Wednesday, December 28, 2011

அணு உலையை திணிக்க துடிக்கும் இந்திய அரசு ! தமிழகத்தைப் பலியிட்டு அணு வியாராமா?

அணு உலையை திணிக்க துடிக்கும் இந்திய அரசு !
தமிழகத்தைப் பலியிட்டு அணு வியாராமா?


’இந்த மண்ணில் தான் எங்கள் முன்னோர்கள் பாதுகாப்பாக வாழ்ந்தார்கள். எங்களுக்கு இதை அப்படியே விட்டுச் சென்றார்கள் அவர்கள். இப்போது எங்கள் முன் இருக்கும் கடமை இதை அப்படியே எங்கள் அடுத்த தலைமுறைக்கு விட்டு செல்வது. எனவே தான், கூடங்குளத்தில் அணு உலை என்ற பெயரில் ஒரு கொலைக்களம் வந்துவிடக்கூடாது என்று போராடிக் கொண்டிருக்கின்றோம்.’ இது தான் மூன்று மாதங்களாக இந்திய அரசின் மக்கள் விரோதப் போக்குக்கு எதிராகப் போராடிவரும் குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் தம் போராட்டத்தின் ஆழத்தில் படிந்திருக்கும் மானுடக் குரல்.


அணு குண்டு - தமிழ்நாடின் தலையில் ஒன்று…காலில் ஒன்றா?

’அணு உலை பாதுகாப்பானது தான். அறியாமையால் பாமர மக்கள் தேவையற்ற அச்சம் கொள்கின்றனர்’ என்று பாதுகாப்பைப் பற்றி பக்கம் பக்கமாக அறிக்கைவிடுகின்றது அரசு தரப்பு. 25 வருடங்களாக நடுக்கடலில் சுட்டுக் கொல்லப்படும் தமிழ்நாட்டு மீனவனின் பாதுகாப்புக்காக ஒன்றுமே செய்யவில்லை. அது மட்டும் அல்ல ஒருவன் சாவுக்கு கூட ஒரு சொட்டுக் கண்ணீர் வடிக்கவில்லை. பாதுகாப்புப் பற்றி நாம் கேள்வி கேட்ட போதெல்லாம் தேசியப் பாதுகாப்பு சட்டத்தைக் காட்டி சிறையிலடைத்தது. காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு என்று நமது நீர் உரிமைகளைப் பாதுகாக்க மறுத்தது. எல்லாவற்றுக்கு மேலாக ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க நாம் துடித்த போது, பச்சை படுகொலைக்கு பக்கபலமாக நின்றது இதே அரசு. முதலை கண்ணீர் வடிப்பது போல் இன்று நமது பாதுகாப்புப் பற்றி இந்திய அரசு பேசுகின்றது. கேப்பையில் நெய் வடியுது என்றால் நம்பிவிடுவோமா?

ஏற்கெனவே சென்னையில் கல்பாக்கத்தில் அணு உலை இயங்கிகொண்டிருக்கின்றது. நம் தலையில் புதைக்கப்பட்ட ஒரு அணு குண்டு. ’இதோ உன் காலிலும் ஒரு அணு குண்டைக் கட்டுகின்றேன்’ என்று கூடங்குளத்திலும் அணு உலையா? கல்பாக்கத்திலும் அடுத்ததடுத்து புதிய அணு உலைகளைத் திறக்கப் போகின்றனர். காலுக்கு தான் ஆபத்தென்று அலட்சியப்படுத்தப் போகின்றோமா? 1987 இல் கல்பாக்கத்திலும் விபத்து நடந்துள்ளது. இரண்டாண்டுகள் அணு உலை மூடப்பட்டிருந்தது என்பதை நினைவில் கொள்வோம்.

கொக்கோலா விளம்பரத்திற்கு விஜய், அணு உலை விளம்பரத்திற்கு அப்துல் கலாம்கள் – அறிவியல் பேசும் ஜோதிடம்


இந்த மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் என்றுமே வாய் திறவாத அப்துல் கலாம் ஓடோடி வந்து விட்டார்; மண்ணின் மைந்தன் என்று மார்தட்டிக் கொண்டு அணு உலை அமைக்கும் அத்தியாயத்தில் நடிப்பதற்கு. அதுவும் ’ரிஸ்க்’ எடுக்க வேண்டும் என்று அறிவுரை சொல்கின்றார். யாரிடம்? சுனாமியை வயிற்றில் வைத்திருக்கும் கடலுக்குச் சென்று மீன் பிடித்து கரை திரும்பும் மீனவர்களிடம். இயற்கை தாயின் வயிற்றைக் கிழித்து வைரம் தேடும் இலாப வெறிக்கு வழிவிடுவது தான் துணிச்சலா? நாங்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வுக்கு பழக்கப்பட்டு நாகரிகம் வளர்த்தவர்கள்.

’கூடங்குளத்தில் அணு உலை விபத்தே நேராது’ என்கின்றார் கலாம். ஜப்பானில் சுனாமி வந்து புகுசிமாவில் அணு விபத்து ஏற்பட்டது போல் இங்கு நேராதாம். அணு உலை வெடிக்கும் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்படாதாம். இது அறிவியலா? இல்லை ஜோதிடமா?

அணு உலைக்குள் ஒளிந்திருக்கு 5 லட்சம் கோடி சந்தை கணக்கு

’அணு மின்சாரத்தை விட்டால் தமிழ்நாட்டுக்கு வேறு நாதியில்லை’ என்று அடுத்தொரு வேடிக்கை பேசுகின்றது இந்திய அரசு. இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 3% தான் அணுமின்சாரம். அதை 2020 க்குள் ஏழு சதவிகிதமாக உயர்த்த வேண்டுமாம். 97% மின்சாரம் அனல், நீர், காற்று, தாவரக்கழிவு என்று பிற வழிகளில் வருகின்றது. குறிப்பாக, தமிழ்நாட்டின் 30 விழுக்காடு மின்சாரம் காற்றிலிருந்து பெறப்படுகின்றது. சுமார் 900 மைல் கடல் பரப்பைத் தன்னகத்தே கொண்ட தமிழகத்தில் காற்றுக்கு பஞ்சம் இல்லை. காற்றிலிருந்து மின்சாரம் எடுப்பதை விரிவாக்க இந்திய அரசு போதிய முனைப்பு காட்டாதது ஏன்?

மறுபுறம், இந்தியாவிடம் அணு மின்நிலையத்தை நிறுவவோ, செயலிழக்கச் செய்யவோ கைவசம் தொழிற்நுட்பம் இல்லை. அணு உலைக்கு தேவையான எரிபொருள் யூரேனியம். அதுவும் இங்கு இல்லை. அணு உலை வெடித்தால் இழப்பீடு தரவல்ல காப்பீடு நிறுவனங்களும் இங்கு இல்லை.மொத்தத்தில் நிர்மானம், எரிபொருள், காப்பீடு என்று எல்லாவற்றுக்கும் வெளிநாட்டுக்காரனிடம் பணம் கட்ட வேண்டும். இன்னும் 36 அணு உலைகளை இந்தியப் பரப்பெங்கும் திறக்கும் பொருட்டு அமெரிக்கா, ரஷ்யா, பிரான்சு, ஜெர்மனி என்று எல்லா மேற்கத்திய நாடுகளும் வரிசை கட்டிக்கொண்டு நிற்கின்றன . இப்படி உருவாகப் போகும் அணு சந்தையின் மதிப்பு சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் என்று நமக்கு தெரிகின்றதோ இல்லை ஒப்பந்தம் போட்ட வெளிநாட்டுக்காரனுக்கு தெரியும். மொத்தத்தில் 5 லட்சம் கோடி ரூபாய் அணு சந்தையை உருவாக்கி அதை பன்னாட்டு முதலாளிகளுக்கு பங்கு போட்டுக் கொடுப்பது தான் இந்திய அரசின் நோக்கம். அதன் தொடக்கப் புள்ளிதான் கூடங்குளம்.

தமிழ்நாட்டில் இன்று தயாரிக்கப்படும் மின்சாரத்தில் 18% மின் கடத்தும் பொழுதே வீணாகிவிடுகின்றது. இது இந்திய அளவில் 40%. இப்படிப்பட்ட ஓட்டைப் பாத்திரத்தில் எதைக் கொண்டும் நிரப்பமுடியாது.. ஆனால், அணுமின்சார தொழிற்நுட்பத்தை நமக்கு விற்று இலாபம் பார்க்க ஏங்கும் அதே நாடுகளில் இந்த மின் கடத்தல் இழப்பு மிக மிகக் குறைவு((8%க்கும் கீழ்). ஆனால் அவர்கள் அந்த தொழிற்நுட்பத்தை நமக்குத் தர மாட்டார்கள். இந்திய அரசும் கேட்காது. விலை அதிகமான பொருள் தான் சிறந்தது என்று தரகன்(இந்திய அரசு) சொல்வான்; வியாபாரி(பன்னாட்டு கம்பெனிகள்) விற்பான். இதில் கொடுமை என்னவென்றால் அவன் நாட்டில் காலாவதியாகிப் போன, குப்பையில் தூக்கி வீசப்படும் சரக்கைத் தான் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்கின்றான். இன்னும் 10 ஆண்டுகளுக்குள் அணுமின் உற்பத்தியை கைவிட ஜெர்மனியும், சுவிட்சர்லாந்தும் முடிவு செய்துள்ளன. ஆனால், ஜெர்மனி அணுமின் தொழிற்நுட்பத்தை விற்க இங்கே கடை விரிக்கின்றது.

’நாமெல்லாம் ஆட்டு மந்தை. மொத்தத்தில் எல்லாம் சந்தை’ – இந்தியாவின் வளர்ச்சிக் கொள்கை


கல்வி கடை சரக்காகிவிட்டது. தரமான மருத்துவம் ஏழைக்கு எட்டாக் கனியாகிவிட்டது. விவசாயம் வளர வேண்டியது நம்முடைய தேவை. அதை பயன்படுத்திக் கொண்டு ’பசுமைப் புரட்சி’ என்று சொல்லி உர சந்தையை உருவாக்கியது இந்திய அரசு. யூரியாவை. விற்றுத் தீர்த்து கொள்ளை லாபம் பார்த்தார்கள். ஆனால், விளைநிலம் மலடாய் போனது. உரம் வாங்கியே கடனாளி ஆனான் நம் விவசாயி. கடைசியில் மானத்துக்காக தற்கொலை செய்து கொள்ளும் அவல நிலைக்கு ஆளானான். இங்கு வளர்ச்சி விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கையில் மட்டும் என்று ஆனது. பதினைந்து வருடத்திற்கு முன் தொடங்கி இப்போது குடிக்கும் தண்ணீருக்கு கூட இங்கு ஒரு சந்தை உருவாகிவிட்டது.

உள்நாட்டு சில்லறை வணிக சந்தையைப் பன்னாட்டு கம்பெனிகளுக்கு வாரி கொடுப்பது ஒரு புறம். இருக்கும் மின்சாரத் தேவையைப் பயன்படுத்தி அணு வியாபாரிகளுக்காக அடுத்தொரு சந்தை உருவாக்கம் இன்னொருபுறம். அதுவும் கொலைகார அணுமின் தொழிற்நுட்பம் அது! இதற்காக பால்,பேருந்து,சமையல் எரிவாயு உள்ளிட்ட அடிப்படை வசதிகளின் விலையை உயர்த்தி 'வளர்ச்சிக்கான சுமையை' மக்களின் தலையில் ஏற்றுவது தவிர்க்க முடியாததாம்.

இந்தியாவின் காலடியில் தமிழ்நாட்டின் மானமும் ஜனநாயக உரிமையும்


ஈழத் தமிழர்களைக் காக்கத் தமிழகம் துடித்தெழுந்த போது துச்சமாக மதித்தது இந்தியா. தமிழினப்படுகொலைக்கு துணை நின்றது. போர்க்குற்ற விசாரணைக்கு போராடிக் கொண்டிருந்த போது மூன்று தமிழர் உயிரைப் பகடைக் காயாக்கி நம்மைச் சிதறதடித்தது. போராட்டம் திசை மாறித் தொடர்ந்தது. கூடங்குளத்தில் அணு உலை வேண்டாம் என்று போராடிக் கொண்டிருக்கின்றோம். அன்னிய சக்தியின் சதி என்று அவமானப்படுத்தியது. அதற்குள் முல்லைப் பெரியாறு அணை உரிமையைப் பகடைக் காயாக்கி, கேரளத்திற்கும் தமிழ்நாட்டிற்கு பகை மூட்டத் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு முறையும் நாம் உரிமைப் போராட்டம் நடத்தும் போது அடுத்தொரு உரிமையைப் பறித்து நம்மைத் சுழற்றி அடிப்பதைத் தன் உத்தியாகக் கையாள்கின்றது. முதுகில் குத்தும் துரோகம் என்று நாம் எச்சரித்த காலம் ஒன்றுண்டு. இப்போது நடப்பது வேறு. ஒவ்வொரு முறை நாம் கண்ணை மூடித் திறக்கும் போது நம் நெஞ்சில் குத்தி இரத்த சுவை பார்க்கின்றது.

அணு உலைக்கு எதிராக நடந்துவரும் போராட்டம்,
தமிழ்நாட்டு மக்களின் ஜனநாயக உரிமையை
மீட்க நடக்கும் போராட்டம் !

பெருமுதலாளிகளின் வேட்டைக்காடாக தமிழ்நாட்டை
மாற்றுவதைத் தடுக்கும் போராட்டம் !

இந்திய துணைகண்டத்தில் கண்ணி வெடிகள் போல
அணு உலைகளைப் புதைக்க நினைக்கும்
இந்தியாவின் மனிதகுல விரோத கொள்கைக்கு
எதிரானப் போராட்டம்.

இந்த போராட்டத்தில் நாம் வென்றாக வேண்டும்.
அதற்கு நாமெல்லோரும் ஒன்றாக வேண்டும்.

----தமிழர் பாதுகாப்பு இயக்கம் (Save Tamils Movement)