Monday, March 11, 2013
பற்றி பரவும் மாணவர் போராட்டமும், அரசியல் அடக்குமுறையும்
லயோலா கல்லூரி மாணவர்களின் பட்டினிப் போராட்டம் தமிழக காவல்துறையினரால் அடாவடியாக நேற்று நள்ளிரவில் கலைக்கப் பட்டிருக்கிறது.போராட்ட அரங்கிற்குள் அத்து மீறி நுழைய முற்பட்ட போலிசை அங்கிருந்த மாணவர்கள், தோழர்கள் இரண்டு அடுக்காக நின்று தடுக்க முயன்றிருக்கின்றனர். அவர்கள் மீது தடியடி பிரயோகமும் நடந்துள்ளது. மீறிச் சென்ற போலிசு அரங்கைச் சுற்றி வளைத்து அங்கிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்களையும், பட்டினிப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களையும் குண்டுக்கட்டாக கைது செய்து, அங்கிருந்த நாற்காலிகளை உடைத்து போட்டிருக்கின்றது. தமிழக அரசின் திட்டமிட்ட ஒரு முயற்சியாகத் தான் இந்த அடாவடித் தனம் நடந்தேறியிருக்கிறது. இந்த கைது நடவடிக்கைக்கு சில மணி நேரங்களுக்கு முன்பே உண்ணாவிரதம் நடைபெறும் கோயம்பேடிலிருந்து வடபழனி வரையிலான இரு வழிப் பாதை ஒரு வழிப் பாதையாக்கப்பட்டது. போக்குவரத்தில் ஏற்பட்ட இந்த மாற்றத்தை பார்த்த தோழர்கள், இந்த வெறிச்செயலை முன் கணித்திருக்கிறார்கள். இருப்பினும், மாணவர்களும், தோழர்களும் அறவழியிலேயே கைது நடவடிக்கைக்கு எதிராக போராடியிருக்கின்றார்கள்.
ஏறத்தாழ 4000க்கும் மேற்பட்ட மக்கள், அரசியல் இயக்கங்கள், தலைவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களை சந்தித்து வாழ்த்தி வருகின்றனர். மூன்றே நாட்களில் இப்போராட்டத்திற்கு கிடைத்த வரவேற்பும், ஆதரவும் ஆளும் அரசையும், ஈழப்போராட்டத்தில் அரசியல் செய்துவரும் அரசியல்வாதிகளையும் திகிலடையச் செய்துள்ளது. குறிப்பாக ராஜபக்சே அரசுக்கு இச்செய்தி பலமாக எட்டியிருக்க வேண்டும். இந்தியாவின் நட்பு நாடான இனப்படுகொலை ராஜபக்சே அரசு, இந்திய அரசுக்கு கொடுத்திருக்கும் அழுத்தம், அப்படியே இந்திய அரசின் வாயிலாக தமிழக அரசையும் எட்டியுள்ளது. மேலும் இன்று கல்லூரிகள் தொடங்குவதால் இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு மற்ற கல்லூரி மாணவர்களின் ஆதரவு கிடைத்து, இந்த போராட்டம் பெரிய அளவில் நடந்தேறிவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வின் வெளிப்பாடகவே இரவோடு, இரவாக இந்த உண்ணாவிரத போராட்டத்தை காவல்துறை கலைத்துள்ளது.
இதை வெறுமனே சனநாயக மறுப்பு என்ற அளவில் மட்டுமே புரிந்து கொள்ளக் கூடாது. ஆளும் இந்திய அரசு மட்டும் தமிழர்களுக்கு எதிரான கொள்கைகளை கொண்டது அல்ல. தமிழக அரசு என்பது தன்னளவில் பெரிய அதிகாரங்களை கொண்டதாக காட்டிக்கொண்டாலும், உண்மையில் அதன் வேலை இந்திய அரசிற்கு கங்காணி வேலை பார்ப்பதே. இதை தான் இன்று ஜெயாவும் செய்துள்ளார். இலயோலா கல்லூரி மாணவர்களின் கோரிக்கைகளின் ஒன்று ஜெயா நிறைவேற்றிய சட்டமன்ற தீர்மானங்களை செயல்படுத்தக் கோரியிருந்தது, இருந்தும் அவர் உண்ணாவிரதத்தில் அடக்குமுறை ஏவிவிட்டது, அவர் இதுவரை பிரதமருக்கு எழுதிய கடிதங்கள், சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானங்கள் எல்லாம் முந்தைய ஆட்சியில் கருணாநிதி நடத்திய உன்ணாவிரதம் போலவே, கண் துடைப்பு நாடகங்கள் என்பது இன்று வெட்டவெளிச்சமாகியிருக்கிறது. தமிழகத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்த நிலை தான் தொடரும், இதற்கு அதிமுக, திமுக, காங்கிரசு என்ற கட்சி பேதமில்லை. ஆளுகின்ற தங்களை தாண்டி போராட்டங்கள் செல்லும் பொழுது அது கடுமையாக ஒடுக்கப்படும் முல்லைபெரியாறு, கூடங்குளம் போராட்டங்களில் இதுவே நடந்தது, இன்று இலயோலா உண்ணாவிரத போராட்டத்திலும் இதுவே நடந்துள்ளது.
ஈழப்போராட்டத்தில் லயோலா கல்லூரி மாணவர்களின் அரசியல் புரிதல் தெளிவாக இருக்கிறது. இப்போராட்டத்தின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை நாங்கள் சாகத் தயார். எங்கள் உடல்களை வைத்து இப்போராட்டத்தை கூர்மைப் படுத்துங்கள் என்று மாணவர்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். லயோலா கல்லூரியில் பற்றிய இந்த நெருப்பு இன்று அம்பேத்கர் சட்டக் கல்லூரி, சென்னை கிறிஸ்டியன் கல்லூரி, நந்தனம் கலைக்கல்லூரி, திருச்சி புனித ஜோசப் கல்லூரி, காரைக்குடி அழகப்பா கல்லூரி எனபல இடங்களுக்கு பரவி, எல்லா மாணவர்களும் உண்ணாவிரதம், சாலைமறியல் போன்ற அறவழியிலான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அதே போல கைது செய்து இராயப்பேட்டை மருத்துவமனையில் சிறை வைக்கப்பட்டுள்ள இலயோலா கல்லூரி மாணவர்கள் மருத்துவமனையிலிருந்தே தங்களது உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
மாணவர்கள் மட்டுமல்லாது அரசியல் இயக்கங்கள், கட்சிகள், தலைவர்கள், பொதுமக்கள் வரை இப்போராட்டத்திற்கு வலுவான ஆதரவை தெரிவிக்கின்றனர். தமிழக அரசியல் வரலாற்றில் மொழிப் போர் காலத்தில் பரவலான மாணவர் பங்களிப்பு அரசியலில் இருந்தது. இதன் மூலம் ஆட்சியைப் பிடித்த கட்சிகள் மாணவர்களை அரசியல் சார்ந்த செயல்பாடுகளிலிருந்து நீக்கினர். இன்று நடந்துகொண்டிருக்கும் இலயோலா கல்லூரி மாணவர்களின் போராட்டம், மாணவர்களை சரியான திசையில் அரசியல்மயப்படுத்தி, எங்கே தாங்கள் அரசியல் அரங்கில் இருந்து வெளியேற்றிவிடுமோ என்ற பயம் அதிமுக, திமுக, காங்கிரசு என்ற எல்லா கட்சிகளிலும் பரவியுள்ளது, இதன் வெளிப்பாடாகவே திமுக, காங்கிரசு இலயோலா மாணவர்களின் போராட்ட அரங்கிற்கு வந்து போராட்டத்தை கைவிட சொல்லி முயற்சித்ததும், மாணவர்களின் போராட்டத்தை தங்கள் போராட்டமாக காட்டமுயற்சித்ததும் , ஆளும் அதிமுக கட்சி தங்களிடம் உள்ள அதிகாரத்தின் மூலம் போராட்டத்தை அடக்க முயன்ற நிகழ்வும். பொழிப்போருக்கு பிறகான காலத்தில் சரியான அரசியல் கோரிக்கையை நோக்கி தங்களது போராட்டத்தை தொடர்ந்து நடத்திவரும் மாணவர்களின் இப்போராட்டத்தையும், அதற்கு ஆதரவாக இன்று பல இடங்களில் நடந்து வரும் போராட்டங்களையும் நாம் ஆதரித்து இந்த போராட்டத்தை பரவலாக மாணவர்களிடமும், மக்களிடமும் கொண்டு செல்ல வேண்டும் .
மாணவர்கள் போராட்டம் வெல்லட்டும்
Subscribe to:
Post Comments (Atom)
போராட்டக்காரர்களை ஒடுக்குவதில் தான் கருணாநிதிக்கு சற்றும் இளைத்தவரல்ல என்பதை ஏற்கனவே கூடங்குளத்தில் நிரூபித்த பாசிச ஜெயா தற்போது லயோலா கல்லூரி மாணவர்கள் மீது காட்டியுள்ளார். போராட்டங்களை நசுக்குவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளைக் கடந்து இலக்கை எட்டும்வரை வன்முறையற்ற வழியில் முழுமையான பலத்தினையும் ஒன்றுதிரட்டி மாணவர் சக்தி போராடவேண்டும்.
ReplyDelete