Monday, September 16, 2013
“நீங்கள் பூக்களைப் பறிக்கலாம். ஆனால் வசந்தம் வருவதை தடுக்க முடியாது"
“நீங்கள் பூக்களைப் பறிக்கலாம். ஆனால் வசந்தம் வருவதை தடுக்க முடியாது" -
என்கிறது பாப்லோ நெருதாவின் கவிதைக் குறிப்பொன்று.
இலங்கை அரச படைகளின் சப்பாத்துக் கால்களால் தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒடுக்கப்பட்டு விட்டதாக அவர்கள் நினைக்கலாம். ஆனால் அவர்கள் மீண்டும் புத்துயிர் பெறுவார்கள். அடுத்த முறை, போராட்டம் இன்னும் வலுவடைந்ததாக இருக்கப் போகிறது. வீரியமானதாக இருக்கப் போகிறது. அனுபவம் அவர்களுக்கு கை கொடுக்கப் போகிறது. இனப்படுகொலையின் ஆறா வடுக்களை அவர்கள் மறக்கப் போவதில்லை"
டெல்லி பல்கலைக் கழக மாணவர் மிருத்ஞ்ஜெய், சென்னை பன்னாட்டு இளைஞர் மாநாட்டுக்கு அனுப்பிய கடிதமொன்றில் இவ்வாறாக குறிப்பிட்டிருந்தார்.
இனப்படுகொலை நாடான இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தமீழழத்திற்கான மாணவர் போராட்டக் குழுவும் சேவ் தமிழ்சு அமைப்பும் இணைந்து நடத்திய பன்னாட்டு இளைஞர் மாநாடு, கடந்த சனிக்கிழமை சென்னை அண்ணா நகரில் விஜய் ஸ்ரீ மண்டபத்தில் புதிய உத்வேகத்துடன் நடந்து முடிந்தது.
தஞ்சை ரெங்கராஜ் கலைக்குழுவினரின் பறை முழங்க காலை அமர்வு எழுச்சியுடன் துவங்கியது. பல்வேறு போராட்டக்குழுக்களைச் சேர்ந்த மாணவர்களும் இளைஞர்களும் அரசியல் தலைவர்களும் எழுத்தாளர்களும் தமிழ் உணர்வாளர்களும் நூற்றுக்கணக்கில் மாநாட்டு அரங்கில் குழுமியிருந்தனர்.
தமீழழத்திற்கான மாணவர் போராட்டக்குழுவின் தோழர் திவ்யாவின் தலைமையில் காலை அமர்வு மாணவர்களின் அமர்வாக நடைபெற்றது. தமிழக கல்லூரி பல்கலைக்கழக மாணவர்கள், இந்தியத் தொழில் நுட்பக் கழகம் போன்ற பல்வேறு கல்வி நிறுவனங்களிலிருந்து மாணவத் தலைவர்கள், பிரித்தானியத் தமிழர் பேரவையின் (BTF) பிரதிநிதி இம்மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். தமிழக வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் த.வெள்ளையன், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், பேராசிரியர்.மணிவண்ணன், பேராசிரியர் பால் நியூமன்,மருத்துவர் எழிலன், சேவ் தமிழ்சு இயக்கத் தோழர் ச.இளங்கோவன் ஆகியோரும் இவ்வமர்வில் பங்கேற்று, ஏன் இலங்கையில் காமன் வெல்த் மாநாடு நடக்கக் கூடாது என்பதை விளக்கியும், மாணவப் போராட்டங்களின் ஒருங்கிணைப்பையும் வலியுறுத்தியும் தமது கருத்துகளை பதிவு செய்தனர். உஸ்மானியா பல்கலை கழகத்தின் மாணவத் தலைவர் அருணக் தமிழக மாணவர் போராட்டத்தை வாழ்த்தியும் இம்மாநாட்டின் கோரிக்கைகளை வலியுறுத்தியும் மடல் அனுப்பியிருந்தனர்.
தோழர் இளையராஜா
தமீழழத்திற்கான மாணவர் போராட்டக்குழுவின் தோழர் இளையராஜா, துவக்க உரையை பதிவு செய்தார். கடந்த நான்கு பத்தாண்டுகளில் மாணவர் போராட்டங்களின் பங்கு குறித்த பதிவு செய்த தோழர் இளையராஜா, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் அடுத்தடுத்த முன்னகர்வுகளை நோக்கி மாணவர் எழுச்சி இடம் பெறல் வேண்டும் என்பதை வலியுறுத்திப் பேசினார்.
அடுத்து, காலை அமர்வுக்கு தலைமை தாங்கிய தோழர் திவ்யா பேசினார்.இவ்வமர்வில் பங்கேற்ற பல்வேறு போராட்டக்குழுக்களைச் சேர்ந்த மாணவத் தலைவர்களின் உரைகளிலிருந்து சில குறிப்புகளை மட்டும் சுருக்கமாக இங்கே கொணர்ந்திருக்கிறோம்.
தோழர் திவ்யா
இந்தித் திணிப்புக்கெதிரான மொழிப்போர் போராட்டத்திற்கு பிறகு மாணவர்களின் மிகப்பெரிய எழுச்சிப் போராட்டம் ஈழ விடுதலைக்கான மார்ச் மாத போராட்டம் ஆகும். பல்வேறு மாவட்டத்தில் இருந்து இந்த மாநாட்டிற்கு மாணவர்கள் வந்துள்ளார்கள், இவர்கள் மாணவர்கள் அல்ல, மாணவப்போராளிகள். காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பு என்பது பிரித்தானிய காலனி அடிமை நாடுகளின் கூட்டமைப்பு, அதில் இருந்து பிஜி நாடு இராணுவ ஆட்சி நடப்பதால் நீக் கி வைப்பட்டுள்ளது, இலங்கையில் ஒன்றரை இலட்சம் மக்களை அரசே கொன்றுள்ளது, ஆனால் அதைக் கூட்டமைப்பில் இருந்து விலக்காமல் அங்கேயே காமன்வெல்த் மாநாடு நடத்துவது எப்படி சரியாகும்? பாலின, இன, மத, மொழி ரீதியாக மக்களை ஒடுக்கினால் அதன் அடிப்படையில் அந்த நாடு/அரசு வெளியேற்றப்படும் என்று காமன்வெல்த் கொள்கை சொல்கிறது, அப்படியானால் இலங்கை? இந்த மாணவர்கள் கூட்டமைப்பு இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் கொண்டுவரப் போராடிக் கொண்டிருக்கிறது. அதில் மாற்றம் வர அரசு முனைப்புக் காட்டவில்லை, மாற்றம் வரும் வரை மாணவர்களும் விடப்போவதில்லை. காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது, கூட்டமைப்பில் இருந்து இலங்கையை வெளியேற்ற வேண்டும்.இந்தக் கோரிக்கையில் மாணவர்கள், இளைஞர்கள் நாம் வெற்றியடைவோம்.
தோழர் இளங்கோ
ஈழத்தில் போருக்குப்பின் முடங்கிக் கிடந்த மக்கள் எழுந்து நிற்க மாணவர்கள் போராட்டம் துணை நின்றுள்ளது. ஈழ விடுதலைப் போராட்டம் ஒரு நீண்ட நெடிய போராட்டம், அதற்கு நீடித்த வரலாறு உண்டு, தோல்விகள் நமக்கு பலப் படிப்பினைகளைத் தந்துள்ளது. இங்குள்ள அரசியல் கட்சிகள் தங்கள் நலன் கருதி தான் ஈழ விடுதலை விடயத்தைக் கையிலெடுத்தார்கள், அல்லாமல் அக்கறையோ வெற்றிக்கான வழிமுறையோ மக்களிடம் செய்தியைக் கொண்டு சென்று வெறும் ஆதரவோடு நில்லாமல் தங்களுக்கான போராட்டமாக அதை நகர்த்தவோ முயற்சிக்கவேயில்லை.
ஈழ விடுதலையில் அல்லது தமிழர்களின் நலன்களில் இந்தியாவின் எதிர்ப்பு என்பது ஏதோ இராசீவ் காந்தியின் சாவிற்கு பின்பு வந்தது போன்று சித்தரிக்கப்படுகிறது, அப்படி அல்ல, தமில்நாட்டிலுருந்து ஒன்றரை நூற்றாண்டு காலம் முன்பே கொண்டுசெல்லப்பட்டு தேயிலைத் தோட்டத்தைக் கட்டியெளுப்பிய மலையகத் தமிழர்களை நாடற்றவர்களாக்கிய இலங்கை அரசிடம் இருந்து 1964ம் ஆண்டில் பாதிபேரை (சுமார் 5.1/2 இலட்சம் பேர்) திரும்பப் பெற்றபோதும், கட்சத் தீவை 1974ம் ஆண்டுத் தாரவார்த்தபோதும் இந்திய அரசு தமிழர் நலனில் எப்படியான நிலைப்பாடு எடுத்துள்ளது என்பது நமக்குப் புரியவேண்டும்.அரசியல் என்றாலே தீங்கு என்று ஒதுங்கியிருந்த மக்களை, மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுக்கு அரசியலை எடுத்துச் சென்று அரசியல்படுத்தியதன் விளைவாக சமூகத்தில் அரசியல் மாற்றம் குறித்த சிந்தனையை இன்னமும் தீவிரமாக முடுக்கிவிட்டுள்ளார்கள்.
எத்தனை எதிர்ப்புகள், தடைகள் வந்தாலும் உடைத்தெறிந்து மாணவர்கள், இளைஞர்கள் நாம் இந்தப் போராட்டத்தை முன்னெடுப்போம்.
அருணனக்
பொது செயலாளர்- சனநாயக மாணவர்கள் சங்கம் (தெலங்கானா)
மக்கள் விடுதலை போராட்டங்கள் ஓங்குக
இலங்கை பாசிச அரசு தமிழர்களை இனப்படுகொலை செய்த பிறகு, இந்தியாவிலுள்ள சனநாயக சக்திகளும், குறிப்பாக தமிழக மக்களும், மாணவர்களும் "இலங்கையில்
நடந்தது போரல்ல, இனப்படுகொலை" என்ற கோரிக்கையை உலகின் முன்வைத்து போராடினார்கள். அதே நேரம் 2013 மார்ச் மாதம் ஐநாவின் மனித உரிமைக் குழுவில் "40,000 தமிழர்கள் போரின் இறுதி மாதங்களில் கொல்லப்பட்டார்கள் என்ற அறிக்கையை" தாக்கல் செய்யப்பட்ட பின்னர் நடந்த வாக்கெடுப்பில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும் போராடினார்கள். தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர், பிரபாகரன் அவர்களின் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்ட பின்னர் இனப்படுகொலையாளி இராஜபக்சேவிற்கு எதிரான மாணவர்களின் போராட்டம் தீவிரமாக நடைபெறத் தொடங்கியது, தொடக்கத்தில் 8 மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்தது இந்த போராட்டத்தை இயக்கும் உந்துசக்தியாக மாறியது. இந்த உண்ணாவிரதம் சங்கிலி தொடர் விளைவாக தமிழகமெங்கும் மாணவர்களின் தொடர் போராட்டத்தையும், இந்தியாவெங்கும் சனநாயக ஆற்றல்களின் போராட்டத்தையும் நடத்தியது. மாணவர்கள் கல்லூரி புறக்கணிப்புகளையும், கொலைகாரன் இராஜபக்சேவின் உருவ பொம்மைகளை எரித்தும், இந்த மாணவர் போராட்டத்தில் இந்தியாவெங்கும் உள்ள சனநாயக ஆற்றல்கள் கலந்து கொள்ள கோரிக்கை வைத்து கையெழுத்து இயக்கம் நடத்தியும் தொடர்ந்து போராடினார்கள்.
தமிழக மாணவர்கள் போராட்டம், இந்தியாவின் மற்ற பகுதிகளிலுள்ள மாணவர்களையும் கவர்ந்தது, இதே போல மக்களது கோரிக்கைகளுக்கு தலைமை ஏற்று சனநாயக வழியில் போராடும் படி தூண்டியது. தெலங்கானா மாநிலத்திற்கான மக்களது கோரிக்கைகளின் தொடக்கத்தில் இருந்தே (1960களில் இருந்து) மாணவர்கள் முன்னிலையில் இருந்து போராடி வந்தார்கள். அதே போல இப்பொழுது நடந்த போராட்டங்களிலும் மாணவர்களே முன்னிலை வகுத்து முன்னெடுத்து சென்றார்கள். தமிழக மாணவர்களின் போராட்டம், தெலங்கானா மாணவர்கள் தொடர்ந்து
போராடுவதற்கான உத்வேகத்தை வழங்கியது. தமிழக மக்களின் கோரிக்கைகளையும், ஒருங்கிணைத்து உலகிடம் சரியாக எடுத்துச் சென்றது தமிழக மாணவர்களின் போராட்டம். அதே போல இலங்கை அரசால் தமிழர்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டு, கொல்லப்பட்டு, இனப்படுகொலை செய்யப்பட்டதை இந்தியா முழுக்க எடுத்துச் சென்றது மாணவர்கள் போராட்டம். அதே போல
மாணவர் இயக்கங்கள் சரியான முறையில் செயல்பட்டு தமிழர்கள் இலங்கையில் படும் இன்னலையும், இலங்கை அரசின் பாசிச முகத்தையும் கடைக்கோடி மனிதனுக்கும் எடுத்துச் சென்றது.
தங்கு தடையின்றி துணிச்சலுடன் இந்திய அரசுக்கு எதிரான போராட்டத்தை தமிழக மாணவர்கள் நடத்தினார்கள், அது மட்டுமின்றி அரசியல் கட்சிகளை தங்கள் போராட்டத்தில் இணைந்து
மனிதத் தன்மையற்ற இலங்கை அரசை கண்டிக்கவும் , இந்தியாவை ஐநா மனித உரிமை குழுவில் இலங்கைக்கு எதிராக வாக்களிக்கவும் செய்யும் படி நிர்ப்பந்தித்தனர்.
சனநாயக மாணவர் சங்கம் (தெலங்கானா) போராடி வரும் மாணவர்களுக்கான ஆதரவு தளத்தையும், மாணவர்களுடன் தோழமையை ஏற்படுத்துவதிலும் முன்னின்று பணியாற்றியது. இதற்காக Foreign Languages University-யில் ஆங்கிலத்திலும், பிற மொழிகளிலும் பல நிகழ்வுகளை ஒருங்கிணைந்து நடத்தியது, இந்த நிகழ்வுகள் ஆவணப்படங்கள் திரையிடுதல், ஊர்வலம் செல்லுதல்,
கருத்தரங்குகளை நடத்துதல் மூலம் நடைபெற்றது, மக்களின் சனநாயக கோரிக்கைகள் இலக்கை அடையாத வரை அவர்களின் போராட்டம் ஓய்வதில்லை.
மக்கள் போராட்டங்கள் ஓங்குக...
பெத்தனவேல் IIT சென்னை
மாணவர்கள் இது பொன்ற போராட்டங்களை முன்னெடுக்கும் அதே நேரம் படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும். நாரயணன் , சிவசங்கர மேனன், நிருபமாராவ் போன்ற இடங்களில் தமிழர்கள் இருந்திருந்தால் தமிழின படுகொலை தடுக்கப்பட்டிருக்கும். தமிழினப் படுகொலை தமிழர்கள் பிரச்சினை என்பதை தாண்டி அனைத்து மக்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும். எல்லா இடங்களிலும் மனித உரிமையும், வாழும் உரிமையும் ஒன்றுதான். எனவே நாம் நமது நியாயங்களை உரக்கச் சொல்வோம்.
மாணவர்.விசாகன்
இலண்டலிருந்து வந்திருந்த இம்பீரியல் கல்லூரி மாணவரும், பிரிட்டன் தமிழ் மன்றத்தின்(BTF) உறுப்பினருமான விசாகன் பேசும் பொழுது 2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை போருக்கு பின்னரான நிகழ்வுகளை சுட்டினார், வளர்ச்சி என்ற பெயரில் தமிழ் விவசாயிகளின் நிலம் பிடுங்கப்பட்டு இராணுவம் கையப்படுத்துவதையும், தமிழர் தாயகப் பகுதியில் ஐந்து நபருக்கு ஒருவர் என்ற விகத்தத்தில் இராணுவம் நிலைகொண்டு, மக்களை தொடர்ந்து ஒடுக்கி வருகின்றது என்றும், தமிழர் தாயகப்பகுதியில் உள்ள ஊர்களின், தெருக்களை சிங்கள பெயர்களுக்கு மாற்றுவதையும், புதிது புதிதாக சிங்கள குடியேற்றங்களும், புத்த விகாரைகளும் தமிழர் பகுதியில் முளைத்து வருவதைப் பற்றியும் கூறினார், மேலும் அவர் கூறுகையில் இது ஒரு திட்டமிட்ட கலாச்சார படுகொலையே அன்றி வேறல்ல என்றும் குறிப்பிட்டார். பன்னாட்டு சமூகம் சிரியாவில் காட்டிவரும் அக்கறையை இனப்படுகொலை நடந்த ஈழ மண்ணில் ஏன் காட்டவில்லை என்றும் அவர் கேள்வியெழுப்பினார். அதே சமயம், தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பெருந்திரளான மாணவர் போராட்டம் ஈழத்தமிழர்களுக்கு நம்பிக்கையை தந்துள்ளது என்றும் கூறினார். இந்த பன்னாட்டு இளைஞர் மாநாடு உலகில் எல்லா பகுதியில் உள்ள தமிழர்களும் ஒரே மேடையில் ஒன்றிணைந்து தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் தளத்தை அமைத்து கொடுத்துள்ளது என்றும் கூறினார் அவர்.
மாணவர்களின் இவ்வமர்வில், எழுத்தாளர் பா.செயப்பிரகாசமும், வணிகர் சங்க பேரவைத் தலைவர் த.வெள்ளையனும், பேராசிரியர்.மணிவண்ணனும்(கால தாமதத்தால் மாலை அமர்வில் பேசினார்) பங்கேற்றிருந்தனர்.
70-களில் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் ஏற்பட்ட மாணவர் எழுச்சிக்கு பிறகு, மாபெரும் மாணவர் போராட்டமாக,கடந்த மார்ச் மாதத்தில் நடைபெற்ற மாணவர் போராட்டம் அமைந்திருந்தது எனவும்.தற்போதுள்ள அரசியல் களத்தில் நம்பிக்கையளிப்பதாகவும் அமைந்திருக்கிறது என பா.செயப்பிரகாசம் குறிப்பிட்டார்.
மாணவர்கள் போராட்டங்கள் தொடர்ச்சியாகவும், துல்லியமான எதிர்காலதிட்டங்களுடனும் இருந்தால் அதன் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும். அதே போல மாணவர்கள் போராட்டம் அடுத்து யார் ஆள்வது என்பதை தீர்மானிப்பவையாகவும் இருக்க வேண்டும் என்று சென்னை பல்கலைகழகத்தின் அரசியற் பிறிவு தலைவரும், பேராசிரியருமான மணிவண்ணன் குறிப்பிட்டார்.
இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறக்கூடாது என்பது மட்டுமல்ல. இலங்கையிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களை நாமனைவரும் புறக்கணிக்க வேண்டும். இலங்கை பொருட்களை விற்க மாட்டோம் என்று வணிகர் சங்கங்கள் முடிவெடுப்போம் என்று தோழர் த.வெள்ளையன் தனது உரையில் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment