Thursday, June 5, 2014

அதோ வந்துவிட்டார்..... இதோ வந்துவிட்டார். .....


 எனது பள்ளி, கல்லூரி காலங்களில் (1990-2000) எங்களூரில்(கரூர்) நடக்கும் அரசியல் கூட்டங்கள் மாலை நேரங்களில் நடக்கும்... அக்கூட்டங்களில் யாராவது அரசியல் தலைவர்கள் அல்லது திரை நடிகர்கள் கலந்து கொண்டால்  மாலை 4 மணிக்கு ஒலிப்பெருக்கியில் அறிவிக்கத்தொடங்குவார்கள், அதோ வந்துவிட்டார், இதோ வந்து விட்டார் என... மக்களும் அவர் வந்துவிட்டார் என நம்பத்தொடங்கிக் கூட்ட மைதானத்தில் கூடத்தொடங்குவர்..... இறுதியாகத் தலைவர்கள் வந்து சேருவதற்கு இரவு 9 மணிக்கு மேலே ஆகிவிடும்....


  இதே போலச் சென்ற அக்டோபர் (2013) மாதத்தில் இருந்து கூடங்குளத்தில் இருந்து 160, 200, 300 மெகாவாட்... பின்னர் 400 மெகாவாட்.... 600 மெகாவாட்.... என  ஊடகங்கள்  அதோ, இதோ என்று தொடர்ந்து அறிவித்து வருகின்றன(1,2). அதே நேரத்தில் தமிழக மின்வாரியத்திற்குக் கூடங்குளத்திலிருந்து ஒரு மெகாவாட் மின்சாரம் கூட வரவில்லை என்று மின்வாரியத்தின் அறிக்கைகளைக் கொண்டு ஊடகங்கள் தொடர்ந்து சொல்லிவரும் பொய்யை அம்பலப்படுத்தினர் அணு உலை எதிர்ப்புப் போராளிகள்... நிலைமை இப்படியிருக்கையில் மே 19 அன்று ஒரு செய்தி ஊடகங்களில் வந்தது 22 அக்டோபர் 2013 அன்றே கூடங்குளம் அணு உலை உற்பத்தி தொடங்கினாலும் சில பிரச்சனைகளால் மின்வாரியத்திற்கு இதுவரை மின்சாரம் கொடுக்கவேயில்லை... அக்டோபர் 2013லிருந்து கூடங்குளம் அணு உலை தொடர்ச்சியாக மின்சாரம் கொடுக்கவில்லை, சோதனையோட்டமே நடந்தது. 2014 சூலை 22லிருந்து தொடர்ச்சியாக மின்சாரம் கொடுக்கப்போகின்றோம் என்று அறிவித்துள்ளனர்.(3)



 முதலில் கூறிய அரசியல் கூட்டத்திலாவது  மாலை 4 மணிக்கு அறிவிக்கத் தொடங்கி இரவுக்குள்ளாகக் கூறிய நபர் வந்துவிடுவார், ஆனால் கூடங்குளத்திலோ 22 அக்டோபர் 2013ல் மின்னுற்பத்தி தொடங்கியதாக அறிவிக்கத் தொடங்கினாலும் இன்றுவரை 1 மெகாவாட் கூட உற்பத்தி செய்து மின்வாரியத்திற்குக் கொடுத்ததாக எந்த  அதிகாரப்பூர்வத் தகவலும் இல்லை. 22 சூலை 2014லிருந்து நாங்கள் மின்வாரியத்திற்கு நாங்கள் மின்சாரம் கொடுப்போம் என்று ஆரூடம் கூறியுள்ளார்கள், அதுவும் நடக்குமா என்பது ஐயப்பாடே. கூடங்குளம் அணு உலையை எதிர்த்து மக்கள் போராட்டங்கள் நடத்திய போது, நாட்டையே இருளில் தள்ளுகின்றார்கள், கூடங்குளம் வந்துவிட்டால் தமிழகத்தில் மின்வெட்டே இருக்காது என்று போராடிய மக்களை எதிர்த்தவர்கள், 14,000 கோடிக்கு மேல் செலவு செய்தாகி விட்டது என்று சொன்னவர்களும், போராடிய மக்களைத் தேசத்துரோகிகள் என்று தூற்றியவர்களும் இன்று வாய் மூடி கள்ள மௌனம் சாதித்து வருகின்றார்கள்.


எங்களிடம் சில கேள்விகள் உள்ளன, அவற்றுக்கு யாரிடமாவது பதில் இருக்குமா எனத் தெரியவில்லை.. இருந்தும் கேட்கின்றோம்........


1) ஊடங்கள், அணு உலை நிர்வாகக் கூற்றுப்படி இதுவரை கூடங்குளத்தில் உற்பத்தியான மின்சாரம் எங்கே?

2) அப்துல் கலாம் மற்றும் பல அணு உலை ஆதரவாளர்கள், அரசின் கூற்றுப்படி 100 விழுக்காடு பாதுகாப்பான அணு உலையில் வெந்நீர் குழாய் வெடித்தது எப்படி ?

3) உண்மையிலேயே கூடங்குளம் இயங்கும் என்று நம்புகின்றீர்களா? எதை வைத்து?.......

அணு உலைக்கெதிரான மக்கள் போராட்டத்தைப் பழித்த எவரும் இக்கேள்விகளுக்கு பதிலளிப்பதன் மூலம் தங்கள் நேர்மையை இப்பூவுலகிற்குப் பறைசாற்றிக்கொள்ளலாம்....

நற்றமிழன்.ப‌

தரவுகள்:
1) http://timesofindia.indiatimes.com/india/Kudankulam-nuclear-plant-starts-generating-power-connected-to-southern-grid/articleshow/24518920.cms

2) http://www.business-standard.com/article/current-affairs/unit-i-of-kudankulam-to-start-commercial-production-by-year-end-114040900318_1.html

3) http://www.millenniumpost.in/NewsContent.aspx?NID=58391

Tuesday, June 3, 2014

இந்தி பெருசா? அரபி பெருசா? - எது வேணும்?


கல்லூரியில் என்னுடன் படித்த நண்பன் ஒருவன், பணிக்குச் சேர்ந்த நிறுவனத்தின் 'தாய்லாந்து'(நாட்டு) கிளைக்கு மாற்றப்பட்டான்.  'தாய்லாந்து' நாட்டில் பெரும்பான்மையான மக்களின் மொழி 'தாய்'. ஆங்கிலச் சொற்களைக் கலந்து பேசுவது நம் வழக்கமாகிவிட்டது. ஆனால், 'தாய்' மொழி பேசும் மக்கள் அவ்வாறு இல்லை. நாம் தஆன்றாடம் புழங்கும் பொருட்களை, அவற்றின்  ஆங்கிலப் பெயர்களை வைத்தே குறிப்பிடுகிறோம். ஆனால்,அவர்கள் 'தாய்' மொழியிலேயே இருக்கும் சொற்களைத்தான் பயன்படுத்துகிறார்கள். ஆங்கிலத்தில் எழுதிய முகவரியைக் காட்டினால், பெரும்பாலான வாடகை வண்டி ஓட்டுநர்களே கையை விரித்து விடுகிறார்கள். நம்மில் யாருக்கேனும் 'தாய்' மொழி தெரியாமலோ, ஆங்கிலம் தெரிந்த வழிகாட்டியோ இல்லாமல் அந்த நாட்டில், சுற்றுலாப் பயணியாகச் சென்றாலே திணற வேண்டியிருக்கும்.


இந்த நிலைமையில், நண்பனின் நிலையை கற்பனை செய்து பாருங்கள். அங்குள்ள பணியாளர்களை இவன் வேலை வாங்க வேண்டும். அவர்களில் யாருக்கும் ஆங்கிலம் தெரியாது! கிட்டத்தட்ட ஒரு வருடம் சைகை மொழிதான் பேசினான். சில நேரங்களில், அவர்கள் செய்ய வேண்டிய அத்தனை வேலைகளையும் இவனே செய்யவேண்டிவரும். கையில் உபகரணங்களுடன் களத்தில் இறங்க வேண்டியதுதான்.




அலுவலகத்தில், உடன் பணிபுரியும் உயரதிகாரிகள் யாரேனும் சிலர் ஆங்கிலம் பேசுவார்கள், அதுவும் தத்துப்பித்துவென்று. அவர்களுடைய மொழியைக் கற்றுக்கொள்ளும்வரை அவன் பாடு திண்டாட்டமாகத்தான் இருந்தது. அங்குள்ள மக்களோடே அன்றாடம் பழகினாலும் 'தாய்' மொழியை ஒரளவிற்குக் கற்றுக்கொள்ள ஓராண்டிற்கும் மேல் ஆகிவிட்டது. கற்றுக்கொள்ள அவ்வளவு கடினமான மொழி.


"ஆனா பாருங்க, இங்க நம்மூர்ல டிராவல்சு வைச்சி நடத்தி 'தாய்லாந்துக்குச் சுற்றுலா' ஏற்பாடுகளைச் செய்யுறவங்க 'தாய்' மொழிய நல்லா படிச்சிகிட்டு லட்சம் லட்சமா சம்பாதிக்குறாங்க. என்ன ஒரு அநியாயம்! என் நண்பனும் 'தாய்' மொழிய பள்ளிக்கூடத்துலயே படிச்சிருந்தான்னா அவ்ளோ கஷ்டப்பட்டிருப்பானா?! படிக்கவிடாம பண்ணிட்டாங்களே இந்த அரசியல் 'வியாதிகள்'!


இப்படிச் சொன்னா எப்படி இருக்குமோ, அதுமாதிரிதான் "இந்தி வேண்டாம் வேண்டாம்னு சொல்லி, நம்மள இந்தி படிக்க விடாம பண்ணிட்டாங்களே! வடநாட்டுக்குப் போனா நம்ம ஆளுங்கல்லாம் எவ்ளோ கஷ்டப்படுறாங்க? ஆனா, இந்த அரசியல்வாதிக மட்டும் அவுங்க புள்ளைங்களையெல்லாம் இந்தி படிக்க வச்சிடறாங்க!" னு சொல்றதும்.
எங்கள் ஊரிலிருந்து, பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு 'பம்பாய்' (இப்போது 'மும்பை')க்குப் போனவர்கள் இந்தி பேச கற்றுக்கொண்டது ஒரே மாதத்தில். இவ்வளவு எளிமையான மொழியை, தனியாக ஒரு பாடமாக வைக்கவேண்டியதன் அவசியம் என்ன?
ஒரு கணக்கு போட்டுப் பார்க்கலாம். என்னுடன் பொறியியல் வகுப்பில் படித்தது மொத்தம் 66 பேர். அதில் தமிழ்நாடு தவிர மத்த மாநிலங்களில் இருப்பவர்கள் எண்ணிக்கை 7. இதில் வட இந்தியா அல்லது முழுக்க இந்தி பேசுகிற இடங்களில் இருப்பவர்கள் மூன்றே (3) பேர்தான். ஆனால், மத்திய கிழக்கு நாடுகளில்(அரேபிய நாடுகள்) இருப்பவர்களின் எண்ணிக்கை 10. 

அங்கே பேசுகிற 'அரேபிய' மொழி தெரிந்நால் நல்லதா, இல்ல இந்தி தெரிஞ்சா நல்லதா? 

பொதுவாகவே, தமிழ்நாட்டில் இருந்து வெளி மாநிலங்களுக்கு (குறிப்பாக இந்தி மட்டும் பேசப்படுகிற இடங்களுக்கு) வேலைக்குப் போகிறவர்களின் எண்ணிக்கையை விட, அரேபிய நாடுகளுக்கு வேலைக்குப் போகிறவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பது எனது கணிப்பு. ஏனென்றால், உடலுழைப்பு தேவைப்படும் பணிகளில் வட மாநிலங்களில் நமக்குக் கிடைக்கும் வருமானம் தமிழ்நாட்டைவிட அதிகப்படியாக இருப்பது கிடையாது (பல வட மாநில மக்கள் தமிழ்நாட்டிற்கு கூட்டம் கூட்டமாக வருவதே இதற்குச் சாட்சி). ஆனால் அரேபிய நாட்டில் இதற்கு, சற்று கூடுதலான வருமானம் கிடைக்கும். உடலுழைப்பு அதிகம் தேவைப்படுகிற பணிகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், நன்றாகப் படித்து, பெரு நிறுவனங்களில் வேலையில் இருப்பவர்களின் பணியிடங்களில் ஆங்கிலம்தான் பேசுகிறார்கள், வட இந்தியாவானாலும் சரி வேறு எங்குமானாலும் சரி.

படிக்கிற மொழி, தொழிலுக்கு உதவ வேண்டும், வருமானத்தைப் பெருக்க வேண்டும் என்று கணக்கிட்டால், நம்முடைய பள்ளிக்கூடங்களில் 'அரேபிய' மொழிதான் கற்றுத் தரப்பட வேண்டும்? ஏனென்றால், இந்தியை விட அதற்குத்தான் (இப்போதைக்கு) அதிக மவுசு, அதிக தேவையும் கூட! 


பின்குறிப்பு 1:
தமிழகத்தில் இந்திக்கு எதிராக போராட்டம் நடக்கவில்லை.  இந்தித் திணிப்பிற்கு எதிராக நடந்த போராட்டங்கள்தான் அவை. அதாவது, அரசு அலுவல்களுக்கு, தேர்வுகளுக்கு, என எல்லாவற்றிலும் இந்தியே இருக்க வேண்டும் என்ற முடிவிற்கு எதிரான போராட்டம். தனிநபர்கள் இந்தி வகுப்புகளுக்குப் போவதையோ, '30 நாட்களில் இந்தி' புத்தகம் வாங்கிப் படிப்பதையோ யாரும் தடுக்கவில்லை. 'பள்ளிக்கூடங்களில் வைத்து வகுப்பு எடுத்திருந்தால், படித்து வட இந்தியாவிற்குப் போயி சம்பாதித்திருப்பேன்' என்று கூறுபவர்கள், அதன் விளைவாக உங்களது மாத வருமானம் எவ்வளவு இருந்திருக்கும் என்றும் கணக்கிட்டு, அதை மற்ற நாடுகளில் பணி செய்யும் உங்கள் நண்பர்களின் வருமானங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் நல்லது.


பின்குறிப்பு 2:
இந்தக் கட்டுரை, 'இந்தி படிக்க விடாமல் செய்துவிட்டார்களே?' என்று ஆதங்கப்படும் நண்பர்களுக்கானது. இது, "தமிழ்நாட்டில் தாய்மொழியில் கல்வி வேண்டாமா?", "ஆங்கிலம் பாடமொழியாக இருக்கலாமா?" என்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கவில்லை.
 

ஜோன்சன்
சேவ் தமிழ்ஸ் இயக்கம்

வாழ்க தெலங்கானா!



வாழ்க தெலங்கானா!

ஆயிரக்கனக்கான தெலங்கானா மக்களின் ஈகத்தால் அடைந்த உரிமைப் போராட்ட வெற்றியை கொண்டாடும் தெலங்கானா மக்களுடன் மகிழ்ச்சியை நாமும் பகிர்ந்து கொள்கிறோம். சமுக சனநாயகத்திற்கான போராட்டத்தை தெலங்கானா மக்கள் தொடர சேவ் தமிழ்ஸ் இயக்கம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.


இவ்வரலாற்று தருணத்தில் எமது இயக்கத்தின் வலைப்பூவில் வெளிவந்த‌ தெலங்கானா குறித்த கட்டுரையை கீழீருக்கும் சுட்டியில் வாசிக்கவும்.


தெலங்கானா மாநிலம் - ஒரு வரலாற்றுத் தேவை







Wednesday, May 28, 2014

‘பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வீடு முற்றுகைப் போராட்டம்'

இன்று (புதன், 28 மே 2014) காலை 10:00 மணிக்கு, அரசுப் பள்ளிகளில் தமிழைப் புறக்கணித்து ஆங்கில வழிப் பிரிவுகளைத் திணிப்பதைக் கண்டித்து, ‘பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வீடு முற்றுகைப் போராட்டம்’ நடைபெற்றது.

தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் ஒருங்கிணைத்த இந்த முற்றுகைப் போராட்டத்தில் 250க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.



அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிப் பிரிவுகளைத் துவக்குவதைக் கண்டித்தும், தமிழ் வழிக் கல்வியை கட்டாயமாக்க வலியுறுத்தியும் நடைபெற்ற இந்த முற்றுகைப் போராட்டத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம், தந்தைப் பெரியார் திராவிடர் கழகம், ம.தி.மு.க.,
தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், தமிழ்த் தேச விடுதலை இயக்கம் உள்ளிட்ட 20 அமைப்புகளும் கட்சிகளைச் சார்ந்தவர்களும் கலந்துகொண்டனர். 'தாய் மொழி வழிக் கல்வி'யை ஆதரித்து 'சேவ் தமிழ்சு இயக்கத்தின்' ஒருங்கிணைப்பாளர் தோழர்.செந்தில் மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.





போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்

'அமைச்சர் வீடு முற்றுகைப் போராட்டத்தில்' கலந்து கொண்ட தோழர்கள் காவல் துறையினரால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.

போராட்ட முழக்கங்களின் ஒலிப்பதிவு:
http://yourlisten.com/savetamilsmovement/muzhakkam

தமிழ்வழிக் கல்வி குறித்து ஏற்கெனவே எமது வலைப்பூவில் வெளியான இடுகை:

அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி யாருக்கு சேவகம் செய்ய இந்த ஏற்பாடு ?

Monday, May 26, 2014

கர்நாடக அரசல்ல, கார்ப்பரேட்டுகளின் அரசே!!!



நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலும், நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்றுக் கொள்ளப் போவதும் கார்ப்ப்ரேட்டுகளாலும், கார்ப்பரேட் ஊடகங்களாலும் கதை, திரைக்கதை அமைக்கப்பட்டு நடத்தப்பட்ட கூத்து என்று கேரவன் இதழ் கட்டுரை வெளியிட்டிருந்தது.

இந்தத் தேர்தல் காங்கிரசு, பாரதிய சனதா கட்சிகளுக்கு இடையிலான போட்டியாக மட்டும் இல்லாமல், கார்ப்பரேட்டுகளுக்கும், மக்களுக்கும் இடையிலான நேரடி போட்டியாகவே நடந்து முடிந்திருக்கிறது. வழமைப் போலவே, பண மற்றும் அதிகார செருக்கில் கார்ப்பரேட்டுகள் நினைத்ததே நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் சனநாயகத்தின் மூலம் அரசுகள் அமைந்து, அந்த அரசுகள் தரும் சலுகைகளை கார்ப்பரேட்டுகள் பெற்ற நிலை மாறி தங்களுக்கு ஏதுவாகச் செயல்படும் கட்சியை ஆட்சியில் அமர்த்தி அதன் மூலம் தங்களுக்கு தேவையானவற்றை தங்குதடையின்றி பிடுங்கிக் கொள்ளும் நிலைக்கு அபிரிமிதமான வளர்ச்சியை அடைந்துள்ளனர். வளர்ச்சி என்று பிரச்சாரத்தின் போது கட்சிகள் மாறி மாறிப் பேசியது இந்த வளர்ச்சியைத்தான்.

கர்நாடகத்தில் ஆட்சியில் இருக்கும் காங்கிரசு அரசு, தகவல் தொழில்நுட்பத் துறையை அத்தியாவசியத் தேவைகளின் பட்டியலில் வைத்திருப்பதன் மூலம், இந்தத் துறைக்கு தொழிலாளர் நல உரிமைச் சட்டங்களில் இருந்து விலக்கு அளித்திருந்தது. அதை மேலும், ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்து உத்தரவு பிறப்பித்து உள்ளது.

தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்கள் மற்றும் அறிவுசார் துறைகளாகக் கருதப்படும் கணிப்பொறி, தொலைத் தொடர்பு துறைகளுக்கு தொழிலாளர் நலச் சட்டங்களில்(1946) இருந்து மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு விலக்கு அளித்துள்ளது கர்நாடக மாநில அரசு.

கார்ப்பரேட்டுகளும், அரசியல் கட்சிகளும் இணைந்து நடத்தும் கூத்தின் ஒரு காட்சியாகவே உள்ளது.

மக்கள் பிரச்சனைகளுக்கான போராட்டங்கள், வேலை நிறுத்தங்கள் போன்ற அமைப்பு சார் செயல்பாடுகளில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு இந்த துறைகளை அத்தியாவசியத் துறைகளின் பட்டியலில் வைத்துள்ள அரசு, தொழிலாளர் நலச் சட்டங்களில் இருந்து விலக்கு அளித்து தொழிலாளர் உரிமைகள் என்ற பேச்சுக்கே இடமின்றி செய்துள்ளது.

சிறப்பான நிர்வாகம், ஊழியர்களுக்கு தேவையான சகல வசதிகளும் அளிக்கிறோம் என்று மார்தட்டிக் கொள்ளும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தொழிலாளர் நலச் சட்டங்களில் இருந்து தங்களுக்கு விலக்கு அளிக்கக் கோருவது ஏன்?. சிறந்த நிர்வாகத்தை நடத்தும் நிறுவனங்கள் ஏன் சட்டத்தின் வட்டத்தில் இருந்து வெளியே செயல்பட நினைக்கும் காரணம் என்ன?

வெளிநாட்டு நிறுவனங்கள் நம் நாட்டில் வந்து தொழில் தொடங்க வேண்டுமானால் இத்தகைய சலுகைகள் அளிக்கப்பட்டால்தான் முடியும் என்று நம்மில் சிலர் வாதிடலாம். அப்படியெனில், சலுகை விலையில் நிலம், இருப்பதி நான்கு மணி நேரமும் மின்சாரம், தேவைக்கு மீறிய கட்டமைப்பு வசதிகள் என்று அனைத்தும் மானியமாக பெரும் நிறுவனங்கள், தொழில் தொடங்கப்பட்டப் பிறகும் சட்டத்திற்கு அப்பாற்ப்பட்டு இருக்க நினைப்பது எந்த விதத்தில் நியாயம்.


தொழில்கள் தொடங்க சலுகைகள் வழங்கப்படுகிறது, ஆனால் தொழில்கள் செழிக்க நம்முடைய வாழ்வையும், உரிமைகளையும் பணயம் வைப்பது என்பது மக்களுக்காக இந்த அரசுகள் செயல்படவில்லை என்பதையே சொல்கிறது.

இந்த அரசுகளை விமர்சனப் பார்வையில் அணுக வேண்டிய ஊடகங்கள், தங்களின் பணியை மறந்து கார்ப்பரேட்டுகளுக்கும், அரசுக்கும் காவடி தூக்குகின்றன.

கர்நாடக அரசு தொழிலாளர் நலச் சட்டங்களில் இருந்து தகவல் தொழில் நுட்பத் துறைக்கு விலக்கு அளித்ததை, அரசு தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்களின் உரிமைகளை பாதுகாக்கவே இதைச் செய்துள்ளதாக "தி இந்து" செய்தி வெளியிட்டுள்ள‌து.

தேர்தலின் போது மோடி ஆதரவு செய்திகளையும், விளம்பரங்களையும் வெளியிட்டு காக்கி அரைக்கால் சட்டை அணிந்த "தி இந்து", இன்று கர்நாடக அரசின் செயலை நியாயப்படுத்தி கார்ப்பரேட் வர்ணத்தை தன் முகத்தில் அப்பியுள்ளது. இளஞ்சிவப்பு இந்துவின் உண்மை நிறம் இது தான்.

நம்முடைய மண், கனிமங்கள், இயற்கை வளங்கள் என்று அனைத்தையும் பெருமுதலாளிகளுக்கு தாரை வார்க்கும் செயலை அரசு தொடர்ந்து செய்து வருகிறது. தகவல் தொழில்நுட்பத் துறையை பொறுத்த வரை, இந்தியாவின் முக்கிய வளமான மனித வளத்தை, உரிமைகள் பறிக்கப்பட்ட அடிமைகளாக அடகு வைப்பதே அரசுகளின் எண்ணமாகவும், செயலாகவும் உள்ளது.இதற்கும் உலகத்தின் மிகப்பெரிய சனநாயக நாட்டின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாடு இது.

இதைத்தான் ரசியப் புரட்சியாளர் லெனின் பின்வருமாறு கூறினார், " மிகச் சிறுபான்மையினரான பெருமுதலாளிகளுக்கான, செல்வந்தர்களுக்கான சனநாயகமே, முதலாளித்துவ சனநாயகம் "


கதிரவன்
சேவ் தமிழ்ஸ் இயக்கம்

மேலும் படிக்க..

1) http://timesofindia.indiatimes.com/tech/tech-news/IT-companies-in-Karnataka-to-remain-exempt-from-labour-laws/articleshow/29719053.cms

2) http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/govt-to-safeguard-interests-of-workforce-in-it-sector/article5980644.ece