Monday, March 18, 2013
மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டக் களத்தில் ஐ.டி துறையினர்
இப்போது இல்லாவிட்டால்…பின் எப்போது?
ஒரு வாரத்திற்கு மேலாக தமிழ்நாட்டு மாணவர்கள் ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்டுப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். நந்தனம் கல்லூரி தொடங்கி ஐ.ஐ.டி வரை மாணவர்களில் உள்ள பல்வேறு தரப்பினரும் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.வழக்கறிஞர், மீன் வியாபாரிகள், சினிமா துறையினர்கள், ஆட்டோ ஒட்டுநர்கள் எல்லோரும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். நம் அன்றாட வாழ்க்கை நம்மைச் சுற்றியிருப்பவர்களோடு பின்னிப் பிணைந்து இருக்கின்றது. இந்த சமூகத்தில் இருந்து பிரிக்க முடியாத அங்கமாக இருக்கும் நாம் என்ன செய்தோம்? என்ன செய்யப் போகிறோம்?
2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த போரில் ஒன்றரை இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். 18 மைல் தொலைவில் இருந்தும் நம்மால் அந்த இன அழிப்பு போரை நிறுத்த முடியவில்லை. ஒரு இனப்படுகொலையை வேடிக்கை பார்த்துக் கொண்டோ அல்லது தடுக்க முடியாதவர்களாகவோ இருந்தோம்.இந்தப் போரில் 90000 பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டுள்ளனர். ஒரு தலைமுறை குழந்தைகளே ஊனமாக்கப்பட்டுள்ளார்கள்.
போருக்குப் பின்னால் நெஞ்சை பிளக்கும் ஆதாரங்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன.அந்தப் போரில் போர்க்குற்றங்கள், மனித குலத்திர்கு எதிரான குற்றங்கள் நடந்துள்ளன என்றும் இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று டப்ளினில் நடந்த நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் பரிந்துரைத்தது.ஐநா. செயலர் பான் கீ மூன் மூவர் நிபுணர் குழுவும் இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்தது,தமிழக சட்ட மன்றத்தில் இதை வலியுறுத்தி தமிழக சட்ட சபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.மேற் சொன்ன எந்த பரிந்துரைகளையும் ஏற்றுக் கொள்ளாத ஒரு வெற்றுத் தீர்மானத்தையே அமெரிக்க அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.கொலைகாரன் தன்னைத் தானே விசாரித்து அளித்த "நல்லிணக்க அறிக்கையை" ஏற்றுகொண்டு, அதில் உள்ள பரிந்துரைகளை நிறைவேற்றச் சொல்லும் கோரிக்கையை முன்வைத்து இலங்கைக்கு சாமரம் வீசும் தீர்மானத்தை முன்மொழிந்துள்ள வட அமெரிக்காவையும், அதன் கூட்டணி நாடுகளை நாம் வன்மையாக கண்டிக்க வேண்டும்.
.
இலங்கை மீதான ஒரு சுதந்திரமான சர்வதேச விசாரணையே, இனப்படுகொலைக்கும் போர்க்குற்றங்களுக்குமான ஒரு குறைந்த பட்ச நீதியாகவும்,தொடர்ந்து நடைபெற்று வரும் தமிழர்கள் மீதான இன அழிப்பு ஒடுக்குமுறைகளை தடுத்த நிறுத்தவும் ஏதுவாக அமையும்.
அதே வேளையில் இந்தியாவின் இரட்டை வேடத்தை அம்பலப் படுத்தியும்,அமெரிக்கா கொண்டு வரும் பல்லில்லா தீர்மானத்தை எதிர்த்தும், ஈழத்தமிழர்களுக்கான நீதி வேண்டியும் தமிழகம் முழுக்க போராடி வரும் மாணவர்களின் போராட்டத்தையும் நாம் ஆதரிக்கின்றோம்.
தமிழகத்தின் ஒட்டுமொத்த சமூகமும் ஈழத் தமிழர்களுக்கான நீதி வேண்டியும் தனித் தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரியும் எழுச்சி மிக்க போராட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கிறது.
பெற்றோரை இழந்து தவிக்கும் பச்சிளம் குழந்தைகளையும்,ரத்த வெள்ளத்தில் தம் குழந்தைகளை மடியில் கிடத்திக் கதறிய பெற்றோரையும், கணவனை இழந்த பெண்களையும்,பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு சிதைக்கப்பட்ட உடல்களையும் தொலைக்காட்சிகளிலும் இணையத்திலும் பார்த்து பார்த்து மனம் வெதும்பி, செய்வதறியாது நின்ற ஒரு சமூகம் இன்று வீறு கொண்டெழுந்து வீதிக்கு வந்து போராடும் போது,அச்சமூகத்தின் ஒரு அங்கமான ஐ.டி ஊழியர்களான நாமும் களமிறங்க வேண்டிய நேரம் வந்து விட்டது.கை நிறைய சம்பளத்தோடு குளு குளு அறையில் கோக் உறிஞ்சி பாப்கார்ன் கொரிக்கும் ஆடம்பரக் கூட்டமில்லை நாம்.நமக்குள்ளே பேசி பேசி ஆகப்போவதென்னவென்று சலித்துக் கலைந்தது போதும். பெருந்திரளான இளைஞர்களை உள்ளடக்கிய ஐ.டி துறையின் வலிமையை இந்திய அரசின் முதுகில் அறைந்து சொல்ல வேண்டாமா ? நம் குரல் எதிரிகளின் குரல் வளையை நெறிக்கும் புரட்சிகர மாற்றங்களைச் செய்ய வல்லது என்று பறை சாற்ற வேண்டாமா ?
ஒன்று கூடுவோம் ! உரத்துச் சொல்வோம் ! மக்கள் சக்தியை உருத்திரட்டுவோம் !
இலங்கை மீது சர்வதேச பன்னாட்டு விசாரணையைக் கோரியும் இலங்கை அரசின் மீ்து பொருளாதார தடை விதிக்கக் கோரியும் வரும் புதனன்று(மார்ச் 20) மாலை 4 மணிக்கு டைடல் பார்க் முன்பு வந்து திரளமாறு உங்களை அழைக்கிறோம்.
"ஒரு இனப்படுகொலை நடக்கும் பொழுது நீங்கள் அமைதியாக இருக்கின்றீர்கள் என்றால், நீங்கள் அந்த படுகொலையை ஆதரிக்கின்றீர்கள் எனப்பொருள்" - டெசுமாண்ட் டூட்டூ
Subscribe to:
Post Comments (Atom)
என் மனதில் தோன்றிய எண்ணம் மற்றும் பணியிளுர்ப்பவர்கள் பங்கேர்க வழியில்லையே என்று குறையாக நினைத்ததை திட்டமிட்டு விட்டீர்கள். எனது ஆதரவுகள். சந்திப்போம் அந்நாளில்..!
ReplyDeleteவெல்லட்டும் ,வெல்லட்டும் நமது போராட்டம் வெல்லட்டும் ...வாருங்கள் தோழர்களே ! நமது ஆதரவை பறை சாற்றுவோம்!!!!
ReplyDelete