ஊடக அறிக்கை:
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மீது திட்டமிட்ட தாக்குதல்.
யாழ் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் மாணவ மன்றத் தலைவர் திரு தவபாலன், 24 வயது, 16/10/2011 அன்று பிற்பகல் 2 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம மனிதர்கள் பலமான தாக்குதல் நடாத்தி இருக்கின்றார்கள். இலங்கை ராணுவமும் அதனுடன் இயங்கும் அதன் ஒட்டுண்ணிகளும் என சந்தேகிக்கப்படும் இவர்கள் திரு தவபாலனை பின் தொடர்ந்து சென்று கூர்மையான இரும்புக் கம்பிகளால் யாழ்ப்பாணம் கந்தர்மடம் அருகே இவ் கொடூரமான தாக்குதலை மேற்கொண்டிருக்கின்றார்கள்.
திரு தவபாலன் அவர்கள் கிரிஸ் மனித அச்சுறுத்தலுக்கு எதிராக மாணவர்களை திரட்டி ஜனநாயக எதிர்ப்பு போராட்டங்களை சமீபத்தில் நடத்தி வந்தவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. வன்னி போர் முடிவுக்குப் பின்னர் கல்விச்சமூக நபர்கள் இரும்பு கம்பிகளால் தாக்கப்படுவது இது மூன்றாவது முறையாகும். இச் சம்பவங்களை பார்க்கும்போது இவையாவுமே மக்களின் குரல்வளையையும் மாணவர்களின் எழுச்சியையும் நசுக்கும் வகையில் நடாத்தப்படும் திட்டமிட்ட நாசகாரச்சதி என்பது புலப்படுகிறது.
திரு தவபாலன் மீது நடத்தப்பட தாக்குதலானது ஒட்டுமொத்த தமிழ் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகவே பார்க்கப்படுகிறது. இது மிகவும் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது. மாணவர்களை தொடர்ந்து சீண்டி வருவதும் அவர்களின் குரல்வளையை திட்டமிட்டே நசுக்க நினைப்பதும் அன்று தொட்டு இன்று வரை இலங்கை அரசு கையாளும் ஒரு பிரபல யுத்தி. இலங்கை அரசின் சூழ்ச்சிகளை உலகிற்கு வெளிக்காட்டுவற்கும் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநியாயங்களை எடுத்துரைப்பதற்கும் தமிழ் மாணவர்கள் என்றுமே தயங்கியதில்லை என்பதற்கு கிரிஸ் மனித அச்சுறுத்தலுக்கு எதிராக நடந்த ஆர்பாட்டம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. நியாயத்திற்காக அற வழியில் போராட்டங்களை நடத்தும் தமிழ் மாணவர்களின் குரல் இவ்வாறு திட்டமிட்டு நசுக்கப்படுவது வன்மையாக கண்டிக்கப்படவேண்டியது.
முள்ளிவாய்க்கள் இனப்படுகொலையை பொறுக்க முடியாமலும் தமது சகோதர சகோதரிகளின் இழப்பை தாங்க முடியாமல் பல்கலைக்கழக சமூகம் மே 2009 தங்களது கல்வியை ஒரு வாரத்திற்கு நிறுத்தி இருந்தார்கள், அதே ஆண்டு நவம்பர் மாதம் நான்கு கலைப்பீட மாணவர்களை இலங்கை ராணுவ உளவுப் பிரிவினரால் கூட்டி செல்லப்பட்டு உயிர் அச்சுறுத்தல் விடப்பட்டது, பின்பு ஜனவரி 2010 மீண்டும் தமிழ் மாணவர்கள் உட்பட தமிழ் அமைச்சர்களுமாக 13 பேருக்கு இலங்கை அரச ராணுவத்தாலும் அதன் ஒட்டுண்ணிகளாலும் உயிர் அச்சுறுத்தல், மே 2011, 32 சிங்கள மாணவர்களை புதிதாக இணைத்து முள்ளிவாய்க்கள் நினைவு நாளை குழப்புமுகமாக புத்தரின் பிறந்த தினத்தை கொண்டாடியது, கோத்தபாயவின் நேரடி உத்தரவில் மாணவர்களை கண்காணிக்கும் பிரிவு, வன்னியில் இருந்து வந்த மாணவர்களுக்கு வழங்க நினைத்த உதவிகளை ஒட்டுண்ணிகள் மூலம் தடுத்தல், ரோபர்ட் ஒ பிளேக் கல்வி சமூகத்தை சந்திக்கும் பொது இடையூறு விளைவித்தல் என பல சொல்லென்னா துயரங்களை சந்தித்து வருகிறது எமது இளைய சமுதாயம்.
கல்விபீடமனது பெரும் கெடுபிடிகளுக்கு நடுவே வன்னிப் போரில் உயிரிழந்த மக்களுக்கு மே மாதம் 18ம் திகதி 2010ம் ஆண்டு நினைவஞ்சலியை நடத்தியிருந்தது, மாணவர் எழுச்சி நாள் அன்று பொன் சிவகுமாரன் அண்ணாவை நினைவில் நிறுத்தி அஞ்சலி செய்தார்கள். தொடர்ந்து இருந்துவரும் அழுத்தங்களுக்கு நடுவிலும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தமது திட்டவட்டமான கருத்துக்களை கூட்டங்களிலும், மாநாடுகளிலும் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் மூலமாகவும் வலியுறுத்தி வருகின்றார்கள்.
இலங்கை அரசும் அதன் ஊதுகுழல்களும் பல்கலைக்கழக நிர்வாக விவாகரங்கள் மீது கட்டுப்பாடு செலுத்துவது உடனடியாக நிறுத்தப் பட வேண்டும், எமது மாணவ சமுதாயம், பொதுமக்கள் மற்றும் இளையோர்கள் மீதும் நடக்கும் தாக்குதல்களை அனைத்துலகம் கண்டிப்பதோடு நில்லாமல் அவர்களுடைய பாதுக்காப்பையும் உறுதி செய்யவேண்டும். அதே நேரத்தில் புலத்தில் இருக்கும் இளையோர்கள் சார்பில் தமிழ் இளையோர் அமைப்பு ஆகிய நாம் இத் தாக்குதலை வன்மையாக கண்டிக்குறோம் அத்தோடு குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய தண்டனை கிடைக்க வேண்டும்.
எந்த தடைகளும் எம்மை பணிய வைப்பதில்லை, புதிய விதிகள் எழுதி எமது தாயக விடிவிற்காக தொடர்ந்து போராடுவோம்.
தமிழ் இளையோர் அமைப்பு
ஐக்கிய ராச்சியம்
--
Media Team
Tamil Youth Organisation - United Kingdom
Follow us: http://twitter.com/#!/TYOUK
Face Book: http://www.facebook.com/#!/pages/TYO-UK/137873056261812
Web: http://www.tyouk.org