Wednesday, May 28, 2014

‘பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வீடு முற்றுகைப் போராட்டம்'

இன்று (புதன், 28 மே 2014) காலை 10:00 மணிக்கு, அரசுப் பள்ளிகளில் தமிழைப் புறக்கணித்து ஆங்கில வழிப் பிரிவுகளைத் திணிப்பதைக் கண்டித்து, ‘பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வீடு முற்றுகைப் போராட்டம்’ நடைபெற்றது.

தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் ஒருங்கிணைத்த இந்த முற்றுகைப் போராட்டத்தில் 250க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.



அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிப் பிரிவுகளைத் துவக்குவதைக் கண்டித்தும், தமிழ் வழிக் கல்வியை கட்டாயமாக்க வலியுறுத்தியும் நடைபெற்ற இந்த முற்றுகைப் போராட்டத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம், தந்தைப் பெரியார் திராவிடர் கழகம், ம.தி.மு.க.,
தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், தமிழ்த் தேச விடுதலை இயக்கம் உள்ளிட்ட 20 அமைப்புகளும் கட்சிகளைச் சார்ந்தவர்களும் கலந்துகொண்டனர். 'தாய் மொழி வழிக் கல்வி'யை ஆதரித்து 'சேவ் தமிழ்சு இயக்கத்தின்' ஒருங்கிணைப்பாளர் தோழர்.செந்தில் மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.





போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்

'அமைச்சர் வீடு முற்றுகைப் போராட்டத்தில்' கலந்து கொண்ட தோழர்கள் காவல் துறையினரால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.

போராட்ட முழக்கங்களின் ஒலிப்பதிவு:
http://yourlisten.com/savetamilsmovement/muzhakkam

தமிழ்வழிக் கல்வி குறித்து ஏற்கெனவே எமது வலைப்பூவில் வெளியான இடுகை:

அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி யாருக்கு சேவகம் செய்ய இந்த ஏற்பாடு ?

Monday, May 26, 2014

கர்நாடக அரசல்ல, கார்ப்பரேட்டுகளின் அரசே!!!



நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலும், நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்றுக் கொள்ளப் போவதும் கார்ப்ப்ரேட்டுகளாலும், கார்ப்பரேட் ஊடகங்களாலும் கதை, திரைக்கதை அமைக்கப்பட்டு நடத்தப்பட்ட கூத்து என்று கேரவன் இதழ் கட்டுரை வெளியிட்டிருந்தது.

இந்தத் தேர்தல் காங்கிரசு, பாரதிய சனதா கட்சிகளுக்கு இடையிலான போட்டியாக மட்டும் இல்லாமல், கார்ப்பரேட்டுகளுக்கும், மக்களுக்கும் இடையிலான நேரடி போட்டியாகவே நடந்து முடிந்திருக்கிறது. வழமைப் போலவே, பண மற்றும் அதிகார செருக்கில் கார்ப்பரேட்டுகள் நினைத்ததே நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் சனநாயகத்தின் மூலம் அரசுகள் அமைந்து, அந்த அரசுகள் தரும் சலுகைகளை கார்ப்பரேட்டுகள் பெற்ற நிலை மாறி தங்களுக்கு ஏதுவாகச் செயல்படும் கட்சியை ஆட்சியில் அமர்த்தி அதன் மூலம் தங்களுக்கு தேவையானவற்றை தங்குதடையின்றி பிடுங்கிக் கொள்ளும் நிலைக்கு அபிரிமிதமான வளர்ச்சியை அடைந்துள்ளனர். வளர்ச்சி என்று பிரச்சாரத்தின் போது கட்சிகள் மாறி மாறிப் பேசியது இந்த வளர்ச்சியைத்தான்.

கர்நாடகத்தில் ஆட்சியில் இருக்கும் காங்கிரசு அரசு, தகவல் தொழில்நுட்பத் துறையை அத்தியாவசியத் தேவைகளின் பட்டியலில் வைத்திருப்பதன் மூலம், இந்தத் துறைக்கு தொழிலாளர் நல உரிமைச் சட்டங்களில் இருந்து விலக்கு அளித்திருந்தது. அதை மேலும், ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்து உத்தரவு பிறப்பித்து உள்ளது.

தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்கள் மற்றும் அறிவுசார் துறைகளாகக் கருதப்படும் கணிப்பொறி, தொலைத் தொடர்பு துறைகளுக்கு தொழிலாளர் நலச் சட்டங்களில்(1946) இருந்து மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு விலக்கு அளித்துள்ளது கர்நாடக மாநில அரசு.

கார்ப்பரேட்டுகளும், அரசியல் கட்சிகளும் இணைந்து நடத்தும் கூத்தின் ஒரு காட்சியாகவே உள்ளது.

மக்கள் பிரச்சனைகளுக்கான போராட்டங்கள், வேலை நிறுத்தங்கள் போன்ற அமைப்பு சார் செயல்பாடுகளில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு இந்த துறைகளை அத்தியாவசியத் துறைகளின் பட்டியலில் வைத்துள்ள அரசு, தொழிலாளர் நலச் சட்டங்களில் இருந்து விலக்கு அளித்து தொழிலாளர் உரிமைகள் என்ற பேச்சுக்கே இடமின்றி செய்துள்ளது.

சிறப்பான நிர்வாகம், ஊழியர்களுக்கு தேவையான சகல வசதிகளும் அளிக்கிறோம் என்று மார்தட்டிக் கொள்ளும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தொழிலாளர் நலச் சட்டங்களில் இருந்து தங்களுக்கு விலக்கு அளிக்கக் கோருவது ஏன்?. சிறந்த நிர்வாகத்தை நடத்தும் நிறுவனங்கள் ஏன் சட்டத்தின் வட்டத்தில் இருந்து வெளியே செயல்பட நினைக்கும் காரணம் என்ன?

வெளிநாட்டு நிறுவனங்கள் நம் நாட்டில் வந்து தொழில் தொடங்க வேண்டுமானால் இத்தகைய சலுகைகள் அளிக்கப்பட்டால்தான் முடியும் என்று நம்மில் சிலர் வாதிடலாம். அப்படியெனில், சலுகை விலையில் நிலம், இருப்பதி நான்கு மணி நேரமும் மின்சாரம், தேவைக்கு மீறிய கட்டமைப்பு வசதிகள் என்று அனைத்தும் மானியமாக பெரும் நிறுவனங்கள், தொழில் தொடங்கப்பட்டப் பிறகும் சட்டத்திற்கு அப்பாற்ப்பட்டு இருக்க நினைப்பது எந்த விதத்தில் நியாயம்.


தொழில்கள் தொடங்க சலுகைகள் வழங்கப்படுகிறது, ஆனால் தொழில்கள் செழிக்க நம்முடைய வாழ்வையும், உரிமைகளையும் பணயம் வைப்பது என்பது மக்களுக்காக இந்த அரசுகள் செயல்படவில்லை என்பதையே சொல்கிறது.

இந்த அரசுகளை விமர்சனப் பார்வையில் அணுக வேண்டிய ஊடகங்கள், தங்களின் பணியை மறந்து கார்ப்பரேட்டுகளுக்கும், அரசுக்கும் காவடி தூக்குகின்றன.

கர்நாடக அரசு தொழிலாளர் நலச் சட்டங்களில் இருந்து தகவல் தொழில் நுட்பத் துறைக்கு விலக்கு அளித்ததை, அரசு தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்களின் உரிமைகளை பாதுகாக்கவே இதைச் செய்துள்ளதாக "தி இந்து" செய்தி வெளியிட்டுள்ள‌து.

தேர்தலின் போது மோடி ஆதரவு செய்திகளையும், விளம்பரங்களையும் வெளியிட்டு காக்கி அரைக்கால் சட்டை அணிந்த "தி இந்து", இன்று கர்நாடக அரசின் செயலை நியாயப்படுத்தி கார்ப்பரேட் வர்ணத்தை தன் முகத்தில் அப்பியுள்ளது. இளஞ்சிவப்பு இந்துவின் உண்மை நிறம் இது தான்.

நம்முடைய மண், கனிமங்கள், இயற்கை வளங்கள் என்று அனைத்தையும் பெருமுதலாளிகளுக்கு தாரை வார்க்கும் செயலை அரசு தொடர்ந்து செய்து வருகிறது. தகவல் தொழில்நுட்பத் துறையை பொறுத்த வரை, இந்தியாவின் முக்கிய வளமான மனித வளத்தை, உரிமைகள் பறிக்கப்பட்ட அடிமைகளாக அடகு வைப்பதே அரசுகளின் எண்ணமாகவும், செயலாகவும் உள்ளது.இதற்கும் உலகத்தின் மிகப்பெரிய சனநாயக நாட்டின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாடு இது.

இதைத்தான் ரசியப் புரட்சியாளர் லெனின் பின்வருமாறு கூறினார், " மிகச் சிறுபான்மையினரான பெருமுதலாளிகளுக்கான, செல்வந்தர்களுக்கான சனநாயகமே, முதலாளித்துவ சனநாயகம் "


கதிரவன்
சேவ் தமிழ்ஸ் இயக்கம்

மேலும் படிக்க..

1) http://timesofindia.indiatimes.com/tech/tech-news/IT-companies-in-Karnataka-to-remain-exempt-from-labour-laws/articleshow/29719053.cms

2) http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/govt-to-safeguard-interests-of-workforce-in-it-sector/article5980644.ece

Sunday, May 25, 2014

ஈழம் குறித்த விழிப்புணர்வு வீதி நாடகம்

தகவல் தொழில்நுட்ப‌த் துறையினரிடம் ஈழம் குறித்த விழிப்புணர்வு வீதி நாடகம்

ஒப்பனை
• சேவ் தமிழ்ஸ் தோழர்(இனி.. தோழர்) - தோழர் ராஜன்
• அறை நண்பர் - தோழர் சதிஸ்
• தகவல் தொழில்நுட்ப நண்பர் - தோழர் அருணகிரி
• வடமாநில நண்பர் - தோழர் கேசவன்

காட்சி 1 (தங்கியிருக்கும் அறையில்)



தோழர் - மாப்ள! நாளைக்கு ஊருக்கு போறேன். நீ ஹவுஸ் ஓனர பாத்து இந்த வாடகைய கொடுத்துரு.

அறை நண்பர் - மச்சி, சாயங்காலம், ஓனர் வீட்டு வழியா தான போவ..? நீயே கொடுக்க வேண்டிய தான...

தோழர் -என்னடா மறந்துட்டியா? சாயங்காலம் நினைவேந்தல் இருக்குன்னு சொன்னேன்ல... இந்த தடவ கண்டிப்பா வாரேன்னு சொன்னியேடா

அறை நண்பர் -டேய்! அது உன்ன ஆறுதல் படுத்த சொன்னதுடா! ஓ அத நீ சீரியஸா எடுத்துகிட்டியா? ஐயோ ஹையோ...

தோழர் -நீ வந்து பாரேண்டா, வர்றதுல உனக்கு என்ன ஆகபோகுது?

அறை நண்பர் - டேய் யப்பா அதெல்லாம் உங்கூடவே வச்சிக்க..., என்ன ஆள விடு. உன்னை ஒரு நாள் இல்ல, ஒரு நாள் Terrosistன்னு சொல்லி உள்ள வைக்க போறாய்ங்க. ஏன்கிட்ட வந்து விசாரிச்சா சொல்லிருவேன்.... உன்ன பாத்தது கூட இல்லன்னு...

தோழர் -அட பாவி! லச்சகணக்கில கொன்னானுங்க, இன்னைக்கும், ராணுவத்த உள்ள உட்டு உதைக்கிறான், இருக்குற வீட்ட புடுங்குறான். இதல்லாம் சொன்னா உனக்கு நான் Terrorist அங்?

அறை நண்பர் - இந்தியாவுல இருந்துகிட்டு ஒன்னும் கிழிக்கமுடியாது. நீங்க ரெண்டு பேரு மூணு பேரு கத்துறதால எல்லாம் சரியாயிடுமா?


தோழர் -இப்படியே சொல்லிட்டு இருந்தா ஒன்னும் நடக்காது, இன்னக்கி நீ வருவ.... நாளைக்கு அவன் வருவான்... அதோ வேடிக்கை பார்க்குறாரே அவர் (மக்களை நோக்கி கையை காட்டி), எல்லாரும் சேந்து கத்துவோம். ஈழம் ஒன்னும் கேட்டவார்த்தை இல்லயே; நியாயம் தான கேட்கிறோம்.

அறை நண்பர் -சரிங்க தோழரே (நக்கலாக), கிளம்புங்க காத்து வரட்டும்!
[முனுமுனுப்பு - சே!அந்த பையன் இவ்வளவு சொல்லியும், இவன் அலச்சியபடுத்துறானே]


தோழர் -இதுல ஆறாயிரம் வச்சிருக்கேன் மறந்துறாத, நாளைக்கு ஓனர்ட்ட கொடுத்துடு, முடிஞ்சா சாயங்காலம் வரப்பாரு.


(போர்வையில் மூடிகிட்டு)
அறை நண்பர் -குட் நைட்!



காட்சி - 2 (அலுவலகத்தில்)


தோழர் -வணக்கம் அருண்!

அலுவலக நண்பர்(இனி.. நண்பர்) -வாங்க தமிழ் புலவரே!

தோழர் -ஒரு தடவ இரண்டு தடவன்னா பரவாயில்ல, எப்பவும் கிண்டல் பண்ணுனா எனக்கே அலுத்து போயிருது. வணக்கம் சொன்னது குத்தமாயா?

நண்பர் -ஜி என்ன கோவப்பட்டுடீங்களா? சும்மா ஒரு விளையாட்டுக்குதானஜி

தோழர் - கிளைண்டுட்ட இருந்து மெயில் வந்துச்சா?

நண்பர் -இல்லஜி, மறுபடியும் இன்னக்கி ஒரு மெயில் தட்டிவிடனும்போல. ஒழுங்கா பதிலும் சொல்ல மாட்டான், அப்புறம் இந்தாளு புடிச்சி நம்மள ஏறுவார்.

தோழர் -சொல்லிகிலாம் விடுங்க! இன்னைக்கு சாயுங்காலம் நினைவேந்தல் இருக்குனு சொன்னனே, வந்துருங்க தல!

நண்பர் -ஜி நான் வந்து என்ன செய்ய போறேன். எனக்கும் சேத்து நீங்களே கலந்துகோங்க!

தோழர் -அது என்ன எல்லாருக்கும், கடைசி நேரத்துல ஏதாவது ஆயிருது. ரூம்ல ஒருத்தன் கிடக்கான், அவனும் இப்படி தான் சொன்னான்.

நண்பர் -ஜி, இது நினைவேந்தல் தான், அப்பிடின்னா கூட எனக்கு இந்த கான்சப்டே புரியவே இல்ல, இங்கிருந்து ஒரு நாட்டுக்கு பிழைக்க போயி அங்க தனி நாடு கேக்கிறது எப்படி?

தோழர் -நீ யார சொல்ற... பிழைக்க போனாங்கனுட்டு?

நண்பர் -எனக்கு தெரிஞ்சி, சிங்களவன் தான் அங்க இருந்தான், நம்மாளுங்கள பிரிட்டிஸ்க்காரன் டீ எஸ்டேட்டுக்கு வேலைக்கு கூட்டிபோனான்....

தோழர் -என்னது...? நீங்க சொல்றது வெள்ளகாரகாரங்க இங்க ஆட்சி செய்யும் பொது, இங்கிருந்து போன தமிழர்கள், இன்னும் மலையக தமிழர்களா இருக்காங்க!

நண்பர் -அப்போ அதுக்கு முன்னாடியே அங்க தமிழர்கள் இருந்தாங்களா?

தோழர் -தமிழ் மன்னர்கள் அங்கு முன்பே ஆட்சி செஞ்சிருக்காங்க, தமிழ் மக்கள் அந்த மண்ணின் பூர்வ குடிகள்! அருண்.

நண்பர் -ஜி.. இது தெரியாதே

தோழர் -இதுக்கு தான் "வெடித்த நிலத்தில் வேர்களை தேடி"ங்குற டி.வி.டி'ல ஈழ வரலாற்றை விளக்குற ஆவணப்படம் ஒன்ன தந்தேன். நீங்க என்னன்னா...? நல்ல காசு பாக்குறீங்க போல அப்படின்னு சொல்லி கலாய்சீங்க... நல்லா தேடி படிங்க... நம்மளே இப்படி சொல்லலாமா?

நண்பர் -நான் பாக்குறேன் ஜி...

தோழர் -நல்லது, பாருங்க... முழுசா தெரியாம நீங்களே ஒரு கற்பனைக்கு வராதீங்க!..... அப்புறம் தல முடிஞ்சா இன்னைக்கு வாங்க!

நண்பர் -ட்ரை பண்ணுறேன் ஜி

தோழர் -தனது பையில் இருந்து டி.வி.டி'ய எடுத்து கொடுக்குறார்.

நண்பர் -எவ்வளவு ஜி (சிரித்து கொண்டே)
(டி.வி.டி'யை எடுத்து உள்ளே வைத்துவிட்டு...)

தோழர் -யூடுயூப்'ல இருக்கு, 'வெடித்த நிலத்தில் வேர்களை தேடி' என்று தேடி பாருங்க... முதல்ல நான் போயி சாயங்காலம் போறதுக்கு permission வாங்கிட்டு வாரேன்.

நண்பர் - கிளம்பும் போது தல வலின்னு..., வயித்து வலின்னு எதையாவது சொல்லிட்டு போக வேண்டியது தான?

தோழர் - இல்ல நான் நினைவேந்தல்'ன்னு சொல்லியே கேட்கபோறேன்...

நண்பர் - சரி... இன்னக்கி ஹிந்தில திட்டுவாங்கனும்ன்னு முடிவு பண்ணிட்டீங்க... என்சாய்


காட்சி - 3(Team Manager Room)


STM member: Good Morning ATUL

ATUL(TL) - Good Morning yaar, please sit... anything?

STM member - Had no email response from the client...

ATUL(TL) - Yeah... they are lazy guys, we will wait up to evening. Then we can setup a call.

STM member - ok (நாசமா போச்சு), huh.... one more thing.

ATUL - Yeah

STM member - We are paying homage to Tamils killed in the Genocide, this evening. I told you.., remember? Today is May 19 !

ATUL -yes! it's really pathetic yaar that thousands of people were killed in the war, But demanding Eelam is like you want to separate Tamil nadu from India. Don't you?


STM member - No Atul! You misunderstood. Eelam is not a demand to separate Tamil Nadu from India.

ATUL -Then..?

STM member - Eelam is a historical land mass in the now island nation, Sri Lanka belongs to Tamils. Now it is a freedom chant to form of Separate country there. It’s like a liberation of South Sudan …happened in 2011.. You know it, right?

ATUL -Yeah .. I read about Sudan. By the way , Does Eelam include Tamil Nadu as well ?

STM member - No... No … No.. The north Indian Medias are trying to create such stories like "Tamilnadu will be separated if Eelam is free". It is not so !


ATUL - Oh... is it ? Even I thought the same... okay then, some where I read it is war against Terrorism and Sri Lankan army rescued Tamil people from the terrorists.. Is it not so ?

STM Member :Its false propaganda. If it is war against Terrorism , why thousands of Tamils killed ? why did the army shelled in No Fire zone ? You please read more in UN panel reports and Channel 4 videos

ATUL -Is it ? … (pause) I think we need to discuss a lot about eelam. May be we can discuss this Saturday night.

STM Member:Sure … we can discuss more on Saturday


ATUL:All right! Please setup a call in the afternoon and you can leave.

STM member - Thanks Atul! You're welcome there, if you are interested.

ATUL -I have a report to take care yaar, I will try.


STM member - :-)


காட்சி - 4 (நினைவேந்தல் நிகழ்வு)

தோழர் - என்னடா! வரமாட்டேன்னு சொன்ன?

அறை நண்பர் -விடு விடு... அதான் வந்துட்டோம்ல.... இலட்சம் பேர் செத்ததுக்கு அஞ்சலி கூட பண்ணலான எப்படி ?

தகவல் தொழில்நுட்ப நண்பர் -ஹாய் ஜி

தோழர் -வாங்க ஜி... வாங்க ஜி...

தகவல் தொழில்நுட்ப நண்பர் -இங்க பாரு.... யாரு வந்துருக்குறதுன்னு!

தோழர் -Hey Atul, its a surprise man... great.

ATUL -Its okay yaar.

தோழர் - இன்னக்கி ஒங்களுக்குலாம் என்னாச்சி...

தகவல் தொழில்நுட்ப நண்பர் -நான் கூட அவன பல நாள் சப்பாத்தின்னு கிண்டல் பண்ணிருகேன்... இன்னக்கி கூப்ட உடனே நானும் வரணும்னு தான் இருந்தேன் அப்படின்னான்

தோழர் - தமிழரின் தாகம்...
(தகவல் தொழில்நுட்ப நண்பர் மற்றும் அறை நண்பர் முழக்கமிட)

ATUL -what does it mean?


தோழர் -The thirst of Tamils is tamil eelam homeland

ATUL -Repeat in Tamil...

தோழர் -தமிழரின்-தாகம்... தமிழீழ- தாயகம்.(மெதுவா சொல்லி கொடுக்க)
தமிழரின் தாகம்...அனைவரும் - தமிழீழ தாயகம்.



-----

Tuesday, May 20, 2014

அரசியல் - தேர்தல் காலத் திட்டமல்ல!





16-வது இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, கடந்த 16 ஆம் தேதி முடிவுகள் வெளியாயின. நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய சனதா கட்சி தனிப் பெரும்பான்மை பெற்று இன்னும் சில நாட்களில் ஆட்சி அமைக்கப் போகிறது.

‘மோடி அலை" சுனாமியாக மாறி, பாரதீய சனதாவிற்குப் பெருவெற்றியைத் தேடி தந்துள்ளதாக மோடியின் ரசிகர்களும், கட்சியினரும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், இங்கு முக்கியமாக நாம் புரிந்துகொள்ள வேண்டிய ஒன்று, இந்திய அளவில் காங்கிரசுக்கு எதிரான வாக்குகளைப் பெறுவதற்கு அமைப்பாகத் திரட்டப்பட்ட மக்கள் இயக்கமோ, கூட்டணியோ இல்லை என்பதே அது.


உதராணத்திற்கு, தமிழகத்தில் அ.தி.மு.க பெற்ற வெற்றியும், மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரசின் வெற்றியும், மோடியின் அலை என்பது காங்கிரசுக்கு எதிரான வாக்குகளைப் பெறக்கூடிய மற்ற இயக்கங்கள் வலுவாகக் காலூன்றாமல் விட்ட இடத்தை ஆக்கிரமித்திருப்பதையே காட்டுகிறது.


மோடியின் இந்த வெற்றி, குஜராத் பாணியிலான வளர்ச்சி என்கிற முழக்கத்தின் வெற்றியா? என்றால் இல்லை, விளம்பரத்தின் வெற்றி. இந்திய அரசியலில் மக்களின் பங்கேற்பு என்பது வாக்கு அளிப்பதோடு முடிந்துவிட்டது என்பதாக முற்றிலும் சுருக்கிய வெற்றி இது.


சரியோ? தவறோ? மோடியின் விளம்பரத்தை வாய்மொழி வழியாக எடுத்துச் சென்றதில் முக்கியமான பங்கு, நடுத்தர வர்க்க இளைஞர்களுக்கு உள்ளது. ஆனால், இவர்களின் அரசியல் பங்கேற்பு என்பது தேர்தலோடு நின்றுவிடும் ஒன்றாகவே இருந்து வந்திருக்கிறது. அதற்குக் காரணம், அவர்கள் மோடியை முன்னிறுத்தி பிரச்சாரத்தை முன்னெடுத்த விதமே. அவதாரங்களை வழிபட்டு நம்முடைய அனைத்து பிரச்சனைகளுக்கும் ஆன தீர்வை வேறு ஒருவர் வந்து கொடுப்பார் என்று அதிக நம்பிக்கை கொள்ளும் இந்திய பொதுச் சமூகத்தின் தொடர்ச்சியே இந்த நடுத்தர வர்க்கத்தின் எண்ணம். இந்த எண்ணத்தைக் கொண்ட இந்திய பொதுச் சமூகம் இத்தனை பெரிய வெற்றியை மோடி தலைமையிலான பாரதிய சனதாவிற்கு அளித்ததில் வியப்பில்லை.


தேர்தலுக்கு முன் நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன், " காங்கிரசு குப்பைக்குப் போக வேண்டும் என்பதில் முற்போக்கு ஆற்றல்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை, அதே சமயம் 2009-ல் குப்பைக்கு அனுப்பப்பட்டு, குப்பையில் ஊறிய பாரதிய சனதாவிடம் மாற்றத்தைத் தேடுவதுதான் பொருளற்றது".


இந்திய அரசியலில் முதன்முறையாகச் சாதி, மதப் பாகுபாடுகள் கடந்து மக்கள் மோடியை தேர்ந்தெடுத்துள்ளதாக ஊடகங்கள் பெருமிதம் கொள்கின்றன. அப்படியெனில், அமையப் போகும் மோடி தலைமையிலான அரசின் செயல்களைத் தொடர்ந்து மதிப்பிட்டு, தவறுகள் நடக்கும் போது அதற்கு எதிரான நடவடிக்கைகளிலும், போராட்டங்களிலும் ஈடுபடும் பெரும் பொறுப்பு இந்திய பொதுச் சமூகத்தின் தோள்களிலேயே உள்ளது.

மோடி தலைமையிலான பாரதிய சனதா பெரு வெற்றியைப் பெற்றுள்ளது என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவு உண்மை கொண்டது மோடி மீதான மதவாத குற்றச்சாட்டுகளும், சுரண்டல் முதலாளித்துவச் சார்பும். மக்கள் இந்தக் குற்றச்சாட்டுகளைப் புறக்கணித்துவிட்டனர் என்று இதைத் தட்டைப் பார்வை பார்க்காமல் மக்கள் பங்கேற்கும் அமைப்பு இன்மையின் வெற்றிடமே பா.ச.க-வின் வெற்றி என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

தொகுதி எண்ணிக்கை அடிப்படையில் பா.ச.க பெற்றிருக்கும் வெற்றியானது, ஒட்டுமொத்த இந்திய வாக்காளர்களின் விருப்பம் அல்ல. பதிவான வாக்குகளில் பாரதிய சனதா கட்சிக்குக் கிடைத்தது மொத்தம் 31 விழுக்காடு மட்டுமே. அப்படியெனில், 69 விழுக்காடு வாக்காளர்கள் மோடி தலைமையிலான பாரதிய சனதாவிற்கு எதிராகவும், மாற்றுக் கருத்துகளுடனுமே வாக்களித்துள்ளனர் என்பது தெளிவு.

மோடி தலைமையிலான அரசு அமையும் என்று ஒவ்வொருமுறை கருத்துகணிப்பு முடிவுகள் வரும் போதும் பங்குச் சந்தை காளை மென்மேலும் வேகமாக ஓடியதும், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளன்று அம்பானி, அடானிகளின் சொத்துமதிப்பு 1.3 பில்லியன் உயர்ந்ததையும் சேர்த்தே புரிந்து கொள்ள வேண்டும். மோடியின் வெற்றி யாருக்கு பலன் தரப் போகிறது என்பதற்கான தொடக்க ஆதாரமே இது.


" வாக்குரிமை எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று ஆளும் வர்க்கம் அறிந்தே வைத்திருக்கிறது; அதனாலேயே வாக்களிக்கும் உரிமை இன்னும் மக்களிடம் உள்ளது" என்னும் மார்க் ட்வைனின் கருத்தை இங்கு நினைவுபடுத்திக் கொள்வோம்.

மக்களின் பங்கேற்பில்லாத அரசியல், அதனையொட்டி பதிவாகும் வாக்குகள் என்பது எந்தப் புதிய மாற்றங்களையும் தராது என்பதும், அது நம்மை மீண்டும் மீண்டும் பேய்க்கு பதிலாகப் பிசாசைத் தேர்ந்தெடுக்கும் நிலையிலேயே வைத்திருக்கும் என்பதுமே நிதர்சனம்.

மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொண்டு சனநாயகத்தைக் காக்கும் அதே வேளையில், மக்களின் அரசியல் பங்கேற்பின்மையையும் சுட்டிக் காட்டுதல் அவசியம். ஹிட்லர், முசோலினி போன்ற சர்வாதிகாரிகளும் தேர்தலின் வழியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தாம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

மக்கள் தங்களுடைய தேவைகளை முன்னிறுத்தியே வாக்கு அளிக்கிறார்களே ஒழிய, எந்த அலைக்கும் அவர்களிடத்தில் இடமில்லை. தமிழகத்தில் அ.தி.மு.க அரசால் கொண்டு வரப்பட்ட பெண்கள் கல்விக்கான உதவித் தொகை, தாலிக்கு தங்கம், அம்மா உணவகம் போன்ற திட்டங்களே அடித்தட்டு மக்களை அ.தி.மு.க பக்கமாக நகர்த்தியுள்ளது. அது போன்றே, நடுத்தர வர்க்கத்தினர் தங்களுக்கு எட்டிய அரசியல் தகவல்களைக் கொண்டு நாடு வளர்ச்சி அடைந்தால் வேலை வாய்புகள் பெருகும் என்கிற அடிப்படையில் வாக்களிக்கின்றனர். வாக்குப் பதிவு மாதிரிகள் அனைத்தும் வர்க்கப் பிரிவுகளின் விருப்பங்களையே எதிரடிக்கின்றன. இந்த அடிப்படையைப் மக்களின் பிழைப்புவாதமாகப் பாராமல், மக்களின் அரசியல் பங்கேற்பை உறுதி செய்ய தொடர்ந்து முயல வேண்டும்.

இடதுசாரிகள்,சனநாயக ஆற்றல்கள், , சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோர் மக்களிடம் இருந்து விலகியிருப்பதைக் கைவிட்டு எதார்த்த பாதையில் பயணிப்பதும், மக்களின் பங்கேற்பை உறுதி செய்வதும், முன்னெப்போதையும்விட சனநாயகப் பணி செய்வதும்தான் இன்றைய களத் தேவை.

நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும்,அங்குலத்திலும் அரசியல் பிரிக்க முடியாதது, அத்தகைய அரசியல் செயல்பாடு தேர்தல் காலத் திட்டம் மட்டுமே அல்ல. மோடி தலைமையிலான பாசிச பாரதிய சனதாவின் வெற்றி நம்முடைய அரசியல் செயல்பாடுகளின் தேவையை மென்மேலும் அதிகரிக்கிறது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டிய தருணம் இது.

கதிரவன்
சேவ் தமிழ்ஸ் இயக்கம்...

Monday, May 12, 2014

இலங்கையில் நடந்தது இனப்படுகொலையே.....




பேராசிரியர்.இராமு மணிவண்ணன் எழுதிய "யானையை மறைக்கும் இலங்கை" நூலின் பெங்களூர் அறிமுக கூட்டமும், முள்ளிவாய்க்கால் பேரழிவின் ஐந்தாமாண்டு நினைவு கூட்டமும் இன்று(மே 11) காலை 10.30 மணிக்கு பெங்களூர் தமிழ் சங்கத்தில் "போர்க்குற்றம் இனப்படுகொலைக்கு எதிரான மன்றத்தின்" கர்நாடக பிரிவின் சார்பாக நடத்தப்பட்டது.



முள்ளிவாய்க்கால் பேரழிவின் ஐந்தாமாண்டும், நம்முன் உள்ள கடமைகளைப் பற்றி கர்நாடக தமிழ் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த தோழர்.சண்முகம் பேசினார். ஈழ விடுதலை போராட்டத்தில் தமிழகத்தில் பின்னடைவதற்கான காரணம், நமக்குள் ஒற்றுமையில்லை, சாதியாலும், அரசியலாலும் நாம் வேறுபட்டுள்ளோம். தமிழக அரசியல் கட்சிகளான திமுக, அதிமுகவும் தமிழர்களுக்கு துரோகம் இழைத்து வருகின்றனர். ஈழ ஆதரவு அரசியல் கட்சிகளின் மீது கூட நம்பிக்கை இல்லாத சூழலே நிலவுகின்றது. மாணவர்களாலும், இளைஞர்களாலும் மட்டுமே விடிவை போராடி பெற்று தரமுடியும், நம்மைப் போன்ற இயக்கங்கள், செயற்பாட்டாளர்கள் அவர்களின் போராட்டத்திற்கு உறுதுணையாக இருக்கவேண்டும் என்றார்.



"யானையை மறைக்கும் இலங்கை" நூலை தோழர். சண்முகம் வெளியிட மனித உரிமை செயற்பாட்டாளரான தோழர்.நகரிகரே ரமேஷ் பெற்றுக்கொண்டார்.



இந்நூலை அறிமுகப்படுத்தி பேராசிரியர்.சிவலிங்கம் பேசும் பொழுது, தமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்தவரை இந்த நீண்ட கால போராட்ட வரலாற்றில் தமிழீழம் பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையில் நாம் இருந்த போது மே 2009 பேரழிவு, போராட்டத்திற்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. தமிழீழ போராட்டத்தைப் பொறுத்தவரை தமிழகத்திலும், கர்நாடகாவில் வாழும் தமிழ் மக்கள் மத்தியிலும் நாம் எவ்வாறு செயல்பட்டோம் என்பதை சீராய்வு செய்து பார்த்தால், நாம் செய்தது உணர்வு சார் அரசியல் என்பது புரியும், மே 18ற்கு பிறகு தமிழீழ விடுதலைபோரட்டத்தை சங்க இலக்கியங்களுடன் ஒப்பிட்டு சிறப்பு செய்வதும், இன்னொரு புறம் புலம்புவதுமாக உள்ள அரசியல் நம்மை பீடித்துள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும் என்றார். 2000 ஆண்டுகள் ஆனாலும் ஒரு இனம் தன்னுடைய விடுதலைக்காக போராடுமென்பது வரலாறு. அதனால் தமிழீழ மக்கள் தான் அதை முன்னெடுத்து செல்வார்கள், அப்போராட்டம் எந்த வகையில் என்பதை அவர்களே முடிவு செய்வார்கள், வெளியிலிருக்கும் தமிழக மக்களாகிய நாம் புவிசார் அரசியிலிலிருந்து இந்த போராட்டத்திற்கு ஆதரவான தளத்தை உருவாக்க, தமிழ்த்தேசிய அரசியலை மக்கள் சார்ந்த, அடித்தட்டு மக்கள் கூட தமிழ்த்தேசிய உரிமை எங்களுக்கு வேண்டும், இந்தியாவிலும் கூட தமிழ்த்தேசிய சுயநிர்ணய உரிமை எங்களுக்கு வேண்டும் என்ற மக்கள் போராடக்கூடிய ஒரு தளத்தை உருவாக்குவது தான் ஈழத்தமிழர்களுக்கு நாம் ஆற்றும் உண்மையான பணியாக அமையும் என்று குறிப்பிட்டார்.



மக்கள் சனநாயக மன்றத்தைச் சேர்ந்தவரும், மனித உரிமை செயற்பாட்டாளருமான தோழர்.இரமேஷ் நூலைப் பற்றி விரிவாக பேசினார். "யானையை மறைக்கும் இலங்கை" என்பது நேரடியாக அப்படியே புரிந்து கொள்ளக்கூடாது, நீங்கள் என்ன செய்தாலும் யானையை மறைக்க முடியாது என்பதன் அர்த்தத்தில் தான் புரிந்து கொள்ள வேண்டும், இங்கே இலங்கையில் இந்த யானை என்ன செய்கின்றது. இலங்கை அரசு தனது சொந்த மக்கள் மீதே வன்முறையை, ஒடுக்குமுறையை ஏவிவருகின்றது, அங்கு தமிழர்கள் வெளிநாட்டினர் அல்ல, அம்மண்ணின் மக்கள். தமிழர்கள் மீது நடத்திவரும் வன்முறை என்ற யானையை பன்னாட்டு சமூகத்தின் கண்ணில் இருந்து மறைக்க முயல்கின்றது. ஆனால் அவர்களால் மறைக்க முடியாது என்பது தான் உண்மை. L.L.R.C (Lessons Learnt & Reconcilation commission) என்பது இலங்கை அரசு நடத்திய கண்துடைப்பேயன்றி வேறல்ல, உண்மையில் அவர்கள் எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்பது தான் யதார்த்தம். வெளியுலக மக்களுக்காக தான் அவர்கள் அப்படி ஒரு ஆணையத்தையே அமைத்தார்கள்.


அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஈராக் மீது போர் தொடுக்க பயன்படுத்திய "பயங்கரவாதத்திற்கெதிரான போர்" என்ற உத்தியை இலங்கை அரசு இங்கே தமிழர்களை கொல்லப் பயன்படுத்தியது. அந்தப் போர் இன்னும் ஒய்ந்தபாடில்லை, 2009 வரை பெயருக்காவது இன்னொரு தரப்பு இருந்தது, 2009க்கு பின்னர் இலங்கை அரசு ஆயுதமேதுமற்ற மக்கள் மீது போர் தொடுத்து வருகின்றது, இலங்கை தன்னை "சோசலிச சனநாயக குடியரசு" என்று அழைத்துக் கொள்கின்றது, ஆனால் இது எதையும் எப்பொழுதும் இலங்கை அரசு நடைமுறைப்படுத்தியதேயில்லை. இவ்வளவு பெரிய ஆழமான நூலைப் பற்றி முழுமையாக பேசுவதென்பது முடியாத ஒன்று, இந்த நூலைப் பற்றிய ஒரு சிறு அறிமுகத்தை தான் நான் இங்கே கொடுக்கின்றேன். மார்ச் 2014ல் ஐ.நா.மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு எதிரான ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தது, ஆனால் இந்திய அரசு இத்தீர்மான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.இந்த நவீன உலகமானது பூகோள அரசியல்களாலானது. இந்தியா ஏன் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லையே ஏன் என வெளியுறவுத்துறை அதிகாரிகளை கேட்டால், நாம் இலங்கைக்கு எதிரானால் அங்கு சீனா வந்து விடும் என ஆருடம் சொல்வார்கள். வெளியுறவுத்துறை செயல்பாடுகள் என்பது முற்றிலும் பொய்களாலும், பூகோளாரசியலாலுமானது. சேனல் 4 இலங்கையில் நடந்ததை ஒளிப்படமாக காட்சிப்படுத்தி மொழி புரியாதவர்களுக்கும் கொண்டு சேர்த்தது. அதை விட அதிகமான தகவல்களைக் கொண்ட முக்கியமான நூலிது.


2009 மே மாதத்திற்க்கு பின்னர் கன்னட ஊடகவியலாளரான குமார் பருடைக்குட்டி "ஓ ஈழம்" என்ற நூலை எழுதினார், இந்நூலை லங்கேஷ் பத்திரிகை வெளியிட்டது, இந்நூல் மூலம் கன்னடம் பேசும் மக்கள் இலங்கையில் நடப்பது என்ன என புரிந்து கொண்டனர். யூதர்கள் ஒரு இனப்படுகொலையை எதிர்கொண்டனர், ஆனால் இன்று அவர்கள் அதே இனப்படுகொலையை பாலசுதீனியர்கள் மீது நடத்திவருகின்றனர். இலங்கை அரசானது நாசிகள் யூதர்கள் மீது நடத்திய இனப்படுகொலையிலிருந்து சித்ரவதை முகாம்களை அமைத்தும், யூதர்கள் பாலசுதீனியர்கள் மேல் நடத்தி வரும் இனப்படுகொலையிலிருந்து பூர்வகுடி மக்களின் நிலத்தை பிடுங்கி, இராணுவமயப்படுத்துவத்தி அவர்களை அழித்தொழிப்பதையும் சேர்த்து தமிழர்கள் மீது பயன்படுத்தி, முழு இலங்கையையும் சிங்களமயாக்கி வருகின்றது. தமிழர்கள் மீதான போர் 2008ல் தொடங்கவுமில்லை, 2009ல் முடியவுமில்லை, 1948ல் இருந்து இன்று வரையும் நடந்து வருகின்றது. இலங்கையில் இதுவரை செயற்பட்ட எல்லா அரசுகளும் சிங்கள பௌத்தத்தை அடிப்படையாகக்கொண்டே செயல்பட்டன. சிங்கள பௌத்த தேசியவாதம் அங்கு அரசியல், கலாச்சாரம் என்ற இரண்டு தளத்திலும் செயற்பட்டு வருகின்றது. முதலில் தமிழ் மொழியின் உரிமையை அவர்கள் மறுத்தார்கள், பின்னர் மலையகத்தமிழர்களை நாடற்றவர்களாக்கினார்கள், நீண்ட காலத்திற்கு தமிழ் மக்கள் தங்கள் உரிமையைக் கோரி சனநாயக வழிகளில் தங்கள் போராட்டத்தை நடத்தினார்கள், பின்னர் 1990களில் தான் ஆயுதப் போராட்டம் தொடங்குகின்றது. இலங்கை அரசு தமிழ் மக்களை இனப்படுகொலை செய்துள்ளது என்பதை இந்நூல் தெளிவாக எடுத்தியம்புகின்றது. 2002ல் குஜராத்திலும், இவ்வாண்டு முசாபர் நகரத்தில் நடந்ததும் இனப்படுகொலையில் ஒரு பகுதியே... இது போன்ற இனப்படுகொலையிலிருந்தும், திட்டமிட்ட வன்முறைகளிலிருந்தும் நாம் பாடம் கற்றுக்கொள்ளவேண்டும், அப்பொழுது தான் நாம் நாகரீகமான குடிமைச் சமூகமாவோம். மக்கள் ஒடுக்கப்படுவதிலிருந்து அவர்களின் வலிகளிலிருந்து நாம் பாடம் கற்கவேண்டும். கண்டிப்பாக நீதி நிலைநாட்டப்படும். தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும். பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாகச் சென்று வாழ்ந்து வரும் தமிழர்கள் மீண்டும் தங்கள் மண்ணிற்கு வந்து வாழும் நாள் வரும் என உறுதியாக நம்புகின்றேன் என்ற தோழர்.இரமேஷ் இறுதியாக கன்னட ஊடகவியலாளர் சிவசுந்தர் 2009 மே மாதத்தில் எழுதிய கவிதையை வாசித்து தனது உரையை நிறைவு செய்தார். அக்கவிதையின் சாரம் புத்தர் ஏன் மண்ணின் மைந்தர்களை கொல்லும் போது ஏன் அமைதியானார், பௌத்தம் என்பது எல்லாவற்றையும் துறப்பதேயன்றி மாட மாளிகைகளில் வாழ்வதல்ல என்பதாகும்.

முள்ளிவாய்க்கால் பேரழிவின் ஐந்தாமாண்டு நினைவை முன்னிட்டு அஞ்சலி செலுத்தும் வகையில் இரண்டு நிமிடம் மௌனம் அனுசரிக்கப்பட்டது.


நூலாசிரியரும், சென்னை பல்கலைகழகத்தின் அரசியற்துறை தலைவருமான பேராசிரியர். மணிவண்ணன் பேசும் பொழுது. ஐ.நாவின் மூவர் குழுவின் அறிக்கைப்படியே மே 9 இரவிலிருந்து, மே 10 காலைக்குள் 2000 பேர் கொல்லப்பட்டனர். மே மாதத்தில் எல்லாம் புலிகள் போரை நிறுத்திவிட்டார்கள், அப்பொழுதும் இலங்கை அரசு தொடர் போர் புரிந்து ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்களை கொன்றுள்ளது. மே மாதத்தில் மட்டும் எவ்வித தடுப்பும் செய்யாத பொது மக்களில் 50,000 பேரைக் கொன்றுள்ளது என்றார்.


நாங்கள் இங்கு இந்நூலை விற்பனை செய்யவோ, விளம்பரப்படுத்தவோ வரவில்லை, நமக்கு அருகில் உள்ள அண்டை நாட்டில் இனப்படுகொலை நடந்துள்ளது என்ற செய்தியை சொல்லவே வந்துள்ளோம், இப்படி ஒரு இனப்படுகொலை நடந்த பொழுது இந்தியா (தமிழகம் தவிர்த்து) அமைதியாக இருந்தது. இலங்கை அரசே தன்னை விசாரித்து பின்னரே பன்னாட்டு சமூகம் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்த பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளையும், அமெரிக்க பிரதிநிதியிடமும் நான் ஒரு கேள்வியை முன்வைத்தேன், தமிழர்கள் மீது 1979லும், 1983லும், அதற்கு பிறகு இன்று வரை நடந்து வரும் எந்த ஒரு தாக்குதலிலாவது இலங்கை அரசு விசாரணை செய்து யாரையாவது தண்டித்துள்ளது எனச்சொல்ல முடியுமா? என்றால் அதற்கு முடியாது என்பதே பதில், அப்படியிருக்க நீங்கள் எப்படி இலங்கை அரசு முதலில் விசாரிக்க வேண்டும் எனக்கோருகின்றீர்கள் எனக்கேட்டேன், அவர்களிடமிருந்து எந்த பதிலும் இல்லை. நாம் அரசியலின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். 1965களில் தென்னாப்பிரிக்க நிறவெறி அரசை பன்னாட்டு சமூகம் ஆதரித்தது, அந்த நிலை 1985களில் முற்றிலுமாக அரசுக்கு எதிராக மாறியது. 2009 மே மாதத்தில் இலங்கை அரசை பாராட்டி எந்த நாடுகள் தீர்மானம் கொண்டுவந்தனவோ, அதே நாடுகள் இன்று இலங்கையை எதிர்த்து வாக்களித்துள்ளன. இது தான் அரசியல்.

தனிப்பட்ட எனதொருவனின் உழைப்பல்ல இந்நூல், இந்நூலில் எனது மாணவர்கள், பல இயக்கங்கள், செயற்பாட்டாளர்களது உழைப்புள்ளது. எல்லோருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த "போர்க்குற்றம், இனப்படுகொலைக்கு எதிரான மன்றத்திற்கும்" என் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார் அவர்.

இறுதியாக கேள்வி பதில் நிகழ்வுடன் நூலறிமுகக் கூட்டம் முடிந்தது. முழுநிகழ்வையும் தோழர்.கதிரவன் ஒருங்கிணைத்தார்.

"யானையை மறைக்கும் இலங்கை"(Sri Lanka: Hiding the Elephant) நூலை பெங்களூரில் வேண்டுவோர் "போர்க்குற்றம் இனப்படுகொலைக்கு எதிரான மன்ற"த்தின் கர்நாடக ஒருங்கிணைப்பாளரான நற்றமிழனை (09886002570) தொடர்பு கொள்ளவும்.

Friday, May 9, 2014

ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டிற்குப் புகலிடம் தேடி வந்தாலும் முள்வேலி சிறைக்கூடம் தானா?



இலங்கை பௌத்த சிங்களப் பேரினவாத அரசால் ஈழத்தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு எதிராக உலகம் முழுவதும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளாலும், புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் போராட்டங்களாலும் எதிர்ப்புகள் பெருகிவருகிறது. ஐநா மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு எதிராகப் பன்னாட்டு புலனாய்வை வலியுறுத்தும் தீர்மானம் வெற்றி பெற்றுள்ளதைத் தொடர்ந்து ஐநா மனித உரிமை ஆணையம் புலனாய்வை விரைவில் தொடங்கயிருக்கிறது. இந்த நிலையில் இலங்கை அரசு சர்வதேச சமூகத்திடம் தனக்கு ஏற்பட்ட பின்னடைவை சரிகட்ட, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் ஈழத்தில் செயல்படத் தொடங்கிவிட்டதாகச் சொல்லி இனப்படுகொலைப்போரை ”பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்ற தனது சித்தரிப்பை மீண்டும் கட்டமைக்க முயல்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் அதன் ஆதரவு அமைப்புகள் புலத்தில் செயல்படுவதாகச் சொல்லி ஈழத்தமிழர்களுக்காய் குரல் கொடுக்கும் 16 தமிழ் அமைப்புகளையும், 424 பேரையும் தடை செய்துள்ளது. அதன் நட்பு நாடுகளையும் தடை செய்யக் கோரியுள்ளது. (ஏற்கனவே ஐநா மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு எதிராகப் பன்னாட்டுப் புலனாய்வைக் கோரும் தீர்மானத்தைப் புறக்கணித்த இந்திய அரசு, சில நாட்களுக்கு முன்பு இலங்கைப் பரிந்துரைத்த 16 தமிழ் அமைப்புகளையும், 424 பேரையும் எந்த ஆதார‌முமின்றித் தடை செய்துள்ளது.)

2008-2009 போருக்குப் பின்னால் தமிழீழத்தின் வடக்குப்பகுதி முழுவதும் இலங்கை ராணுவத்தின் பிடிக்குள் வந்தது, போரில் பாதிக்கப்பட்டு முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்ட தமிழர்கள் சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களுக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகத் தத்தம் ஊருக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். தமிழீழத் தாயகப் பகுதியின் பெரும் விவசாய நிலங்கள், மீன்பிடிப் பகுதிகள், நிலப்பரப்புகள் இன்றளவும் ராணுவ நிலைகளுக்கும், சிங்களமயமாக்கத்திற்கும் பயன்படுத்தப்பட்டுவருகிறது. இந்த நிலையில் இனப்படுகொலையின் கூட்டு சூத்திரதாரி இந்தியா இனப்படுகொலைக் குற்றத்தில் இருந்து இலங்கையைக் காக்கவும், ஈழத் தமிழர்களின் ஈடுசெய் நீதியான தமிழீழ விடுதலைத் தீர்வைத் தடுக்கவும் 13வது சட்டதிருத்தத்தைத் தீர்வாக ஈழத்தமிழர்கள் மீது திணிக்க வலியுறுத்தவே இலங்கை 2012ல் போலிஸ் உரிமையும், நில(காணி) உரிமையும் இல்லாத‌ வடக்கு மாகாண சபைக்குத் தேர்தலை நடத்தியது. போலிஸ் உரிமையும், நில(காணி) உரிமையும் இல்லாவிட்டாலும், ராணுவ கட்டுப்பாட்டில் இருந்து சிறிது விடுபட்டு சிவில் வாழ்க்கைக்குத் திரும்ப ஈழத்தமிழர்கள் தேர்தலை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்த முனைந்தனர். சிங்கள அரசிற்கு எதிராகத் தமிழ்த்தேசிய கூட்டணி பெருவாரியாக வெற்றிபெற்று வடக்கு மாகாண சபையை அமைத்தது, ஆனால் தமிழ் மக்களின் வாழ்வில் தான் எந்த மாற்றமும் வரவில்லை, ராணுவ கட்டுப்பாடு கொஞ்சமும் குறையவில்லை, சிங்கள குடியேற்றம் நிறுத்தப்படவில்லை.

போருக்குப் பின்னால் ஐந்தாண்டுகள் ஆகியும் இலங்கைத் தீவில் வாழ்வதே கடினம் என்ற சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள் கிடைத்த பணத்தைத் திரட்டி புலம்பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள்... பொதுவாகப் பணம் படைத்தவர்கள் கடவுச்சீட்டு(பாஸ்போர்ட்), நுழைவுச் சீட்டு(விசா) வாங்கி ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பா நாடுகளுக்குப் புலம்பெயரும் போது, அதற்கு வழி இல்லாத அடித்தட்டு மக்கள் தங்கள் மொத்த உடமையையும் விற்று உயிரை மட்டும் பிடித்துக்கொண்டு படகில் ஆஸ்திரேலியா, இந்தியா எனத் தஞ்சம் தேடி ஓடிவருகிறார்கள், இந்தக் கொடும் பயணத்தில் கரைசேரும் முன்னே இறப்பவர்கள் ஏராளம் பேர். ஒரு நாட்டில் வாழும்படியான சூழல் இல்லாதபோது வேறு நாட்டிற்குத் தஞ்சம் தேடி வருபவர்களை அகதிகள் என அங்கீகரித்து அனைத்து உரிமைகளும், சலுகைகளும் வழங்க வேண்டும் என சர்வதேசச் சட்டம் சொல்கிறது. அகதிகளுக்குப் புகலிடமும் அடைக்கலும் கொடுப்பது அடிப்படை அறமும் மாந்தநேயமும் கூட.

ஏழரை கோடி தமிழர்களின் தாயகமான தமிழ்நாட்டைக் கொண்டுள்ள அண்டை நாடான இந்தியா ஈழத்தில் இருந்து தஞ்சம் புகும் ஈழத்தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டியது மட்டுமல்ல, இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரனை நடத்த, ஈடுசெய் நீதியாகத் தமிழீழம் அமைய உதவ வேண்டியதும் அதன் கடமையாகும். அதுதான் தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கையாகவும் உள்ளது. ஆனால் அகதிகளுக்கான சர்வதேசச் சட்டத்தை இன்னமும் ஏற்காத இந்திய அரசோ, அகதிகளாக வரும் ஈழத்தமிழர்களை மூன்றாம் தர மக்களாக நடத்தி வருகிறது.


போருக்குப் பின்னால் புகலிடம் தேடி இந்தியா வரும் ஈழத்தமிழர்களைப் புலிகளின் ஆதரவாளர்கள், இயக்கத்தில் இருந்தவர்கள் என்று சொல்லி அகதிகளாகக் கூட அங்கீகரிக்காமல் செங்கல்பட்டு, பூந்தமல்லி எனச் சிறப்பு முகாம்களான முள்வேலிச் சிறைக்கூடங்களில் அடைத்து வைத்து சித்திரவதை செய்துவருகிறது. தமிழக அரசும் தன்னுடைய சிறப்புரிமையைப் பயன்படுத்தி விடுவிக்காமல் அவர்களைத் துன்புறுத்துவதில் இந்திய அரசின் கைத்தடியாகச் செயல்பட்டு வருகிறது. ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இந்திய அரசிற்கு எதிராகத் தமிழக மக்களின் கோரிக்கை வலுப்பெறும்போதெல்லாம் தமிழகச் சட்டசபையில் தீர்மானங்களை நிறைவேற்றும் ஜெயலலிதா அரசு, மறுபக்கத்தில் ஈழத்தில் இருந்து புகலிடம் தேடி வரும் ஈழத் தமிழர்களை அகதிகளாகக் கூட அங்கீகரிக்காமல் முள்வேலி சிறைக்கைதிகளாகத் துன்புறுத்தப்படுவதற்குத் துணைபோகிறது. ”பாம்பும் சாகக்கூடாது, கம்பும் உடையக் கூடாது” என்ற பழமொழி போலத் தமிழக அரசின் இந்த நிலைப்பாடு தமிழக மக்களின் கோரிக்கைக்கு எதிராகச் செய்யும் துரோகமாகும்.

ஐநா தீர்மானத்தை ஒட்டி கடந்த மார்ச், ஏப்ரலில் இருந்து ஈழத்தமிழர்கள் மீதான இலங்கை ராணுவத்தின் அடக்குமுறை பெருகிவருகிறது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை என்ற பெயரில் விடுதலைப்புலிகள் அமைப்பினர் என்று சொல்லி கடந்த ஏப்ரலில் 3 பேரை ’என்கவுண்டர்’ கொலை செய்த இலங்கை ராணுவம், தற்போது ஈழப்பகுதிகளில் குறிப்பாக வடக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளைத் தேடுவதாகச் சொல்லி இளைஞர்கள், இளம்பெண்கள், சிறுவர்கள் பலரைத் தேடிப் பிடித்துக் கொலை செய்துவருகிறது. பலபேரின் நிலை என்னவென்றே தெரியவில்லை. இதனால் ஆயிரக்கனக்கான ஈழத்தமிழர்கள் உயிர் பிழைக்க அடைக்கலம் கேட்டு இந்தியாவிற்கும் பிற நாடுகளுக்கும் தப்பி ஓடிவருகிறார்கள்.


அப்படித் தப்பியோடி ஓரிரு நாட்களுக்கு முன்பு மே 5ம் நாள் தமிழ்நாட்டிற்கு வந்த 5 குழந்தைகள் உட்பட 10 பேரை அகதிகளாக ஏற்றுக்கொள்ளாமல் இந்திய அரசின் அழுத்தத்தால் புழல் சிறையில் அடைத்துள்ளது தமிழக அரசு. மே4 ஞாயிறு பின்னிரவில் மன்னாரிலிருந்து புறப்பட்டு வந்த யாழ்ப்பானத்தைச் சார்ந்த கணினிப் பொறியாளர் தயாபரராஜ்(வயது 34), மனைவி உதயகலா (வயது 32), மகன் டியோரோன் (வயது 9), மகள்கள் டிலானி ((வயது 6), டில்சியா (வயது 2), மற்றும் குடும்பத்தை விட்டுவிட்டு தனியே வந்த முல்லைதீவைச் சார்ந்த ஓட்டுனர் தவேந்திரன் (வயது 35) ஒரு படகிலும், முல்லைதீவைச் சார்ந்த கணேஷ் சுதாகர் (வயது 33), மனைவி ராமக்கா (வயது 30), மகள் நிலக்சனா (வயது 12), மகன் விதுரன் (வயது 5) ஆகியோர் மற்றொரு படகிலும் ஏறி தனுஷ்கோடி வந்திறங்கினர். முட்டளவு கடல் நீரில் மே5 திங்கள்கிழமை விடியற்காலை 3 மணிக்கு விட்டுவிட்டுப் படகுகள் மன்னாருக்கு திரும்பிவிட்ட நிலையில், 3 மணி நேரம் கடல் நீரில் நடந்தே இரண்டு குடும்பமும் தனுஷ்கோடி அருகேயுள்ள அரிச்சல்முனை கடற்கரைக்கு வந்துள்ளனர்.

தனுஷ்கோடி காவல் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, மத்திய உளவுத்துறை ’ரா’ அதிகாரிகளால் விசாரிக்கப்பட்ட 5 குழந்தைகள் உட்பட 10 பேரும் அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்படாமல் உரிய ஆவனங்கள் இல்லை என்று சொல்லி வெளிநாட்டினர் சட்டம் பிரிவு 14, கடவுச் சீட்டு விதிகள் 1950 பிரிவுகள் 3(அ), 6(அ) ஆகிய சட்டங்களின் படி குற்றம்சாட்டப்பட்டு நீதிமன்றம் மூலம் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை ராணுவ அடக்குமுறையில் இருந்து உயிர்பிழைக்கப் புகலிடம் தேடி வருபவர்களை மேலும் அச்சமூட்டும் வகையில் இந்தியாவிலும் அடக்குமுறைக்குள்ளாக்குவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. எந்த நேரமும் இலங்கை ராணுவத்தால் உயிருக்கு ஆபத்து என்கிற நிலையில் இன்னமும் சில ஆயிரம் ஈழத்தமிழர்கள் தஞ்சம் தேடி வரத்தயாராக இருக்கிறார்கள் என்று வந்தவர்கள் சொல்லியுள்ளார்கள். ஆனால் இந்தியாவோ இலங்கை அரசின் வேண்டுகளின் படி ஒரே வாரத்தில் அடுத்தடுத்து ஈழத்தமிழர்களுக்காகப் புலத்தில் இருந்து குரல் கொடுக்கும் 16 தமிழ் அமைப்புகளைத் தடை செய்திருப்பதும், தஞ்சம் தேடி வந்த குழந்தைகள் உட்பட 10 பேரை சிறையில் அடைத்திருப்பதும் ஈழத்தில் இலங்கை சிங்கள அரசின் ஒடுக்குமுறையை ஏற்றுக்கொண்டு வாழ்வதைத் தவிற வேறு வழியில்லை என்ற செய்தியை ஈழத்தமிழர்களுக்குச் சொல்லும்படியாகவே உள்ளது. ஈழத்திலிருந்து வெளி உலகத்துக்கு எந்தத் தொடர்பும் இருக்கக் கூடாது என்ற இலங்கை அரசின் சதிக்கு இந்திய அரசும் தொடர்ந்து துணை போகிறது.

ஏற்கனவே விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் என்று சொல்லி நீண்ட நாட்களாகச் செங்கல்பட்டு, பூந்தமல்லி ’முள்வேலி’ சிறப்பு முகாம்களில் உள்ள ஈழத் தமிழர்களையும் விடுதலை செய்து அகதிகள் முகாம்களுக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துள்ளது. அதோடு இந்த 10 பேரையும் உடனடியாகப் புழல் சிறையில் விடுவித்து அகதிகளாக அங்கீகரித்து அகதிகள் முகாமுக்கு அனுப்ப வேண்டும். அகதிகள் முகாம்களில் உள்ளவர்களுக்கு உரிய அடிப்படை உரிமைகளையும், குழந்தைகளுக்குத் தரமான கல்வி, மருத்துவம் கிடைக்க உத்திரவாதமும் கொடுக்க வேண்டும். ஈழத்தமிழர்களுக்காய் புலத்தில் இருந்து குரல் கொடுக்கும் 16 தமிழ் அமைப்புகள் மற்றும் 424 பேரின் மீது இந்திய அரசு பிறப்பித்த தடையை உடனே நீக்க வேண்டும் ஆகியவை நமது கோரிக்கையாகும்.

இனக்கொலை இலங்கைக்கு எதிராக உலகம் முழுவதும் எழுந்துள்ள அழுத்தங்களைத் திசைதிருப்பவும், ஐநா மனித உரிமை மன்றத்தின் சர்வதேச விசாரனையைச் சீர்குலைக்கவும், ஈழத்தமிழர்களைத் தொடர்ந்து ராணுவ அடக்குமுறைக்குள் வைத்துள்ள இலங்கை அரசை எச்சரித்துக் கண்டிக்கவும், கடந்த மே5 புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 10 ஈழத்தமிழர்கள் உட்படப் புகலிடம் தேடிவந்த அனைத்து ஏதிலிகளையும் அகதிகளாக அங்கீகரித்து அடைக்கலமும் வாழ்உரிமையும் வழங்கக்கோரியும், ஈழத்தமிழர்களின் குரலாய் புலத்தில் இருந்து ஒலிக்கும் 16 தமிழ் அமைப்புகள் மற்றும் 424 பேரின் தடையை விலக்கக்கோரியும் இந்திய, தமிழக அரசுகளைத் தமிழக மக்களின் சார்பில் ஒரே குரலாய் வலியுறுத்துவோம். தமிழீழ விடுதலையைத் தொடர்ந்து அடக்குமுறை மூலம் ஒடுக்க நினைக்கும் இலங்கை-இந்திய கூட்டு சதியை ஒன்றுபட்டு முறியடிப்போம்.


ஸ்நாபக் வினோத்.
சேவ் தமிழ்ஸ் இயக்கம்.


தரவுகள்:

http://www.dailymirror.lk/news/45244-sl-bans-ltte-fronts.html

http://www.thehindu.com/todays-paper/tp-national/10-lankans-held-in-tn/article5980690.ece