Monday, May 26, 2014
கர்நாடக அரசல்ல, கார்ப்பரேட்டுகளின் அரசே!!!
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலும், நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்றுக் கொள்ளப் போவதும் கார்ப்ப்ரேட்டுகளாலும், கார்ப்பரேட் ஊடகங்களாலும் கதை, திரைக்கதை அமைக்கப்பட்டு நடத்தப்பட்ட கூத்து என்று கேரவன் இதழ் கட்டுரை வெளியிட்டிருந்தது.
இந்தத் தேர்தல் காங்கிரசு, பாரதிய சனதா கட்சிகளுக்கு இடையிலான போட்டியாக மட்டும் இல்லாமல், கார்ப்பரேட்டுகளுக்கும், மக்களுக்கும் இடையிலான நேரடி போட்டியாகவே நடந்து முடிந்திருக்கிறது. வழமைப் போலவே, பண மற்றும் அதிகார செருக்கில் கார்ப்பரேட்டுகள் நினைத்ததே நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் சனநாயகத்தின் மூலம் அரசுகள் அமைந்து, அந்த அரசுகள் தரும் சலுகைகளை கார்ப்பரேட்டுகள் பெற்ற நிலை மாறி தங்களுக்கு ஏதுவாகச் செயல்படும் கட்சியை ஆட்சியில் அமர்த்தி அதன் மூலம் தங்களுக்கு தேவையானவற்றை தங்குதடையின்றி பிடுங்கிக் கொள்ளும் நிலைக்கு அபிரிமிதமான வளர்ச்சியை அடைந்துள்ளனர். வளர்ச்சி என்று பிரச்சாரத்தின் போது கட்சிகள் மாறி மாறிப் பேசியது இந்த வளர்ச்சியைத்தான்.
கர்நாடகத்தில் ஆட்சியில் இருக்கும் காங்கிரசு அரசு, தகவல் தொழில்நுட்பத் துறையை அத்தியாவசியத் தேவைகளின் பட்டியலில் வைத்திருப்பதன் மூலம், இந்தத் துறைக்கு தொழிலாளர் நல உரிமைச் சட்டங்களில் இருந்து விலக்கு அளித்திருந்தது. அதை மேலும், ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்து உத்தரவு பிறப்பித்து உள்ளது.
தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்கள் மற்றும் அறிவுசார் துறைகளாகக் கருதப்படும் கணிப்பொறி, தொலைத் தொடர்பு துறைகளுக்கு தொழிலாளர் நலச் சட்டங்களில்(1946) இருந்து மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு விலக்கு அளித்துள்ளது கர்நாடக மாநில அரசு.
கார்ப்பரேட்டுகளும், அரசியல் கட்சிகளும் இணைந்து நடத்தும் கூத்தின் ஒரு காட்சியாகவே உள்ளது.
மக்கள் பிரச்சனைகளுக்கான போராட்டங்கள், வேலை நிறுத்தங்கள் போன்ற அமைப்பு சார் செயல்பாடுகளில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு இந்த துறைகளை அத்தியாவசியத் துறைகளின் பட்டியலில் வைத்துள்ள அரசு, தொழிலாளர் நலச் சட்டங்களில் இருந்து விலக்கு அளித்து தொழிலாளர் உரிமைகள் என்ற பேச்சுக்கே இடமின்றி செய்துள்ளது.
சிறப்பான நிர்வாகம், ஊழியர்களுக்கு தேவையான சகல வசதிகளும் அளிக்கிறோம் என்று மார்தட்டிக் கொள்ளும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தொழிலாளர் நலச் சட்டங்களில் இருந்து தங்களுக்கு விலக்கு அளிக்கக் கோருவது ஏன்?. சிறந்த நிர்வாகத்தை நடத்தும் நிறுவனங்கள் ஏன் சட்டத்தின் வட்டத்தில் இருந்து வெளியே செயல்பட நினைக்கும் காரணம் என்ன?
வெளிநாட்டு நிறுவனங்கள் நம் நாட்டில் வந்து தொழில் தொடங்க வேண்டுமானால் இத்தகைய சலுகைகள் அளிக்கப்பட்டால்தான் முடியும் என்று நம்மில் சிலர் வாதிடலாம். அப்படியெனில், சலுகை விலையில் நிலம், இருப்பதி நான்கு மணி நேரமும் மின்சாரம், தேவைக்கு மீறிய கட்டமைப்பு வசதிகள் என்று அனைத்தும் மானியமாக பெரும் நிறுவனங்கள், தொழில் தொடங்கப்பட்டப் பிறகும் சட்டத்திற்கு அப்பாற்ப்பட்டு இருக்க நினைப்பது எந்த விதத்தில் நியாயம்.
தொழில்கள் தொடங்க சலுகைகள் வழங்கப்படுகிறது, ஆனால் தொழில்கள் செழிக்க நம்முடைய வாழ்வையும், உரிமைகளையும் பணயம் வைப்பது என்பது மக்களுக்காக இந்த அரசுகள் செயல்படவில்லை என்பதையே சொல்கிறது.
இந்த அரசுகளை விமர்சனப் பார்வையில் அணுக வேண்டிய ஊடகங்கள், தங்களின் பணியை மறந்து கார்ப்பரேட்டுகளுக்கும், அரசுக்கும் காவடி தூக்குகின்றன.
கர்நாடக அரசு தொழிலாளர் நலச் சட்டங்களில் இருந்து தகவல் தொழில் நுட்பத் துறைக்கு விலக்கு அளித்ததை, அரசு தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்களின் உரிமைகளை பாதுகாக்கவே இதைச் செய்துள்ளதாக "தி இந்து" செய்தி வெளியிட்டுள்ளது.
தேர்தலின் போது மோடி ஆதரவு செய்திகளையும், விளம்பரங்களையும் வெளியிட்டு காக்கி அரைக்கால் சட்டை அணிந்த "தி இந்து", இன்று கர்நாடக அரசின் செயலை நியாயப்படுத்தி கார்ப்பரேட் வர்ணத்தை தன் முகத்தில் அப்பியுள்ளது. இளஞ்சிவப்பு இந்துவின் உண்மை நிறம் இது தான்.
நம்முடைய மண், கனிமங்கள், இயற்கை வளங்கள் என்று அனைத்தையும் பெருமுதலாளிகளுக்கு தாரை வார்க்கும் செயலை அரசு தொடர்ந்து செய்து வருகிறது. தகவல் தொழில்நுட்பத் துறையை பொறுத்த வரை, இந்தியாவின் முக்கிய வளமான மனித வளத்தை, உரிமைகள் பறிக்கப்பட்ட அடிமைகளாக அடகு வைப்பதே அரசுகளின் எண்ணமாகவும், செயலாகவும் உள்ளது.இதற்கும் உலகத்தின் மிகப்பெரிய சனநாயக நாட்டின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாடு இது.
இதைத்தான் ரசியப் புரட்சியாளர் லெனின் பின்வருமாறு கூறினார், " மிகச் சிறுபான்மையினரான பெருமுதலாளிகளுக்கான, செல்வந்தர்களுக்கான சனநாயகமே, முதலாளித்துவ சனநாயகம் "
கதிரவன்
சேவ் தமிழ்ஸ் இயக்கம்
மேலும் படிக்க..
1) http://timesofindia.indiatimes.com/tech/tech-news/IT-companies-in-Karnataka-to-remain-exempt-from-labour-laws/articleshow/29719053.cms
2) http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/govt-to-safeguard-interests-of-workforce-in-it-sector/article5980644.ece
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment