பத்திரிகைச் செய்தி
செப்டம்பர் 7, 2012
தமிழருக்காய் உழைக்கும் கட்சிகள், இயக்கங்கள்
தயவு செய்து உடனே வருக! ஒன்றாய்க் கூடுக!! தமிழரைக் காத்திடுக!!!
உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்த எங்கள் மக்கள் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக ஓராண்டுக்கும் மேலாக தொடர்ந்து அறவழியில், மென்முறையில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தின் முக்கிய கட்சிகள் எங்களுக்கு எதிராக நின்றாலும், பல அரசியல் கட்சிகள், மக்கள் இயக்கங்கள் எங்களுக்கு ஆதரவு தெரிவித்து, தோள் கொடுத்து நிற்கின்றனர். எங்களைப் பொறுத்தவரை, இன்றைய நிலையில் தமிழக அரசியல் களம் “ஆபத்தான ஆறு, ஆதரவான நூறு” என்று பிளவுபட்டுக் கிடக்கிறது.
இந்திய தேசிய காங்கிரசும், பாரதீய ஜனதா கட்சியும் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்சு போன்ற அன்னிய நாடுகளின் பொருளாதாரங்களைத் தூக்கி நிறுத்தவும், அவர்களின் பன்னாட்டு நிறுவனங்ளுக்கு லாபம் உருவாக்கிக் கொடுக்கவும் துடியாய் துடிக்கின்றனர். சில்லறை வணிகத்தில் கூட அன்னிய முதலீட்டைக் கொண்டு வந்து, இந்திய மக்களை தெருவுக்கு இழுத்து வரத் திட்டமிடுகின்றனர். நாளொரு ஊழலும், பொழுதொரு கொள்ளையுமாய் மத்திய அரசு மக்களை வதைத்து வருகிறது.
சி.பி.ஐ. மற்றும் சி.பி.எம். எனும் இரு முக்கிய கம்யூனிஸ்ட் கட்சிகளும் எங்களை உழைக்கும் மக்களாகவோ, உதவப்பட வேண்டியவர்களாகவோ கருதவில்லை. ஜைத்தாப்பூர் அணுமின் நிலையத்தை எதிர்க்கும் இவர்கள் கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஆதரிக்கிறார்கள். பழைய கால ரஷ்ய காதல் இன்னும் நீறு பூத்த நெருப்பாகவே அவர்கள் நெஞ்சில் இருக்கிறது. இந்திய-அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டுக்குப் பிறகுதான் இவர்கள் அணு மின்சாரம் பற்றியேப் பேசத்துவங்கி இருக்கிறார்கள். இந்தப் பிரச்சினையின் முழு பரிணாமத்தையும் புரிந்து, இவர்கள் தங்கள் நிலையை மாற்றுவதற்கு இன்னும் ஐம்பது ஆண்டுகள் கூட ஆகலாம்.
தி.மு.க. திரு. மு. க. அவர்களின் குடும்பக் கட்சியாக மாறிவிட்ட நிலையில், அவர்களிடம் இருந்து தமிழ் மக்கள் எதையும் எதிர்பார்க்க முடியாது, கூடாது. வீண் பேச்சுக்களால், வெறும் வார்த்தை ஜாலங்களால் தமிழ் மக்களை தொடர்ந்து ஏமாற்றலாம் என்று நம்பிக்கொண்டு உண்ணாவிரதம், செம்மொழி மாநாடு, டெசோ மாநாடு என்று நாடகம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆளும் அ.தி.மு.க.வோ தமிழக மக்களுக்காகக் குரல் கொடுப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திக்கொண்டே, தன் சுயநலத்திற்காக தமிழ் மக்களை உபயோகிக்க முனைகிறது. இந்திய அணுமின் நிலையங்களில் உற்பத்தி விகிதம் வெறும் 40 சதவிகிதமாக இருக்கும் நிலையில்,கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2,000 மெகாவாட் மின்சாரம் ஒருபோதும் வரப்போவதில்லை என்பதை நாம் அறிவோம். ஆனாலும் தமிழக முதல்வர் 2,000 மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்துக்குக் கேட்டு பிரதமருக்கு திரும்பத் திரும்ப கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார். இலங்கை இராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி தரக் கூடாது, அந்நாட்டு விளையாட்டு வீரர்கள் இங்கே வந்து விளையாடக் கூடாது என்றெல்லாம் முடிவுகள் எடுக்கும் தமிழக அரசு, இங்குள்ளத் தமிழர் நலனையும், நமது இயற்கை வளங்களையும், எதிர்காலத்தையும் பேணிக் காப்பது பற்றி ஏனோ மவுனம் சாதிக்கிறது.
தமிழினத்தின் இயற்கை வளங்கள், மலைகள், காடுகள், ஆறுகள், கடல் வளம் என அனைத்தும் தனியாரால், அரசியல்வாதிகளால், அதிகாரிகளால் கொள்ளையடிக்கப்படுகின்றன. கூடங்குளம், கல்பாக்கம் அணுமின் நிலையங்களிலிருந்து வெளிவரும் கழிவுகளால், வெப்ப நீரால் மீன்வளம் அழிந்து, மக்களின் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து கேள்விக்குறியாகி, பெருத்த கதிர்வீச்சு ஆபத்தால் எதிர்கால சந்ததிகளின் நல்வாழ்வு அழிந்துவிடும் நிலை விரைவில் ஏற்படும். அதே போல, தமிழக விளைநிலங்கள் வீட்டு நிலங்களாக்கப்பட்டு நில வணிகத் தரகர்களாலும், அரசுகளாலும் விவசாயம் அழிக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் நிலத்தடி நீர் மாசுபட்டிருப்பதாக ஓர் அண்மை ஆய்வு தெரிவிக்கிறது. தமிழினம் தனது இயற்கை வளங்கள் கொள்ளை போகின்றனவே, கொல்லப்படுகின்றனவே, எதிர்காலம் இருண்டு கிடக்கிறதே என்று கையைப் பிசைந்து கொண்டு நிற்கிறது.
இந்த இழிநிலைக்கு காரணமான “ஆபத்தான ஆறு” கட்சிகளை தமிழ் மக்கள் இனம்கண்டு கொண்டனர். ஆனாலும் இந்த “ஆபத்தான ஆறு” பேரும் தமிழ் மக்களை ஆட்டுவிப்பதற்கு காரணம் நமக்கு “ஆதரவான நூறு” பேரும் பிரிந்து கிடப்பதுதான்.
இந்த நிலையில் சாதாரண தமிழ் மக்களாகிய நாங்கள் “ஆதரவான நூறு” கட்சிகளின், இயக்கங்களின் தலைவர்களிடம் ஓர் அன்பான வேண்டுகோளை வைக்க விரும்புகிறோம். தங்கள் கருத்து வேறுபாடுகளை, மனமாச்சரியங்களை சற்றே மாற்றி வைத்து விட்டு, தமிழ் மக்களுக்காக, நமது இயற்கை வளங்களைக் காப்பாற்றிட, நமது எதிர்கால தலைமுறைகளுக்கு ஒரு நல்வாழ்வை அமைத்துக் கொடுக்க அனைவரும் முன்வர வேண்டும்.
எங்கள் உணர்வுகளைப் புறந்தள்ளி கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எரிபொருளை நிரப்பக் கூடாது, இந்தத் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கூடங்குளம் பகுதி மக்களாகிய நாங்கள் செப்டம்பர் 9–ம் நாள், ஞாயிற்றுக் கிழமை எங்கள் ஊர்களை விட்டு வெளியேறி சத்தியாகிரகப் போராட்டம் நடத்த முடிவெடுத்திருக்கிறோம். எங்களைப் போன்றே தமிழினமும் இன்று எடுப்பார் கைப்பிள்ளையாக, ஏதிலியாக, அனாதையாக, ஆதரவற்று நடுத் தெருவில் நிற்கிறது.
வரலாறு வழங்குகிற இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி “ஆதரவான நூறு” கட்சிகளும், இயக்கங்களும் ஒன்று சேர்ந்து தமிழினத்துக்காக எழுந்து நின்று போராட அன்போடுக் கேட்டுக் கொள்கிறோம். நாம் விரைவில் எதிர்கொள்ளவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலிலும் இப்படி ஒன்றாக நின்று, தொகுதி ஒப்பந்தம் செய்து கொண்டு, போட்டியிட்டால் “ஆபத்தான ஆறு” பேரை ஓரங்கட்டிவிட்டு, ஒரு புதிய துவக்கத்தை நம் இனத்திற்கு நாம் வழங்க முடியும்.
இந்த நிலையிலும் உங்கள் பிடிவாதத்தால் கைகோர்க்காமல் போனால், “ஆபத்தான ஆறு” பேரும் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று தமிழ் மக்களுக்கு எதிராக இயங்குவார்கள், நம் இனத்தை தொடர்ந்து அழிப்பார்கள். அந்த தீராப் பழியை நாம் அனைவரும் சேர்ந்து சுமக்க வேண்டி வரும். எதிர்கால தமிழ் சந்ததியினரின் சாபத்துக்கு நாம் ஆளாக நேரிடும்.
எனவே “ஆதரவான நூறு” பேரும் உடனடியாக எங்களைக் காக்க ஓடோடி இடிந்தகரை வரவேண்டும், அனைவரும் கைகோர்த்து இயங்க வேண்டும், இங்கிருந்து ஒரு புதிய துவக்கத்தை தமிழகத்துக்குத் தர வேண்டும், தமிழினத்தை பேரழிவின் பிடியிலிருந்து காக்க வேண்டும் என வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம்.
போராட்டக்குழு
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்