Tuesday, May 20, 2014

அரசியல் - தேர்தல் காலத் திட்டமல்ல!





16-வது இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, கடந்த 16 ஆம் தேதி முடிவுகள் வெளியாயின. நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய சனதா கட்சி தனிப் பெரும்பான்மை பெற்று இன்னும் சில நாட்களில் ஆட்சி அமைக்கப் போகிறது.

‘மோடி அலை" சுனாமியாக மாறி, பாரதீய சனதாவிற்குப் பெருவெற்றியைத் தேடி தந்துள்ளதாக மோடியின் ரசிகர்களும், கட்சியினரும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், இங்கு முக்கியமாக நாம் புரிந்துகொள்ள வேண்டிய ஒன்று, இந்திய அளவில் காங்கிரசுக்கு எதிரான வாக்குகளைப் பெறுவதற்கு அமைப்பாகத் திரட்டப்பட்ட மக்கள் இயக்கமோ, கூட்டணியோ இல்லை என்பதே அது.


உதராணத்திற்கு, தமிழகத்தில் அ.தி.மு.க பெற்ற வெற்றியும், மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரசின் வெற்றியும், மோடியின் அலை என்பது காங்கிரசுக்கு எதிரான வாக்குகளைப் பெறக்கூடிய மற்ற இயக்கங்கள் வலுவாகக் காலூன்றாமல் விட்ட இடத்தை ஆக்கிரமித்திருப்பதையே காட்டுகிறது.


மோடியின் இந்த வெற்றி, குஜராத் பாணியிலான வளர்ச்சி என்கிற முழக்கத்தின் வெற்றியா? என்றால் இல்லை, விளம்பரத்தின் வெற்றி. இந்திய அரசியலில் மக்களின் பங்கேற்பு என்பது வாக்கு அளிப்பதோடு முடிந்துவிட்டது என்பதாக முற்றிலும் சுருக்கிய வெற்றி இது.


சரியோ? தவறோ? மோடியின் விளம்பரத்தை வாய்மொழி வழியாக எடுத்துச் சென்றதில் முக்கியமான பங்கு, நடுத்தர வர்க்க இளைஞர்களுக்கு உள்ளது. ஆனால், இவர்களின் அரசியல் பங்கேற்பு என்பது தேர்தலோடு நின்றுவிடும் ஒன்றாகவே இருந்து வந்திருக்கிறது. அதற்குக் காரணம், அவர்கள் மோடியை முன்னிறுத்தி பிரச்சாரத்தை முன்னெடுத்த விதமே. அவதாரங்களை வழிபட்டு நம்முடைய அனைத்து பிரச்சனைகளுக்கும் ஆன தீர்வை வேறு ஒருவர் வந்து கொடுப்பார் என்று அதிக நம்பிக்கை கொள்ளும் இந்திய பொதுச் சமூகத்தின் தொடர்ச்சியே இந்த நடுத்தர வர்க்கத்தின் எண்ணம். இந்த எண்ணத்தைக் கொண்ட இந்திய பொதுச் சமூகம் இத்தனை பெரிய வெற்றியை மோடி தலைமையிலான பாரதிய சனதாவிற்கு அளித்ததில் வியப்பில்லை.


தேர்தலுக்கு முன் நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன், " காங்கிரசு குப்பைக்குப் போக வேண்டும் என்பதில் முற்போக்கு ஆற்றல்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை, அதே சமயம் 2009-ல் குப்பைக்கு அனுப்பப்பட்டு, குப்பையில் ஊறிய பாரதிய சனதாவிடம் மாற்றத்தைத் தேடுவதுதான் பொருளற்றது".


இந்திய அரசியலில் முதன்முறையாகச் சாதி, மதப் பாகுபாடுகள் கடந்து மக்கள் மோடியை தேர்ந்தெடுத்துள்ளதாக ஊடகங்கள் பெருமிதம் கொள்கின்றன. அப்படியெனில், அமையப் போகும் மோடி தலைமையிலான அரசின் செயல்களைத் தொடர்ந்து மதிப்பிட்டு, தவறுகள் நடக்கும் போது அதற்கு எதிரான நடவடிக்கைகளிலும், போராட்டங்களிலும் ஈடுபடும் பெரும் பொறுப்பு இந்திய பொதுச் சமூகத்தின் தோள்களிலேயே உள்ளது.

மோடி தலைமையிலான பாரதிய சனதா பெரு வெற்றியைப் பெற்றுள்ளது என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவு உண்மை கொண்டது மோடி மீதான மதவாத குற்றச்சாட்டுகளும், சுரண்டல் முதலாளித்துவச் சார்பும். மக்கள் இந்தக் குற்றச்சாட்டுகளைப் புறக்கணித்துவிட்டனர் என்று இதைத் தட்டைப் பார்வை பார்க்காமல் மக்கள் பங்கேற்கும் அமைப்பு இன்மையின் வெற்றிடமே பா.ச.க-வின் வெற்றி என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

தொகுதி எண்ணிக்கை அடிப்படையில் பா.ச.க பெற்றிருக்கும் வெற்றியானது, ஒட்டுமொத்த இந்திய வாக்காளர்களின் விருப்பம் அல்ல. பதிவான வாக்குகளில் பாரதிய சனதா கட்சிக்குக் கிடைத்தது மொத்தம் 31 விழுக்காடு மட்டுமே. அப்படியெனில், 69 விழுக்காடு வாக்காளர்கள் மோடி தலைமையிலான பாரதிய சனதாவிற்கு எதிராகவும், மாற்றுக் கருத்துகளுடனுமே வாக்களித்துள்ளனர் என்பது தெளிவு.

மோடி தலைமையிலான அரசு அமையும் என்று ஒவ்வொருமுறை கருத்துகணிப்பு முடிவுகள் வரும் போதும் பங்குச் சந்தை காளை மென்மேலும் வேகமாக ஓடியதும், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளன்று அம்பானி, அடானிகளின் சொத்துமதிப்பு 1.3 பில்லியன் உயர்ந்ததையும் சேர்த்தே புரிந்து கொள்ள வேண்டும். மோடியின் வெற்றி யாருக்கு பலன் தரப் போகிறது என்பதற்கான தொடக்க ஆதாரமே இது.


" வாக்குரிமை எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று ஆளும் வர்க்கம் அறிந்தே வைத்திருக்கிறது; அதனாலேயே வாக்களிக்கும் உரிமை இன்னும் மக்களிடம் உள்ளது" என்னும் மார்க் ட்வைனின் கருத்தை இங்கு நினைவுபடுத்திக் கொள்வோம்.

மக்களின் பங்கேற்பில்லாத அரசியல், அதனையொட்டி பதிவாகும் வாக்குகள் என்பது எந்தப் புதிய மாற்றங்களையும் தராது என்பதும், அது நம்மை மீண்டும் மீண்டும் பேய்க்கு பதிலாகப் பிசாசைத் தேர்ந்தெடுக்கும் நிலையிலேயே வைத்திருக்கும் என்பதுமே நிதர்சனம்.

மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொண்டு சனநாயகத்தைக் காக்கும் அதே வேளையில், மக்களின் அரசியல் பங்கேற்பின்மையையும் சுட்டிக் காட்டுதல் அவசியம். ஹிட்லர், முசோலினி போன்ற சர்வாதிகாரிகளும் தேர்தலின் வழியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தாம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

மக்கள் தங்களுடைய தேவைகளை முன்னிறுத்தியே வாக்கு அளிக்கிறார்களே ஒழிய, எந்த அலைக்கும் அவர்களிடத்தில் இடமில்லை. தமிழகத்தில் அ.தி.மு.க அரசால் கொண்டு வரப்பட்ட பெண்கள் கல்விக்கான உதவித் தொகை, தாலிக்கு தங்கம், அம்மா உணவகம் போன்ற திட்டங்களே அடித்தட்டு மக்களை அ.தி.மு.க பக்கமாக நகர்த்தியுள்ளது. அது போன்றே, நடுத்தர வர்க்கத்தினர் தங்களுக்கு எட்டிய அரசியல் தகவல்களைக் கொண்டு நாடு வளர்ச்சி அடைந்தால் வேலை வாய்புகள் பெருகும் என்கிற அடிப்படையில் வாக்களிக்கின்றனர். வாக்குப் பதிவு மாதிரிகள் அனைத்தும் வர்க்கப் பிரிவுகளின் விருப்பங்களையே எதிரடிக்கின்றன. இந்த அடிப்படையைப் மக்களின் பிழைப்புவாதமாகப் பாராமல், மக்களின் அரசியல் பங்கேற்பை உறுதி செய்ய தொடர்ந்து முயல வேண்டும்.

இடதுசாரிகள்,சனநாயக ஆற்றல்கள், , சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோர் மக்களிடம் இருந்து விலகியிருப்பதைக் கைவிட்டு எதார்த்த பாதையில் பயணிப்பதும், மக்களின் பங்கேற்பை உறுதி செய்வதும், முன்னெப்போதையும்விட சனநாயகப் பணி செய்வதும்தான் இன்றைய களத் தேவை.

நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும்,அங்குலத்திலும் அரசியல் பிரிக்க முடியாதது, அத்தகைய அரசியல் செயல்பாடு தேர்தல் காலத் திட்டம் மட்டுமே அல்ல. மோடி தலைமையிலான பாசிச பாரதிய சனதாவின் வெற்றி நம்முடைய அரசியல் செயல்பாடுகளின் தேவையை மென்மேலும் அதிகரிக்கிறது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டிய தருணம் இது.

கதிரவன்
சேவ் தமிழ்ஸ் இயக்கம்...

1 comment:

  1. // நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும்,அங்குலத்திலும் அரசியல் பிரிக்க முடியாதது, அத்தகைய அரசியல் செயல்பாடு தேர்தல் காலத் திட்டம் மட்டுமே அல்ல. மோடி தலைமையிலான பாசிச பாரதிய சனதாவின் வெற்றி நம்முடைய அரசியல் செயல்பாடுகளின் தேவையை மென்மேலும் அதிகரிக்கிறது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டிய தருணம் இது.

    உண்மை

    ReplyDelete