Wednesday, January 29, 2014

எப்படியிருக்கிறது இடிந்தகரை?



சேவ் தமிழ்சு இயக்கத் தோழர் கவாஸ்கர் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக சுமார் 25 தோழர்கள் சென்னையிலிருந்து கடந்த மாதம் 27ஆம் திகதி இடிந்தகரை நோக்கி இரயில் மார்க்கமாக பயணமானோம். பறை இசை, கானா பாடல்கள் என‌ நீண்ட இரவோடு களை கட்டியது இரயில் பயணம். மறுநாள் காலை 10 மணிக்கு வள்ளியூர் போய்ச் சேர்ந்தோம். தோழர் ஸ்நாபக் விநோத், பச்சைப் பசேல் வயல்வெளியொன்றில் பம்பு செட் குளியலுக்கு ஏற்பாடு செய்திருந்தார். சென்னை மாநகர பக்கெட் குளியல்களின் பற்றாக்குறை தீரத்தீர ஆசையுடன் குளித்து முடித்த போது 11.30 மணி தொட்டு விட்டது. பிறகு கள்ளிகுளத்தில் விநோத்தின் வீட்டிலேயே காலை உணவு. சூடான இட்லி தோசை கறிக்குழம்பு மணத்தோடு விரல்களை முகர்ந்தவாறே கிளம்புகையில், பெங்களுருவிலிருந்து வந்திருந்த 4 தோழர்களும் இணைந்து கொண்டனர். மதியம் 1.30க்கு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடிந்த கரை மண்ணை நோக்கி..!



வழி நெடுக தென்னை மரங்கள், காற்றாலைகள், ஆரல்வாய்மொழி கணவாயின் கொடையான‌ இதமான காற்று, மந்தாரமான மேகங்கள் என நெல்லையின் ரம்மியமான சூழலை ரசித்தவாறே வந்த போது, லேசாக உப்புக் காற்று வருடத் துவங்கியது. கருவேல மரங்களும் முட்செடிகளும் கடல் அலைகளின் சீற்றத்தை மறைத்த வண்ணம் இருந்தன. "விடிந்த கரை" என்றெழுதப்பட்ட சுவரொட்டிகளை ஆங்காங்கே காண முடிந்தது. அதுவரை பாடிக் கொண்டு வந்த எங்கள் வாகனத்தின் பாடல்கள் இசை நிறுத்தப்பட்டது. ஓட்டரசியல் கட்சித் தலைவர்களின் வழக்கமான புகழ் பாடும் சுவரொட்டிகளையோ பேனர்களையோ எங்குமே காண முடியவில்லை. எளிமையான கத்தோலிக்க வீடுகள், கிறிஸ்துமஸ் நட்சத்திரங்கள், ஒன்றிரண்டு சிறுகோயில்கள், அணு உலை எதிர்ப்பு வாசகங்கள், மீனவர் சகாயம், அந்தோணி இவர்களின் பழைய‌ கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகள், யாரையோ ஊருக்குள் நுழைய விடாமல் தடுப்பதற்காக‌ அமைக்கப்பட்ட‌ மணல் மூட்டைகள் இவைகள் தான் இடிந்தகரை எனும் மீனவ கிராமத்தின் தனித்த அடையாளங்கள். மற்றபடி இயற்கையிலேயே வறண்ட மண்ணையும் வற்றாத நெஞ்சுரம் கொண்ட மனிதர்களையும் வாய்க்கப் பெற்றிருக்கிறார்கள் அந்நெய்தல் நிலத்து மக்கள்.

வாழ்கை போராட்டமயமானது; போராட்டம் இன்பமயமானது என்கிற கார்ல் மார்க்ஸின் கூற்றின் உண்மையை நேரில் காண வேண்டுமா? இடிந்தகரை வாருங்கள். புனித லூர்து மாதா ஆலயத்தின் முகப்பில் அமைக்கப்பட்டிருக்கும் போராட்டப்பந்தல் தான் இன்றைய இடிந்தகரை மக்களின் களம்.. பூசை நேரங்களைத் தவிர‌ லூர்து மாதா ஆலயத்தில் மணி அடித்தால், ஊர் மக்கள் அனைவரும் அப்போராட்டப்பந்தலில் ஒன்று கூடி விடுகிறார்கள். நாட்கணக்காக அப்பந்தலில் தான் பட்டினிப் போராட்டம் நடக்கிறது. அந்த கொட்டகையின் கீழ் அமர்ந்து தான் அரசியல் பேச்சுகளை கேட்கின்றனர். விவாதிக்கின்றனர். பெண்கள் பீடி சுற்றுகிறார்கள். சிறுவர்கள் விளையாடுகிறார்கள். அணு உலை எதிர்ப்பு வாசகங்கள், பேனர்கள், குழந்தைகளின் ஓவியங்கள் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருக்கும் ஆதரவுக் குரல்களின் பதிவுகள் என போராட்ட மேடையை அலங்கரித்திருக்கிறார்கள். காவல்துறையின் அனுமதி பெற்று ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள்ளேயே போராட்டம் நடத்தி பழக்கப்பட்ட நமக்கு, ஒரு கிராமமே ஒரு போராட்டக் களமாகத் திகழ்வதும், மக்களின் அனுமதியின்றி காவல்துறையின் விரல் நுனி கூட நுழைய முடியாமல் இருப்பதும் பெரும் ஆச்சரியங்களை ஏற்படுத்துகிறது. அதே நேரம் போராட்டத்திற்கு ஆதரவளித்து இடிந்தகரை வரும் தோழர்களை வாஞ்சையோடு அரவணைத்துக் கொள்கிறார்கள் என்று கேள்விப்பட்டதை நேரில் உணர்ந்தோம். எங்கள் பிள்ளைகள் நீங்கள் தான் என்று பெண்ணொருவர் சொன்ன போது, மிகவும் நெகிழ்ந்து போனோம்.


கல்யாண வீட்டின் அருமையான மதிய உணவுக்குப் பின், போராட்டக் குழுவோடு ஒரு சிறு சந்திப்பு ஏற்பாடாகியிருந்தது. தோழர் சுப.உதயகுமார், தோழர் முகிலன், தோழர் புஷ்பராயன் ஆகியோரும் மற்ற போராட்டக் குழு உறுப்பினர்களும் பங்கேற்றனர். எங்களோடு வந்திருந்த தோழர்கள் செந்தில், பரிமளா, சதீஷ் சிபிம்(மா.லெ), அருண் சோரி(தமிழ்நாடு மக்கள் கட்சி), மேரி ஆகியோர் அணு உலை எதிர்ப்பு போராட்டம் குறித்து தமது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். கூடங்குள‌ அணு உலை முற்றுகை போராட்ட‌ம் உச்ச‌த்தில் இருந்த‌ போது, இடிந்த‌க‌ரைக்கு வ‌ந்து ஆத‌ர‌வ‌ளித்த‌ அர்விந்த் கேஜ்ரிவால் டெல்லியில் ப‌த‌வியேற்ற‌தை கொண்டாடும் வ‌கையில், அனைவ‌ருக்கும் இனிப்புக‌ள் வ‌ழங்க‌ப்ப‌ட்ட‌ன‌. மேடையில் சந்திப்பு நிறைவுற்ற பின், தோழர் சுப.உதயகுமார் எம் சேவ் தமிழ்சு இயக்கத் தோழர்களோடும், தமிழ்நாடு மக்கள் கட்சி தோழர்களோடும் ஒரு க‌ல‌ந்துரையாட‌லை நட‌த்தினார். நாடாளும‌ன்ற‌ தேர்த‌ல் குறித்து சில‌ க‌ருத்துக‌ள் முன் வைக்க‌ப்ப‌ட்ட‌ன‌. ஆம் ஆத்மி ப‌ற்றி உத‌ய‌குமார் பேசினார். ஊழலைத் தாண்டி, தமிழகத்தின் பிரச்சினைகளான ஈழம்,மீனவர்கள் பிரச்சினை, இயற்கை வளங்கள் சூரையாடல் ஆகியவை குறித்து தம் நிலைப்பாட்டை ஆம் ஆத்மி இன்னும் எடுத்துரைக்கவில்லை மேலும் கூடங்குளத்தில் 3,4 அணு உலை குறித்து தத்தம் நிலைப்பாட்டை தமிழகத்தின் மற்ற‌ அரசியல் கட்சிகள் சொல்ல வேண்டும் என்று தாம் கேட்டிருப்பதாகவும் தெரிவித்தார். தோழர்களும் சில கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். வட்ட நாற்காலி கூட்டம் இவ்வாறாக முடிவடைந்து, தேநீர் வழங்கப்பட்டது. சில தோழர்கள் வெண்குழல் சேவைக்காக ஒதுங்கினர்.
லேசாக வெளிச்சம் மங்கத் துவங்கியிருந்த மாலை நேரம், இடிந்தகரை தோழர் ஒருவர் வழிகாட்ட, சுனாமி காலனி வழியாக கடற்கரையோரம் நடக்கத் துவங்கினோம். அணு உலைக்கு சற்று பக்கமான கடற்கரை அது. முற்றுகை போராட்டத்தின் போது காவல்துறை தனது ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விட்ட அக்கடற்கரை மணலில் தான் சந்தித்த அனுபவங்களை ஊர்ப்பெரியவர் ஒருவர் வெகுநேரம் தோழர்களுக்கு விவரித்துக் கொண்டிருந்தார். மற்ற தோழர்கள் அணு உலையின் மீது ஏறி நிற்பது போன்றும், மிதிப்பது போன்றும் அணு உலையை எதிர்க்கும் விதமாக‌ பல கோணங்களில் நிழற்படங்கள் எடுத்தனர்.பிறகு அங்கிருந்து கிளம்பி போராட்டப் பந்தலுக்கு வந்து சேர்ந்தோம். பந்தலில், மணமகன், மணமகள் தோழர் கவாஸ்கர், பெனிலாவோடு ஒரு சிறு சந்திப்பு, மற்ற விவாதங்கள் இளைப்பாறல்கள், இரவு உணவு, நள்ளிரவு வரை சேவ் தமிழ்சு இயக்கத் தோழர்களுக்குள் கலந்துரையாடல் கூட்டம் என அந்த நாள் புரட்சிகரமானதாக இருந்தது.

ஒன்றைச் சொல்ல மறந்து விட்டேன். 5.30க்கு நாங்கள் வைத்த அலாரம் அடிக்குமுன்னே, லூர்து மாதா தேவாலயத்தில் ஞாயிற்றுக் கிழமை பூசை ஆரம்பித்து விட்ட சத்தம் தூக்கத்திலிருந்து எம்மை மீட்டெடுத்தது. பாதிரியார் ஒரு சிறிய அறிவிப்பையும் செய்தார். "நமது வழக்குகளை கையாண்டு கொண்டிருக்கும் பிரசாந்த் பூஷன் இன்று மதியம் 12 மணிக்கு இடிந்தகரை வருகிறார். அக்கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ளுங்கள்; திருப்பலி முடிந்தது அனைவரும் சென்று வாருங்கள்!" . இங்கே முக்கியமாகக் குறிப்பிட விரும்புவது அவர் சொன்ன "நமது வழக்குகளை" என்ற வார்த்தைப் பிரயோகம். காரணம் அங்கு இன்னார் மேல் தான் வழக்கு என்று கணக்கில்லாமல் பாதிரியார் முதற்கொண்டு குழந்தைகள் வரை அனைவர் மீதும் வழக்குகள் இருக்கின்றன. தேசத்துரோகம், இந்திய நாட்டின் மீது போர் தொடுத்தல் ஆகிய பிரிவுகள் அனைத்திலும் வழக்குகள் இருக்கின்றன. நாங்கள் ( 5 பேர்) அதிகாலை சூரிய உதயத்தைப் பார்க்கச் சென்ற போது, பாதிரியார் குறிப்பிட்ட எல்லா "தேசத்துரோகிகளும்" தேவாலயத்திலிருந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.. தேசத் துரோகத் தீவிரவாதி மணமகனும் பல் விளக்கிக் கொண்டே கடற்கரை பாறை மீது நடந்து வந்து எங்களைப் பார்த்துச் சிரித்தார்.


----------

மேளதாள வாத்தியங்களோடு மண மக்கள் லூர்து மாதா ஆலயத்திற்கு கொண்டு சேர்க்கப்பட்டனர். 11 மணிக்கு திருமண விழா தொடங்கியது. ஜெப வழிபாடுகள் நிறைவடைய, தனித் திருமண மண்டபத்தில் வரவேற்பு விழா தொடர்ந்தது. தோழர் உதயகுமார் உள்ளிட்ட தோழர்கள் மண்டபத்துக்குள் நுழையும் போது பலத்த வரவேற்பு இருந்தது. இடிந்தகரை கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளிலும், கடைகளிலும் இருந்த அவரது படத்தைப் பார்த்த எங்களுக்கு பெரிய ஆச்சரியமொன்றுமில்லை. 800 நாட்களுக்கும் மேலாக நடந்து கொண்டிருக்கும் மக்கள் போராட்டமொன்றின், தலைமையை அம்மக்களே தேர்ந்தெடுத்து விட்டார்கள். தலைவரென்றால் காலில் விழுந்து வணங்கி, குனிந்து வளைந்து குறுகிப் போய், அவர்கள் நிற்கவில்லை. சக தோழராகவே அவரோடு அளவளாவுகின்றனர். (உங்களில் ஒருத்தி, கட்டுமரம் என்று மக்களை ஏமாற்றுபவர்களையெல்லாம் அவர்கள் தூர எறிந்து விட்டார்கள்.


ஒவ்வொருவராக மேடையில் ஏறி மணமக்களை வாழ்த்திப் பேசினர். பெண் விடுதலை, குடும்பம் என்று சில பெரியாரின் கருத்துகளும் விவாதப் பொருளாக மாறின. தோழர் உதயகுமார், பெரியார் குடும்பத்தை பெண்களுக்கான சிறை என்றார். காரணம் அங்கே பெண்களுக்கான ஜனநாயகம் முற்றிலும் மறுக்கப்படுகிறது.அது ஆண்களுக்கான ஜனநாயகம் மட்டுமே அங்கீகரிக்கப் பட்ட குடும்பம். ஆகவே பெண்களுக்கும் குடும்பத்தில் சம உரிமை, சம பங்கு, சமத்துவம் இருக்குமாயின், பெண்களுக்கான ஜனநாயகமும் குடும்பத்தில் மதிக்கப்படுமாயின், அங்கு தான் இல்லற வாழ்வு சிறப்பாக அமையும். தம்பி கவாஸ்கர், நமது போராட்டத்தின் வாயிலாக கற்ற அனுபவங்கள் மூலம், நிச்சயம் பெனிலாவுடன் சமத்துவமான, ஜ‌னநாயக அமைப்பிலான வாழ்வியலை நடத்துவார் என்று நம்புகிறேன் என்று வாழ்த்திப் பேசினார். சேவ் தமிழ்சு இயக்கத்தின் சார்பாக, மணமக்களுக்கு பெரியார், அம்பேத்கர், பிரபாகரன் படங்கள் பரிசளிக்கப்பட்டன.


எல்லோரது பேச்சிலும் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தின் பாதிப்புகள் செறிவாக இறங்கியிருந்ததை அவதானித்தோம். தமிழகத்தில் திராவிட இயக்கமும், ஆந்திராவில் தெலுங்கானா போராட்டமும் மக்கள் சிந்தனையில் ஆழமாக வேரூன்றியதற்கு, அடிப்படை காரணம் இது தான். கல்யாண வீடாக இருந்தாலும் சரி, இழவு வீடாக இருந்தாலும் சரி. செல்லுமிடமெலாம் தத்தம் அரசியலை பேசிப் பேசித் தான் வளர்த்தார்கள். மக்களை அரசியல் மயப்படுத்தினார்கள். இடிந்தகரை கிராமம் அப்பேற்பட்ட அரசியல்,பண்பாட்டுப் புரட்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இன்னொரு புறம் நுகர்வுக் கலாச்சாரத்தில் மூழ்கித் திளைக்கும் மத்திய தர வர்க்கம் அரசியல் ரீதியாக மழுங்கடிப்பட்டு, தமது உரிமைகளுக்காக போராடத் தயங்கும் சம காலத்தில் தான், இடிந்தகரை குழந்தைகள் கூட ஒரு மாபெரும் வல்லாதிக்க அரசை எதிர்க்கத் துணிந்து நிற்கிறார்கள்..கஷ்மீரில் இந்திய இராணுவ டாங்கிகளைக் குறி வைத்து கல்லெறியும் சிறுவர்களின் அதே துணிவு.

மதிய விருந்துக்கு பிறகு, தோழர்கள் அனைவரும் ஒரு படகில் ஏறி, கடல் பயணமாக கூடங்குளம் அணு உலையை நெருங்கிச் சென்று பார்த்தோம். நிறைய புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். உப்புத் தண்ணீர் எங்களை நிறைத்து மகிழ்ந்தது. பிரெஞ்சு மன்னர்களின் வெர்செயில்ஸ் மாளிகையைப் போல, இந்த அணு உலையையும் ஒருநாள் அருங்காட்சியமாக மாற்றுவோம் என்று சொல்லிக் கொண்டோம். கடல் அலை சீற்றத்துடன் படகு கரையை நோக்கி முன்னேறியது. 2 மணியளவில், பிரசாந்த் பூஷன் உரையாற்றினார். முழுமையான மக்கள் திரள் போராட்டப் பந்தலில் குழுமியிருந்தது. தோழர் உதயகுமார், பூஷனின் பேச்சை உடனுக்குடன் தமிழில் மொழி பெயர்த்துக் கூறினார். இந்தியா முழுதும் ஆம் ஆத்மிக்கு ஆதரவு திரட்டி வருவதாகவும், ஆளும் காங்கிரசு அரசால் ஒடுக்கப்படும் இடிந்தகரை மக்களின் ஆதரவைக் கோரியும் இருப்பதாக தெரிவித்தார். பின்னர் கேள்வி நேரம் ஒதுக்கப்பட்டது. ஒரு இடிந்தகரை வாசி, ஆம் ஆத்மியின் உறுப்பினர் கார்டு கொடுத்தால் உடனே அக்கட்சியில் சேர்ந்து விடத் தயார் என்று அறிவித்தார். பிறகு, ஈழம், மீனவர் பிரச்சினை குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. இன்னும் ஈழம் சார்ந்து ஆம் ஆத்மிக்கு நிலைப்பாடு இல்லை. அரசியல் குழுவில் சந்தித்து விவாதித்து நிலைப்பாட்டை அறிவிப்போம் என்று பதிலளித்தார் பூஷன். மேலும் தமிழக மீனவர் பிரச்சினை குறித்து கேட்கப்பட்ட போது, இந்திய அரசின் மெத்தனப் போக்கு கண்டிக்கத் தக்கது, ஈழத்தில் நம் தமிழ்ச் சகோதர்கள் கொல்லப்பட்ட‌ போதும், இன்று தமிழக மீனவர்கள் கொல்லப்படும் போதும் ஆளும் அரசு கண்டும் காணாமல் இருப்பது, தேச அவமானம் என்று குறிப்பிட்டார்.


கூட்டம் முடிந்து மீண்டும் தோழர் உதயகுமாரையும் மக்களையும் சந்தித்து விடைபெற்றோம். தோழர் முகிலன் இறுதி நேரத்தில் தேநீர் ஏற்பாடு செய்திருந்தார். தோழர் கவாஸ்கரின் குடும்பத்தினர், சகோதரர், ஃபிரான்சிஸ் சேவியர் வாசன் மற்றும் அவரது துணைவி ஆகியோர் நாங்கள் இரண்டு நாட்கள் தங்குவதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் சிறப்பாகச் செய்தனர். நாங்கள் தங்கியிருந்த வீட்டின் கதவு முகப்பில் ஒட்டப்பட்டிருந்த, மாவீரர் தின அறிவிப்புப் படம் எங்கள் நினைவில் என்றென்றும் அகலாது இருக்கும்.

எத்தனை இழப்புகள்,வலிகள், வழக்குகள் வந்தாலும் வருடம் முழுதும் தொய்வின்றி போராடக் கற்றுக் கொடுப்பதற்கு ஒரு பல்கலைக் கழகம் இருக்கிறது. அது இந்தியாவின் தென் கடலோரம் ஒரு சிறு மீனவ கிராமத்தில் அமைந்திருக்கிறது.

அ.மு.செய்யது
சேவ் தமிழ்சு இயக்கம்.

No comments:

Post a Comment