Monday, April 14, 2014

தமிழக மீனவர்களின் நிலை - சில கேள்வி -பதில்கள்

சிங்கள இராணுவம் தமிழக மீனவர்களை நடுக்கடலில் சுட்டுக் கொல்வதும், படகுகளைச் சேதப்படுத்துவதும், வலைகளை அறுப்பதும், கொடூரமாகத் தாக்குவதும் கடந்த முப்பதாண்டுகளாக வெகுமக்களால் எளிதில் கடந்து போகக் கூடிய செய்திகளாகி விட்டன. இந்திய ஊடகங்களுக்கு இந்திய இலங்கை கிரிக்கெட் போட்டிகளின் முடிவுகளை விட, மீனவர்களின் உயிர் அவ்வளவு முக்கியமில்லை தான் எனினும், அப்போட்டிகளின் முடிவுகளுக்கும் தமிழக மீனவர்களின் உயிர்களுக்கும் தொடர்பிருக்கிறது. ஏப்ரல் 2, 2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை இந்திய கிரிக்கெட் அணியிடம் தோற்ற கோபத்தில், நான்கு தமிழக மீனவர்களை நடுக்கடலில் வைத்து சுட்டுக் கொன்றது சிங்கள கப்பற்படை. காரணத்தைச் சொல்லிக் கொண்டே தான் சுட்டதாக, தப்பிய மீனவர்கள் வாக்குமூலத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். ஆக ஒவ்வொரு முறையும் இந்திய இலங்கை கிரிக்கெட் போட்டிகளின் போது, இந்தியா தோற்க வேண்டும் என்பது நாட்டுப்பற்றில்லை என்று சொல்லும் உரிமை நம் யாருக்கும் கிடையாது, ஏனென்றால் இதே இந்திய கொடியுடன் சென்றதற்காகத் தான் அவர்கள் கொல்லப்பட்டும், காயப்படுத்தப்பட்டும் வருகின்றார்கள். இரு நாடுகளுக்கு இடையில் நடக்கும் விளையாட்டு போட்டிக்காக ஒரு நாட்டின் மீனவர்கள் கொல்லப்படும் பொழுது அந்தச் சமூகம் இந்த விளையாட்டைத் தடைசெய்யுங்கள் எனப் போராடாமல், இந்த‌ விளையாட்டை மேலும் மேலும் ஊக்குவிக்கும் அவலத்தை இங்குத் தான் நாம் பார்க்கின்றோம்.


மேற்சொன்னது ஒரு சிறு காரணம் தான். சிங்கள இராணுவம் தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்வதன் பின்னணி அரசியலின் பரப்பு சற்று விஸ்தாரமானது. ”தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்கிறார்கள்” என்ற குற்றச் சாட்டைச் சர்வ சாதாரணமாக வைத்து விட்டு தான் இந்தக் கொலைக்காட்சிகள் அரங்கேறுகின்றன. ஒவ்வொரு இந்திய மனதிலும், ’தமிழக மீனவர்கள் என்றாலே அத்துமீறுபவர்கள்’ என்கிற அலட்சியப்போக்கு, ஊடக ஊசிகளின் மூலமாக ஏற்றப்பட்டிருக்கிறது. இந்த அலட்சியம் தான், மீனவர்கள் கொல்லப்படும் செய்திகளையும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் அபாயம் கொண்ட அணு உலைகளையும் பற்றிப் பெரிதாகக் கவலை கொள்ளாமல்

ஒதுங்கிப் போக வைக்கிறது. ”மீனவர்கள் மீன்களைக் கொல்கிறார்கள். மீனவர்களைச் சிங்கள இராணுவம் கொல்கிறது ” போன்ற சிறு குழந்தைகளின் அறியாப் பேச்சுகளை விட, மீனவ மண்ணிலேயே பிறந்து, மீனவ உயிர்களைப் பற்றிக் கவலை கொள்ளாமல், தமிழக மீனவர்களைக் கொன்றவர்களோடு விருந்துண்டு, அவர்களின் குழந்தைகளுக்கு ஆதிக்க‌ பாடத்திட்டம் தயாரித்துக் கொடுக்கும் அறிவு ஜீவிகள் ஆபத்தானவர்கள் தான் இல்லையா ? அதை விட ஆபத்தானது, ஓட்டரசியல் தலைவர்களின் கள்ள மெளனமும் அதை ஆதரிக்கும் வெகுசன போக்கும் தான்.

காங்கிரசு அரசாக இருந்தாலும் சரி; பா.ஜ.க வாக இருந்தாலும் சரி. அடிப்படையில் இரண்டுமே தமிழர் விரோதப் போக்குக் கொண்ட கட்சிகள் தான். இருவரும் இப்படுகொலைகளை நேரடியாக‌ கண்டித்ததில்லை. மாறாக, சிங்கள அரசு அரங்கேற்றி வரும் தமிழினப்படுகொலையையும், தமிழக மீனவர்களைக் கொன்று குவிக்கும் கொடுங்கோன்மையையும் மறைத்து, உலக அரங்கில் சிங்கள அரசை சீவிச் சிங்காரித்து அழகு பார்க்கும் வேலையைத் தான் செய்து வருகிறது இந்திய அரசு. தமிழக அரசியல் கட்சிகளான தி.மு.க வும் அ.தி.மு.கவும் ஆளும் வர்க்கத்துக்குச் சேவை செய்பவர்களாகவே இருக்கின்றார்கள், அவசர கால நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், தொடர்ந்து பிரதமருக்குக் கடிதம் எழுதுவதை மட்டுமே நடைமுறைகளாகக் கொண்டிருக்கின்றனர். கடந்த ஜனவரி 27 ஆம் தேதி சென்னையில் நடந்த இந்திய இலங்கை மீனவப் பேச்சுவார்த்தை சற்று ஆறுதலாக இருந்தாலும், அப்பேச்சு வார்த்தையில் எவ்வித உடன்படிக்கைகளும் ஏற்படவில்லை. இந்நிலையில் அடுத்தக் கட்ட பேச்சு வார்த்தை பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் ஏற்பாடாகி கொண்டிருக்கிறது.

1.மீனவர்களின் வர்க்கப்பின்னணி, யாரால் யார் பாதிக்கப்படுகின்றார்கள் ?



மீனவர்களை இரண்டு வர்க்கமாகப் பிரிக்கலாம். பாரம்பரியமான கட்டுமரமும், நாட்டுப்படகையும் சொந்தமாக வைத்திருக்கும் மீனவர்களும், விசைப்படகுகளில் சென்று மீன் பிடிக்கும் மீனவத் தொழிலாளர்களும் ஒரு வர்க்கம். விசைப்படகு வைத்திருக்கும் முதலாளிகளும், ஆழ்கடலில் பெரிய கலங்கள் வைத்து மீன்பிடிக்கும் முதலாளிகளும் ஒரு வர்க்கம், இந்த இரண்டாவது வர்க்கத்தில் இருப்பவர்கள் மீனவர் சங்க நிர்வாகிகளும், ஓட்டுக் கட்சிகளின் பினாமிகளுமே. விசைப்படகு முதலாளிகளினால் கட்டுமரமும், நாட்டுபடகையும் மீன்பிடிக்காகப் பயன்படுத்தும் மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். சுருக்கு வலை, இரட்டை மடி, Bottom Trawling போன்ற மீன்பிடி முறைகள் மீன்வளத்தையே அளிக்கும் அபாயமிருப்பதால் அவை தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால் இந்த முறையைத் தான் பெரும்பாலான விசைப்படகு முதலாளிகள் பின்பற்றுவருகின்றனர். தடுக்க வேண்டிய இந்திய அதிகாரிகளும் முதலாளிகள் தரும் பணத்திற்காக அவர்களும் இதைக் கண்டும் காணாமல் இருக்கின்றனர். இதனால் பாதிக்கப்படும் கட்டுமரம், நாட்டுபடகு மீனவர்கள் கடந்த சில மாதங்களாக அதிகாரிகளின் அலட்சிய போக்கை கண்டித்துத் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.



அடுத்து விசைப்படகில் செல்லும் மீனவத்தொழிலாளர்கள் இந்தியர்கள் என்ற அடிப்படையில் இனவாதம் விதைக்கப்பட்ட சிங்கள கடற்படையால் சுட்டுக்கொல்லப்படுவதும், தாக்கப்படுவதும், இவர்கள் தாக்கப்படுவது இனவாதத்தினால் தானே தவிர இலங்கை மீனவர்கள் பாதிக்கப்படுகின்றார்கள் என்பதாலல்ல. தொழிலாளிகளும், முதலாளிகளும் என்றும் ஒன்றல்ல... மீனவர்களும் இன்றும் அன்றாடங்காட்சிகளே, தினமும் கடலுக்குச் சென்றால் தான் அவர்களுக்குச் சோறு, முதலாளிகளுக்கு அப்படியில்லை. இந்த முதலாளிகள் தான் பேராசை கொண்டவர்களேயன்றி மீனவர்களல்ல...


2.ஈழ மீனவர்களும், அவர்களின் வர்க்கமும், எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்ன?

தமிழக மீனவர்களைப் போல ஈழ மீனவர்களில் இரு வர்க்கமில்லை. அவர்கள் இன்றும் நாட்டுப்படகு, கட்டுமரம் மூலம் மீன்பிடிக்கும் பாரம்பரிய மீனவர்களாகவே உள்ளனர். அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் .......

* புலிகள் இருக்கும் பொழுது கடலில் சுதந்திரமாக மீன்பிடித்து வந்தனர். போருக்குப் பின்னர்க் கடற்கரை முழுவதும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதால் ஈழமீனவர்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

*ஈழக்கடற்கரையோர பகுதிகளில் சிங்கள மீனவர்கள் குடியமர்த்தப்படுகின்றனர், இவர்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை, மேலும் இவர்களுக்கு ஏகப்பட்ட மானியங்களை இலங்கை அரசு வழங்கி வருகின்றது. சந்தையை இவர்களின் கட்டுபாட்டில் கொஞ்சம், கொஞ்சமாகச் செல்லத்தொடங்குகின்றது.

*ஈழமீனவர்கள் இன்னும் பாரம்பரிய மீன்பிடி முறையான, மூன்று நாட்கள் ஒரே இடத்தில் வலைவிரித்துவிட்டுக் காத்திருக்கும் முறையையே பின்பற்றுகின்றார்கள், இந்த நேரத்தில் தமிழகத்தில் இருந்து வரும் விசைப்படகுகள் இந்த வலைகளைக் கிழித்தெறிவதால் ஈழ‌மீனவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர், அதுமட்டுமின்றி இரட்டைமடி, சுருக்குவலை, Bottom Trawling போன்ற தடைசெய்யப்பட்ட முறைகளை விசைப்படகுகள் பயன்படுத்துவதால் மீன்வளம் மிகவும் குறைந்து விடுகின்றது. ஏற்கனவே போரினால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை இது மேலும் பாதிக்கின்றது.

இதனால் தான் தமிழக நாட்டுப்படகு, கட்டுமர மீனவர்கள் இந்தத் தடைசெய்யப்பட்ட முறைகளை எதிர்த்து இங்குப் போராட்டம் நடத்திய பொழுது ஈழமீனவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர், ஏனென்றால் இருவரும் ஒரே காரணத்தினால் பாதிக்கப்படுகின்றனர்.


3.தமிழகக் கடற்கரையும் மீனவ கிராமங்களின் அமைப்பையும் எப்படி வரையறுக்கலாம் ?

1,000 கி.மீ நீளம் கொண்ட தமிழகக் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில், 600 மீனவ கிராமங்களில், 9 லட்சம் மீனவர்கள் வசிக்கின்றனர். சென்னை முதல் கடலூர் மாவட்டம் வரையுள்ள மீனவர்கள், வங்காள விரிகுடா கடல் பகுதியிலும் நாகை, காரைக்கால் தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் தமிழகம்- இலங்கை இடைப்பட்ட பகுதியில் உள்ள “பாக் நீரிணை" பகுதியில் மீன்பிடித்து வருகின்றனர், இப்பகுதி ஆழம் மற்றும் நீளம் குறைந்த பகுதியாகும், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

4.யார் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்?


சிங்கள கடற்படையின் தாக்குதலுக்கு அதிகம் ஆளாவது பாக் நீரிணைப் பகுதியில் மீன் பிடிக்கும் தஞ்சை,காரைக்கால், நாகை, திருவாரூர்,புதுக்கோட்டை,இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களே. இலங்கைக்கும் இந்திய எல்லைக்கும் வெறும் 8 கி.மீ கடல்பரப்பு மட்டுமே கொண்டது. ஆகவே இராமநாதபுரம் , இராமேஸ்வரத்திலிருந்து கிளம்பும் எந்தப் படகாக இருந்தாலும் இந்த 8 கி.மீ கடற்பரப்புக்குள் தான் மீன் பிடித்தாக வேண்டியிருப்பதால், அவர்கள் வல்லத்தை எடுத்தாலே, சிங்கள இராணுவத் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும் அபாயம் இருக்கிறது.



5.பாரம்பரிய மீன்பிடியும், கடல் எல்லைகளும், எல்லை தாண்டுதலும்?

பாரம்பரியமாக இலங்கை, தமிழக‌ மீனவர்களும் இந்தப் பகுதியில் மீன்பிடித்தே வருகின்றனர். இந்த எல்லைக்கோடுகள் எல்லாம் அண்மை காலங்களில் தோன்றியவை. இதற்கு முன்னர் நடந்த பேச்சுவார்த்தையில் கூட வாரத்தில் நான்கு நாட்கள் தமிழக மீனவர்களும், மூன்று நாட்கள் இலங்கை மீனவர்களும் மீன்பிடிக்கலாம் என ஒப்பந்தம் போடப்பட்டதை நாம் இங்கே நினைவு கூற வேண்டும். அது மட்டுமின்றிக் கடலில் எல்லை என்பதே ஒரு கேலிகூத்து. ஒசூர் தாண்டினால் கர்நாடக மாநிலம் வருவதைப் போல அல்ல . அதே போல எல்லை தாண்டுதல் என்பது பன்னாட்டுச் சட்டங்களுக்கு எதிரானதா ? என்றால் நிச்சயம் இல்லை என்பது தான் பதில். உலகின் பல நாடுகளிலும் மீனவர்கள் எல்லை தாண்டிச் செல்வதும், அன்னிய கடல் பகுதியில் மீன் பிடிப்பதும் வழக்கமான ஒன்று தான். ஜப்பான், சீனா, தைவான், மியான்மர், பாகிஸ்தான், வங்காள தேசம் என்று மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் எல்லா நாடுகளிலும் இத்தகைய நடைமுறைகள் இருக்கின்றன.

வங்க தேச மீனவர்கள் மியான்மர் கடற்பகுதிக்குள் சென்று மீன் பிடிக்கிறார்கள். ஜப்பானிய மீனவர்கள் ஆசிய எல்லைக்குள் நுழைந்து மீன் பிடிக்கிறார்கள். இவ்வளவு ஏன்? இலங்கை மீனவர்களே இந்தியாவின் கேரளப் பகுதியிலும் லட்சத் தீவுப் பகுதிகளிலும் நுழைந்து மீன் பிடிக்கிறார்கள். மாலத்தீவுக் கடற்பரப்புகளிலும் மீன் பிடிக்கத் தான் செய்கிறார்கள். அப்படி எல்லை தாண்டிச் செல்லும் வேற்று நாட்டு மீனவர்களை, சம்பந்தப்பட்ட நாட்டின் இராணுவமோ அல்லது கடற்படை அதிகாரிகளோ தடுத்து நிறுத்தி சோதனை நடத்துவார்கள். ஆவணங்களைச் சரி பார்ப்பார்கள். மேலும் கடல்நீரோட்டம் காரணமாக மாலையில் ஒரிடத்தில் வலைவிரித்தால் , இரவிற்குள் இவர்கள் அந்தப் பகுதியிலிருந்து தொலைதூரம் கடந்திருப்பார்கள்.

ஏதேனும் சட்டவிரோத காரியங்களில் ஈடுபடும் நோக்கத்துடன் வந்துள்ளார்களா என்று மட்டும் சோதிப்பார்கள். தேவைப்பாட்டால் கைது செய்வார்கள். பின்னர்க் கடுமையான எச்சரிக்கைகளுக்குப் பிறகு விடுவித்து விடுவார்கள். இந்த நடைமுறைகள் எல்லாம் பல்வேறு ஒப்பந்தங்களின் அடிப்படையிலும் பன்னாட்டுச் சட்டங்கள், மீன் பிடி உரிமைகள் இவைகளின் அடிப்படையில் பின்பற்றப்படும் வழக்கமான நடைமுறைகள் தான்.

இந்தியர்களின் பரம வைரியான கருதப்படும் பாகிஸ்தான் கூட ஒர் இந்திய மீனவனை, இதுவரைச் சுட்டதாக வரலாறு இல்லை. குஜராத் கட்ச் பகுதி மீனவர்கள் பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் பிடிபடும் சமயங்களில் எல்லாம் எவ்வித பிரச்சினையும் இன்றி விடுவிக்கப்படுகிறார்கள். ஆனால் நமது அன்பிற்கினிய நட்பு நாடு என்று இந்திய அரசால் பாராட்டி சீராட்டி கொண்டாடப்படும் இலங்கை அரசு மட்டும் தமிழக மீனவர்களை நடுக்கடலில் வைத்துச் சுட்டுக் கொல்கின்றது, ஊனப்படுத்துகின்றது, படகுகளைச் சேதப்படுத்துகின்றது. கடந்த 30 ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இனவாதா வெறியேற்றப்பட்ட சிங்கள கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். பல நூறு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர், 1000த்திற்கும் அதிகமானோர் காயப்படுத்தப்பட்டுள்ளனர். பல இலட்சத்திற்குமதிகமான விலைமதிப்புள்ள மீன்பிடி பொருட்களும், படகுகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. ஈழத்தமிழர்கள் மீதான ஒடுக்குமுறை நீடித்திருப்பதற்காகக் கடல்வழி மூலம் கூட‌ எந்த ஒர் உதவியும் வந்துவிடக்கூடாது எனத் தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களைக் கூடச் சுட்டுகொன்று அவர்கள் கடலுக்கே வருவதற்கே அச்சப்படும் நிலையை உருவாக்குவதும் இலங்கை அரசின் திட்டங்களில் ஒன்று....இலங்கையில் இனப்பிரச்சனை தீர்க்கப்படும் வரை அந்நாடு இந்தக் கடல்பரப்பை அமைதியாக வைத்திருக்க விடாது.


6.இப்பிரச்சினையில் கச்சத்தீவின் முக்கியத்துவம் என்ன?


இந்தப் பாக் ஜலசந்தி பகுதியானது பல சிறிய பெரிய தீவுகளை உள்ளடக்கியது. அவற்றுள் கச்சத் தீவும் ஒன்று. அத்தீவு ராமநாதபுரம் ராஜாவின் ஆளுகைக்கு உட்பட்டிருந்ததையும் இந்தியாவின் ஆளுகைக்குக் கட்டுப்பட்டது என்பதையும் விளக்கும் ஏராளமான ஆவணச் சாட்சியங்கள் இருக்கின்றன. மீன் வளமும் சங்கு முத்துப் பவளம் போன்ற கடல்வளமும் அதிகம் கொண்ட கச்சத்தீவு. இலங்கை அரசுடன் நல்லுறவை பேண வேண்டும் என்ற அரசியலுக்காகத் தமிழக மக்களின் கருத்துகளைக் கேட்காமல், பாராளுமன்றத்தில் எதிர்ப்பையும் மீறி இலங்கை அரசுக்கு தாரை வார்த்தது.... எனவே அத்தீவு குறித்து இரு நாடுகளுக்கும் இடையே ஒரு சர்ச்சை பல ஆண்டுகளாகவே நீடித்து வந்தாலும், இந்திய அரசு இந்திரா காலத்தில் கச்சத் தீவை முற்றாக இலங்கைக்குத் தாரை வார்த்து விட்டது.


7.கச்சத்தீவு குறித்தும், மீன்பிடி உரிமைகள் குறித்தும் இதுவரை போடப்பட்ட ஒப்பந்தங்கள் என்னென்ன ?


இந்தப் பாரம்பரியக் கடலில் இரு நாடுகளுக்கு இடையிலான எல்லையையும் அதன் தொடர்புடைய மற்றப் பிரச்சினைகளையும் இரு நாடுகளுக்கும் நியாயமானதும் பாரபட்சமற்ற வகையிலும் தீர்வு காணப்பட வேண்டும் என்பதற்காகவும் 1974ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26, 28 தேதிகளில் இந்தியக் குடியரசுக்கும் இலங்கைக் குடியரசுக்கும் இடையே ஒர் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அந்த ஒப்பந்தம் 1974 ஜூலை மாதம் 8-ஆம் நாள் முதல் நடைமுறைக்கு வந்தது.


அந்த ஒப்பந்தத்தின் முதல் பிரிவில்,``பாக் ஜலசந்தி முதல் ஆதாம் பாலம் வரையிலான கடல் பகுதியில் இலங்கைக் கும் இந்தியாவுக்குமான எல்லை அட்சரேகை, தீர்க்கரேகை மூலம் தீர்மானிக்கப்பட வேண்டும் என்றும் 4-ஆம் பிரிவில், அவ்வாறு உறுதி செய்யப்பட்ட எல்லைக்கு அப்பால் அமையும் கடற் பகுதியும், தீவுகளும் கண்டப் படுகையும் (கான்டி னென்டல் ஷெல்ப்), கடலடி நிலமும் அந்தந்த நாட்டின் அதிகாரத் திற்கும் ஆளுகைக்கும் உட் பட்டதாக இருக்கும் என்றும், 5-ஆம் பிரிவில், மேலே குறிப்பிட்டவற்றிற்கு உட்பட்டு, இந்திய மீனவர்களும், பக்தர்களும், கச்சத் தீவிற்கு இன்று வரை சென்றது, வந்தது போன்றே போய் வரலாம், அதற்காக இலங்கையிடமிருந்து விசா போன்ற அனுமதி பெறத் தேவையில்லை என்றும்,

6-ஆம் பிரிவில், ``இலங்கை மற்றும் இந்தியக் கலங்கள், ஒன்று மற்றொரு நாட்டுக்கு உரிய கடலில் இதுவரை காலங்காலமாக (நெடுங்காலமாக) அனுபவித்து வந்த அனைத்து உரிமைகளையும் (தொடர்ந்து) அவ்வாறே அனுபவிக்க லாம் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த ஒப்பந்தத்தில் புதிய எல்லை தீர்மானிக்கப்பட்ட பின்னரும் இரு நாட்டுக் கலங்களும் காலங்காலமாகத் தொடர்ந்து அனுபவித்து வந்த உரிமைகள் அவ்வாறே தொடரும் என்று மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. `கலம் என்பது `மீன்பிடி கலத்தையும், `அதே உரிமை என்பது மீன் பிடிக்கும் உரிமையையும் உள்ளடக்கும்.

இதை அடுத்து 1976ல் இந்திய , இலங்கை வெளியுறவுத்துறை செயலாளர்கள் இந்திய இலங்கை கடல் எல்லை தொடர்பாகவும், மீனவர்களின் உரிமைகள் தொடர்பாகவும் சில கடிதங்களைப் பரிமாறிக்கொண்டனர். இறுதியில் இந்தக் கடிதங்களே ஒப்பந்தங்களாக்கப்பட்டன. கடிதத்தை ஒப்பந்தமாக்கிய கேலிக்கூத்து இங்கு நடந்துள்ளது.

அந்தக் கடிதத்தில் - இந்தியாவைச் சேர்ந்த மீன்பிடிக்கலங்களும், மீனவர்களும் இலங்கையின் கடல் எல்லைக்குள்ளும், சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்குள்ளும் நுழையக்கூடாது, மீன்பிடிக்கக்கூடாதென்றும், அதே போல இலங்கையைச் சேர்ந்த மீன்பிடிக்கலங்களும், மீனவர்களும் இலங்கையின் கடல் எல்லைக்குள்ளும், சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்குள்ளும் நுழையக்கூடாது, மீன்பிடிக்கக்கூடாதென்றும் ஒரு வரி வருகின்றது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கலந்தாலோசிக்காமல் நிறைவேற்றப்பட்ட இவ்விரு ஒப்பந்தங்களும் அறமற்றவையே.

8.தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்லும் சிங்கள இராணுவத்தினரை தண்டிக்க வழி இருக்கிறதா ?

பாக். வளைகுடாவில் மீன் பிடிக்கும் போது இந்திய (தமிழக) மீனவர்களைச் சுட்டுக் கொன்ற செயல்கள் இந்திய தண்டனைச் சட்டத்தின்கீழ் தண்டிக்கத் தக்க குற்றமாகும். அவற்றை விசாரிக்கவும் தண்டனை வழங்கவும் இந்திய நீதிமன்றங்களுக்கு உரிமை உண்டு. இந்திய தண்டனைச் சட்டம் 4 ஆவது பிரிவில் நாட்டிற்கு வெளியில் நடக்கும் குற்றங்களைத் தண்டிக்க வகைச் செய்கிறது. இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட கப்பல் அல்லது வானூர்திகளில் எந்த நபர்களால் எந்த இடத்தில் குற்றம் இழைக்கப் பட்டாலும் அவர்களைத் தண்டிக்க இந்திய நீதிமன்றங்களுக்கு உரிமை உண்டு என்று சொல்லப் பட்டுள்ளது.

அரபிக்கடல் பகுதியில் இத்தாலிய கடற்படையைச் சேர்ந்த மாலுமிகள் இருவர் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட படகில் சென்றவர்களைச் சுட்டுக் கொன்றதற்காக, கைது செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்ததும் இதன் அடிப்படையில் தான். அதுபோன்றே பாக். வளைகுடாவில் இந்தியப் படகில் ஒப்பந்தத்தில் கண்ட உரிமைகளின் அடிப்படையில் மீன் பிடிக்கும்போது இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்படும் போது அதற்குக் காரணமானவர்களை இந்திய நீதிமன்றங்கள் தண்டிக்கவும் இயலும். ஆனால், அதுபோன்ற நடவடிக்கை எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை.


9.மீனவர்கள் தொடர்பான இந்திய அரசின் பார்வை என்ன?


உலகிலேயே ஐந்தாவது பெரிய கடற்படை இந்திய கடற்படை. இந்தியா தான் இலங்கைக்குப் பல அதிவேக ரோந்து படகுகளையும், சில பெரிய கப்பல்களையும் கொடுத்தது. அவ்வாறிருக்கையில் இந்திய கப்பற்படை ஏன் தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்பளிப்பதில்ல? சில நேரங்களில் சிங்கள கடற்படை தமிழகக் கரைக்கு வந்து மீனவர்களைத் தாக்கியிருக்கின்றார்கள். இதனால் கரையோரம் இருந்த வீடுகளும் தாக்குதலுக்கு இரையாகி இருக்கின்றன. கடற்கரை மேலாண்மை சட்டம் போன்ற சட்டங்களின் மூலம் கரையோரத்தில் வாழும் மீனவர்களை அப்புறப்படுத்தி அங்குச் சுற்றுலாவிடுதிகள் போன்றவற்றைக் கட்டுவது, கட்டுமர, நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர்களை முற்றிலுமாக அப்புறப்படுத்தி அந்த இடத்தில் பெரிய கப்பல்களுக்கு மீன்பிடித்தொழிலை கையளிப்பது இது தான் இந்திய அரசின் திட்டம். விசைப்படகு மீனவர்களை அப்புறப்படுத்துவதற்கு இலங்கை அரசின் இனவாதக்கொள்கை உதவுவதால் இந்திய அரசு தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டும் காணாமல் இருக்கின்றனர். உலகிலேயே ஐந்தாவது மிகப்பெரிய கப்பற்படை தனது சொந்த குடிகள் கொல்லப்படுவதையும், தாக்கப்படுவதையும் வெறுமனே வேடிக்கைப் பார்த்து வருகின்றது.


10.தமிழக அரசியல்வாதிகள் ஏன் மீனவர்கள் பிரச்சனையை அலட்சியப்படுத்துகின்றார்கள் ?


1000கி.மீட்டர் கடற்பரப்புத் தமிழகத்தில் இருந்தாலும், அவர்கள் ஒர் அரசியல் தொகுதியாக உருத்திரண்டு இல்லை. 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும், 234 சட்டமன்ற தொகுதிகளிலும் துண்டாடப்பட்டுள்ளனர். மீனவர்களின் வாக்கு எந்த ஒரு தொகுதியிலும் வேட்பாளரை நிர்ணியிக்கும் இடத்தில் இல்லை. இதனால் திமுக, அதிமுகப் போன்ற எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கடித நாடகத்தை மட்டும் நடத்திக்கொண்டிருக்கின்றனர். அடுத்துத் தமிழ்ச் சமூகம் பிராந்திய ரீதியாகப் பிரிந்து கிடப்பதும், கரையோர, சமவெளி என்று பிரித்துப் பார்ப்பதும் மீனவர் பிரச்சனை தமிழ் மக்களின் முக்கியமான பிரச்சனையாக மாறாமல் இருக்கின்றது.

11.தீர்வு என்ன?

ஈழ மீனவர்களும், தமிழக மீனவர்களும் பாரம்பரியமாக இரண்டு பகுதிகளிலும் மீன்பிடித்து வந்தனர். இந்தப் பாரம்பரிய உரிமையை மீட்டெடுப்பதும், தடை செய்யப்பட்ட மீன்பிடிமுறைகளை முறையாகக் கண்காணித்துத் தடுப்பதுமே இதற்குத் தீர்வு. மீனவர்கள் கொல்லப்படுவதும், தாக்கப்படுவதும் தொடர்ந்தால், தாக்கும் சிங்கள கடற்படையை இந்திய குற்றவியல் சட்டத்தின் படி தண்டிக்க வேண்டும் எனத் தமிழக மக்கள் போராட வேண்டும், அப்பொழுதும் இந்தியா இலங்கையை நட்பு நாடு என்று கூறி பாதுகாக்க முற்பட்டால் இந்தியாவைக் கடந்து பன்னாட்டு அமைப்புகளான பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம், ஐ.நா உள்ளிட்ட அமைப்புகளில் வழக்கு தொடர்ந்து இந்திய-சிங்கள கூட்டை அம்பலப்படுத்தி மீனவர்களின் நீதிக்காகப் போராடவேண்டும்


அ.மு.செய்யது
சேவ் தமிழ்சு இயக்கம்

No comments:

Post a Comment