Friday, January 10, 2014
வீடு தோறும் மோடி...இல்லங்கள் தோறும் புளுகு மூட்டை...
முன் குறிப்பு - கோயபல்சு என்றால் யார் என்று தெரியாதவர்களுக்கு.... அவர் ஹிட்லரின் கொள்கை பரப்பு செயலாளர். ஒரு பொய்யை திரும்ப, திரும்ப மக்களிடம் சொல்வதன் மூலம் அந்த பொய்யை மக்கள் உண்மை என்று நம்பிவிடுவார்கள் என்பதை செயல்படுத்தி காட்டியவர்.
வரலாற்றில் எப்பொழுதெல்லாம் ஹிட்லர்கள் தோன்றுகின்றார்களோ, அப்போதெல்லாம் கோயபல்சுகளும் உடன் தோன்றுவார்கள். கோயபல்சுகள் இல்லாமல் ஹிட்லர்கள் கிடையாது.... அன்றைய ஹிட்லருக்கு ஒரு கோயபல்சு என்றால், இன்றைய ஹிட்லருக்கோ பல நூறு கோயபல்சுகள். உதயமாகிவரும் இந்திய ஹிட்லரான திருவாளர். மோடிக்கு ஆதரவு தேடி அவரது கட்சியின் தமிழக கிளை (எத்தனை பேர் இருக்கின்றார்கள் என்றெல்லாம் கேட்கக்கூடாது) "வீடு தோறும் மோடி" என்ற துண்டறிக்கையை விநியோகித்து வருகின்றார்கள். அந்த துண்டறிக்கையின் உண்மைத் தன்மையை ஆராய்கின்றது இக்கட்டுரை....
"அழிவு பாதையிலிருந்து நாட்டைக் காப்பாற்ற திறமையான, துணிச்சல் மிக்க, தன்னலம் கருதாத, மக்களுக்காக மட்டுமே வாழ்கின்ற திரு.நரேந்திர மோடி அவர்கள் பிரதமராக வரவேண்டும் என மக்கள் முடிவெடுத்துள்ளார்கள்"
--தேர்தலே இன்னும் நடக்காத நிலையில் அதற்குள் மக்கள் மோடி தான் பிரதமராக வர வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார்கள் எனக்கூறி தாங்கள் கூறும் சனநாயகம் என்பது சர்வாதிகாரம் தான் என முரசறைந்து கூறுகின்றார்கள்...
இந்த துண்டறிக்கையின் இரண்டாவது பக்கத்தில் வாஜ்பாய் அவர்களின் பொற்கால தாமரை ஆட்சி என்ற தலைப்பில் பல பொய்களை வாரி இறைக்கப்பட்டுள்ளன...இதோ...
* இலங்கை தமிழர் நலனிலும், இந்திய தமிழ் மீனவர் பாதுகாப்பிலும் அதிக கவனம் கொடுத்து பாதுகாத்தார்...
ஈழத்தமிழர் என்றால் அவர்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்கின்றார்கள் எனப்பொருள், இலங்கை தமிழர் என்றால் இலங்கை அரசமைப்பிற்குள் தீர்வு எனப்பொருள், 1,60,000த்திற்கும் அதிகமான மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட பின்னரும் இலங்கை அரசமைப்பிற்குள் தான் தீர்வு என்பதே பா.ஜ.க-வின் கொள்கை. பா.ஜ.க ஆட்சிக்கு வந்தாலும் இலங்கை நட்பு நாடு தான் .... அடுத்து இந்திய தமிழ் மீனவர் பாதுகாப்பு ... தற்சமயம் நடந்து வருவது போலவே அப்போதும் தமிழக முதல்வர்கள் கடிதம் எழுதுவதும் , அதற்கு பிரதமர் பதில் கடிதம் எழுதுவதும் தான் நடந்ததே தவிர மீனவர்களை யாரும் பாதுகாக்கவில்லை. அதுமட்டுமின்றி கச்சதீவை மீட்பதில் இவர்களது கொள்கையும், காங்கிரசின் கொள்கையும் ஒன்றே, விரிவாக படிக்க...
http://www.tamiltribune.com/04/0901.html
* காவிரி, முல்லை பெரியாறு நதிகளில் இருந்து தமிழக விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய நீரை உறுதியுடன் பெற்று தந்தார்.
2002 செப்டம்பர் 8 அன்று 0.8 டி.எம்.சி நீரை தமிழகத்திற்கு கொடுக்க வேண்டும் என்று காவிரி நதி நீர் ஆணையம் உத்தரவிட்டது. அதற்கு தலைவர், அப்போதைய பிரதமர் வாஜ்பாய். இது மிகவும் குறைவான நீர் என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் அவர் உத்தரவிட்ட அந்த 0.8 டி.எம்.சி நீரையே கர்நாடக அரசு கொடுக்கவேயில்லை என்பது தான் வரலாறு. (http://www.thehindu.com/news/resources/cauvery-issue-timeline/article4714418.ece)
முல்லைப் பெரியாறு அணையின் உயரம் தொடர்பான பிரச்சனையில் அப்போதைய மத்திய அரசு ஒன்றுமே செய்யவில்லை, வழமை போல தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து 2006ல் நீதியைப் பெற்றது. இதில் வாஜ்பாயோ, அவரது அரசோ ஒன்றும் செய்யவில்லை.
அதே போல தமிழக மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு, கூடங்குளம் அணு உலை, கெயில் எரிவாயு குழாய் பதிப்பு உள்ளிட்ட எல்லா முக்கிய பிரச்சனைகளிலும் ஆளும் காங்கிரசை விட ஒரு படி மேலே சென்று மக்களை ஒடுக்கும் கொள்கையை கொண்டது தான் பா.ஜ.க.....
* 50 ஆண்டு கால காங்கிரசு ஆட்சியில் வாங்கிய கடனை அடைத்தார்....
--- வாஜ்பாய் ஆட்சிகாலத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 விழுக்காடாக இருந்த கடன் 61 விழுக்காடாக அதிகரித்ததே தவிர, எந்த கடனும் அடைக்கப்படவில்லை...
(http://data.worldbank.org/indicator/GC.DOD.TOTL.GD.ZS?page=2)
* அனைவருக்கும் தொலைபேசி, செல்போன் வசதியை ஏற்படுத்தி கொடுத்தார்....
இதையே தான் ப.சிதம்பரமும் சொல்கின்றார். எங்கள் ஆட்சியில் அறுபடி கோடி பேரிடம் அலைபேசி உள்ளது(2010ல்), அப்படியானால் எங்கள் ஆட்சியில் இந்தியா வளர்ந்து விட்டது என்பது தானே பொருள் என்றார். அலைபேசி இணைப்போ, தொலைபேசி இணைப்போ வளர்ச்சியின் குறியீடு அல்ல. மேலும் விரிவாக படிக்க...
http://natramizhan.wordpress.com/2010/08/12/
இவற்றையெல்லாம் இலஞ்சம், ஊழலே இல்லாமல் ஆட்சி நடத்தினார் என சொல்கின்றார்கள்.. தற்சமயம் நடந்த 2G ஊழலில் கூட வாஜ்பாய் அரசிற்கு தொடர்பு உள்ளதென பாராளுமன்ற கூட்டுக்குழு (இதில் பா.ஜ.க-வினரும் உள்ளனர்) கூட கூறியுள்ளது(http://www.thehindu.com/news/national/pm-innocent-but-vajpayee-caused-rs-42080-crore-loss-jpc-report/article4634416.ece).
அடுத்ததாக நரேந்திர மோடியின் சாதனைகள்...
* இந்தியாவில் மதுக்கடைகள் இல்லாத ஒரே மாநிலம் குஜராத்...
இது மோடியோட சாதனை இல்லைங்க. காந்தி பிறந்தார் என்ற ஒரே காரணத்திற்காக குஜராத்தில் மட்டும் 1947லிருந்தே மதுக்கடைகள் இல்லை. அப்படி இதை சாதனையா சொல்லனும்னா காங்கிரசு வேணும்னா சொல்லலாம்...
* மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை வீடியோ கான்பரன்ஸ் மூலம் தெரிந்து உடனுக்குடன் தீர்வை கொடுக்கிறார்.
முதல்வன் படத்தில் வந்ததை அப்படியே எழுதியிருக்கின்றார்கள். என்ன அந்த படத்தில் தொலைபேசி மூலம் பேசுவதை நேரடியாக காட்டினார் சங்கர். இவர்கள் வீடியோ கான்பரன்ஸ் என்று சொல்லுகின்றனர். இயக்குனர்.சங்கர் வேண்டுமென்றால் பா.ஜ.க மீது காப்புரிமை வழக்கு தொடுக்கலாம்...
*23% மட்டுமே பெண்கள் கல்வி பயின்று வந்த நிலையை மாற்றி 96% பெண்கள் கல்வி பெறும் நிலைக்கு உயர்த்தினார்.
2001ல் பெண்கள் கல்வி கற்கும் எண்ணிக்கை 60.40%, 2011ல் 63.31% . வெறும் 2.9% தான் முன்னேறியுள்ளது. (http://www.census2011.co.in/census/state/gujarat.html).
*26% வீடுகள் மட்டுமே குடிநீர் இணைப்பு பெற்றிருந்த குஜராத்தை 10 ஆண்டுகளில் 73% குடிநீர் இணைப்பு பெற்ற மாநிலமாக மாற்றினார்...
2001ல் 84% மக்களுக்கு குடிநீர் கிடைத்திருந்தது, 2011ல் இது 90% இருந்தது. 6% மட்டுமே அதிகரித்துள்ளது. (http://planningcommission.nic.in/data/datatable/1612/table_223.pdf)
இவர்கள் கூறுவதை பார்த்தால் 2001ல் குஜராத் என்னவோ கற்காலத்தில் இருந்த மாதிரியும் , மோடி தான் அந்த மாநிலத்தையே நவீன யுகத்திற்கு கொண்டு வந்தவர் மாதிரியும் சொல்கின்றார்கள்... இராணுவமே 10,000 மக்களை கங்கை வெள்ளத்திலிருந்து காப்பாற்ற பல நாட்களெடுத்த பொழுது 15,000 குஜராத்திகளை மோடி ஒரே நாளில் காப்பாற்றினார் என்று பொய் சொன்னவர்கள் தானே இவர்கள்...
வளர்ச்சியின் நாயகன் மோடியின் மாநிலத்தில் இன்னும் 41% குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவோடே இன்றும் உள்ளனர். ஏன் இந்த நிலை என்று கேட்டதற்கு பெண்கள் தங்களது உடலழகில் கவனம் செலுத்துவதது தான் இதற்கு காரணம் என்ற முத்தை உதிர்த்தவர் தான் திருவாளர்.மோடி. இதையெல்லாம் மோடியினால் எப்படி சரி செய்ய முடியும் என நீங்கள் கேட்கக்கூடும். மேற்கு வங்கத்தில் இருந்து நானோ தொழிற்சாலை வெளியேற்றப்பட்ட போது ஓரு நானோ காருக்கு 60 ஆயிரம் ரூபாயம் மானியம்(அரசு பணம்) கொடுத்து, இலவசமாக இடமும் கொடுத்து அந்த தொழிற்சாலையை குஜராத்தில் அமைக்க முடிந்த மோடிக்கு, இது முடியாதா?
எப்படி இந்திரன் என்ற மன்னன் அவனது அவை கவிஞர்களால் தேவலோக மன்னனாக புகழப்பட்டு இன்று தேவாதி தேவர்களுக்கும் தலைவன் என்று இந்து புராணங்களால் வர்ணிக்கப்படுகின்றனோ... அதே போலவே இந்துத்துவ அடிப்படை வாத கட்சியான பா.ஜ.க-வும் அவர்களது பிரதம வேட்பாளர் மோடியை ஏதோ யுக புருசனாய், தேவ தூதனாய் காட்டுகின்றார்கள்.. தப்பி தவறி மோடி பிரதமராகிவிட்டால் நம் பிள்ளைகள் மோடி என்ற மீட்பனின் வரலாற்றை அவர்களது பள்ளிக்கூடங்களில் படிக்கக்கூடும். வரலாற்றை ஆதிக்க சக்திகள் இப்படி தான் எழுதி வருகின்றார்கள். இது போன்ற ஒரு அசம்பாவிதம் நடக்காமல் இருக்க இன்றே மோடியின் உண்மை முகத்தை மக்களிடம் தோலுரித்து காட்ட வேண்டியது சனநாயக ஆற்றல்களின் கடமையாக உள்ளது. இதில் அடியேனின் ஒரு சிறு துளியே இக்கட்டுரை...
பி.கு- இக்கட்டுரை பா.ஜ.க-வின் துண்டறிக்கையை மையப்படுத்தியே எழுதப்பட்டுள்ளதால் மோடி குஜராத்தில் நடத்திய இனக்கொலைகளைப் பற்றி இங்கு பேசவில்லை.
நற்றமிழன்.ப
Subscribe to:
Post Comments (Atom)
சிறப்பான கட்டுரை.
ReplyDeleteநன்றி. தோழர்
ReplyDeleteஉண்மையை உரக்க சொல்லும் சிறப்பான பதில்கள்.
ReplyDeleteநன்றி பரரி..
ReplyDelete