Friday, June 20, 2014

ஒப்பந்தத் தொழிலாளர்கள்தான் வேண்டும்! - ஐ பி எம்

கடந்த சூன் 9 ஆம் நாள் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் தகவல் தொழில்நுட்பத் துறை தொடர்பான ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. அந்த செய்தியில் அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம்(IBM) ஒப்பந்தப் பணியாளர்களை(Contract Workers) வேலைக்கு அமர்த்துவதில் முதலிடத்தில் இருப்பதாகவும், 150 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான தொகையை செலவிடுவதாகவும் தகவல் இருந்தது. ஐபிஎம்-மிற்கு அடுத்தபடியாக ஒப்பந்தப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களின் பெயர்களும் பட்டியிலடப்பட்டு இருந்தன.



ஐபிஎம் நிறுவனம் தன்னுடைய ஒட்டுமொத்த பணியாளர் எண்ணிக்கையில் 15 விழுக்காடு அளவிற்கு ஒப்பந்தப் பணியாளர்களை அமர்த்த திட்டமிட்டுள்ளது. அப்படியானால்  நிரந்தர ஊழியர்களில் 15 விழுக்காட்டினரை  பல்வேறு வழிகளில் காரணங்களைக் காட்டி பணி நீக்கம் செய்யும் என்பதே இதன் பொருள்.


இந்த ஆண்டின் தொடக்கத்தில்தான், தன்னுடைய நிதிநிலை சரியில்லை என்றும், இலாப அளவு சரிகிறது என்றும் கூறி "வளங்களுக்கான செயல்பாடு" என்கிற பெயரில் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது ஐபிஎம் நிறுவனம்.ஆனால், அதே நிறுவனம்தான் ஒப்பந்தப் பணியாளர்களைப் பணிக்கு அமர்த்துவதில் பெரும் முதலீடுகளைச் செய்து வருகிறது.மற்ற நிறுவனங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.


தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஒப்பந்தப் பணியாளர்களை நோக்கி தங்கள் முதலீடுகளை செய்வதற்கான முக்கிய காரணம், குறைந்த செலவில் கொழுத்த இலாபம் மட்டுமே. நிரந்தர ஊழியர்களால் இலாபம் இல்லையா என்றால், அப்படியும் இல்லை. தற்காலிக ஒப்பந்தப் பணியாளர்களால் அதிகமான இலாபம் என்பதோடு, அவர்களுக்கான மருத்துவக் காப்பீடு(Insurance), ஓய்வூதிய வைப்புப் பணம்(Provident Fund) போன்ற எவற்றையும்,நிறுவனம் தன்னுடைய நிதியிலிருந்து செலவழிக்க வேண்டியதில்லை.



தற்காலிக ஒப்பந்தப் பணியாளர்கள் எனும் போது ஏனைய நிறுவனத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச  பணி உத்தரவாதமும், சலுகைகளும் அளிக்க வேண்டிய தேவையே இல்லாமல் இருக்கிறது. இதனால்தான், நிறுவனங்கள் பெரிய முதலீட்டை தற்காலிக ஒப்பந்தத் தொழிலாளர்கள் நோக்கி செய்கின்றன. அதுவும் அதிகபட்சம் ஆண்டுக்கு நான்கு லட்சம் இந்திய ரூபாய் ஊதியம் பெரும் இளநிலை பணியாளர்களையே பணிக்கு அமர்த்துகின்றன.


அமெரிக்காவில் உள்ள பணியிடங்களை குறைத்துவிட்டு இந்தியாவில் மட்டும் ஒன்றரை லட்சம் தற்காலிக ஒப்பந்தப் ஊழியர்களைப் பணிக்கு அமர்த்துகிறது ஐபிஎம். இந்திய உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளுக்கு அவுட்சோர்சிங்(OUTSOURCING) செய்யப்படும் தகவல் தொழில்நுட்பப் பணிகள் பெரும்பாலும் அமெரிக்காவில் இருந்துதான் வருகின்றன. அதனால் அமெரிக்க பணியிடங்கள் குறைவது என்பது நடைமுறைதான். இதில் விவாதிக்கவோ, அச்சப்படவோ எதுவும் இல்லை என்று சிலர் எண்ணலாம். ஆனால், அண்மைக் காலங்களில் இந்தியாவில் செயல்படும் நிறுவனங்களே (மேற்சொன்னவாறு ஐபிஎம் உட்பட)கூட பணி நீக்கம் செய்ததை நினைவில் கொள்ள வேண்டும்.


தங்களது இலாபக் கணக்குகளை எப்போதும் ஏறுமுகமாக வைத்திருக்க எண்ணும் நிறுவனங்கள், கல்லூரிப் பட்டப்படிப்பை முடித்துவிட்டு வரும் புது இளைஞர்களைக் கொண்டும், தற்காலிக ஒப்பந்த ஊழியர்களைக் கொண்டும் தங்களுடைய நிரந்தர, வேலை உத்தரவாதம் பெற்ற ஊழியர்களைக் வெளியேற்றுகிறது. இதன் மூலம் தொழிலாளர் சுரண்டலை நிகழ்த்தும் நிறுவனங்கள், தொழிலாளர் அமைப்புரீதியாக ஒருங்கிணைவதையும் திட்டமிட்டே தடுத்து வருகின்றன.

இவ்வாறு செயற்கையாக உருவாக்கப்படும் முரண்களைக் நம்முடைய உரிமைகளுக்காக நாம் ஒன்றிணைவதற்குறிய  வாய்ப்பாகக் கருதி, இணைந்து செயல்பட வேண்டும்

கதிரவன்

மேலும் படிக்க‌

http://timesofindia.indiatimes.com/tech/jobs/IBM-spends-heavily-on-contract-staffing-in-India/articleshow/36274381.cms

No comments:

Post a Comment