Wednesday, September 18, 2013
நேரடி பண பரிமாற்றச் சட்டமும், யதார்த்தமும்....
ஆடிக் காற்றில் அதிர்ஷ்ட சேலைகள், பாதி விலையில் ஜோடி சேலைகள் என்று பல ஊர்களின் சாலைகளில் ஓடும் வாகன ஒலி நாடாக்கள் மூலமாக செய்யும் விளம்பரங்களை நாம் கேட்டிருப்போம். அதெப்படி நேற்று வரை இல்லாத அதிரடி சலுகைகள் ஆடி வந்தப் பிறகு மட்டும்? எந்த ஒரு வியாபாரியும் தன்னிடம் உள்ள சரக்கு விலைப் போகாது என்று தெரிந்த பிறகு தான், செல்லுபடியாகாதப் பொருளை தள்ளுபடியாக அறிவிப்பான். இதை அறியாத மக்கள் தான் அச்செல்லாப்பொருளை வாங்கிச் செல்வர். அதுப்போன்றே, சரக்கே இல்லாத அரசியல் வியாபாரிகளால் அறிவிக்கப்பட்டுள்ள ஒரு ஆடித் தள்ளுபடி திட்டத்தைப் பற்றித்தான் இக்கட்டுரை பேசவிருக்கிறது.
கட்டுரைக்குள் செல்லும் முன் சில வார்த்தைகளுக்கான பொருளை முதலில் காண்போம்.
மானியம் - மக்களுக்கான அத்தியாவசிய தேவைகள், தொழில்துறைகள், வேளாண் பொருட்கள், கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் மற்றும் மின்சாரம் இவற்றில் ஏற்படும் மந்த நிலை, தொய்வு, நஷ்டம், விலைவாசி உயர்வு இதை சரி செய்யவோ அல்லது ஈடுசெய்யவோ ஒரு அரசு கொடுக்கும் தொகையே மானியம்.
நேரடி பணப்பரிமாற்றம் - மானியம் மக்களிடம் நேரடியாக சென்றடைய, மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய திட்டம் தான் இந்த "நேரடி பணப்பரிமாற்றம்", ஆம் மக்களே ! "உங்கள் பணம் உங்கள் கையில்" இது தான் இத்திட்டத்தின் முழக்கம்.
நேரடி பணப்பரிமாற்றம் திட்டத்தின் மூலம் இனி மக்களுக்கு கொடுக்கப்படும் மானியமானது, பணமாக அவரவர் வங்கிக் கணக்கில் இடப்படும். இத்திட்டத்தின் அடிப்படை தேவையாக, பயனாளியின் "ஆதார் அடையாள அட்டை மற்றும் வங்கிக் கணக்கு" எடுத்துகொள்ளபடுகிறது. 26 திட்டங்களின் கீழ் மானியத்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக பணப்பரிமாற்றம் செய்ய, 26 பொதுத்துறை வங்கிகள், 12 கிராமப்புற வங்கிகள், சில தனியார் மற்றும் கூட்டுறவு வங்கிகளும் தேர்ந்தெடுக்கபட்டுள்ளன.
லஞ்சம் மற்றும் மோசடிகளை குறைக்கவும், மானியம் பெறுவோர் பற்றிய விவரங்களை எளிமையாகயாகவும், சிறப்பாக கையாளவும் மற்றும் மானியப் பரிமாற்றத்தின் போது ஏற்படும் சுரண்டல்களை தடுக்கவும் இத்திட்டம் பயன்படும் என அரசு அறிவித்துள்ளது.
பணப்பரிமாற்றம் மக்களின் முன்னேற்றத்திற்கா அல்லது தேர்தலின் முன்னோட்டத்திற்கா ?
மத்திய அரசு 2013க்குள் இத்திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த முடிவு செய்துள்ளது. நேரடி பணப்பரிமாற்ற திட்டத்திற்கு மூல காரணிகளாக பயனாளியின், ஆதார் அடையாள அட்டை மற்றும் வங்கிக்கணக்கு எடுத்துகொள்ளப்படுகிறது . ஆனால் 2013 ஜூலை வரையிலான நிலவரப்படி, 38 கோடி ஆதார் அட்டை தான் கொடுக்கப்பட்டுள்ளது, இது நமது மொத்த மக்கள் தொகையில் 31 விழுக்காடு தான். அது போலவே வங்கிக் கணக்கே இல்லாத மக்களும் அதிகம்.
இத்திட்டத்தை செயல்படுத்த எவ்வாறு மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன?
ஆதார் அடையாள அட்டையானது 70 அல்லது 80 விழுக்காடு கொடுக்கப்பட்டு, அவற்றில் 50 விழுக்காடு வங்கிக் கணக்குடன் இணைக்கபட்டிருந்தாலே, அந்த மாவட்டங்கள் நேரடி பணப்பரிமாற்ற சேவைக்கு போதுமானதாக கருதி, மத்திய அரசு இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இப்படியாக மத்திய காங்கிரஸ் அரசின் அவசரத்தால் இதுவரை 78 மாவட்டங்களில் (இதில் தமிழ்நாட்டின் மூன்று மாவட்டங்களை தவிர ) இத்திட்டம் மேற்சொன்ன விழுக்காட்டின் அடிப்படையில் தான் செயல்பட்டு வருகிறது, இன்னும் முழுமையாக எந்தவொரு மாவட்டத்திலும், அதாவது 100 விழுக்காடு ஆதார் அட்டைகளோ, வங்கி கணக்குகளோ இணைக்கப்படவில்லை. 65 ஆண்டு சுதந்திரத்திற்கு பின், 50 ஆண்டுகளுக்கும் மேலான ஆட்சியில் காங்கிரசிற்கு திடீரென மக்களின் மேல் எப்படி, இப்படி ஒரு அக்கறை ? என்ன காரணம், இத்திட்டத்தில் எதற்காக இந்த அவசரம் ? இதோ வர இருக்கும் 2014 நாடாளமன்ற தேர்தல் தான் இதற்கான காரணமும், கரிசனமும். திட்டம் அமலில் இருக்கும் மாவட்டங்களிலேயே இன்னும் முழுமையாய் நிறைவேற்றாத போது, எதற்காக புதிய மாவட்டங்களில் அதே அரைவேக்காட்டுத்தனத்துடன் நிறைவேற்ற வேண்டும்? இதற்கான பதில் 2014 தேர்தலுக்கு முன், இந்தியாவின் பெருவாரியான மாவட்டங்களில் இத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது என்று மக்களிடம் ஒரு பொய்யான பிரச்சாரத்தை மேற்கொள்ளத்தான்.
காங்கிரஸ் அரசின் எல்லையில்லா ஊழல், விலைவாசி உயர்வு இப்படியாக தொடர்ச்சியாக அதிருப்தியில் இருக்கும் மக்களைக் கவர, ஜனவரி 1 2013 முதல் தர்க்கமே(லாஜிக்) இல்லாம காட்டி வரும் ஒரு வேடிக்கை மற்றும் கவர்ச்சி படம் தான், இந்த நேரடி பணப்பரிமாற்றம்.
கிராமப்புறங்களில் வங்கிச் சேவை ?
கிராமப்புற மற்றும் ஏழை மக்களுக்கு வங்கிக்கணக்கை உபயோகப்படுத்த தெரியாது அல்லது வங்கிக் கணக்கே கிடையாது என்று சொல்வதைவிட, இந்தியாவின் பெரும்பாலான கிராமங்களில் வங்கிகளே கிடையாது என்பது தான் உண்மை. இதுதான் இந்தியாவின் முதுகெலும்பு என்று சொல்லப்படும் கிராமங்களின் நிலை.
இதற்கு என்ன காரணம் ? தனியார் வங்கிகள், கிராமப்புறங்களில் கிளைகள் திறக்க, ரிசர்வ் வங்கி ஆணை பிறப்பித்தும் அதை அவர்கள் இன்னும் நிறைவேற்றாமல் இருப்பதும், வங்கி ஊழியர்கள் கிராமப்புற மற்றும் பின்தங்கிய ஊர்களுக்கு சென்று வேலை செய்ய விரும்பாததும் ஒரு காரணம்.
ஒரு புள்ளி விபரத்தின் படி, இந்தியாவில் உள்ள 11 பெருநகரங்களில் மட்டும், இந்தியாவின் மொத்த வங்கிக் கிளைகளில் 11% உள்ளது. ஆனால், ஒரு லட்சம் மக்கள் தொகை உள்ள கிராமங்களுக்கு வெறும் 3 வங்கிகள் மட்டுமே உள்ளது. வங்கிகளின் தற்போதைய கட்டமைப்பை மேம்படுத்தாமல் இருப்பதும், இம்மாதிரியான கிராமப்புறங்களில் வங்கிகளை தொடங்காமல் இருப்பதும் இத்திட்டத்தின் மிகப்பெரிய ஓட்டை.
அன்றாடம் கஷ்டப்படும், பின் தங்கிய ஏழை மக்கள் நேரடிப்பயன்பெறுவது தான் இதன் அடிப்படை நோக்கமே. ஆனால் இத்திட்டம் அப்படிப்பட்ட மேற்சொன்ன பின்தங்கிய கிராமங்களிலோ அல்லது ஊர்களிலோ முதலில் செயல்படுத்தப்படவில்லை. அன்றாடம் பசியால் வாடும் மக்களே பசி ! பசி ! என்று வயிற்றைத் தட்டாமல் இருக்கும் போது, இத்திட்டத்தை அரைகுறையாக செயல்படுத்திவிட்டு வெற்றி ! வெற்றி ! என்று மார் தட்டுவதில் எவ்வித பலனோ, நியாயமோ இல்லை.
பசிக்கு மாற்று பணமா ?
பொதுவிநியோக முறை இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்டு, ஒவ்வொரு மாநிலத்தின் உதவியுடன், அந்தந்த மாநில நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான அரிசி, சர்க்கரை, கோதுமை மற்றும் மண்ணெண்ணெய் போன்றவற்றை வழங்குகிறது. ஆனால் நேரடிப் பணப்பரிமாற்ற திட்டத்தின் விரிவாக்கமாக பொதுவிநியோக பொருட்களுக்கும் மாற்றாக பணம் கொடுக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு மிகத்தவறான அணுகுமுறையைக் காட்டுகிறது. அதாவது திறந்த அல்லது நேரடிச் சந்தையில் அனைவரும் சென்று, சந்தை விலைக்கே பொருட்கள் வாங்குவதென்பது இயலாத காரியம், அதுமட்டுமில்லாது பொது சந்தையின் விலையேற்றத்திற்கேற்ப மானியத்தொகையின் அளவு உயர்த்திதரப்படும் போன்ற உத்தரவாதங்களை அரசு அளிக்காதென்பதும், தற்போதைய பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு இவற்றின் விலையேற்றும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களிடமே தாரைவார்த்து கொடுத்ததை போல, எதிர்காலத்தில் திறந்த சந்தைகளுக்கும் விலை நிர்ணயிக்கும் அதிகாரத்தை விட்டுவிட்டு, மானியம் கொடுத்தும் லாபம் இல்லை என்ற மனநிலைக்கு மக்கள் வந்தபின்னர், கொடுக்கப்படும் மானியம் அனைத்தையும் முற்றிலுமாக முடக்குவதே இத்திட்டத்தின் தொலைநோக்கு பார்வையாக உள்ளது. "எந்த ஒரு பொருளுக்கான விலையும் பணமாகலாம், ஆனால் ஏழை மக்களின் பசிக்கான விலை பணமாகாது" என்பதை அரசு புரிந்துக்கொள்ள வேண்டும்.
ஆணாதிக்க சமூகத்தில், அவசரகதித் திட்டங்கள்
ஆண்களும், பெண்களும் சமம், ஆண்கள் செய்யும் எல்லா வேலைகளையும் பெண்களும் செய்கின்றனர் என்று நாம் ஒரு புறம் பேசிக்கொண்டாலும் கூட, இன்னும் நமது இன்றைய வீடுகள் பலவற்றில், ஆண்கள் தான் அத்தனை முடிவுகளையும், பணப்பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ளும் அதிகாரம் மற்றும் உரிமைப் பெற்றவராக உள்ளனர். இத்திட்டத்தின் வாயிலாக, கொடுக்கப்படும் மானியம் குடும்ப தலைவரின் வங்கிக்கணக்கில் தான் சென்று சேரும். இந்திய குடிமகன்களுக்கு குடியை ஊக்குவித்து, மக்களைத் தவறான பழக்கத்திற்கு அடிமையாக்கும் தமிழகம் போன்ற மாநிலங்களிலெல்லாம், இத்திட்டத்தின் வாயிலாக கொடுக்கப்படும் மானியமானது, மதுப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ள குடிமகன்கள் மூலமாக டாஸ்மாக் கல்லாக்களையே நிரப்பும். இதை ஏன் என்று கூட கேட்க முடியாத நிலையில் உள்ள ஏழை மற்றும் நடுதரவர்க்கப் பெண்களும், குழந்தைகளும் இதன் காரணமாக பசியால் வாடும் அவலநிலையும் ஏற்படும். இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன், இத்திட்டத்தைச் சார்ந்த சமுதாயத்தின் எதார்த்த நிலைகளையும் உணர்ந்து செயல்படக்கூடிய கடமை, அரசிற்கு வேண்டும் என்பதையும் இங்கே வலியுறுத்துகிறோம்.
எப்போது மானியத்தொகை மக்களுக்கு கிடைக்கும் ?
தற்போதைய அரசின் அறிவிப்பின் படி, பயனாளிக்கு வழங்கும் மானியத்தொகை எப்போது அவர்களின் வங்கிக் கணக்கிற்கு வந்து சேரும் என்ற ஒரு தெளிவான விவரம் அறிவிக்கப்படவில்லை. ஏன் என்றால் எரிவாயு உருளையை தவிர மற்ற எந்த ஒரு மானியப் பொருளுக்கான விலையை முன்கூட்டியே கிடைக்க வைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு. ஏன் என்றால் மானியத்தொகை முன்னதாகவே கொடுக்கப்பட்டுவிட்டாலோ அல்லது தாமதமாக கொடுத்தாலோ அது பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும். உதாரணத்திற்கு, முன்னதாகவே மானியத்தொகை வங்கிக்கணக்கில் இடபட்டால், மானியப் பொருளை உபயோகபடுத்தாத நபர்களும் மானியத்தொகையை அனுபவிக்கும் நிலை ஏற்படும். ஒருவேளை மானியப் பொருளை வாங்கிய சில நாட்களுக்குப் பிறகோ அல்லது காலம் தாழ்த்தியோ மானியத்தொகை கொடுத்தால் அது சாமானிய மக்களை வெகுவாக பாதிக்கும். ஒரு யோசனையாக, பயனாளி அப்பொருட்களை வாங்கிய சில மணி நேரங்களுக்குள் அத்தொகை கிடைக்க வழிவகை செய்தால் இத்திட்டம் பயனுள்ளதாக இருக்கும். எவ்வளவு சீக்கிரம் மானியத்தொகை பயனாளியின் வங்கிக் கணக்கில் சென்றடைகிறதோ அதைப் பொறுத்தே இத்திட்டத்தின் வெற்றியின் அளவீடு அமையும். மக்களளை காலம் தாழ்த்தாமல் பயனடையச் செய்ய, எந்த ஒரு வாக்கு வங்கியையும் எதிர்பார்க்காமல், அரசு இத்திட்டத்திற்கான போதுமான கால அளவை எடுத்துக்கொள்ளவேண்டும்.
தமிழக அரசின் நிலை ?
ஜூலை 1 2013 முதல், இரண்டாவது கட்டமாக, இத்திட்டத்தை செயல்படுத்த, தமிழகத்தின் அரியலூர், புதுகோட்டை மற்றும் திருச்சி ஆகிய 3 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை ஆட்சியின் அதிகாரம் மற்றும் பொறுப்புகளிலிருந்து புறக்கணித்து, மத்திய அரசு இத்திட்டத்தில் தன்னிச்சைப் போக்குடன் செயல்படுவதாகவும், மேலும் பொது விநியோக முறை, எரிவாயு மற்றும் உரங்கள் போன்றவற்றை இத்திட்டத்தின் கீழ் கொண்டுவரக்கூடாது எனவும் கூறி, தற்காலிகமாக தமிழக அரசு இத்திட்டத்தை புறக்கணித்துள்ளது.
கல்வி ஊக்கத்தொகை, ஓய்வூதிய உதவி, தாய்சேய் மற்றும் சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் போன்ற திட்டங்கள் மூலமாக அளிக்கப்படும் உதவித்தொகையை பயனாளியின் வங்கிக்கணக்கில் செலுத்தும் முறையை தமிழக அரசு ஏற்கனவே செயல்படுத்தி வருகிறது. ஆதலால், தமிழக அரசு, இத்திட்டம் ஒவ்வொரு மாநில அரசின் மூலமாக நிறைவேறினால் இன்னும் விரைவாக பயனாளியிடம் மானியத்தொகை சென்றடையும் என்ற கருத்தையும், மேற்ச்சொன்ன குறைகளை நீக்கி, இத்திட்டத்தின் அணுகுமுறைகளையும் மாற்றியமைத்தால் மட்டுமே இதனை தமிழகத்தில் நிறைவேற்ற முடியும் என்றும் தெரிவித்துள்ளது.
எதை நோக்கி அடுத்து ?
அரசு, அரசு சார்ந்த மற்றும் தனியார் துறைகளும் இத்திட்டத்தில் பங்கு பெறுவதால் தனிநபர் விபரங்கள் வெளிப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மேலும் இத்திட்டத்தின் மூலம் அரசு தன் கதவுகளைப் பெருவாரியாக தனியார் துறைகளைகளுக்கு திறந்துவிட்டுள்ளது. இத்திட்டம் அமலுக்கு வந்தால் தற்போதுள்ள நியாய விலைக் கடைகளில் வேலைப்பார்க்கும் ஊழியர்களுக்கு வேலை பறிபோகும் நிலை ஏற்படுமா என்பது பற்றிய தெளிவான விளக்கங்கள் மத்திய அரசிடம் இல்லை. 1991 ஆம் ஆண்டு இந்தியா சந்தித்த மிகப்பெரிய பொருளாதாரச் சிக்கலை சமாளிக்க அதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்த பொருளாதாரக் கொள்கைளிலிருந்து மாறி, தாராளமயமக்கல், தனியார்மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கலை நடைமுறைபடுத்திய பின், இன்று கல்வி, மின்சாரம், மருத்துவம் போன்ற அடிப்படை துறைகளெல்லாம் எப்படி தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனகளுக்கு தாரைவார்க்கப்பட்டு இருக்கிறதோ, அதை போன்றே மத்திய காங்கிரஸ் அரசு இத்திட்டத்தின் மூலமாக மேலும் தனியாருக்கு தனது சேவையைக் கூட்டிக் கொடுத்துள்ளது.
பொது மக்களும், இயக்கங்களும் இது போன்ற தவறான கொள்கை முடிவுகளை எதிர்த்து தொடர் போராட்டங்களை நடத்த வேண்டும்.
ஆசாத்
சேவ் தமிழ்சு இயக்கம்
மூலப்பதிவு :
http://www.itecentre.co.in/node/190
பின் குறிப்பு: மூலப்பதிவை அப்படியே மொழிமாற்றம் செய்யாமல், மேலும் தகவல்களை சேர்த்து வெளியிட்டு இருப்பதால் இது மொழியாக்க கட்டுரை என குறிப்பிடப்படவில்லை...
Subscribe to:
Post Comments (Atom)
அவசியமான கட்டுரை. சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது.
ReplyDelete// நேரடிப் பணப்பரிமாற்ற திட்டத்தின் விரிவாக்கமாக பொதுவிநியோக பொருட்களுக்கும் மாற்றாக பணம் கொடுக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு மிகத்தவறான அணுகுமுறையைக் காட்டுகிறது. அதாவது திறந்த அல்லது நேரடிச் சந்தையில் அனைவரும் சென்று, சந்தை விலைக்கே பொருட்கள் வாங்குவதென்பது இயலாத காரியம், //
ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கொடுக்கப்படுவதாக வைத்துக் கொள்வோம்.
அந்த நடைமுறையை மாற்றி, பத்து ரூபாயை உங்கள் வங்கி கணக்கில் போட்டு விட்டு, அந்த பத்து ரூபாயை வைத்து நாம் பத்து கிலோ அரிசி வாங்க முடியுமா ?
இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து இதுவரை 40 கோடி மக்கள் தங்கள் இருப்பிடங்களிலிருந்து புலம்பெயர வைக்கப்பட்டுள்ளனர். அண்மைய காலங்களில் அரசின் திட்டமிட்ட தவறான கொள்கைகள் காரணமாக மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு புலம்பெயருவது அதிகரித்து வருகின்றது. நாட்டின் முதன்மை தொழிலாக இன்றும் விவசாயம் தான் இருக்கின்றது, ஆனால் அதற்கான முக்கியத்துவத்தை அரசு திட்டமிட்டு புறக்கணித்து, சிறு, குறு விவசாயிகளையும், விவசாய தொழிலாளர்களையும் அத்தொழிலை விட்டு விரட்டி வருகின்றது, அடுத்ததாக 4 கோடி பேர் பணியாற்றிவரும் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடும், அவர்களையும், அவர்களது குடும்பத்தையும் நடுத்தெருவில் நிப்பாட்டும் முயற்சியே, இவ்வாறு மக்களை புலம்பெயரச் செய்யும் பொழுது அவர்களுக்கு எப்படி இந்த அரசின் திட்டங்கள் சென்று சேரும் என்பதை பற்றி அரசு சிந்தித்ததா எனக்கூட தெரியவில்லை. அவர்களுக்கு தேவை ஓட்டு மட்டுமே. இன்று தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் கட்டிட வேலை உள்ளிட்ட அடிமட்ட வேலைகளை எல்லாம் செய்வது வட இந்தியர்களே, இவர்களுக்கு எப்படி இந்த மானியம் சென்று சேரும்?
ReplyDelete