Monday, May 12, 2014

இலங்கையில் நடந்தது இனப்படுகொலையே.....




பேராசிரியர்.இராமு மணிவண்ணன் எழுதிய "யானையை மறைக்கும் இலங்கை" நூலின் பெங்களூர் அறிமுக கூட்டமும், முள்ளிவாய்க்கால் பேரழிவின் ஐந்தாமாண்டு நினைவு கூட்டமும் இன்று(மே 11) காலை 10.30 மணிக்கு பெங்களூர் தமிழ் சங்கத்தில் "போர்க்குற்றம் இனப்படுகொலைக்கு எதிரான மன்றத்தின்" கர்நாடக பிரிவின் சார்பாக நடத்தப்பட்டது.



முள்ளிவாய்க்கால் பேரழிவின் ஐந்தாமாண்டும், நம்முன் உள்ள கடமைகளைப் பற்றி கர்நாடக தமிழ் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த தோழர்.சண்முகம் பேசினார். ஈழ விடுதலை போராட்டத்தில் தமிழகத்தில் பின்னடைவதற்கான காரணம், நமக்குள் ஒற்றுமையில்லை, சாதியாலும், அரசியலாலும் நாம் வேறுபட்டுள்ளோம். தமிழக அரசியல் கட்சிகளான திமுக, அதிமுகவும் தமிழர்களுக்கு துரோகம் இழைத்து வருகின்றனர். ஈழ ஆதரவு அரசியல் கட்சிகளின் மீது கூட நம்பிக்கை இல்லாத சூழலே நிலவுகின்றது. மாணவர்களாலும், இளைஞர்களாலும் மட்டுமே விடிவை போராடி பெற்று தரமுடியும், நம்மைப் போன்ற இயக்கங்கள், செயற்பாட்டாளர்கள் அவர்களின் போராட்டத்திற்கு உறுதுணையாக இருக்கவேண்டும் என்றார்.



"யானையை மறைக்கும் இலங்கை" நூலை தோழர். சண்முகம் வெளியிட மனித உரிமை செயற்பாட்டாளரான தோழர்.நகரிகரே ரமேஷ் பெற்றுக்கொண்டார்.



இந்நூலை அறிமுகப்படுத்தி பேராசிரியர்.சிவலிங்கம் பேசும் பொழுது, தமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்தவரை இந்த நீண்ட கால போராட்ட வரலாற்றில் தமிழீழம் பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையில் நாம் இருந்த போது மே 2009 பேரழிவு, போராட்டத்திற்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. தமிழீழ போராட்டத்தைப் பொறுத்தவரை தமிழகத்திலும், கர்நாடகாவில் வாழும் தமிழ் மக்கள் மத்தியிலும் நாம் எவ்வாறு செயல்பட்டோம் என்பதை சீராய்வு செய்து பார்த்தால், நாம் செய்தது உணர்வு சார் அரசியல் என்பது புரியும், மே 18ற்கு பிறகு தமிழீழ விடுதலைபோரட்டத்தை சங்க இலக்கியங்களுடன் ஒப்பிட்டு சிறப்பு செய்வதும், இன்னொரு புறம் புலம்புவதுமாக உள்ள அரசியல் நம்மை பீடித்துள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும் என்றார். 2000 ஆண்டுகள் ஆனாலும் ஒரு இனம் தன்னுடைய விடுதலைக்காக போராடுமென்பது வரலாறு. அதனால் தமிழீழ மக்கள் தான் அதை முன்னெடுத்து செல்வார்கள், அப்போராட்டம் எந்த வகையில் என்பதை அவர்களே முடிவு செய்வார்கள், வெளியிலிருக்கும் தமிழக மக்களாகிய நாம் புவிசார் அரசியிலிலிருந்து இந்த போராட்டத்திற்கு ஆதரவான தளத்தை உருவாக்க, தமிழ்த்தேசிய அரசியலை மக்கள் சார்ந்த, அடித்தட்டு மக்கள் கூட தமிழ்த்தேசிய உரிமை எங்களுக்கு வேண்டும், இந்தியாவிலும் கூட தமிழ்த்தேசிய சுயநிர்ணய உரிமை எங்களுக்கு வேண்டும் என்ற மக்கள் போராடக்கூடிய ஒரு தளத்தை உருவாக்குவது தான் ஈழத்தமிழர்களுக்கு நாம் ஆற்றும் உண்மையான பணியாக அமையும் என்று குறிப்பிட்டார்.



மக்கள் சனநாயக மன்றத்தைச் சேர்ந்தவரும், மனித உரிமை செயற்பாட்டாளருமான தோழர்.இரமேஷ் நூலைப் பற்றி விரிவாக பேசினார். "யானையை மறைக்கும் இலங்கை" என்பது நேரடியாக அப்படியே புரிந்து கொள்ளக்கூடாது, நீங்கள் என்ன செய்தாலும் யானையை மறைக்க முடியாது என்பதன் அர்த்தத்தில் தான் புரிந்து கொள்ள வேண்டும், இங்கே இலங்கையில் இந்த யானை என்ன செய்கின்றது. இலங்கை அரசு தனது சொந்த மக்கள் மீதே வன்முறையை, ஒடுக்குமுறையை ஏவிவருகின்றது, அங்கு தமிழர்கள் வெளிநாட்டினர் அல்ல, அம்மண்ணின் மக்கள். தமிழர்கள் மீது நடத்திவரும் வன்முறை என்ற யானையை பன்னாட்டு சமூகத்தின் கண்ணில் இருந்து மறைக்க முயல்கின்றது. ஆனால் அவர்களால் மறைக்க முடியாது என்பது தான் உண்மை. L.L.R.C (Lessons Learnt & Reconcilation commission) என்பது இலங்கை அரசு நடத்திய கண்துடைப்பேயன்றி வேறல்ல, உண்மையில் அவர்கள் எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்பது தான் யதார்த்தம். வெளியுலக மக்களுக்காக தான் அவர்கள் அப்படி ஒரு ஆணையத்தையே அமைத்தார்கள்.


அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஈராக் மீது போர் தொடுக்க பயன்படுத்திய "பயங்கரவாதத்திற்கெதிரான போர்" என்ற உத்தியை இலங்கை அரசு இங்கே தமிழர்களை கொல்லப் பயன்படுத்தியது. அந்தப் போர் இன்னும் ஒய்ந்தபாடில்லை, 2009 வரை பெயருக்காவது இன்னொரு தரப்பு இருந்தது, 2009க்கு பின்னர் இலங்கை அரசு ஆயுதமேதுமற்ற மக்கள் மீது போர் தொடுத்து வருகின்றது, இலங்கை தன்னை "சோசலிச சனநாயக குடியரசு" என்று அழைத்துக் கொள்கின்றது, ஆனால் இது எதையும் எப்பொழுதும் இலங்கை அரசு நடைமுறைப்படுத்தியதேயில்லை. இவ்வளவு பெரிய ஆழமான நூலைப் பற்றி முழுமையாக பேசுவதென்பது முடியாத ஒன்று, இந்த நூலைப் பற்றிய ஒரு சிறு அறிமுகத்தை தான் நான் இங்கே கொடுக்கின்றேன். மார்ச் 2014ல் ஐ.நா.மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு எதிரான ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தது, ஆனால் இந்திய அரசு இத்தீர்மான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.இந்த நவீன உலகமானது பூகோள அரசியல்களாலானது. இந்தியா ஏன் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லையே ஏன் என வெளியுறவுத்துறை அதிகாரிகளை கேட்டால், நாம் இலங்கைக்கு எதிரானால் அங்கு சீனா வந்து விடும் என ஆருடம் சொல்வார்கள். வெளியுறவுத்துறை செயல்பாடுகள் என்பது முற்றிலும் பொய்களாலும், பூகோளாரசியலாலுமானது. சேனல் 4 இலங்கையில் நடந்ததை ஒளிப்படமாக காட்சிப்படுத்தி மொழி புரியாதவர்களுக்கும் கொண்டு சேர்த்தது. அதை விட அதிகமான தகவல்களைக் கொண்ட முக்கியமான நூலிது.


2009 மே மாதத்திற்க்கு பின்னர் கன்னட ஊடகவியலாளரான குமார் பருடைக்குட்டி "ஓ ஈழம்" என்ற நூலை எழுதினார், இந்நூலை லங்கேஷ் பத்திரிகை வெளியிட்டது, இந்நூல் மூலம் கன்னடம் பேசும் மக்கள் இலங்கையில் நடப்பது என்ன என புரிந்து கொண்டனர். யூதர்கள் ஒரு இனப்படுகொலையை எதிர்கொண்டனர், ஆனால் இன்று அவர்கள் அதே இனப்படுகொலையை பாலசுதீனியர்கள் மீது நடத்திவருகின்றனர். இலங்கை அரசானது நாசிகள் யூதர்கள் மீது நடத்திய இனப்படுகொலையிலிருந்து சித்ரவதை முகாம்களை அமைத்தும், யூதர்கள் பாலசுதீனியர்கள் மேல் நடத்தி வரும் இனப்படுகொலையிலிருந்து பூர்வகுடி மக்களின் நிலத்தை பிடுங்கி, இராணுவமயப்படுத்துவத்தி அவர்களை அழித்தொழிப்பதையும் சேர்த்து தமிழர்கள் மீது பயன்படுத்தி, முழு இலங்கையையும் சிங்களமயாக்கி வருகின்றது. தமிழர்கள் மீதான போர் 2008ல் தொடங்கவுமில்லை, 2009ல் முடியவுமில்லை, 1948ல் இருந்து இன்று வரையும் நடந்து வருகின்றது. இலங்கையில் இதுவரை செயற்பட்ட எல்லா அரசுகளும் சிங்கள பௌத்தத்தை அடிப்படையாகக்கொண்டே செயல்பட்டன. சிங்கள பௌத்த தேசியவாதம் அங்கு அரசியல், கலாச்சாரம் என்ற இரண்டு தளத்திலும் செயற்பட்டு வருகின்றது. முதலில் தமிழ் மொழியின் உரிமையை அவர்கள் மறுத்தார்கள், பின்னர் மலையகத்தமிழர்களை நாடற்றவர்களாக்கினார்கள், நீண்ட காலத்திற்கு தமிழ் மக்கள் தங்கள் உரிமையைக் கோரி சனநாயக வழிகளில் தங்கள் போராட்டத்தை நடத்தினார்கள், பின்னர் 1990களில் தான் ஆயுதப் போராட்டம் தொடங்குகின்றது. இலங்கை அரசு தமிழ் மக்களை இனப்படுகொலை செய்துள்ளது என்பதை இந்நூல் தெளிவாக எடுத்தியம்புகின்றது. 2002ல் குஜராத்திலும், இவ்வாண்டு முசாபர் நகரத்தில் நடந்ததும் இனப்படுகொலையில் ஒரு பகுதியே... இது போன்ற இனப்படுகொலையிலிருந்தும், திட்டமிட்ட வன்முறைகளிலிருந்தும் நாம் பாடம் கற்றுக்கொள்ளவேண்டும், அப்பொழுது தான் நாம் நாகரீகமான குடிமைச் சமூகமாவோம். மக்கள் ஒடுக்கப்படுவதிலிருந்து அவர்களின் வலிகளிலிருந்து நாம் பாடம் கற்கவேண்டும். கண்டிப்பாக நீதி நிலைநாட்டப்படும். தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும். பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாகச் சென்று வாழ்ந்து வரும் தமிழர்கள் மீண்டும் தங்கள் மண்ணிற்கு வந்து வாழும் நாள் வரும் என உறுதியாக நம்புகின்றேன் என்ற தோழர்.இரமேஷ் இறுதியாக கன்னட ஊடகவியலாளர் சிவசுந்தர் 2009 மே மாதத்தில் எழுதிய கவிதையை வாசித்து தனது உரையை நிறைவு செய்தார். அக்கவிதையின் சாரம் புத்தர் ஏன் மண்ணின் மைந்தர்களை கொல்லும் போது ஏன் அமைதியானார், பௌத்தம் என்பது எல்லாவற்றையும் துறப்பதேயன்றி மாட மாளிகைகளில் வாழ்வதல்ல என்பதாகும்.

முள்ளிவாய்க்கால் பேரழிவின் ஐந்தாமாண்டு நினைவை முன்னிட்டு அஞ்சலி செலுத்தும் வகையில் இரண்டு நிமிடம் மௌனம் அனுசரிக்கப்பட்டது.


நூலாசிரியரும், சென்னை பல்கலைகழகத்தின் அரசியற்துறை தலைவருமான பேராசிரியர். மணிவண்ணன் பேசும் பொழுது. ஐ.நாவின் மூவர் குழுவின் அறிக்கைப்படியே மே 9 இரவிலிருந்து, மே 10 காலைக்குள் 2000 பேர் கொல்லப்பட்டனர். மே மாதத்தில் எல்லாம் புலிகள் போரை நிறுத்திவிட்டார்கள், அப்பொழுதும் இலங்கை அரசு தொடர் போர் புரிந்து ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்களை கொன்றுள்ளது. மே மாதத்தில் மட்டும் எவ்வித தடுப்பும் செய்யாத பொது மக்களில் 50,000 பேரைக் கொன்றுள்ளது என்றார்.


நாங்கள் இங்கு இந்நூலை விற்பனை செய்யவோ, விளம்பரப்படுத்தவோ வரவில்லை, நமக்கு அருகில் உள்ள அண்டை நாட்டில் இனப்படுகொலை நடந்துள்ளது என்ற செய்தியை சொல்லவே வந்துள்ளோம், இப்படி ஒரு இனப்படுகொலை நடந்த பொழுது இந்தியா (தமிழகம் தவிர்த்து) அமைதியாக இருந்தது. இலங்கை அரசே தன்னை விசாரித்து பின்னரே பன்னாட்டு சமூகம் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்த பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளையும், அமெரிக்க பிரதிநிதியிடமும் நான் ஒரு கேள்வியை முன்வைத்தேன், தமிழர்கள் மீது 1979லும், 1983லும், அதற்கு பிறகு இன்று வரை நடந்து வரும் எந்த ஒரு தாக்குதலிலாவது இலங்கை அரசு விசாரணை செய்து யாரையாவது தண்டித்துள்ளது எனச்சொல்ல முடியுமா? என்றால் அதற்கு முடியாது என்பதே பதில், அப்படியிருக்க நீங்கள் எப்படி இலங்கை அரசு முதலில் விசாரிக்க வேண்டும் எனக்கோருகின்றீர்கள் எனக்கேட்டேன், அவர்களிடமிருந்து எந்த பதிலும் இல்லை. நாம் அரசியலின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். 1965களில் தென்னாப்பிரிக்க நிறவெறி அரசை பன்னாட்டு சமூகம் ஆதரித்தது, அந்த நிலை 1985களில் முற்றிலுமாக அரசுக்கு எதிராக மாறியது. 2009 மே மாதத்தில் இலங்கை அரசை பாராட்டி எந்த நாடுகள் தீர்மானம் கொண்டுவந்தனவோ, அதே நாடுகள் இன்று இலங்கையை எதிர்த்து வாக்களித்துள்ளன. இது தான் அரசியல்.

தனிப்பட்ட எனதொருவனின் உழைப்பல்ல இந்நூல், இந்நூலில் எனது மாணவர்கள், பல இயக்கங்கள், செயற்பாட்டாளர்களது உழைப்புள்ளது. எல்லோருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த "போர்க்குற்றம், இனப்படுகொலைக்கு எதிரான மன்றத்திற்கும்" என் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார் அவர்.

இறுதியாக கேள்வி பதில் நிகழ்வுடன் நூலறிமுகக் கூட்டம் முடிந்தது. முழுநிகழ்வையும் தோழர்.கதிரவன் ஒருங்கிணைத்தார்.

"யானையை மறைக்கும் இலங்கை"(Sri Lanka: Hiding the Elephant) நூலை பெங்களூரில் வேண்டுவோர் "போர்க்குற்றம் இனப்படுகொலைக்கு எதிரான மன்ற"த்தின் கர்நாடக ஒருங்கிணைப்பாளரான நற்றமிழனை (09886002570) தொடர்பு கொள்ளவும்.

No comments:

Post a Comment