Friday, January 10, 2014
ஐ.டி துறையில் வேலை பாதுகாப்புச் சட்டம்- ஒரு கலந்துரையாடல்...
ஐ.டி துறையில் வேலை பாதுகாப்புச் சட்டம் தொடர்பான ஒரு கலந்துரையாடல் 26 திசம்பர் அன்று பெங்களூரில் மென்பொருள் பணியாளர் நடுவத்தினால்(ITEC) ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. இந்த கலந்துரையாடல் குறிப்பாக "கர்நாடக அரசு - வேலைபாதுகாப்புச் சட்டத்தை(Industrial Act Or Employment Act) அமல்படுத்துவதற்கு மேலும் 5 ஆண்டுகள் விலக்களித்திருப்பது" குறித்து விவாதிக்கப்பட்டது. பல தொழிற்சங்க நிர்வாகிகளும், மென்பொருள் பணியாளர் அமைப்புகளை சேர்ந்தவர்களும், மென்பொருள் பணியாளர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மென்பொருள் நிறுவனங்களில் "தொழிற்சாலை சட்டத்தை"(Industrial Act) அமல்படுத்துவதற்கு கடந்த 14 ஆண்டுகளாக விலக்களிக்கப்பட்டிருந்தது. மென்பொருள் பணியாளர்களின் கவர்ச்சிகரமான வாழ்க்கை என்பது உண்மையில் இருட்டில் தான் இருக்கின்றது என்ற வாதத்தோடு நிகழ்வை தொடங்கினார் ஹெயின்ஸ்.
அவரை தொடர்ந்து நிகழ்வு ஒருங்கிணைப்பாளரான சரத் பேசும் பொழுது தொழிற்சாலை சட்டத்தை அமல்படுத்துவதிலிருந்து மென் பொருள் நிறுவனங்களுக்கு 1999லிருந்து 2011 வரை முதல் விலக்கும், 2011லிருந்து ஏப்ரல் 2013 வரை இரண்டாவது விலக்கும் மாநில அரசால் கொடுக்கப்பட்டது. 2013 திசம்பர் இறுதிக்குள் எல்லா நிறுவனங்களும் தங்களது அறிக்கையை தொழிலாளர் ஆணையத்தில் சமர்பிக்கும் படி ஏப்ரல் 2013ல் சுற்றறிக்கை கொடுக்கப்பட்டது. இதற்குள் புதிதாக பதவியேற்றுள்ள காங்கிரசு அரசின் முதலமைச்சர் சித்தராமையா தொழிற்சாலை சட்டத்தை அமல்படுத்துவதற்கு மேலும் 5 ஆண்டுகள் விலக்களித்துள்ளார். இந்த அரசின் புதிய ஐ.டி கொள்கையின் படி மேலும் அதிகமான முதலீடுகளை கவருவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி பெங்களூரை தவிர்த்து மற்ற இடங்களில் 1000 பேருக்கு அதிகமான பேரை பணிக்கமர்த்தும் ஐ.டி நிறுவனங்களுக்கு சலுகை விலையில் நிலம், மின்சாரம் மற்றும் வரி விலக்கு போன்ற சலுகைகளும் அளிக்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். இது எல்லாம் போதாதென்று தகவல் தொழில்நுட்ப துறையை அத்தியாவசிய சேவைகள் என்ற பட்டியலின் கீழ் கொண்டுவரும் என்று கூறியுள்ளார் ????? வெளிநாட்டு நிறுவனங்களுக்காக இங்கே உட்கார்ந்து கொண்டு Code எழுதுவதும், அதை சரிபார்ப்பதும் மக்களின் அத்தியாவசிய தேவையா? என்ற கேள்வியை அவர் எழுப்பினார்.
அடுத்து அகில இந்திய தொழிலாளர் சங்க மைய கவுன்சிலைச்(AICCTU - ML) சேர்ந்த சங்கர் பேசும் பொழுது எப்படி இந்த தொழிற்சாலை சட்டம் உருவானது, அதன் தேவை என்ன என்பதை விளக்கினார். தொழிலாளிக்கும், முதலாளிக்கும் இடையிலான உறவை ஒழுங்குபடுத்துவதற்காகவே உருவாக்கப்பட்டது. இதிலும் மொத்தமுள்ள 60 கோடி தொழிலாளர்களில் 7 விழுக்காடு தொழிலாளர்கள் மட்டுமே தொழிற்சங்கம் என்ற அமைப்பில் உள்ளனர், மீதமுள்ள 93 விழுக்காடு தொழிலாளர்கள் எந்த அமைப்பிலும் இல்லாமல் இருப்பவர்களே. நாம் கூறும் இந்த சட்டங்கள் எல்லாம் தொழிற்சங்கம் என்ற அமைப்பாக்கப்பட்ட தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு மட்டுமே. முதலாளித்து சனநாயகத்தில் உள்ள இந்த சட்டங்களைக் கூட அரசு முதலாளிகளின் நலன் காக்க தூக்கியெறிகின்றது என்றால் ஐ.டி-யில் பணிபுரியும் தொழிலாளர்களின் நிலை என்ன? தங்களது உரிமைகளை பாதுகாத்து கொள்ள எந்தவித வழிமுறையும் இல்லாததால் தொழிலாளர்கள் தெருவில் இறங்கி போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று பேசினார் சங்கர். மேலும் சங்கர் பேசுகையில் ஐ.டி துறை என்பது தற்சமயம் தொழிற்சங்கங்கள் உருவாவதற்கான முந்தைய கால கட்டத்தில்(Pre Trade Union Era) உள்ளது என கூறினார்.
அடுத்து பாரதிய மஸ்தூர் சங்கத்தைச்(BMS- BJP) சேர்ந்த சூரிய நாராயணன் அவர்கள் 60 ஊழியர்களுக்கு மேல் கொண்ட எந்த ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனமும் தொழிற்சாலை சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது விதி. இந்த விதி மகாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது, கர்நாடக அரசு முதலாளிகளின் நலனை காப்பதற்காக வேண்டுமென்றே மீண்டும், மீண்டும் நிறுவனங்களுக்கு விலக்களித்து வருகின்றது. இன்று காலை வேலைக்கு செல்லும் ஒரு தகவல் தொழில்நுட்ப பணியாளரின் அலுவலக அடையாள அட்டைவேலை செய்யவில்லை என்றால், அவர்கள்பணி நீக்கம் செய்யப்பட்டுவிட்டார்கள் எனப்பொருள். அலுவலகத்தில் தான் வைத்துள்ள பொருட்களை எடுத்துச் செல்லக்கூட உள்ளே அனுமதிக்கப்படாமல் பாதுகாவலரே அந்த பணியை செய்கின்றார். இது தான் இன்றைய யதார்த்தம், அதுமட்டுமின்றி தகவல் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் பல்லாயிரக்கணக்காக இருந்தாலும், அவர்களின் அடிப்படை சம்பளம்(Basic Salary) சில ஆயிரங்களாகவே உள்ளது. பணியாளர் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டது குறித்து நிறுவனத்தின் மீது வழக்கு தொடுந்தால் கூட அவர்களுக்கு இழப்பீடு வழங்குவது இந்த அடிப்படைச் சம்பளத்தை வைத்து தான், மற்றபடி சம்பள பட்டியலில் இருக்கும் வீட்டு வாடகைப் படி, இதரப் படி (House Rent Allowance, Dearness Allowance) போன்றவைகளுக்கும் இழப்பீட்டிற்கும் ஏந்தா ஒரு தொடர்பும் கிடையாது என்று தெளிவாக விளக்கினார்.
இவரைத் தொடர்ந்து இந்திய தேசிய தொழிலாளர் சங்க காங்கிரசைச்(INTUC- Congress) சேர்ந்த சாகர் குமார் , நமது உரிமைகளுக்காக நாம் போராடததும், நமது உரிமைகளைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாததும் நமது(தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள்) தவறு தான் எனக்கூறினார். ஏப்ரல் 2013ல் தொழிற்சாலை சட்டம் அமலுக்கு வரவேண்டிய பொழுதே நாம் போராடியிருக்க வேண்டும் என்றார், இன்றாவது இது போன்ற ஒரு கூட்டத்தை ஒருங்கிணைத்து உங்களது உரிமைகளை பற்றி விவாதிக்கின்றீர்களே, இது ஒரு நல்ல தொடக்கம் என்றார். தியாகம் செய்யத்தயங்கக்கூடாது என்று கூறிய அவர் இந்திய தொழிற்சங்க வரலாற்றில் நடைபெற்ற தியாகங்களைப் பற்றி குறிப்பிட்டார். முதலமைச்சர் தான் இன்னும் 5 ஆண்டுகள் ஐ.டி நிறுவனங்களுக்கு விலக்களிப்பது பற்றி குறிப்பிட்டுள்ளார், இது இன்னமும் அரசாணையாக வெளிவரவில்லை , அதற்குள் ஒருங்கிணைந்து உங்களது உரிமைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும், அதில் நாங்கள் உங்களுடன் இணைந்து செயல்படுவோம் என்றும் கூறினார்.
இவரைத் தொடர்ந்து அகில இந்திய தகவல்தொழில்நுட்ப பணியாளர்கள் அமைப்பைச் சேர்ந்த விக்ரம் பேசும் பொழுது, தில்லியில் தான் பணியாற்றும் பொழுது தொழிற்சங்கம் அமைப்பது தவறு என சட்டம் சொல்கின்றதா என மனித வள அதிகாரியிடம் கேட்டேன், சட்டம் அப்படியெல்லாம் சொல்லவில்லை, ஆனால் நீங்கள் அமைப்பாக திரண்டால் உங்களது வேலைத்திறன் குறையும் என நாங்கள் அஞ்சுகின்றோம் , அதனால் நீங்கள் அமைப்பாக திரளக்கூடாது என்றார். அதாவது எந்த சட்டமும் நாம் அமைப்பாக திரள்வதை தடுக்கவில்லை, அவர்களது பயம் தான் நம்மை தடுக்கின்றது. நமது அணியில் வேலை செய்யும் சக பணியாளர் திடீரென பணி நீக்கம் செய்யப்படும் பொழுது அந்த அணியில் உள்ள நாம் ஒன்றாக சேர்ந்து ஏன் அவரை பணி நீக்கம் செய்தீர்கள் என கேட்க வேண்டும், இல்லையென்றால் இன்று அவருக்காக நாம் பேசாதது போல,நாளை நமக்காகவும் யாரும் பேசமாட்டார்கள். மேலும் அவர் பேசும் பொழுது நாம் அமெரிக்காவில் உற்பத்தியாகும் ஆயத்த ஆடைகளை அணிவோம், அமெரிக்க அரசியலை தினமும் பேசுவோம் ஆனால் வேலைப்பாதுகாப்பு என்று வரும் பொழுது இந்தியாவில் உள்ள சட்டத்தை கூட அமல்படுத்து எனக்கோராமல் அமைதியாக இருக்கின்றோமே? இந்த முரண் ஏன் என்று கேள்வி எழுப்பினார். அதுமட்டுமின்றி நாம் வேலையை விட்டு போனால் ஒப்பந்தப்படி இரண்டு அல்லது மூன்று மாதம் வேலைபார்த்து விட்டுப் போ எனக்கூறும் நிர்வாகம், நம்மை பணி நீக்கம் செய்யும் போது மட்டும் அன்றே போகச் சொல்கின்றது, நமக்கான உரிமைகளுக்காக நாம் குரல் கொடுக்க வேண்டும். 9 இலட்சம் பணியாளர்கள் இந்த துறையில் பணிபுரிகின்றார்கள், நமக்கான ஒரு தலைமை நம்முள்ளிருந்தே வர வேண்டும் எனக்கூறினார்.
இறுதியில் கேள்வி - பதில் நிகழ்வு நடைபெற்றது.
நற்றமிழன்.ப
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment