எனது பள்ளி, கல்லூரி காலங்களில் (1990-2000) எங்களூரில்(கரூர்) நடக்கும் அரசியல் கூட்டங்கள் மாலை நேரங்களில் நடக்கும்... அக்கூட்டங்களில் யாராவது அரசியல் தலைவர்கள் அல்லது திரை நடிகர்கள் கலந்து கொண்டால் மாலை 4 மணிக்கு ஒலிப்பெருக்கியில் அறிவிக்கத்தொடங்குவார்கள், அதோ வந்துவிட்டார், இதோ வந்து விட்டார் என... மக்களும் அவர் வந்துவிட்டார் என நம்பத்தொடங்கிக் கூட்ட மைதானத்தில் கூடத்தொடங்குவர்..... இறுதியாகத் தலைவர்கள் வந்து சேருவதற்கு இரவு 9 மணிக்கு மேலே ஆகிவிடும்....
இதே போலச் சென்ற அக்டோபர் (2013) மாதத்தில் இருந்து கூடங்குளத்தில் இருந்து 160, 200, 300 மெகாவாட்... பின்னர் 400 மெகாவாட்.... 600 மெகாவாட்.... என ஊடகங்கள் அதோ, இதோ என்று தொடர்ந்து அறிவித்து வருகின்றன(1,2). அதே நேரத்தில் தமிழக மின்வாரியத்திற்குக் கூடங்குளத்திலிருந்து ஒரு மெகாவாட் மின்சாரம் கூட வரவில்லை என்று மின்வாரியத்தின் அறிக்கைகளைக் கொண்டு ஊடகங்கள் தொடர்ந்து சொல்லிவரும் பொய்யை அம்பலப்படுத்தினர் அணு உலை எதிர்ப்புப் போராளிகள்... நிலைமை இப்படியிருக்கையில் மே 19 அன்று ஒரு செய்தி ஊடகங்களில் வந்தது 22 அக்டோபர் 2013 அன்றே கூடங்குளம் அணு உலை உற்பத்தி தொடங்கினாலும் சில பிரச்சனைகளால் மின்வாரியத்திற்கு இதுவரை மின்சாரம் கொடுக்கவேயில்லை... அக்டோபர் 2013லிருந்து கூடங்குளம் அணு உலை தொடர்ச்சியாக மின்சாரம் கொடுக்கவில்லை, சோதனையோட்டமே நடந்தது. 2014 சூலை 22லிருந்து தொடர்ச்சியாக மின்சாரம் கொடுக்கப்போகின்றோம் என்று அறிவித்துள்ளனர்.(3)
முதலில் கூறிய அரசியல் கூட்டத்திலாவது மாலை 4 மணிக்கு அறிவிக்கத் தொடங்கி இரவுக்குள்ளாகக் கூறிய நபர் வந்துவிடுவார், ஆனால் கூடங்குளத்திலோ 22 அக்டோபர் 2013ல் மின்னுற்பத்தி தொடங்கியதாக அறிவிக்கத் தொடங்கினாலும் இன்றுவரை 1 மெகாவாட் கூட உற்பத்தி செய்து மின்வாரியத்திற்குக் கொடுத்ததாக எந்த அதிகாரப்பூர்வத் தகவலும் இல்லை. 22 சூலை 2014லிருந்து நாங்கள் மின்வாரியத்திற்கு நாங்கள் மின்சாரம் கொடுப்போம் என்று ஆரூடம் கூறியுள்ளார்கள், அதுவும் நடக்குமா என்பது ஐயப்பாடே. கூடங்குளம் அணு உலையை எதிர்த்து மக்கள் போராட்டங்கள் நடத்திய போது, நாட்டையே இருளில் தள்ளுகின்றார்கள், கூடங்குளம் வந்துவிட்டால் தமிழகத்தில் மின்வெட்டே இருக்காது என்று போராடிய மக்களை எதிர்த்தவர்கள், 14,000 கோடிக்கு மேல் செலவு செய்தாகி விட்டது என்று சொன்னவர்களும், போராடிய மக்களைத் தேசத்துரோகிகள் என்று தூற்றியவர்களும் இன்று வாய் மூடி கள்ள மௌனம் சாதித்து வருகின்றார்கள்.
எங்களிடம் சில கேள்விகள் உள்ளன, அவற்றுக்கு யாரிடமாவது பதில் இருக்குமா எனத் தெரியவில்லை.. இருந்தும் கேட்கின்றோம்........
1) ஊடங்கள், அணு உலை நிர்வாகக் கூற்றுப்படி இதுவரை கூடங்குளத்தில் உற்பத்தியான மின்சாரம் எங்கே?
2) அப்துல் கலாம் மற்றும் பல அணு உலை ஆதரவாளர்கள், அரசின் கூற்றுப்படி 100 விழுக்காடு பாதுகாப்பான அணு உலையில் வெந்நீர் குழாய் வெடித்தது எப்படி ?
3) உண்மையிலேயே கூடங்குளம் இயங்கும் என்று நம்புகின்றீர்களா? எதை வைத்து?.......
அணு உலைக்கெதிரான மக்கள் போராட்டத்தைப் பழித்த எவரும் இக்கேள்விகளுக்கு பதிலளிப்பதன் மூலம் தங்கள் நேர்மையை இப்பூவுலகிற்குப் பறைசாற்றிக்கொள்ளலாம்....
நற்றமிழன்.ப
தரவுகள்:
1) http://timesofindia.
2) http://www.business-standard.
3) http://www.millenniumpost.in/
No comments:
Post a Comment