Tuesday, September 24, 2013
மாற்று திறனாளிகளின் போராட்டமும், சினிமா நூற்றாண்டு விழாவும் - தமிழக அரசும்.
கடந்த ஒருவார காலமாக தங்கள் 9 அம்ச சனநாயகக் கோரிக்கைகளுக்காக தமிழக அரசின், காவல்துறையின் பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு இடையே தொய்வுறாது தொடர்ந்து தங்களின் போராட்டத்தை நடத்திவருகிறார்கள் மாற்றுத் திறனாளிகள், அவர்கள் தங்களை புறம்தள்ளும் அரசை மாற்றியமைக்கும் திறன் படைத்தவர்கள், அவர்கள் வெறும் மாற்று திறனாளிகள் மட்டும் அல்லர்.....
அவர்களின் தொடர்ச்சியான முயற்சிக்கும், போராட்டத்திற்கும் பிறகும் கூட பேச்சுவார்த்தைக்கு அழைத்து முறையாகப் பேசாமல் கோரிக்கைகளைக் குப்பைத்தொட்டிக்குள் போட்டுள்ளது தமிழக அரசின் சமூக நலத்துறை அமைச்சகம், போராடும் மாற்றுத் திறனாளிகளை கொடுமைப்படுத்தி அலைக்கழித்து அட்டூழியம் செய்து மகிழ்ந்துள்ளது தமிழக அரசின் காவல்துறை. அதுமட்டுமின்றி 19.09.2013 அன்று சாலை மறியல் செய்த பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்தத் தமிழகக் காவல்துறையினர் அவர்களில் 19 பேரை கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஆள்நடமாட்டம் குறைவான இடத்தில் இறக்கி விட்டு விட்டதாக செய்திகள் வந்துள்ளன. காவல்துறையின் இச்செயல் கொடுமையானது.
காவல்துறை அவர்களை எப்படிக் கையாண்டது என்பதை அனைவரும் அறிவோம்... காவல்துறையினர் பார்வையற்றோர் எனத் தெரிந்தும் அந்த மாற்றுத்திறனாளிகளைத் தாக்கியது தான் எல்லா காட்சிகளிலும் இருந்தது... ஆனால் காவல்துறைக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் என்கிறது சன் தொலைக்காட்சி செய்தி... ஆளும் அரசிற்கு (கட்சிகளுக்கு) ஜால்ரா தட்டுவதல்ல ஊடகத்தின் பணி, உண்மையை உரக்கச் சொல்லி சனநாயகத்தின் நான்காவது தூணாக நிற்பது. அதையெல்லாம் இப்பொழுதுள்ள பல ஊடகங்கள் மருந்தளவு கூட நினைக்காமல், வாழ்த்துப்பா பாடி பரிசல் பெறும் புலவர்கள் போலுள்ளது அவர்களின் செயல்பாடு.
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் 9 அம்சக் கோரிக்கைகள்:-
1.பார்வையற்றோருக்கு 550 இளங்கலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்
2.ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்வு விகிதத்தை 40 சதவீதமாக குறைக்க வேண்டும்
3.கல்லூரி பேராசிரியர்கள் பதவி 100 பேருக்கு வழங்க வேண்டும்
4.முதுகலை ஆசிரியர்கள் 200 பணியிடங்களை ஒதுக்க வேண்டும்
5.வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதவி செய்தவர்களுக்கு வழங்கப்படும் உதவி தொகையை ரூ.450ல் இருந்து ரூ.2 ஆயிரமாக உயர்த்த வேண்டும்
6.முதுகலை படிப்பவர்களுக்கு லேப் டாப் வழங்க வேண்டும்
7.இசை ஆசிரியர்கள் பணியிடங்களில் 100 பதவிகள் வழங்க வேண்டும்
8.இசை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு தேவாரம், திருவாசகம் பயிற்சி கொடுத்து, ஓதுவார் பதவிகள் வழங்க வேண்டும்
9.ஓய்வூதிய திட்டத்தில் 10 ஆண்டு விதி விலக்கு அளிக்க வேண்டும்
இதை நிறைவேற்றுவதால் அரசிற்கு பெரிய நிதிப் பற்றாக்குறை வரப்போவதில்லை... இதனால் ஓராண்டில் அரசிற்கு ஒரு சில கோடிகள் அதிகமாகச் செலவாகலாம்... இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்திற்கு திடீரெனப் பத்துகோடியை மக்களின் வரிப்பணத்தில் இருந்து ஒதுக்கி, விழாவில் கலந்து கொள்ளும் முதல்வர்.ஜெயலலிதாவால் ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து போராடிவரும் பார்வையற்றோரின் மனுவை வாங்க நேரமில்லாதது, அவரது அலட்சியத்தனத்தை காட்டுகின்றது. சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது இந்தக் கோரிக்கைகளுக்கு ஏற்படும் நிதிச்செலவும் மிகக் குறைவே...
மாற்றத்திறனாளிகளுக்கென உருவாக்கப்பட்டத் துறை செயலிழந்து கிடக்கின்றது... அவர்களுக்கான சிறப்புக் கல்விக் கொள்கை, கல்விமுறை, கல்வித் திட்டங்கள் வேண்டும். சிறப்புத் தொழிற்கல்விகள், அவர்களுக்கு உதவும் புதியக் கண்டுபிடிப்புகள், இயந்திரங்கள் கிடைக்க ஏற்பாடுச் செய்ய வேண்டும்... சமூகத்தில் எதற்கும் பிறர் துணை இல்லாமல் தாங்களாகவே இயங்க அவர்களுக்கென பிரத்யேக ஏற்பாடுகள் செய்து தர வேண்டும் (பெரும்பான்மையானக் கல்லூரிகளிலும், அலுவலகங்களிலும் மாற்றுத்திறனாளிகள் தனி வழிகள் இல்லை... பெரும்பாலான இடங்களில் அதிகக் கடினப்பட வேண்டியுள்ளது...). மிக முக்கியமாக சமூகத்தில் பொது மக்களிடம் மாற்றுத் திறனாளிகள் என்றாலே சுமை என்ற ஒரு கருத்து உள்ளது... அதை மாற்ற அரசும் சமூக சனநாயக முற்போக்கு இயக்கங்களும் முயற்சி எடுக்க வேண்டும்.
சினிமா நூற்றாண்டு விழா போன்ற ஆடம்பர நிகழ்வுக்கு செலவு செய்வதற்கு பதிலாக,
விளிம்பு நிலை மக்களின் அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்றுவது சமூகத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், எதிர்காலம் சரியான திசையில் செல்லவும் வழிவகுக்கும். மேலும் அவர்கள் கேட்பது எதுவும் சலுகைகள் அல்ல, அவர்களது உரிமை என்பதை அரசு நினைவில் கொள்ள வேண்டும். முதல்வர் பணி என்பது மக்கள் கோரிக்கைகளை செவிமடுத்து, அக்கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய பணி, அதற்கு பின் தான் எல்லா கேளிக்கைகளும் என்பதை முதல்வராக வருபவர்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளை அழைத்து அவர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து செயல்படுத்த வேண்டும். ஒடுக்குமுறைகளைத் தாண்டி மாற்றுத் திறனாளிகள் போராட்டம் வெற்றிப்பெற்று, அவர்களது கோரிக்கைகள் நிறைவேற வேண்டும்...
-வினோத்.
சேவ் தமிழ்சு இயக்கம்
நன்றி - ராஜ் மொஹம்மது (E-Poster)
உதவி: http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=63152
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment