Showing posts with label ஈழம். Show all posts
Showing posts with label ஈழம். Show all posts

Monday, May 6, 2013

ஐ.பி.எல் கிரிக்கெட் - சூழ்ந்துள்ள இந்திய அரசியலும் பொருளாதாரமும்



"கிரிக்கெட் ஒருகாலத்தில் விளையாட்டாக இருந்தது;

பின்னர் அது சூதாட்டமாக இருந்தது;

இப்போது அது பொழுதுபோக்காக மாறிவிட்டது!"

என்றார் நண்பர் ஒருவர்.



பொழுதுபோக்கில் என்ன தவறு? சரியான கேள்விதான்... இந்த கேள்விக்கு போகுமுன் ஒரு குட்டி பிளாஸ்பேக்...

ஐபிஎல் (IPL - இந்திய பிரிமீயர் லீக்) எனப்படும் இருபது ஓவர் போட்டி இந்திய கிரிக்கெட் வாரியத்தால்(பிசிசிஐ- BCCI) 2008ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு முன்பே ஐசிஎல் (இந்திய கிரிக்கெட் லீக்) இருபது ஓவர் போட்டி வடிவம் அறிமுகபடுத்தப்பட்ட போதும் பிசிசிஐ-யின் ஆசி இல்லாதால் அது பெரிய தோல்வியை சந்தித்தது.



பிசிசிஐ இந்திய அரசின் ஆதரவுடன் நாட்டின் மிகமுக்கிய அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்களால் நடத்தப்படும் ஒரு தனியார் அமைப்பு என்பது நம்மில் சிலபேருக்குத்தான் தெரியும். இந்த பிசிசிஐ அமைப்பு கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்து ஒரு அணி அமைக்கும். அந்த அணி ‘இந்திய அணி’ என்ற பெயரில் இதே போல பிற நாட்டின் அமைப்புகள் அனுப்பும் அணியுடன் விளையாடும்... இருந்தும் இந்திய நாட்டில், ஏன் மக்கள் குறிப்பாக இளையோர் பிசிசிஐ இந்திய அணியின் வெற்றி தோல்விகளைத் தங்கள் நாட்டின் வெற்றி தோல்வியாக கொண்டாடுகிறார்கள்? இந்த தேசிய உணர்வின் வெளிப்பாடு தானாக இந்திய மக்களிடம் தோன்றி வளர்ந்ததா?

கிரிக்கெட் வளர்ச்சி, அதன் பிரபலம், தேசிய உணர்வின் வெளிப்பாடாக ஆனதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு.

1. 1990க்கு அப்புறமான உலகமயமாக்கல் அல்லது உலகம் முழுவதும் பரவிக்கொண்டிருந்த தாராள பொருளாதாரக் கொள்கை இந்திய ஒன்றியத்தையும் தாக்கியது. அதாவது இரண்டாம் உலகப்போர் முடிந்தபின்னும் அதுவரை தொடர்ந்த அமெரிக்கா மற்றும் சோவியத் ரசிய ஒன்றிய அரசுகளின் உலக ஏக ஆதிக்கத்தின்(ஏகாதிபத்தியம்) மீதான பனிப்போர் சோஷலிச சோவியத் ரசிய ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின் முடிவுக்கு வந்தது. முதலாளித்துவ அமெரிக்க அரசு உலகின் ஏக போக ஒற்றை ஆதிக்கமானதும், உலக நாடுகளுடன் குறிப்பாக இந்தியா போன்ற வளர்ந்து கொண்டிருக்கும் மூன்றாம் உலக நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் செய்துகொண்டது. அதன்படி அமெரிக்க நாட்டின் பெரு நிறுவனங்கள் தடைகளின்றி வர்த்தகம் செய்துகொள்ள சந்தையாக இந்த வளர்ந்துவரும் நாடுகள் பயன்படுத்திக் கொள்ளப்பட்டன‌. இப்படித்தான் பல கோடி மக்கள்த்தொகை கொண்ட இந்திய ஒன்றியமும் 1990க்கு பிறகு பன்னாட்டு நிறுவனங்களின் சந்தையானது.

2. இதற்கும் கிரிக்கெட் வளர்ச்சிக்கும் என்ன சம்பந்தம்? வர்த்தகம் செய்துகொள்ள, சந்தை அமைக்க உரிமை மட்டும் கிடைத்தால் போதுமா... சந்தையில் வியாபாரம் செய்யவேண்டிய பொருட்களை எப்படி பொதுமக்களிடம் எடுத்துச் செல்வது? பிரித்தானியா அதன் காலணி அடிமை நாடுகளில் ஒரு அடிமை விளையாட்டை விட்டு சென்றிருந்தது. அதாவது குறிப்பிட்ட சிலர் மட்டும் விளையாடுவார்கள், பெருவாரியான மக்கள் வேடிக்கை பார்ப்பார்கள். இதில் விளையாடும் ஆர்வத்தை விட பார்வையாளரின் ரசிக்கும் ஆர்வமே அதிகமாய் இருக்கும். (இன்றளவும் சிறுவயதில் இருந்தே மட்டை பந்து சகிதம் பையுடன் பணம் கொடுத்து பயிற்சி எடுக்கும் மேல்சாதி மேட்டுக்குடியினர் மட்டுமே கிரிக்கெட்டில் விளையாடுபவர்களாகவும், மற்றவர்கள் தொலைக்காட்சியிலும், மைதானத்தில் பார்வையாளர்களாகவும் மட்டுமே இருக்கிறார்கள்.எவ்வளவு திறமை இருந்தும் சாதாரண எளிய குடும்ப பின்புலம் உள்ளவர்களுக்கு இடமே கிடையாது.அப்படியே அரிதாக சிலருக்கு வாய்ப்பு கொடுத்தாலும் அது விளம்பரத்திற்கு - மக்களை ஈர்க்கவே, இதனால் பெருவாரியான மக்கள் தங்கள் நேரம், பணத்தை விரயம் செய்து பார்வையாளர்களாக மட்டுமே இருக்கிறார்கள்.) 1983 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் வெற்றிக்குப் பிறகு மேலும் பிரபலமாகியிருந்த இந்த கிரிக்கெட் விளையாட்டுதான் பன்னாட்டு நிறுவனங்களால் சந்தைப் பரவலாக்கலுக்கு பயன்படுத்தப்பட்டது. பல நாடுகள் பங்கேற்கும் பெரிய பெரிய போட்டி தொடர்களை பன்னாட்டு நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்து அவைகளின் பெயரிலேயே நடத்தியது, பன்னாட்டு விளையாட்டு ஒளிபரப்பு தொலைக்காட்சிகள் நுழைந்தது நினைவிருக்கலாம். இந்திய அணி 90களில் அதிகமாக வெளிநாடுகளுடன் அதிக போட்டிகள் அமைத்து விளையாடியது.



கிரிக்கெட் மக்களோடும், இளைஞர்களோடும் இரண்டறக் கலந்து கொண்டிருந்தது.அவ்வேளையில் பன்னாட்டு நிறுவனங்களுக்காக உழைக்கும் அரசியல்வாதிகளின் திட்டத்தின் படி ஏற்கனவே பல காலமாக தீர்க்காமல் விடப்பட்ட ஜம்மு-காசுமீர் மாகாண எல்லைப் பிரச்சனைகளைத் தூண்டி, பாகிசுதானை எதிரிநாடாக ஆக்கி,வெகுசன மக்கள் மட்டத்தில் கொண்டு சேர்க்க கிரிக்கெட்டைப் பயன்படுத்துகிறார்கள்; அவர்களின் திட்டப்படி தேசிய உணர்வு விளையாட்டுடன் கலக்கிறது.உருவாக்கப்பட்ட எந்திர மனிதனுக்குக் கொடுக்கப்பட்ட உயிர்தான் தேசிய உணர்வு என்ற ஆயுதம்! அந்த காலகட்டத்தில் பன்னாட்டு நிறுவனங்களால் பயன்படுத்தப்பட்ட விளம்பர மாடல் தான் சச்சின் ரமேசு டெண்டுல்கர்.(அவருக்கே தெரியாமல் தேனில் விழுந்த வண்டாகக் கூட அவர் ஆகியிருக்கலாம்.தனிப்பட்ட முறையில் அவருடைய நேர்த்தியான ஆட்டத்திற்கு நானும் ரசிகன் தான், அவர் எதற்கு எப்படி பயன்படுத்தப்பட்டார் என்ற நாம் எழுப்புகிற நியாமான வினாவே இந்த விடையைத் தருகிறது).அன்று சச்சின் டெண்டுல்கர் என்ற ஒற்றை ஆட்டக்காரர்தான் தொய்வில் இருந்த இந்திய கிரிக்கெட்டை இந்திய மக்களிடம் பிரபலமாவதற்கு முக்கிய பங்காற்றினார் என்பதில் எவருக்கும் வேறுகருத்து இராது.(நண்பர் ஒருவர் சில வருடங்கள் முன்புவரை அடிக்கடி சொல்லிவருவதுண்டு. 'சச்சின் கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து ஓய்வு பெற்றதும் கிரிக்கெட் பார்வையாளரில் இருந்து ஓய்வு பெறப் போகிறேன்' என்று.அந்த முடிவை அவர் பின்னர் மாற்றிக்கொண்டார் என்பது தனிக்கதை.

இந்தியாவில் கிரிக்கெட் பிரபலமானதில் பன்னாட்டு நிறுவனங்களில் விருப்பு இருந்திருக்கலாம்.சந்தையைப் பிரபலப்படுத்த இதைச் செய்வதில் என்ன தவறு? இதனால் என்ன தவறு விளையப்போகிறது...?

சந்தையைப் பிரபலப்படுத்துவது என்பது,'பொருளைக் கொண்டு வந்தான், விளம்பரம் செய்தான், இங்கே அதற்கு தேவை இருந்தது, அவர்களின் பொருள்களில் தரம் இருந்தது, அதனால் இலாபம் அடைந்தான், பணத்தை எடுத்துச் சென்றான்' என்கிற அளவில் மட்டும் எடுத்துக்கொள்ள முடியாது.மக்கள் எண்ணத்தில் சில நிறுவனங்களின் பெயர்கள் மட்டுமே ‘பிராண்ட்’ என்ற பெயரில் இடம்பெற வைத்தார்கள். இந்த சந்தைப் போட்டியில் விளம்பரம் செய்துகொள்ள முடியாத உள்நாட்டில் உற்பத்திசெய்த பொருள்கள் பெரிய சரிவைச் சந்திக்க ஆரம்பித்தது. இந்திய உழைக்கும் எளிய மக்கள், சிறு தொழில் முனைவோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் இதனால் பாதிப்படைந்தனர்.இந்தியாவிலேயே பெருநிறுவனங்களில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் பன்னாட்டு நிறுவனப் பொருட்கள் அளவிற்கு விளம்பரம் செய்து தங்கள் சந்தைகளைத் தக்கவைத்துக்கொண்டன, சில பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளூர் நிறுவனங்களுடன் கூட்டு அமைத்து இங்கேயே அந்த பொருட்களைத் தயாரித்து சந்தையில் விற்க ஆரம்பித்தன.

மக்கள் தொகைப் பெருக்கத்தினால் தேவைப்பட்ட அதிக வேலை வாய்ப்பு, வெளிநாட்டுப் பொருட்களின் வரவினால் உள்ளூர் நிறுவனத்தில் வேலை இழப்பு இவைகளினால் மக்கள் குறைந்த கூலிக்கு வேலை செய்ய தயாரானார்கள், பெரும்பாலோர் தற்காலிக ஒப்பந்த வேலைக்கும் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இதன் மூலம் பன்னாட்டு நிறுவனங்களின் குறைந்த கூலி, அதிக நேர வேலைப்பளு, உற்பத்தி திறன் அதிகரிக்க வேண்டிய பளு என எல்லாவற்றிகும் தலையாட்டி பெரும் நெருக்கடியில் இருக்கிறார்கள் மக்கள். (இது தான் பன்னாட்டு நிறுவனங்களை கொண்டு வந்து மக்களுக்கு வேலை கொடுப்பதாக அரசு சொல்லிக்கொள்ளும் பெருமிதத்தின் மறுபக்கம்).

உற்பத்தி வேலைக்கான குறைவான / வெளிப்படையற்ற / சுதந்திரமற்ற சம்பள நிர்ணயம், உற்பத்திவிலையைத் தாண்டி பன்மடங்கு / வெளிப்படை தன்மையற்ற விலை



அதாவது பொருட்களைத் தயாரிப்பதும் இங்கே, சந்தையும் இங்கே, இலாபத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பங்கு, இந்த பொருட்களை மட்டுமே வாங்கவைக்கிற விளம்பர உத்திகள், தரம் என்ற பெயரில் அதிக விலை.இந்த சந்தை வளர்ச்சி வாடிக்கையாளருக்கும் பயனைக் கொடுக்கவில்லை என்பதே உண்மை.இன்று தேவையைத் தாண்டி தேவையற்றப் பொருட்கள் வீட்டில் அடைய நமது தொலைக்காட்சியில் தினமும் வரும் விளம்பரமும், இணையம் போன்ற நவீன தொலைத்தொடர்பும் தான் காரணம்... சில பொருட்கள் இல்லை என்றால் என்ன இது இல்லையா என்று நண்பர்கள் கேட்பார்கள் என்பதற்காகவே பயன்படுத்தாவிட்டாலும் மக்கள் வீட்டில் பல பொருட்களை வாங்கிக் குவிக்கிறார்கள்.பயன் யாருக்கு? இதன் மூலக் காரணம் என்ன?

இத்தனைக்கும் காரணம் தாராளப்பொருளாதாரம் / உலகமயமாக்கல் என்ற ஒற்றைக் கலைச்சொல்லும், கிரிக்கெட் போன்று பன்னாட்டு நிறுவனங்களின் சந்தையைப் பிரபலப்படுத்த எளிமையாக்கப்பட்ட வழியும் தான்.



கிரிக்கெட்டின் ஆர்வம் யாருடைய விருப்பத்திற்காக பிரபலமாக்கப்பட்டது என்பது தெரிந்து கொண்டோம், அதனை வளர்த்தெடுப்பது பிசிசிஐ என்ற பெயரில் இந்திய நாட்டின் முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்கள் என்று முன்பே பார்த்தோம்.உலகமயமாக்கல், கிரிக்கெட்டை வைத்து என்னென்ன தவறான விளைவுகள் ஏற்பட காரணமானது என்றும் பார்த்தோம்.

இத்தகையக் காலக்கட்டத்தில், 2000களில் பின்-நவீன உலகமயமாக்கலினால் வந்த, உடல் உழைப்பை விட மூளை வேலைக்கு முக்கியத்துவம் கொடுத்த, ஐ.டி. துறையின் வளர்ச்சியாலும் மேற்கத்திய நாடுகளுக்கு வேலைச் செய்யக் கிடைத்த வாய்ப்பாலும் பொறியியல் பட்டதாரி இளையோர்கள் முக்கியமாக கணிப்பொறியியல் படித்த இளையோர்கள், அரசின் போர்வையில் தவறிழைப்பவர்களை தட்டிக்கேட்காமை, அரசின் போலித்தனத்தை / அரசியல் சனநாயக கட்டமைப்பின் பிழைகளைக் கண்டும் காணாமை என்று அன்றாட பிரச்சனைக் கடந்து சென்று கொண்டிருந்தார்கள்.அவர்கள் உணரும் மேட்டிமைத்தனத்தாலும், பெருவாரியான இதர உழைக்கும் கூலிகளைவிட அதிக கூலி கிடைப்பதாலும் (உண்மையில் இதரக் கூலித் தொழிலாளிகளைப் போல இதே வேலைக்கு அமெரிக்கா போன்ற நாடுகளில் நிர்ணயித்த வருமானத்தைவிட குறைந்த கூலி பெறுபவர்கள் இவர்களும் தான், முறைபடுத்தப்படாத வேலைப்பளுவினால் அவர்களைவிட மன அழுத்தக்கும் ஆளாகிறார்கள்), தங்கள் வருமானத்தில் மட்டும் கருத்தாய் இருந்து உலகமயமாக்கலின் கனியை மட்டும் சுவைக்க ஆரம்பித்தனர்.அதன் தீய விளைவுகளை அகற்ற முற்படவில்லை.(உலகமயமாக்கல் மூலம் உலகளவில் ஏற்பட்ட நவீன அறிவியல் வளர்ச்சியைப் பயன்படுத்தி உள்நாட்டு வேளாண்மையின், பொருட்களின் உற்பத்தியைப் பெருக்கியிருக்க முடியும்.ஆனால் நிகழ்ந்தது பன்னாட்டு மற்றும் பெருநிறுவனங்களின் சந்தையாக இந்தியா மாறியது மட்டும்தான்). இத்தகைய உலகமயமாக்கலின் விளைவாக கிடைத்த பொருளாதார முன்னேற்றம், பன்னாட்டு நிறுவனங்களின் கையாட்களான மக்கள் விரோத அரசையும், கிரிக்கெட்டையும் அரவணைக்க வைத்தது.

இப்படி இந்திய ஒன்றியத்தில் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு பெருநிறுவனங்களின் தொழில் வளர்ச்சியும், சந்தையாக்கலும் பெரிய அளவில் சென்றுகொண்டிருக்க, கிரிக்கெட்டில் ஏற்கனவே உணர்வுக்கு அடிமையாயிருந்த மக்களின் உணர்வை வைத்து ஒரு போட்டியில் வெற்றி பெற‌ வைத்தால் இவ்வளவு பணம், ஒரு Six அடிக்க‌ வைத்தால் இவ்வளவு பணம் என்று விளையாட்டில் சூதாட்டம் பரவலாக நிகழத் தொடங்கியது.அப்போதுதான் சூதாட்டம் தொடர்பான விடயங்கள் வெளியில் கசிய ஆரம்பித்தன. கொலைகள் போன்று பல குற்றங்களும் பெருகின.இருக்கலாம், ஆனால் நாங்கள் பொழுதுபோக்கிற்காக மட்டும்தானே கிரிக்கெட் பார்க்கிறோம் இதில் என்ன தவறு இருக்க முடியும்?


பொழுதுபோக்கில் என்ன தவறு?

2000-களில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு நேரடி முதலீடு செய்ய வழிவகை செய்யப்பட்டதும், இந்தியப் பெருநிறுவனங்கள் மக்கள் தொகை அதிகமான வளர்ந்துவரும் நாட்டின் மிகப்பெரியச் சந்தைகளினால் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஒப்பாக வளர்ந்துவிட்டதும், சிறிய நிறுவனங்கள் பலவும் ஏற்பட்ட பெரும் நட்டத்தினால் ஒரு சில பெருநிறுவனங்களின் குடைக்குள் வந்ததும் அறிவோம். பிறகென்ன, 2000ங்களின் இறுதி காலக்கட்டங்களில் இந்திய பெருநிறுவனங்களின் பெரிய வளர்ச்சி மற்றும் நலன்களுக்காக இந்திய ஏக போக ஒற்றை மைய ஆதிக்கம், அதன் கீழ் அதிகாரம் செலுத்துகிற நாடுகளுடன் முன்னர் இட்டுக்கொண்ட அமெரிக்க-இந்தியக் கூட்டு உலகமயமாக்கல் ஒப்பந்தம் போல தாராளப் பொருளாதார ஒப்பந்தம் இட்டுக்கொள்கிறது.



எப்படி சந்தையைப் பெரிதாகப் பிரபலப்படுத்துவது? அதற்கு முன்னிலும் பகட்டான அதிகம் கவர்ச்சிகொண்ட கிரிக்கெட்டின் வேறு வடிவம் தேவைப்படுகிறது.இருபது ஓவர்தான் - விரைவாக முடியும் - போட்டி முழுவதும் உட்கார்ந்துப் பார்த்துவிடலாம், பல நாட்டின் பிரபல ஆட்டக்காரர்கள் இப்போது இந்த வடிவத்தின் மாடல்கள், களிப்பு ஏற்படுத்த மைதானத்தில் நடனமங்கைகள், பிரமாண்ட இசை, ஆடல் பாடல், ஒளிபரப்பில் முன்னேறிய தொழில்நுட்பம் என்று பிசிசிஐ என்ற ஒற்றை அதிகார மையத்தின் கீழ் லலித் மோடி என்ற அரசியல் வியாபாரியால் 2008ல் ஐபிஎல் போட்டி ஆரம்பிக்கப்படுகிறது.குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களின் கோடை விடுமுறையில் திட்டமிட்டு நடத்துவதால் அவர்களைப் பெரிதும் ஈர்க்கிறது. அமோக வெற்றியும் பெறுகிறது.பெருநிறுவனங்களால் ஒவ்வொரு கிளப்புக்கும் போடப்பட்டுள்ள பல நூறு கோடிப் பணம், விளையாடும் வீரர்களுக்கு பல கோடிகளில் சம்பளம், உலகின் பணக்கார விளையாட்டு அமைப்பாக பிசிசிஐ, தினமும் நடக்கும் பல கோடி மதிப்பான சூதாட்டம் என எதிர்பாராமல், வந்த மிகப்பெரிய ஆதரவால் ஐபிஎல்-லே பெரிய சந்தையாகிறது (ஐபிஎல் மூலம் சந்தையை விரிவாக்குவதுவதுதான் தீர்க்கமான இலக்கு/விருப்பு என்றாலும்).அதன் பிறகு ஐபிஎல் எத்தகைய வேகத்துடன், ஒவ்வொருமுறையும் மாறுதல்களுடன், கொண்டுசெல்லப்ப்படுகிறது என அறிவோம்.

2009ல் நாடாளுமன்றத் தேர்தலினால் இரண்டு மாதங்கள் தள்ளி நடத்தச் சொன்னக் காரணத்திற்காக, போட்டியையே தென்-ஆப்பிரிக்கா கொண்டு சென்றது என்றால் அதன் சந்தையின் முக்கியத்துவம் அறியலாம். ஐபிஎல்-லின் காரணகர்த்தா லலித் மோடி மீது சுமத்தப்பட்ட பல கோடி ஊழல் மற்றும் இந்திய ஒன்றியத்தின் மைய அரசின் அமைச்சராக இருந்த சசி தரூர் கொச்சின் கிளப்பில் செய்த ஊழல் என்ற செய்திகள் வெளியில் வரவும் முன்னவர் வெளிநாட்டில் தலைமறைவு, பின்னவர் அமைச்சர் பதவி இழப்பு என்று ஐபிஎல்-லுக்கு பிரச்சனை ஏற்பட்டது.இருந்தும் பெரிய நடவடிக்கையை அரசு இன்னமும் எடுக்கவில்லை, ஐபிஎல் போட்டி வருடந்தோறும் நடத்தப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.சமீபத்தில் நாற்பதாயிரம் கோடி அளவில் ஐபிஎல் சூதாட்டம் நிகழ்ந்துவருவதாக வந்த ஒரு செய்தி கிரிக்கெட் பார்வையாளர்களையே மிரட்டியது என்றால் ஐபிஎல் போட்டிகளின் தாக்கத்தை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.




கடந்த காலங்கள் இப்படி இருக்க, இந்த வருடம் (2013) ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு முன்பு நான்கு முக்கிய சர்ச்சைகள் எழுந்தது.

1. மாராட்டியத்தில் வரலாறு காணாத வறட்சி காரணமாக குடிநீருக்கே மாராட்டிய மக்கள் கடினப்படும் வேளையில் ஒரு போட்டி நடத்த தேவையான அறுபதாயிரம் லிட்டர் நீரும், தினமும் மைதானத்தைப் பேணுவதற்கு தேவையான சில ஆயிரம் லிட்டம் நீரும் கொண்டு ஐபிஎல் போட்டு நடத்த வேண்டுமா? ஆகவே மாராட்டிய நகரங்களான மும்பை மற்றும் பூனாவில் நிகழும் போட்டிகளை நிறுத்த வேண்டும் என சிவசேனா கட்சி மற்றும் சில கட்சிகள் கோரிக்கை வைத்தது.அதனை அதே மாராடியத்தின் முக்கிய அரசியல்வாதியும் மைய அமைச்சருமான சரத் பவாரின் கைப்பாவை பிசிசிஐ அமைப்பு காதில் கூட போட்டுக்கொள்ளவில்லை.

2. ஐபிஎல் போட்டி தொடங்க திட்டமிடப்பட்டிருந்த மேற்கு வங்கத்தின் தலைநகரம் கொல்கொத்தாவில், ஒருநாள் முன்புதான் ‘கல்லூரிகளில் மாணவர் தலைவர்களுக்கான தேர்தல்’ வைக்கச் சொல்லி வீதியில் போராடிக்கொண்டிருந்த மாணவர் தலைவரை காவல்துறை கைது செய்து நிலையம் கொண்டு செல்லப்பட்டு, அடித்து கொல்லப்பட்டு சாகிறார். அதனை அவரின் தந்தையும், மாணவர்களும் திட்டமிட்ட மம்தா பானர்ஜி தலைமயிலான மேற்குவங்க அரசின் / காவல்துறையின் திட்டமிட்டப் படுகொலை என்று தீர்க்கமாக சொல்கிறார்கள்.போட்டி தொடங்குகிற அன்று இறந்த மாணவர் தலைவரின் இறுதி ஊர்வலம் பெரிய அளவில் கொல்கொத்தாவில் நடக்கின்றது.போராட்டங்களும் நிகழ்கிறது, அவைகள் ஒடுக்கப்பட்டு இந்திய ஒன்றியத்தில் எந்த சலனமும் இல்லாமல் ஐபிஎல் போட்டி தொடங்கிவைக்கப்படுகிறது, இதில் மம்தாவும் கலந்து கொள்கின்றார்.

3. பெங்களூரில் விளையாட்டுத் துறை வளர்ச்சிக்காக இந்திய இராணுவத்தின் நிர்வாகத்தின் கீழ் இருந்த இடத்தைக் கொடுத்து கட்டப்பட்ட சின்னசாமி கிரிக்கெட் அரங்கத்தை ஐபில் போன்று பொழுதுபோக்கிற்கு வழங்கக் கூடாது, மீறி வழங்கினால் அந்த இடத்தைத் திரும்பப் பெறுவதைப் பற்றி யோசிப்போம் என்று அங்கிரந்த இராணுவ உயர் அதிகாரி மட்டத்தால் கர்நாடக அரசிற்கு மிரட்டல் விடப்படுகிறது.அது கர்நாடகத்தின் கிரிக்கெட் அமைப்பிற்கோ, பிசிசிஐக்கோ ஒரு அழுத்தத்தையும் ஏற்படத்தவில்லை, காரணம் பிசிசிஐ-யின் அதிகாரம் அதைவிட உயர்வானது என்பதே.

4. இலங்கையில் பேரினவாத சிங்கள பௌத்த அரசால் ஈழத்தில் ஒன்றரை இலட்சம் தமிழ் மக்கள் இனப்படுகொலைக்கு ஆளாகியுள்ள நிலையில், அங்கு நடந்த இனப்படுகொலைக்கு சர்வதேச சுதந்திரமான விசாரணை நிகழும் வரையிலும், ராஜபாக்சே-வை போர்க்குற்றவாளி என்று அறிவிக்கும் வரையிலும், ஐநா மேற்பார்வையில் சுதந்திரமான தனித் தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு வரையிலும், இதன் மூலம் தனித் தமிழீழம் அமைந்து முற்றிலுமாக இலங்கை ஒன்றியத்தில் இருந்து ஈழம் சனநாயக விடுதலை பெரும் வரையிலும் இலங்கை அரசு மீதான தடையை பல வழியிலும் முன்னெடுப்பது பொருளியல், கலை, பண்பாடு, விளையாட்டு புறக்கணிப்பின் மூலம் தென் ஆப்பிரிக்கா மீது 60களில் இருந்து 90கள் வரைக்கும் போடப்பட்ட தடையைப் போன்று நாமும் இலங்கையின் இன அழிப்பிற்கு எதிராக பிற நாடுகளை ஒன்றிணைக்கவும் முடியும் என்ற தமிழ் மக்கள் இயக்கங்களின், மாணவர்களின் கோரிக்கையால் சட்டமன்றத்தில் ஜெயாவின் தமிழக அரசால் ஒரு தீர்மானம் கொண்டுவரப் படுகிறது.



இந்நிலையில் ஐ.பி.எல். வரவும் சென்னையில் சிங்கள இலங்கை வீரர்கள் விளையாடினால் சென்னையில் விளையாட அனுமதிக்க முடியாது என்று முதல் அமைச்சர் அறிவிக்கிறார்.மறு பேச்சு பேசாமல் இந்திய அரசும், பிசிசிஐ-யும் இதனை ஏற்றுக்கொள்கிறது, மக்கள் பொறுமையின் எல்லை இந்த வியாபாரிகளுக்கு நன்றாகவேத் தெரியும்.அதே வேளையில் அனைத்து இயக்கங்களும் மாணவர்களும் பாகிசுதான் கிரிக்கெட் வீரர்களுக்கு பயங்கரவாதிகளின் மும்பைத் தாக்குதலால் போட்டியில் விளையாடத் தடை போட்டார்களோ அதுபோல அனைத்து போட்டிகளிலும் இலங்கை விளையாட்டு வீரர்களை நீக்கக் கோரியும் இதுவரை எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் பெருநிறுவனங்களின் ஆதரவுடன், இந்தியா எங்கும் படிக்கும் பள்ளி, கல்லூரி மற்றும் ஐ.டி இளையோர்களின் மயக்கத்தால் ஐ.பி.எல். போட்டிகள் எந்த பிரச்சனையும் இன்றி வழமையாக நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.... மேலும் த‌மிழ‌க‌த்தில் நில‌வும் மின் த‌ட்டுப்பாட்டால் சென்னை த‌விர‌ பிற‌ ப‌குதிக‌ள் ஒரு நாளைக்கு குறைந்த‌ ப‌ட்ச‌ம் 8 ம‌ணி நேர‌ம் முத‌ல் அதிக‌ ப‌ட்ச‌ம் 16 ம‌ணி நேர‌ம் வ‌ரை மின்சார‌ம் வ‌ழ‌ங்க‌ப்ப‌டுவ‌து இல்லை, இந்த‌ நேர‌த்தில் மின்சார‌த்தை அதிக‌ம் உறிஞ்சும் இர‌வு நேர போட்டிகளை நடத்த வேண்டுமா? ஏன் பகலில் நடத்தக் கூடாது? என்பதையும் நாம் யோசிக்க வேண்டும். ப‌க‌லில் ந‌ட‌த்தினால் அலுவ‌ல‌க‌ம் செல்ப‌வ‌ர்க‌ளால் பார்க்க‌ முடியாது என்ற‌ கார‌ண‌த்தினாலும், ச‌ந்தை விழுக்காடு பாதிக்க‌ப்ப‌டும் என்ப‌தாலும் இவ‌ர்க‌ள் ப‌க‌லிர‌வு ஆட்ட‌ங்க‌ளாக‌ ந‌ட‌த்துகின்றார்க‌ள், விவ‌சாயிக‌ளுக்கும், சிறு, குறு தொழில‌க‌ங்க‌ளுக்கும் கொடுக்க‌ப்ப‌டும் மின்சார‌த்தின் ஒரு ப‌குதி பிடுங்க‌ப்ப‌ட்டு இது போன்ற‌ கேளிக்கை விளையாட்டுக‌ளுக்குக் கொடுக்க‌ப்ப‌டுவ‌து அவ‌ல‌மான‌ ஒன்று.

மேற்கூறப்பட்ட நான்கு நிகழ்வுகளும் நமக்கு உணர்த்துவதென்ன?

ஐபிஎல் என்ற மந்திர சொல், இன்று, இந்திய ஒன்றியத்தின் நடுத்தர வர்க்கம் முதல் அடித்தட்டு இளைஞர்கள் வரை உலகமயாக்கல் பின்னணியில் பின்னிப்பிணைந்த ஒன்றாக மாறியிருப்பதால் எந்த சூழலிலும் எத்தகையப் பிரச்சனைகளுக்கு இடையிலும் அவர்களைப் பார்வையாளர்களாக ஆக்கியிருக்கின்றது.மக்களின் எந்த அரசியல், சனநாயக உரிமைப் போராட்டத்தையும் நீர்த்துபோகச் செய்கின்றது.

ஐபிஎல்-லை எதிர்த்து கேள்வி கேட்காமை, ஐபிஎல்-க்கு எதிராக விமர்சிப்பவர்களை, கேள்வி கேட்பவரை எந்த எல்லைக்கும் சென்று இகழ்ந்து பேசுவது என்று மக்கள், தொழிலாளிகள், உழைக்கும் வர்க்கத்தின் விரோத ஆட்சியாளர்கள், ஆட்சியாளர்களை இயக்கும் பெருநிறுவனங்களின் பக்கமும் அதே நேரத்தில் சனநாயகப் பண்பிற்கு எதிராகவும் இளையோரைக் கொண்டு சென்றிருக்கிறது இந்த ஐபிஎல்.தமிழ் நாட்டில் நடந்த பெருவாரியான மாணவர் போராட்டங்களையும், இலங்கையின் இனப்படுகொலை, போர்க்குற்றம் பற்றி தவறியும் ஒளிபரப்பாத, வட இந்திய‌ ஊடகங்கள், இலங்கை விளையாட்டு வீரர்களை ஐபிஎல் போட்டிகளில் விளையாடத் தடைப் போட வேண்டும் என்று கோரியதற்கு அது தவறு என்றும், விளையாட்டு வேறு- அரசியல் வேறு என்றும், போராடுபவர்கள் தமிழ் இன வெறியர்கள் என்றும் பொதுக்கருத்தை உருவாக்கிக்கொண்டிருந்தது, இந்த ஊடகங்கள் யாருக்காக வேலை செய்கின்றன என்பதை இந்நிகழ்வு தெளிவாக மக்களுக்கு உரைத்தது.

ஐ.பி.எல். போட்டி நடத்துவதில் இருக்கிற அரசியலும், பெருநிறுவனங்களின் பொருளாதாரப் பலனும், ஊடகங்களில் இதற்கு கொடுக்கும் முன்னுரிமையும் நமது இளையோரின் கண்ணை மறைப்பது பெரும் துயரம்.

தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மாணவர்களின் எழுச்சிப் போராட்டம்தான் இந்த ஐ.பி.எல். கிரிக்கெட்டின் அரசியலுக்கும் வெளிச்சம் பாய்க்க வேண்டும் என்பது எல்லோருடைய எதிர்ப்பார்ப்பு... பண்பலை வானொலி ஒலிபரப்பில் கேட்கும் ஐ.பி.எல். இரைச்சல் பெரிய அளவில் இன்றளவும் முகநூல் பக்கம் கேட்கவில்லை என்பது சிறிய மகிழ்ச்சி, இந்த வருட ஐ.பி.எல் போட்டி ஒட்டு மொத்தமாக இளைஞர்களிடம், மக்களிடம் எப்படியானத் தாக்கத்தை / அசைவை ஏற்படுத்தி இருக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்...!



- ஸ்நாபக் வினோத் ஏ.ஜெ.
சேவ் தமிழ்சு இயக்கம்
( Save Tamils Movement )



த‌ரவுக‌ள்:
=========

1) http://timesofindia.indiatimes.com/business/india-business/IPL-betting-White-collar-professionals-join-the-high-roller-rush-turnover-to-touch-Rs-40000-cr/articleshow/19553037.cms

2) http://www.cricketvoice.com/cricketforum2/index.php?topic=10679.0;wap2

3) http://blogs.wsj.com/indiarealtime/2013/04/02/bjp-objects-to-ipl-in-drought-hit-maharashtra/

4) http://indiatoday.intoday.in/story/sfi-leader-sudipto-gupta-death-kolkata-streets-west-bengal-government-mamata-banerjee/1/260519.html




Monday, March 18, 2013

மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டக் களத்தில் ஐ.டி துறையினர்



இப்போது இல்லாவிட்டால்…பின் எப்போது?

ஒரு வாரத்திற்கு மேலாக தமிழ்நாட்டு மாணவர்கள் ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்டுப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். நந்தனம் கல்லூரி தொடங்கி ஐ.ஐ.டி வரை மாணவர்களில் உள்ள பல்வேறு தரப்பினரும் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.வழக்கறிஞர், மீன் வியாபாரிகள், சினிமா துறையினர்கள், ஆட்டோ ஒட்டுநர்கள் எல்லோரும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். நம் அன்றாட வாழ்க்கை நம்மைச் சுற்றியிருப்பவர்களோடு பின்னிப் பிணைந்து இருக்கின்றது. இந்த சமூகத்தில் இருந்து பிரிக்க முடியாத அங்கமாக இருக்கும் நாம் என்ன செய்தோம்? என்ன செய்யப் போகிறோம்?

2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த போரில் ஒன்றரை இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். 18 மைல் தொலைவில் இருந்தும் நம்மால் அந்த இன அழிப்பு போரை நிறுத்த முடியவில்லை. ஒரு இனப்படுகொலையை வேடிக்கை பார்த்துக் கொண்டோ அல்லது தடுக்க முடியாதவர்களாகவோ இருந்தோம்.இந்தப் போரில் 90000 பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டுள்ளனர். ஒரு தலைமுறை குழந்தைகளே ஊனமாக்கப்பட்டுள்ளார்கள்.

போருக்குப் பின்னால் நெஞ்சை பிளக்கும் ஆதாரங்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன.அந்தப் போரில் போர்க்குற்றங்கள், மனித குலத்திர்கு எதிரான குற்றங்கள் நடந்துள்ளன என்றும் இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று டப்ளினில் நடந்த நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் பரிந்துரைத்தது.ஐநா. செயலர் பான் கீ மூன் மூவர் நிபுணர் குழுவும் இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்தது,தமிழக சட்ட மன்றத்தில் இதை வலியுறுத்தி தமிழக சட்ட சபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.மேற் சொன்ன எந்த பரிந்துரைகளையும் ஏற்றுக் கொள்ளாத ஒரு வெற்றுத் தீர்மானத்தையே அமெரிக்க அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.கொலைகாரன் தன்னைத் தானே விசாரித்து அளித்த‌ "ந‌ல்லிண‌க்க‌ அறிக்கையை" ஏற்றுகொண்டு, அதில் உள்ள‌ ப‌ரிந்துரைக‌ளை நிறைவேற்ற‌ச் சொல்லும் கோரிக்கையை முன்வைத்து இல‌ங்கைக்கு சாமர‌ம் வீசும் தீர்மான‌த்தை முன்மொழிந்துள்ள‌ வ‌ட‌ அமெரிக்காவையும், அத‌ன் கூட்ட‌ணி நாடுக‌ளை நாம் வன்மையாக க‌ண்டிக்க வேண்டும்.

.

இலங்கை மீதான ஒரு சுதந்திரமான சர்வதேச விசாரணையே, இனப்படுகொலைக்கும் போர்க்குற்றங்களுக்குமான ஒரு குறைந்த பட்ச நீதியாகவும்,தொடர்ந்து நடைபெற்று வரும் தமிழர்கள் மீதான இன அழிப்பு ஒடுக்குமுறைகளை தடுத்த நிறுத்தவும் ஏதுவாக அமையும்.

அதே வேளையில் இந்தியாவின் இரட்டை வேடத்தை அம்பலப் படுத்தியும்,அமெரிக்கா கொண்டு வரும் பல்லில்லா தீர்மானத்தை எதிர்த்தும், ஈழத்தமிழர்களுக்கான‌ நீதி வேண்டியும் த‌மிழ‌கம் முழுக்க‌ போராடி வ‌ரும் மாண‌வ‌ர்க‌ளின் போராட்ட‌த்தையும் நாம் ஆதரிக்கின்றோம்.

தமிழகத்தின் ஒட்டுமொத்த சமூகமும் ஈழத் தமிழர்களுக்கான நீதி வேண்டியும் தனித் தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரியும் எழுச்சி மிக்க போராட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கிறது.

பெற்றோரை இழந்து தவிக்கும் பச்சிளம் குழந்தைகளையும்,ரத்த வெள்ளத்தில் தம் குழந்தைகளை மடியில் கிடத்திக் கதறிய‌ பெற்றோரையும், கணவனை இழந்த பெண்களையும்,பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு சிதைக்கப்பட்ட உடல்களையும் தொலைக்காட்சிகளிலும் இணையத்திலும் பார்த்து பார்த்து மனம் வெதும்பி, செய்வதறியாது நின்ற ஒரு சமூகம் இன்று வீறு கொண்டெழுந்து வீதிக்கு வந்து போராடும் போது,அச்சமூகத்தின் ஒரு அங்கமான ஐ.டி ஊழியர்களான நாமும் களமிறங்க வேண்டிய நேரம் வந்து விட்டது.கை நிறைய சம்பளத்தோடு குளு குளு அறையில் கோக் உறிஞ்சி பாப்கார்ன் கொரிக்கும் ஆடம்பரக் கூட்டமில்லை நாம்.நமக்குள்ளே பேசி பேசி ஆகப்போவதென்னவென்று சலித்துக் கலைந்தது போதும். பெருந்திரளான இளைஞர்களை உள்ளடக்கிய ஐ.டி துறையின் வலிமையை இந்திய அரசின் முதுகில் அறைந்து சொல்ல வேண்டாமா ? நம் குரல் எதிரிகளின் குரல் வளையை நெறிக்கும் புரட்சிகர மாற்றங்களைச் செய்ய வல்லது என்று பறை சாற்ற வேண்டாமா ?

ஒன்று கூடுவோம் ! உரத்துச் சொல்வோம் ! மக்கள் சக்தியை உருத்திரட்டுவோம் !

இல‌ங்கை மீது ச‌ர்வ‌தேச‌ ப‌ன்னாட்டு விசார‌ணையைக் கோரியும் இலங்கை அரசின் மீ்து பொருளாதார தடை விதிக்கக் கோரியும் வ‌ரும் புத‌ன‌ன்று(மார்ச் 20) மாலை 4 மணிக்கு டைட‌ல் பார்க் முன்பு வ‌ந்து திர‌ள‌மாறு உங்களை அழைக்கிறோம்.

"ஒரு இன‌ப்ப‌டுகொலை ந‌ட‌க்கும் பொழுது நீங்க‌ள் அமைதியாக‌‌ இருக்கின்றீர்க‌ள் என்றால், நீங்க‌ள் அந்த‌ ப‌டுகொலையை ஆத‌ரிக்கின்றீர்க‌ள் என‌ப்பொருள்" - டெசுமாண்ட் டூட்டூ


Monday, March 4, 2013

சென்னையில் இலங்கை தூதரக முற்றுகை - நேரடி ரிப்போர்ட்



சிங்கள இனவெறி அரசால் கொடூரமாக நிகழ்த்தப்பட்ட தமிழினப் படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை கோரி, சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்திருக்கும் இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் பெரும் கொந்தளிப்புடன் இன்று (மார்ச் 4, 2013) நடந்தது. தோழர்கள் பழ.நெடுமாறன்,வைகோ,கொளத்தூர் மணி,தமிமுன் அன்சாரி,பெ.மணியரசன்,தோழர் தியாகு,கவிஞர் தாமரை, வேல்முருகன்,மல்லை சத்யா, மே 17 திருமுருகன், த.வெள்ளையன், ஓவியர் டிராஸ்கி மருது, இயக்குனர் புகழேந்தி
உள்ளிட்ட பல கட்சிகள் இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்கள்,உறுப்பினர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு தமது கோரிக்கையையும் எதிர்ப்பையும் பதிவு செய்தனர்.இப்போராட்டத்தில் சேவ் தமிழ்சு தோழர்களும் களத்தில் இருந்தனர்.

கடைசியாக நடந்த தூதரக முற்றுகைப் போராட்டத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுகள்,அத்துமீறல்கள் தமிழக காவல்துறையை கொஞ்சம் விழிப்படையச் செய்திருக்க வேண்டும்.நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து, லயோலா கல்லூரி, ஸ்டெர்லிங் சாலை, குளக்கரை சாலை முழுதும் காவல்துறை வாகனங்களும் ஆயிரக்கணக்கான காவல்துறையினரும் அதிரடிப்படையினரும் குவிந்திருந்தனர். நிகழ்வை பதிவு செய்ய ஊடகங்களும் பெருமளவு வந்திருந்தனர்.ஒன்பது மணிக்கு சேரத் தொடங்கிய கூட்டம் நேரம் கூடக்கூட‌ தொடர்ந்து அதிகரித்தபடி இருந்தது.சென்னையின் பல்முனைகளிலிருந்து தோழர்கள் லயோலா கல்லூரி அருகில் குவிந்த வண்ணம் இருந்தனர்.சிங்கள அரசை எதிர்க்கும் வாசகங்கள் கொண்ட பதாகைகளோடு, இனப்படுகொலை கூட்டாளி இந்திய அரசையும் ஐ.நாவையும் கேள்விக்குள்ளாக்கும் பதாகைகளும் களம் முழுவதும் நிறைந்திருந்தன.

வழக்கமான ஆர்ப்பாட்டம்,முற்றுகை,கைது என்பதோடு அமையாமல் போராட்ட உணர்வெழுச்சி சற்று அதிகமாகவே இருந்தது. தோழர் வைகோ தொடர்ந்து ஒருமணி நேரத்திற்கும் மேலாக போராட்ட முழக்கங்களை எழுப்பியபடி இருந்தார்.கருப்புக் கொடிகளோடு முழக்கமிட்டபடி, நுங்கம்பாக்கம் குளக்கரை சாலையை தோழர்கள் சிறிது சிறிதாக ஆக்கிரமிக்க தொடங்கினர்.முழக்கமிட்டுக் கொண்டிருந்த போராட்டக்குழுவில் ஒரு பகுதியினர் ராஜபக்சேவின் கொடும்பாவியை கொளுத்தும் போது சற்றே பரபரப்பு தொற்றிக் கொண்டது. முழக்கத்தின் வீரியம் அதிகரித்தது. வழக்கமாக தயாரிப்புகளாக வைத்திருந்த தண்ணீர் குடங்களை காவல்துறை எடுத்துவந்து தீயை அணைக்க முயன்ற போது, தோழர்கள் அக்குடங்களை பிடுங்கி உடைத்தனர். இன்னும் ஒரு பகுதியினர் சாலையின் இருவழிகளிலும் அமர்ந்து போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்தனர்.ஒரு கட்டத்தில் முழு நுங்கம்பாக்கமே போக்குவரத்துக்கு வழியின்றி முடங்கிப் போனது.

"தோழர்கள் வன்முறையின்றி முந்திச் செல்லுங்கள்.ஆனால் அடக்குமுறைக்கு அஞ்சாமல் முன்னேறுங்கள்" என தோழர் வைகோ ஒலிபெருக்கியில் தோழர்களைக் கேட்டுக் கொண்டார்.தோழர்கள் முன்னேறி தடுப்பரணை உடைத்தெறிய முயன்ற போது, காவல்துறையில் ஒரு இள ரத்தம், தோழர் ஒருவரின் கழுத்தில் அறைந்தது. திமிறிய கூட்டம், அந்த புதுப்போலிசை நோக்கி கொடிகளோடு அடிக்கப் பாய்ந்தது. ஒன்றிரண்டு வீசுகள் பதாகைகளோடு விழுந்தன.ஓடிவந்த காவல்துறை உயரதிகாரி, அந்த போலிசு இளைஞரை உடனடியாக ஒளித்துப் பதுக்கினார்.இதை எதிர்த்த தோழர்கள் அனைவரும் மல்லை சத்யா தலைமையில் அங்கேயே சாலையில் அமர்ந்து கைதாக மாட்டோம் என பிடிவாதத்தோடு போராட்டத்தை தொடர்ந்தனர்.பின் தோழர் பழ.நெடுமாறன் தோழர்களோடு பேசி,அமைதியாக கலைந்து சென்று காவல்துறை வாகனங்களில் ஏறி, போராட்டத்தை நிறைவு செய்யுமாறு கேட்டுக் கொண்டார். பழ.நெடுமாறன்,வைகோ உள்ளிட்ட தலைவர்களோடு 700க்கும் மேற்பட்ட தோழர்கள் கைதாகி, எழும்பூர் அரங்கத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

போராட்டங்கள் உடனடி வெற்றிக்காக எழுதப்படுபவை அல்ல. போராட்டங்கள் வெற்றிக்கான பாதையின் முன்னகர்வுகள்.இக்கட்டத்தை கடக்காமல், வெற்றியை எட்ட முடியாது.உலகின் மிகப்பெரும் தேசிய இனங்களுள் ஒன்றான நம் தமிழினத்தின் உரிமைகள் மறுக்கப்படும் வரை இத்தகைய போராட்டங்கள் தொடரும். இத்தகைய உணர்வெழுச்சியும் உழைப்பும் தான் அப்போராட்டங்களுக்கு உரமேற்றும்.


==========================

இப்போராட்டங்களின் ஒரு பகுதியாக இன்று கடலூரில் தீயிட்டு தன்னுயிரை மாய்த்துக் கொண்ட தோழர் மணிக்கு வீர வணக்கங்கள்.




























முழு புகைப்படத் தொகுப்பைக் காண இங்கே சொடுக்கவும்.


===================================
=
========
==========================

Friday, June 3, 2011

போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான மன்றம் உருவாக்கம்

கர்நாடக மாநிலத் தலைநகரம் பெங்களூரில் நேற்று வியாழக்கிழமை யூன் 2 ம் நாள் அனைத்து இந்திய அளவில் போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான மன்றம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள Save Tamils இயக்கம், பேராசிரியர் மணிவண்ணன், PUCL மனித உரிமை செயற்பாட்டாளர் திரு. கண குறிஞ்சி மற்றும் திருமதி. அமரந்தா இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கான நட்புறவுக் கழகம் ஆகியோரின் முயற்சியால் தொடங்கப்பட்டுள்ள இந்த மன்றத்தில் கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளாவைச் சேர்ந்த முன்னனி மனித உரிமை அமைப்புகள், பேராசிரியர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பல துறையைச் சார்ந்தவர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

நேற்று காலை நடைபெற்ற இந்த மன்றத்தின் உருவாக்க கூட்டத்தில், Save Tamils இயக்கம் இந்த கூட்டத்திற்கு வந்திருந்தவர்களை வரவேற்று இக்கூட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கிய பின், சனல் 4 செய்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட போர்க்குற்ற காணொளிகள் திரையிடப்பட்டன.




இதை தொடர்ந்து ஐ.நா நிபுணர் குழுவின் போர்க்குற்ற அறிக்கை குறித்து பேராசிரியர் திரு. மணிவண்ணன் அவர்களும், இலங்கையில் தமிழர்களின் இன்றைய நிலை குறித்து திரு. கண குறிஞ்சி அவர்களும் டப்ளின் தீர்ப்பாயம் குறித்து பேராசிரியர் பால் நியூமன் அவர்களும் விளக்கிப் பேசினார்கள்.

பின்னர் கர்நாடகா, ஆந்திரா, கேரளாவைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்தும் இம்மன்றத்தின் தேவை குறித்தும் பின்வரும் கருத்துகளைப் பதிவு செய்தார்கள்.

இலங்கையில் போர் என்ற பெயரில் தமிழினப் படுகொலைதான் நடந்துள்ளது. கடந்த நூற்றாண்டு மனித நாகரிகத்திற்கு ஏராளமானப் பங்களிப்பைச் செய்துள்ளது. ஆனால், இந்த இருபத்தியோராம் நூற்றாண்டு மனித நாகரிகத்தைப் பின்நோக்கி இழுத்துச் செல்கின்றது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கை என்று சொல்லிக் கொண்டு தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கையையே இலங்கை அரசு மேற்கொண்டுள்ளது. பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் என பொதுமக்கள் வாழும் பகுதிகளில் குண்டு வீசி கொன்றதன் மூலம் இலங்கை அரசின் நோக்கமானது இலங்கையில் தமிழர்களை இல்லாது ஒழிப்பதே என்று தெள்ளத் தெளிவாகின்றது.

அண்மைக் காலங்களில் மனிதகுலத்திற்கு எதிரான பல நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன, ’தட்டிக் கேட்பாரின்றி தாங்கள் நினைத்த எந்த நாட்டுக்குள்ளும் நுழையலாம், நினைத்ததை எல்லாம் செய்யலாம்’ என்ற நிலை உருவாகியுள்ளது. இதை மக்கள் வேடிக்கை பார்த்த வண்ணம் இருக்கின்றார்கள்.

இலங்கையில் ஒரு இனப்படுகொலையை நிகழ்த்தியதன் மூலம் இதை ஒரு முன்மாதிரியாக உருவாக்கியுள்ளன ஒடுக்குமுறை அரசுகள். இது தமிழர் பிரச்சனை அல்ல. இது ஒரு ஜனநாயகம் மற்றும் மனித குலத்திற்கானப் பிரச்சனை. இந்த ’இலங்கை முன்மாதிரியை’ இந்தியாவிலும் மேற்கொள்ளும் அபாயம் உள்ளது.

இக்காலகட்டத்தில் மக்களின் மனித நேய உணர்வையே அழித்து வருகின்றன அரசுகள். இந்த மன்றத்தின் வாயிலாக இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலையைப் பரவலாக இந்திய மக்களிடம் கொண்டு செல்வதன் மூலம் இந்த சமூகத்தின் மனிதத் தன்மையை வளர்த்து எடுக்க வேண்டும்.



மேற்கத்திய நாடுகளில் தான் இது போன்ற குற்றங்களுக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் தெற்காசியப் பிராந்தியத்தில் நடந்த அநீதிகளுக்கான நீதி விசாரணைகள் நடந்ததில்லை. எனவே, இலங்கை அரசைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதன் மூலம் இனி இத்தகைய அநீதிகள் நிகழாதவண்னம் தடுக்க வேண்டும்.

இந்த ஐ.நா அறிக்கை இந்தியாவில் உள்ள முன்னணி மனித உரிமையாளர்களுக்கே தெரியவில்லை. இதை மிகவும் பரவலாக்க வேண்டிய பொறுப்பு நம் எல்லோருக்கும் இருக்கின்றது.

இலங்கை முன்மாதிரியை மீண்டும் மீண்டும் பல்வேறு மக்களினங்கள் மீது நடைமுறைப்படுத்தும் அபாயமிருக்கும் இன்றைய சூழலில், போர்க்குற்றங்களுக்கும் இனப்படுகொலைக்கும் எதிரான மன்றம் இன்றியமையாதது என்ற கருத்து எல்லோராலும் முழு மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இம்மன்றத்தின் உடனடி வேலையாக கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் ஐ.நா நிபுணர் குழு அறிக்கையை அறிமுகப்படுத்தி கூட்டங்களை நடத்துவது, வாய்ப்பு இருக்கும் இடங்களில் போராட்டங்களை முன்னெடுப்பது. இம்மன்றத்தை மேற்கு வங்கம், பாண்டிச்சேரி உள்ளிட்ட பிற மாநிலங்களில் பரவலாக்குவது உள்ளிட்டவை முடிவு செய்யப்பட்டுள்ளது.

பின்வரும் கோரிக்கைகள் இந்த மன்றத்தின் முதன்மையான கோரிக்கைகளாக முடிவுசெய்யப்பட்டுள்ளன.



ஐ.நா மற்றும் சர்வதேச சமூகம் நோக்கி,

போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலை புரிந்துள்ள இலங்கை அரசு மீது சார்பற்ற பன்னாட்டு விசாரணை மேற்கொள்ள ஐ.நா மற்றும் சர்வதேச சமூகம் உறுதியான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

இந்திய அரசு மற்றும் இந்தியாவில் உள்ள சனநாயக ஆற்றல்களை நோக்கி,

போர்க்குற்றம் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் செய்ததற்காக இலங்கை அரசின் மீது சர்வதேச விசாரணையை ஆதரித்து அதனை தொடர்ந்து நடத்தக் கோரியும் இந்தியா முழுவதும் உள்ள சனநாயக ஆற்றல்கள் இந்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

மேலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2004 ம் ஆண்டு பதவியேற்றது முதல் இலங்கை அரசுடனான வெளியுறவுக் கொள்கை மற்றும் இராணுவ உதவிகள் குறித்து வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும்.




தமிழக அரசை நோக்கி,

இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடைபெற்றது ஒரு இனப்படுகொலை என்று அங்கீகரித்தும், போர்க்குற்றம் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் செய்ததற்காக இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழக சட்டசபையில் புதிதாக தேர்ந்தேடுக்கப்பட்டுள்ள அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

Thursday, June 10, 2010

ஞாநி அவர்களே! உங்களது மனசாட்சி உங்களை மட்டும் கேள்வி கேட்காதா? ....வெ.தனஞ்செயன்

ஞாநி குமுதம் இதழில் இலங்கையில் நடைபெற்ற அனைத்து இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் (IIFA - 2010) விழாவைப் புறக்கணித்து இருப்பதை தவறு என 'ஒ' பக்கங்களில் கண்டித்து இருக்கிறார். கமலஹாசன் முதல் இராமநாராயணன் வரையான படைப்பாளிகள் இலங்கை IIFA - 2010ஐப் புறக்கணித்து இருப்பது மிரட்டல் அரசியலுக்குப் பயந்துதான் என திசை திருப்புகிறார்.

இலங்கை IIFA-2010 ல் தாங்களும் கலந்து கொள்வதில்லை, மற்ற நட்சத்திரங்களும் கலந்து கொள்ள வேண்டாம். அவ்வாறு கலந்து கொண்டால் அவர்களின் படங்களை தென் இந்தியாவில் புறக்கணிக்க வேண்டியிருக்கும் என்ற முடிவை கீழ்கண்ட, தமிழகத்தைச் சேர்ந்த மற்றும் தென்னிந்திய திரைப்பட சங்கங்களும் இணைந்து கூட்டறிக்கை விடுத்தன.

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்
தென்னிந்திய நடிகர் சங்கம்
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம்
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம்
தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்
சின்னத்திரைக் கலைஞர்கள் சங்கம்
தென்னிந்திய திரைப்படப் பத்திரிகைத் தொடர்பாடல் சங்கம்

இத்தனை சங்கங்களையும் மிரட்டி அடி பணிய வைக்குமளவு பலம் கொண்ட கட்சி தமிழகத்தில் இல்லை என்பது ஞாநி அவர்களுக்குத் தெரியும். ஆளும்தரப்பு இதனை செய்திருக்கும் என்ற சந்தேகம் ஞாநிக்கு வந்திருக்காது என்று நம்புவோம். அப்படி எதாவது கட்சிகள் முயன்றிருந்தால் குறிப்பிட்ட சங்கங்களிடமிருந்து சிறு சலசலப்பாவது எழுந்திருக்கும்.

உண்மையில் ஈழத் தமிழனின் உரிமைக்கான போராட்டம் எந்தத் தீர்வையும் பெற்றுத் தராமல் படுகொலைகளுடனும், சிறைபிடிப்புகளுடனும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது என்ற வலி ஞாநி போன்ற மேல்தட்டு பத்திரிகையாளர்களையும், சில அரசியல்வாதிகளையும் தவிர்த்து எல்லாருக்குமே இருக்கிறது.

அதனால் தான் IIFA- 2010 ல் கலந்து கொள்வதற்கான அழைப்பை தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த திரைத்துறையினர் தாங்களாகவே புறக்கணித்து இருந்தனர். ஞாநியை போன்ற, ஈழப் பிரச்னையில் தவறான கருத்துடைய பத்திரிகையாளர்களாலும், ஆங்கில செய்தி ஊடகங்களில் ஈழம் பற்றிய இருட்டடிப்பு செய்திகளாலும் ஈழத்தமிழ் மக்களுக்கு நிகழும் கொடூரங்கள் வட இந்திய திரைத்துறையையும், மக்களையும் சென்றடையவில்லை.

தமிழ் மக்களின் பிரச்சினைகளைக் கூறி IIFA -2010ல் கலந்து கொள்ளும் இந்தித் திரையுலக பிரபலங்களைக் கலந்து கொள்ள வேண்டாம் எனக் கேட்டு இங்கிருக்கும் அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம், போராட்டம், கூட்டறிக்கை என்பவற்றுடன், தனிநபர்களும் திரைத்துறையினர் மூலமாக முயற்சிகள் மேற்கொண்டனர். அதன் பலனாகத் தான் IIFA -2010ல் முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்ளாமல் பொலிவிழந்தது.

மற்றபடி எல்லாக் காலங்களிலும் கலைஞர்களும், படைப்பாளிகளும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக தங்களது தார்மீகக் கடமைகளை உணர்ந்து குரல் கொடுத்தே வந்துள்ளனர். என்ன காரணத்தினால் ஞாநி மறந்து போனார் என்று தெரியவில்லை.

அடுத்து 'ஓராண்டுக்கு முன் ஏராளமான ஈழத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதற்கு இராஜபக்ஷே அரசு, புலிகள் அமைப்பு இருவரின் தவறான அரசியலுமே காரணம் என்பதை மனசாட்சியுடன் சிந்திக்கும் எல்லாருமே ஏற்றுக்கொள்வார்கள்' என்று எழுதியுள்ளார். அவர்களின் தவறான அரசியல் மட்டுமா காரணம்?
ஞானியின் மனசாட்சி எப்பொழுதுமே அவரைக் கேள்வி கேட்காது போலும். சிங்கள அரசு பயங்கரவாதம் என்ற சொல்லைப் பயன்படுத்தி ஈழத்திலிருந்த சர்வதேச தொண்டு நிறுவனங்களையும், பத்திரிக்கையாளர்களையும் வெளியேற்றி சாட்சியங்களில்லாமல், எந்தவித போர்நெறிகளையும் பின்பற்றாமல் 3.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களைக் குறைத்து 80 ஆயிரம் பேர் மட்டுமே இருப்பதாகக் கூறி 18 மாதங்களுக்கு மேலாக உணவு, மருந்துப் பொருட்களைத் தடை செய்து மருத்துவமனைகள், மக்கள் வாழும் பாதுகாப்பு வலயம் மீது குண்டு போட்டு, தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பொதுமக்கள், போராளிகள் என சகட்டுமேனிக்குப் பாவித்து, இவ்வாறு ஒரு அரசு தனது உள்நாட்டுப் போரை முடிக்க முடியும் என்பது, இந்த நுற்றாண்டின் எவ்வளவு பெரிய கேவலம்.

புலிகள் இயக்கம் எவ்வளவு முற்றுமுழுதான பயங்கரவாத அமைப்பாக இருந்தாலும், அவர்களே மக்களை பலவந்தமாக சிறைபிடித்து இருந்தாலும், அந்த மக்களை மீட்கவே இந்தப் போரை நடத்துகிறோம் என சிங்கள அரசு சொன்னாலும், குறைந்தபட்சம் ஒரு தற்காலிக போர் நிறுத்தமாவ‌து ஏற்படுத்தி போர்க்களத்திலிருந்து பொதுமக்களையாவது சர்வதேச சமூகம் அப்புறப்படுத்தி இருக்க வேண்டும்.

அந்த மக்களுக்கு ஏற்பட்ட உயிர்சேதத்திற்கும், அங்கஹீனத்திற்கும், மனச்சிதைவுக்கும், பறிக்கப்பட்ட வாழ்வுக்கும் எதுவுமே செய்ய முடியாத சர்வதேசமும், ஐநாவும், கள்ள மௌனம் சாதித்த இந்தியாவும், நாடகதாரிகளாய் மாறிப்போன அரசியல்வாதிகளை நம்பி, ஒற்றுமையாய்ப் போராடாமல் போன நாங்களும், இத்தகைய அறிவியல் யுகத்திலும் சர்வதேசத்திலிருந்து தொடர்புகள் துண்டிக்கப்பட்டு உணவு, மருந்து மறுக்கப்பட்டு பதுங்கு குழிக்குள் துரத்தப்பட்ட ஈழ மக்களுக்காக உண்மையை எழுதாத நீங்களும் என நீளும் பட்டியலில் எல்லோரும் குற்றவாளிகள்தான், ஆனால் அதனை அறிய ஞாநியின் மனசாட்சி சுத்தமாக சிந்திக்க வேண்டும்

அடுத்து இந்தக் கொடூரங்கள் முடிந்து ஓராண்டு கழித்து இப்போது கொழும்பில் இந்திய திரைப்பட விழா நடத்தக்கூடாது என்று கோரிக்கை எழுப்புவது அர்த்தமற்றது என்று எழுதியுள்ளார். இலங்கையின் எந்தக் கொடூரங்களும் முடிந்துவிடவில்லை ஞாநி அவர்களே! ஈழ மக்களின் அரசியல் அபிலாஷை எதுவும் நிறைவேறவில்லை. அந்த மக்கள் உரிமை கேட்டதாலே சொந்த மண்ணிலேயே அகதிகளாய் வாழ்கின்றனர். இன்று இலங்கையின் தமிழர் வாழும் வடக்கு தெற்கு பிரதேசங்கள் இராணுவ சிறைகளாகவும், அகதி முகாம்களாகவும் மாற்றப்பட்டுள்ளன. எந்த நேரமும் யாரையும் ராணுவம் கைது செய்து, சித்ரவதை செய்யலாம், காணாமல் போகச் செய்யலாம் என்ற நிலையே உள்ளது. அங்கு வாழும் எல்லா தமிழனையும் சிங்களத் துப்பாக்கி சந்தேகக் கண்கொண்டு கண்காணித்தபடியே உள்ளது.

இப்பொழுதும் அகதிமுகாம்களில் உள்ள மக்களை தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரதிநிதிகள் சந்திக்க முடியாதபடி உள்ளது. கைது செய்யப்பட பத்தாயிரத்துக்கு மேற்பட்ட போராளிகளை ஓராண்டு ஆன பின்னரும் செஞ்சுலுவைச் சங்கங்களே சந்திக்க முடியாதபடி நிலைமை உள்ளது.

போரின் போதும், போரின் பின்னும் நடைபெற்ற மனித உரிமை மீறல்களை விசாரிக்க வேண்டி மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. அதற்கு அத்தாட்சியாக தொடர்ந்து அவர்கள் புகைப்படங்களையும், காணொளிகளையும் வெளியிடுகின்றனர். நடந்த போரில் ஐ.நா.வின் செயலற்ற தன்மையைக் கண்டித்திருப்பதோடு, இதற்கு இலங்கை தண்டிக்கப்படவில்லை என்றால் உலகிலுள்ள மற்ற நாடுகளுக்கும் தங்கள் நாட்டிலுள்ள சிறுபான்மை மக்களை ஒடுக்க ஒரு மோசமான முன்னுதாரணம் ஆகிவிடும் என தொடர்ச்சியாக போர்க்குற்ற விசாரணைகளுக்கு வலியுறுத்துகின்றன. இதிலிருந்து நீண்ட காலம் தப்பிக்க முடியாது.

இவ்வளவு போர்க்குற்றங்களையும் புரிந்த இராஜபக்ஷே நீங்கள் கூறும் அந்த சாதாரண சிங்களர்களின் வாக்குகளால் மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்து, தமிழின சுத்திகரிப்பையும், தமிழர்களின் நிலங்களையும் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றார். எனவே ஈழ மக்களுக்கான உரிமை கிடைக்கும் வரை இலங்கையை தனிமைப்படுத்தும் போராட்டம் தொடரும்.

இனவெறி அரசை தனிமைப்படுத்த இதுபோன்ற முறையைப் பயன்படுத்துவது புதிதல்ல. இனவெறி தென் ஆப்பிரிக்க அரசை வழிக்குக் கொண்டு வர கிரிக்கெட்டில் இருந்து அந்த அணியை விளக்கி வைத்ததும் உதவியது.

மற்றபடி ஈழ தமிழினத்தைத் தேவையில்லாமல் சிங்கள இனத்துடன் ஒப்பிட்டு எழுதி உள்ளீர்கள் . இவ்வளவு பெரிய இந்தியாவில் சுதந்திரப் போராட்டத்தில் வெள்ளையர் ஆட்சியில் எல்லா குடும்பங்களும் நேரடியாக பாதிக்கப்படவில்லை. ஆனால் ஈழ உரிமைப் போராட்டத்தில் ஒவ்வொரு குடும்பமும் ஒரு விலை கொடுத்துள்ளது. எனவே சுதந்திரத்திற்காகவும், உரிமைக்காகவும் போராடுவதை விட ஒரு சிறந்த வாழ்க்கை இருக்க முடியாது என்பதை ஏற்றுகொள்வீர்கள் என நம்புகிறோம்.

சிங்கள அரசு தனது போர்க் குற்றத்தை மறைத்து, தமிழர்க்கு எந்த உரிமையும் தராமல் இழுத்தடித்துக்கொண்டு இருப்பதைத் தடுக்கவே, இது போன்ற புறக்கணிப்புகள். ௦தனிப்பட்ட சிங்களர்கள் மேல் வெறுப்பில்லை. இங்கு நடிக்கின்ற சிங்கள நடிகைகளோ அல்லது தொழில் செய்யும் தனி நபர்களோ எங்களது இலக்கல்ல. உண்மையில் விடுதலைப் புலிகளும் சாதாரண சிங்கள மக்கள் தங்கள் இலக்கல்ல என்பதை அனுபவத்தில் உணர்ந்தே இருந்தனர். அதனால்தான் நான்காம் கட்ட ஈழப் போரில் சர்வதேச அனுமதியுடன் வகைதொகையின்றி ஈழ மக்களை சிங்கள அரசு கொன்றொழித்த போதும், விடுதலைப் புலிகள் சிங்கள மக்களை தாக்கவில்லை. மற்றபடி ஒவ்வொரு இனத்திற்கும் சில பெருமைகள் உண்டு. அந்த வகையில் சிங்கள இனத்திற்கு உள்ள பெருமைகளையும் ஏற்று கொள்கிறோம்.

இப்பொழுதும் நேர்மையான, துணிச்சலான பத்திரிக்கையாளர் என்றால் சிங்களப் பத்திரிகையாளர் லசந்த பெயர் தான் நினைவுக்கு வருகிறது. உங்களைப் போன்றவர்களை நினைத்தால் எரிச்சல்தான் வருகிறது. என்ன செய்ய?
-வெ.தனஞ்செயன்

Tuesday, May 18, 2010

தமிழ் திரை உலகத்திற்கு கவிஞர் தாமரையின் வேண்டுகோள்...Kavingar Thamarai : IIFA: Change the venue out of Colombo


குருதி பிசுபிசுக்கும் கொலைகளத்தில் கூத்து, கும்மாளமா? தடுக்க வேண்டும் தமிழ்த்திரையுலகம்!

குப்புறத் தள்ளிய குதிரை குழியும் பறித்த கதை பழையது. குழியில் போட்டுப் புதைத்துவிட்டு மேலே ஏறிக் கூத்தாடும் கதை புதியது. வருகின்ற ஜுலை 3,4,5 தேதிகளில் இலங்கைத் தலைநகர் கொழும்பில் இதுதான் அரங்கேறப்போகிறது. ஆம். முள்ளிவாய்க்காலில் பல்லாயிரம் தமிழர்களை மொத்தமாய்க் கொன்று புதைத்தவர்கள் கும்மாளமிடத்தான் அய்ஃபா (IIFA) விருது வழங்கும் விழாவைக் கொழும்புவுக்கு மாற்றியுள்ளனர்.

தென்கொரியத் தலைநகர் சியோலில் நடப்பதாக இருந்த சர்வதேச இந்தியத் திரைப்படக்கழக விருது விழாவை சந்தடியின்றிக் கொழும்புக்கு மாற்றியதில் இந்திய அரசுக்கு ஒரு நோக்கம் உள்ளது. கொழும்பின் கையில் படிந்துள்ள தமிழனின் ரத்தக்கறையைத் துடைத்து தன் பாவத்தையும் மறைத்துக்கொள்வதே அது! இந்தியத் தொழில் வணிகக் கூட்டமைப்பான ஃபிக்கி (FICCI) இந்த விழாவில் வைத்து புதிய ஆதாய வாசல்களைத் திறக்கவும், இலங்கைச் சந்தையில் விரிவாக வலைவீசவும் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாகத் தமிழர் பகுதிகளில் மறுநிர்மாணம் என்ற பெயரில் கிடைக்கப் போகும் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ‘கான்ட்ராக்டுகள்’ மீது குறி வைத்துள்ளது. புதிய செல்பேசி சந்தைக்காகவும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
மூன்று நாள் விழாவில் ஒரு நாள் படங்காட்டுவதற்காம்! ஒருநாள் வணிக ஒப்பந்தங்களுக்காம்! ஒருநாள் 20-20 கிரிக்கெட் கேளிக்கைக்காம்! எல்லாவற்றிலும் கவர்ச்சிக்குக் குறைவைக்காமல் இந்திய திரைப்படத் தாரகைகளின் ஆட்டம் பாட்டம் இருக்குமாம்!
ஐய்ஃபாவின் முதல் விருது விழா 2000-ல் லண்டனில் நடைபெற்றது. இது புகழையும், பணத்தையும் வற்றாமல் அள்ளிக்கொடுக்கும் அட்சயபாத்திரம் என்று அப்போதே தெரிந்துவிட்டது. அதிலிருந்தே, கனடா, தென்கொரியா, அயர்லாந்து போன்ற வளர்ந்த நாடுகள் ‘இந்நிகழ்ச்சியை எங்கள் நாட்டில் நடத்துங்கள்’ என்று கேட்க ஆரம்பித்துவிட்டன. இந்நிகழ்ச்சியின் மூலமாகத் தங்கள் சுற்றுலாத்துறை வளம்கொழிக்கும் என்பது இந்நாடுகளின் கணக்கு. நான்காண்டுகளுக்கு முன்பே ஐய்ஃபா விழாவைத் தொலைக்காட்சியில் கண்டுகளித்தவர்கள் 45 கோடிப்பேர். உலக அளவில் ஆஸ்காருக்கு அடுத்த இடம் ஐய்ஃபாவுக்குதான்!
இந்த விழாவை நடத்தவிரும்பும் ஒவ்வொரு நாடும் அதற்காக ஐய்ஃபா அமைப்புக்கு 560கோடி ரூபாய் தரத்தயாராயுள்ளன. அய்ஃபா-2010 விழாவை நடத்துவதற்கான போட்டியில் அயர்லாந்துதான் 2009 இறுதிவரை முன்னணியில் நின்றது. பிறகு தென்கொரியா மூக்கை நீட்டி முந்திக்கொண்டது. 2010 ஜனவரி 26 குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தென்கொரிய அதிபர் லீமியூங்பாக் அவர்களிடம் இதற்கான அறிவிப்பை இந்திய தரப்பு அதிகாரப்பூர்வமாக வழங்கியது.
2010 பிப்ரவரி 27 வரை இந்தப் பட்டியலிலேயே கொழும்பு இல்லை. பிறகுதான் கொழும்பு பெயர் அடிபட்டது. உடனே அதற்குத்தான் என்று உறுதியும் செய்யப்பட்டு விட்டது. ‘இது இலங்கையின் மாபெரும் உலகசாதனை’ என்று சொல்லி மகிழ்கிறார் அந்நாட்டின் சுற்றுலாத்துறை அமைச்சர் அச்சாலா ஜகோடா.
கொழும்பு ஐய்ஃபா விழாவின் முதன்மைத் தூதர் அமிதாப்பச்சன். அவரும் ஷாருக்கானும், ஐஸ்வர்யாராயும் உலகப்புகழ் பெற்ற பாலிவுட் கலைஞர்களும் மேடையில் தோன்றி இலங்கையில் ‘அழகும் அமைதியும் குடி கொண்டிருப்பதை’ உலகமே பார்க்க உதவப்போகிறார்களாம். உலக மக்கள் தீர்ப்பாயம் (People's Tribunal) டப்ளினில் வைத்து இலங்கையைப் போர்க்குற்றவாளியாக அறிவித்த இரண்டு மாதங்களில் எப்படி ‘அழகும் அமைதியும்’ அங்கு குடிகொண்டன என்று அவர்கள் விளக்க வேண்டும்.
தமிழர்களின் வேண்டுகோளை மதித்து அமிதாப் விலகிக்கொண்டதாக ஒரு செய்தி! இது உறுதியானால் மகிழ்ச்சி! மற்றவர்களும் விலகிக்கொண்டு, விழாவை வேறிடத்தில் நடத்த வழி செய்ய வேண்டும். (சல்மான்கான் தான் இப்போதைய தூதர் என்பது கடைசிச் செய்தி!)
சர்வதேச இந்திய திரைப்பட விழா என்று பெயருக்குச் சொல்லப்பட்டாலும் பெரும்பாலும் இந்தித்திரைப்பட விழாவாகவே இதுவரை நடத்தப்பட்டது. ஆனால் இம்முறை தமிழ்த் திரைக்கலைஞர்களையும் இழுக்கச் சந்தடியின்றி ஒரு முயற்சி நடைபெறுகிறது. மணிரத்னத்தின் ‘ராவணன்’ கொழும்பு விழாவில் திரையேறும் என்று வந்த செய்தியை அவர் மறுத்திருக்கிறார். ஃபிக்கியின் ஊடக / கேளிக்கை வணிகப்பிரிவின் தலைவர் திரு. கமலஹாசன் அவர்கள் இவரையும் ரஜினியையும், ரஹ்மானையும் கொழும்பு ஆட்கள் தனித்தனியாக அணுகி அழைத்ததாகவும் இவர்கள் மறுத்து விட்டதாகவும் ஒரு செய்தி. ‘தமிழன் ரத்தம் படிந்த கொழும்பில் விழா நடத்த நாங்கள்தானா கிடைத்தோம்’ என்று சூடாகக் கேட்டாராம் பிரகாஷ்ராஜ். இந்த செய்திகளெல்லாம் உண்மையாக இருக்க வேண்டும் என்பது நம் விருப்பம்.
ஆனால் இது போதாது. தமிழ்த்திரைப்பட அமைப்புகள் உடனடியாகக் களமிறங்கி, இந்திய அளவில் யாரும் கொழும்பு விழாவில் கலந்து கொள்ளவிடாமல் செய்ய வேண்டும். முள்ளிவாய்க்கால் படுகொலையைத்தான் நம்மால் தடுக்க முடியவில்லை. கொலைக்களத்தில் கூத்தடிப்பதையாவது தடுக்கலாம்தானே? இது நம் தமிழுறவுகளுக்கு ஆறுதலாக மட்டுமல்ல, கொழும்புக்கும் அதன் இந்தியக் கூட்டாளிகளுக்கும் நம் உணர்வுகளைச் சொல்லி எச்சரிப்பதாகவும் அமையும் அல்லவா?
இன அழிப்புப் போரை நிறுத்தக்கோரி தமிழ்த்திரையுலகம் போராடியதை யாரும் மறந்திருக்க முடியாது. ராமேசுவரத்துக்குச் சென்று சிங்களவனுக்குக் கேட்கட்டும் என்று குரல்கொடுத்தோம். நடிகர்கள், தொழிலாளர்கள், சின்னத்திரைக் கலைஞர்கள் என்று அடுத்தடுத்து உண்ணாவிரதப் போராட்டம் செய்தோம். பாரதிராஜா, செல்வமணி, மணிவண்ணன், சீமான், அமீர் போன்றவர்கள் திரையுலகின் முழுவலிமையோடும், தமிழக மக்களைத் தட்டியெழுப்பப் பாடுபட்டதைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். எல்லாமே முடிந்துவிட்டது என்று சோர்ந்து விடவோ, ஓய்ந்து விடவோ கூடாது. ஐய்ஃபா விழா கொழும்பில் நடைபெற விடாமல் செய்ய நம்மால் முடியும். கோலிவுட்டின் கோரிக்கையை பாலிவுட்டால் அலட்சியப்படுத்த முடியாது.
நிறவெறி தாண்டவமாடிய தென் ஆப்பிரிக்க வெள்ளை அரசைத் தனிமைப்படுத்துவதில் முக்கியப்பங்கு வகித்த அதே இந்தியாதான், இப்போது தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்கள அரசு உலகில் தனிமைப்பட்டு விடாமல் பாதுகாத்து வருகிறது. இந்தியா செய்வது பச்சை அயோக்கியத்தனம் என்று உணர்த்த இது சரியான தருணம், சரியான வாய்ப்பு! விழிப்புடன் செயல்படவேண்டிய தருணத்தில் தூங்கிவிட்டுப் பிறகு
சீனாவில் நடந்த ஒலிம்பிக் பந்தயத்துக்கான சுடர் இந்தியா வந்தபோது அதை ஏந்தி ஓடிய விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பெயரெல்லாம் மறந்துவிட்டது. திபெத்தில் சீன அரசு நடத்திவரும் அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சுடர் ஏந்த மறுத்த இந்தியக் கால்பந்து வீரர் பெய்ச்சுதங் பாட்டியாவின் பெயர் எல்லாருக்கும் நினைவிருக்கிறது.
பாட்டியாவால் சீன ஒலிம்பிக்கைத் தடுக்க முடியவில்லை. ஆனால் தமிழ்த்திரைப்படக் கலைஞர்கள் மனம் வைத்தால் ஐய்ஃபா 2010 கொழும்பில் நடைபெறாமல் தடுக்க முடியும்.
செய்தக்க அல்ல செயக்கெடும் - செய்தக்க செய்யாமை யானும் கெடும்
என்ற குறளை நினைவுபடுத்தி, என் சக திரைப்படக் கலைஞர்களை ஆதரவு தருமாறு அழைக்கிறேன்.
சென்னை-24
15-05-2010
தாமரை


Celebration & Entertainment in the Blood-shed Killing Fields -
Tamil Film Industry must stop this!
15/05/2010

The story of a horse kicking down the riders and burying them under a trench is
old. In the new story, the horse dances on the same burial ground. That is what is going to
be staged in Colombo on July 3rd to 5th 2010. The tyrants who murdered thousands of
Tamils in the Northern Sri Lanka have intentionally invited the International Indian Film
Academy (IIFA) awards celebrations to Colombo.
IIFA festival was originally scheduled to be held in the South Korean capital
Seoul. Indian government seems to have a hidden agenda in shifting the celebration to
Colombo. The real intention is to wipe out the blood from the hands of the Sri Lankan
government and also conceal its own sin too. The Federation of Indian Chamber of
Commerce (FICCI) also plans to use the opportunity to open the lucrative gates of the Sri
Lankan financial market. More specifically, the Indian business empire aspires to reap the
revenue from government contracts for so-called “reconstruction” of the Tamil areas. In
addition, there seems to be a competition for the emerging cell phone market.
In the three day IIFA festival, they have planned one day for exclusive film
shows! The second day for making commercial deals and the third day for 20-20 cricket!
On all three days, they want to have titillating entertainment by Indian film actrors.
What a shame!
IIFA’s first award ceremony started with London in 2000. Learning that it
generates lot of money and fame, developed countries like Canada, South Korea and
Ireland started asking for conducting this event in their countries. The countries expect
that tourism industry will thrive in their countries. There is some truth in this since 4
years back, 45 crore (450 million) people watched this event on television. IIFA is second
only to the well-known Oscar awards ceremony.
Every country was willing to pay Rs. 560 crores (~ 140 million US Dollars) to
host this event. For example, till the end of 2009, Ireland was known to be in the lead, but
South Korea overtook Ireland in the race. During the Republic Day Celebrations in India
on January 26 this year, the Indian side has officially handed over the authority to the
Guest of Honor, The President of the Republic of Korea, Lee Myung-Bak.
Till February 27, 2010, Colombo was not even in the list. Then suddenly there
was a mention of Colombo’s name. Immediately Colombo was confirmed and
Colombo’s tourism minister Achala Jagoda hailed this decision as the greatest
achievement.
Amitabh Bachchan was named as the Brand Ambassador of the IIFA festival in
Colombo. Actor Shahrukh Khan and Actress Aishwarya Rai and few other popular
Bollywoord film personalities are also supposed to join Amitabh on the stage. They are
supposed to help convince the world that “charm and peace” prevails in Sri Lanka. Just
two months back the People’s Tribunal in Dublin declared Sri Lankan government as a
war criminal. Let these actors and actresses explain the world how things changed in two
months.
We are hearing a news that Amitabh has decided to quit from this event yielding
to the requests from the Tamils, If it is true, we would be happy. Others too should quit
and facilitate moving the festival away from Sri Lanka. The latest development is that
Salman Khan is the new ambassador of the programs.
Even though IIFA has been called as international, this has been predominantly a
Hindi film festival. But this time, there has been a silent attempt to rope in Tamil film
artists. Mani Rathnam denied the news that his new film ‘Ravanan’ will be released in
Colombo.
There were media reports that Kamal Hassan, Rajini Kanth and A.R. Rehman
declined personal invites from IIFA event organisers in Colombo. Kamal Hassan is also
the chairman of FICCI’s “ Media and Entertainment Business Conclave”. It is also learnt
that Prakash Raj shouted “Do you need us (tamil actors) for conducting IIFA in tamil
blood soaked Colombo? ” while declining his invite. We wish these media reports are
genuine.
This is not enough in itself. Tamil film industry should get into action and prevent
any Indian artist from participating in IIFA in Colombo. We were not able to prevent the
slaughter of innocent Tamil civilians by Sri Lankan armed forces in Mullivaaikaal.
Atleast we should prevent these artists from celebrating over our mass graves. This will
not only sooth the troubled hearts of our Tamil brethren, this will also be a chance to
warn Colombo and Indians in complicity with this genocidal regime from hurting Tamils
sentiments.
We would not have forgotten the protests carried out by Tamil film industry to
stop the war against Tamils in Sri Lanka. Actors, film employees, television artists went
on fasting in tandem. Notably, directors Barathi Raajaa, Selva Mani, Manivannan,
Seeman and Amir did their best to spread awareness about the war among the general
public with fullest cooperation from the film industry. We should not be demoralized
over our past failures and come to a false conclusion that everything is out of our hands.
We can prevent IIFA event from taking place in Colombo. Bollywood cannot downplay
the Kollywood’s plea to change the venue of the event.
It was India which stood in forefront to isolate the racial South African
government from the international community to wipe out apartheid from the land. In
recent months, many western countries started isolating Sri Lanka economically, as a sign
of acknowledging the massacre of innocent Tamils by Sri Lakan state. Now it is the same
Indian state which does its best to prevent Sri Lanka from getting isolated from rest of the
world. This is the best opportunity for us to make the world realize the shameful
misdeeds of India. It will be of no good to miss such an opportunity and cry foul over the
missed opportunity at a later stage.
We do not remember even a single Indian sports personality who carried Olympic
torch for Beijing 2008 Olympics in India. But we, do, remember Baichung Bhutia who
refused to lift the flame as a protest against the China’s atrocities in occupied Tibet.
Bhutia could not halt the Olympics games at Beijing. But if Tamil film
personalities are determined, they can prevent IIFA 2010 from taking place in Colombo.
I request the Tamil film fraternity to join hands with me in this effort!
(Thamarai)

http://www.scribd.com/doc/31549532/Thamarai-s-Letter-to-Tamil-Film-Industry

http://www.scribd.com/doc/31549471/Thamarai-s-Letter-to-Tamil-Film-Industry-Eng

Tuesday, May 11, 2010

Monday, May 10, 2010

கொழும்பு இந்திய திரைப்பட விழாவில் பங்கேற்கப் போவதில்லை - மணிரத்னம்....Mani says "NO" to Srilanka

ஜூன் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச இந்தியத் திரைப்பட விருது வழங்கும் விழாவில் பங்கேற்கவில்லை என்று இயக்குனர் மணிரத்னம் கூறியுள்ளார்.

இந்த விருது வழங்கும் விழாவில் இயக்குனர் மணிரத்னம் இயக்கிய ராவணன் திரைப்படத்தின் காட்சிக‌ள் ஒளிபரப்பப்பட உள்ளதாகவும், விழாவில் மணிரத்னம் பங்கேற்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், நாம் அறக்கட்டளை சார்பில் அதன் நிறுவனர்களான சுஹாசினியு‌ம், இயக்குனர் மணிரத்னமும் அன்னையர் தினத்தை முன்னிட்டு 83 பெண்களுக்கு தையல் எந்திரம், மூன்று சக்கர சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை சென்னையில் இன்று வழங்கினர்.




இவ்விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மணிரத்னம், இலங்கையில் நடக்கும் சர்வதேச இந்தியத் திரைப்பட விருது வழங்கும் விழாவில் நான் பங்கேற்கவில்லை. மேலும், நான் இயக்கிய ராவணன் படத்தின் முழு படப்பிடிப்பு இன்னும் முடிவடையவில்லை. ராவணன் படத்தின் சிறப்புக் காட்சிகளும் விருது வழங்கும் விழாவில் வெளியிடப்படவில்லை என்று கூறினார்.

விருது வழங்கும் விழாவில் ஐஸ்வர்யா ராயும், அபிஷேக் பச்சனும் கலந்துகொள்ள இருப்பதாக செய்திகள் வந்துள்ளதே என்று கேட்டதற்கு, ஐஸ்வர்யா ராயும், அபிஷேக் பச்சனும் என் படத்தின் நடித்தவர்கள் என்பதற்காக அவர்களை இலங்கை‌யி‌ல் நடைபெறும் சர்வதேச இந்தியத் திரைப்பட விருது வழங்கும் விழாவில் பங்கேற்க வேண்டாம் என்று நான் எப்படி தடுக்க முடியும். அது அவர்கள் விருப்பத்தைப் பொறுத்தது. நான் பேகவில்லை, அவ்வளவுதான் என்று பதிலளித்தார்.


மணிரத்னம்,
மிகவும் வரவேற்கத்தக்க முடிவு...தமிழ் உணர்வாளர்களின் சார்பாக எங்களது நன்றி .

இனவெறி இலங்கையில் இந்தியக் கலை விழா....இந்தி திரையுலகத்தை கண்டித்து ஆர்பாட்டம் - தொகுப்பு

இந்திய சர்வதேச திரைப்படக் கழகத்தின் விருது விழாவை இலங்கைத் தலைநகர் கொழும்புவில் நடத்த முற்பட்டிருப்பது, இலங்கைத் தமிழர்களின் இனப்படுகொலைக் குற்றத்தை மூடி மறைக்க இந்தியாவும் இலங்கையும் இணைந்து செய்யும் கூட்டுச் சதி என்று தமிழின அமைப்புகள் குற்றம் சாற்றின.




ஐஃபா என்றழைக்கப்படும் இந்தியா சர்வதேச திரைப்படக் கழகத்தின் விருது வழங்கு விழா வரும் ஜூன் 3 முதல் 5ஆம் தேதி வரை இலங்கைத் தலைநகர் கொழும்புவில் நடைபெறவுள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கான தூதராக அமிதாப் பச்சன் பணியாற்றிவருகிறார்.



இந்த விருது வழங்கு விழாவை கொழும்புவில் நடத்தக்கூடாது என்று தமிழர் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், தகவல் தொழில்நுட்ப நெறிஞர்களின் அமைப்பான சேவ் தமிழ் இயக்கம் இன்று சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

சென்னை பூங்கா நகரிலுள்ள நினைவரங்கம் (மெமோரியல் ஹால்) எதிரில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கொழும்புவில் விழா நடைபெறக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து முழங்கங்கள் எழுப்பப்பட்டன.
இனப் படுகொலைக் குற்றத்தை மூடி மறைக்க திரைப்பட விழாவா?

தமிழினப் படுகொலை நடத்தி அந்த இரத்தம் காயும் முன்பே திரைப்பட விழாவா? எனபது போன்ற எதிர்ப்பு முழக்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் எழுப்ப்பப்பட்டன.




ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசிய தமிழ்த் தேச விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலர் தோழர் தியாகு, இலங்கை அரசை போர்க் குற்றவாளி என்று டப்ளினி்ல் கூடிய மக்கள் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், அந்நாட்டுக்கு நற்பெயரை ஏற்படுத்தும் உள் திட்டத்துடனும், அங்கு நடந்த தமிழினப் படுகொலையை மறைக்கும் நோக்குடனும் இந்திய சிங்கள அரசுகள் இணைந்து அரங்கேற்றும் சதித்திட்டமே இந்த விழா என்று கூறினார்.

இரண்டாவது உலகப் போரில் ஹிரோசிமாவிலும், நாகசாகியிலும் அணு குண்டுகள் வீசப்பட்டதாலாயே எப்படி ஜப்பான் அழிந்துபோய்விடவில்லையோ அதேபோல், முள்ளிவாய்க்காலில் நடத்தப்பட்ட தமிழினப் படுகொலையால் ஈழத் தமிழினத்தின் விடுதலைப் போராட்டம் முடிந்துபோய் விடாது என்றும் தியாகு கூறினார்.




இன்றைய உலகில் சந்தையை குறிவைத்தே அரசியல் நடைபெறுகிறது, அதன் ஒரு வெளிப்பாடே இலங்கைச் சந்தையைக் கைப்பற்ற இந்தியப் பெரு நிறுவனங்கள் முயற்சிக்கின்றன, அந்த வணிக நோக்கத்தனை முன்னெடுக்கவே கொழும்புவில் இந்தத் திரைப்பட விழாவை நடத்துவது என்று கூறிய பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலர் விடுதலை இராசேந்திரன், இலங்கைச சந்தையை குறிவைத்தால் தமிழகச் சந்தை பறிபோகும் என்பதை நாம் இந்த வணிகக் கூட்டங்களுக்கு உணர்த்த வேண்டும் என்று கூறினார்.

கொழும்புத் திரைப்பட விழாவை இந்தியாவின் அனைத்துத் திரைப்படக் கலைஞர்களும் புறக்கணிக்க வேண்டும் என்று கூறிய திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் தாமரை, மொழி, இன அடையாளங்களைப் புறக்கணித்துவிட்டு கலை என்று ஏதுமில்லை என்று கூறினார்.




கொழும்புவில் நடைபெறும் இந்தத் திரைப்பட விழாவின் நோக்க்ம வணிகம் தானே தவிர, கலையல்ல என்று கூறிய சேவ் தமிழ் இயக்கத்தின் செந்தில், இந்திய தொழில் நிறுவனங்கள் தங்கள் சந்தையை விரிவாக்கம் செய்துகொள்ள இந்த விழாவை ஒரு முகமாக காட்டி அதன் பின்னணியில் தங்கள் வணிக நோக்கங்களை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளன என்று கூறினார்.

இதில் தமிழர்களாகிய நாம் இந்திய தொழில் வர்த்தக நிறுவனங்களின் கூட்டமைப்பான ஃபிக்கியை குறிவைக்க வேண்டும் என்றும், அதுவே தமிழினப் படுகொலையை மறைத்து விழா நடத்தி தனது வணிக நலன்களை முன்னெடுக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது என்றும் செந்தில் கூறினார்.




இலங்கையில் தமிழினப் படுகொலையை நடத்தி முடித்த அந்நாட்டு அரசியல் தலைமையுடன் கைகோர்த்து தங்கள் வணிக நலன்களை மேம்படுத்திக் கொள்ள முற்படும் இந்திய நிறுவனங்களின் பொருட்களை தமிழர்களாகிய நாம் புறகக்ணிக்க வேண்டும் என்றும் செந்தில் கூறினார்.




கொழும்புவில் திட்டமிட்டபடி இந்திய சர்வதேச திரைப்படக் கழகத்தின் விருது வழங்கு விழா நடந்தால், அதன்பிறகு தமிழ்நாட்டில் இந்தி திரைப்படங்கள் ஓட அனுமதிக்கக் கூடாது என்றும், ஃபிக்கி அமைப்பின் உறுப்பினர்களாக உள்ள நிறுவனங்களின் பொருட்களை தமிழர்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்க வேண்டும் என்றும் பத்திரிக்கையாளர் அய்யநாதன் கேட்டுக்கொண்டார்.




இந்நிகழ்ச்சியில் பேசிய திரைப்பட இயக்குனர் ராம், நமது நடவடிக்கைகள் அடுத்த கட்டத்திற்கு சென்றாக வேண்டும் என்றார். சந்தனக்காடு தொடரின் மூலம் அப்பாவி மக்கள் பட்ட இன்னல்களைப் பதிவு செய்த்தைப் போல, வன்னியில் நடந்த படுகொலையையும் ஒரு திரைப்படத்தின் மூலம் நிச்சயம் தான் பதிவு செய்யப்போவதாக இயக்குனர் கெளதமன் கூறினார்.



கொழும்பு திரைப்பட விழாவில் மணிரத்தினத்தின் ராவணா திரைப்படம் திரையிடப்பட்டால் அதனை தமிழ்நாட்டில் அனுமதிக்கக் கூடாது என்றும், அத்திரைப்பட விழாவிற்கு எதிராக என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து இயக்குனர்கள் கலந்தோலாசித்து முடிவெடுப்போம் என்றும் உதவி இயக்குனர் ராம் மோகன் வர்மா கூறினார்.

நன்றி - வெப்துனியா தமிழ்

Friday, May 7, 2010

இனவெறி இலங்கையில் இந்தியக் கலை விழா....இந்தி திரையுலகத்தை கண்டித்து ஆர்பாட்டம்



மே 8 | காலை 9 . 30 AM | சனிக்கிழமை | Memodial Hall, சென்னை (near Chennai Central Station) | தமிழினப் படுகொலை நடந்த இனவெறி இலங்கையில் விருது விழா நடத்துவதை கைவிட கோரி கண்டன ஆர்ப்பாட்டம் | சேவ் தமிழ் குழு - தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை இளைஞர்களின் குழு



May 8 | Satruday| 9.30 AM | Memorial Hall , Chennai (near Chennai Central Station) | Protest to condemn and urge Bollywood to change the venue of IIFA 2010 from Colombo| Save Tamils | A group of IT Professionals, Chennai

Tuesday, May 4, 2010

இந்தி திரையுலகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்...Protest to condemn and urge Bollywood to change the venue of IIFA 2010 from Colombo


மே 8 | காலை 9 . 30 AM | சனிக்கிழமை | Memodial Hall, சென்னை (near Chennai Central Station) | தமிழினப் படுகொலை நடந்த இனவெறி இலங்கையில் விருது விழா நடத்துவதை கைவிட கோரி கண்டன ஆர்ப்பாட்டம் | சேவ் தமிழ் குழு - தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை இளைஞர்களின் குழு



May 8 | Satruday| 9.30 AM | Memorial Hall , Chennai (near Chennai Central Station) | Protest to condemn and urge Bollywood to change the venue of IIFA 2010 from Colombo| Save Tamils | A group of IT Professionals, Chennai

Monday, May 3, 2010

இந்தி திரையுலகத்தை கண்டித்து ஆர்பாட்டம்...Protest to condemn and urge Bollywood to change the venue of IIFA 2010 from Colombo

இந்தி திரையுலகத்தை கண்டித்து ஆர்பாட்டம்.....

உறவுகளுக்கு வணக்கம்,

தமிழர் இனப்படுகொலை நடந்த இடத்தில் இன்னும் குறுதிசுவடுகள் கூட காயாத இடத்தில் இந்தி திரையுலகினர் தமிழினப் படுகொலையை மறைத்து களியாட்டத்தில் மூழ்கிட திட்டமிடுகின்றனர். தமிழக இளைஞர்களின் சார்பாக நம் எதிர்ப்பை தெரிவிப்பது காலத்தின் கட்டாயம்.




விருது வழங்கும் விழாவின் இடத்தை கொழும்பில் இருந்து வேறு நாட்டுக்கு மாற்றக் கோரி நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் குழும உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை வெற்றியடை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேழம் உரு ( மே 8) | காலை கூ : ங0 (9 . 30 AM) | காரிக்கிழமை | நினைவரங்கம், சென்னை | தமிழினப் படுகொலை நடந்த இனவெறி இலங்கையில் விருது விழா நடத்துவதை கைவிட கோரி கண்டன ஆர்ப்பாட்டம் | சேவ் தமிழ் குழு - தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை இளைஞர்களின் குழு

May 8 | Satruday| 9.30 AM | Memorial Hall , Chennai | Protest to condemn and urge Bollywood to change the venue of IIFA 2010 from Colombo| Save Tamils | A group of IT Professionals, Chennai

Friday, April 9, 2010

நளினி விடுதலையில் இருந்தது சட்டச் சிக்கலா? அரசியல் சிக்கலா..?

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக சிறைப்பட்டிருக்கும் நளினியை விடுவிக்க முடியாது என்று அறிவித்திருக்கும் தமிழக அரசைக் கண்டித்து, தமிழக அரசின் இந்த அறிவிப்பில் ஒளிந்திருப்பது அரசியல் சிக்கலா அல்லது சட்டச் சிக்கலா என்கிற தலைப்பில் கடந்த ஞாயிறன்று மாலை சென்னை தி.நகரில் உள்ள தெய்வநாயகம் மேல்நிலைப்பள்ளியில் ஒரு கருத்தரங்கு நடைபெற்றது.



கீற்று.காம் ஏற்பாடு செய்திருந்த இந்தக் கருத்தரங்கில் எழுத்தாளர் பூங்குழலி, கவிஞர் தாமரை, பத்திரிகையாளர் டி.அருள் எழிலன், வழக்கறிஞர் மக்கள் சட்டம் சுந்தர்ராஜன், விடுதலை ராஜேந்திரன், தோழர் தியாகு ஆகியோர் பேசினார்கள். பேசுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்த தோழர் பாரதி கிருஷ்ணகுமார் அவசர வேலையால் வர முடியாமல் போனதாகச் சொல்லப்பட்டது.

5 மணி என்று அழைப்பிதழில் போட்டிருந்தாலும் 6 மணிக்குத்தான் துவங்கியது. 100 பேராவது வந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். வலையுலகில் இருந்து வளர்மதி, பாரதிதம்பி, தமிழ்நதி வந்திருந்தார்கள். கார்ட்டூனிஸ்ட் பாலாவை முதன்முறையாக நேரில் சந்தித்தேன்.

பேசிய பேச்சாளர்கள் அனைவருமே நளினியை விடுதலை செய்ய முடியாது என்பதற்கு தமிழக அரசு தெரிவித்திருக்கும் நகைச்சுவையான சில காரணங்களைச் சுட்டிக் காட்டி படு காட்டமாக தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தார்கள்.

பேசியவர்களின் பேச்சுக்களை என் நினைவில் இருக்கின்றவரையில் இங்கே எழுதுகிறேன். கவிஞர் தாமரை பேசியபோதுதான் நான் குறிப்பெடுக்கத் துவங்கியதால் கொஞ்சம் முழுமையானதாக இருக்காது. மன்னிக்கவும்..

முதலில் பூங்குழலி பேசினார்.

இவர் எழுதிய 'தொடரும் தவிப்பு' என்ற புத்தகம் சமீபத்தில்தான் வெளியாகியுள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதானவர்களை மல்லிகை இல்லத்தில் வைத்து சிறப்பு விசாரணைப் படையினர் எப்படியெல்லாம் சித்ரவதை செய்து துன்புறுத்தினார்கள் என்பது பற்றி அந்த வழக்கில் கைதாகி பின்னர் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட செல்வி என்கிற பெண் சொல்கின்ற கதைதான் அந்தப் புத்தகம். சமீபத்தில்கூட கீற்று இணையத் தளத்தில் இது பற்றிய கட்டுரைகள் வந்திருந்தன.

நளினியை சைதாப்பேட்டை பேருந்து நிலையத்தில் வைத்து பிடித்து ஒரு ஆட்டோவில் வைத்து அவரை அழைத்துச் சென்றபோதே சி.பி.ஐ. அவர் மீது பாலியல் ரீதியான கொடுமையை ஆரம்பித்துவிட்டது என்று குற்றம்சாட்டினார் பூங்குழலி.

நளினிக்கு இந்தப் படுகொலை குறித்து முன்கூட்டியே தெரியவே தெரியாது என்றும், ஸ்ரீபெரும்புதூருக்குச் சென்ற பின்புதான் இந்தத் தகவல் அவருக்குச் தெரிந்திருக்கிறது என்கிற உண்மையையும் தெரிவித்தார் பூங்குழலி.

நளினியை விடுதலை செய்தால் ராயப்பேட்டை பகுதியில் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்ற காமெடியான காரணத்தைக் கிண்டலடித்தார் பூங்குழலி.

அடுத்துப் பேச வந்தார் வழக்கறிஞர் மக்கள் சட்டம் சுந்தர்ராஜன்.

நளினியின் வழக்கில் இருந்த மிக முக்கியமான சட்டப் பிரச்சினைகளை எளிமையாக என்னை மாதிரியான பட்டிக்காட்டான்களும் புரிந்து கொள்ளும்வகையில் எடுத்துரைத்தார்.





நளினி உளவியல் ரீதியாக சரியாகவில்லை என்று தமிழக அரசு சொன்ன காரணத்தை மறுத்து அதற்கு உதாரணமாக சாரதா என்கிற பெண்மணிக்கு வேலூரில் நடந்த கொடுமையை வெளிப்படுத்தினார் சுந்தர்ராஜன். டிரெயினில் வந்து கொண்டிருந்த சாரதா தான் கொண்டு வந்த பெட்டி மாறிவிட்டதை உணர்ந்து அதனைத் திருப்பிக் கொடுப்பதற்காக போலீஸ் ஸ்டேஷன் சென்று “இந்தப் பெட்டியைத் தவறுதலாக நான் எடுத்து வந்துவிட்டேன்.. இதை வைத்துக் கொண்டு எனது பெட்டியை எப்படியாவது கண்டுபிடித்துக் கொடுங்கள்” என்று கேட்டிருக்கிறார்.

ஆனால் ஸ்காட்லாண்டு யார்டு போலீஸாருக்கே அட்வைஸ் கொடுக்குமளவுக்கு புத்திசாலிகளான நமது போலீஸார் அந்த சாரதா மீதே திருட்டுக் குற்றம் சுமத்தி அவரை வேலூர் ஜெயிலுக்கு அனுப்பிவிட்டனர். அப்போது சாரதாவிடம் 5000 ரூபாய் பணம் இருந்திருக்கிறது. சிறைக்குள் நுழைந்தவுடன் சாரதாவிடம் பணம் இருப்பதைக் கண்ட அங்கிருந்த கன்விக்ட் வார்டன்கள் அதனை தாங்கள் பத்திரமாக வைத்திருப்பதாகச் சொல்லி வாங்கியிருக்கிறார்கள்.

சில நாட்கள் கழித்து சாரதா அந்தப் பணத்தை வார்டன்களிடம் திருப்பிக் கேட்க அவர்கள் தர மறுத்திருக்கிறார்கள். உடனேயே இதை மேலதிகாரிகளிடம் சொல்லிவிடுவேன் என்று சாரதா அவர்களை மிரட்டியிருக்கிறார். இதனால் கோபமான பெண் வார்டன்கள் சிலர் ஒன்று சேர்ந்து சாரதாவை நிர்வாமணாக்கி தனி அறையில் வைத்து அடித்து உதைத்திருக்கிறார்கள்.

இதனைத் தற்செயலாகப் பார்த்த நளினிதான் அந்த அறைக்குள் வம்பாக நுழைந்து சாரதாவை உயிருடன் மீட்டிருக்கிறார். அதோடு தன்னைப் பார்க்க வந்து தனது வக்கீலிடம் சாரதாவின் கதையைச் சொல்லி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியர் கார்பஸ் வழக்குத் தொடர்ந்து சாரதாவின் விடுதலைக்காக உதவியிருக்கிறார் நளினி.

இந்தக் கதையைச் சொன்ன சுந்தர்ராஜன்.. “இந்த அளவுக்கு உளவியல் ரீதியாக மேம்பட்டுள்ளவரை அரசு ஏற்கவில்லை என்றால் இது கண்துடைப்பு காரணம்தான்..” என்றார்.

மேலும் சில நீதிபதிகளிடம் இருந்து சில நல்ல தீர்ப்புகளும், பலரிடமிருந்து எதிர்மறையான தீர்ப்புகள் வெளிவருவது இப்போதெல்லாம் அதிகரித்து வருவதாகச் சொன்னார். வெளிமாநிலத்தில் இருந்து வரும் நீதிபதிகளால்தான் ஓரளவுக்கு நியாயமான தீர்ப்புகள் கிடைத்துக் கொண்டிருப்பதாகச் சொன்னார்.

நீதிபதிகளில் சிலர் பதவி உயர்வு வேண்டியும், ஓய்வு பெற்றதற்குப் பின்னர் கிடைக்கக் கூடிய ஏதாவது ஒரு கமிஷன் தலைவர் பதவிக்காகவும் ஆளும் கட்சியைப் பகைத்துக் கொள்ளாத அளவுக்கு தீர்ப்புகளை வழங்கி வருவதாகவும் குற்றம்சாட்டினார். பெருவாரியான மக்களை ஊடகங்களும், அதன் முதலாளிகளும் திட்டமிட்டு திசை திருப்பிவருவதாகவும் குற்றமும் சுமத்தினார்.

இதற்கு உதாரணமாக டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் நளினி விடுதலை பற்றிய நேருக்கு நேர் நிகழ்ச்சி நடந்தது பற்றிக் குறிப்பிட்டார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வழக்கறிஞர் ராதாகிருஷ்ணனிடம் சேனலின் நிருபர் ஒரு தனி நபராகக் கருத்துச் சொல்லும்படி மீண்டும், மீண்டும் வற்புறுத்தியதை சுட்டிக் காட்டினார். அந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோதே பொதுமக்களிடமிருந்து எஸ்.எம்.எஸ். மூலம் கருத்துக்கள் கேட்கப்பட்டு அவையும் அங்கே தட்டச்சு செய்யப்பட்டு ஸ்கிரால் நியூஸாகக் காட்டப்பட்டதையும் நினைவுகூர்ந்தார்.

அதில் நளினியைத் தூக்கில் போடு.. சாகும்வரை வெளியில் விடாதே என்பது போன்ற எஸ்.எம்.எஸ்.கள் ஓடிக் கொண்டிருந்ததையும் சுட்டிக் காட்டிய சுந்தர்ராஜன், “இவை போன்று கூர்ந்து கவனித்தால் மட்டுமே தெரியக்கூடிய வகையில் நளினியைப் பற்றி எதிர்மறையான கருத்துக்கள் மக்கள் மத்தியில் வலுக்கட்டாயமாக திணிக்கப்படுகின்றன” என்றார்.
ஹிந்து பத்திரிகையின் தலையங்கத்திற்கு வந்திருந்த விமர்சனங்களில் ஒன்றில் நளினியின் தன் கை, கால்களை அசைக்க முடியாத அளவுக்கு அங்கஹீனப்படுத்திவிட்டு பின்பு அவரை வெளியில் விடலாம் என்று ஒரு தமிழர் எழுதியிருந்ததையும் குறிப்பிட்டார் சுந்தர்ராஜன்.

மேலும் அவர் பேசும்போது, “மக்களிடம் நளினியின் விடுதலை விஷயத்தை இன்னமும் மிக நெருக்கமாக கொண்டு செல்ல வேண்டும். அதற்கு ஒரு அமைப்பு தேவைப்படுகிறது. மானாட மயிலாட ஆட்டத்தையும், சீரியல்களையும் பார்த்துக் கொண்டு எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருக்கின்ற இந்த சமூகத்தில் இது பற்றிய ஒரு விழிப்புணர்வை நாம்தான் ஏற்படுத்த வேண்டும். வேறு வழியில்லை..

மக்கள் ஒன்றை வசதியாக மறந்துபோய்விடுகிறார்கள். இன்னைக்கு நளினி சிறையில் இருக்கிறார் 19 வருஷமா.. நாளை இது போன்ற நிலைமை நம் குடும்பத்தில் ஒருவருக்கோ.. அல்லது நமக்கோ நடக்கலாமே.. வருமுன் காப்பது நமக்குத்தானே நல்லது..?” என்று சொல்லித் தன் உரையை முடித்துக் கொண்டார்.

அடுத்து வந்த பத்திரிகையாளர் அருள்எழிலன் துவக்கத்திலேயே காட்டமாகத்தான் ஆரம்பித்தார்.

“நளினி விடுதலையைப் பத்தி பேசும்போது எல்லாருமே ராஜீவ்காந்தி கொலையைப் பத்தியே பேசுறாங்க.. ஏன் ராஜீவ்காந்தியை கொலை செஞ்சாங்கன்றதை மட்டும் கேக்க மாட்டேங்குறாங்க..? எங்க தேசியத் தலைவர் ராஜீவ்காந்தியை கொன்னுட்டாங்க.. கொன்னுட்டாங்கன்னு சொல்றாங்க.. ஏன் கொன்னாங்க..?

அமைதிப்படை.. அமைதிப்படைன்னு சொல்லி ஒண்ணை இலங்கைக்கு அனுப்புனாங்க.. அந்தப் படைகளால் இலங்கையில், ஈழத்தில் கொன்றொழிக்கப்பட்டவர்களை யாராவது நினைத்துப் பார்த்தார்களா..? அந்த அமைதிப்படையை சைத்தானின் படைகள்ன்னு சொன்னாங்களே.. ஞாபகமிருக்கா..? அமைதிகாப்புப்படை சைத்தானின் படைன்னா அதை அனுப்புன சைத்தான் யாரு..?

பயங்கரவாதம், பயங்கரவாதக் குற்றம்னு சொல்றாங்க.. நாட்டுல ராஜீவ்காந்தி கொலை மட்டுமா நடந்திருக்கு.. இன்னும் எத்தனையோ கொலைகள் நடந்திருக்கு.. நடந்துக்கிட்டுத்தான் இருக்கு. ஆனா அத்தனை கொலைக் குற்றவாளிகளுமா 19 வருஷம் ஜெயில்ல இருக்காங்க..? இல்லையே.. பத்து வருஷம், பதினாலு வருஷத்துல வெளில வந்தாங்களே.. நளினிக்கு மட்டுமே ஏன் விடுதலை மறுப்பு..?

நளினி விடுதலையை நாம் இப்படியே விட்டுவிடக்கூடாது.. எந்த வகையிலாவது.. நம்மால் முடிந்த வகையிலாவது ஏதேனும் ஒரு போராட்டத்தைத் துவக்கியாவது நளினியை விடுதலை செய்தாக வேண்டும்..” என்றார் அருள் எழிலன்.

அடுத்துப் பேச வந்தார் கவிஞர் தாமரை.

அமைதியாக ஆரம்பித்த இந்தப் புரட்சிப் பெண் கவிஞரின் பேச்சு போகப் போக சூடு பிடித்தது.

முதலில் இரண்டாண்டுகளுக்கு முன்பாக நளினிக்காக தான் ஒரு கையெழுத்து இயக்கம் துவக்கிய கதையைச் சொன்னார் தாமரை. அந்தத் தொடர்பு இருப்பதினால்தான் இந்தக் கூட்டத்துக்குத் தான் வந்ததாகவும் தெரிவித்தார்.





“அண்ணா நூற்றாண்டையொட்டி கைதிகள் விடுவிக்கபட இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டபோது நளினியின் ஞாபகம் எனக்கு வந்தது.. அவரை விடுதலை செய்ய ஒரு கையெழுத்து இயக்கம் நடத்தலாம் என்று எனக்குத் தோன்றியது. இதற்காக எனது நண்பர்கள்(நண்பர்களின் பெயரைச் சொன்னார். எனக்குத்தான் மறந்துபோய்விட்டது. மன்னிக்கவும்) சிலருடன் தொடர்பு கொண்டு பேசினேன். அவர்களும் உதவிக்கு வர ஒத்துக் கொண்டார்கள்.

இந்த கையெழுத்து இயக்கத்திற்காக எனது சினிமா பாடல் எழுதும் தொழிலைக்கூட ஒரு வருடத்திற்கு ஒத்தி வைத்துவிட்டு இதிலேயே மூழ்கினேன். பலருக்கும் தொலைபேசி செய்து இதைப் பற்றிச் சொல்லி அவர்களிடத்தில் அதை அனுப்பி வைத்து கையெழுத்து பெற்றேன். சிலரிடம் நானே நேரில் சென்றேன்.. கவிஞர் வாலி, கவிஞர் வைரமுத்து, கவிஞர் பா.விஜய் என்று திரையுலகப் பிரபலங்களெல்லாம் கையெழுத்திட்டிருந்தார்கள்.

ஓரளவுக்குக் கையெழுத்துக்கள் கிடைத்தவுடன் முதல்வரைச் சந்திக்க நேரம் கேட்டு கனிமொழிக்கு போன் செய்தேன். அப்போது கனிமொழி ‘இதுக்கெதுக்கு அப்பாவை பார்க்கணும்.. டெல்லிதான முடிவு பண்ணணும்..?' என்றார். அவருக்கு நான் இது சம்பந்தமான சட்டப் பிரிவுகளை விளக்கி ‘இல்லை.. இல்லை.. ஐயாதான் செய்யணும்.. நேரம் மட்டும் வாங்கிக் கொடுங்க' என்றேன். கனிமொழியும் அதில் கையெழுத்துப் போட்டார். அதோடு கலைஞரை சந்திக்க நேரமும் வாங்கிக் கொடுத்தார்.

என்னுடைய நண்பர்களோடு கலைஞரைச் சந்தித்து அந்தக் கையெழுத்துப் பிரதியைக் கொடுத்தேன். அப்போது கலைஞர் சொன்ன பதில் என்ன தெரியுமா..? ‘சோனியாவுக்கு ஆட்சேபணையில்லைன்னா எனக்கும் ஒண்ணுமில்லைம்மா.. விட்ரலாம்..' என்றார் கலைஞர். அப்போது நான் ‘ஐயா.. இது தமிழக அரசு சம்பந்தப்பட்ட விஷயம். இதற்கும் மத்திய அரசுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை.. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 161-வது செக்ஷன்படி மாநில அரசே இதில் முடிவெடுக்கலாம்..' அப்படீன்னு சொன்னேன்.. ‘சரி.. பார்க்குறேம்மா..' என்று சொல்லியனுப்பினார். கூடவே ‘தூக்குத் தண்டனை கூடவே கூடாது.. தமிழ்நாட்டில் நீங்கள் அதனை அனுமதிக்கவே கூடாது' என்றும் சொல்லிவிட்டுத்தான் வந்தேன்.

ரெண்டு வருஷமாயிருச்சு.. ஒண்ணும் மாற்றமில்லை.. இப்போது நமது வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் கோர்ட்டில் வழக்குத் தொடுத்தவுடன் மத்திய அரசின் வழக்கறிஞர் வந்து சொல்கிறார்.. ‘இந்த விஷயத்தில் மத்திய அரசிடம் கருத்து கேட்க வேண்டிய அவசியமே இல்லை.. மத்திய அரசுக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை..' என்று... அப்படீன்னா நீங்க இத்தனை நாளா ‘கைதியை விடுதலை செய்வது மத்திய அரசின் கையில் உள்ளது' என்று சொல்லி வந்தது மக்களை ஏமாற்றவா..?

பத்தாண்டுகள் கழித்த ஆயுள் தண்டனைக் கைதிகளை வருடாவருடம் விடுவித்த நீங்கள் 19 வருஷத்தைக் கழித்த நளினியை விடுதலை செய்ய மத்திய அரசுக்குத்தான் அதிகாரம் உண்டுன்னு எப்படி சொல்ல முடியும்..? ஏன் இப்படி எங்களை ஏமாத்தினீங்க..?

இடைல திடீர்ன்னு சொன்னாங்க.. ஒரு கைதி தன்னை விடுதலை செய்யக் கோரவே முடியாது. அதற்குச் சட்டத்தில் இடமில்லை அப்படீன்னு.. உண்மைதான். ஆனா அதே கைதி மற்றக் கைதிகளைப் போலவே தன்னையும் சமமா பாவிக்கணும்.. சமமா நடத்தணும் அப்படின்னு அரசுக்கு கோரிக்கை வைக்க உரிமையுண்டு. இதைத்தான் சென்னை உயர்நீதிமன்றம் சுப்பிரமணியசுவாமி வழக்கில் மிக முக்கிய பாயிண்ட்டா வைச்சு நளினி விடுதலை குறித்து நடவடிக்கைகள் எடுக்கும்படி தமிழக அரசுக்கு ஆர்டர் போட்டுச்சு..

அப்புறம் நீங்க என்ன பண்ணுனீங்க..? ‘அறிவுரைக் கழகம்'னு ஒண்ணை நியமிச்சீங்க.. அது யார், யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா..? வேலூர் ஜெயில் சூப்பிரடெண்ட், வேலூர் மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் அதிகாரி, ஒரு மனநல மருத்துவர், அப்புறம் ஒரு சமூக சேவகர்.. இவங்கதான்.. இவங்க எல்லாரும் சேர்ந்துதான் சிபாரிசு பண்ணிருக்காங்களாம் ‘நளினியை விடுதலை செய்யக் கூடாது'ன்னு..

நான் சொல்றேன்.. அந்த மனநல மருத்துவரும், சமூக சேவகரும் ‘நளினியை விடுதலை செய்யணும்'னு சொல்லியிருப்பாங்க.. ஆனா மற்ற மூன்று அரசு அதிகாரிகளும் அரசுக்கு எதிராக எப்படிச் சொல்வாங்க..? பேசுவாங்க.? ஏன்னா அரசு அறிவுரைக் கழகம் அமைக்கிறதுக்கு முன்னாடியே நளினியை விடுவிக்கக் கூடாது அப்படீன்னு ஒரு முடிவை எடுத்திருச்சு.. முன்னாடியே எடுத்த அந்த முடிவைத்தான் இப்போ அவங்க அமல்படுத்தியிருக்காங்க..

சரி.. நளினியை உள்ள வைச்சிருக்கீங்க.. அவங்க பெத்த பிள்ளை.. அரித்ரான்ற அந்தப் பொண்ணு தன் தாயைப் பார்க்க விரும்புது.. அதுக்கு அனுமதிகூட கொடுக்க மாட்டேங்குறாங்க.. இது என்ன நியாயம்..? நீங்கதான் வெளில விடலை.. சரி அதை ஒரு பேச்சுக்கு ஒத்துக்குவோம்.. ஆனா அவங்க பொண்ணையாவது வர விடலாம்ல.. ஏன் விட மாட்டேங்குறீங்க..?

இதுல ஒரு வார்த்தை(ஆங்கிலத்தில் ஒரு வார்த்தையைச் சொன்னார். அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை) இந்த வார்த்தையை தமிழக அரசு கோர்ட்டில் பயன்படுத்தி வருகிறது.. ஆனால் முதல்முதல்லா இந்த வார்த்தையைப் பயன்படுத்தியதே சுப்பிரமணியம்சுவாமிதான். போயும், போயும் அந்தாள் சொன்ன வார்த்தையைக் கடன் வாங்கித்தான் நளினி வழக்குல நீங்க சமாதானம் சொல்லிக்கணுமா..?

நளினி செய்தது ‘தேசத்துரோகம்' என்கிறார்கள். எல்லாரும் ஒண்ணை வசதியா மறந்திர்றாங்க.. ‘நளினி செய்தது தேசத்துரோகம் அல்ல.. அவர் பயங்கரவாதியும் அல்ல' அப்படீன்னு உச்சநீதிமன்றமே தெள்ளத் தெளிவாச் சொல்லியிருக்கு.. ஏன்னா நளினியின் அண்ணன் பாக்யநாதன் தன்னோட வாக்குமூலத்துல நளினி தன்கிட்ட சொன்னதா ஒரு விஷயத்தை சொல்லிப் பதிவு செஞ்சிருக்காரு. அது ‘நளினிக்கு ஸ்ரீபெரும்புதூர் போறவரைக்கும் ராஜீவ்காந்தி கொலை செய்யப்படுகிற விஷயம் தெரியவே தெரியாது' என்பதுதான். இதை சுப்ரீம் கோர்ட்டும் மனப்பூர்வமா ஏத்துக்கிட்டிருக்கு.. அப்புறம் இதுல எங்க இருக்க பயங்கரவாதம்.. தேசத் துரோகம்..?

‘எது பயங்கரவாதம்'..? ‘எது தேசத்துரோகம்'னு நான் சொல்லட்டுமா..? 1984-ல போபால் விஷவாயு சம்பவத்துல பல்லாயிரக்கணக்கான உயிர்களை பறிச்சாங்களே அந்தக் கம்பெனி யூனியன் கார்பைடு நிறுவனம்.. இன்னிவரைக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு கொடுக்கலை.. இப்பவும் அந்த ஆலைக்கு எதிராக ஆலையின் எதிராகவே மக்கள் போராடிக்கிட்டிருக்காங்க.. அந்த மக்களுக்கு நஷ்ட ஈட்டை வாங்கித் தர முடிஞ்சதா உங்களால..?

இது போதாதுன்னு அந்தக் கம்பெனி இப்ப பெயரை மாத்திக்கிட்டு மறுபடியும் இந்தியாவுக்குள்ளே தொழில் நடத்த வந்திருக்கு. நம்ம அரசும் அதை வரவேற்றிருக்காங்க. இப்ப யாரு பயங்கரவாதி..? எது தேசத்துரோகம்..?

அடுத்தது சமீபத்துல அமெரிக்காவுடன் இந்தியா செய்து கொண்டுள்ள அணுசக்தி ஒப்பந்தம்.. இந்த ஒப்பந்தப்படி என்னன்னு பார்த்தீங்கன்னா இந்த அணுசக்தி ஆலைல ஏதாவது ஒரு விபத்து ஏற்பட்டுட்டா அதுக்கான நஷ்ட ஈட்டை கேட்கவே மாட்டோம்னு கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்காங்க..

நாளைக்கு நிஜமாவே ஏதாவது ஒண்ணு ஆகிப் போயி, விபத்து ஏற்பட்டு மக்களுக்கு பாதிப்புன்னா அதுக்கு யாரு பொறுப்பு..? இது தேசத்துரோகமில்லையா..? அப்ப மன்மோகன்சிங்கை தூக்குல போட்டிரலாமா..?

‘ராஜீவ்காந்தி பெரிய தலைவர்.. அவரைக் கொன்னது தப்பு'ங்குறீங்க..? அவர் செத்துப் போய் 19 வருஷமாச்சு.. இன்னும் எந்த அடிப்படையில எந்த அடிப்படைச் சட்டத்துல அவரை பெரிய தலைவர்ன்னு சொல்றீங்க..? இன்னும் 20 வருஷம் கழிச்சாலும் ராஜீவ்காந்தி செத்தவர் செத்தவர்தான்.. அதுல ஒண்ணும் மாற்றமில்லை..

‘இவங்க செஞ்சது தீவிரவாதம்'ங்கிறாங்க.. உச்சநீதிமன்றம் என்ன சொல்லுச்சு.. ‘தடா சட்டம் செல்லாது'ன்னு ஒரு தீர்ப்பைச் சொல்லுச்சே.. அப்பவே இது ‘தீவிரவாதம் இல்லை'ன்னு ஆகிப் போச்சே.. ஆனா அப்பவே என்ன செஞ்சிருக்கணும்.. சாதாரண குற்ற நடைமுறைச்சட்டப்படி இந்த வழக்கை திரும்பவும் விசாரிச்சிருக்கணுமா இல்லையா..? ஆனா இவங்க துரதிருஷ்டம்.. ராஜீவ் கொலை வழக்கை வழக்கை தடா சட்டப் பிரிவின்படி விசாரித்தது சரிதான்னு ஒரு விதிவிலக்கு கொடுத்ததால இவங்க வழக்கை மறுபடியும் விசாரிக்க முடியாம போச்சு..

இந்த அறிவுரைக் கழகம் நளினியை விடுதலை செய்ய முடியாது என்பதற்காக சொன்ன காமெடியான அந்தக் காரணங்களை பார்ப்போம்..

நளினி படிச்சிருக்காருன்றதுக்காக அவரை விடுவிக்க முடியாதுன்னு சொல்லிருக்காங்க.. அப்ப படிக்காம இருந்திருந்தா வெளில விட்ருப்பாங்களா..? இல்லாட்டி சிறையில் கஞ்சா வித்துக்கிட்டிருந்தா மட்டும் விடுதலை செஞ்சிருப்பாங்களா? உங்களுடைய அறிவுரைக் கழகம் என்னய்யா எதிர்பார்க்குது..?

அடுத்தது ‘அவர் மன்னிப்பு கேட்கவில்லை' என்கிறார்கள்.. நளினி தப்பே செய்யலையே.. அப்புறம் எதுக்கு அவர் மன்னிப்பு கேட்கணும்..? சரி.. அப்படியே வைச்சுக்கலாம். மன்னிப்பு கடிதம் கொடுத்தா விட்ருவீங்களா.. இப்ப நான் லெட்டர் வாங்கித் தரவா..? விட்ருவீங்களா..? சொல்லுங்க.. என்னதான் சொல்ல வர்றீங்க..?

அப்புறம் சொல்றாங்க.. அவங்க ஒரு குழந்தைக்குத் தாயாக இருப்பதையெல்லாம் ஒரு கணக்குல எடுத்துக்க முடியாதுன்னு.. அப்போ தாயா இல்லாம இருந்தா விட்ருப்பீங்களா..? குழந்தைகள் விஷயத்துல இருக்கு.. இல்லை.. இந்த ரெண்டு ஆப்ஷன்தாங்க இருக்கு.. வேறென்ன இருக்கு..?

‘சட்டம் ஒழுங்கு சீர்கெடும்'னு ராயப்பேட்டை ஆய்வாளர் சொல்லியிருக்காரு.. ஆமாமா.. நளினி விடுதலையானவுடனே அப்படியே மெளண்ட் ரோட்டு பத்தி எரியும்.. ஒருத்தரும் ரோட்டுல நடக்க முடியாது.. பாருங்க.. காரணம் சொல்றாங்களாம் காரணம்..

இப்ப உங்களுக்கு என்ன பிரச்சினை..? ராயப்பேட்டைல அவர் இருக்குறதுதான் பிரச்சினைய...? வேண்டாம்.. நான் கோடம்பாக்கத்துல என் வீட்ல கூப்பிட்டு வைச்சுக்குறேன்.. வெளில விடுங்க.. நான் பார்த்துக்குறேன்.. இதுவும் பிடிக்கலையா..? வெளிநாட்டுக்கு போயிரணுமா..? என் செலவுல நான் அனுப்பி வைக்கிறேன்.. அவங்க பொண்ணு இருக்குற நாட்டுக்கே அனுப்பி வைக்கிறேன்.. சொல்லுங்கய்யா..

‘நளினி குற்றத்தை ஒப்புக் கொள்ளவில்லை' என்கிறார்கள். பிரியங்கா காந்தி வந்து நளினியை சந்திச்சிட்டுப் போனப்ப அவங்க என்ன சொன்னாங்க.. ‘நளினி தான் செஞ்சதுக்காக ரொம்ப வருத்தப்பட்டாங்க.. வேதனைப்பட்டாங்க' அப்படீன்னு சொன்னாங்களா இல்லையா..? அப்புறமென்ன..?

இது அத்தனையும் கேலிக்கூத்து.. பச்சைப் பொய்.. முன்கூட்டியே திட்டமிட்டு நளினியை விடுதலை செய்யக்கூடாது என்று எழுதி வைத்துக் கொண்டு மாநில அரசு நாடமாடுகிறது. கலைஞர் எனக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. என்னை ஏமாற்றிவிட்டார்.

ஆனாலும் இன்னும் ஒரேயொரு சான்ஸ் இருக்கு.. நீதிமன்றத்தில் இப்ப நான் கேட்ட அத்தனை கேள்வியையும் நீதிபதி கேட்கத்தான் போறார்.. ஒருவேளை நீதிமன்றத்தில் இருந்து ஒரு வாய்ப்பு நமக்கு வந்தாலும் வரலாம்.. அந்த நம்பிக்கையோடு இருப்போம்..” என்று தனது நீண்ட பேச்சை முடித்துக் கொண்டார் கவிஞர் தாமரை.

அடுத்து பேச வந்தவர் விடுதலை ராசேந்திரன்.


“கருணாநிதியை சந்திக்க கனிமொழியிடம் நேரம் கேட்டபோது கனிமொழி சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். தாமரைதான் அதனைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.. என்ன இருந்தாலும் நம்ம எல்லாரையும்விட கனிமொழிக்குத்தானே தனது தந்தையைப் பற்றி நன்கு தெரியும். அதுனாலதான் தெள்ளத் தெளிவா ‘டெல்லிலதான அந்த மனுவைக் கொடுக்கணும்'னு சொல்லியிருக்காங்க..” என்று டைமிங் காமெடியோடு தனது பேச்சைத் துவக்கினார்.

“நளினிக்கு தன்னை விடுதலை செய்யக் கோரும் உரிமை நிச்சயம் உண்டு. இந்திய அரசியல் சட்டம் ஒவ்வொரு கைதிக்கும் அந்த உரிமையைக் கொடுத்திருக்கிறது.. ஏதோ அறிவுரைக் கழகம் ஒன்றை அமைத்தார்கள். எதற்கு அந்த அறிவுரைக் கழகம்..? அதுதான் டெல்லியிலிருந்து அறிவுரைகள் கிடைக்கிறதே.. சோனியாகாந்திதானே அதுக்கு லீடர்..?

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161-வது பிரிவின்படி மாநில அரசுகள் நினைத்தால் தாங்கள் விரும்பிய கைதிகளுக்கு விடுதலை வழங்கலாம். இதற்கு எந்தவித வழிமுறைகளும் கிடையாது.. அறிவுரைக் கழகம் அமைக்க வேண்டும் என்கிற விதிமுறையும் கிடையாது. ஆனாலும் இந்த வழக்கில் மட்டும் அறிவுரைக் கழகத்தை அமைத்துக் கொண்டார்கள். காரணம் அப்போதுதானே டெல்லியில் இருந்து வருகின்ற அறிவுரையைக் கேட்க முடியும்..?

இங்கே ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டாக வேண்டும்.. ராஜீவ் கொலை வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட ஜெயின் கமிஷனின் இடைக்கால அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது, காங்கிரஸ் அரசின் ஆதரவில் ஐ.கே.குஜ்ரால் தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிப் பொறுப்பில் இருந்தது.

ஜெயின் கமிஷன் அறிக்கையில், ‘ராஜீவ் கொலை வழக்கில் தி.மு.க.வினருக்கும் பங்கு இருக்கிறது' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் காரணமாக அப்போது அமைச்சர் பதவியில் தி.மு.க. அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும்படி காங்கிரஸ் வற்புறுத்தியது. ஆனால் தி.மு.க. அதனை ஏற்கவில்லை. இந்த ஒரு காரணத்துக்காகவே அன்றைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.. அதே காங்கிரஸ் கட்சியுடன் அல்லவா இப்போது நீங்கள் கூட்டணி வைத்திருக்கிறீர்கள்..? அதே போன்ற சூழ்நிலைக்குப் பயந்துதான் இன்று தமிழனின் மானத்தை திமுக காங்கிரஸ் காலடியில் அடகு வைத்துள்ளதா?

நளினி விடுதலை குறித்து, இங்கேயிருக்கின்ற பல அரசியல் கட்சிகள்.. ஏன் இடதுசாரிகள்கூட குரல் கொடுக்கத் தயாராக இல்லாதபோது, பொது மக்கள் கருத்தை நளினிக்கு ஆதரவாக உருவாக்குவது மிக மிக அவசியமானது.

‘தனி ஈழத்தை அமைத்தே தீருவேன்' என்று கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பேசிய செல்வி.ஜெயலலிதாகூட, ஒரு பெண் என்ற வகையில்கூட நளினி விடுதலை குறித்து கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

‘நளினி குற்றத்தை ஒப்புக் கொள்ளவில்லை' என்று கூறுகிறார்களே, நான் கேட்கிறேன்.. எத்தனையோ தேர்தல்களில் நீங்கள் தோல்வியடைந்திருக்கிறீர்கள். அப்படித் தோற்றபோது குறைந்தபட்சம் நாங்கள் மக்கள் ஆதரவை இழந்துவிட்டோம் என்பதை நீங்கள் ஒப்புக் கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்கு இந்தக் குறைந்தபட்சத் தார்மீகப் பொறுப்புகூட இல்லாதபோது, நளினி மட்டும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்..?

‘பயங்கரவாதம்'.. ‘தீவிரவாதம்'.. என்கிறார்கள். ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த புலனாய்வு அதிகாரியான டி.ஆர்.கார்த்திகேயன் தான் எழுதிய புத்தகத்தில் எழுதியுள்ளதை இங்கே நினைவு கூற விரும்புகிறேன். அவர் இந்த வழக்கில் ‘தடா சட்டம் மட்டும் இல்லையென்றால் இவர்களுக்கு தண்டனை பெற்றுத் தந்திருக்க முடியாது' என்று கூறியுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

காரணம் தடா சட்டத்தில் ஒரு டி.எஸ்.பி. முன்பாக ஒரு கைதி கொடுக்கின்ற வாக்குமூலம் நீதிமன்றத்தில் செல்லுபடியாகும். இந்த ஒன்றை வைத்துத்தான் அவர்கள் 26 பேருக்கும் பூந்தமல்லி செஷன்ஸ் கோர்ட்டில் தூக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்தார்கள். ஆனால் உச்சநீதிமன்றத்தில் என்னாச்சு..? அங்கே உடைத்தெறியப்பட்டதே..

இந்திராகாந்தியின் படுகொலை நடந்தபோது டெல்லியில் மட்டும் 3000 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். குற்றம் செய்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்..?

அண்ணல் காந்தியார் கோட்சே என்னும் பார்ப்பனானால்தான் கொலை செய்யப்பட்டார். அப்போது சென்னை ரேடியோவில் இரங்கல் உரை நிகழ்த்திய பெரியார் ‘இந்தத் தேசத்திற்கு காந்தி தேசம் என்று பெயர் வையுங்கள்' என்றார். கூடவே ‘தமிழ்நாட்டில் இதனால் எந்த வன்முறையும் நிகழக் கூடாது' என்றும் கேட்டுக் கொண்டார்.

இங்கே, நீதிமன்றத் தீர்ப்புகளைக்கூட அரசியல் தீர்மானிக்கும் அவல நிலை நிலவி வருகிறது. ராஜீவ் படுகொலை என்ற பெயரில், எத்தனை தமிழர்களின் உயிர் பறிக்கப்பட்டிருக்கிறது? கோடியக்கரை சண்முகம் என்பவரை அடித்தே கொன்றிருக்கிறார்களே..?

ராஜீவ் கொலை வழக்கு விசாரணையில். இந்திய அமைதிப் படை வெளியேற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் 12 நாட்கள் தண்ணீர்கூட குடிக்காமல் உண்ணாவிரதம் இருந்து உயிரை விட்டாரே திலீபன். அவருடைய உயிரைக் காப்பாற்றும்படி அப்போதைய அமைதி காப்புப் படையின் தளபதி கல்கத், அப்போதைய தூதுவர் தீட்சித்திடம் எவ்வளவோ மன்றாடியும் இந்திய ஏகாதிபத்தியம் அசைந்து கொடுக்கவில்லையே.. போராளி திலீபனின் உயிரை பறித்தது இந்திய அரசாங்கம் அல்லவா? பார்ப்பனீயப் பயங்கரவாதம் இல்லையா இது..?

இப்போது ஜெயந்திரர் வழக்கில் என்ன நடக்கிறது..? அந்த வழக்கில் அரசுத் தரப்பின் முக்கியச் சாட்சியே பல்டியடித்துவிட்டார். அந்த வழக்கு விசாரணையில் தினம்தோறும் சாட்சிகள் பல்டியடிப்பதுதான் தொடர்கிறது.. இந்த இருள்நீக்கி சுப்பிரமணியனை காப்பாற்றும் நோக்கில் இந்த தி.மு.க. அரசு செயல்படுகிறது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. ஆனால் நளினிக்கு எந்த விதத்திலும் உதவ மறுக்கிறது..

நளினியை மட்டும் விடுதலை செய் என்று நாங்கள் கேட்கவில்லை. அநீதியாக சிறைக்குள் இருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார் என்று இந்த வழக்கில் சிறையில் இருக்கும் அனைவரையும் விடுவிக்க வேண்டும்..

பிரியங்கா நளினியைச் சந்தித்ததால் அவர் கருணை காட்டுகிறார் என்கிறார்களே.. ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். உண்மையில் அதற்குப் பிறகுதான் ஈழத்தில் போர் தீவிரமடைந்தது.. மே-21 அன்று ராஜீவ் நினைவு தினம் வருகிறது என்பதால் அதற்கு முன் பிரபாகரனை கொலை செய்யவேண்டும் என்பதற்காகத்தானே, மே 20-ம் தேதியன்று முள்ளிவாய்க்காலில், பிரபாகரன் போன்ற ஒரு உடலைக் காட்டினார்கள். இது திட்டமிட்ட சதி..” என்று சொல்லி முடித்தார்..

கடைசியாக தோழர் தியாகு பேசுவதற்காக வந்தார்.

பல சட்டப் புத்தகங்களில் இருந்து முந்தைய தீர்ப்புகளைச் சுட்டிக் காட்டி பல்வேறு ஆதாரங்களுடன் நிறுத்தி, நிதானமாகப் பொறுமையாகப் பேசிய இவருடைய பேச்சும் அருமையாக இருந்தது.



“இந்திய அரசியலமைப்புச் சட்டம் 161-வது பிரிவின்படி தமிழக அரசே ஒரு கைதியை எந்தவித நிபந்தனையுமின்றி விடுவிக்கலாம். 432-435 வரையிலான சட்டங்கள் மூலம் விடுதலை பரிசீலனை என்றால்தான் அறிவுரைக் கழகம் அமைக்கப்படுதல் வேண்டும்.

சென்னை உயர்நீதிமன்றம் 161-வது பிரிவின்படிதான் நளினியின் விடுதலையை பரிசீலிக்க உத்தரவிட்டது. ஆனால் தமிழக அரசுதான் தேவையே இல்லாமல் அறிவுரைக் கழகத்தை அமைத்து நேரத்தை ஒப்பேற்றியது.

பொதுவாக நாடு முழுவதும் எந்த நீதிமன்றங்களும் தண்டனை காலத்திற்கு முன்பாகவே கைதிகளை விடுவித்ததில்லை.

நக்ஸலைட் கலியப்பெருமாள், அனந்தநாயகி வழக்கில் ஸ்டேட்ஸ்மேன் பத்திரிகையின் நிருபர் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இவர்களது கருணை மனுவை விசாரியுங்கள் என்று மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் வேண்டுகோள்தான் வைத்தது. மத்திய, மாநில அரசுகள் அசைந்து கொடுக்கவில்லை. அதனால் அந்த மனுவை தானே விசாரித்த உச்சநீதிமன்றம் கலியபெருமாளுக்கும் மற்றவர்களுக்கும் வாழ்நாள் பிணை கொடுத்தது. அதில்தான் அவர்கள் அனைவரும் வெளியில் வந்தார்கள். இது ஒரு வரலாறு..

பரூவா வழக்கில் வி.ஆர்.கிருஷ்ணய்யர் தீர்ப்பு சொன்னபோது, ‘ஒரு குற்றவாளிக்கு எட்டு ஆண்டுகள் தண்டனையே போதுமானது. அதற்கு மேல் அவனை சிறையில் வைத்தால் நாட்டுக்கும் நல்லதல்ல.. அவன் சார்ந்த சமூகத்திற்கும் நல்லதல்ல' என்று தெளிவாகவே சொன்னார்.

மிகச் சமீபத்தில் சட்டீஸ்கர் மாநிலத்தில் ஒரு கைதி 45 ஆண்டுகளாகச் சிறையில் இருந்தது தெரிய வந்து அவரை விடுவித்தார்கள். இன்னமும் சட்டீஸ்கர் மாநிலச் சிறைகளில் சிலர் விசாரணைக் கைதியாகவே 20 வருடங்கள், 25 வருடங்களாக அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஏதோ ‘நளினி வெளியில் வந்தால் ஆட்சிக்கு எதிராக சட்டம் ஒழுங்கு கெடும்.. தமிழ்நாட்டில் ரத்த ஆறு ஓடும்' என்கிறார்களே.. காந்தியாரை சுட்டுக் கொன்ற வழக்கில் நாதுராம் கோட்சேயின் சகோதரரான கோபால் கோட்சேவுக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருந்தது. இந்த கோபால் கோட்சேவுக்கு கொலையில் நேரடி பங்கில்லை. நளினியைப் போலவே தெரிந்து வைத்திருந்ததுதான்.

14 ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டு கோபால் கோட்சே தன்னை விடுவிக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆயுள் தண்டனை என்றால் அது அவர்கள் உயிருடன் இருக்கும்வரையில் சிறையில் இருப்பதுதான் என்றது நீதிமன்றம். ஆனால் அந்த கோபால் கோட்சேயை முன் விடுதலையில் விடுவித்தது அப்போதைய மகாராஷ்டிரா காங்கிரஸ் அரசு.

செய்த கொலை தேசத்தந்தை காந்தியாரின் படுகொலை. இப்போது ஆட்சியில் இருந்ததோ காங்கிரஸ் அரசு.. ஆனாலும் கோபால் கோட்சேயை விடுவித்தது. எதனால்..? இந்த கோபால்கோட்சே வெளியில் வந்த பிறகு என்ன செய்தார்..?

அமெரிக்க டைம்ஸ் பத்திரிகைக்கு பேட்டியளித்தார். ‘காந்தியை கொன்றதற்கு நீங்கள் வருந்துகிறீர்களா..?' என்ற நிருபரின் கேள்விக்கு கோபால்கோட்சே பதில் சொல்கிறார் ‘நான் ஏன் வருந்தவேண்டும்..? எனக்கு துளிக்கூட வருத்தமில்லை..' என்றார். இதுவும் இந்தியாவில் கிடைத்த நீதியால் விளைந்ததுதான்.

இப்படி இந்தியா முழுவதிலுமே பல்வேறு வழக்குகளில் பல்வேறு வகையான தீர்ப்புகளும், வித்தியாசமான பார்வைகளும் வெளிப்பட்டுள்ளன. முதலில் நீதிக்கு இந்தியா முழுவதும் சமத்துவம் வேண்டும்.. நளினி வழக்கில் தமிழக அரசு திட்டமிட்டு தான் என்ன நினைத்ததோ, என்ன செய்ய நினைத்ததோ அதனை அறிவுரைக் கழகத்தின் மூலம் செய்து காட்டிவிட்டது.

உச்சநீதிமன்றத்தில் ஒரு முறை ‘தூக்குத் தண்டனை என்பது தேவைதான். ஆனால் அதனை அரிதிலும் அரிதான வழக்குகளில்தான் வழங்க வேண்டும்' என்று தீர்ப்பளித்திருந்தார்கள். பகத்சிங் கொலை வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி டி.கே.பகவதி தீர்ப்பு சொல்லும்போது, ‘அரிதிலும் அரிதான வழக்கில் மட்டுமே தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும் என்றால் இது அரிதிலும், அரிதான வழக்கு என்று யார் எப்படி முடிவு செய்வது..?' என்ற கேள்வியை எழுப்பினார்.

யூகோஸ்லாவியாவின் பிரதமர் டிட்டோ கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை அந்நாட்டு நீதிமன்றம் அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று விடுவித்தது. இதையடுத்து டிட்டோவின் மனைவியிடம் நிருபர்கள் கேள்வி கேட்டார்கள். ‘உங்கள் கணவரைக் கொன்றவர்களை நீதிமன்றம் விடுவித்துவிட்டதே.. இதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று..?' அந்த அம்மையார் திருப்பிக் கேட்டார்.. ‘அதுதான் நீதிமன்றமே அவர்களை நிரபராதீகள் என்று விடுவித்திருக்கிறதே.. நீங்கள் எப்படி அவர்களை குற்றவாளிகள் என்று அழைக்கலாம்..?' என்றார். இதுவெல்லாம் வரலாற்று உதாரணங்கள்..

‘நளினி விடுதலையானால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போகும்' என்கிறார்களே.. உச்சநீதிமன்றத்தால் முன்பு 21 பேர் விடுதலையானார்களே..? அப்போது தமிழ்நாடு என்ன பற்றியா எரிந்தது..?

முதலில் ராஜீவ்காந்தி கொலை வழக்கை ஒரு பயங்கரவாத, தீவிரவாத வழக்காகவே பார்க்கக் கூடாது.. இதனை உச்சநீதிமன்ற நீதிபதிகளே தெள்ளத் தெளிவாகத் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்கள். ‘இந்திய அமைதி காப்புப்படை இலங்கைக்குச் சென்றபோது அங்கிருந்த மக்களுக்குச் செய்த கொடுமைகளுக்குப் பழிக்குப் பழியாகத்தான் இந்தப் படுகொலை நிகழ்ந்திருக்கிறது. இதில் எந்த பயங்கரவாதமும் இல்லை. தீவிரவாதமும் இல்லை.. தடா சட்டம் இதற்குப் பொருந்தது' என்றுதான் அவர்கள் தீர்ப்புச் சொன்னார்கள்.

நளினிக்கு தூக்குத் தண்டனை கொடுத்த விஷயத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகளிடத்தில் ஒருமித்தக் கருத்து ஏற்படவில்லை. இரண்டு நீதிபதிகள் தூக்குத் தண்டனை வழங்கலாம் என்று சொல்ல ஒருவர் மட்டும் ‘தேவையில்லை. இதில் அவரது பங்கு மிகச் சாதாரணமானது' என்று சொல்லி நளினிக்கு ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்படவுள்ளார் என்கிற விஷயமே ஸ்ரீபெரும்புதூருக்குச் சென்ற பின்புதான் தெரியும் என்கிற உண்மையை எடுத்துக் காட்டிச் சொல்லியிருக்கிறார்.

இன்னொரு நீதிபதி தனது தீர்ப்பில் நளினிக்கு ஏன் மரண தண்டனை என்கிற காரணத்தை எழுதும்போது ‘ராஜீவ்காந்தி கூடவே பதினைந்து காவல்துறையினர் இறந்து போயிருக்கிறார்களே..' என்று உருகியிருக்கிறார். ஆனால் ஈழத்தில் இந்திய அமைதிக்காப்புப் படையால் கொல்லப்பட்ட, வதைபட்ட, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அப்பாவி மக்களை அவர் கணக்கிலேயே எடுத்துக் கொள்ளவில்லை.. அந்த ஆயிரக்கணக்கான மக்களைவிடவும் இறந்து போன காவலர்களின் உயிர் மேலானதா..?

இதே உச்சநீதிமன்றத் தீர்ப்பில் வேறொரு செய்தியும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அது தவறானது.. இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு அது நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு அதன் பின்தான் நாட்டுக்காக நிறைவேற்றப்பட்டது என்று ஒரு நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக் காட்டியிருந்தார்.

நான் கேட்கிறேன்.. இந்தியப் பாராளுமன்றத்தில் என்றைக்கு இந்திய இலங்கை ஒப்பந்தம் முன் வைக்கப்பட்டு உறுப்பினர்களிடம் கருத்து கோரப்பட்டு நிறைவேற்றப்பட்டது? பொதுவாக நாம் வேறு நாடுகளுடன் செய்து கொள்ளும் ஒப்பந்தங்கள் பாராளுமன்றத்தின் முன் வைக்கப்படுவதில்லை. அதற்கு அரசியல் சட்டத்தில் அவசியமும் இல்லை. அரசியல் சட்ட முன் வடிவு.. திருத்தம் செய்வதாக இருந்தால் மட்டும்தான் அவைகள் அவையில் வைக்கப்படும். அப்படியிருக்க இந்த நீதிபதியின் இந்தக் கருத்து பொய்யானது.

நான் ஆயுள்தண்டனைக் கைதியாக சிறையில் இருந்தபோது அரசிடம் தண்டனை குறைப்பு கேட்டு விண்ணப்பித்து முறைப்படி அறிவுரைக் கழகத்தைச் சந்தித்து மனு கொடுத்து அதன் பின்புதான் விடுவிக்கப்பட்டேன். அதன் பின்பு இது குறித்து நான் எழுதிய கட்டுரையில், ‘ஐயா கலைஞரே.. நான் ஏழாண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்துவிட்டேன்.. ஆனால் என்னைவிடவும் அதிகமாக 14, 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவிப்பவர்களெல்லாம் உள்ளே இருக்கிறார்களே.. அவர்களையெல்லாம் என்ன செய்யப் போகிறீர்கள்..?' என்று கேட்டிருந்தேன். எனது கட்டுரையை ‘முரசொலி'யில் பிரசுரித்தபோது இந்த வரிகளை மட்டும் நீக்கிவிட்டு பிரசுரித்திருந்தார் கலைஞர்.

சுப்பிரமணியம் சுவாமி இப்போது ஒன்றைச் சொல்லிக் கொண்டிருக்கிறார். இந்த வழக்கில் ‘விடுதலை குறித்து சி.பி.ஐ.தான் கருத்துச் சொல்ல வேண்டும்.. மற்றவர்களுக்கு அதிகாரமில்லை' என்று.. குற்றநடைமுறைச் சட்டம் 435-வது பிரிவின்படி விடுதலை கோரினால் மட்டும்தான் சிபிஐயிடம் கேட்க முடியும்.. சிபிஐ தலையிட முடியும்.. இது அரசியலமைப்புச் சட்டம் 161-வது பிரிவின்படி கேட்கப்பட்டுள்ளது. இதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை.. சுப்பிரமணியம் சுவாமியை ஆரம்பப் பாடசாலையில் போய் படித்துவிட்டு வரச் சொல்லுங்கள்..

மேலும் அரசியலமைப்புச் சட்டம் 72-வது பிரிவின்படி குடியரசுத் தலைவரே எந்தக் குற்றவாளியையும் எந்தக் காரணத்தையும் தெரிவிக்காமல் சிறையில் இருந்து விடுதலை செய்யலாம். இது அரசியல் அமைப்புச் சட்டம் அவருக்குக் கொடுத்துள்ள தனி சுதந்திரம்..

அப்சல்குருவின் விடுதலையின்போதும் உச்சநீதிமன்றம் தெள்ளத் தெளிவாக இதையேதான் சொன்னது.. ‘அப்சல் குரு எந்த தீவிரவாத அமைப்பிலும் உறுப்பினராக இல்லாதவர்... அதனால் அவர் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டம் பாய்ந்தது செல்லாது' என்றது.. அப்சல் குருவிடம் விடுதலை குறித்து கேட்டபோது, ‘விடுதலையானதில் எனக்குச் சந்தோஷம்தான்.. ஆனால் இது அநீதியானது' என்றார்.

‘கருத்து' அமைப்பு நடத்திய கூட்டத்தில் இல.கணேசன் அப்சல்குருவை விடுவித்தது தவறு என்று வாதிட்டபோது நான் இதைத்தான் அவரிடம் கேட்டேன்.. “நான் அப்சல் குரு பற்றி பேப்பரில் படித்துதான் தெரிந்து கொண்டேன்..” என்று சொல்லி நழுவிவிட்டார்.

‘ஏற்கெனவே நளினியின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைத்திருக்கும் சூழலில் மறுபடியும் ஒரு சலுகையை அவர் பெற முடியுமா? அதனை சட்டம் அனுமதிக்கிறதா?' என்றெல்லாம் கேட்டார்கள். 164-வது சட்டப் பிரிவின்படி ஒரு குற்றவாளிக்கு எத்தனை முறைகள் வேண்டுமானாலும் தண்டனைக் குறைப்பு செய்யலாம். இப்படி ஒரு உச்சநீதிமன்றத் தீர்ப்பே உள்ளது.

‘ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார். தேசத் தலைவர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டார்' என்கிறார்கள். ‘போபர்ஸ் திருடன், ஈழ மக்களின் துரோகி'யான ராஜீவ்காந்தியைத் தண்டிக்கும் உரிமை அந்த மக்களுக்கு உண்டு. அதனால்தான் தண்டித்தார்கள். இதில் ஒன்றும் தவறில்லையே..

இன்றைக்கு தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட நளினி விடுதலையை ஆதரிக்கும் அமைப்பின் கடிதம் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. அதில் கையெழுத்திட்டவர்களெல்லாம் என்ன சொல்லப் போகிறார்கள்..? என்ன செய்யப் போகிறார்கள்..?” என்று நீண்ட விளக்கமளித்துப் பேசினார்.

கடைசியாக கீற்று.காம் சார்பில் பிரியா நன்றிகூற நிகழ்ச்சி முடிவடைந்தது.

இந்தப் பேச்சில் நான் குறிப்பெடுத்ததில் இருந்துதான் எழுதியுள்ளேன். ஏதேனும் தவறுகள் இருந்தால் பெரிதும் மன்னிக்கவும்..

இதோ இன்று தீர்ப்பே வந்துவிட்டது. "நளினியை விடுவிக்கவே முடியாது!" என்று..!

இதற்கான காரணங்களாக நீதிபதிகள் சொல்லியிருப்பது, “ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்டவர் நளினி. பின்னர் இது கருணை ரீதியில் பரிசீலிக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. எனவே சராசரி ஆயுள் தண்டனைக் கைதிகளைப் போல முன்கூட்டியே விடுதலை செய்வது உள்ளிட்ட எந்த சலுகைகையும் எதிர்பார்க்க முடியாது.

சி.பி.ஐ. வழக்குகளில் மாநில அரசால் தனித்த எந்த முடிவையும் எதிர்பார்க்க முடியாது, பொது மன்னிப்பு கோரவும் முடியாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளதை இந்த கோர்ட் ஏற்கிறது. அதேபோல சிறை ஆலோசனைக் குழுவின் பரிந்துரை மற்றும் அது தெரிவித்துள்ள காரணங்களையும் கோர்ட் ஏற்கிறது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை முன்கூட்டியே திட்டமிட்டு சதி செய்து கொலை செய்த செயலில் சம்பந்தப்பட்டுள்ள நளினி முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு கோர முடியாது.” என்பதுதான்.

இது மிகவும்அநீதியான தீர்ப்பு.. கொலை நடப்பதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பு மட்டுமே தெரிந்து கொண்ட ஒரே காரணத்திற்காக 19 வருடச் சிறைத் தண்டனை என்பது அநீதி.. அவர் ஒரு பெண்.. அதிலும் ஒரு குழந்தைக்குத் தாய் என்கின்ற ரீதியிலாவது பரிசீலித்து அவரை விடுவித்திருக்கலாம்.

ஆனாலும் எனக்கு ஏற்பட்ட இன்னொரு அதிர்ச்சி. தமிழக அரசு சொல்லியிருக்கும் 'இவன் என்னைக் கிள்ளிட்டான் ஸார்' போன்ற ஸ்கூல் வாழ்க்கை காமெடி காரணங்களை எப்படி உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது என்பதுதான் தெரியவில்லை..

கவிஞர் தாமரை சொல்லியிருப்பதைப்போல் கலைஞர், டில்லி அம்மாவின் பேச்சைக் கேட்டுத்தான் ஆட்சி நடத்துகிறார் என்பதற்கு மிகச் சிறந்த உண்மையான உதாரணம் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுவிட்டது. இனி இவர் வரலாற்று நாயகர் அல்ல.. வெறும் ஜோக்கர்தான். தலையாட்டி பொம்மை என்பதும் இதன் மூலம் தெரிய வருகிறது.

எதற்கெடுத்தாலும் 'மாநில சுயாட்சி, நாங்கள் திராவிடப் பரம்பரையில் வந்தவர்கள். இந்தியாவுக்கே எடுத்துக்காட்டு நாங்கள்தான்' என்று உதார்விட்டுக் கொண்டிருந்த இவர்களின் யோக்கியதை, கவிஞர் தாமரையின் வாக்குமூலத்தில் பல்லைக் காட்டுகிறது..!

அரசியல் காரணங்களுக்காக, ஆட்சி பீடத்தில் அமர்ந்திருக்கிறோம் என்கிற மமதையில் சட்டத்தைத் தங்கள் சுயலாபத்துக்காக திசை திருப்பும் இந்தக் கோமாளிகளுக்கு ஒரு முடிவே வராதா..?


பதிவை பிரசுரிக்க உதவிய பதிவர் உண்மைத் தமிழனுக்கு நன்றி