Monday, October 28, 2013

தாது மணல் கொள்ளை - சூறையாடப்படும் தமிழக வளங்கள்!

தாதுமணல் கொள்ளை - சூறையாடப்படும் தமிழக வளங்கள்


தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் சுமார் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன் அதீத வெப்பத்தாலும் அழுத்தத்தாலும் உருவான உருமாற்றப் பாறைகளில், அரியவகைத் தாதுக்களான கார்னெட், இல்மனைட், ரூட்டைல், சிர்கான், மோனசைட் உள்ளிட்டவை நிறைந்துள்ளன. அப்பகுதிகளில் தோன்றும் ஆறுகள் அரியவகைக் கனிமங்களை அடித்துக் கொண்டுவந்து கடலில் கலப்பதற்கு முன் கரையில் சேர்த்துவிட்டுச் செல்கின்றன. இவ்வாறாக அரியவகை கனிம வளங்கள் கன்னியாகுமரி மாவட்டம் மிடாலம் முதல் தூத்துக்குடி மாவட்டம் வேம்பாறு வரை சுமார் 150 கி.மீ நீளமுள்ள கடற்கரையில் பரவிக் கிடக்கின்றன. உலகெங்கும் உள்ள 460 மில்லியன் டன் தாது மணலில் 278 மில்லியன் டன் இந்தியாவில் உள்ளது. அதிலும் 50%-க்கும் மேல் தமிழகத்தில் உள்ளது.


1910-ம் ஆண்டில் ஜெர்மன் நிறுவனம் ஒன்று தாது மணல் பிரிக்கும் ஆலையை குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் தொடங்கியது. தாதுமணலில் இருந்து தாதுக்களை மட்டும் பிரித்து எடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. 1947 ஆம் ஆண்டிற்கு பின் இந்திய அரசே இப்பகுதியில் ஒரு தாது மணல் ஆலையை நடத்தி வருகிறது. 1980-களுக்குப் பின் புதிய பொருளாதாரக் கொள்கையினைப் பயன்படுத்தி தனியார் நிறுவனங்களுக்கும் தாது மணல் அள்ளும் உரிமையை வழங்கியது. அன்றிலிருந்து தமிழகத்தின் இந்த அரிய தாது வளங்களை வரைமுறையின்றி தோண்டி எடுக்கும் பணி தொடர்கிறது. இந்தத் தனியார் நிறுவனங்களின் விதிமீறல்களும், முறைகேடுகளும் மிக மிக அதிகம்.


இதைப் போல்இன்னும் பல சட்டவிரோத செயல்களும், விதிமீறல்களும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அனைத்து தனியார் மணல் அள்ளும் நிறுவனங்களிலும் (அரசின் மணல் அள்ளும் நிறுவனத்தில் கூட) இந்தக் கொள்ளை தொடர்ந்தாலும், இந்தத் தொழிலில் ஏகபோகம் செலுத்திவரும் வைகுண்டராஜனுக்கு சொந்தமான வி.வி.மினரல்ஸ் நிறுவனத்திற்கு இதில் மிகப் பெரும் பங்கு இருக்கின்றது.


தமிழகத்தில் மொத்தமுள்ள 78 தாது மணல் குவாரிகளில் 60க்கும் மேற்பட்டவை வைகுண்டராசனது குடும்பத்தார்க்குச் சொந்தமானதாகும்.


தாது மணல் கொள்ளையை எதிர்க்கும் மக்களைப் பணத்தால் அடிப்பது, மிரட்டிப் பணிய வைப்பது, காவல்துறை மூலம் பொய் வழக்கு போட வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் அப்பகுதிகளில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். அனைத்து ஊர்களிலும் சிலரைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு மாதாமாதம் பணம் கொடுத்து அந்தந்த ஊர்களில் எழும் எதிர்ப்புகளை அடக்குகின்றனர். தங்களுக்கு சாதகமாக சாதி மோதலையும் ஊக்குவிக்கின்றனர். அரசும் காவல்துறையும் இவற்றைக் கண்டும் காணாமலிருக்கின்றன. மேலும், அனைத்துத் தடைகளையும் மீறி போராடும் மக்கள் மீது கொலைவெறித் தாக்குதலை காவல்துறையே முன்னின்று செய்துள்ளது. இதுவரை, வி.வி மினரல்ஸ் நிறுவனம் தமிழகத்தின் வளத்தைச் சுரண்டி லட்சம் கோடிவரை கொள்ளையடித்திருப்பதாக ஐ.ஏ.ஸ் அதிகாரிகள் அறிக்கைகள் அளித்துள்ளனர். கொள்ளையை எதிர்த்தவர்கள் தான் தூக்கியடிக்கப்பட்டிருக்கிறார்களே தவிர, கொள்ளையடித்தவர்கள் மேல் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.


இக்கொள்ளையை இத்தனை ஆண்டுகளாக கண்டுகொள்ளமல் இருந்த தமிழக அரசு, மக்களின் தொடர் போராட்டங்கள் கொடுத்த நெருக்கடியால் செயல்படத் தொடங்கியுள்ளது. ஆகஸ்டு 14, 2013 முதல் தமிழக-கேரள கடற்கரையோரம் முழுவதும் மணல் அள்ளத் தடை விதித்திருந்த பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பினை செப்.17, 2013 அன்று தமிழக அரசு நடைமுறைப்படுத்தியது தாது மணல் கொள்ளைப் பற்றி ஆய்வு செய்யக் குழு ஒன்றை நியமித்துள்ளது. முதல் கட்ட ஆய்விலேயே தாதுமணல் தோண்டி எடுப்பதில் பல முறைகேடுகள் நடந்துள்ளதை அக்குழு கண்டுபிடித்துள்ளது.


ஆட்சியாளர்களின் ஆதரவுடன் கூடங்குளம், மீத்தேன் எரிவாயுத் திட்டம், கெய்ல் பைப்லைன் திட்டம், தாது மணல் கொள்ளை என்று தமிழகம் தமிழகம் பெருமுதலாளிகளின் வேட்டைக் காடாகியுள்ளது. நமது வாழ்வாதாரங்கள் சூறையடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. வளர்ந்த நாடுகள் தங்கள் நாட்டின் வளங்களைப் பாதுகாக்க கடுமையான சட்டங்கள் வைத்திருக்கின்றன. ஆனால், நம் நாட்டில் வளங்களைக் கொள்ளையடிப்பவர்களுக்கு துணை செய்யும் சட்டங்களும் அவர்களைப் பாதுகாக்கும் அரசியல் கட்சிகளும் , ஆட்சியாளார்களும் தான் இருக்கின்றனர்.
இந்நிலையில் நமது போராட்டங்கள் தான் நமது வளங்களைப் பாதுகாப்பதற்கு ஒரே வழி. இது நமது கடமை.


நமது கோரிக்கைகள்:

 தாது மணல் கொள்ளையில் ஈடுபட்ட அனைத்து நிறுவனங்கள் மீதும் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும்.

 சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட அனைத்து நிறுவனங்களின் உரிமையும் ரத்து செய்யப்பட வேண்டும்

 பல ஆண்டுகளாக மக்கள் வளத்தைக் கொள்ளையடித்த வைகுண்டராஜன் உள்ளிட்ட குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். அவர்களின் சொத்துக்கள் முடக்கப்பட வேண்டும்.


 மணல் கொள்ளைக்குத் துணை போன அரசு அதிகாரிகள் மீது உடனடியாக விசாரணை தொடங்கப்பட வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.


 இத்தனை ஆண்டுகள் நடந்த கொடூரமான சுரண்டலால் பாதிப்படைந்த மக்களுக்கும் கடற்கரை கிராமங்களுக்கும் உரிய நிவாரணத்தை அரசு அளிக்க வேண்டும். மணற் கொள்ளையர்கள், துணை போன அதிகாரிகள் ஆகியோரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களில் இருந்து இந்த நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.


 கடற்கரைக்கும், அதைச் சார்ந்த உயிரினங்களுக்கும் ஏற்பட்ட பாதிப்புகளை சீர்செய்ய, நீண்டகாலத் திட்டத்தினை வகுத்து உடனடியாக சீரமைப்புப் பணிகளைத் தொடங்க வேண்டும்.

நமது மண்ணைக் காக்க…, நமது வளங்களைக் காக்க..நமது மக்களைக் காக்க…,

தாது மணல் கொள்ளையைத் தடுப்போம்! கொள்ளையர்களைக் கூண்டில் ஏற்றுவோம்!

இயற்கை வளங்கள் பாதுகாப்பு குழு
சேவ் தமிழ்சு இயக்கம்

பின் குறிப்பு- நேற்று(27-10-2013) நடைபெற்ற கருத்தரங்கிற்காக தயாரிக்கப்பட்ட துண்டறிக்கை...

1 comment: