Monday, June 9, 2014

கூடங்குளம் ஆயிரம் மெகாவாட் புளுகும், ஊழலும்......




      நேற்று (சூன் 9 2014) அன்று வெளிவந்த பெரும்பான்மையான நாளிதழ்களில் பின்வரும் செய்தி வெளியாகியிருந்தது. "சாதித்தது கூடங்குளம், 1000 மெகாவாட் மின்னுற்பத்தியை எட்டியது கூடங்குளம்"(1,2).  சென்ற வாரம் தான் கூடங்குளம் மின்னுற்பத்தி தொடர்பாக "அதோ வந்துவிட்டார்..... இதோ வந்துவிட்டார்....." என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியிருந்த எனக்கு இச்செய்தி எந்த அதிர்ச்சியுமளிக்கவில்லை... அக்கட்டுரையில் நாங்கள் எழுப்பியிருந்த எந்த கேள்விக்கும், இதுவரை யாரும் பதில் சொல்லவில்லை. ஒரு கேள்விக்கு பாதி பதிலை மட்டும் கூடங்குளம் அணு உலை வளாக இயக்குநர்.சுந்தர் பதிலளித்துள்ளார்.  கேள்வி இது தான்...

1) ஊடங்கள், அணு உலை நிர்வாகக் கூற்றுப்படி இதுவரை கூடங்குளத்தில் உற்பத்தியான மின்சாரம் எங்கே?

சுந்தர் - "கூடங்குளத்தில் உற்பத்தியான 1000 மெகாவாட் மின்சாரம் திருநெல்வேலி, அபிஷேகப்பட்டியில் உள்ள பவர் கிரிட் நிறுவனத்துக்குச் சென்றது. இங்கிருந்து ஆந்திரம், கர்நாடகம், கேரளம், புதுவை ஆகிய மாநிலங்களில் பல்வேறு நிலைகளில் இணைப்பு உள்ளதால், மின்சாரம் எங்கு சென்றது என்பதை எங்களால் கணிக்க முடியாது. பெங்களூருவில் உள்ள மண்டலக் கட்டுப்பாட்டு அலுவலகம்தான் இதனைக் கண்காணிக்கும். இருப்பினும், தமிழகத்துக்குதான் அதிக மெகாவாட் அளவில் மின்சாரம் வழங்கப்படும். எஞ்சியவை ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகியவற்றில் ஏதாவது ஒரு பகுதிக்குச் சென்றிருக்கலாம்' என பவர்கிரிட் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன. (2)



சுந்தர் அவர்கள் என்ன சொல்ல வருகின்றார் என்றால், நாங்கள் மின்னுற்பத்தி செய்தோம், அதை பவர் கிரிட்டிற்கு கொடுத்தோம், அங்கிருந்து எங்கு சென்றது, யாருக்கு சென்றது என்பது எமக்கு தெரியாது.  ஒரு உற்பத்தியாளராக அவரது பதில்,  சரியான பதிலே. இதைக் கேட்ட ஊடகங்கள் எல்லாம் என்ன செய்திருக்க வேண்டும். பவர் கிரிட்டிடமோ, அல்லது இந்த நான்கு மாநில மின்வாரியங்களிடமோ இது தொடர்பாக கேள்வி எழுப்பி, அந்த பதிலை தங்களது செய்தியறிக்கையில் இணைத்திருக்க வேண்டும். ஆனால் நாங்கள் இந்த பக்கமும் இல்லை, அந்த பக்கமும் இல்லை, நாங்கள் எல்லோரும் நடுநிலை ஊடகங்கள் என்று சொல்லும் எந்த ஒரு ஊடகமும் இந்த பணியைச் செய்யவில்லை. சரி அவர்கள் தான் கேட்கவில்லை, நீங்கள் என்ன செய்தீர்கள் என்ற கேள்வி உங்கள் மனதில் எழுவது இயல்பானதே.. எங்களால் அவர்களை தொடர்பு கொண்டு கேட்கமளவிற்கு வசதியில்லாததால், அவர்களது இணையதளத்தில் கிடைத்த செய்தியைச் சொல்கின்றோம். பவர் கிரிட் இணையதளத்தில் என்ன தேடியும், கூடங்குளத்தில் மின்னுற்பத்தியான 1000 மெகாவாட்டைப் பற்றி ஒரு செய்தியைக் கூட காணவில்லை, சரி தமிழக மின்வாரியத்திலாவது கிடைக்குமா எனத் தேடினோம், இன்றைய நிலவரப்படி தமிழக மின்வாரியத்திற்கு கூடங்குளத்திலிருந்து ஒரு மெகாவாட் கூட வரவேயில்லை(3).  கூடங்குளத்தில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தில் பெரும்பகுதி கிடைக்கவேண்டிய தமிழகத்திற்கே ஒன்றும் கிடைக்கவில்லை என்றால், மற்ற மாநில மின்வாரியங்களுக்கு செல்ல வேண்டிய தேவையில்லை.




 பாண்டியராஜன் கதாநாயகனாக நடித்த ஒரு படத்தில் ஒரு பழைய நாற்காலியை,  நவாப் நாற்காலி என்று ஏமாற்றவும், அந்த நாற்காலியை வாங்குவதற்கு  எல்லோரும் வரிசையில் நிற்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக மனநலம் பாதிக்கப்பட்டவர்களை ஏற்பாடு செய்திருப்பார். அவர்களுக்கு தெரிந்ததெல்லாம்... ஆயிரம், ரெண்டாயிரம், மூவாயிரம், நாலாயிரம்..... பிம்பிளிக்கி பிளாக்கி (10 ஆயிரம்)... என்று சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருப்பார்கள்...  இன்று அந்த பாண்டியராஜன் வேடத்தில் அரசும், அணு உலை நிர்வாகமும்  இன்னும் செயல்படாத அணு உலையை  உலகிலேயே மிகவும் அதிக திறனுடன் (100 விழுக்காடு) செயல்படும் அணு உலை என்ற ஏமாற்றி மக்களின் தலையில் கட்டுவதற்காக 100 மெகாவாட்... 300 மெகாவாட்.... 600 மெகாவாட்... 1000 மெகாவாட் என்று மட்டுமே  கூறும் ஊடகங்களை பணிக்கமர்த்தியுள்ளனர்.  இவ்வூடகங்களும்  அந்த நகைச்சுவை காட்சியில் வரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போல திரும்ப, திரும்ப அணு உலை நிர்வாகம் சொல்லிக்கொடுப்பதை மக்களாகிய நம்மிடம் ஒப்பித்து வருகின்றார்கள். மனிதனுக்கு, மிருகத்திற்கும் உள்ள ஒரே வேறுபாடு ஆறாவதறிவு எனும் பகுத்தறிவு மட்டுமே... சொல்வதை திரும்பச் சொல்வதற்கு கிளி போதும், பகுத்தறிவுள்ள ஊடகங்கள் தேவையில்லை.  அணு உலை நிர்வாகமும், அரசும் இறைக்கும் பணத்தில் மூழ்கித்திளைக்கும் ஊடகங்கள் அறத்தையும், நேர்மையையும், தங்களுக்குள்ள பகுத்தறிவையும் காற்றில் பறக்கவிட்டு கிளிகளாகிவிட்டனர். இந்த கிளிகள் கூறுவதை அப்படியே கேட்டு ஏமாறுவதற்கு மக்கள் ஒன்றும் மாக்களல்ல...


உலகிலேயே கூடங்குளம் அணு உலை தான் 100 விழுக்காடு உற்பத்தி திறனில் செயற்படும் முதல் அணு உலை... இதை ஏன் இந்திய பிரதமர், தமிழக முதல்வர், இந்திய அணு சக்தி கழகம், அணுத்தளபதி அப்துல்கலாம் பெருமையாக உலகுக்கு அறிவிக்கக்கூடாது ? அறிவித்தால் அவர்கள் உற்பத்தியான 1000 மெகாவாட் எங்கே என்று கேட்பார்கள் என்று அச்சமா?

100 விழுக்காடு பாதுகாப்பான அணு உலையில் வெந்நீர் குழாய் விபத்தில் சிக்கிய ஊழியர்களின் நிலை என்ன? என்ற கேள்விகளுக்கு எப்பொழுதும் போல இப்பொழுதும் பதில் இருக்காது, இருந்தும் கேட்டு வைப்போம்...

தென் மேற்கு பருவக்காற்று தொடங்கும் சூன் மாதத்தில் காற்று மின்சாரம்  முழுக்கொள்ளவிற்கு செல்லும், அதனால் தமிழகத்தில் மிந்தடை குறையும் இந்த நேரத்தில் நாம் 1000 மெகாவாட் பொய்யைச் சொன்னால் நாம் நம்பிவிடுவோம் என்று நம்பி அணு உலை நிர்வாகமும், ஊடகங்களும் இப்பொழுது இதை சொல்கின்றன...., ஆனால் அவர்கள் முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முற்பட்டு அம்பலப்பட்டு நிற்கின்றனர். கூடங்குளம் அணு உலை செயல்படத் தொடங்காத பொழுதே 1000 மெகாவாட் மின்னுற்பத்தி என அவர்கள் சொல்வதிலிருந்தே தெரிகின்றது அவர்கள் ஒரு மிகப்பெரிய ஊழலை மறைக்க முற்படுகின்றார்கள். 20000 கோடி ரூபாய்க்கும் அதிகமான மக்களின் வரிப்பணம் கூடங்குளத்தில் இறைக்கப்பட்டுள்ளது....  இதில் ஊடகங்களுக்கும் பங்குள்ளதால், அவர்கள் எப்பொழுதும் இவ்வூழலை வெளியிடப்போவதில்லை, நாம் தான் அதையும் வெளிக்கொணரவேண்டும்.... இந்த ஊழலை அம்பலப்படுத்த வருமாறு ஊழல் எதிர்ப்பு போராளிகளுக்கு அறைகூவல் விடுக்கின்றோம்...

நற்றமிழன்.ப

தரவுகள் :

1) http://www.dinamalar.com/news_detail.asp?id=993410&Print=1
2)  http://www.dinamani.com/tamilnadu/2014/06/08/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-1000-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE/article2269354.ece

3) http://tnebldc.org/reports/peakdet.pdf













 

2 comments:

  1. மின்பளு இல்லாமல் மின்நிலையத்தின் உற்பத்தியை நீடிக்கமுடியாது.அணு உலை போன்ற ஆபத்துநிறைந்த நிலையத்தைஇயக்க நிலையான தனமைகொண்ட மின்பளுவை உறுதி செய்து கொள்ளவேண்டும். சுந்தர் ஐயா சொல்வது போல இன்று திருநெல்வேலி பவர் கிரிட் என்று பேசலாம்.இத்தனை மாதங்களாக உற்பத்தி செய்த மின்சாரம் எங்கே போய்க்கொண்டிருக்கின்றது. ஒருவேளை கேபிள் வழியாக ராசபக்சேக்கு அனுப்பப்படுகிறதா?

    ReplyDelete

  2. தோழர். அரசு,

    நாம் கேட்கும் எந்த கேள்விக்கும் அங்கு பதில் இல்லை. ஏனென்றால் அணு உலை இன்னும் இயங்கவேயில்லை. இதுவரை அணு உலை இயங்குவது போல் காட்டுவதற்கு பல லட்சம் லிட்டர் கல்லெண்ணெய் உபயோகிக்கப்பட்டுள்ளதை அணு உலை எதிர்ப்பு போராளிகள் ஆதாரத்துடன் நிறுவியுள்ளார்கள், அதற்கும் அவர்கள் எந்த பதிலும் அளிக்காமல் கள்ள மௌனம் சாதித்து வருகின்றனர்.

    நற்றமிழன்.ப‌

    ReplyDelete