Friday, June 3, 2011

போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான மன்றம் உருவாக்கம்

கர்நாடக மாநிலத் தலைநகரம் பெங்களூரில் நேற்று வியாழக்கிழமை யூன் 2 ம் நாள் அனைத்து இந்திய அளவில் போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான மன்றம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள Save Tamils இயக்கம், பேராசிரியர் மணிவண்ணன், PUCL மனித உரிமை செயற்பாட்டாளர் திரு. கண குறிஞ்சி மற்றும் திருமதி. அமரந்தா இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கான நட்புறவுக் கழகம் ஆகியோரின் முயற்சியால் தொடங்கப்பட்டுள்ள இந்த மன்றத்தில் கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளாவைச் சேர்ந்த முன்னனி மனித உரிமை அமைப்புகள், பேராசிரியர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பல துறையைச் சார்ந்தவர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

நேற்று காலை நடைபெற்ற இந்த மன்றத்தின் உருவாக்க கூட்டத்தில், Save Tamils இயக்கம் இந்த கூட்டத்திற்கு வந்திருந்தவர்களை வரவேற்று இக்கூட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கிய பின், சனல் 4 செய்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட போர்க்குற்ற காணொளிகள் திரையிடப்பட்டன.




இதை தொடர்ந்து ஐ.நா நிபுணர் குழுவின் போர்க்குற்ற அறிக்கை குறித்து பேராசிரியர் திரு. மணிவண்ணன் அவர்களும், இலங்கையில் தமிழர்களின் இன்றைய நிலை குறித்து திரு. கண குறிஞ்சி அவர்களும் டப்ளின் தீர்ப்பாயம் குறித்து பேராசிரியர் பால் நியூமன் அவர்களும் விளக்கிப் பேசினார்கள்.

பின்னர் கர்நாடகா, ஆந்திரா, கேரளாவைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்தும் இம்மன்றத்தின் தேவை குறித்தும் பின்வரும் கருத்துகளைப் பதிவு செய்தார்கள்.

இலங்கையில் போர் என்ற பெயரில் தமிழினப் படுகொலைதான் நடந்துள்ளது. கடந்த நூற்றாண்டு மனித நாகரிகத்திற்கு ஏராளமானப் பங்களிப்பைச் செய்துள்ளது. ஆனால், இந்த இருபத்தியோராம் நூற்றாண்டு மனித நாகரிகத்தைப் பின்நோக்கி இழுத்துச் செல்கின்றது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கை என்று சொல்லிக் கொண்டு தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கையையே இலங்கை அரசு மேற்கொண்டுள்ளது. பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் என பொதுமக்கள் வாழும் பகுதிகளில் குண்டு வீசி கொன்றதன் மூலம் இலங்கை அரசின் நோக்கமானது இலங்கையில் தமிழர்களை இல்லாது ஒழிப்பதே என்று தெள்ளத் தெளிவாகின்றது.

அண்மைக் காலங்களில் மனிதகுலத்திற்கு எதிரான பல நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன, ’தட்டிக் கேட்பாரின்றி தாங்கள் நினைத்த எந்த நாட்டுக்குள்ளும் நுழையலாம், நினைத்ததை எல்லாம் செய்யலாம்’ என்ற நிலை உருவாகியுள்ளது. இதை மக்கள் வேடிக்கை பார்த்த வண்ணம் இருக்கின்றார்கள்.

இலங்கையில் ஒரு இனப்படுகொலையை நிகழ்த்தியதன் மூலம் இதை ஒரு முன்மாதிரியாக உருவாக்கியுள்ளன ஒடுக்குமுறை அரசுகள். இது தமிழர் பிரச்சனை அல்ல. இது ஒரு ஜனநாயகம் மற்றும் மனித குலத்திற்கானப் பிரச்சனை. இந்த ’இலங்கை முன்மாதிரியை’ இந்தியாவிலும் மேற்கொள்ளும் அபாயம் உள்ளது.

இக்காலகட்டத்தில் மக்களின் மனித நேய உணர்வையே அழித்து வருகின்றன அரசுகள். இந்த மன்றத்தின் வாயிலாக இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலையைப் பரவலாக இந்திய மக்களிடம் கொண்டு செல்வதன் மூலம் இந்த சமூகத்தின் மனிதத் தன்மையை வளர்த்து எடுக்க வேண்டும்.



மேற்கத்திய நாடுகளில் தான் இது போன்ற குற்றங்களுக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் தெற்காசியப் பிராந்தியத்தில் நடந்த அநீதிகளுக்கான நீதி விசாரணைகள் நடந்ததில்லை. எனவே, இலங்கை அரசைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதன் மூலம் இனி இத்தகைய அநீதிகள் நிகழாதவண்னம் தடுக்க வேண்டும்.

இந்த ஐ.நா அறிக்கை இந்தியாவில் உள்ள முன்னணி மனித உரிமையாளர்களுக்கே தெரியவில்லை. இதை மிகவும் பரவலாக்க வேண்டிய பொறுப்பு நம் எல்லோருக்கும் இருக்கின்றது.

இலங்கை முன்மாதிரியை மீண்டும் மீண்டும் பல்வேறு மக்களினங்கள் மீது நடைமுறைப்படுத்தும் அபாயமிருக்கும் இன்றைய சூழலில், போர்க்குற்றங்களுக்கும் இனப்படுகொலைக்கும் எதிரான மன்றம் இன்றியமையாதது என்ற கருத்து எல்லோராலும் முழு மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இம்மன்றத்தின் உடனடி வேலையாக கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் ஐ.நா நிபுணர் குழு அறிக்கையை அறிமுகப்படுத்தி கூட்டங்களை நடத்துவது, வாய்ப்பு இருக்கும் இடங்களில் போராட்டங்களை முன்னெடுப்பது. இம்மன்றத்தை மேற்கு வங்கம், பாண்டிச்சேரி உள்ளிட்ட பிற மாநிலங்களில் பரவலாக்குவது உள்ளிட்டவை முடிவு செய்யப்பட்டுள்ளது.

பின்வரும் கோரிக்கைகள் இந்த மன்றத்தின் முதன்மையான கோரிக்கைகளாக முடிவுசெய்யப்பட்டுள்ளன.



ஐ.நா மற்றும் சர்வதேச சமூகம் நோக்கி,

போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலை புரிந்துள்ள இலங்கை அரசு மீது சார்பற்ற பன்னாட்டு விசாரணை மேற்கொள்ள ஐ.நா மற்றும் சர்வதேச சமூகம் உறுதியான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

இந்திய அரசு மற்றும் இந்தியாவில் உள்ள சனநாயக ஆற்றல்களை நோக்கி,

போர்க்குற்றம் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் செய்ததற்காக இலங்கை அரசின் மீது சர்வதேச விசாரணையை ஆதரித்து அதனை தொடர்ந்து நடத்தக் கோரியும் இந்தியா முழுவதும் உள்ள சனநாயக ஆற்றல்கள் இந்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

மேலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2004 ம் ஆண்டு பதவியேற்றது முதல் இலங்கை அரசுடனான வெளியுறவுக் கொள்கை மற்றும் இராணுவ உதவிகள் குறித்து வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும்.




தமிழக அரசை நோக்கி,

இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடைபெற்றது ஒரு இனப்படுகொலை என்று அங்கீகரித்தும், போர்க்குற்றம் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் செய்ததற்காக இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழக சட்டசபையில் புதிதாக தேர்ந்தேடுக்கப்பட்டுள்ள அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

No comments:

Post a Comment