Showing posts with label ஞாநி. Show all posts
Showing posts with label ஞாநி. Show all posts

Thursday, June 10, 2010

ஞாநி அவர்களே! உங்களது மனசாட்சி உங்களை மட்டும் கேள்வி கேட்காதா? ....வெ.தனஞ்செயன்

ஞாநி குமுதம் இதழில் இலங்கையில் நடைபெற்ற அனைத்து இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் (IIFA - 2010) விழாவைப் புறக்கணித்து இருப்பதை தவறு என 'ஒ' பக்கங்களில் கண்டித்து இருக்கிறார். கமலஹாசன் முதல் இராமநாராயணன் வரையான படைப்பாளிகள் இலங்கை IIFA - 2010ஐப் புறக்கணித்து இருப்பது மிரட்டல் அரசியலுக்குப் பயந்துதான் என திசை திருப்புகிறார்.

இலங்கை IIFA-2010 ல் தாங்களும் கலந்து கொள்வதில்லை, மற்ற நட்சத்திரங்களும் கலந்து கொள்ள வேண்டாம். அவ்வாறு கலந்து கொண்டால் அவர்களின் படங்களை தென் இந்தியாவில் புறக்கணிக்க வேண்டியிருக்கும் என்ற முடிவை கீழ்கண்ட, தமிழகத்தைச் சேர்ந்த மற்றும் தென்னிந்திய திரைப்பட சங்கங்களும் இணைந்து கூட்டறிக்கை விடுத்தன.

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்
தென்னிந்திய நடிகர் சங்கம்
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம்
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம்
தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்
சின்னத்திரைக் கலைஞர்கள் சங்கம்
தென்னிந்திய திரைப்படப் பத்திரிகைத் தொடர்பாடல் சங்கம்

இத்தனை சங்கங்களையும் மிரட்டி அடி பணிய வைக்குமளவு பலம் கொண்ட கட்சி தமிழகத்தில் இல்லை என்பது ஞாநி அவர்களுக்குத் தெரியும். ஆளும்தரப்பு இதனை செய்திருக்கும் என்ற சந்தேகம் ஞாநிக்கு வந்திருக்காது என்று நம்புவோம். அப்படி எதாவது கட்சிகள் முயன்றிருந்தால் குறிப்பிட்ட சங்கங்களிடமிருந்து சிறு சலசலப்பாவது எழுந்திருக்கும்.

உண்மையில் ஈழத் தமிழனின் உரிமைக்கான போராட்டம் எந்தத் தீர்வையும் பெற்றுத் தராமல் படுகொலைகளுடனும், சிறைபிடிப்புகளுடனும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது என்ற வலி ஞாநி போன்ற மேல்தட்டு பத்திரிகையாளர்களையும், சில அரசியல்வாதிகளையும் தவிர்த்து எல்லாருக்குமே இருக்கிறது.

அதனால் தான் IIFA- 2010 ல் கலந்து கொள்வதற்கான அழைப்பை தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த திரைத்துறையினர் தாங்களாகவே புறக்கணித்து இருந்தனர். ஞாநியை போன்ற, ஈழப் பிரச்னையில் தவறான கருத்துடைய பத்திரிகையாளர்களாலும், ஆங்கில செய்தி ஊடகங்களில் ஈழம் பற்றிய இருட்டடிப்பு செய்திகளாலும் ஈழத்தமிழ் மக்களுக்கு நிகழும் கொடூரங்கள் வட இந்திய திரைத்துறையையும், மக்களையும் சென்றடையவில்லை.

தமிழ் மக்களின் பிரச்சினைகளைக் கூறி IIFA -2010ல் கலந்து கொள்ளும் இந்தித் திரையுலக பிரபலங்களைக் கலந்து கொள்ள வேண்டாம் எனக் கேட்டு இங்கிருக்கும் அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம், போராட்டம், கூட்டறிக்கை என்பவற்றுடன், தனிநபர்களும் திரைத்துறையினர் மூலமாக முயற்சிகள் மேற்கொண்டனர். அதன் பலனாகத் தான் IIFA -2010ல் முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்ளாமல் பொலிவிழந்தது.

மற்றபடி எல்லாக் காலங்களிலும் கலைஞர்களும், படைப்பாளிகளும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக தங்களது தார்மீகக் கடமைகளை உணர்ந்து குரல் கொடுத்தே வந்துள்ளனர். என்ன காரணத்தினால் ஞாநி மறந்து போனார் என்று தெரியவில்லை.

அடுத்து 'ஓராண்டுக்கு முன் ஏராளமான ஈழத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதற்கு இராஜபக்ஷே அரசு, புலிகள் அமைப்பு இருவரின் தவறான அரசியலுமே காரணம் என்பதை மனசாட்சியுடன் சிந்திக்கும் எல்லாருமே ஏற்றுக்கொள்வார்கள்' என்று எழுதியுள்ளார். அவர்களின் தவறான அரசியல் மட்டுமா காரணம்?
ஞானியின் மனசாட்சி எப்பொழுதுமே அவரைக் கேள்வி கேட்காது போலும். சிங்கள அரசு பயங்கரவாதம் என்ற சொல்லைப் பயன்படுத்தி ஈழத்திலிருந்த சர்வதேச தொண்டு நிறுவனங்களையும், பத்திரிக்கையாளர்களையும் வெளியேற்றி சாட்சியங்களில்லாமல், எந்தவித போர்நெறிகளையும் பின்பற்றாமல் 3.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களைக் குறைத்து 80 ஆயிரம் பேர் மட்டுமே இருப்பதாகக் கூறி 18 மாதங்களுக்கு மேலாக உணவு, மருந்துப் பொருட்களைத் தடை செய்து மருத்துவமனைகள், மக்கள் வாழும் பாதுகாப்பு வலயம் மீது குண்டு போட்டு, தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பொதுமக்கள், போராளிகள் என சகட்டுமேனிக்குப் பாவித்து, இவ்வாறு ஒரு அரசு தனது உள்நாட்டுப் போரை முடிக்க முடியும் என்பது, இந்த நுற்றாண்டின் எவ்வளவு பெரிய கேவலம்.

புலிகள் இயக்கம் எவ்வளவு முற்றுமுழுதான பயங்கரவாத அமைப்பாக இருந்தாலும், அவர்களே மக்களை பலவந்தமாக சிறைபிடித்து இருந்தாலும், அந்த மக்களை மீட்கவே இந்தப் போரை நடத்துகிறோம் என சிங்கள அரசு சொன்னாலும், குறைந்தபட்சம் ஒரு தற்காலிக போர் நிறுத்தமாவ‌து ஏற்படுத்தி போர்க்களத்திலிருந்து பொதுமக்களையாவது சர்வதேச சமூகம் அப்புறப்படுத்தி இருக்க வேண்டும்.

அந்த மக்களுக்கு ஏற்பட்ட உயிர்சேதத்திற்கும், அங்கஹீனத்திற்கும், மனச்சிதைவுக்கும், பறிக்கப்பட்ட வாழ்வுக்கும் எதுவுமே செய்ய முடியாத சர்வதேசமும், ஐநாவும், கள்ள மௌனம் சாதித்த இந்தியாவும், நாடகதாரிகளாய் மாறிப்போன அரசியல்வாதிகளை நம்பி, ஒற்றுமையாய்ப் போராடாமல் போன நாங்களும், இத்தகைய அறிவியல் யுகத்திலும் சர்வதேசத்திலிருந்து தொடர்புகள் துண்டிக்கப்பட்டு உணவு, மருந்து மறுக்கப்பட்டு பதுங்கு குழிக்குள் துரத்தப்பட்ட ஈழ மக்களுக்காக உண்மையை எழுதாத நீங்களும் என நீளும் பட்டியலில் எல்லோரும் குற்றவாளிகள்தான், ஆனால் அதனை அறிய ஞாநியின் மனசாட்சி சுத்தமாக சிந்திக்க வேண்டும்

அடுத்து இந்தக் கொடூரங்கள் முடிந்து ஓராண்டு கழித்து இப்போது கொழும்பில் இந்திய திரைப்பட விழா நடத்தக்கூடாது என்று கோரிக்கை எழுப்புவது அர்த்தமற்றது என்று எழுதியுள்ளார். இலங்கையின் எந்தக் கொடூரங்களும் முடிந்துவிடவில்லை ஞாநி அவர்களே! ஈழ மக்களின் அரசியல் அபிலாஷை எதுவும் நிறைவேறவில்லை. அந்த மக்கள் உரிமை கேட்டதாலே சொந்த மண்ணிலேயே அகதிகளாய் வாழ்கின்றனர். இன்று இலங்கையின் தமிழர் வாழும் வடக்கு தெற்கு பிரதேசங்கள் இராணுவ சிறைகளாகவும், அகதி முகாம்களாகவும் மாற்றப்பட்டுள்ளன. எந்த நேரமும் யாரையும் ராணுவம் கைது செய்து, சித்ரவதை செய்யலாம், காணாமல் போகச் செய்யலாம் என்ற நிலையே உள்ளது. அங்கு வாழும் எல்லா தமிழனையும் சிங்களத் துப்பாக்கி சந்தேகக் கண்கொண்டு கண்காணித்தபடியே உள்ளது.

இப்பொழுதும் அகதிமுகாம்களில் உள்ள மக்களை தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரதிநிதிகள் சந்திக்க முடியாதபடி உள்ளது. கைது செய்யப்பட பத்தாயிரத்துக்கு மேற்பட்ட போராளிகளை ஓராண்டு ஆன பின்னரும் செஞ்சுலுவைச் சங்கங்களே சந்திக்க முடியாதபடி நிலைமை உள்ளது.

போரின் போதும், போரின் பின்னும் நடைபெற்ற மனித உரிமை மீறல்களை விசாரிக்க வேண்டி மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. அதற்கு அத்தாட்சியாக தொடர்ந்து அவர்கள் புகைப்படங்களையும், காணொளிகளையும் வெளியிடுகின்றனர். நடந்த போரில் ஐ.நா.வின் செயலற்ற தன்மையைக் கண்டித்திருப்பதோடு, இதற்கு இலங்கை தண்டிக்கப்படவில்லை என்றால் உலகிலுள்ள மற்ற நாடுகளுக்கும் தங்கள் நாட்டிலுள்ள சிறுபான்மை மக்களை ஒடுக்க ஒரு மோசமான முன்னுதாரணம் ஆகிவிடும் என தொடர்ச்சியாக போர்க்குற்ற விசாரணைகளுக்கு வலியுறுத்துகின்றன. இதிலிருந்து நீண்ட காலம் தப்பிக்க முடியாது.

இவ்வளவு போர்க்குற்றங்களையும் புரிந்த இராஜபக்ஷே நீங்கள் கூறும் அந்த சாதாரண சிங்களர்களின் வாக்குகளால் மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்து, தமிழின சுத்திகரிப்பையும், தமிழர்களின் நிலங்களையும் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றார். எனவே ஈழ மக்களுக்கான உரிமை கிடைக்கும் வரை இலங்கையை தனிமைப்படுத்தும் போராட்டம் தொடரும்.

இனவெறி அரசை தனிமைப்படுத்த இதுபோன்ற முறையைப் பயன்படுத்துவது புதிதல்ல. இனவெறி தென் ஆப்பிரிக்க அரசை வழிக்குக் கொண்டு வர கிரிக்கெட்டில் இருந்து அந்த அணியை விளக்கி வைத்ததும் உதவியது.

மற்றபடி ஈழ தமிழினத்தைத் தேவையில்லாமல் சிங்கள இனத்துடன் ஒப்பிட்டு எழுதி உள்ளீர்கள் . இவ்வளவு பெரிய இந்தியாவில் சுதந்திரப் போராட்டத்தில் வெள்ளையர் ஆட்சியில் எல்லா குடும்பங்களும் நேரடியாக பாதிக்கப்படவில்லை. ஆனால் ஈழ உரிமைப் போராட்டத்தில் ஒவ்வொரு குடும்பமும் ஒரு விலை கொடுத்துள்ளது. எனவே சுதந்திரத்திற்காகவும், உரிமைக்காகவும் போராடுவதை விட ஒரு சிறந்த வாழ்க்கை இருக்க முடியாது என்பதை ஏற்றுகொள்வீர்கள் என நம்புகிறோம்.

சிங்கள அரசு தனது போர்க் குற்றத்தை மறைத்து, தமிழர்க்கு எந்த உரிமையும் தராமல் இழுத்தடித்துக்கொண்டு இருப்பதைத் தடுக்கவே, இது போன்ற புறக்கணிப்புகள். ௦தனிப்பட்ட சிங்களர்கள் மேல் வெறுப்பில்லை. இங்கு நடிக்கின்ற சிங்கள நடிகைகளோ அல்லது தொழில் செய்யும் தனி நபர்களோ எங்களது இலக்கல்ல. உண்மையில் விடுதலைப் புலிகளும் சாதாரண சிங்கள மக்கள் தங்கள் இலக்கல்ல என்பதை அனுபவத்தில் உணர்ந்தே இருந்தனர். அதனால்தான் நான்காம் கட்ட ஈழப் போரில் சர்வதேச அனுமதியுடன் வகைதொகையின்றி ஈழ மக்களை சிங்கள அரசு கொன்றொழித்த போதும், விடுதலைப் புலிகள் சிங்கள மக்களை தாக்கவில்லை. மற்றபடி ஒவ்வொரு இனத்திற்கும் சில பெருமைகள் உண்டு. அந்த வகையில் சிங்கள இனத்திற்கு உள்ள பெருமைகளையும் ஏற்று கொள்கிறோம்.

இப்பொழுதும் நேர்மையான, துணிச்சலான பத்திரிக்கையாளர் என்றால் சிங்களப் பத்திரிகையாளர் லசந்த பெயர் தான் நினைவுக்கு வருகிறது. உங்களைப் போன்றவர்களை நினைத்தால் எரிச்சல்தான் வருகிறது. என்ன செய்ய?
-வெ.தனஞ்செயன்