகிறது. இப்படிப்பட்ட நிலையில் தமிழகத்தின் ஒரே நிலக்கரிச் சுரங்கமான நெய்வேலியின் புதிய மின் உற்பத்தி நிலையத்தை தனியாருக்கு தாரை வார்த்தது நடுவண் அரசு.


இந்த ஒப்பந்தத்தை பெற்ற எஸ்.டி.சி.எம்.எஸ் நிறுவனம் இந்த திட்டத்திற்கான மொத்த முதலீடு 1408கோடி என்று கூறியது. ஆனால், இதன் மதிப்பு 600 கோடியை தாண்டாது என்றமின்வாரியம்சொன்னது,இப்படியொரு சூழ்நிலையில் மத்திய அரசு 1408 கோடி என்ற முதலீட்டு மதிப்பிற்கே அனுமதி வழங்கியது.இதற்கான வழக்கு எஸ்.டி.சி.எம்.எஸ் நிறுவனத்தின் அழுத்தத்தின் காரணமாக லண்டன் நீதிமன்றத்தில் நடந்தது.இந்த வழக்கில் எஸ்.டி.சி.எம்.எஸ் நிறுவனத்தின் சார்பில் வழக்காடியவர், பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான அருண் ஜெட்லி ஆவார்.


இந்த இரண்டு தேசிய கட்சிகளும் யாருக்காக செயல்படுகின்றன என்பதை இந்த இருவேறு நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.


தனியாரின் கொள்(ளை)முதல் விலையும், மின்வாரியத்தின் கடனும் :


நாம் ஏற்கனவே பார்த்தது போன்று தனியாருக்கு லாபம் கொழிக்கக் கூடிய வகையில் மின்சார வழங்கல் சட்டம் மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி தனியாரின் மின் உற்பத்தி நிலையங்களுக்கான முதலீட்டுச் செலவை நான்கு ஆண்டுகளிலேயே திருப்பிச் செலுத்துமாறு வரையறை செய்யப்பட்டதோடு அல்லாமல், 70% க்கும் மேலான தொகை வங்கிகளில் கடனாக வழங்கப்பட்டது.ஆக, தனியார் நிறுவங்களின் மொத்த முதலீடு 30% ஆகவே இருந்துள்ளது.


தமிழக மின்சார வாரியம் மொத்த முதலீட்டிற்கான பணத்தைச் செலுத்திய பின்பாவது வாரியமே உற்பத்தி நிலையத்தை எடுத்துக் கொள்ளும்படி சட்டத் திருத்தம் செய்திருக்க வேண்டும்.


முதலீடு பணத்தையும் செலுத்திவிட்டு, மின்சாரத்தையும் விலைக் கொடுத்து கொள்முதல் செய்வது, தன் சொந்தக் கடையிலயே காசு கொடுத்து பொருள் வாங்கும்போது காசு முழுவதும் பழைய முதலாளிக்கு செல்வதாக உள்ளது எவ்வளவு பெரிய கொள்ளை.


2000ல் உற்பத்தியைத் தொடங்கிய ஐந்து நிறுவனங்களுக்கும் சேர்த்து மின்சார வாரியத்தால் செலுத்தப்பட்ட நிலைத்தொகை ஆண்டு ஒன்றுக்கு 1006 கோடி.


2006 ஆம் ஆண்டு பி.பி.என் நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்த கோடி யூனிட்டிற்கு செலுத்தப்பட்ட நிலைக் கட்டணம் மட்டும் 330.04 கோடியாகும்.இதுபோக மின் கொள்முதலுக்காக 103.78 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது. இந்த மின் அளவானது இந்நிறுவனத்தின் 35 நாள் உற்பத்தி மட்டுமே, அதாவது வருடம் 365 நாட்களில், 330 நாட்கள் உற்பத்தியே நடைபெறாத கணக்கில் இயங்கிய போதிலும், நாள் ஒன்றுக்கு நிலைக் கட்டணமாக ஒரு கோடியை அந்த நிறுவனம் பெற்றது.


இதுதவிர அதிகரித்து வரும் மின்தேவைக்கு ஈடுசெய்யும் வகையில் சந்தையில் கொள்முதல் செய்யும் சந்தையின் விலை என்பது ஒப்பீடே செய்யமுடியாத அளவுக்கு அதிகம்.உதாரணத்துக்கு, 2008-2009 ஆண்டுகளில் சந்தையில் கொள்முதல் செய்த மின்சாரத்தின் விலை யூனிட்டிற்கு ரூபாய் 52.38 ஆகும்.


இப்படி ஒப்பந்த தனியார் நிறுவனங்களின் கொள்ளை லாபமீட்டும் கொள்முதல் விலையாலும், மின்தேவை அதிகரிக்கும் போது எல்லாம் திறந்தவெளிச் சந்தையில் விலைகொடுத்து வாங்கப்பட்ட மின்சாரமும் தமிழ்நாடு மின்வாரியத்தின் கடன்தொகையை ஐம்பதாயிரம் கோடிக்கு மேல் உயர்த்தியுள்ளது.


மின்கட்டண உயர்வும் ஒழுங்குமுறை ஆணையமும்:



மக்கள் என்னதான் மின்வெட்டால் அவதிப்பட்டாலும், நாம் செலுத்தும் மின்கட்டணம் வருடாவருடம் உயர்ந்து கொண்டேதான் இருக்கிறது. 2001ஆம் ஆண்டு வரை மின் கொள்முதல்,மின் கட்டணம் ஆகியவற்றைத் தீர்மானிக்கும் உரிமை தமிழக அரசிடம்தான் இருந்தது. 2002லிருந்து மின்கட்டணம், மின் கொள்முதல் போன்றவற்றை நிர்ணயிக்கும் உரிமை மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையம் என்ற தனிப்பட்ட அமைப்பின் கீழ் கொண்டுவரப்பட்டது. மாநில சுயாட்சிப் பற்றி வெற்றுக் கூச்சலிடும் ஆளும் கட்சிகள் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்காதது அவ‌ர்க‌ளின் உண்மை முக‌த்தை காட்டுகின்ற‌து.


மக்களுக்கான மின்கட்டணத்தைப் பொறுத்தவரை, தமிழக அரசானது மின்சாரக் கொள்முதலுக்கான கூடுதல் விலையை விவசாயிகள் மீதும், சாமானிய மக்கள் மீதும் இறக்கக்கூடாது என்பதற்காக தொழில் மற்றும் வணிக நிறுவனங்களிடம் மட்டுமே கட்டண உயர்வை விதிக்க வேண்டும் என்று நடைமுறைப்படுத்தி இருந்தது.ஆனால், மின்கட்டண உயர்வு அனைத்தும் பொருளாதார வலிமை படைத்தவர்கள் மீதே சுமத்தப்படுவது கூடாது என்று கூறி மின் கட்டண நிர்ணய உரிமையை ஒழுங்குமுறை ஆணையத்திடம் வழங்கியது.



ஒழுங்குமுறை ஆணையம் செயல்பாட்டுக்கு வந்த முதல் ஆண்டிலேயே மின்வாரியத்தால் தனியாரிடம் இருந்து கொள்முதல் செய்யும் அளவு உயர்த்தப்பட்டது.


2010ல் ஆணையம் மின்கட்டணத்தை உயர்த்திய போது, தனியாரிடமிருந்து கொள்முதல் செய்ய மின்வாரியத்தால் குறிக்கப்பட்ட விலையான யூனிட்டிற்கு மூன்று ரூபாய் ஐம்பது காசு என்பதற்கு பதிலாக 3.65 ரூபாய் என்று நிர்ணயித்தது.இதனை ஒரு யூனிட் என்று பார்த்தால் வெறும் 15 காசு மட்டும்தான், ஆனால் அப்போதைய மின்சாரக் கொள்முதல் அளவான 4439.4 கோடி யூனிட்டிற்கு கணக்கிட்டால் 665.9 கோடி ரூபாய் ஆகும்.இது வெறும் மின்கொள்முதல் விலை மட்டுமே ஆனால் அது மக்களை வந்தடையும்போது கம்பி இழப்பு மற்றும் நிர்வாகச் செலவினால் ஒன்றரை மடங்கு உயர்ந்து 1065.5 கோடியாக மக்கள் தலையில் விழுகிறது.


2010ஆம் ஆண்டு மின்கட்டண உயர்வை அறிவித்த போது தமிழக அரசின் அறிவிப்பை மீறி தகவல் தொழில்நுட்பத் துறையை உயர்கட்டண‌ப் பிரிவான வணிகப் பிரிவிலிருந்து குறைந்த கட்டணம் உடைய தொழில் பிரிவுக்கு அவர்கள் கேட்காமலேயே மாற்றியது. ஆனால் விவசாயிக‌ளுக்கும், சிறு குறு வ‌ணிக‌ர்க‌ளுக்கும் மின்க‌ட்ட‌ண‌த்தை குறைக்க‌ வேண்டும் என்ற‌ நீண்ட‌ நாள் கோரிக்கை க‌ண்டுகொள்ள‌ப்ப‌ட‌வேயில்லை.


இவ்வாறு மாநில தலையீடே கூடாது என்பதற்காக மத்திய அரசால் உருவாக்கப்பட்ட ஒழுங்குமுறை ஆணையங்கள் ஒரு நிழல் அரசு போன்றே செயல்பட்டன. இந்த ஒழுங்குமுறை ஆணையங்களின் செயலராக பணிசெய்த பல இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் பின்னாட்களில் இதே தனியார் மின் நிறுவனங்களில் இயக்குனராக செயல்பட்டனர். இதில் இருந்தே ஒழுங்குமுறை ஆணையத்தின் நேர்மையை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.


2012 ஆம் ஆண்டு இந்திய மாநில மின்வாரியங்களின் இழப்பு ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 89 கோடியை எட்டும் என்றும்,அதனால் தனியாருக்கு வரவேண்டிய ஒப்பந்ததொகைகள் வராமல் போகும் வாய்ப்புள்ளதால் இந்த இழப்புத் தொகையினை மின்பயனீட்டாளர்கள் மீது சுமத்த ஆவண செய்யுமாறு வழங்கிய ஆலோசனையை யாரிடமும் விவாதிக்காமல் ஒழுங்குமுறை ஆணையங்கள் நிறைவேற்றின.இழப்பைச் சந்தித்து வரும் மின்வாரிய அதிகாரிகளிடம் கூட இதை விவாதிக்கவில்லை.


மின்கொள்முதல் தொடர்பான அனைத்து பிரச்சனைகளிலும் முன்னுக்குப்பின் நிலைப்பாடுகளை எடுத்து, தனியாருக்கு எதிராக பல்வேறு தரப்பினரால் தொடுக்கப்பட்ட அனைத்து வழக்குகளிலும் தனியார் நிறுவங்களின் கைக்கூலியாகவே செயல்பட்டது ஒழுங்குமுறை ஆணையம்.


தீர்வு காணப் பயணிக்க வேண்டிய பாதை:


தனியார் நிறுவனங்களின் சுரண்டலாலும், அரசின் மக்கள் விரோதப் போக்காலும் 18 மணிநேர மின்வெட்டை தீர்க்கவும், மின்கட்டண உயர்வை தடுக்கவும் அரசும், மக்களும் இணைந்து செயலாற்ற வேண்டிய தருணமிது.


1. ஒப்பந்தத் தனியார் நிறுவனங்கள், வணிக மின் உற்பத்தியாளர்கள், சுய தேவைக்கான உற்பத்தியாளர்கள் என்று அனைத்துவகை தனியார் நிறுவனங்களின் ஆதிக்கமும், சுரண்டலும் களையப்பட வேண்டும். குறிப்பாக,வணிக மின் உற்பத்தியாளர்களால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை அதனால், அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளும், வளங்களை பயன்படுத்துவதில் அளிக்கப்படும் முன்னுரிமையும் விளக்கப்பட வேண்டும் .

2. மின்சார‌ ஒழுங்குமுறை ஆணைய‌ம் போன்ற‌ த‌னியார் முத‌லாளிக‌ளின் த‌ர‌கு அமைப்புக‌ள் நீக்க‌ப்ப‌ட்டு மீண்டும் முழுமையான மின்சார நிர்வாகம் அந்த‌ந்த‌ மாநில‌ மின்வாரிய‌ங்க‌ளிட‌மே கொடுக்க‌ப்ப‌ட‌ வேண்டும்.

3. புதிய மின் திட்டங்களுக்கு நடுவண் அரசால் ரத்து செய்யப்பட்ட நிதி ஒதுக்கப்பட வேண்டும்.

4. காற்றாலை, சூரிய‌ ஒளி போன்ற‌ ம‌ர‌பு சாரா மின்னுற்ப‌த்தியில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்.

5. கம்பி மற்றும் நிர்வாக இழப்பை கட்டுபடுத்தும் பொருட்டு சுயசார்புள்ள மின்வட்டங்களை ஏற்படுத்த வேண்டும்.

6. சூரிய‌ ஒளி போன்ற‌ ம‌ர‌பு சாரா மின்ன்னுற்ப‌த்தி பெரிய அளவில் செயல்பாட்டுக்கு வர நீண்டகாலம் பிடிக்கும் என்ற நிலையில் தெருவிளக்குகளுக்கு அதற்கு தேவையான மின்சாரத்தைப் பெரும் பொருட்டு சூரிய பதாகைகளை இணைக்கலாம்.

7. ஆந்திர மாநில சிம்மாத்ரி அனல் மின் நிலையத்தின் உற்பத்தி முழுவதும் அந்த மாநிலத்திற்கே வழங்கப்படுவது போன்று, நெய்வேலி போன்ற‌ ம‌த்திய‌ நிறுவ‌ன‌ மின்சார‌ம் முழுவ‌தும் த‌மிழ‌க‌த்திற்கே கொடுக்க‌ப்ப‌ட‌ வேண்டும். இதன் மூலம் கம்பி இழப்பு குறைக்கப்படும்.


இப்படி, அரசு தன் கொள்கைரீதியாக மேற்கொள்ள பல நடவடிக்கைகள் இருப்பது போல, மக்களாகிய நாமும் சிலவற்றைச் செய்ய வேண்டியுள்ளது.

1. மின்சாரம் போன்ற அத்தியாவசியப் பொருட்களை தேவைக்கு அதிகமாக பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். சிக்கனம் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று.

2. அரசு தரும் சூரிய பதாகைக்கான மானியத்தை வாய்ப்புள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

3. குறைந்த அளவு மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும் ஒளிவிளக்குகளைப் பயன்படுத்த முன்வர வேண்டும்.



இவை எல்லவற்றையும்விட, அரசு மக்களுக்கு எதிரான கொள்கைகளைப் புகுத்தும் போது எல்லாம் பெரும் மக்கள்திரள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.


மக்களைச் சுரண்டவே!!!



தனியார் பெருமுதலாளிகளுக்கு சேவகம் செய்வதையே கொள்கையாக கொண்ட மத்திய அரசும், அதை எதிர்க்கும் துணிவற்ற மாநில அரசுகளும் சேர்ந்து தனியாரின் கொள்ளைக்கு துணைப்போவது மட்டும் அல்லாமல்,மின்சாரம் தயாரிக்க தேவையான இயற்கை வளத்தையும் சுரண்ட அனுமதித்து வருகின்றன. ஆனால் இப்போதும் தமிழக அரசு யூனிட்டிற்கு ரூபாய் 4.91 கொள்முதல் விலைகொண்ட மின் ஒப்பந்தங்களை செய்துகொண்டுதான் இருக்கிறது.



அதாவது "வெல்லம் தின்பவன் ஒருவன் விரல் சூப்புவது இன்னொருவன் என்பது போல" மின்வாரியத்திற்கு ஏற்படும் இழப்பு அனைத்தும் மக்களின் தலையிலேயே மின்கட்டண உயர்வாக வந்து விடிவது மட்டுமல்லாமல், தனியார் நிறுவனங்களுக்கு மானியமாக மக்கள் வரிப்பணமே செலவு செய்யப்படுகின்றது.


இப்படி மின் வாரியங்களின் உற்பத்தித் திட்டங்களை தடுத்து,அவற்றை பொருளாதார ரீதியாக இழப்பீட்டிற்குள்ளாக்கி, மக்கள் இருளில் தவிப்பது பற்றி துளியும் கவலைப்படாமல் தனியாருக்கு சாமரம் வீசுகிறது நடுவண் அரசும், மாநில அரசும்.


தமிழகத்தில் மின்வெட்டினால் வெளிச்சத்திற்கு வந்துள்ளவை ஒரு சிறுத் துளியே, ஆனால் நாடு முழுக்க இவ்வாறு தனியார் பெருமுதலாளிகளால் சுரண்டப்படும் துறைகள் ஏராளம்.


எப்போதும் ஊழல் என்றாலே அரசியல்வாதிகள்தான் நம் கண்முன் தோன்றுவர், ஆனால் அலைக்கற்றை ஊழல் முதல் நிலக்கரி சுரங்க ஊழல் வரை பயனடைந்து எப்போதும் முறைகேடுகளின் ஊற்றுக் கண்ணாக இருப்பது தனியார் பெருமுதலாளிகளே!!!


தனியார் முதலாளிகளின் லாபத்திற்கு உழைப்பதில் காங்கிரஸ், பாரதிய ஜனதா,தி.மு.க.,அ.தி.மு.க என்று எந்த கட்சியும் சளைத்தவை அல்ல.அதனால் நாம் போகவேண்டிய பாதை ஆட்சி மாற்றத்தை நோக்கி அல்ல;மக்கள் அதிகாரத்தில் பங்கேற்கும் உண்மை ஜனநாயகத்தை நோக்கியே!!!

கதிரவன்
சேவ் தமிழ்சு இயக்கம்

தரவுகள்:

1. தமிழகத்தில் மின்வெட்டும் மின்கட்டண உயர்வும் - காரணமும் தீர்வும் - சா.காந்தி.

நன்றி. கார்ட்டூனிஸ்ட்.பாலா

Tuesday, July 9, 2013

பா.ம‌.க‌-வை தனிமைப்படுத்துவோம், சாதிக‌ள‌ற்ற‌ ச‌ம‌த்துவ‌ ச‌முதாய‌த்தை நோக்கி ந‌க‌ர்வோம்.



இளவரசனின் உயிர் தின்ற சாதி வெறி அரசியல் கண்டனக்கூட்டம். கண்டன கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக, இளவரசனின் உருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு, இரண்டு நிமிடம் மெளன அஞ்சலியும் தோழர்களால் கடைபிடிக்கப் பட்டது. பிறகு கூட்டம் ஆரம்பமானது.



லயோலா கல்லூரி மாணவர் தோழர் சந்தோஷ் முதலாக தனது கண்டன உரையை பதிவு செய்தார். மாணவர்கள் போராட்டத்துக்கு தயாராக இருப்பதாகவும், ஆனால் அப்போராட்டங்களை முன்னெடுக்க உத்திகள் தான் இன்னும் சரியாக வகுக்கப்படவில்லையென்று தன்னுடைய ஆதங்கத்தைச் சொன்னார்.ஊடகங்கள் இளவரசன் மரணத்தை ஒரு செய்தியாக மட்டுமே பார்ப்பதாகவும், இதை ஒரு தனிமனித பிரச்சினையாக கொள்ளாமல் ஒட்டுமொத்த மனித குலத்திற்கு எதிரான ஒரு பிரச்சினையாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.மேலும் இது ஒரு வெறுமனே கண்டனக் கூட்டமாக அமையாமல், மாணவர்கள் மற்ற களப்போராளிகளோடு இணைந்து சாதி ஒழிப்பிற்கான போராட்டத்தை முன்னெடுக்கும் உத்திகள் வகுக்கும் கூட்டமாகவும் மாற‌ வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.



தொழிலாளர் சீரமைப்பு இயக்கத்தின் தோழர் சேகர் பேசும் போது, இதை ஒரு அனுதாபமாக, இரக்கமாக கடந்து செல்லாமல், இளவரசன் மரணத்தை நம்முடைய கோபமாக மாற்ற வேண்டும்.இறப்பின் வலியை நாம் உணர வேண்டும். அவ்வலியை சமூகம் உணர வைக்க நாம் களமிறங்கி போராட வேண்டும். பல போராட்டங்களை ஒருங்கிணைத்த சேவ் தமிழ்சு இயக்கம், அப்போராட்டத்தையும் ஒருங்கிணைக்க வேண்டும்.அதற்கு வடசென்னை தொழிலாளர்கள் சார்பாக, தன்னால் முடிந்த சக்திகளை திரட்டப்போவதாகவும், குறிப்பாக பிற்படுத்தப்பட்டோர் மத்தியில் நம் வேலைகளைச் செய்ய வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.





சேவ் தமிழ்சு இயக்கத் தோழர் செந்தில் பேசும் பொழுது, இளவரசன் தந்தை இளங்கோவன் இது தற்கொலையல்ல, கொலையே என்று தனது மனுவில் தெரிவித்திருக்கிறார்.மேலும் கொலைக்கு பொறுப்பாக பா.ம.க உறுப்பினர்களின் பட்டியலையும் அவர் அளித்திருந்தார்.சிலர் உடலை அடக்கம் செய்து விடலாமெனவும் ஒரு போக்கும் இருக்கிறது.ஆனால் மறு உடற்கூறு சோதனை செய்யாமல் உடலை பெற மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.



தருமபுரி வன்முறையின் போது, இராமதாஸ் எரிக்கப்பட்ட தலித் குடியிருப்புகளைப் பற்றி பேசவில்லை. ஆனால் திவ்யாவின் தந்தை நாகராஜின் தற்கொலையைப் பற்றி மட்டுமே பேசினார். தொடர்ச்சியாக அவர் தலித் எதிர்ப்பு அரசியலை மட்டுமே விதைத்து வந்திருக்கிறார். இளவரசன் மரணம் கொலையாக இருந்தாலும், தற்கொலையாக இருந்தாலும், அதற்கு முழு குற்றஞ்சாட்டப்பட வேண்டியதும் தனிமைப்படுத்த வேண்டியதும் பா.ம.க-வும், இராமதாசுமே. எனவே இனிமேலும் அரசியல் அமைப்புகள், கட்சிகள் குறைந்த பட்ச கரிசனம் கூட இராமதாசின் பா.ம.க மீது காட்டக்கூடாது. பா.ம.கவை அரசியல் தளத்திலிருந்து முற்றாக புறக்கணிக்க வேண்டும் என தோழர் செந்தில் அழைப்பு விடுத்தார். பா.ம.க-வை நாம் புறக்கணிப்பது இனிமேல் யாரும் சாதி அரசியலை முன்வைக்க‌ அச்ச‌ப்ப‌டும்ப‌டி இருக்க‌வேண்டும்.



அடுத்து பா.ம.கவின் இவ்வன்கொடுமையில் தமிழக அரசின் பங்கையும் தோழர்.செந்தில் சாடினார். தருமபுரி பகுதியானது, நக்சல் பாரி இயக்கத்தின் பொருட்டால், ஏற்கெனவே உளவுத் துறை கண்காணிப்பில் இருக்கும் ஒரு பகுதி. இந்தப் பகுதியில் ஒரு திட்டமிடப்பட்ட வன்முறை எப்படி நடந்தது ? எப்படி காவல்துறைக்கு தெரியாமல் போனது ? காவ‌ல்துறை இவ்வன்முறையை தெரிந்தே தான் அனும‌தித்திருக்கிற‌து.



மேலும் வ‌ன்னிய‌ர் ச‌ங்க‌ சித்திரைத் திருவிழாவில், பா.ம‌.க‌வின‌ரின் கீழ்த்த‌ர‌மான‌ த‌லித் எதிர்ப்பு சாதிவெறி பேச்சையும் அவ‌ர்க‌ளின் செயல்பாடுகளையும் தமிழக அரசு க‌ண்டிக்காம‌ல், வ‌ன்கொடுமை தடுப்பு சட்டங்களின் கீழ்‌ வ‌ழ‌க்குகளைத் தொடுக்காம‌ல் உப்பு ச‌ப்ப‌ற்ற‌ வ‌ழக்குக‌ளைப் போட்ட‌து ம‌ட்டுமில்லாம‌ல், இன்னும் இள‌வ‌ர‌ச‌ன் ம‌ர‌ண‌த்திலும் தமிழக அரசு க‌ள்ள‌ மெள‌ன‌ம் காப்பது கண்டிக்கத்தக்கது என்றார். மேலும் தருமபுரி வன்முறைக்கு பிறகு சேவ் த‌மிழ்சு இய‌க்க‌த்தின‌ர் பா.ம.க‌ இராம‌தாஸை எதிர்த்து தெருமுனைக்கூட்ட‌த்தில் பேசிய‌தால், அடுத்த‌டுத்த‌ நிக‌ழ்வுக‌ளுக்கு காவ‌ல்துறை சோலிங்க‌ந‌ல்லூர் ச‌ந்திப்பில் அனும‌தி ம‌றுத்ததையும் நினைவு கூர்ந்தார். இது அர‌ச இய‌ந்திர‌த்தில் சாதிய‌த்தின் நிலைகொள்ள‌லை காட்டுகின்ற‌து.



(இன்று இளவரசன் இறப்பின் உண்மை நிலையை அறியும் பொருட்டு ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு தலைமையில் ஒரு விசாரணை ஆணையம் அமைக்க முதல்வர் ஜெயலலிதா இன்று உத்தரவிட்டுள்ளார். சிங்கார வேலு ஏற்கெனவே சாதி மறுப்பு திருமணத்திற்கு எதிராக செயல்பட்டவர் என்று வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளதால், சிங்கார வேலுவுக்கு இளவரசன் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.சிங்காரவேலு தலைமையில் விசாரணை நடைபெற்றால் நியாயம் கிடைக்காது என்றும் ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் விசாரணை அமைக்க வேண்டும் என்றும் இளவரசனின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்)


சமத்துவ மக்கள் படையின் தோழர் சிவகாமி, இக்கண்டனக்கூட்டத்தின் மீதான தனது அதிருப்தியை வெளியிட்டார். இங்கு ஒரு உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருக்கிறது. எந்த வித செயல்திட்டமும் இல்லாத, ஒன்று கூடி ஒப்பாரி வைக்கும் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ள தான் வெறுத்ததாகவும், தோழர் லெனின் அழைத்ததன் பேரிலேயே கலந்து கொண்டதாகவும் தெரிவித்தார். தலித்துகள் மத்தியில் தான் இனி இந்த கூட்டம் நடைபெற வேண்டும். "உங்களோடு அல்ல" என்று மற்ற அரசியல் அமைப்புகளையும், இயக்கங்களையும் கடுமையாக சாடினார்.நீங்கள் எங்களுக்காக ஒன்றும் செய்யவில்லை. அயோத்தில் கரசேவைக்கு ஆர்.எஸ்.எஸ்ஸுகள் செங்கல் கொண்டு சென்றது போல, தருமபுரி தலித் குடியிருப்புகளை சீரமைக்க நீங்கள் செங்கல் கொண்டு செல்லவில்லையெனவும், காட்டுமிராண்டிகள் மத்தியில் எடுக்க வேண்டிய ஆயுதத்தை தாம் முடிவெடுத்து விட்டதாகவும்,"எங்களுக்காக நீங்கள் இனி வேஷம் போட வேண்டாம். நீலிக்கண்ணீர் வடிக்க வேண்டாம்" என்றும் காட்டமாக தனது கருத்துகளை பதிவு செய்து விட்டு வெளியேறினார். அடுத்தடுத்த உரைகளில் தோழர் சிவகாமியின் இந்தகருத்து விமர்சிக்கப்பட்டது. தோழர் விடுதலை இராசேந்திரன், சிவகாமியின் உணர்வுகளை தாம் மதிப்பதாகவும், ஆனால் அது ஒரு பாசிச போக்கு எனவும் குறிப்பிட்டார். தோழர் ஆளுர் ஷா நவாஸ், தலித்துகள் மட்டுமே இயக்கமாக ஒன்றிணைவது தான் இராமதாஸின் எதிர்பார்ப்பு, ஆனால் ஜனநாயக சக்திகள் தலித்துகளோடு ஒன்றிணைந்தது தான் இராமதாஸின் தோல்வி எனவும் குறிப்பிட்டார். அவர்களிருவரின் உரையை பின்வரும் பத்திகளில் சற்று விரிவாக பார்ப்போம்.


தோழர்.செல்வி கண்டன உரையாற்றுகின்றார்.


தமிழ்நாடு மக்கள் கட்சி தோழர் செல்வி, தனது உரையில் இளவரசனின் மரணத்திற்கு நீதிமன்றங்களும், நீதிபதிகளும் முக்கிய காரணமாக இருக்கின்றனர் என தெரிவித்தார். ஆட்கொணர்வு மனுவை விசாரிக்கும் நீதிபதிகள், தடுத்து வைக்கப்பட்டிருக்கும் திவ்யாவிடம், இளவரசன் உங்களை துன்புறுத்தினாரா, அவரோடு இணைந்து வாழ விருப்பமா ? என்ற கேள்விகளை மட்டுமே கேட்டிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் முழுக்க, முழுக்க பா.ம.க நீதிபதிகளாகவே, இளவரசனையும் திவ்யாவையும் பிரிக்க வேண்டுமென்ற நோக்கத்துடனே கேள்விகளை கேட்டனர். இளவரசனோடு வாழ்ந்து விட முடியுமென்று நம்புகிறாயா? அவரோடு உன்னால் இனியும் வாழ முடியுமா என்ற வரம்பு மீறிய கேள்விகளை கேட்டு திவ்யாவை நோகடித்திருக்கின்றனர். இந்த கேள்விகளை கேட்டவர் நீதிபதி கே.என்.பாட்சா.

ஆகவே இளவரசன் மரணத்திற்கு நீதிமன்றங்களும் ஒரு பொறுப்பாகும் என்று தனது கண்டனங்களை பதிவு செய்தார் தோழர் செல்வி. மேலும் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக பிற்படுத்தப்பட்ட உழைக்கும் மக்களும் தலித்துகளும் ஒன்றிணைந்து போராட வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.





அடுத்து பேசிய தோழர். விடுதலை இராசேந்திரன், தமிழக அரசியலில் கடுமையாக‌ தோல்வியடைந்த பா.ம.க, மீண்டும் தனது சாதிய அணியை புத்தாக்கம் செய்து கொண்டு, சாதிய உணர்ச்சியை உயிரூட்டி அவர்கள் உருவாக்கிய ஒரு ஏற்பாடு தான் இந்த பிரச்சினைக்கு காரணம் என்பது எல்லோருக்கும் தெரியும். இந்த தவறான சமூகப்பார்வை இப்போது அவர்களுக்கே பூமராங் ஆக திரும்பியிருக்கிறது. இலைமறை காயாக இருந்த ஒரு பிரச்சினையை இராமதாஸ் கூர்மையாக்க முனைந்த போது, அது மிகப்பெரிய எதிர்வினையை ஆற்றி விட்டது. இப்போது இளவரசன் திவ்யா பிரச்சினை, அவர்களின் சாதிய வெறி அரசியலை முற்றாக தனிமைப்படுத்தி விட்டது. தமிழகத்தில் சாதி தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக எப்படி தொடர்ச்சியாக செயல்பட்டு வருகின்றோமோ, அது போல சாதி வெறி அரசியலுக்கு, சாதியத்தை இயக்கமாக மாற்றும் முயற்சிகளுக்கு இனிமேலும் தமிழகத்தில் இடமில்லை என்ற உண்மை அவர்களுக்கு உணர்த்த நாம் தொடர்ந்து செயல்படவேண்டும்.



இதை ஒரு நாடக காதல் என்று ராமதாஸ் பேசினார். ஆனால் தலித் இளைஞனான இளவரசன் உண்மையான காதலை தனது மரணத்தின் மூலம் நிரூபித்து விட்டான். எனவே யார் நாடக காதல் ஆடினார்கள் என்பது இப்போது அம்பலமாகி விட்டது. திவ்யாவின் தந்தை நாகராஜ் மரணத்தின் வழக்கில் இளவரசனையும் ஒரு காரணமாக சேர்த்தார்கள். ஆனால் ஏன் இளவரசன் மரணத்திற்கு பொறுப்பாக பா.ம.க ராமதாசையோ, வழக்கறிஞர் பாலுவையோ சேர்க்கவில்லை. மேலும் ஆட்கொணர்வு மனுவில் எப்படி அவர்கள் வயதை காரணம் காட்டி அது செல்லாத திருமணம் என்ற பிரச்சினையை எழுப்ப முடியும் ( வயது குறித்து குடும்ப நல நீதிமன்றத்தில் மட்டுமே வழக்கு போட முடியும் )



வழக்கின் இரண்டாம் கட்ட விசாரணையின் போது, தாயார் விரும்பினால் இளவரசனோடு வாழ விருப்பம் தெரிவித்த திவ்யா, எப்படி அடுத்த கட்ட விசாரணையில் பத்திரிக்கையாளர்கள் முன்பு தான் அப்படிச் சொல்லவேயில்லை என்று சொல்லியிருக்கிறார். அதற்கு பா.ம.கவின் அழுத்தமே காரணமாக இருக்கின்றது என தோழர் விடுதலை இராசேந்திரன் தெரிவித்தார்.



இப்பிர‌ச்சினைக்கான‌ முழு முத‌ற்கார‌ணி சாதி தான். சாதிய‌த்தை முதன்மைப் படுத்தாமல், அரசு நிறுவனங்களான காவல்துறை நீதிமன்றங்களை முதன்மைப் படுத்துதல் சரியாக இருக்காது எனவும், இனி எந்த இயக்கமாக இருந்தாலும், சுற்றுச் சூழலுக்காக போராடும் இயக்கங்கள், தமிழ்த் தேசிய இயக்கங்கள், மனித உரிமை இயக்கங்கள் அனைவரும் தமது செயல்திட்டங்களில் ஒரு பகுதியாக சாதி எதிர்ப்புக் கருத்தியலை கொண்டியங்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார் தோழர்.





அடுத்த பேசிய தோழர் தியாகு, இளவரசன் மரணத்திற்கு பா.ம.கவை குற்றஞ்சாட்டுவதில் எந்த தயக்கமும் தேவையில்லை. இது போன்று தமிழ்நாடெங்கும் சாதியப் படுகொலைகள் நடந்து கொண்டு தானிருக்கின்றன. கள்ளர் சாதியைச் சேர்ந்த பெண், தலித் இளைஞனை காதலித்தாள் என்பதற்காக, தந்தையே தனது மகளை தூக்கி கயிற்றில் இறுக்கிக் கொலை செய்த கொடூர சம்பவத்தை நினைவு கூர்ந்த தோழர் தியாகு, நச்சு மரத்தின் வேர்களைக் களையாமல், இலைகளை மட்டுமே குறி வைத்தல் தவறு என்று கூறினார்.


பல்வேறு இயக்கங்களின் தொடர்ச்சியான பரப்புரைகளால் சாதி மறுப்புத் திருமணங்கள் ஆங்காங்கே சிறு அளவில் ஏற்புடையதாக மாறியிருந்தாலும், விழுக்காடு குறைவாக இருக்கிறது. அதிலும் இருவரில் தலித் அல்லாத திருமண விழுக்காட்டை விட இருவரில் ஒரு தலித் என்றால் இன்னும் குறைவு.



சாதி மறுப்புத் திருமணங்கள் ஏற்புடையதாக மாறியிருப்பதற்கு புறநிலைக் காரணங்களாக பொருளியல் மாற்றங்களும் அகநிலை காரணங்களாக இயக்கங்களின் அயராத பணியும் நிகழ்ந்திருப்பதாக தோழர் தியாகு குறிப்பிட்டார். எனினும் தலித்துகளின் சிறு வளர்ச்சி கூட மாற்று சமூகத்தவரால் சகித்துக் கொள்ளப் படவில்லையெனவும் தெரிவித்தார்.



இன்று இளவரசன் மரணத்தில், மழை பெய்து பா.ம.கவின் சாயம் கரைந்து அம்பலமாகி நிற்கின்றனர். அவர்களின் சுயரூபம் வெளிப்பட்டு விட்டது.

பா.ம‌.க‌வின் இந்த‌ செய‌ல்பாடு கொள்கை அர‌சிய‌லில் வீழ்ச்சியால் விளைந்த‌து. தேர்த‌ல் அர‌சிய‌ல் சாதிய ஊடுருவ‌லின் பொருட்டு நிக‌ழ்வ‌து. அர‌சிய‌ல் கொள்கை வீழ்ச்சிய‌டைந்து, மாநில‌ அர‌சின் அதிகார‌ம‌ற்ற‌ அதிகார‌த்திற்கு போட்டி போடும் நிலைமை தான் எஞ்சியிருக்கிற‌து.



என‌வே இந்த‌ இர‌ண்டு கொலைக‌ளையும் சாதிய‌ம் தான் செய்திருக்கிற‌து. ஆக‌வே இந்த‌ சாதி ஒழிப்பில் யாருக்கு அக்கறை அதிக‌ம் என்ற‌ கேள்வி உருவானால், த‌லித்திய‌ம் தான் முன் நிற்கிற‌து. கார‌ண‌ம் த‌லித்திய‌ம் என்றாலே சாதியொழிப்பு தான். த‌லித்துக‌ள் தான் எல்லா சாதிக‌ளாலும் ஒடுக்க‌ப்ப‌டுப‌வ‌ர்க‌ளாக‌ இருக்கின்ற‌ன‌ர். என‌வே காய‌த்திற்கு ம‌ருந்திட‌ வேண்டும். காய‌ம் ப‌ட்டு விட்டு வ‌லிக்கிற‌தே என்று அழுதால் அழுகை காய‌த்தை குண‌ப்ப‌டுத்தாது.



தமிழ்நாடு மாணவர் இயக்கத்தின் தோழர் இளையராஜா, "நமக்குள்ளே போராட வேண்டும்" என்ற கொள்கையின் ஓட்டைகள் குறித்து பேசினார். ஆதி திராவிடர் விடுதியில் அடிப்படை வசதிகளுக்காக போராடிய போது, தான் சந்தித்த பிரச்சனைகளையும் பகிர்ந்து கொண்டார். சாதிய ஒடுக்குமுறைகளுக்கெதிராக போராட மாணவ சக்திகளை அணி திரட்டி வருவதாகவும் தெரிவித்தார். ( 2: இக்கட்டுரையை எழுதும் இந்நேரத்தில் சென்னை சைதாப்பேட்டை எம்.சி.ராஜா ஆதி மாணவர் விடுதியில் தோழர் இளையராஜா தலைமையில் மாணவர்கள் பா.ம.க ராமதாஸை கைது செய்யக் கோரி உள்ளிருப்பு போராட்டத்தை துவக்கியிருப்பதை அறிகிறோம் )





அடுத்து பேசிய லயோலா கல்லூரி பேராசிரியர் தோழர். லெனின், தருமபுரி வன்முறையின் போது, லயோலா கல்லூரி மாணவர்களின் களப்பணி குறித்து விளக்கமாக தெரிவித்தார். மாணவர்கள் எப்படி அரசியல் படுத்தப் பட்டிருக்கின்றனர் என்பதையும் சுட்டிக் காட்டினார். இளவரனுக்கு தாம் அடைக்கலம் கொடுத்து, வேலை வாங்கிக் கொடுக்கும் வாய்ப்பு இருந்ததாகவும் ஆனால் இறுதியில் அவரைக் காப்பாற்ற முடியாமல் போனது எனவும் தெரிவித்த அவர், ஒரு கட்டத்தில் உணர்ச்சி மேலிட கதறி அழுதார். இங்கு பா.ம.க மட்டுமே சாதியை தூக்கிப் பிடிக்கவில்லை. இப்போது இருக்கும் திராவிட கட்சிகளும் சாதியத்தை கடைபிடித்து கொண்டுதானிருக்கின்றன எனவும் அவைகள் தம்மை சுயபரிசோதனை செய்து கொள்ளல் வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.



அடுத்து பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் வழக்கறிஞர் அமர்நாத்,
சாதியத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் எந்தவொரு அமைப்பையும் நாம் புறக்கணிக்க வேண்டுமெனவும் அவர்கள் தமிழ் தேசிய போர்வையில் ஈழ ஆதரவோடு கூட வருவார்களெனவும் தெரிவித்தார். வன்கொடுமை தடுப்புச் சட்டம் எப்படி முறையாக பயன்படுத்தப்படுகிறது என அரசு ஒரு அறிவிப்பைச் செய்ய வேண்டுமென வலியுறுத்திய தோழர் அமர்நாத், நீதிமன்றங்களில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்களைப் பற்றி குறிப்பிட்டார்.



ஒரு குற்றவாளியை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து விசாரிப்பதிலேயே, தற்போதிருக்கும் நீதிமன்றங்களில் நடைமுறைச் சிக்கல்கள் இருக்கும் போது, இக்குற்றத்தில் தொடர்புடைய அனைத்து பா.ம.க குற்றவாளிகளையும் அழைத்து வந்து விசாரிப்பதென்பது இயலாத காரியம் தான். எனவே சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராக, தலித்துகளுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளை விசாரிக்க தனி நீதிமன்றங்கள் அமைக்கப் பட வேண்டுமென்றும் தற்போதுள்ள சூழ்நிலையில் அதுவே நமது முதன்மை கோரிக்கைகளுள் ஒன்றாக இருக்க வேண்டுமெனவும் தோழர் அமர்நாத் வலியுறுத்தினார்.



தோழர் உதயனும், தோழர் நீதிராஜனும் பா.ம.க-வின் சாதி வெறி அரசியலுக்கு எதிரான தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். தோழர் மாணவர் ராஜ்மோகன் இளவரசன் மரணம் குறித்தும் சாதிய வன்கொடுமை குறித்தும் தான் எழுதிய கவிதையை வாசித்தார்.



இறுதியாக பேசிய தோழர். ஆளுர் ஷாநவாஸ், முஸ்லிமான‌ தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருப்பதால், எதிர்கொள்ளும் பிரச்சனைகளைப் பற்றி பேசிய அவர், தலித்துகளின் வலியை தன்னால் முற்றிலுமாக புரிந்து கொள்ள முடிகிறது எனவும்,
காதல் என்பது ஒரு இயங்கியல் போக்கு அதை ஒரு கலவரத்திற்கு காரணமாக சித்தரிக்கும் பொது புத்தியை கண்டித்தார் தோழர் ஷா நவாஸ்.



பா.ம.க ராமதாஸின் இந்த போக்கு, வன்னிய பெண் பிள்ளைகளை பாதுகாப்பதற்கான முயற்சி அல்ல. அது அன்புமணியை அமைச்சராக்க அவர் செய்யும் பாசிசம் தான் அது. அதிகாரத்தை நுகர்வதற்கான வெறி. ஈராக்கில் அமெரிக்கா செய்தது எப்படி பாசிசமோ, ஈழத்தில் இராஜபக்சே செய்த அதிகார வெறி எப்படி பாசிசமோ அதைப் போல ராமதாஸ் செய்ததும் பச்சை பாசிசம் தான்.



பாசிசத்திற்கு எதிரி வேண்டும். அமெரிக்காவிற்கு முதலில் பின்லேடன் நண்பன் தான் ஆனால் தனது அதிகார வெறி பின்லேடனை எதிரியாக்கி அழித்தது. அதைப் போல ராமதாஸ் தன்னுடைய எதிரியாக தேர்ந்தெடுத்தது தலித்துகளை. இந்நிலையில் ராமதாஸுக்கு எதிராக போராடும் நம்முடைய அணி ஏற்கெனவே பலவீனமான அணியாக இருக்கிறது. இந்நிலையில் அதை மேலும் சீர்குலைக்கும் வகையில் கருத்துகளை விதைக்கக் கூடாது.



தலித்துகளுக்கு எதிராக சாதிச் சங்கங்களை ஒன்றிணைத்த ராமதாஸ், தலித்துகள் அனைவரும் ஒன்றிணைந்தால் தனது திட்டம் வெற்றியாகி விடும் என்று கணக்கு போட்டார். ஆனால் ஒன்றிணைந்து ஜனநாயக சக்திகள். அவரின் திட்டம் பெரும் பின்னடைவை சந்தித்தது இப்புள்ளியில் தான். எனவே மீண்டும் தலித்துகள் மட்டுமே ஒன்றிணைந்து போராடுவோம் என்று சொல்வது ராமதாஸின் சூழ்ச்சிக்கு நாமே களம் அமைத்து கொடுத்தது போலாகி விடும் என்று தனது கருத்துகளை பதிவு செய்தார் தோழர் ஆளூர் ஷா நவாஸ்.

பா.ம.க-வை அரசியல் களத்திலிருந்து தனிமைப்படுத்துவதிலும், சாதிக‌ள‌ற்ற‌ ச‌ம‌த்துவ‌ ச‌முதாய‌த்தை நோக்கியுமான‌ ந‌ம‌து ப‌ய‌ண‌த்தில் இந்த‌ க‌ண்ட‌ன‌ கூட்ட‌ம் ஒரு தொட‌க்க‌ புள்ளியே, இந்த‌ ப‌ய‌ண‌த்தில் சேவ் த‌மிழ்சு இய‌க்க‌ம் இறுதி இலக்குவரை தோழமை சக்திகளுடனும், சனநாயக ஆற்றல்களுடனும் இணைத்து பயணிக்கும் என உறுதிபூணுகின்றது.


அ.மு.செய்யது

சேவ் தமிழ்சு இயக்கம்.