Sunday, August 4, 2013
மதிப்பிழந்த பிரதமரின் விரும்பத்தகாத தமிழக வருகை
ஆகஸ்ட் 2, 2013 அன்று புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் ஒரு மின் நிலைய பைப்புகள் தயாரிக்கும் தொழிற்சாலையை திறந்துவைக்க வரும் பிரதமர் வருகையை அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் எதிர்க்கிறது. தனது அரசு தமிழக மக்களுக்கு வளர்ச்சித் திட்டங்கள் செய்கிறது என்ற தோற்றத்தை உருவாக்க அரசின் கடைசி நிமிடத்தில், தேர்தலுக்கு முன்பு நடத்தும் நாடகம்தான் இது.
விசேடமாக நேரம் ஒதுக்கி 350 கோடி ரூபாய் திட்டத்தைத் தொடங்கி வைக்க வரும் பிரதமர், பதினெட்டாயிரம் கோடி ரூபாய் செலவிலான கூடங்குளம் அணுமின் திட்டத்தை திறக்கவோ, அல்லது வந்து பார்க்கவோ விரும்பாததன் மர்மம் என்ன என்று கூடங்குளம் பகுதி மக்களும், அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கமும் வியக்கிறோம். ஊழல் மிகுந்த, தரமற்ற பொருட்கள் உபயோகப்படுத்தப்பட்டுள்ள இந்த கூடங்குளம் அணுமின் திட்டம், உலக நாடுகள் பலவற்றோடு அணுமின் ஒப்பந்தங்கள் செய்துகொண்ட பிரதமரின் விருப்பத் திட்டம்.
ஆபத்தான, கதிர்வீச்சு மிகுந்த வல்லரசு இந்தியாவை உருவாக்க முயலும் பிரதமர் கூடங்குளத்துக்கு வந்து அணுஉலையப் பார்த்து செல்வதுதானே முறை? இந்தத் திட்டம் தரமானதாக, பாதுகாப்பானதாக இருக்கிறது என்று இங்கே வந்து மக்களிடம் சொல்லி ஆறுதல்படுத்திச் செல்லலாமே? அவருடைய ரஷ்ய, அமெரிக்க, பிரான்சு நாட்டு எஜமானர்களின் திட்டங்கள் நிறைவேற கூடங்குளம் திட்டம் வந்தாக வேண்டும் என்று விரும்பும் பிரதமர் இந்தியாவிலேயே மிகப் பெரிய, நீண்டகாலமாகக் கட்டப்படும் இந்த கூடங்குளம் அணுஉலையை வந்துப் பார்க்க விரும்பாதது ஏன்? அவர் ஏன் வர மறுக்கிறார்? ஏன் பயப்படுகிறார்? கூடங்குளம் திட்டத்தில் நடந்திருக்கும் ஊழல்களுக்கும், மோசடிகளுக்கும், தரமற்ற பொருட்களுக்கும் தான் பொறுப்பேற்க வேண்டிவரும் என்று அஞ்சுகிறாரோ? இது தரமற்ற, பாதுகாப்பற்ற அணு உலை என்று நினைப்பது தான் காரணமோ? அவருடைய சகாக்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்பது போல, கூடங்குளம் அணு உலை சரியாக ஓடவில்லையோ? இது ஒரு மக்களுக்கான அணுசக்தித் திட்டம் என்றால், ஏன் இத்தனை இரகசியமும், மூடி மறைப்பும் நடக்கிறது கூடங்குளத்தில்?
அவரது அரசியல் வாழ்வில் எந்தப் பதவிக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப் படாத பிரதமர், மக்களுடைய உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல், அவற்றுக்கு மதிப்பளிக்காமல் நடக்கிறார். உண்மையிலேயே இந்திய, தமிழக மக்களுக்கு உண்மையானவராக இவர் இருந்தால், அணுசக்தி அமைச்சர் என்ற முறையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் தல ஆய்வறிக்கை, பாதுகாப்பு ஆய்வறிக்கை, 2008 ஆம் ஆண்டு
ரஷ்யாவோடு செய்து கொண்ட இழப்பீடு ஒப்பந்தம் போன்ற தகவல்களை உடனடியாக மக்களுக்குத் தர வேண்டும்.
தில்லியிலுள்ள மத்திய தகவல் ஆணையம் மேற்கண்ட அறிக்கைகளை மக்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று ஏற்கெனவே தீர்ப்பு சொல்லியிருக்கிறது. திட்ட பாதிப்புக்குள்ளாகும் மக்கள் தங்கள் இழப்பீடு பற்றி அறிந்துகொள்வதற்கு முழு உரிமை பெற்றவர்கள். ஆனாலும், மன்மோகன் சிங் அரசு இந்தத் தகவல்களை மக்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பவில்லையென்றால், மிக மிக முக்கியமான,
நாட்டு மக்கள், குறிப்பாக தமிழக மக்கள் உயிருக்கும், பாதுகாப்புக்கும் மிகவும் இன்றியமையாத தகவல்களை மன்மோகன் சிங் அரசு திட்டமிட்டு மறைக்கிறது, ஒளித்து வைக்கிறது என்றுதான் பொருள். இந்தியப் பிரதமரும், அணுசக்தித் துறை அமைச்சருமான மன்மோகன் சிங் காதை செவிடாக்கும் தனது மவுனத்தைக் கலைத்து உடனடியாகப் பேசவேண்டும். தமிழக மக்களை அச்சுறுத்தும் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு, காவிரிப் பிரச்சினை, கெய்ல் பைப்லைன், மீதேன் திட்டம், நியூட்ரினோ திட்டம், ஈழத் தமிழர் இனப்படுகொலை போன்றவற்றில், தமிழின விரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் திரு. மன்மோகன் சிங்கும், அவரது அரசும், காங்கிரசு கட்சியும் கூடங்குளம் விபரீதங்களுக்கு பொறுப்பேற்க வேண்டிவரும்.
மக்களின் மதிப்பிழந்த பிரதமரின் விரும்பத்தகாத தமிழக வருகையை கோடிக் கணக்கான தமிழ் மக்களோடு இணைந்து அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் எதிர்க்கிறது. நாளை (ஆகஸ்ட் 2, 2013) அன்று இடிந்தகரையில் கருப்பு தினம் அனுசரிக்கவும் முடிவு செய்திருக்கிறோம்.
போராட்டக் குழு
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment