Tuesday, April 1, 2014

கொலைகாரர்களிடம் நியாயம் கேட்கும் அவலம் - பிரேமா ரேவதி



ஐந்தாண்டுகளாக கொடூரக் கொலைக்காட்சிகளின் பார்வையாளர்களாக இலங்கையில் போருக்கு பிந்தைய தமிழர் வாழ்வின் வன்முறைகளின் வரைபடத்தை கையறுநிலையில் பார்த்துக்கொண்டிருக்கும் நிலை மட்டுமே உலகெங்கும் உள்ள தமிழருக்கும், மனித உரிமைகளில் நம்பிக்கையுள்ள ஆதரவாளர் சமூகத்திற்கும் ஏற்பட்டிருக்கிறது.


சேனல் 4, மற்றும் பல மனித உரிமை நிறுவனங்களும், ஊடகங்களும் இப்படிப்பட்ட நெஞ்சுலுக்கும் காணொளி ஆவணங்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறார்கள். வன்முறைகளை மீண்டும் மீண்டும் காட்சிப்படுத்துதலின் அரசியலை விமர்சனத்துக்குள்ளாக்கும் அதே வேளையில் குறைந்தபட்ச நியாயம்கூட கிடைக்காமல் அச்சுறுத்தும் வன்முறைகளின் பாழ்வெளியில் நிராதரவாய் நிற்கும் இலங்கைத் தமிழ் மக்களின் குறிப்பாக பெண்களின் நிலையை இந்தியா எனும் அண்டைநாடு(உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக அறியப்படும் நாடு) கேட்காமல் மௌனம் சாதிப்பது கடும் கண்டனத்துக்குரியது.


2009லிருந்து 2014 வரை இலங்கையில் தமிழர் மீது நடத்தப்பட்டுள்ள கொடூரமான பாலியல் வன்முறைகள், கடத்தல்கள், தாக்குதல்கள் பற்றிய ஆவணம் ஒன்றை யாஸ்மின் சூகா என்ற மனித உரிமை வழக்குரைஞர் தலைமையிலான யுனைடட் கிங்டம் பார் மனித உரிமைகள் கமிட்டி வெளியிட்டிருக்கிறது. முடிவடையாத ஒரு யுத்தம் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள இவ்வறிக்கையில் வன்முறைகளுக்குள்ளாக்கப்பட்ட நாற்பது பேரின் விரிவான சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. பல சாட்சியங்கள் படிக்க முடியாத அளவிலான வன்முறை விவரணைகளாக உள்ளன.


யாஸ்மின் சூகா


கூட்டு பாலியல் வல்லுறவு, வாய்வழி பாலியல் வல்லுறவு (பெண்கள் மீது, ஆண்கள் மீது), தண்ணீர் பீய்ச்சியடித்து சித்திரவதை, துப்பாக்கி செலுத்தப்பட்ட பாலியல் வன்முறை என மிகக் கொடூரமான வகைகளில் சித்திரவதைக்குள்ளானவர்களின் சாட்சியங்களின் மூலமாக மறுகட்டமைப்பிலும் மீள் இணக்கத்திலும் ஈடுபட்டுவருவதாகவும் அமைதியை பேணுவதாகவும் சர்வதேச அரங்கில் பேசிவரும் ராஜபக்சே அரசின் வெற்று வாக்குறுதிகளை இந்த அறிக்கை கிழித்தெறிகிறது. இதில் பதிவு செய்யப்பட்டுள்ள வன்முறைச் சம்பவங்கள் அனைத்துமே 2009க்குப் பின் நிகழ்ந்தவை என கூறும் யாஸ்மின் சூகா, “ இந்த அறிக்கையில் விவரிக்கப்படும் சித்திரவதை, பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் வன்முறைகள் தமிழர்கள் மீது நடத்தப்பட்டு வரும் குற்றங்களின் ஒரு சிறு பகுதி உதாரணம் மட்டுமே. சர்வதேச சமூகம் இக்கணமே செயல்படவேண்டும், இல்லாவிட்டால் இந்த வன்கொடுமைகள் தான் போருக்குப் பிந்தைய இலங்கையின் வரையறைகளாகத் தொடரும்.” என்று குறிப்பிட்டுள்ளார். இதில் பதிவு செய்யப்பட்டுள்ள ஆட்கடத்தல்களில் பாதிக்கும் மேற்பட்டவை 2013-14 கடந்த ஓராண்டில் நடந்துள்ளன என்றும் வாக்குமூலம் அளித்த சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட முறைகள் கடத்தப்பட்டிருக்கிறார்கள் என்றும் அறிக்கை கூறுகிறது.

அறிக்கையின் முக்கிய கண்டுபிடிப்புகள்:


1. ஆட்கடத்தல், தன்னிச்சையான சிறைவைப்புகள், சித்திரவதை, பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் வன்முறைகள் போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் அதிகரித்துள்ளன. இந்த வன்முறைகளின் இலக்காக விடுதலைப்புலிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர்கள், அல்லது புலிகளுடன் தொடர்பிருந்தவர்கள் எனச் சந்தேகிக்கப்படும், அல்லது புலிகளின் ஆதரவாளர்கள் எனக் கருதப்படுபவர்கள் இருக்கிறார்கள். இவ்வன்முறைகளின் நோக்கம் இத்தகையோரிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலங்கள் மற்றும்/அல்லது தகவல்கள் பெறுவது என்பதாக தெரிவிக்கப்படுகிறது. புலிகள் அமைப்புடன் ஏதேனும் தொடர்பிருந்தால் அவர்களை தண்டிப்பதற்காக என்பதாகவும் இது நடைபெறுகிறது.


2. பரவலான முறையில் நடந்துள்ள இலங்கை பாதுகாப்பு படைகளின் இந்த மீறல்கள் நிகழ்த்தப்பட்டுள்ள முறைகளைப் பார்த்தால் அவை அரசின் உச்சபட்ச நிலையிலுள்ளவர்களின் அங்கீகாரத்தோடு ஒருங்கிணைந்த முறையான ஒரு திட்டத்தின் அடிப்படையில் செயல்படுத்தப் பட்டவை எனத் தெரிகிறது. இலங்கை பாதுகாப்புப் படையணிகள் தங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்ற தெளிவான பாதுகாப்போடு இயங்குகிறார்கள்.


3. போருக்குப் பிந்தைய மனிதத்திற்கு எதிரான போர்க்குற்றங்களின் அ) சித்திரவதை ஆ) பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் வன்முறை ஆகியவற்றின் உறுதியான ஆதாரத்தை இவ்வறிக்கை கட்டமைக்கிறது.


தென்னாப்பிரிக்காவில் இனவெறிக்கு எதிராக போராடியவரும் சர்வதேச மனித உரிமைப் போராளியுமான ஆர்ச் பிஷப் டெஸ்மண்ட் டுடு இந்த அறிக்கையின் முன்னுரையில், “தன்னுடைய கடந்தகால எதிரிகளுடன் மீள் இணக்கம் செய்துவருவதாக இலங்கை அரசு செய்துவரும் பிரச்சாரங்களின் பொய்யை இவ்வறிக்கையில் வைக்கப்பட்டுள்ள ஆதாரங்கள் உடைக்கின்றன. துவக்குச் சத்தம் ஓய்ந்து ஐந்தாண்டுகள் கழிந்த பின்னும் போரில் தோல்வியடைந்த தரப்புடன் மிகதூரமான தொடர்பிருந்தவர்கள்கூட எப்படி வேட்டையாடப்படுகிறார்கள், சித்திரவதைக்குள்ளாக்கப் படுகிறார்கள், பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்பதை இந்த அறிக்கை காட்டுகிறது. இவ்வறிக்கை பதிவுசெய்துள்ள கடத்தல்களில் பாதிக்கும் மேலானவை 2013-2014ல் நிகழ்ந்துள்ளன என்பது அதிர்ச்சியளிக்கிறது. இதில் வாக்குமூலம் அளித்துள்ள நாற்பது சாட்சியங்கள், இவர்களில் ஏறத்தாழ எல்லோருமே அவர்களின் குடும்பங்கள் அவர்களின் விடுதலைக்காக லஞ்சம் கொடுக்கும் வசதி இருந்ததனாலேயே வெளியே வந்தவர்கள், அப்படி லஞ்சம் கொடுக்க முடியாத குடும்பங்களிலிருந்து வந்தவர்கள் மற்றும் உறவினரே இல்லாதவர்களின் நிலை என்ன என்ற திகைப்பு எழுகிறது. பாலியல் வல்லுறவுகள், வன்முறைகளின் வன்மமும் மிருகத்தனமும் அதிர்ச்சியடைய வைக்கின்றன. இலங்கை பாதுகாப்புப் படைகளின் சித்திரவதையாளர்கள், பாலியல் வன்முறையாளர்களின் இனவெறுப்புமிழும் வார்த்தைகளும் அப்படியே. இந்த சாட்சியங்களில் முப்பத்தைந்து பேர் அவர்களுக்குத் தெரியாத மொழியான சிங்களத்தில் ஒப்புதல் வாக்குமூலங்களில் கையெழுத்திட கட்டாயப்படுத்தப் பட்டிருக்கிறார்கள். சிலர் உயிர் பிழைப்பதற்காக உளவாளிகளாக மாறி அப்பாவி பொதுமக்களை காட்டிக்கொடுக்கும் வேலையைச் செய்யவும் நிர்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள். இது அவர்களின் மீது தொடர்ச்சியான குற்றவுணர்வின் சுமையை ஏற்றியிருக்கிறது.”


வாக்குமூலம் அளித்த நாற்பது பேரில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இலங்கையிலிருந்து தப்பி வெளியேறிய பின்னர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறியிருக்கிறார்கள். டெஸ்மண்ட் டுடு இதை மிகுந்த வேதனையளிக்கும் விஷயமாக குறிப்பிடுகிறார், “ பாதி பேருக்கும் மேல் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்கள் என்பது இலங்கை அரசு அவர்களின் ஆன்மாவை அழிக்கும் தன் நோக்கத்தை எட்டிவிட்டதையே காட்டுகிறது. மீண்டும் தங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் அமைதியையும் எட்ட முடியாத நிலைக்கு இவர்களை தள்ளியிருக்கிறது. என்னுடய ஆழமான எதிர்பார்ப்பு இதுதான், இந்த பழிவாங்கும் வட்டம் உடைக்கப்படவேண்டும். அது நிகழவேண்டுமானால் சர்வதேச சமூகம் தலையிடவேண்டும். போர் இன்னும் முடிவடையாத தீவான இலங்கையை சுற்றியிருக்கும் குற்றமிழைக்கும் அதிகாரத்தை குத்திக் கிழிக்கவேண்டும்” அறிக்கையின் முதல் பக்கத்தில் காஃப்காவின் விசாரணை நாவலில் உள்ள இந்த வாக்கியம் உள்ளது.”இந்த நீதிமன்றத்தின் முன்னால் உன்னை நீ பாதுகாத்துக்கொள்ள வாதாட முடியாது, ஒப்புக்கொள்வது மட்டுமே நீ செய்யலாம். முதல் வாய்ப்பு கிடைக்கும்போதே ஒப்புக்கொள். அது ஒன்றுதான் தப்பிக்க வழி, ஒரே ஒரு வழி. ஆனால் அதுகூட பிறரின் உதவியின்றி சாத்தியமில்லை.”


நீதியின் சட்டத்தின் விதிமுறைகளை அற்பமாக புறந்தள்ளி போரின் காயங்களில் இருந்து மீண்டு இழந்த உறவுகளின் நினைவுகளில் அலைவுற்று வாழ்க்கையின் வாழ்வாதாரத் தேவைகளை பூர்த்தி செய்ய போராடி வரும் மக்களின் மீது ஏவப்படும் இவ்வன்முறைகள், இவ்வன்முறைகளால் பெறப்பட்ட வாக்குமூலங்களின் மீது மேலும் பொய்களை கட்டமைக்கும் ராஜபக்சே அரசின் அநீதி இவற்றை கேள்வி கேட்பாரில்லை எனும் நிலை பூகோள அரசியல் வியூகங்களையும் தாண்டி நாம் வாழும் காலத்தின் விழுமியங்களைப் பற்றிய எதிர்கொள்ளமுடியாத கேள்வியாக இருக்கிறது.

பிரேமா ரேவதி
எழுத்தாளர், பத்திரிகையாளர்.

No comments:

Post a Comment