Tuesday, February 4, 2014

"பல்லாங்குழி" விளையாட்டும் - அரசியலும்....




விளையாட்டை விளையாட்டாப் பாருங்க, ஏங்க விளையாட்டுல அரசியலை நுழைக்கிறீங்க என்பது போன்ற கேள்விகள் எப்பொழுதும் நம்மை நோக்கி முன்வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. குறிப்பாக இந்திய மட்டைப்பந்து அணி இலங்கையில் சென்று விளையாடக்கூடாது எனச் சொல்லும் போது, இந்த கேள்விகள் மிகவும் அதிகமாக வருகின்றன... உண்மையிலேயே விளையாட்டை விளையாட்டாத் தான் இந்தச் சமூகம் பார்த்து வந்துச்சா?, விளையாட்டில் அரசியலே இல்லையா? என்ற கேள்விகளுக்கான பதிலைத் தேடியே இக்கட்டுரை.

தமிழ்நாட்டில், குறிப்பாக கிராமப்புறங்களில் பிறந்து வளர்ந்த அனைவருக்கும் தெரிந்த விளையாட்டு "பல்லாங்குழி". இந்த விளையாட்டைத் தற்ச்சமயம் பெரும்பான்மையாகப் பெண்கள் மட்டுமே விளையாடி வருகின்றார்கள். இந்த விளையாட்டின் தோற்றம், தேவை குறித்து பல நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்துள்ளார்கள், அவற்றில் குறிப்பிடத்தக்கது தேவநேயப்பாவாணர் ஆய்வும், பேராசிரியர். தாயம்மாள் அறவாணனின் "பல்லாங்குழி" (திராவிட-ஆப்பிரிக்க ஒப்பீடு) என்ற ஆய்வு நூலுமாகும், இவ்விரு ஆய்வுகளின் சாரம்சத்தை பேராசிரியர்.தொ.பரமசிவம் அவர்கள் தனது "அறியப்படாத தமிழகம்" என்ற நூலில் பல்லாங்குழி என்ற தலைப்பில் தொகுத்துள்ளார். இதை பார்க்கும் முன்பு, இந்த விளையாட்டு எப்படி விளையாடப் படுகின்றது என்பதை மீண்டும் ஒருமுறை நமக்கு நினைவூட்டிக்கொள்வோம்...



* இருவர் ஆடும் பல்லாங்குழி ஆட்டத்தில் (பக்க எல்லைக்குழியாக இருந்தால் வலதுகைப் பக்க குழியையும் சேர்த்து) குழிக்கு ஐந்து காய்களாக(இங்கு சில இடங்களில் புளியமுத்தும், சில இடங்களில் கொடுக்காப்புள்ளி விதையும் , சோழி யும் பயன்படுத்தப்படுகின்றது) ஆளுக்கு ஏழு குழிகளாக துல்லியமான சமத்தன்மையுடன் ஆட்டம் தொடங்குகிறது.

*தன்னுடைய காய்களை எடுத்து முதல் ஆள் ஆடத் தொடங்குகிற பொழுது முதன்முறையாகச் சமத்தன்மை குலைகின்றது.

*எடுத்தாடுபவர் குழியில் காய்கள் தற்காலிக இழப்புக்கு உள்ளாகின்றன.

* சுற்றிக் காய்களை இட்டுவந்து வெற்றுக்குழியினைத் துடைத்துவிட்டு அதற்கடுத்த குழியினை எடுக்கும் பொழுது முதலில் இட்ட ஐந்து காய்களுக்கு பதிலாக நிறைய காய்கள் (பெருஞ்செல்வம்) கிடைக்கின்றது, அல்லது குறைந்த காய்களையுடைய குழி கிடைக்கின்றது, சில நேரங்களில் துடைத்த குழிக்கு அடுத்த குழி வெற்றுக்குழியாக இருந்தால் ஒன்றுமே கிடைக்காமல் போய்விடுகின்றது.

* அதே போல வெற்றுக்குழியில் காய்கள் இடப்பட்டு வந்து அது நான்காக ஆகும் பொழுது அது பசு என்ற பெயரில் குழிக்குரியவரால் எடுத்துக்கொள்ளப்படுகின்றது.

*ஒருவரிடம் காய்களற்ற நிலை வரும் வரை ஆட்டம் விளையாடப்படுகின்றது.

இப்படி தான் இந்த விளையாட்டு பெரும்பான்மையாக விளையாடப்படுகின்றது.


இந்த விளையாட்டு பொது உடைமை சமூகத்திலிருந்து தனியுடைமை சமூகமாக மாறத்தொடங்கிய காலகட்டத்தில் (இனக்குழு சமூகத்தில் தனிச்சொத்து என்று எதுவும் கிடையாது எல்லாப் பொருட்களும் பொதுவில் இருந்தன, நாளடைவில் குழுவிடம் சேரத்தொடங்கிய சொத்து தனிநபர்களுக்கு சொந்தமாகத் தொடங்கியது) தனியுடைமையை(தனிச்சொத்தை) நியாயப்படுத்த உருவான விளையாட்டாகும். சமத்தன்மை நிலவிவரும் பழையச் சமூகத்தில் ஆட்டத்தின் பெயரால் சமத்தன்மை குலைக்கப்பட்டு ஒருவனது செல்வம்(காய்கள்) அடுத்தவன் கைக்கு நேரடியாக வன்முறையில்லாமல் எளிமையாகப் போய்ச் சேர்ந்துவிடுகின்றது. தோற்றவனின் இழப்பு நிரந்தமாக்கப்படுகின்றது. தோற்றவன் தனது திறமையின்மை அல்லது ஏதோ ஒன்றின் காரணமாகத் தான் தோற்றோம் என்ற எண்ணமும், எதிராளி தனது திறமையின் காரணமாகத் தான் வெற்றி பெற்றான் என்ற எண்ணத்தையும் இவ்விளையாட்டு மக்கள் மத்தியில் உருவாக்குகின்றது. அதாவது தனியுடைமை உணர்வினையும், தனிச்சொத்தின் வளர்ச்சியினையும் அதன் மறுவிளைவாகப் பிறந்த வறுமையினையும், பண்பாட்டு ரீதியாக நியாய்ப்படுத்தும் வெளிப்பாடே பல்லாங்குழி ஆட்டம். இந்த நியாய உணர்ச்சி மனித மனங்களில் திணிக்கப்பட்ட பிறகு தனிச் சொத்துரிமையின் வளர்ச்சி தங்கு தடையற்ற மிகப்பெரிய வேகத்தினைப் பெற்றிருக்க வேண்டும் என கருதுகின்றார் தொ.பரமசிவம்.



இதுபோலவே எல்லா விளையாட்டுகளின் தோற்றத்திற்கும் காரணமும், அரசியலும் உண்டு. எனது பள்ளிக்காலங்களில் நான் விளையாடிய நாடு பிடிக்கும் விளையாட்டு(நாலு கட்டம் கட்டி விளையாடும் விளையாட்டு) வெற்றி பெற்றவன், தோல்வியடைந்த நாட்டின் ஒரு பகுதியை கைப்பற்றுவது சரியே என்ற எண்ணத்தை எனது மனதில் விதைத்துள்ளதை இன்று என்னால் அறியமுடிகின்றது. அதற்கு அடுத்து நான் விளையாடிய "Business"(சில இடங்களில் இது Trade என அழைக்கப்படுகின்றது) விளையாட்டும் அதைப் போலவே வர்த்தகத்தில் வெற்றியும், தோல்வியும் ஏற்படும், திறமையிருப்பவன் வெற்றியடைவான், திறமையற்றவன் தோற்று ஓட்டாண்டியாவன் என்ற கருத்தை விதைத்தது. இன்றைய மக்களாட்சி காலத்திலும் நாமெல்லாம் பரவலாக விளையாடும் சதுரங்க (Chess) விளையாட்டை எடுத்துக் கொள்வோமே, அந்த விளையாட்டின் வெற்றி மன்னரை காப்பதில் தான் இருக்கின்றது. இதை தான் நம் மனதில் அந்த விளையாட்டு விதைக்கின்றது. இதில் ஒரு கொடுமை என்னவென்றால் குதிரை, யானையை விட சிப்பாய்களின் மதிப்பு இங்கே குறைவு என்பதே. மக்களாட்சி காலத்திலும் இந்த மன்னரை காக்கும் விளையாட்டை தான் நாம் விளையாடி வருகின்றோம் என்பது நகைமுரண். தெற்காசியாவில் (இந்தியா, பாகிசுதான், இலங்கை, நேபாளம், பூட்டான், வங்கதேசம், மியான்மர்) மன்னரை வீழ்த்தி மக்களாட்சி மலரவில்லை, மன்னரை வீழ்த்தியது நம்மை அடிமைப்படுத்த வந்த பிரிட்டன், டச்சு, போர்ச்சுகீசிய நாடுகள், பின்னர் இவர்கள் தங்களின் நிர்வாக வசதிக்காக பல அமைப்புகளை உருவாக்குகின்றார்கள், அந்த அமைப்பு தான் இங்கிருக்கும் நாடாளுமன்றம், சட்டமன்றம் எல்லாம். அதனால் தான் தெற்காசியாவில் குடும்ப(மன்னர்) ஆட்சி, நிரந்தர பொது செயலாளர்கள், தளபதிகள் என்பன எல்லாம் இன்றைய மக்களாட்சி காலத்திலும் முரணாக பார்க்கப்படாமல் உள்ளது என்பதையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும்...


இதனடிப்படையில் தான் இங்கு மட்டைப்பந்து விளையாட்டையும், இன்று குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அதிகமாக விளையாடியும், கண்டு கழித்தும் வரும் பல Video Games-களையும் பார்க்க வேண்டும். மட்டைப் பந்து விளையாட்டு ஆங்கிலேயர்களால் விளையாடப்பட்டது, ஆங்கிலேயர்களை அண்டி பிழைத்த அன்றைய மன்னர்கள், ஜமீன்தார்கள், அப்பொழுது அதிகாரம் செலுத்திய சமூகத்தினர் இந்த விளையாட்டை எஜமான விசுவாசத்தை வெளிப்படுத்த விளையாடத்தொடங்கினர். சென்ற மாதம் இறந்த உடையார் மன்னர்(மைசூர்) தான் இறக்கும் வரை கர்நாடக மட்டைப்பந்து வாரியத் தலைவர் என்பது மக்களாட்சி காலத்திலும், இந்த மட்டைப்பந்து விளையாட்டு யாருடைய ஆதிக்கத்தின் கீழிருக்கின்றது என்பதை காட்டும். அதை போலத் தான் எல்லா மாநில மட்டைப்பந்து வாரியங்களும் ஆதிக்கம் செய்யும் ஒருசிலரின் கையிலேயே இருக்கின்றன.


அந்தந்த காலங்களில் ஆதிக்கத்தில் இருப்பவர்கள் சமூகம் எதைப் பார்க்க வேண்டும், எந்த மனநிலையில் இருக்க வேண்டும் என எண்ணுகின்றார்களோ, அதை வைத்து தான் எல்லா விளையாட்டுகளும் உருவாகி வந்துள்ளன. இன்று வன்முறையை, கொலையை நியாயப்படுத்தும் பொதுக்கருத்தை உருவாக்கியதில் குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை இன்று விளையாடி வரும் Video Games (Counter Attack, War Games...) மிக முக்கியப்பங்கு வகிக்கின்றது. இதையும், காவல்துறையின் மீதான வெறுப்பையும் அடிப்படையாக வைத்து வெளிவந்த படம் தான் ஜாக்கிசானின் "Police Story" போன்ற படங்கள். யதார்த்த உலகத்தை பார்க்காதீர்கள், கற்பனை உலகத்தில்(Virtual World) மிதந்து செல்லுங்கள் எனச் சொல்கின்றன இவ்விளையாட்டுகள்......, இந்திய விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு இருக்கும் அதே நேரத்தில் தான் நம் இளைஞர்கள் Farmville விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். அரசுக்கும் அது தான் வேண்டும். விவசாயம் செய்ய வேண்டுமா, இணையத்திற்கு வாருங்கள் Farmville மூலம் விவசாயம் செய்யுங்கள். அலுவலகத்தில் மேலாளர் மீது கோபமா Angry Birds மூலம் அதை போக்கிக்கொள்ளுங்கள்...


இது போல நம் மனதில் நம்மை அறியாமலேயே கருத்தை விதைத்துச் செல்வதில் விளையாட்டு, கலை, இலக்கியம் போன்றவற்றின் பங்கு அதிகம். எப்படி அறிவியலின்றி ஓர் அணுவும் இப்பிரபஞ்சத்தில் அசையாதோ, அது போலவே சமூக அறிவியலான அரசியலின்றி இங்கு எதுவும் கிடையாது எனும் பொழுது, இச்சமூகத்திலிருந்து தோன்றிய விளையாட்டில் மட்டும் அரசியலிருக்காது என எண்ணுவதும் கூட ஒரு வகையில் நம் புரிதலின்மையே. ஆதிக்க வர்க்கம் நம் மீது திணித்துள்ள இதுபோன்ற சர்வாதிகார, தனிநபர், கற்பனாவாத விளையாட்டுகளை, அதன் அரசியலை புரிந்து கொண்டு நாம் தூக்கியெறிய வேண்டும். மக்களுக்காக, மக்களால், மக்களே பங்கு கொள்ளுவதே மக்களாட்சி எனும் பொழுது, நாம் விளையாடும் விளையாட்டுகளும் அதை பிரதிபலிக்க வேண்டும், நமக்கான விளையாட்டுகளை நாமே உருவாக்குவோம் !...

நற்றமிழன்.ப

தரவுகள்:

1) அறியப்படாத தமிழகம் - தொ.பரமசிவம். காலச்சுவடு வெளியீடு.

4 comments:

  1. // இந்த விளையாட்டு பொது உடைமை சமூகத்திலிருந்து தனியுடைமை சமூகமாக மாறத்தொடங்கிய காலகட்டத்தில் (இனக்குழு சமூகத்தில் தனிச்சொத்து என்று எதுவும் கிடையாது எல்லாப் பொருட்களும் பொதுவில் இருந்தன, நாளடைவில் குழுவிடம் சேரத்தொடங்கிய சொத்து தனிநபர்களுக்கு சொந்தமாகத் தொடங்கியது) தனியுடைமையை(தனிச்சொத்தை) நியாயப்படுத்த உருவான விளையாட்டாகும்// .... மிகச்சிறப்பு ,

    ReplyDelete
  2. Arumai.. pala vidayangal vithyasamai anugapattuladhu.. yosikka vaitha padhivu

    ReplyDelete