Monday, May 6, 2013

ஐ.பி.எல் கிரிக்கெட் - சூழ்ந்துள்ள இந்திய அரசியலும் பொருளாதாரமும்



"கிரிக்கெட் ஒருகாலத்தில் விளையாட்டாக இருந்தது;

பின்னர் அது சூதாட்டமாக இருந்தது;

இப்போது அது பொழுதுபோக்காக மாறிவிட்டது!"

என்றார் நண்பர் ஒருவர்.



பொழுதுபோக்கில் என்ன தவறு? சரியான கேள்விதான்... இந்த கேள்விக்கு போகுமுன் ஒரு குட்டி பிளாஸ்பேக்...

ஐபிஎல் (IPL - இந்திய பிரிமீயர் லீக்) எனப்படும் இருபது ஓவர் போட்டி இந்திய கிரிக்கெட் வாரியத்தால்(பிசிசிஐ- BCCI) 2008ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு முன்பே ஐசிஎல் (இந்திய கிரிக்கெட் லீக்) இருபது ஓவர் போட்டி வடிவம் அறிமுகபடுத்தப்பட்ட போதும் பிசிசிஐ-யின் ஆசி இல்லாதால் அது பெரிய தோல்வியை சந்தித்தது.



பிசிசிஐ இந்திய அரசின் ஆதரவுடன் நாட்டின் மிகமுக்கிய அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்களால் நடத்தப்படும் ஒரு தனியார் அமைப்பு என்பது நம்மில் சிலபேருக்குத்தான் தெரியும். இந்த பிசிசிஐ அமைப்பு கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்து ஒரு அணி அமைக்கும். அந்த அணி ‘இந்திய அணி’ என்ற பெயரில் இதே போல பிற நாட்டின் அமைப்புகள் அனுப்பும் அணியுடன் விளையாடும்... இருந்தும் இந்திய நாட்டில், ஏன் மக்கள் குறிப்பாக இளையோர் பிசிசிஐ இந்திய அணியின் வெற்றி தோல்விகளைத் தங்கள் நாட்டின் வெற்றி தோல்வியாக கொண்டாடுகிறார்கள்? இந்த தேசிய உணர்வின் வெளிப்பாடு தானாக இந்திய மக்களிடம் தோன்றி வளர்ந்ததா?

கிரிக்கெட் வளர்ச்சி, அதன் பிரபலம், தேசிய உணர்வின் வெளிப்பாடாக ஆனதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு.

1. 1990க்கு அப்புறமான உலகமயமாக்கல் அல்லது உலகம் முழுவதும் பரவிக்கொண்டிருந்த தாராள பொருளாதாரக் கொள்கை இந்திய ஒன்றியத்தையும் தாக்கியது. அதாவது இரண்டாம் உலகப்போர் முடிந்தபின்னும் அதுவரை தொடர்ந்த அமெரிக்கா மற்றும் சோவியத் ரசிய ஒன்றிய அரசுகளின் உலக ஏக ஆதிக்கத்தின்(ஏகாதிபத்தியம்) மீதான பனிப்போர் சோஷலிச சோவியத் ரசிய ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின் முடிவுக்கு வந்தது. முதலாளித்துவ அமெரிக்க அரசு உலகின் ஏக போக ஒற்றை ஆதிக்கமானதும், உலக நாடுகளுடன் குறிப்பாக இந்தியா போன்ற வளர்ந்து கொண்டிருக்கும் மூன்றாம் உலக நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் செய்துகொண்டது. அதன்படி அமெரிக்க நாட்டின் பெரு நிறுவனங்கள் தடைகளின்றி வர்த்தகம் செய்துகொள்ள சந்தையாக இந்த வளர்ந்துவரும் நாடுகள் பயன்படுத்திக் கொள்ளப்பட்டன‌. இப்படித்தான் பல கோடி மக்கள்த்தொகை கொண்ட இந்திய ஒன்றியமும் 1990க்கு பிறகு பன்னாட்டு நிறுவனங்களின் சந்தையானது.

2. இதற்கும் கிரிக்கெட் வளர்ச்சிக்கும் என்ன சம்பந்தம்? வர்த்தகம் செய்துகொள்ள, சந்தை அமைக்க உரிமை மட்டும் கிடைத்தால் போதுமா... சந்தையில் வியாபாரம் செய்யவேண்டிய பொருட்களை எப்படி பொதுமக்களிடம் எடுத்துச் செல்வது? பிரித்தானியா அதன் காலணி அடிமை நாடுகளில் ஒரு அடிமை விளையாட்டை விட்டு சென்றிருந்தது. அதாவது குறிப்பிட்ட சிலர் மட்டும் விளையாடுவார்கள், பெருவாரியான மக்கள் வேடிக்கை பார்ப்பார்கள். இதில் விளையாடும் ஆர்வத்தை விட பார்வையாளரின் ரசிக்கும் ஆர்வமே அதிகமாய் இருக்கும். (இன்றளவும் சிறுவயதில் இருந்தே மட்டை பந்து சகிதம் பையுடன் பணம் கொடுத்து பயிற்சி எடுக்கும் மேல்சாதி மேட்டுக்குடியினர் மட்டுமே கிரிக்கெட்டில் விளையாடுபவர்களாகவும், மற்றவர்கள் தொலைக்காட்சியிலும், மைதானத்தில் பார்வையாளர்களாகவும் மட்டுமே இருக்கிறார்கள்.எவ்வளவு திறமை இருந்தும் சாதாரண எளிய குடும்ப பின்புலம் உள்ளவர்களுக்கு இடமே கிடையாது.அப்படியே அரிதாக சிலருக்கு வாய்ப்பு கொடுத்தாலும் அது விளம்பரத்திற்கு - மக்களை ஈர்க்கவே, இதனால் பெருவாரியான மக்கள் தங்கள் நேரம், பணத்தை விரயம் செய்து பார்வையாளர்களாக மட்டுமே இருக்கிறார்கள்.) 1983 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் வெற்றிக்குப் பிறகு மேலும் பிரபலமாகியிருந்த இந்த கிரிக்கெட் விளையாட்டுதான் பன்னாட்டு நிறுவனங்களால் சந்தைப் பரவலாக்கலுக்கு பயன்படுத்தப்பட்டது. பல நாடுகள் பங்கேற்கும் பெரிய பெரிய போட்டி தொடர்களை பன்னாட்டு நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்து அவைகளின் பெயரிலேயே நடத்தியது, பன்னாட்டு விளையாட்டு ஒளிபரப்பு தொலைக்காட்சிகள் நுழைந்தது நினைவிருக்கலாம். இந்திய அணி 90களில் அதிகமாக வெளிநாடுகளுடன் அதிக போட்டிகள் அமைத்து விளையாடியது.



கிரிக்கெட் மக்களோடும், இளைஞர்களோடும் இரண்டறக் கலந்து கொண்டிருந்தது.அவ்வேளையில் பன்னாட்டு நிறுவனங்களுக்காக உழைக்கும் அரசியல்வாதிகளின் திட்டத்தின் படி ஏற்கனவே பல காலமாக தீர்க்காமல் விடப்பட்ட ஜம்மு-காசுமீர் மாகாண எல்லைப் பிரச்சனைகளைத் தூண்டி, பாகிசுதானை எதிரிநாடாக ஆக்கி,வெகுசன மக்கள் மட்டத்தில் கொண்டு சேர்க்க கிரிக்கெட்டைப் பயன்படுத்துகிறார்கள்; அவர்களின் திட்டப்படி தேசிய உணர்வு விளையாட்டுடன் கலக்கிறது.உருவாக்கப்பட்ட எந்திர மனிதனுக்குக் கொடுக்கப்பட்ட உயிர்தான் தேசிய உணர்வு என்ற ஆயுதம்! அந்த காலகட்டத்தில் பன்னாட்டு நிறுவனங்களால் பயன்படுத்தப்பட்ட விளம்பர மாடல் தான் சச்சின் ரமேசு டெண்டுல்கர்.(அவருக்கே தெரியாமல் தேனில் விழுந்த வண்டாகக் கூட அவர் ஆகியிருக்கலாம்.தனிப்பட்ட முறையில் அவருடைய நேர்த்தியான ஆட்டத்திற்கு நானும் ரசிகன் தான், அவர் எதற்கு எப்படி பயன்படுத்தப்பட்டார் என்ற நாம் எழுப்புகிற நியாமான வினாவே இந்த விடையைத் தருகிறது).அன்று சச்சின் டெண்டுல்கர் என்ற ஒற்றை ஆட்டக்காரர்தான் தொய்வில் இருந்த இந்திய கிரிக்கெட்டை இந்திய மக்களிடம் பிரபலமாவதற்கு முக்கிய பங்காற்றினார் என்பதில் எவருக்கும் வேறுகருத்து இராது.(நண்பர் ஒருவர் சில வருடங்கள் முன்புவரை அடிக்கடி சொல்லிவருவதுண்டு. 'சச்சின் கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து ஓய்வு பெற்றதும் கிரிக்கெட் பார்வையாளரில் இருந்து ஓய்வு பெறப் போகிறேன்' என்று.அந்த முடிவை அவர் பின்னர் மாற்றிக்கொண்டார் என்பது தனிக்கதை.

இந்தியாவில் கிரிக்கெட் பிரபலமானதில் பன்னாட்டு நிறுவனங்களில் விருப்பு இருந்திருக்கலாம்.சந்தையைப் பிரபலப்படுத்த இதைச் செய்வதில் என்ன தவறு? இதனால் என்ன தவறு விளையப்போகிறது...?

சந்தையைப் பிரபலப்படுத்துவது என்பது,'பொருளைக் கொண்டு வந்தான், விளம்பரம் செய்தான், இங்கே அதற்கு தேவை இருந்தது, அவர்களின் பொருள்களில் தரம் இருந்தது, அதனால் இலாபம் அடைந்தான், பணத்தை எடுத்துச் சென்றான்' என்கிற அளவில் மட்டும் எடுத்துக்கொள்ள முடியாது.மக்கள் எண்ணத்தில் சில நிறுவனங்களின் பெயர்கள் மட்டுமே ‘பிராண்ட்’ என்ற பெயரில் இடம்பெற வைத்தார்கள். இந்த சந்தைப் போட்டியில் விளம்பரம் செய்துகொள்ள முடியாத உள்நாட்டில் உற்பத்திசெய்த பொருள்கள் பெரிய சரிவைச் சந்திக்க ஆரம்பித்தது. இந்திய உழைக்கும் எளிய மக்கள், சிறு தொழில் முனைவோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் இதனால் பாதிப்படைந்தனர்.இந்தியாவிலேயே பெருநிறுவனங்களில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் பன்னாட்டு நிறுவனப் பொருட்கள் அளவிற்கு விளம்பரம் செய்து தங்கள் சந்தைகளைத் தக்கவைத்துக்கொண்டன, சில பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளூர் நிறுவனங்களுடன் கூட்டு அமைத்து இங்கேயே அந்த பொருட்களைத் தயாரித்து சந்தையில் விற்க ஆரம்பித்தன.

மக்கள் தொகைப் பெருக்கத்தினால் தேவைப்பட்ட அதிக வேலை வாய்ப்பு, வெளிநாட்டுப் பொருட்களின் வரவினால் உள்ளூர் நிறுவனத்தில் வேலை இழப்பு இவைகளினால் மக்கள் குறைந்த கூலிக்கு வேலை செய்ய தயாரானார்கள், பெரும்பாலோர் தற்காலிக ஒப்பந்த வேலைக்கும் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இதன் மூலம் பன்னாட்டு நிறுவனங்களின் குறைந்த கூலி, அதிக நேர வேலைப்பளு, உற்பத்தி திறன் அதிகரிக்க வேண்டிய பளு என எல்லாவற்றிகும் தலையாட்டி பெரும் நெருக்கடியில் இருக்கிறார்கள் மக்கள். (இது தான் பன்னாட்டு நிறுவனங்களை கொண்டு வந்து மக்களுக்கு வேலை கொடுப்பதாக அரசு சொல்லிக்கொள்ளும் பெருமிதத்தின் மறுபக்கம்).

உற்பத்தி வேலைக்கான குறைவான / வெளிப்படையற்ற / சுதந்திரமற்ற சம்பள நிர்ணயம், உற்பத்திவிலையைத் தாண்டி பன்மடங்கு / வெளிப்படை தன்மையற்ற விலை



அதாவது பொருட்களைத் தயாரிப்பதும் இங்கே, சந்தையும் இங்கே, இலாபத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பங்கு, இந்த பொருட்களை மட்டுமே வாங்கவைக்கிற விளம்பர உத்திகள், தரம் என்ற பெயரில் அதிக விலை.இந்த சந்தை வளர்ச்சி வாடிக்கையாளருக்கும் பயனைக் கொடுக்கவில்லை என்பதே உண்மை.இன்று தேவையைத் தாண்டி தேவையற்றப் பொருட்கள் வீட்டில் அடைய நமது தொலைக்காட்சியில் தினமும் வரும் விளம்பரமும், இணையம் போன்ற நவீன தொலைத்தொடர்பும் தான் காரணம்... சில பொருட்கள் இல்லை என்றால் என்ன இது இல்லையா என்று நண்பர்கள் கேட்பார்கள் என்பதற்காகவே பயன்படுத்தாவிட்டாலும் மக்கள் வீட்டில் பல பொருட்களை வாங்கிக் குவிக்கிறார்கள்.பயன் யாருக்கு? இதன் மூலக் காரணம் என்ன?

இத்தனைக்கும் காரணம் தாராளப்பொருளாதாரம் / உலகமயமாக்கல் என்ற ஒற்றைக் கலைச்சொல்லும், கிரிக்கெட் போன்று பன்னாட்டு நிறுவனங்களின் சந்தையைப் பிரபலப்படுத்த எளிமையாக்கப்பட்ட வழியும் தான்.



கிரிக்கெட்டின் ஆர்வம் யாருடைய விருப்பத்திற்காக பிரபலமாக்கப்பட்டது என்பது தெரிந்து கொண்டோம், அதனை வளர்த்தெடுப்பது பிசிசிஐ என்ற பெயரில் இந்திய நாட்டின் முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்கள் என்று முன்பே பார்த்தோம்.உலகமயமாக்கல், கிரிக்கெட்டை வைத்து என்னென்ன தவறான விளைவுகள் ஏற்பட காரணமானது என்றும் பார்த்தோம்.

இத்தகையக் காலக்கட்டத்தில், 2000களில் பின்-நவீன உலகமயமாக்கலினால் வந்த, உடல் உழைப்பை விட மூளை வேலைக்கு முக்கியத்துவம் கொடுத்த, ஐ.டி. துறையின் வளர்ச்சியாலும் மேற்கத்திய நாடுகளுக்கு வேலைச் செய்யக் கிடைத்த வாய்ப்பாலும் பொறியியல் பட்டதாரி இளையோர்கள் முக்கியமாக கணிப்பொறியியல் படித்த இளையோர்கள், அரசின் போர்வையில் தவறிழைப்பவர்களை தட்டிக்கேட்காமை, அரசின் போலித்தனத்தை / அரசியல் சனநாயக கட்டமைப்பின் பிழைகளைக் கண்டும் காணாமை என்று அன்றாட பிரச்சனைக் கடந்து சென்று கொண்டிருந்தார்கள்.அவர்கள் உணரும் மேட்டிமைத்தனத்தாலும், பெருவாரியான இதர உழைக்கும் கூலிகளைவிட அதிக கூலி கிடைப்பதாலும் (உண்மையில் இதரக் கூலித் தொழிலாளிகளைப் போல இதே வேலைக்கு அமெரிக்கா போன்ற நாடுகளில் நிர்ணயித்த வருமானத்தைவிட குறைந்த கூலி பெறுபவர்கள் இவர்களும் தான், முறைபடுத்தப்படாத வேலைப்பளுவினால் அவர்களைவிட மன அழுத்தக்கும் ஆளாகிறார்கள்), தங்கள் வருமானத்தில் மட்டும் கருத்தாய் இருந்து உலகமயமாக்கலின் கனியை மட்டும் சுவைக்க ஆரம்பித்தனர்.அதன் தீய விளைவுகளை அகற்ற முற்படவில்லை.(உலகமயமாக்கல் மூலம் உலகளவில் ஏற்பட்ட நவீன அறிவியல் வளர்ச்சியைப் பயன்படுத்தி உள்நாட்டு வேளாண்மையின், பொருட்களின் உற்பத்தியைப் பெருக்கியிருக்க முடியும்.ஆனால் நிகழ்ந்தது பன்னாட்டு மற்றும் பெருநிறுவனங்களின் சந்தையாக இந்தியா மாறியது மட்டும்தான்). இத்தகைய உலகமயமாக்கலின் விளைவாக கிடைத்த பொருளாதார முன்னேற்றம், பன்னாட்டு நிறுவனங்களின் கையாட்களான மக்கள் விரோத அரசையும், கிரிக்கெட்டையும் அரவணைக்க வைத்தது.

இப்படி இந்திய ஒன்றியத்தில் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு பெருநிறுவனங்களின் தொழில் வளர்ச்சியும், சந்தையாக்கலும் பெரிய அளவில் சென்றுகொண்டிருக்க, கிரிக்கெட்டில் ஏற்கனவே உணர்வுக்கு அடிமையாயிருந்த மக்களின் உணர்வை வைத்து ஒரு போட்டியில் வெற்றி பெற‌ வைத்தால் இவ்வளவு பணம், ஒரு Six அடிக்க‌ வைத்தால் இவ்வளவு பணம் என்று விளையாட்டில் சூதாட்டம் பரவலாக நிகழத் தொடங்கியது.அப்போதுதான் சூதாட்டம் தொடர்பான விடயங்கள் வெளியில் கசிய ஆரம்பித்தன. கொலைகள் போன்று பல குற்றங்களும் பெருகின.இருக்கலாம், ஆனால் நாங்கள் பொழுதுபோக்கிற்காக மட்டும்தானே கிரிக்கெட் பார்க்கிறோம் இதில் என்ன தவறு இருக்க முடியும்?


பொழுதுபோக்கில் என்ன தவறு?

2000-களில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு நேரடி முதலீடு செய்ய வழிவகை செய்யப்பட்டதும், இந்தியப் பெருநிறுவனங்கள் மக்கள் தொகை அதிகமான வளர்ந்துவரும் நாட்டின் மிகப்பெரியச் சந்தைகளினால் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஒப்பாக வளர்ந்துவிட்டதும், சிறிய நிறுவனங்கள் பலவும் ஏற்பட்ட பெரும் நட்டத்தினால் ஒரு சில பெருநிறுவனங்களின் குடைக்குள் வந்ததும் அறிவோம். பிறகென்ன, 2000ங்களின் இறுதி காலக்கட்டங்களில் இந்திய பெருநிறுவனங்களின் பெரிய வளர்ச்சி மற்றும் நலன்களுக்காக இந்திய ஏக போக ஒற்றை மைய ஆதிக்கம், அதன் கீழ் அதிகாரம் செலுத்துகிற நாடுகளுடன் முன்னர் இட்டுக்கொண்ட அமெரிக்க-இந்தியக் கூட்டு உலகமயமாக்கல் ஒப்பந்தம் போல தாராளப் பொருளாதார ஒப்பந்தம் இட்டுக்கொள்கிறது.



எப்படி சந்தையைப் பெரிதாகப் பிரபலப்படுத்துவது? அதற்கு முன்னிலும் பகட்டான அதிகம் கவர்ச்சிகொண்ட கிரிக்கெட்டின் வேறு வடிவம் தேவைப்படுகிறது.இருபது ஓவர்தான் - விரைவாக முடியும் - போட்டி முழுவதும் உட்கார்ந்துப் பார்த்துவிடலாம், பல நாட்டின் பிரபல ஆட்டக்காரர்கள் இப்போது இந்த வடிவத்தின் மாடல்கள், களிப்பு ஏற்படுத்த மைதானத்தில் நடனமங்கைகள், பிரமாண்ட இசை, ஆடல் பாடல், ஒளிபரப்பில் முன்னேறிய தொழில்நுட்பம் என்று பிசிசிஐ என்ற ஒற்றை அதிகார மையத்தின் கீழ் லலித் மோடி என்ற அரசியல் வியாபாரியால் 2008ல் ஐபிஎல் போட்டி ஆரம்பிக்கப்படுகிறது.குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களின் கோடை விடுமுறையில் திட்டமிட்டு நடத்துவதால் அவர்களைப் பெரிதும் ஈர்க்கிறது. அமோக வெற்றியும் பெறுகிறது.பெருநிறுவனங்களால் ஒவ்வொரு கிளப்புக்கும் போடப்பட்டுள்ள பல நூறு கோடிப் பணம், விளையாடும் வீரர்களுக்கு பல கோடிகளில் சம்பளம், உலகின் பணக்கார விளையாட்டு அமைப்பாக பிசிசிஐ, தினமும் நடக்கும் பல கோடி மதிப்பான சூதாட்டம் என எதிர்பாராமல், வந்த மிகப்பெரிய ஆதரவால் ஐபிஎல்-லே பெரிய சந்தையாகிறது (ஐபிஎல் மூலம் சந்தையை விரிவாக்குவதுவதுதான் தீர்க்கமான இலக்கு/விருப்பு என்றாலும்).அதன் பிறகு ஐபிஎல் எத்தகைய வேகத்துடன், ஒவ்வொருமுறையும் மாறுதல்களுடன், கொண்டுசெல்லப்ப்படுகிறது என அறிவோம்.

2009ல் நாடாளுமன்றத் தேர்தலினால் இரண்டு மாதங்கள் தள்ளி நடத்தச் சொன்னக் காரணத்திற்காக, போட்டியையே தென்-ஆப்பிரிக்கா கொண்டு சென்றது என்றால் அதன் சந்தையின் முக்கியத்துவம் அறியலாம். ஐபிஎல்-லின் காரணகர்த்தா லலித் மோடி மீது சுமத்தப்பட்ட பல கோடி ஊழல் மற்றும் இந்திய ஒன்றியத்தின் மைய அரசின் அமைச்சராக இருந்த சசி தரூர் கொச்சின் கிளப்பில் செய்த ஊழல் என்ற செய்திகள் வெளியில் வரவும் முன்னவர் வெளிநாட்டில் தலைமறைவு, பின்னவர் அமைச்சர் பதவி இழப்பு என்று ஐபிஎல்-லுக்கு பிரச்சனை ஏற்பட்டது.இருந்தும் பெரிய நடவடிக்கையை அரசு இன்னமும் எடுக்கவில்லை, ஐபிஎல் போட்டி வருடந்தோறும் நடத்தப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.சமீபத்தில் நாற்பதாயிரம் கோடி அளவில் ஐபிஎல் சூதாட்டம் நிகழ்ந்துவருவதாக வந்த ஒரு செய்தி கிரிக்கெட் பார்வையாளர்களையே மிரட்டியது என்றால் ஐபிஎல் போட்டிகளின் தாக்கத்தை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.




கடந்த காலங்கள் இப்படி இருக்க, இந்த வருடம் (2013) ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு முன்பு நான்கு முக்கிய சர்ச்சைகள் எழுந்தது.

1. மாராட்டியத்தில் வரலாறு காணாத வறட்சி காரணமாக குடிநீருக்கே மாராட்டிய மக்கள் கடினப்படும் வேளையில் ஒரு போட்டி நடத்த தேவையான அறுபதாயிரம் லிட்டர் நீரும், தினமும் மைதானத்தைப் பேணுவதற்கு தேவையான சில ஆயிரம் லிட்டம் நீரும் கொண்டு ஐபிஎல் போட்டு நடத்த வேண்டுமா? ஆகவே மாராட்டிய நகரங்களான மும்பை மற்றும் பூனாவில் நிகழும் போட்டிகளை நிறுத்த வேண்டும் என சிவசேனா கட்சி மற்றும் சில கட்சிகள் கோரிக்கை வைத்தது.அதனை அதே மாராடியத்தின் முக்கிய அரசியல்வாதியும் மைய அமைச்சருமான சரத் பவாரின் கைப்பாவை பிசிசிஐ அமைப்பு காதில் கூட போட்டுக்கொள்ளவில்லை.

2. ஐபிஎல் போட்டி தொடங்க திட்டமிடப்பட்டிருந்த மேற்கு வங்கத்தின் தலைநகரம் கொல்கொத்தாவில், ஒருநாள் முன்புதான் ‘கல்லூரிகளில் மாணவர் தலைவர்களுக்கான தேர்தல்’ வைக்கச் சொல்லி வீதியில் போராடிக்கொண்டிருந்த மாணவர் தலைவரை காவல்துறை கைது செய்து நிலையம் கொண்டு செல்லப்பட்டு, அடித்து கொல்லப்பட்டு சாகிறார். அதனை அவரின் தந்தையும், மாணவர்களும் திட்டமிட்ட மம்தா பானர்ஜி தலைமயிலான மேற்குவங்க அரசின் / காவல்துறையின் திட்டமிட்டப் படுகொலை என்று தீர்க்கமாக சொல்கிறார்கள்.போட்டி தொடங்குகிற அன்று இறந்த மாணவர் தலைவரின் இறுதி ஊர்வலம் பெரிய அளவில் கொல்கொத்தாவில் நடக்கின்றது.போராட்டங்களும் நிகழ்கிறது, அவைகள் ஒடுக்கப்பட்டு இந்திய ஒன்றியத்தில் எந்த சலனமும் இல்லாமல் ஐபிஎல் போட்டி தொடங்கிவைக்கப்படுகிறது, இதில் மம்தாவும் கலந்து கொள்கின்றார்.

3. பெங்களூரில் விளையாட்டுத் துறை வளர்ச்சிக்காக இந்திய இராணுவத்தின் நிர்வாகத்தின் கீழ் இருந்த இடத்தைக் கொடுத்து கட்டப்பட்ட சின்னசாமி கிரிக்கெட் அரங்கத்தை ஐபில் போன்று பொழுதுபோக்கிற்கு வழங்கக் கூடாது, மீறி வழங்கினால் அந்த இடத்தைத் திரும்பப் பெறுவதைப் பற்றி யோசிப்போம் என்று அங்கிரந்த இராணுவ உயர் அதிகாரி மட்டத்தால் கர்நாடக அரசிற்கு மிரட்டல் விடப்படுகிறது.அது கர்நாடகத்தின் கிரிக்கெட் அமைப்பிற்கோ, பிசிசிஐக்கோ ஒரு அழுத்தத்தையும் ஏற்படத்தவில்லை, காரணம் பிசிசிஐ-யின் அதிகாரம் அதைவிட உயர்வானது என்பதே.

4. இலங்கையில் பேரினவாத சிங்கள பௌத்த அரசால் ஈழத்தில் ஒன்றரை இலட்சம் தமிழ் மக்கள் இனப்படுகொலைக்கு ஆளாகியுள்ள நிலையில், அங்கு நடந்த இனப்படுகொலைக்கு சர்வதேச சுதந்திரமான விசாரணை நிகழும் வரையிலும், ராஜபாக்சே-வை போர்க்குற்றவாளி என்று அறிவிக்கும் வரையிலும், ஐநா மேற்பார்வையில் சுதந்திரமான தனித் தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு வரையிலும், இதன் மூலம் தனித் தமிழீழம் அமைந்து முற்றிலுமாக இலங்கை ஒன்றியத்தில் இருந்து ஈழம் சனநாயக விடுதலை பெரும் வரையிலும் இலங்கை அரசு மீதான தடையை பல வழியிலும் முன்னெடுப்பது பொருளியல், கலை, பண்பாடு, விளையாட்டு புறக்கணிப்பின் மூலம் தென் ஆப்பிரிக்கா மீது 60களில் இருந்து 90கள் வரைக்கும் போடப்பட்ட தடையைப் போன்று நாமும் இலங்கையின் இன அழிப்பிற்கு எதிராக பிற நாடுகளை ஒன்றிணைக்கவும் முடியும் என்ற தமிழ் மக்கள் இயக்கங்களின், மாணவர்களின் கோரிக்கையால் சட்டமன்றத்தில் ஜெயாவின் தமிழக அரசால் ஒரு தீர்மானம் கொண்டுவரப் படுகிறது.



இந்நிலையில் ஐ.பி.எல். வரவும் சென்னையில் சிங்கள இலங்கை வீரர்கள் விளையாடினால் சென்னையில் விளையாட அனுமதிக்க முடியாது என்று முதல் அமைச்சர் அறிவிக்கிறார்.மறு பேச்சு பேசாமல் இந்திய அரசும், பிசிசிஐ-யும் இதனை ஏற்றுக்கொள்கிறது, மக்கள் பொறுமையின் எல்லை இந்த வியாபாரிகளுக்கு நன்றாகவேத் தெரியும்.அதே வேளையில் அனைத்து இயக்கங்களும் மாணவர்களும் பாகிசுதான் கிரிக்கெட் வீரர்களுக்கு பயங்கரவாதிகளின் மும்பைத் தாக்குதலால் போட்டியில் விளையாடத் தடை போட்டார்களோ அதுபோல அனைத்து போட்டிகளிலும் இலங்கை விளையாட்டு வீரர்களை நீக்கக் கோரியும் இதுவரை எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் பெருநிறுவனங்களின் ஆதரவுடன், இந்தியா எங்கும் படிக்கும் பள்ளி, கல்லூரி மற்றும் ஐ.டி இளையோர்களின் மயக்கத்தால் ஐ.பி.எல். போட்டிகள் எந்த பிரச்சனையும் இன்றி வழமையாக நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.... மேலும் த‌மிழ‌க‌த்தில் நில‌வும் மின் த‌ட்டுப்பாட்டால் சென்னை த‌விர‌ பிற‌ ப‌குதிக‌ள் ஒரு நாளைக்கு குறைந்த‌ ப‌ட்ச‌ம் 8 ம‌ணி நேர‌ம் முத‌ல் அதிக‌ ப‌ட்ச‌ம் 16 ம‌ணி நேர‌ம் வ‌ரை மின்சார‌ம் வ‌ழ‌ங்க‌ப்ப‌டுவ‌து இல்லை, இந்த‌ நேர‌த்தில் மின்சார‌த்தை அதிக‌ம் உறிஞ்சும் இர‌வு நேர போட்டிகளை நடத்த வேண்டுமா? ஏன் பகலில் நடத்தக் கூடாது? என்பதையும் நாம் யோசிக்க வேண்டும். ப‌க‌லில் ந‌ட‌த்தினால் அலுவ‌ல‌க‌ம் செல்ப‌வ‌ர்க‌ளால் பார்க்க‌ முடியாது என்ற‌ கார‌ண‌த்தினாலும், ச‌ந்தை விழுக்காடு பாதிக்க‌ப்ப‌டும் என்ப‌தாலும் இவ‌ர்க‌ள் ப‌க‌லிர‌வு ஆட்ட‌ங்க‌ளாக‌ ந‌ட‌த்துகின்றார்க‌ள், விவ‌சாயிக‌ளுக்கும், சிறு, குறு தொழில‌க‌ங்க‌ளுக்கும் கொடுக்க‌ப்ப‌டும் மின்சார‌த்தின் ஒரு ப‌குதி பிடுங்க‌ப்ப‌ட்டு இது போன்ற‌ கேளிக்கை விளையாட்டுக‌ளுக்குக் கொடுக்க‌ப்ப‌டுவ‌து அவ‌ல‌மான‌ ஒன்று.

மேற்கூறப்பட்ட நான்கு நிகழ்வுகளும் நமக்கு உணர்த்துவதென்ன?

ஐபிஎல் என்ற மந்திர சொல், இன்று, இந்திய ஒன்றியத்தின் நடுத்தர வர்க்கம் முதல் அடித்தட்டு இளைஞர்கள் வரை உலகமயாக்கல் பின்னணியில் பின்னிப்பிணைந்த ஒன்றாக மாறியிருப்பதால் எந்த சூழலிலும் எத்தகையப் பிரச்சனைகளுக்கு இடையிலும் அவர்களைப் பார்வையாளர்களாக ஆக்கியிருக்கின்றது.மக்களின் எந்த அரசியல், சனநாயக உரிமைப் போராட்டத்தையும் நீர்த்துபோகச் செய்கின்றது.

ஐபிஎல்-லை எதிர்த்து கேள்வி கேட்காமை, ஐபிஎல்-க்கு எதிராக விமர்சிப்பவர்களை, கேள்வி கேட்பவரை எந்த எல்லைக்கும் சென்று இகழ்ந்து பேசுவது என்று மக்கள், தொழிலாளிகள், உழைக்கும் வர்க்கத்தின் விரோத ஆட்சியாளர்கள், ஆட்சியாளர்களை இயக்கும் பெருநிறுவனங்களின் பக்கமும் அதே நேரத்தில் சனநாயகப் பண்பிற்கு எதிராகவும் இளையோரைக் கொண்டு சென்றிருக்கிறது இந்த ஐபிஎல்.தமிழ் நாட்டில் நடந்த பெருவாரியான மாணவர் போராட்டங்களையும், இலங்கையின் இனப்படுகொலை, போர்க்குற்றம் பற்றி தவறியும் ஒளிபரப்பாத, வட இந்திய‌ ஊடகங்கள், இலங்கை விளையாட்டு வீரர்களை ஐபிஎல் போட்டிகளில் விளையாடத் தடைப் போட வேண்டும் என்று கோரியதற்கு அது தவறு என்றும், விளையாட்டு வேறு- அரசியல் வேறு என்றும், போராடுபவர்கள் தமிழ் இன வெறியர்கள் என்றும் பொதுக்கருத்தை உருவாக்கிக்கொண்டிருந்தது, இந்த ஊடகங்கள் யாருக்காக வேலை செய்கின்றன என்பதை இந்நிகழ்வு தெளிவாக மக்களுக்கு உரைத்தது.

ஐ.பி.எல். போட்டி நடத்துவதில் இருக்கிற அரசியலும், பெருநிறுவனங்களின் பொருளாதாரப் பலனும், ஊடகங்களில் இதற்கு கொடுக்கும் முன்னுரிமையும் நமது இளையோரின் கண்ணை மறைப்பது பெரும் துயரம்.

தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மாணவர்களின் எழுச்சிப் போராட்டம்தான் இந்த ஐ.பி.எல். கிரிக்கெட்டின் அரசியலுக்கும் வெளிச்சம் பாய்க்க வேண்டும் என்பது எல்லோருடைய எதிர்ப்பார்ப்பு... பண்பலை வானொலி ஒலிபரப்பில் கேட்கும் ஐ.பி.எல். இரைச்சல் பெரிய அளவில் இன்றளவும் முகநூல் பக்கம் கேட்கவில்லை என்பது சிறிய மகிழ்ச்சி, இந்த வருட ஐ.பி.எல் போட்டி ஒட்டு மொத்தமாக இளைஞர்களிடம், மக்களிடம் எப்படியானத் தாக்கத்தை / அசைவை ஏற்படுத்தி இருக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்...!



- ஸ்நாபக் வினோத் ஏ.ஜெ.
சேவ் தமிழ்சு இயக்கம்
( Save Tamils Movement )



த‌ரவுக‌ள்:
=========

1) http://timesofindia.indiatimes.com/business/india-business/IPL-betting-White-collar-professionals-join-the-high-roller-rush-turnover-to-touch-Rs-40000-cr/articleshow/19553037.cms

2) http://www.cricketvoice.com/cricketforum2/index.php?topic=10679.0;wap2

3) http://blogs.wsj.com/indiarealtime/2013/04/02/bjp-objects-to-ipl-in-drought-hit-maharashtra/

4) http://indiatoday.intoday.in/story/sfi-leader-sudipto-gupta-death-kolkata-streets-west-bengal-government-mamata-banerjee/1/260519.html




4 comments:

  1. குளுகோஸ் விள‌ம்ப‌ர‌த்தில் காட்ட‌ப்ப‌டுவ‌து போல‌ முழு ச‌க்தியும் உறிஞ்ச‌ப்ப‌ட்ட‌ ஐடி, ம‌ற்ற‌ தொழிற்துறை சார்ந்த‌வ‌ர்க‌ளும் த‌ங்க‌ள‌து அன்றைய‌ நாள் வேலையை முடித்து விட்டு வெளியே வ‌ருகின்ற‌ன‌ர், இந்த‌ ச‌க்தியை மீட்ப‌த‌ற்காக‌ அவ‌ர்க‌ள் ஐ.பி.எல் போன்ற‌ பொழுது போக்கிற்குள் நுழைய‌ வேண்டியிருக்கின்ற‌து என்ப‌தையும் நாம் க‌ண‌க்கில் கொள்ள‌வேண்டும். அதே ச‌ம‌ய‌ம் இப்ப‌டி பொழுது போக்கிற்காக‌ உள்ளே நுழைப‌வ‌ர்க‌ள் ஒரு க‌ட்ட‌த்தில் அடிமையாகி விடுகின்றார்க‌ள் இதை அவ‌ர்க‌ளும் புரிந்து கொள்ள‌வேண்டும். இன்றைய‌ நாளில் ந‌ட‌க்கும் ஒவ்வொரு போட்டியும் பார்ப்ப‌வ‌ர்க‌ளின் ம‌ன‌ அழுத்த‌த்தை அதிக‌ரிக்கும் ப‌டியாக‌வே உள்ள‌து அல்ல‌து அவ்வாறு வ‌டிவ‌மைக்க‌ப்ப‌டுகின்ற‌து. ஏற்க‌ன‌வே வேலை கொடுக்கும் ம‌ன‌ அழுத்த‌தினால் பாதிக்க‌ப்ப‌ட்டு அதிலிருந்து வெளியே வ‌ர‌ பொழுதுபோக்கு என்ற‌ பெய‌ரில் ஐ.பி.எல்லிற்குள் நுழையும் அவ‌ர்க‌ள் மேலும் ம‌ன‌ அழுத்த‌த்தோடு தான்
    வெளியேறுகின்றார்க‌ள் என்ப‌து தான் நித‌ர்ச‌னம்.

    ந‌ல்ல‌ ஆழ‌மான‌ பார்வை வினோத்.

    ந‌ற்ற‌மிழ‌ன்.ப‌

    ReplyDelete
  2. நன்றி தோழர் நற்றமிழன்.

    ஐ.பி.எல். குறித்து பல தகவல்கள்/மறைக்கப்பட்ட உண்மைகள் வெளியில் தெரியவரும் வேளையில் இந்தப் பதிவு சிறிதேனும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினால் மகிழ்வேன்...

    -சிநாபக் வினோத்.ஏ.ஜெ.

    ReplyDelete
  3. ஐ.பி.எல். தொடர்பாக தற்சமயம் வந்துள்ள சர்ச்சைகள், எழுந்துள்ள குற்றங்கள்...

    A format that lends itself to corruption: http://www.thehindu.com/sport/ipl2013/sreesanth-puts-ipl-in-a-spot-fans-in-a-fix/article4720720.ece

    A format that lends itself to corruption: http://www.thehindu.com/sport/ipl2013/a-format-that-lends-itself-to-corruption/article4721883.ece

    India’s premier sexist league:
    http://www.thehindu.com/opinion/op-ed/indias-premier-sexist-league/article4718609.ece

    ReplyDelete
  4. ஏம்ப்பா தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் ஒருவன் நன்றாக வேலை செய்தால் எதுக்கு அவனுக்கு மாநில அரசாங்கம் காவல்துறையில் உயர் பதவியும்??? மத்திய அரசு இராணுவத்தில் மேஜர் பதவியும் குடுக்குறாங்க ?????

    பி.கு- BCCI என்பது இந்திய அரசின் கீழோ, இந்திய விளையாட்டு வாரியத்தின் கீழோ வராதா (பணக்கார)தனியார் நிறுவனம்.

    ReplyDelete