Monday, May 10, 2010

இனவெறி இலங்கையில் இந்தியக் கலை விழா....இந்தி திரையுலகத்தை கண்டித்து ஆர்பாட்டம் - தொகுப்பு

இந்திய சர்வதேச திரைப்படக் கழகத்தின் விருது விழாவை இலங்கைத் தலைநகர் கொழும்புவில் நடத்த முற்பட்டிருப்பது, இலங்கைத் தமிழர்களின் இனப்படுகொலைக் குற்றத்தை மூடி மறைக்க இந்தியாவும் இலங்கையும் இணைந்து செய்யும் கூட்டுச் சதி என்று தமிழின அமைப்புகள் குற்றம் சாற்றின.




ஐஃபா என்றழைக்கப்படும் இந்தியா சர்வதேச திரைப்படக் கழகத்தின் விருது வழங்கு விழா வரும் ஜூன் 3 முதல் 5ஆம் தேதி வரை இலங்கைத் தலைநகர் கொழும்புவில் நடைபெறவுள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கான தூதராக அமிதாப் பச்சன் பணியாற்றிவருகிறார்.



இந்த விருது வழங்கு விழாவை கொழும்புவில் நடத்தக்கூடாது என்று தமிழர் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், தகவல் தொழில்நுட்ப நெறிஞர்களின் அமைப்பான சேவ் தமிழ் இயக்கம் இன்று சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

சென்னை பூங்கா நகரிலுள்ள நினைவரங்கம் (மெமோரியல் ஹால்) எதிரில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கொழும்புவில் விழா நடைபெறக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து முழங்கங்கள் எழுப்பப்பட்டன.
இனப் படுகொலைக் குற்றத்தை மூடி மறைக்க திரைப்பட விழாவா?

தமிழினப் படுகொலை நடத்தி அந்த இரத்தம் காயும் முன்பே திரைப்பட விழாவா? எனபது போன்ற எதிர்ப்பு முழக்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் எழுப்ப்பப்பட்டன.




ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசிய தமிழ்த் தேச விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலர் தோழர் தியாகு, இலங்கை அரசை போர்க் குற்றவாளி என்று டப்ளினி்ல் கூடிய மக்கள் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், அந்நாட்டுக்கு நற்பெயரை ஏற்படுத்தும் உள் திட்டத்துடனும், அங்கு நடந்த தமிழினப் படுகொலையை மறைக்கும் நோக்குடனும் இந்திய சிங்கள அரசுகள் இணைந்து அரங்கேற்றும் சதித்திட்டமே இந்த விழா என்று கூறினார்.

இரண்டாவது உலகப் போரில் ஹிரோசிமாவிலும், நாகசாகியிலும் அணு குண்டுகள் வீசப்பட்டதாலாயே எப்படி ஜப்பான் அழிந்துபோய்விடவில்லையோ அதேபோல், முள்ளிவாய்க்காலில் நடத்தப்பட்ட தமிழினப் படுகொலையால் ஈழத் தமிழினத்தின் விடுதலைப் போராட்டம் முடிந்துபோய் விடாது என்றும் தியாகு கூறினார்.




இன்றைய உலகில் சந்தையை குறிவைத்தே அரசியல் நடைபெறுகிறது, அதன் ஒரு வெளிப்பாடே இலங்கைச் சந்தையைக் கைப்பற்ற இந்தியப் பெரு நிறுவனங்கள் முயற்சிக்கின்றன, அந்த வணிக நோக்கத்தனை முன்னெடுக்கவே கொழும்புவில் இந்தத் திரைப்பட விழாவை நடத்துவது என்று கூறிய பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலர் விடுதலை இராசேந்திரன், இலங்கைச சந்தையை குறிவைத்தால் தமிழகச் சந்தை பறிபோகும் என்பதை நாம் இந்த வணிகக் கூட்டங்களுக்கு உணர்த்த வேண்டும் என்று கூறினார்.

கொழும்புத் திரைப்பட விழாவை இந்தியாவின் அனைத்துத் திரைப்படக் கலைஞர்களும் புறக்கணிக்க வேண்டும் என்று கூறிய திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் தாமரை, மொழி, இன அடையாளங்களைப் புறக்கணித்துவிட்டு கலை என்று ஏதுமில்லை என்று கூறினார்.




கொழும்புவில் நடைபெறும் இந்தத் திரைப்பட விழாவின் நோக்க்ம வணிகம் தானே தவிர, கலையல்ல என்று கூறிய சேவ் தமிழ் இயக்கத்தின் செந்தில், இந்திய தொழில் நிறுவனங்கள் தங்கள் சந்தையை விரிவாக்கம் செய்துகொள்ள இந்த விழாவை ஒரு முகமாக காட்டி அதன் பின்னணியில் தங்கள் வணிக நோக்கங்களை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளன என்று கூறினார்.

இதில் தமிழர்களாகிய நாம் இந்திய தொழில் வர்த்தக நிறுவனங்களின் கூட்டமைப்பான ஃபிக்கியை குறிவைக்க வேண்டும் என்றும், அதுவே தமிழினப் படுகொலையை மறைத்து விழா நடத்தி தனது வணிக நலன்களை முன்னெடுக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது என்றும் செந்தில் கூறினார்.




இலங்கையில் தமிழினப் படுகொலையை நடத்தி முடித்த அந்நாட்டு அரசியல் தலைமையுடன் கைகோர்த்து தங்கள் வணிக நலன்களை மேம்படுத்திக் கொள்ள முற்படும் இந்திய நிறுவனங்களின் பொருட்களை தமிழர்களாகிய நாம் புறகக்ணிக்க வேண்டும் என்றும் செந்தில் கூறினார்.




கொழும்புவில் திட்டமிட்டபடி இந்திய சர்வதேச திரைப்படக் கழகத்தின் விருது வழங்கு விழா நடந்தால், அதன்பிறகு தமிழ்நாட்டில் இந்தி திரைப்படங்கள் ஓட அனுமதிக்கக் கூடாது என்றும், ஃபிக்கி அமைப்பின் உறுப்பினர்களாக உள்ள நிறுவனங்களின் பொருட்களை தமிழர்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்க வேண்டும் என்றும் பத்திரிக்கையாளர் அய்யநாதன் கேட்டுக்கொண்டார்.




இந்நிகழ்ச்சியில் பேசிய திரைப்பட இயக்குனர் ராம், நமது நடவடிக்கைகள் அடுத்த கட்டத்திற்கு சென்றாக வேண்டும் என்றார். சந்தனக்காடு தொடரின் மூலம் அப்பாவி மக்கள் பட்ட இன்னல்களைப் பதிவு செய்த்தைப் போல, வன்னியில் நடந்த படுகொலையையும் ஒரு திரைப்படத்தின் மூலம் நிச்சயம் தான் பதிவு செய்யப்போவதாக இயக்குனர் கெளதமன் கூறினார்.



கொழும்பு திரைப்பட விழாவில் மணிரத்தினத்தின் ராவணா திரைப்படம் திரையிடப்பட்டால் அதனை தமிழ்நாட்டில் அனுமதிக்கக் கூடாது என்றும், அத்திரைப்பட விழாவிற்கு எதிராக என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து இயக்குனர்கள் கலந்தோலாசித்து முடிவெடுப்போம் என்றும் உதவி இயக்குனர் ராம் மோகன் வர்மா கூறினார்.

நன்றி - வெப்துனியா தமிழ்

No comments:

Post a Comment