Tuesday, June 3, 2014

இந்தி பெருசா? அரபி பெருசா? - எது வேணும்?


கல்லூரியில் என்னுடன் படித்த நண்பன் ஒருவன், பணிக்குச் சேர்ந்த நிறுவனத்தின் 'தாய்லாந்து'(நாட்டு) கிளைக்கு மாற்றப்பட்டான்.  'தாய்லாந்து' நாட்டில் பெரும்பான்மையான மக்களின் மொழி 'தாய்'. ஆங்கிலச் சொற்களைக் கலந்து பேசுவது நம் வழக்கமாகிவிட்டது. ஆனால், 'தாய்' மொழி பேசும் மக்கள் அவ்வாறு இல்லை. நாம் தஆன்றாடம் புழங்கும் பொருட்களை, அவற்றின்  ஆங்கிலப் பெயர்களை வைத்தே குறிப்பிடுகிறோம். ஆனால்,அவர்கள் 'தாய்' மொழியிலேயே இருக்கும் சொற்களைத்தான் பயன்படுத்துகிறார்கள். ஆங்கிலத்தில் எழுதிய முகவரியைக் காட்டினால், பெரும்பாலான வாடகை வண்டி ஓட்டுநர்களே கையை விரித்து விடுகிறார்கள். நம்மில் யாருக்கேனும் 'தாய்' மொழி தெரியாமலோ, ஆங்கிலம் தெரிந்த வழிகாட்டியோ இல்லாமல் அந்த நாட்டில், சுற்றுலாப் பயணியாகச் சென்றாலே திணற வேண்டியிருக்கும்.


இந்த நிலைமையில், நண்பனின் நிலையை கற்பனை செய்து பாருங்கள். அங்குள்ள பணியாளர்களை இவன் வேலை வாங்க வேண்டும். அவர்களில் யாருக்கும் ஆங்கிலம் தெரியாது! கிட்டத்தட்ட ஒரு வருடம் சைகை மொழிதான் பேசினான். சில நேரங்களில், அவர்கள் செய்ய வேண்டிய அத்தனை வேலைகளையும் இவனே செய்யவேண்டிவரும். கையில் உபகரணங்களுடன் களத்தில் இறங்க வேண்டியதுதான்.




அலுவலகத்தில், உடன் பணிபுரியும் உயரதிகாரிகள் யாரேனும் சிலர் ஆங்கிலம் பேசுவார்கள், அதுவும் தத்துப்பித்துவென்று. அவர்களுடைய மொழியைக் கற்றுக்கொள்ளும்வரை அவன் பாடு திண்டாட்டமாகத்தான் இருந்தது. அங்குள்ள மக்களோடே அன்றாடம் பழகினாலும் 'தாய்' மொழியை ஒரளவிற்குக் கற்றுக்கொள்ள ஓராண்டிற்கும் மேல் ஆகிவிட்டது. கற்றுக்கொள்ள அவ்வளவு கடினமான மொழி.


"ஆனா பாருங்க, இங்க நம்மூர்ல டிராவல்சு வைச்சி நடத்தி 'தாய்லாந்துக்குச் சுற்றுலா' ஏற்பாடுகளைச் செய்யுறவங்க 'தாய்' மொழிய நல்லா படிச்சிகிட்டு லட்சம் லட்சமா சம்பாதிக்குறாங்க. என்ன ஒரு அநியாயம்! என் நண்பனும் 'தாய்' மொழிய பள்ளிக்கூடத்துலயே படிச்சிருந்தான்னா அவ்ளோ கஷ்டப்பட்டிருப்பானா?! படிக்கவிடாம பண்ணிட்டாங்களே இந்த அரசியல் 'வியாதிகள்'!


இப்படிச் சொன்னா எப்படி இருக்குமோ, அதுமாதிரிதான் "இந்தி வேண்டாம் வேண்டாம்னு சொல்லி, நம்மள இந்தி படிக்க விடாம பண்ணிட்டாங்களே! வடநாட்டுக்குப் போனா நம்ம ஆளுங்கல்லாம் எவ்ளோ கஷ்டப்படுறாங்க? ஆனா, இந்த அரசியல்வாதிக மட்டும் அவுங்க புள்ளைங்களையெல்லாம் இந்தி படிக்க வச்சிடறாங்க!" னு சொல்றதும்.
எங்கள் ஊரிலிருந்து, பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு 'பம்பாய்' (இப்போது 'மும்பை')க்குப் போனவர்கள் இந்தி பேச கற்றுக்கொண்டது ஒரே மாதத்தில். இவ்வளவு எளிமையான மொழியை, தனியாக ஒரு பாடமாக வைக்கவேண்டியதன் அவசியம் என்ன?
ஒரு கணக்கு போட்டுப் பார்க்கலாம். என்னுடன் பொறியியல் வகுப்பில் படித்தது மொத்தம் 66 பேர். அதில் தமிழ்நாடு தவிர மத்த மாநிலங்களில் இருப்பவர்கள் எண்ணிக்கை 7. இதில் வட இந்தியா அல்லது முழுக்க இந்தி பேசுகிற இடங்களில் இருப்பவர்கள் மூன்றே (3) பேர்தான். ஆனால், மத்திய கிழக்கு நாடுகளில்(அரேபிய நாடுகள்) இருப்பவர்களின் எண்ணிக்கை 10. 

அங்கே பேசுகிற 'அரேபிய' மொழி தெரிந்நால் நல்லதா, இல்ல இந்தி தெரிஞ்சா நல்லதா? 

பொதுவாகவே, தமிழ்நாட்டில் இருந்து வெளி மாநிலங்களுக்கு (குறிப்பாக இந்தி மட்டும் பேசப்படுகிற இடங்களுக்கு) வேலைக்குப் போகிறவர்களின் எண்ணிக்கையை விட, அரேபிய நாடுகளுக்கு வேலைக்குப் போகிறவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பது எனது கணிப்பு. ஏனென்றால், உடலுழைப்பு தேவைப்படும் பணிகளில் வட மாநிலங்களில் நமக்குக் கிடைக்கும் வருமானம் தமிழ்நாட்டைவிட அதிகப்படியாக இருப்பது கிடையாது (பல வட மாநில மக்கள் தமிழ்நாட்டிற்கு கூட்டம் கூட்டமாக வருவதே இதற்குச் சாட்சி). ஆனால் அரேபிய நாட்டில் இதற்கு, சற்று கூடுதலான வருமானம் கிடைக்கும். உடலுழைப்பு அதிகம் தேவைப்படுகிற பணிகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், நன்றாகப் படித்து, பெரு நிறுவனங்களில் வேலையில் இருப்பவர்களின் பணியிடங்களில் ஆங்கிலம்தான் பேசுகிறார்கள், வட இந்தியாவானாலும் சரி வேறு எங்குமானாலும் சரி.

படிக்கிற மொழி, தொழிலுக்கு உதவ வேண்டும், வருமானத்தைப் பெருக்க வேண்டும் என்று கணக்கிட்டால், நம்முடைய பள்ளிக்கூடங்களில் 'அரேபிய' மொழிதான் கற்றுத் தரப்பட வேண்டும்? ஏனென்றால், இந்தியை விட அதற்குத்தான் (இப்போதைக்கு) அதிக மவுசு, அதிக தேவையும் கூட! 


பின்குறிப்பு 1:
தமிழகத்தில் இந்திக்கு எதிராக போராட்டம் நடக்கவில்லை.  இந்தித் திணிப்பிற்கு எதிராக நடந்த போராட்டங்கள்தான் அவை. அதாவது, அரசு அலுவல்களுக்கு, தேர்வுகளுக்கு, என எல்லாவற்றிலும் இந்தியே இருக்க வேண்டும் என்ற முடிவிற்கு எதிரான போராட்டம். தனிநபர்கள் இந்தி வகுப்புகளுக்குப் போவதையோ, '30 நாட்களில் இந்தி' புத்தகம் வாங்கிப் படிப்பதையோ யாரும் தடுக்கவில்லை. 'பள்ளிக்கூடங்களில் வைத்து வகுப்பு எடுத்திருந்தால், படித்து வட இந்தியாவிற்குப் போயி சம்பாதித்திருப்பேன்' என்று கூறுபவர்கள், அதன் விளைவாக உங்களது மாத வருமானம் எவ்வளவு இருந்திருக்கும் என்றும் கணக்கிட்டு, அதை மற்ற நாடுகளில் பணி செய்யும் உங்கள் நண்பர்களின் வருமானங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் நல்லது.


பின்குறிப்பு 2:
இந்தக் கட்டுரை, 'இந்தி படிக்க விடாமல் செய்துவிட்டார்களே?' என்று ஆதங்கப்படும் நண்பர்களுக்கானது. இது, "தமிழ்நாட்டில் தாய்மொழியில் கல்வி வேண்டாமா?", "ஆங்கிலம் பாடமொழியாக இருக்கலாமா?" என்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கவில்லை.
 

ஜோன்சன்
சேவ் தமிழ்ஸ் இயக்கம்

6 comments:

  1. எனக்கு தெரிஞ்சு 60தை நெருங்கிய பெருசு ஒருவர், அண்மையில் வட இந்தியா சென்றாராம், இந்தி தெரியாததால் அவமானப் பட்டாராம். அவரும் அரசியல்வாதிகளைத் தான் குறை சொன்னார், ஏன் ஒரு முறை சிங்கப்பூரும், மலேசியாவிற்கும் சென்று வந்தார், சீன மொழியும் மலாய் மொழியும் தெரியாதுன்னு அங்கெல்லாம் அசிங்கப்பட்டிங்களான்னு கேட்டேன், பேசுவதை நிறுத்திவிட்டார்.

    ReplyDelete
  2. இந்திதான் தேவை என்பதோ இல்லை ஏன் தேவை என்பதோ நம் சிந்தனைக்குள் இருப்பதைப் பொருத்தே. அவனவன் மொழியில் தெளிவாக இருப்பின் அடுத்த மொழியைமிகத் தெளிவாக விரைவில் கற்றுக் கொள்ள முடியும். பக்கத்து வீட்டு மூதாட்டியை அம்மா என அழைப்பது தவறில்லை. உன் வீட்டில் இருக்கும் உன் அம்மாவைத் தெருக்கோடியில் விட்டுவிட்டு ஏனடா வேறொருத்தியை அம்மா என அழைத்துப் பெருமைப் படுகிறாய் என்பதே வினா?

    ReplyDelete
  3. நல்ல பதிவு ,கருத்துகளை மிக தெளிவாக சரியான முறையில் எடுத்து சொல்லி இருக்கிறீர்கள் .படித்து எல்லோரும் தெளிந்தால் நலம்

    ReplyDelete
  4. கண்டிப்பா சில சில்லுவண்டுக இதை சொல்லி அவங்க எதிர்காலத்துல மண் அல்லிபோட்டமாதி பேசுங்க நல்ல பதிவு வாழ்த்துக்கள்

    ReplyDelete

  5. தங்கள் கருத்துகளுக்கு நன்றி தோழர்களே...

    ReplyDelete
  6. எங்களுக்கு இந்திதான் வேண்டும். இந்தி தெரிந்தால் நல்ல பிகர்கள் மடியும். அரபி தெரிந்தால் அரபி பிகர் மடியுமா?

    …சீனமொழி...ஜப்பான் மொழி தெரிந்தால் இன்னும் பிகர் மடிக்க வாய்ப்பு கூடும். இதையும் பள்ளிகளில் கட்டாய மொழியாக வைக்கவேண்டும்.

    …தாய் நாட்டில் தாய் மொழியைக் கற்கவேண்டும். தாய்மொழி தெரியாமல் எந்த மொழியைக் கற்றாலும் வேஸ்ட்.

    …இந்தி வேண்டும் என்று கூவும் நபர்கள் அனைவரும் ஆங்கிலம் படித்து உலகில் பல இடங்களில் ஜொள்ளுகிறார்கள்.

    …எனக்குத் தெரிந்து தாய்மொழியும் ஆங்கிலமும் போதுமானது. மற்ற மொழிகளை சுய விருப்பத்தில் படிக்கலாம்.

    ReplyDelete