Thursday, April 10, 2014

பா.ஜ.க தேர்தல் அறிக்கை - ஒரு பருந்துப் பார்வை ....




பா.ஜ.க ஒருவழியாகத் தனது தேர்தல் அறிக்கையை முதல் கட்ட தேர்தல் தொடங்கிய ஏப்ரல் 7 அன்று வெளியிட்டுள்ளது. மோடி தான் மாற்று, மோடியினால் மட்டும் தான் முடியும், மோடி ஒருவரே இந்தியா எதிர்கொள்ளும் எல்லாப் பிரச்சனைகளையும் தீர்க்கும் அருமருந்து என்று நாம் பார்க்கும் இடமெல்லாம் ஊடகங்களும், முதலாளிகளும், இந்துத்துவவாதிகளும், வருங்கால முதலாளி கனவில் மிதக்கும் நடுத்தர வர்க்கத்தில் பெரும்பான்மையினரும் தொடர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். சரி இவர்களெல்லாம் மாற்று என்று சொல்லும் மோடியின் பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கையில் அப்படி என்ன தான் மாற்று இருக்கின்றது எனப் பருந்து பார்வை பார்க்கலாம் வாருங்கள்....




விலைவாசி உயர்வு:

முந்தைய வாஜ்பாய் ஆட்சிகாலத்தில் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தியது போல நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவோம் என்கிறார்கள்.... இந்நேரத்தில் வாசகர்களுக்கு வாஜ்பாய் ஆட்சிகாலத்தில் வெங்காய விலையைக் கூடக் கட்டுபடுத்த முடியாமல் போனது நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. அடுத்து பின்வரும் காரணிகள் மூலம் உடனடியாக விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தப் போவதாகக் கூறியுள்ளார்கள்...

* பதுக்கலில் ஈடுபடுபவர்களைத் தண்டிக்கச் சிறப்பு நீதிமன்றங்கள்...

* விலைவாசி உயர்வை கட்டுபடுத்த ஒரு குறிப்பிட்ட நிதியை ஒதுக்குதல்

* விவசாயிகளுக்குச் சரியான புள்ளிவிவரங்களை வழங்குதல்.

இக்காரணிகளின் மூலம் விலைவாசி உயர்வை கட்டுபடுத்த முடியுமா என்பதைப் பார்ப்போம். விலைவாசி உயர்வுக்கு முக்கியக் காரணமே, சந்தை(Market) விவசாயப் பொருட்களின் விலையை நிர்ணயப்பதும், ஊகவணிகமும் (Speculation trading) தான். இது பா.ஜ.க ஆட்சிக்கு வந்தாலும் அப்படியே தான் நீடிக்கும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த விவசாயப் பொருட்களின் விலையை அரசு நிர்ணயம் செய்து, சந்தையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதும், ஊக வணிகத்தை நிறுத்தவதன் மூலமும் தான் செய்ய முடியும். அடுத்ததாக விலைவாசி உயர்வுக்கு மற்றொரு முக்கியமான காரணம் போக்குவரத்திற்கு அடிப்படையான எரிபொருளின் விலை உயர்வு. எரிபொருள் விலை நிர்ணயத்தை அரசு நிறுவனங்களின் கையில் கொடுத்த பிறகு, அவர்கள் தங்கள் விருப்பம் போல, மாதமொரு முறை விலையை ஏற்றிவருகின்றார்கள். எரிபொருள் விலை உயர, பொருட்கள் உற்பத்தியிடத்திலிருந்து, சந்தைக்குக் கொண்டு செல்லும் போக்குவரத்திற்காக ஆகும் செலவு அதிகரிக்கின்றது. காங்கிரசு அரசு செய்த இந்தக் கொள்கை மாற்றத்தை, பா.ஜ.க ஆட்சிக்கு வந்தாலும் அப்படியே தான் தொடரும். விலைவாசி உயர்வுக்குக் காரணமான இதுபோன்ற முக்கியக் காரணிகளை விட்டுவிட்டு, இலைகளைக் கிள்ளி எறிவதால் விலைவாசி உயர்வு எக்காலத்திலும் கட்டுக்குள் கொண்டு வர‌முடியாது.


வேலை வாய்ப்பு, தொழில் முனைவு :

காங்கிரசு தலைமையிலான அரசு அமைந்த‌ கடந்த 10 ஆண்டுகளில் "வேலைவாய்ப்பில்லாத வளர்ச்சியே" நடைபெற்றுள்ளது. இதைச் சில பொருளாதார நடவடிக்கை மாற்றம் மூலம் மாற்றி வேலை வாய்ப்பையும், தொழில் முனைவோருக்கு சாதகமான நிலையையும் உருவாக்குவோம் எனக் கூறியுள்ளனர்.


* செயலுத்தியாகத் தொழிலாளர்கள் அதிகம் தேவைப்படும் உற்பத்தி நிறுவனங்களை (டெக்ஸ்டைல், காலணி, மின்பொருள் ஒருங்கிணைப்பு.....) அதிகப்படுத்துதல்...

* விவசாயமும், அது சார்ந்த தொழில்களையும் வலுப்படுத்துதல்

* நாட்டின் கட்டமைப்பை (சாலைகள், மற்றப் போக்குவரத்து) வலுப்படுத்துதல்

* சுய தொழில் முனைவோரை உருவாக்குதல்.


மேற்கூறியவை மூலம் வேலைவாய்ப்பை அதிகப்படுத்த முடியுமா? இதில் என்னென்ன பிரச்சனைகள் உள்ளன என்பதை சுருக்கமாகப் பார்ப்போம். தொழிலாளர்கள் அதிகம் தேவைப்படும் உற்பத்தி நிறுவனங்களை அதிகப்படுத்துதல், குறிப்பாக டெக்ஸ்டைல், காலணி, மின்பொருள் ஒருங்கிணைப்பு போன்ற நிறுவனங்களை அதிகப்படுத்துதல் சாத்தியமா எனப்பார்ப்போம்........டெக்ஸ்டைல் நிறுவனங்களை இங்கே அதிகப்படுத்த முடியுமா? என்றால் அதற்கு முடியாது என்பதே பதில், காரணம், இங்கு இந்தியாவில் செயற்பட்டு வரும் நிறுவனங்களே, வெளிநாட்டு நிறுவனங்கள் ஒப்பந்தம் கோரும் விலை கட்டுபடி ஆகாத காரணத்தினால் இங்கிருக்கும் நிறுவனங்களை மூடிவிட்டு, வங்க தேசம், கொரியா போன்ற நாடுகளில் நிறுவனங்களை வாங்கி, அங்கு உற்பத்தி செய்யத் தொடங்கிவிட்டனர். மேலை நாட்டு முதலாளிகள் தங்களது இலாபத்தை அப்படியே வைத்து கொள்வதற்காக அடிமாட்டு விலையில் ஒப்பந்தங்களைக் கொடுப்பது தான் இதற்குக் காரணம். இதே போலத் தான் ஒவ்வொரு துறையின் நிலையும். இங்குச் சேவை சார் துறைகள் மட்டுமே அதிகம் வரும், அவர்களூக்கு மிகக்குறைவான ஊழியர்களே போதுமானது. மேலும் தற்பொழுது உற்பத்திசார் தொழிற்சாலைகள் கடுமையான ஆட்குறைப்பை செய்து வருவது தொடர்ச்சியாகச் செய்திகளைக் கவனித்து வருபவர்களுக்குத் தெரியும். வேலை வாய்ப்பின்மை அதிகரித்ததற்குக் காரணம் அரசு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் பணியில் இருந்து துண்டித்துக் கொண்டு அதைத் தனியாரிடம் கையளித்ததேயாகும். இதைத் தான் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தாலும் செய்யும்.




ஊழல், கருப்புப் பணம் :

ஊழலை ஒழிப்போம், கருப்புப் பணத்தை வெளிக்கொண்டு வருவோம் என்று முழங்கியுள்ளார்கள். ஊழலின் மூலாதாரம் 90களுக்குப் பின்னர் இங்கே நுழைக்கப்பட்ட தனியார்மயம், தாராளமயம், அதை மாற்றாமல் ஊழலை ஒழிப்போம் எனக்கூறுவது, புற்றுநோயை குணப்படுத்த வைட்டமின் -பி மாத்திரை சாப்பிட்டால் போதுமானது என்பதைப் போன்றதே... இந்நேரத்தில் பா.ஜ.க ஆட்சியில் நடந்த கார்கில் சவப்பெட்டி ஊழல், தங்க நாற்கரச் சாலை ஊழல் போன்றவையும், இரும்புத்தாது ஊழலில் தனது முதலமைச்சர் பதவியிழந்த எடியூரப்பாவை மீண்டும் கட்சியில் சேர்ந்துள்ளதும் உங்கள் நினைவுக்கு வரலாம்...


அரசின் செயல்பாடு:

இந்த ஒரு புள்ளியில் தான் காங்கிரசின் கொள்கையிலிருந்து, பா.ஜ.க மாறுபடுகின்றது. அரசு கொள்கை மட்டும் வகுத்துவிட்டு மீதியனைத்தையும் முதலாளிகளின் கையில் கொடுத்துவிட வேண்டும், முதலாளிகள் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்கள் இது தான் பா.ஜ.க வின் தேர்தல் அறிக்கை. முதலாளிகளுக்கு எதையும் பொறூமையாகச் செய்யும் Manmohanomics புளித்து விட்டதால் அவர்கள் அதிரடியாகவும், சர்வாதிகரத்துடனும் நடந்து கொள்ளும் Modinomics நோக்கிச் செல்கின்றார்கள். மோடி மாற்று தான் நமக்கல்ல, முதலாளிகளுக்கு என்பது இதன் மூலம் தெள்ளத்தெளிவாகின்றது....



மாநில அரசும் , மத்திய அரசும் :

மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கு இணையான அதிகாரங்கள் வழங்கப்படும் எனத் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. யதார்த்தத்தில் மாநில அரசிற்கு இருக்கும் (பொதுப் பட்டியலில்) அதிகாரங்கள் காங்கிரசு/பா.ஜ.க ஆட்சியில் கொஞ்சம், கொஞ்சமாகப் பறிக்கப்பட்டு, இப்பொழுது மாநில அரசு என்பது வெறும் கண்காணிக்கும் அரசாக மட்டுமே உள்ளது. மாநில அரசின் சட்டசபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களைக் கொஞ்சம் கூடக் காங்கிரசு/பா.ஜ.க அரசுகள் மதித்ததேயில்லை. நானும் கச்சேரிக்குப் போறேன் என்பது போலத் தான் இந்த உறுதிமொழியைத் தேர்தல் அறிக்கையில் கொடுத்துள்ளது பா.ஜ.க. மற்றப் படி தமிழகம் எதிர் கொள்ளும், காவிரி, முல்லைப்பெரியாறு பிரச்சனை தொடர்பாக முந்தைய பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு நடந்து கொண்டதைப் போலத் தான் மோடி ஆட்சிக்கு வந்தாலும் நடக்கும். அப்படி உண்மையிலேயே பா.ஜ.க-விற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டுமென்ற ஆசையிருப்பின், எல்லையோரத்தில் இருக்கும் மாநில அரசுகளுடன் கலந்து கொண்டு தான் வெளியுறவு கொள்கை தீர்மானிக்கப்படும், மாநில மின்வாரியங்களின் உரிமையைப் பறித்துத் தனியாரிடம் மின்னுற்பத்தி, பகிர்மானத்தை வழங்கும் 2003 மின்சாரச் சட்டம்(முந்தைய பா.ஜ.க ஆட்சியில் இயற்றப்பட்டது), அடுத்து வர இருக்கும் குடிநீர் சட்டம் போன்றவற்றை நீக்கி, அந்தந்த மாநிலங்களுக்குத் தேவையானவற்றை அந்தந்த மாநிலங்களே தீர்மானிக்கும் உரிமையையும், சுவிட்ஸர்லாந்தில் இருப்பது போன்ற ஒரு கூட்டாச்சி அமைப்பு முறையை இங்கே உருவாக்குவோம் என்று கூறவேண்டும், அவர்களால் சொல்ல முடியுமா?....... அரசியலமைப்பு சட்டப்படி மாநிலம் என்ற வார்த்தையே இல்லை, அரசுகள்(States) என்றும், இந்திய ஒன்றியம் (Union of India) என்றும் தான் உள்ளது, முதலில் மையம், மத்திய என்ற வார்த்தைகளை தவிர்த்து உண்மையான ஒன்றிய அரசாக செயல்படுவார்களா ? ........... அது மட்டுமின்றி மக்களுக்கு அதிகாரம் என்றெல்லாம் வார்த்தைகள் ஆங்காங்கே வருகின்றது, அப்படியானால் இடிந்தகரை மக்களின் விருப்பத்திற்கிணங்க கூடங்குளம் அணு உலையை மூடிவிடுவார்களா என்றால், மக்கள் என்ன சொன்னாலும் சரி தனது அதிகபட்ச அதிகாரத்தையும், அடக்குமுறையையும் பயன்படுத்தி இது போன்ற திட்டங்களைத் தொடருவது தான் அவர்களது எண்ணம். மக்களுக்கு அதிகாரம் என்பதெல்லாம் பகல்கனவே....


ஜம்மு காசுமீர்:

காசுமீர் எப்பொழுதும் இந்தியாவின் பகுதியே, அதே போலக் காசுமீர் பண்டிட்டுகள் மீண்டும் குடியேற தேவையான பாதுகாப்பை வழங்குவோம், அரசியலமைப்புச் சட்டம் 370வதை நீக்குவதே பா.ஜ.கவின் நிலை இது குறித்து அம்மாநிலத்துடன் விவாதிக்கப்படும் என்று கூறியுள்ளார்கள்.....

முதல் வரியிலிருந்தே பொய்யுடன் தொடங்கின்றார்கள், காசுமீர் எப்பொழுதும் இந்தியாவுடனான பகுதி அல்ல.
காசுமீர் ஆகஸ்டு 17,1947லிருந்து அக்டோபர் 26,1947 வரை ஒரு சுதந்திர தேசமாக இருந்தது என்ற தீர்ப்பை ஜம்மு காசுமீர் நீதிமன்றம் 1953 அன்று மேகர் சிங் எதிர் ஜம்மு காசுமீர் அரசு வழக்கில் வழங்கியது(1). அதாவது ஒக்டோபர் 26, 1947அன்று மன்னன். ஹரிசிங், இந்தியாவின் கவர்னர் செனரலாக இருந்த மவுண்ட்பேட்டன் பிரபுவிடம் Instrument of Access என்ற ஒப்பந்தம் போட்டதிலிருந்து காசுமீர் இந்தியாவின் வசமானது எனப் பொருள் (2).

நேரு இந்த ஒக்டோபர் 26 ஒப்பந்ததிற்குப் பிறகும் கூட காசுமீர் மக்கள் தான் யார் பக்கம் இணைய வேண்டும் என முடிவு எடுக்க வேண்டும், நாங்கள் அவர்களுக்கு உதவ மட்டுமே சென்றுள்ளோம் என பல உரைகளில் குறிப்பிட்டுள்ளார் (3). இருந்தாலும் இந்துத்துவ இந்தியர்களுக்காக அந்த ஒப்பந்ததில் இருந்து சில வரிகள்…


இந்த ஒப்பந்ததில் இருக்கும் எந்த சரத்தும் எனது அரசின் இறையாண்மையையோ, எனது அதிகாரத்தையோ கட்டுப்படுத்தாது. மேலும் இந்த ஒப்பந்தம் எனது அரசின் தற்போதைய சட்டதிட்டங்களையும் கட்டுப்படுத்தாது.

Nothing in this Instrument affects the continuance of my sovereignty in and over this state, or, save as provided by or under this Instrument, the exercise of any powers, authority and rights now enjoyed by me as Ruler of this State or the validity of any law at present in force in this State (4).

அன்று காந்தி காசுமீர் பற்றிக் கூறியது இன்றும் பொருந்தக் கூடியது, ஆம் அந்த தேசத்தின்(மக்களின்) இறையாண்மை இன்னும் அவர்களுக்கு வழங்கப்படவே இல்லை. அதற்கு நேர்மாறாக அன்று நேரு எதிர்த்த அதே மன்னனின் பணியை இன்று அவரது வம்சாவளியினர் தொடர்ந்து கொண்டுள்ளார்கள். (விரிவாகப் படிக்க - http://natramizhan.wordpress.com/2010/12/03) . இதிலிருந்து நமக்குத் தெரியவருவது, காசுமீர் எப்பொழுதும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்ததில்லை. அப்பகுதி மக்களின் விருப்பத்திற்கு மாறாகவே இணைக்கப்பட்டுள்ளனர். அரசியலமைப்புச் சட்டம் 370வதை நீக்கும் அதே நேரத்தில் அம்மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து அவர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். உடனடி நடவடிக்கையாகக் காசுமீர், வட-கிழக்குப் பகுதிகளில் இருக்கும் யாரை வேண்டுமானாலும் கொலை செய்ய அனுமதிக்கும் "இராணுவ படை சிறப்பு அதிகாரச் சட்டம்" உள்ளிட்ட எல்லாக் கொடுங்கோன்மை சட்டங்களும் நீக்கப்படவேண்டும் என்பது தான் உண்மையான மக்களாட்சியை விரும்பும் ஒருவனின் கோரிக்கையாக இருக்கும். மக்களுக்கு அதிகாரம், மக்கள் பங்குகொள்ளும் சனநாயகம் போன்ற வார்த்தை ஜாலங்களை அள்ளி வீசும் பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கை உண்மையில் சர்வாதிகாரத்தின் வெளிப்பாடேயன்றி வேறல்ல. இந்த இலட்சணத்தில் வட கிழக்கு மாநிலங்களுக்கு சிறப்புக் கவனம் செலுத்தப்படும் எனச் சொல்வதற்கு, மேலும் அதிகமான கொடுங்கோன்மை சட்டங்களை இயற்றுவோம் என்பது தான் பொருளாகும்.....



பட்டியல், பழங்குடி, இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான சமூக நீதி:

பட்டியல், பழங்குடி, இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் குழந்தைகளின் படிப்பில் தனிக்கவனம் செலுத்தப்படும், தீண்டாமையை ஒழிப்பதற்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று வாக்குறுதிகளை வாரி வழங்கியுள்ளார்கள். யதார்த்ததில் இந்துத்துவத்தைத் தனது கொள்கையாக வகுத்துக்கொண்டுள்ள ஆர்.எஸ்.எஸ்-ன் அரசியல் பிரிவு தான் பா.ஜ.க-வும் மோடியும். மனுநீதி தான் இந்துத்துவத்தின் உயிர் மூச்சு. பிறபடுத்தப்பட்ட மக்களுக்குச் சமூகநீதியின் அடிப்படையில் இடப்பங்கீட்டை வி.பி.சிங் கொண்டுவந்த பொழுது, அந்த அரசை கவிழ்த்ததே பா.ஜ.க தான்... அது மட்டுமின்றி.... மோடியின் பத்தாண்டுகளுக்குமேலான ஆட்சியில் குஜராத்தில் தீண்டாமை ஒழிந்து விடவில்லை, உறுதியாக வலுப்பெற்றே வருகின்றது. தீண்டாமை காரணமாக ஐந்தில் ஒரு தலித் குழந்தைக்குப் போலியோ சொட்டு மருந்து கொடுக்க‌ப்படவில்லை என்கிறது அண்மைய ஆய்வு ஒன்று(5). அரசு நலத்திட்டத்திலேயே இப்படியான தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறதென்றால், அங்குச் சமூகத்தில் நிலவும் தீண்டாமையைத் தனியே விளக்க தேவையில்லை. ஒரு புறம் தீண்டாமையை நியாயப்படுத்தும் மனுநீதியை தனது அடிப்படையாக ஏற்றுக்கொண்டு தீண்டாமை ஒழிப்பு என்பது, ஆட்டுக்குட்டியை ஓநாய் பாதுகாக்கும் என நம்புவதற்கு ஒப்பானது.

சிறுபான்மையினருக்குச் சமவாய்ப்பு:

சிறுபான்மையினருக்குச் சமவாய்ப்பு வழங்கப்போவாதாகப் பா.ஜ.க வாக்குறுதியளித்துள்ளது. நடைமுறையில் இருக்கும் மதநல்லிணக்கத்தைக் கெடுத்து சிறுபான்மையினரின் மேல் வெறுப்புப் பிரச்சாரம் செய்வது, சிறுபான்மையின மக்களின் மேல் திட்டமிட்ட முறையில் வன்முறை நிகழ்த்தி, கருவில் இருக்கும் குழந்தையைக் கூடக் கொல்லும் பா.ஜ.கவினர், இரத யாத்திரை என்ற பெயரில் இரத்த யாத்திரை நடத்தும் பா.ஜ.கவினரின் இவ்வாக்குறுதி, தமிழ் மக்களைப் பாதுகாப்பது தான் என் முதல் வேலை என இராஜபக்சே சொல்வதற்கு ஒப்பானாது. பா.ஜ.கவின் பிரதமர் வேட்பாளரான மோடி ஆளும் மாநிலத்தில் இசுலாமியர்கள் வாழ்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக 2012-ல் நடந்த சட்டசபை தேர்தலில் மோடி தலைமையிலான குஜராத் பாரதிய ஜனதா தர்யப்பூர், சுஹீபுரா நகரங்களில் பிரச்சாரமே மேற்கொள்ளவில்லை. 2002 வன்முறைக்குப் பிறகு சுஹுபுரா பகுதியில் இருந்து இந்துக்கள் வெளியேறிய பிறகு அங்கு மாநில அரசால் வழங்கப்பட்டு வந்த குடிநீர், கழிவுநீர் வடிகால் மற்றும் பேருந்து போன்ற அடிப்படைத் தேவைகள் கூட மறுக்கப்பட்டு வருகின்றன(விரிவாகப் படிக்க - http://save-tamils.blogspot.in/2014/01/2.html), ஒரு வேளை மோடி பிரதமரானால், நாடெங்கும் உள்ள சிறுபான்மையினருக்கு, இதே போலச் சமவாய்ப்பு வழங்கப்படும் என்பதைத் தான் தங்களது தேர்தல் அறிக்கையில் அவர்கள் சொல்கின்றார்களோ என்னமோ....... பா.ஜ.கவின் இந்துத்துவ வெறியும் இந்தத் தேர்தல் அறிக்கையில் வெளியாகியுள்ளது. பொதுச் சிவில் சட்டம் என்ற பெயரில் சிறுபான்மையினரின் உரிமைகளை ஒடுக்கும் திட்டத்தை முன்வைப்பதிலும், அயோத்தியில் இராமர் கோயிலை கட்டுவேன் எனக்கூறுவதன் மூலமும் நாங்கள் காவி தான், மற்ற மதத்தினருக்கும், இந்து மதத்திலேயே உள்ள பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரானவர்கள் தான் என முரசறைந்து கூறுகின்றார்கள்.


மோடி தான் மாற்று, அவர் அப்படிச் செய்வார், இப்படிச் செய்வார் என இதுவரை சொல்லி வந்த புதிய நடுத்தர வர்க்கத்திற்குத் தனது தேர்தல் அறிக்கை மூலம், காங்கிரசு செய்ததைத் தான் நானும் செய்வேன், அதைக் கொஞ்சம் அதிரடியாக, இந்துத்துவ வாசனையோடும் செய்வேன் எனச் சொல்லி அவர்களுக்கு இருட்டுக்கடை அல்வாவை கிண்டி கொடுத்துள்ளது இந்தத் தேர்தல் அறிக்கை...........மோடி, பா.ஜ.க மாற்று தான், முதலாளிகளுக்கும், இந்துத்துவவாதிகளுக்கும்....பொது மக்களுக்களுக்கல்ல....

நற்றமிழன்.ப
சேவ் தமிழ்சு இயக்கம்

தரவுகள்...
1) Conveyor Magazine August 2009 Edition, 16th Page, Also in International Crisis group report on Kashmir dated 21 Nov 2002. Page no 3.

2) http://en.wikipedia.org/wiki/Dominion_of_India\

3) http://www.thehindu.com/news/national/article918002.ece

4) House of Commons Library research paper on Kashmir 30th Mrach 2004 , Page no 47. Also available in below link , http://www.parliment.uk

5) http://www.downtoearth.org.in/content/children-gujarats-backward-communities-left-out-vaccination-drives#.U0VrkYm6Ym8

4 comments:

  1. அருமை, காங்கிரசு முதலாளித்துவக் கட்சி, பாரதீய ஜனதா மதவாதக் கட்சி. இரண்டையும் விட்டு கம்யூனிஸ்டுகளுக்கு வாக்களியுங்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எல்லாம் அரசின் கீழ் வந்துவிடும். எங்கள் தொழிற்சங்கத் தலைவர்கள் நாட்டைக் கவனித்துக் கொள்வார்கள். யாரும் பணிக்குச் செல்லத் தேவையே இல்லை. எங்கும் என்றும் வேலை நிறுத்தம். தொழிற்சாலைகள் மூடப்படும். மேற்கு வங்கத்தையும் கேரளத்தையும் பாருங்கள். எங்கும் வேலை காலியில்லை என்கிற போர்டு காணப்படும். அரசு திவாலாகும். பிறகு வருவார் ஒரு நரசிம்ம ராவ். பிறகு நாங்கள் மீண்டும் தொடங்குவோம் இதே முதலாளித்துவம், மதவாதம்.

    பாரதீய ஜனதா ஆளும் மானிலங்களில் மட்டும் மதவாதம் பற்றிப் பேசுவோம். மேற்கு வங்கத்தில் அதுபற்றி வாயே திறக்க மாட்டோம். எங்களுக்குத்தான் பெயர் கூறா மதவாதிகளின் ஓட்டு வங்கி உள்ளதே.

    கோபாலன்

    ReplyDelete

  2. நீங்க கட்டுரையை படிக்கவில்லை என நினைக்கின்றேன். பா.ஜ.க-வும் முதலாளித்துவ, மதவாத கட்சி தான்.... கம்யூனிசுட்டுகளைப் பற்றிய உங்களது புரிதல் தவறு. தங்களது உரிமைகளுக்காக தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்வதைக் கூட கேலி செய்யும் நீங்கள், உங்கள் வேலை பறிக்கப்பட்டால் அமைதியாக கடந்து சென்று விடுவீர்களா? இப்பொழுதே அரசு திவாலாகி தானே இருக்கின்றது..... மேற்கு வங்கத்தில் மதவாத படுகொலைகள் நடக்கவில்லை, அப்படி நடந்திருந்தால் சொல்லுங்கள், அதை பற்றி தாராளமாக பேசுகின்றோம்.

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து வந்த தொழிற்சங்க ஊழியர்களின் வேலை நிறுத்தங்களால் மக்கள் பொறுமை இழந்து விட்டார்கள் என்பதுதான் நான் கூற வந்தது.
      DO AND DEMAND என்றிருந்த கட்சி DEMAND AND DEMAND என்ற நிலைக்கு வந்தது. வேலை நிறுத்தங்கள் கடைசியாக வருவதற்குப் பதில் முதலிலேயே வரத் தொடங்கியதை அனுமதிததுதுதான் அவர்கள் செய்த தவறாகக் கருதுகிறேன். வன்முறை அளவுக்கும் அது வளர்ந்த்து.

      மோடிக்கு மதவாதி என்கிற முத்திரை குத்தியது கம்யூனிஸ்டுகளின் மற்றொரு தவறு என்று தோன்றுகிறது.

      மேற்கு வங்கத்தில் ஒரு சாராரின் வன்முறைக்கு அடிபணிந்து தஸ்லிமா நஸ்ரின் என்கிற பெண்மணி இடதுசாரி அரசால் மானிலத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்.

      நன்றி,

      கோபாலன்

      Delete

    2. தங்களது உரிமைகள் பறிக்கப்படும் பொழுது அதை கோரி தொழிலாளர்கள் போராடுவது இயல்பு தான். தற்சமயம் கூட பெங்களூரில் உள்ள Stumpp Schulle Somappa என்ற நிறுவனம் தொழிலாளர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த பொழுது அதை முற்றாக நிராகரித்து, இன்று நிறுவனத்தை இழுத்து மூடிவிட்டார்கள். இதனால் கடந்த சில வாரங்களாக அலுவலக வாயில் முன்பு தொழிலாளர்கள் தங்களது உரிமையை வலியுறுத்தி போராட்டம் நடத்திவருகின்றார்கள்.

      1990களுக்கு பிறகு தனியார்மயம் உள்ளே நுழைந்த பிறகு தொழிலாளர்களுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச உரிமைகளும் பறிக்கப்பட்டு உள்ளனர். சிறப்பு பொருளாதார மண்டலங்களில் எந்த தொழிலாளர் சட்டமும் செல்லுபடியாகாது. ஐ.டி ஊழியர்கள் ஒரே நாளில் 300 பேர் பணியிழந்து அழுது கொண்டே வீட்டுக்கு சென்றனர் என்ற செய்திகள் வரும் இன்றைய நிலையில் நீங்கள் 1990களுக்கு முன்னரான நிலையைப் பற்றி பேசுவது சரியில்லை என்றே நினைக்கின்றேன்.


      இந்துத்துவம், மனுநீதி போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவபவரை மதவாதி என்று தான் சொல்லவேண்டும். எப்படி தாலிபான்கள் மதவாதியோ, அப்படியே ஆர்.எஸ்.எஸ்ம், பா.ஜ.க-வும்... இதை கம்யூனிசுட்டுகள் மட்டும் சொல்லவில்லை, சனநாயகவாதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் என எல்லோரும் சொல்கின்றார்கள்.

      தஸ்லிமா நசிரின் மேற்கு வங்கத்தை விட்டு வெளியேற்றப்பட்டது தவறு, கண்டிக்கத்தக்கதே, ஆனால் கருவிலிருக்கும் குழந்தையைக் கூட கொன்ற குஜராத் படுகொலையோடு அதை ஒப்பிட முடியுமா என நீங்களே சொல்லுங்கள்...

      Delete