Tuesday, August 20, 2013

இளவரசா!



இளவரசா!




உன் காதலுக்கு

வாழ்த்துப் ‘பா’ பாட நினைத்தேன்

கொடக்காரியம்மன்

குடியிருக்கும் மரத்தடியில்

காதல் வெற்றி பெற

வேண்டிக் கொண்டேன்.

வாழ்த்திப் பாட வார்த்தை கேட்ட

தமிழ்த் தாயிடம்

உன் சாவைப் பாடிட

எப்படியடா வார்த்தை கேட்பது ?




இளவரசா!

வாழ வேண்டியவனடா நீ.


காதல் கதறியழ

கருமேகம் கண்ணீர் சிந்த

பெற்றோரின் பெருந்துயரைப்

பேசுவோரும் பெருந்துயரால்

பேச்சற்று பொங்கியழ

மூச்சற்றுக் கிடக்கின்றாயே!

சுட்டிப் பெயர் செல்வா

அகவாழ்வின் நிலவொளியில்

அகம் மகிழ்ந்து

வாழவேண்டியவனடா நீ.

கள்ளிப்பால் மனங் கொண்டோர்.


கன்னிவலை வைத்து

காலனிட உன் உயிரைக்

காட்டிக் கொடுத்து விட்டார்.

நின்ற சொல்லன் நீ

நினைவின் வேர்களிலும்

நீடிக்கும் இனிமையை

நிலைபெற வைத்தவன்.

சந்தன மனமுடையோன்.

என்றென்றும் காதலுக்கு

இலக்கணமாய் நிற்பேனென்று

தெளிவுரை சொல்லி

திருமணம் செய்தவன்.




சாதிவெறியரின் சதி நெருப்பில் - உன்

சந்தன மனம் வெந்ததோ?




இளவரசா ! உன்

சந்தன மனம் வெந்ததோ?


காதல் கதறியழ

கருமேகம் கண்ணீர் சிந்த

பெற்றோரின் பெருந்துயரைப்

பேசுவோரும் பெருந்துயரால்

பேச்சற்று பொங்கியழ

மூச்சற்றுக் கிடக்கின்றாயே!




’காதலை’

நாடென்றால் வாழவைக்கும்

மொழியென்றால் வாழ்த்துப் பாடும்

மக்களென்றால் வாழ்த்துவார்கள்

என்றெண்ணி இருந்தாயோ?

மூன்றும் முடமாகி


முச்சந்தி தெருமுனையில்


முனகலுடன் நிற்கிறதே

என்றேங்கி நீ நிற்க.

எங்கிருந்து எமன் வந்தான்?




சாதிவெறியரின் பாசக்கயிற்றில்

எமனும் வீழ்ந்தானோ?


நீதி கெட்ட எமனுக்கு

நீதி சொல்வது யாரடா?

மூச்சற்றுக் கிடக்கின்றாயே!

முத்தமிழின் திருமகனே

மூச்சற்றுக் கிடக்கின்றாயே!


இந்தியாவின் அரசியல் சட்டம்

ஒருவருக்கு ஒரு ஓட்டு என்கிறது.


சாதிவெறிக் குள்ளநரி

உன் சாவில்

வெற்றி ஓட்டினைத் தேடுகின்றது.

வஞ்சனையற்றக் கவிஞன்

சாபமிட்டால்

வரலாற்றில் நடக்குமடா!




சாதிவெறி மனம்படைத்த

சாக்கடையன் பரம்பரை

காதலற்றுப் போகட்டும்.

செயற்கை முயற்சிகளும்

செயலற்றுப் போகட்டும்.

பிணம் காட்டி ஓட்டுக் கேட்போர்

பிணம் திண்ணும் கழுகுகளும்



தீண்டாத பிணமாகி

தெருவெங்கும் நாறட்டும்.

நாதியற்றப் பிணமென்று

நகராட்சி எரிக்கட்டும்.




இளவரசா!

உன் நினைவேந்தி நிற்கையிலே

சாக்கடையர் மனங்களிலும்

‘காதல்மலர்’ மலரட்டும்

என்றன்றோ நினைவலைகள்

எழுகிறது ஓயாமல்.

பிணங்காட்டி கொடியேற்ற

நினைப்போரும்

குணங்கொண்ட மனிதர்களாய்

மாறட்டும் என்றன்றோ - உன்

மனித மனம் பாடுகிறது.




வஞ்சனை அழியாமல்

வஞ்சகர் திருந்தாமல்

சமரசம் என்பதில்லை.

தலித் சாதியின் போராட்டம்

இந்தியாவின் ஏழைகள் போராட்டம்.

ஏழைகள் சாதிகளாய்

இருக்கின்ற வரையில்

எத்தர்கள் பிழைப்பார்கள்.

எழுதிடும் வரலாற்றில்

என் மகன் எங்கே?

என் மகன் எங்கே?


என்றழும் பெற்றோருக்கு

என்னடா சொல்வது?





காதல் கதறியழ

கருமேகம் கண்ணீர் சிந்த

பெற்றோரின் பெருந்துயரைப்

பேசுவோரும் பெருந்துயரால்

பேச்சற்று பொங்கியழ

மூச்சற்றுக் கிடக்கின்றாயே!




உன்னை ஏந்துகின்றோம் - உன்

உணர்வுகளை ஏந்துகின்றோம்.

எங்கள் எண்ணங்களில்

இளம் நெருப்பாய் ஏந்துகின்றோம்.

பொங்கி வரும் கண்ணீர்

பூமிதனில் வீழாமல்

போர்க்களத்தின் வீரமாய்


போராட மாற்றுகின்றோம்.

சாகாத நினைவாக

சரித்திரத்தில் நிலைத்து விட்டாய்.

நீ சாகவில்லை...

உன் மூச்சுக் காற்று

காற்றில் கலந்து

எங்கெங்கும் போர்க்குரலாய்

எதிரொலிக்கின்றது.




சாதி எதிர்ப்புப் போராட்டத்தில்

திசை காட்டும் தீப்பிழம்பாய்

திக்கெட்டும் நிற்கின்றாய்.

என் மகன் எங்கே?

என் மகன் எங்கே?


என்றேங்கும் பெற்றோரே...

திக்கெட்டும் உங்கள் மகன்

தீப்பிழம்பாய் நிற்கின்றான்.




சாதிவெறி எரிந்து

சாம்பலாய் போகும்வரை

தீப்பிழம்பாய் சுழன்றிடுவான்

தீதறியா உங்கள் மகன்.




- இறைமுதல்வன்

6 comments:

  1. அந்திப்பொழுதொன்றில்
    அவளுக்கு நீ தந்த
    மந்தாரைகளின்
    மகரந்தம் சிந்தி
    காய்த்துக் கனிந்து சிதற
    காத்திருக்கும் விதைகளெதில்
    உன் பெயரெழுத?

    ஆசையுடன் ரோசாவும்
    அவளுக்காய்
    நட்ட மல்லிகையும்
    உனை இழந்த
    காலைப்பொழுதுகளில்
    கைப்படக் காத்திருக்க
    எந்த பூவை
    உன் கல்லறையில் வைக்க?

    அடிக்கடி அழும்
    அம்மாவைத் தேற்றும்
    அப்பாவின் இதயத்தில்
    யாரும் அறியாமலே
    வழியும் ரத்தத்தை
    துடைக்க
    கைகளால் முடியவில்லை...

    பழம் தின்று
    பசியாறும் கிளிகள்
    பழக்கத்தில் கதறுகிறது
    உன் பெயர் சொல்லி ....
    இனிக்கும் பழங்களில்
    இனி
    மாம்பழம் பிடிக்காது...

    முற்றத்தில் அதன்
    முற்றுகைப்போர் முடியவில்லை...
    கடக்க முடியாது
    கதவுகளின் பின்னே
    காத்துக்கிடக்கிறோம்...
    கனவிலேனும் வந்து சொல்
    நீ
    கரைந்த கதையை...

    ....லெனின்
    26/07/2013

    ReplyDelete
  2. தருமபுரியில் பா.ம . க சாதிவெறிக்குப் பலியான இளவரசன் படுகொலைக் கண்டித்து எழுதிய இரங்கல் கவிதை ....(11.07.2013)

    சூது சிரிக்கிறது
    வஞ்சகத்தின் தோள் சாய்ந்து .....
    பல்லின் இடுக்கில்
    சதையின் மிச்சங்கள் ....

    குருதிக் குடித்து
    தாகத்தைத் தணித்து
    மாம்பலத் தோட்டத்தில்
    மறைந்துபோனது
    அந்த மிருகம் ...

    தூரத்தில் கேட்கும்
    ரயிலின் ஓசையில்
    சத்தமின்றி அடங்கும் இதயம் .....

    பிள்ளைக்கறி கேட்டு
    தண்டவாளங்களில் திரிகிறது
    ஊர்தெருக்களின் சாமி
    "பேச்சாயி"....

    மூளைசிதறி முடிந்துபோனமனிதனைக்
    கடந்துபோகிறது
    குர்லா எக்ஸ்பிரஸ்கள்....

    எதை எதையோ
    கோணிகளில் அள்ளுகிறார்கள்
    கேங்மேன்கள்...

    காற்றின் வெளியில் கேட்கும்
    தாயின் கதறலில்
    விழிகள் கசிந்து
    அமிலத்தின் நெடி ஏறுகிறது ....

    வேடிக்கைப் பார்த்துக்
    கலைகையில்
    காதைக் கிழிக்கிறது
    செம்மொழி கீதம்...
    யாதும் ஊரே ...யாவரும் கேளிர்.....

    த்தூ.......

    ReplyDelete
  3. "காடுவெட்டி"

    கவுண்டன்
    கழனியில்
    காதலித்தப் பொழுதுகளில்
    பிரண்டைகள் படர்ந்த
    கள்ளிச்செடியில்
    கருவேல முள்ளொடித்து
    எழுதிய பெயர்கள்
    "இளவரசன் திவ்யா "
    இன்னும் இருக்குமா?

    பால் வடியுமந்த
    பச்சை மடல்களில்
    காயத்துப்போன இடங்களில்
    "அம்புகுத்தியஇதயம்"
    என்னவாகியிருக்கும் ?

    ஆலமர விழுதேறி
    ஊஞ்சல் ஆடியபடியே
    உச்சங்கிளைக்குப் போய்
    கீறிச்செதுக்கி
    செங்கல் பொடித்துகளில்
    வண்ணம் தீட்டிய
    "இளவரசன் திவ்யா " வை
    யார் வந்து
    பிரிப்பது?

    காற்றில் மிதக்கும்
    இளவரசனின்
    "ஐ லவ் யூ திவ்யா " க்களை
    அவன்
    கால் நனைத்தக்
    கடலிலேயே
    கரைத்து விடலாமா?

    கடற்கரை மீதமர்ந்தவள்
    கன்னத்தில் பதித்த முத்தங்களை
    யார் மீட்டுத் தருவார்கள்?

    காலற நடந்துகொண்டு
    சைக்கிள் தள்ளியபடி
    காதல் பேசிய
    பொழுதுகளின் நினைவுகளை
    மண்டையில்
    "அடித்து அடித்து"
    அழித்தவர்களே
    சிதறிய மூளைக்கு
    வெளியேயும்
    காதலில் வாழ்கிறான்
    இளவரசன்!

    சுள்ளி க்கு பதிலாக
    கள்ளிகளை பொறுக்கிக் கட்டுங்கள்
    வெட்டித்தர
    "காடுவெட்டி"கள்
    வருவார்கள்...

    ... லெனின் 25-07-2013

    ReplyDelete
  4. தருமபுரியில் இளவரசன் மரணத்திற்கு நீதி கேட்டவர்கள் மீது அரசு மேற்கொண்டுவரும் கைது நடவடிக்கைகளை கண்டிக்கிறேன் ....

    கதறி அழுததற்கா
    கைவிலங்கு...?
    இழவின்
    சோகத்தை
    இனி
    என்ன செய்ய?

    கேட்டது நீதி
    கம்பிகளுக்குப் பின்னே
    காவல் அரண்.....?

    அரசு நினைக்கிறது
    அடக்கிவிட்டு
    அடக்கம் செய்ய ....

    போ
    போய்
    புதைத்து வை...

    நெருப்பைப் புதைத்தால்
    நீரூற்று
    பிறக்காது...

    வெறுப்பை
    விதைத்து
    நெருப்பை
    வளர்க்கிறாய் ....

    தின்றுக் கொளுத்த மிருகங்களை
    தடவிக்கொடுக்கிறாய்
    வம்பற்ற மக்களை
    நெம்பிப்பார்க்கிறாய் ....

    கண்கள் கட்டிய தேவதையின்
    தராசுகளில்
    நிரம்பி வழியும்
    மாம்பழங்கள்...

    பசியாறிய மிருகங்களுக்கே
    படையலிடுகிறது....

    அறுத்துக் கூறாக்கி
    அள்ளிவைத்தக் கூடையில்
    புழுக்கள்
    தின்று செரிப்பது
    வெறும்
    சதைகளை அல்ல....

    காக்கிகளின்
    அக்கப்போரில்
    முளைக்கிறது
    நெருப்பின்
    கொழுந்து...

    தீண்டாமை தேசத்தின்
    இளவரசன்கள்
    இனிமேலும் பிறப்பார்கள்
    எங்கள்
    முற்றங்களில் .....

    ....லெனின் .

    ReplyDelete
  5. நல்ல கவிதை தோழர்.பூவை லெனின்


    அதிலும் குறிப்பாக இவ்வரிகள்
    //இனிக்கும் பழங்களில்
    இனி
    மாம்பழம் பிடிக்காது...//

    //குருதிக் குடித்து
    தாகத்தைத் தணித்து
    மாம்பலத் தோட்டத்தில்
    மறைந்துபோனது
    அந்த மிருகம் ...//

    //வேடிக்கைப் பார்த்துக்
    கலைகையில்
    காதைக் கிழிக்கிறது
    செம்மொழி கீதம்...
    யாதும் ஊரே ...யாவரும் கேளிர்.....

    த்தூ....... ///

    //சுள்ளி க்கு பதிலாக
    கள்ளிகளை பொறுக்கிக் கட்டுங்கள்
    வெட்டித்தர
    "காடுவெட்டி"கள்
    வருவார்கள்...//

    //கண்கள் கட்டிய தேவதையின்
    தராசுகளில்
    நிரம்பி வழியும்
    மாம்பழங்கள்... //காக்கிகளின்
    அக்கப்போரில்
    முளைக்கிறது
    நெருப்பின்
    கொழுந்து...

    தீண்டாமை தேசத்தின்
    இளவரசன்கள்
    இனிமேலும் பிறப்பார்கள்
    எங்கள்
    முற்றங்களில் .....//

    ReplyDelete