சுப. உதயகுமார்
நமது தமிழ் சமுதாயம் ஒரு திருப்பு முனையில் நின்று கொண்டிருக்கிறது. அதன் குறியீடாக பல சமூக, அரசியல், கலாச்சார பிரச்சினைகளைப் பற்றி நாம் இன்று விவாதிக்க துவங்கியிருக்கிறோம். தமிழனை சிந்திக்கவிடாமல், கேள்வி கேட்கவிடாமல், அடுக்குமொழி பேசி, அனாவசியமாக கடிதங்கள் எழுதி, குழாயடிச் சண்டை, குடும்பப்பகை போன்ற ஓர் அசிங்கமான அரசியல் கலாச்சாரத்துக்குள் நம்மைத் தள்ளி திமுகவும், அதிமுகவும் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். வெற்று வார்த்தைகளையும், வீர வசனங்களையும் கேட்டு வீணாகிப்போன நமது தமிழினம், நமது எதிர்காலத்தைப் பற்றி கரிசனத்துடனும் கவனத்துடனும் அலசி ஆராயத் துவங்கிவிட்டது.
திராவிடம், பெரியாரியம், திமுக-அதிமுக கட்சிகளின் இன விரோதப் போக்கு, தமிழ் தேசியம், இந்த சித்தாந்தம் பேசுகிற அமைப்புகளின் இடையேயான சிறு சிறு வேறுபாடுகள், ஈழப் பிரச்சினையில் நமது நிலைப்பாடு பற்றியெல்லாம் ஒர் ஆரோக்கியமான அரசியல் விவாதம் நடக்கத் துவங்கியிருக்கிறது. இந்த விவாதம் தொடர்ந்து நடந்து, ஒலியை விட அதிக ஒளியை உருவாக்கும், உருவாக்கவேண்டும் என விரும்புவோம்.
அதோடு நமது தமிழ் சமுதாயத்தின் பொருளாதாரத்தைப் பற்றியும் நாம் விவாதிக்க முன்வர வேண்டும். “வரவு எட்டணா, செலவு பத்தணா” என்ற வகையில்தான் நமது மாநில நிதி நிர்வாகம் நீண்ட காலமாக நடந்து வருகிறது. சாராயம் விற்று, நம் தமிழ் சகோதரர்களை எல்லாம் குடிகாரர்களாக்கி, நமது குடும்பங்களை எல்லாம் குட்டிசுவராக்கித்தான் அரசை நடத்துகின்ற ஒரு இழிநிலை நிலவி வருகிறது. இலவசமாக பொருட்கள் கொடுத்து, குடும்பத் தலைவர்களைப் பொறுப்பற்றவர்களாக்கி, தமிழ் மக்களை பிச்சைக்காரர்களாக்கி ஒரு பெரும் அசிங்கம் நடந்து கொண்டிருக்கிறது. விவசாய அபிவிருத்தி, தொழில்வள உருவாக்கம், வேலை வாய்ப்பு, வருமான அதிகரிப்பு, பொருளாதார மேம்பாடு என சிந்திப்பதற்குப் பதிலாக, இனாம் கொடுப்பது, கை ஏந்தியே பிழைக்க வைப்பது, இடையில் கிடைப்பதை சுருட்டிக் கொள்வது என செயல்படுகிறார்கள் ஆட்சியாளர்கள்.
பெருந்தலைவர் காமராசர் ஆட்சி காலத்தில் ஏழ்மை தலைவிரித்து ஆடியபோது, பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார். நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகியும் மக்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்குப் பதிலாக, இலவச உணவோடு முட்டைப் போடுகிறோம், முளைப்பயிறு தருகிறோம் என்று இறுமாப்பு பேசுகிறது ஆட்சி பீடம். இந்த சத்துணவு வேலை கிடைத்தால் நமது பங்குக்கு நாமும் திருடலாம் என்று மக்கள் போட்டி போடுகிற நிலையைப் பார்க்கிறோம். ரூபாய் 5,500தான் மாதச் சம்பளம் என்றாலும், ஒரு சத்துணவு அமைப்பாளர் பதவிக்கு 632 பெண்கள் திருச்சியில் போட்டி போட்டதாக செய்திகள் சொல்லுகின்றன.
வெறுப்பு, கோபத்தின் மீது கட்டமைக்கப்பட்ட அரசியலை கேள்விக்குள்ளாக்குவதுபோல; இலவசம், லஞ்சம் மீது எழுப்பப்பட்ட பொருளாதாரத்தை எதிர்க்க முனைவதுபோல; பழம்பெருமை, வெளிவேடம் மீது நிறுவப்பட்ட கலாச்சாரத்தையும் நாம் மறுபரிசீலனை பண்ணியாகவேண்டும். திரைப்படங்களில் ஆபாசம், சின்னத்திரையில் சிறுமைத்தனம், பெண்களை போகப் பொருளாகப் பார்ப்பது பாவிப்பது, பாலியல் கல்வி எதிர்ப்பு, மறுமணம் மறுப்பு, முதியோர் புறக்கணிப்பு என கலாச்சார அழிவுக்குள் புதைந்து கொண்டிருக்கிறோம்.
முள்ளிவாய்க்காலில் ஓர் இனப்படுகொலைக்கு ஆளானாலும், நம் ஈழத்துச் சொந்தங்கள் நீதி கேட்டு நடுத்தெருவில் நின்றாலும், முல்லைப்பெரியாரிலும், கூடங்குளத்திலும் ஒரு புது வரலாற்றை நம் தமிழ் சொந்தங்கள் படைத்துக் கொண்டிருக்கிறார்கள். சமூகம், பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம் தாண்டி, நமது வாழ்வுரிமைகளை, வாழ்வாதாரங்களைப் பற்றி சிந்திக்கத் துவங்கிவிட்டோம் நாம்.
இந்த நேர்மறைப் போக்கை எப்படி நெறிப்படுத்துவது, எப்படி தக்கவைத்துக்கொள்வது, எங்ஙனம் விரிவு படுத்துவது என்பது பற்றி நாம் விவாதித்தாக வேண்டும். தமிழ் சமுதாயத்தின் பல தலைவர்கள் இடிந்தகரையில் யூலை முதல் நாள் கூடுவது இந்த முயற்சிக்கு ஒரு துவக்கமாக இருக்குமாயின் சிறப்பாக அமையும். இடிந்தகரை தமிழ் சமுதாயத்தின் விடிந்த கரையாகும். கடந்த இருபத்தைந்து ஆண்டு காலமாக நாங்கள் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கும், அணுசக்திக்கும் மற்றும்அணுவாயுதங்களுக்கும் எதிராகப் பேசியும், எழுதியும், போராடியும் வருகிறோம். கடந்த பதினோரு மாதங்களாக இடிந்தகரையிலேயே ஒரு முனைப்பான போராட்டத்தைத் துவங்கி துவளாது நடத்தி வருகிறோம்.
நம்மில் பலர் எங்கள் போராட்டம் பற்றிய அரசின் பொய்களை, போலிக் குற்றச்சாட்டுக்களை அப்படியே ஏற்றுக்கொண்டனர். அந்நிய நாடுகளிடம் நம்மை, நமது நாட்டை விற்று விட்டவர்கள் சொன்னதைக் கேட்டு, எங்களை கூலிக்கு மாரடிக்கும் கூட்டம் என்றே பலர் நினைத்தார்கள். பணத்துக்காகவும், பதவிக்காகவும், அதிகாரத்துக்காகவும் மட்டுமே பொதுவாழ்க்கைக்கு வரும் புல்லுருவிகள் போன்று நாங்கள் பார்க்கப்பட்டோம்.
அதற்கும் மேலாக செயற்கை மின்வெட்டு என்ற சக்திமிக்க ஆயுதத்தை பிரயோகித்து, இரவும் பகலும் தோன்றும் போதெல்லாம் மின்தடை எற்படுத்தின அரசுகள். தமிழ் மக்களை துன்பத்திற்குள்ளும், வேதனைக்குள்ளும் தள்ளி உங்களை எங்கள் மேல் கோபமடையச் செய்து, எங்கள் போராட்டம் நின்றால் மின்சாரம் தங்குதடையின்றி வரும் என்ற மாயையினை உருவாக்கி எங்களை தமிழின எதிரிகளாகச் சித்தரித்தனர். தமிழகத்தின் மின்பற்றாக்குறையைப் போக்க அடுத்தடுத்து ஆண்ட கருணாநிதியும், ஜெயலலிதாவும் என்ன செய்தார்கள், ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்பதற்கு பதிலாக பலர் எங்களை தொலைபேசியில் அழைத்து வாய்க்கு வந்தபடி திட்டினார்கள்.
எங்கள் போராட்டத்துக்கு ஆதரவாக இருந்த தமிழக முதல்வர், ஏதோ காரணத்தால் அல்லது நெருக்கடியால் தனது அரசின் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். அப்படி மாற்றிக் கொண்டபிறகு, மின்சார நிலைமை திடீரென மேம்பட்டதை நீங்கள் உணர்ந்திருக்கக் கூடும். எங்கே இருந்து, எப்படி இந்த மின்சாரம் உடனடியாக ஓடி வந்தது? நாங்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டால், கூடங்குளம் உடனே இயங்கும், திரும்பும் திசையெல்லாம் மின்சாரம் பெருக்கெடுத்து ஓடும் என்றார்கள். மூன்று மாதங்கள் ஆனபிறகும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எதுவும் நடக்கவில்லையே? ஏன்? என்ன ஆயிற்று? கடன்காரனுக்கு அவதி சொல்வது போல, பத்து நாளில் வரும், இரண்டு வாரத்தில் வரும் என்று உளறிக் கொண்டிருக்கிறார்களே, பொய் சொல்கிறார்களே? இப்படி செய்வதற்கு ஒரு மத்திய மந்திரி நியமிக்கப் பட்டிருக்கிறாரே?
1965-ம் ஆண்டு இந்தி மொழி நம் மீது திணிக்கப்பட்டபோது எப்படி வெகுண்டெழுந்து நமது மொழியுரிமையை, அடிப்படை தேசிய இன அடையாளத்தை தக்க வைத்துக் கொள்ளப் போராடி வென்றோமோ, அந்த மாதிரியான ஒரு நிலையில்தான் தமிழ் மக்கள் இன்று நிற்கிறோம். தற்போது மொழியைவிட முக்கியமான நமது இயற்கை வாழ்வாதாரங்களும், நமது எதிர்கால சந்ததியின் நல்வாழ்வும் கேள்விக்குறியாகி இருக்கின்றன. இதனை நாம் உணர்ந்தாகவேண்டும்.
அண்டை மாநிலமான கேரளத்தில் அம்மக்கள் தங்கள் இயற்கை வளங்களை எவ்வளவு கவனமாகப் போற்றி பாதுகாக்கிறார்கள் பாருங்கள். அங்கே ஓர் அணுமின் நிலையம் நிறுவ முயற்சித்தபோது, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள் உட்பட அனைத்துக் கட்சிகளும் ஒன்றாக நின்று எதிர்த்தார்கள். இன்றும் எதிர்க்கிறார்கள். கூடன்குளத்திலிருந்து 500 மெகவாட் மின்சாரம் வேண்டும் என உரிமையோடு கேட்கும் கேரள முதல்வர் எங்கள் மாநிலத்தில் ஓர் அணுமின் நிலையத்தைக் கட்டுங்கள் என மத்திய அரசைக் கேட்பாரா? கேட்க முடியுமா? கேட்டால் மலையாள மக்கள் விடுவார்களா? அந்த மாநிலத்தில் ஓர் அனல் மின் நிலையம் கூட நிறுவ முடியாது. கூடங்குளம் இயங்கினால் 150 கிமீ தூரத்திலுள்ள தமக்கு கதிர்வீச்சுக் கேடுகள் வரும் என அஞ்சி பத்து இடங்களில் கதிர்வீச்சின் அளவை அளக்க, அவதானிக்க ஆய்வு மையங்கள் அமைத்து விட்டார்கள் இலங்கையிலே! ஆனால் நமது தமிழகத்தில்?
தமிழனின் உயிருக்குகூட விலை கிடையாது என்பதுதான் உண்மை. நக்கநேரி நாடகம் பற்றிக் கேள்விபட்டிருப்பீர்கள். கூடங்குளம் அணுஉலை இயங்கத்துவங்கும் முன்னர் பேரிடர் பயிற்சி நடத்தப்படவேண்டும் என்பது விதி. இந்தியாவிலேயே மிகப்பெரிய அணுஉலை, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அணுஉலை, நாட்டின் முதல் மென்நீர் உலை, அதிகமான மக்கள் அடர்த்தியாக வாழ்கிற ஒரு தீபகற்ப மூலையில் அமைக்கப்பட்டிருக்கிற பூதாகரமானத் திட்டம் கூடங்குளம். குறைந்தபட்சம் 30 கிமீ தூரத்திலாவது மக்களுக்கு பேரிடர் பயிற்சி கொடுப்பது மிகமிக முக்கியமானது. ஆனால் 10,000 பேர் வாழும் இடிந்தகரை, 20,000 பேர் வாழும் கூடங்குளம் போன்ற கிராமங்கள் அருகே இருக்கும்போது, வெறும் 300 பேர் மட்டுமே வாழ்கின்ற நக்கநேரிக்குப் போய் தினசரி கூலி வேலைக்காக 200 பேர் ஊருக்கு வெளியே போன பிறகு, சுமார் 100 எழுத படிக்கத் தெரியாத பெண்களும் குழந்தைகளும் இருக்கும்போது நூற்றுக்கணக்கான காவல் துறையினரும், துணை ஆட்சியரும், வட்டாட்சியரும், அணுசக்தித் துறை அதிகாரிகளும் போய் பாவலாக் காட்டிவிட்டு, பேரிடர் பயிற்சி வெற்றிகரமாக நடைபெற்றுவிட்டது, இனி அடுத்தக் காட்சி 2014-ம் ஆண்டு என்று அறிவித்தனர்.
இப்படித்தான் பேரிடர் பயிற்சி நடத்துவதா? ஏதோ ஒரு குக்கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியில் தீயணைப்பு பயிற்சி நடத்திவிட்டு நாட்டிலுள்ள அனைத்து பள்ளிக் குழந்தைகளுக்கும் அந்த பயிற்சிக் கொடுத்துவிட்டதாக சொல்ல முடியுமா? எங்கோ ஒரு திரை அரங்கில் பேரிடர் பயிற்சி நடத்திவிட்டு, நாடு முழுவதும் உள்ள திரை அரங்குகள் பாதுகாப்பாக உள்ளன என்று சொல்ல முடியுமா? நமது உயிர்களை துச்சமென நடத்தும் அரசை, அரசு நிறுவனங்களை ஏன் தட்டிக்கேட்க தயங்குகிறோம்?
1984ம் ஆண்டு போபால் விடவாயு விபத்து நடந்தபோது ஓர் ஈரத்துணியை எடுத்து வாயையும் மூக்கையும் மூடிக்கொண்டு ஓடுவதற்கு பயிற்சி அளித்திருந்தால் இத்தனை பேர் உயிரிழந்திருக்கமாட்டார்கள், ஊனமடைந்திருக்கமாட்டார்கள். ஆனால் மத்திய மாநில அரசுகள் செய்யவில்லை. இருபத்து எட்டு ஆண்டுகள் ஆனபிறகும் அந்த விடவாயு ஆலையில் மண்டிக்கிடக்கும் ஆபத்தான கழிவுகளை இன்னும் ஏன் அப்புறப்படுத்தவில்லை என்று இந்திய உச்சநீதிமன்றம் அரசுகளை கடிந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு இன்னும் வழங்கப்படவில்லை. இப்போது இந்த விபத்துக்கும் அமெரிக்காவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது போல அந்த நாட்டிலே தீர்ப்பு சொல்லி இருக்கிறார்கள். இதைப் பற்றிக்கூட நீங்கள் சிந்தித்து பார்க்காதது ஏன்?
திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் சுமார் 58 பேர், பெரும்பாலும் குழந்தைகள், டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர். ஒரு மனிதனுக்கு வாழ்வில் நிகழும் மிகப்பெரிய இழப்பு, துயரம் எது? தனது குழந்தையை அநியாயமாகப் பறிகொடுத்து, குழிக்குள் போட்டு மூடுவதுதான். இத்தனைக் குழந்தைகள் இறந்ததற்கு யார் பொறுப்பு? மாவட்ட ஆட்சித்தலைவரும், வருவாய்த் துறை அதிகாரிகளும், சுகாதாரத்துரை அதிகாரிகளும் சரியாக பணியாற்றி ஏன் இந்த தொற்று நோயைத் தவிர்க்கவில்லை, தடுக்கவில்லை? இது ஒரு மனித குலத்துக்கு எதிரானக் குற்றமில்லையா? சம்பளமும் கிம்பளமும் வாங்கிக்கொண்டுதானே இருந்தார்கள் இந்த அதிகாரிகள்?
நாளை கூடங்குளத்தில் ஒரு விபத்து நடந்தால் என்ன ஆகும்? விபத்தே நடக்காது, இதுதான் உலகிலேயே மிகச் சிறந்த, மிக உன்னதமான அணுஉலை என்று ரசிய நிறுவனமும், அரசும் திருப்பித் திருப்பி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அது உண்மை என்றால், எவ்வளவு தொகை இழப்பீடு வேண்டுமென்றாலும் தருகிறோம், எத்தனை ஆண்டுகளுக்கு வேண்டுமானாலும் தருகிறோம் என்றல்லவா சொல்ல வேண்டும்? ஆனால் உண்மையில் நடப்பது என்ன? உங்கள் வீட்டுக்கு ஒரு சலவை இயந்திரம் வாங்குகிறீர்கள். ‘ஓஹோ ப்ரொடக்சன்ஸ்’ நிறுவனம் தயாரித்த அந்த இயந்திரத்தை ‘மன்னார் & கம்பனியில்’ வாங்குகிறீர்கள். ஒருநாள் சலவை செய்துகொண்டிருக்கும்போது, உங்கள் துணைவியாரின் கை இயந்திரத்தில் சிக்கி ஒரு விபத்து நடந்துவிடுகிறது. இந்திய-ரஷிய ஒப்பந்தத்தின்படி, சலவை இயந்திரத்தை உருவாக்கிய அல்லது விற்ற நிறுவனங்களுக்கு எந்தப் பொறுப்பும் கிடையாது. இயந்திரத்தை ஓட்டியவர்தான் இழப்பீடு தர வேண்டும். உங்கள் மனைவி உங்கள் குடும்ப நிதியிலிருந்து ஒரு தொகையை எடுத்து உங்களுக்கு தருவார். உங்கள் பணத்திலேயே உங்களுக்கு இழப்பீடு கிடைக்கும். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் விபத்து நடந்தால் ரஷ்ய நிறுவனமோ, ரஷ்ய அரசோ இழப்பீடு தரமாட்டார்கள். என்.பி.சி.ஐ.எல் எனும் நமது பொதுத்துறை நிறுவனம் நமது வரிப்பணத்தை எடுத்து நமக்கு இழப்பீடு தருவார்கள். வருமானம் எல்லாம் ரஷ்யாவுக்கு, இழப்பு எல்லாம் நமக்கு. இதைக்கூட கேள்வி கேட்காமல் இருக்கிறோமே, என்ன நியாயம்?
நமது கல்பாக்கத்தில் உலகில் வேறெங்கும் இல்லாத ஈனுலைகளை நிறுவி வருகிறார்களே, கவனித்தீர்களா? தமிழகத்தின் தென்கோடியாம் கூடங்குளத்திலிருந்து அபாயகரமான அணுக்கழிவுகளை வடகோடிக்கு எடுத்துச் சென்று அதை எரிபொருளாக உபயோகிப்பார்களாம். எப்படி எடுத்துச் செல்வார்கள்; நமது தமிழ் சமுதாயத்திற்கு என்னென்ன ஆபத்துகள் வரலாம் என்பது பற்றிக் கூட சிந்திக்காது இருப்பதை எப்படி நியாயப் படுத்துகிறீர்கள்?
இந்தியக் குடியரசு தலைவர் பிரதிபா பாடீல் கடந்த 28 மாதங்களில் 30 தூக்குத் தண்டனை கைதிகளுக்குக் கருணை அடிப்படையில் மன்னிப்பு வழங்கி அவர்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாக சுருக்கி இருக்கிறார். ஆனால் முருகன், சாந்தன், பேரறிவாளன் மட்டும் இன்னும் அது பற்றி சிந்திக்கக் கூட முடியாமல் இருக்கிறதே ஏன்?
இலங்கை கடற்பரப்பில் மீன் பிடிப்பதாக தமிழ் மீனவர்கள் கைது செய்யப்பட்டாலே 20 ஆண்டுகள் சிறையில் தள்ளப்படுவார்கள் என புதிய சட்டம் இயற்றிகொண்டிருக்கிறதே அந்த அரசு? நமக்காக இந்திய அரசு இன்னும் குரல் கொடுக்கவில்லையே ஏன்?
ஒரு முள்ளிவாய்க்கால் போதாதா, இன்னும் நூறு முள்ளிவாய்க்கால் வேண்டுமா எனக் கேட்டிருக்கும் சிங்கள அமைச்சர் ரணவக்க என்பவரை இதுவரை இந்திய அரசு கண்டிக்கவில்லையே ஏன்?
நான்கு மாவட்ட மக்களின் குடிநீர், விவசாயத்தின் ஆதாரமான அமராவதி நதியின் துணை ஆறுகளான சின்னாறு, மாயாறு, பாம்பாறுகளின் குறுக்கே தடுப்பணைக் கட்டும் கேரள அரசை மத்திய அரசு தட்டிக் கேட்கவில்லையே ஏன்?
அதுபோல சிறுவாணி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடி பகுதியில் 4.5 டிஎம்சி தண்ணீர் கொள்ளளவு கொண்ட அணையைக் கட்டுவதற்கு கேரள அரசு முனைகிறது. இதையாவது யாராவது கேட்கிறார்களா?
கேரள மாநிலம் கொச்சியிலிருந்து பெங்களூருக்குச் செல்லும் எரிவாயுக் குழாய் கேரளா-கர்நாடகா வழியாக நேரடியாகப் போவதற்கு பதில், வளைந்து தமிழகத்தின் ஏழு மாவட்டங்களின் விவசாய நிலங்கள் வழியாக ஏராளமான கட்டுப்பாடுகளையும் நிபந்தனைகளையும் விதித்துச் செல்கிறது. இதையும் யாரும் கண்டுகொள்ளவில்லை ஏன்?
ஒரு வருடத்துக்கு முன் ஆட்சிக்கு வந்தது முதல் தமிழக முதல்வர் தமிழகத்துக்கு தேவையான எத்தனையோ திட்டங்களை, நிதி உதவியை, கூடுதல் மின்சாரத்தை, ஆதரவைக் கேட்டபோதெல்லாம் திரும்பிப் பார்க்காத, ஏன் என்று கூட கேட்காத மன்மோகன் சிங் அரசு பாகிஸ்தானுக்கு 5,000 மெகாவாட் மின்சாரம் தருவதும், ஐரோப்பிய நாடுகளின் நிதி நிலையை சீரமைக்க 56,000 கோடி ரூபாய் உதவி செய்வதும் எப்படி நியாயமாகும்?
எதையுமேப் பார்க்காதே, எதையுமேக் கேட்காதே, எதையுமேப் பேசாதே என்று வாளாவிருப்பதுதான் தமிழனின் வாழ்விலக்கணமா என கேட்கத்தோன்றுகிறது. இல்லை என நாம் அனைவரும் ஏகோபித்த குரலில் உரக்கச் சொல்வதுதான் இன்றைய உடனடித் தேவை. தமிழகத்தின் இளம் சமூக, பொருளாதார, கலாச்சார, அரசியல் தலைவர்கள் தங்களுக்குள் இருக்கும் சிறு சிறு வேறுபாடுகளை புறந்தள்ளி, மனமாச்சார்யங்களை ஒதுக்கி வைத்து, ஒட்டு மொத்த தமிழ் சமுதாயத்துக்காக உடனடியாக ஒன்று படவேண்டும். பொது செயல்திட்டம் ஒன்றை உருவாக்கி அனைத்து தளங்களிலும் ஒரு புதிய தமிழ் சமுதாய மறுமலர்ச்சிக்காக உழைக்க முன்வர வேண்டும்.
(கட்டுரையாளர் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆவார்.)