Thursday, April 10, 2014

பா.ஜ.க தேர்தல் அறிக்கை - ஒரு பருந்துப் பார்வை ....




பா.ஜ.க ஒருவழியாகத் தனது தேர்தல் அறிக்கையை முதல் கட்ட தேர்தல் தொடங்கிய ஏப்ரல் 7 அன்று வெளியிட்டுள்ளது. மோடி தான் மாற்று, மோடியினால் மட்டும் தான் முடியும், மோடி ஒருவரே இந்தியா எதிர்கொள்ளும் எல்லாப் பிரச்சனைகளையும் தீர்க்கும் அருமருந்து என்று நாம் பார்க்கும் இடமெல்லாம் ஊடகங்களும், முதலாளிகளும், இந்துத்துவவாதிகளும், வருங்கால முதலாளி கனவில் மிதக்கும் நடுத்தர வர்க்கத்தில் பெரும்பான்மையினரும் தொடர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். சரி இவர்களெல்லாம் மாற்று என்று சொல்லும் மோடியின் பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கையில் அப்படி என்ன தான் மாற்று இருக்கின்றது எனப் பருந்து பார்வை பார்க்கலாம் வாருங்கள்....




விலைவாசி உயர்வு:

முந்தைய வாஜ்பாய் ஆட்சிகாலத்தில் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தியது போல நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவோம் என்கிறார்கள்.... இந்நேரத்தில் வாசகர்களுக்கு வாஜ்பாய் ஆட்சிகாலத்தில் வெங்காய விலையைக் கூடக் கட்டுபடுத்த முடியாமல் போனது நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. அடுத்து பின்வரும் காரணிகள் மூலம் உடனடியாக விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தப் போவதாகக் கூறியுள்ளார்கள்...

* பதுக்கலில் ஈடுபடுபவர்களைத் தண்டிக்கச் சிறப்பு நீதிமன்றங்கள்...

* விலைவாசி உயர்வை கட்டுபடுத்த ஒரு குறிப்பிட்ட நிதியை ஒதுக்குதல்

* விவசாயிகளுக்குச் சரியான புள்ளிவிவரங்களை வழங்குதல்.

இக்காரணிகளின் மூலம் விலைவாசி உயர்வை கட்டுபடுத்த முடியுமா என்பதைப் பார்ப்போம். விலைவாசி உயர்வுக்கு முக்கியக் காரணமே, சந்தை(Market) விவசாயப் பொருட்களின் விலையை நிர்ணயப்பதும், ஊகவணிகமும் (Speculation trading) தான். இது பா.ஜ.க ஆட்சிக்கு வந்தாலும் அப்படியே தான் நீடிக்கும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த விவசாயப் பொருட்களின் விலையை அரசு நிர்ணயம் செய்து, சந்தையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதும், ஊக வணிகத்தை நிறுத்தவதன் மூலமும் தான் செய்ய முடியும். அடுத்ததாக விலைவாசி உயர்வுக்கு மற்றொரு முக்கியமான காரணம் போக்குவரத்திற்கு அடிப்படையான எரிபொருளின் விலை உயர்வு. எரிபொருள் விலை நிர்ணயத்தை அரசு நிறுவனங்களின் கையில் கொடுத்த பிறகு, அவர்கள் தங்கள் விருப்பம் போல, மாதமொரு முறை விலையை ஏற்றிவருகின்றார்கள். எரிபொருள் விலை உயர, பொருட்கள் உற்பத்தியிடத்திலிருந்து, சந்தைக்குக் கொண்டு செல்லும் போக்குவரத்திற்காக ஆகும் செலவு அதிகரிக்கின்றது. காங்கிரசு அரசு செய்த இந்தக் கொள்கை மாற்றத்தை, பா.ஜ.க ஆட்சிக்கு வந்தாலும் அப்படியே தான் தொடரும். விலைவாசி உயர்வுக்குக் காரணமான இதுபோன்ற முக்கியக் காரணிகளை விட்டுவிட்டு, இலைகளைக் கிள்ளி எறிவதால் விலைவாசி உயர்வு எக்காலத்திலும் கட்டுக்குள் கொண்டு வர‌முடியாது.


வேலை வாய்ப்பு, தொழில் முனைவு :

காங்கிரசு தலைமையிலான அரசு அமைந்த‌ கடந்த 10 ஆண்டுகளில் "வேலைவாய்ப்பில்லாத வளர்ச்சியே" நடைபெற்றுள்ளது. இதைச் சில பொருளாதார நடவடிக்கை மாற்றம் மூலம் மாற்றி வேலை வாய்ப்பையும், தொழில் முனைவோருக்கு சாதகமான நிலையையும் உருவாக்குவோம் எனக் கூறியுள்ளனர்.


* செயலுத்தியாகத் தொழிலாளர்கள் அதிகம் தேவைப்படும் உற்பத்தி நிறுவனங்களை (டெக்ஸ்டைல், காலணி, மின்பொருள் ஒருங்கிணைப்பு.....) அதிகப்படுத்துதல்...

* விவசாயமும், அது சார்ந்த தொழில்களையும் வலுப்படுத்துதல்

* நாட்டின் கட்டமைப்பை (சாலைகள், மற்றப் போக்குவரத்து) வலுப்படுத்துதல்

* சுய தொழில் முனைவோரை உருவாக்குதல்.


மேற்கூறியவை மூலம் வேலைவாய்ப்பை அதிகப்படுத்த முடியுமா? இதில் என்னென்ன பிரச்சனைகள் உள்ளன என்பதை சுருக்கமாகப் பார்ப்போம். தொழிலாளர்கள் அதிகம் தேவைப்படும் உற்பத்தி நிறுவனங்களை அதிகப்படுத்துதல், குறிப்பாக டெக்ஸ்டைல், காலணி, மின்பொருள் ஒருங்கிணைப்பு போன்ற நிறுவனங்களை அதிகப்படுத்துதல் சாத்தியமா எனப்பார்ப்போம்........டெக்ஸ்டைல் நிறுவனங்களை இங்கே அதிகப்படுத்த முடியுமா? என்றால் அதற்கு முடியாது என்பதே பதில், காரணம், இங்கு இந்தியாவில் செயற்பட்டு வரும் நிறுவனங்களே, வெளிநாட்டு நிறுவனங்கள் ஒப்பந்தம் கோரும் விலை கட்டுபடி ஆகாத காரணத்தினால் இங்கிருக்கும் நிறுவனங்களை மூடிவிட்டு, வங்க தேசம், கொரியா போன்ற நாடுகளில் நிறுவனங்களை வாங்கி, அங்கு உற்பத்தி செய்யத் தொடங்கிவிட்டனர். மேலை நாட்டு முதலாளிகள் தங்களது இலாபத்தை அப்படியே வைத்து கொள்வதற்காக அடிமாட்டு விலையில் ஒப்பந்தங்களைக் கொடுப்பது தான் இதற்குக் காரணம். இதே போலத் தான் ஒவ்வொரு துறையின் நிலையும். இங்குச் சேவை சார் துறைகள் மட்டுமே அதிகம் வரும், அவர்களூக்கு மிகக்குறைவான ஊழியர்களே போதுமானது. மேலும் தற்பொழுது உற்பத்திசார் தொழிற்சாலைகள் கடுமையான ஆட்குறைப்பை செய்து வருவது தொடர்ச்சியாகச் செய்திகளைக் கவனித்து வருபவர்களுக்குத் தெரியும். வேலை வாய்ப்பின்மை அதிகரித்ததற்குக் காரணம் அரசு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் பணியில் இருந்து துண்டித்துக் கொண்டு அதைத் தனியாரிடம் கையளித்ததேயாகும். இதைத் தான் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தாலும் செய்யும்.




ஊழல், கருப்புப் பணம் :

ஊழலை ஒழிப்போம், கருப்புப் பணத்தை வெளிக்கொண்டு வருவோம் என்று முழங்கியுள்ளார்கள். ஊழலின் மூலாதாரம் 90களுக்குப் பின்னர் இங்கே நுழைக்கப்பட்ட தனியார்மயம், தாராளமயம், அதை மாற்றாமல் ஊழலை ஒழிப்போம் எனக்கூறுவது, புற்றுநோயை குணப்படுத்த வைட்டமின் -பி மாத்திரை சாப்பிட்டால் போதுமானது என்பதைப் போன்றதே... இந்நேரத்தில் பா.ஜ.க ஆட்சியில் நடந்த கார்கில் சவப்பெட்டி ஊழல், தங்க நாற்கரச் சாலை ஊழல் போன்றவையும், இரும்புத்தாது ஊழலில் தனது முதலமைச்சர் பதவியிழந்த எடியூரப்பாவை மீண்டும் கட்சியில் சேர்ந்துள்ளதும் உங்கள் நினைவுக்கு வரலாம்...


அரசின் செயல்பாடு:

இந்த ஒரு புள்ளியில் தான் காங்கிரசின் கொள்கையிலிருந்து, பா.ஜ.க மாறுபடுகின்றது. அரசு கொள்கை மட்டும் வகுத்துவிட்டு மீதியனைத்தையும் முதலாளிகளின் கையில் கொடுத்துவிட வேண்டும், முதலாளிகள் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்கள் இது தான் பா.ஜ.க வின் தேர்தல் அறிக்கை. முதலாளிகளுக்கு எதையும் பொறூமையாகச் செய்யும் Manmohanomics புளித்து விட்டதால் அவர்கள் அதிரடியாகவும், சர்வாதிகரத்துடனும் நடந்து கொள்ளும் Modinomics நோக்கிச் செல்கின்றார்கள். மோடி மாற்று தான் நமக்கல்ல, முதலாளிகளுக்கு என்பது இதன் மூலம் தெள்ளத்தெளிவாகின்றது....



மாநில அரசும் , மத்திய அரசும் :

மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கு இணையான அதிகாரங்கள் வழங்கப்படும் எனத் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. யதார்த்தத்தில் மாநில அரசிற்கு இருக்கும் (பொதுப் பட்டியலில்) அதிகாரங்கள் காங்கிரசு/பா.ஜ.க ஆட்சியில் கொஞ்சம், கொஞ்சமாகப் பறிக்கப்பட்டு, இப்பொழுது மாநில அரசு என்பது வெறும் கண்காணிக்கும் அரசாக மட்டுமே உள்ளது. மாநில அரசின் சட்டசபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களைக் கொஞ்சம் கூடக் காங்கிரசு/பா.ஜ.க அரசுகள் மதித்ததேயில்லை. நானும் கச்சேரிக்குப் போறேன் என்பது போலத் தான் இந்த உறுதிமொழியைத் தேர்தல் அறிக்கையில் கொடுத்துள்ளது பா.ஜ.க. மற்றப் படி தமிழகம் எதிர் கொள்ளும், காவிரி, முல்லைப்பெரியாறு பிரச்சனை தொடர்பாக முந்தைய பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு நடந்து கொண்டதைப் போலத் தான் மோடி ஆட்சிக்கு வந்தாலும் நடக்கும். அப்படி உண்மையிலேயே பா.ஜ.க-விற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டுமென்ற ஆசையிருப்பின், எல்லையோரத்தில் இருக்கும் மாநில அரசுகளுடன் கலந்து கொண்டு தான் வெளியுறவு கொள்கை தீர்மானிக்கப்படும், மாநில மின்வாரியங்களின் உரிமையைப் பறித்துத் தனியாரிடம் மின்னுற்பத்தி, பகிர்மானத்தை வழங்கும் 2003 மின்சாரச் சட்டம்(முந்தைய பா.ஜ.க ஆட்சியில் இயற்றப்பட்டது), அடுத்து வர இருக்கும் குடிநீர் சட்டம் போன்றவற்றை நீக்கி, அந்தந்த மாநிலங்களுக்குத் தேவையானவற்றை அந்தந்த மாநிலங்களே தீர்மானிக்கும் உரிமையையும், சுவிட்ஸர்லாந்தில் இருப்பது போன்ற ஒரு கூட்டாச்சி அமைப்பு முறையை இங்கே உருவாக்குவோம் என்று கூறவேண்டும், அவர்களால் சொல்ல முடியுமா?....... அரசியலமைப்பு சட்டப்படி மாநிலம் என்ற வார்த்தையே இல்லை, அரசுகள்(States) என்றும், இந்திய ஒன்றியம் (Union of India) என்றும் தான் உள்ளது, முதலில் மையம், மத்திய என்ற வார்த்தைகளை தவிர்த்து உண்மையான ஒன்றிய அரசாக செயல்படுவார்களா ? ........... அது மட்டுமின்றி மக்களுக்கு அதிகாரம் என்றெல்லாம் வார்த்தைகள் ஆங்காங்கே வருகின்றது, அப்படியானால் இடிந்தகரை மக்களின் விருப்பத்திற்கிணங்க கூடங்குளம் அணு உலையை மூடிவிடுவார்களா என்றால், மக்கள் என்ன சொன்னாலும் சரி தனது அதிகபட்ச அதிகாரத்தையும், அடக்குமுறையையும் பயன்படுத்தி இது போன்ற திட்டங்களைத் தொடருவது தான் அவர்களது எண்ணம். மக்களுக்கு அதிகாரம் என்பதெல்லாம் பகல்கனவே....


ஜம்மு காசுமீர்:

காசுமீர் எப்பொழுதும் இந்தியாவின் பகுதியே, அதே போலக் காசுமீர் பண்டிட்டுகள் மீண்டும் குடியேற தேவையான பாதுகாப்பை வழங்குவோம், அரசியலமைப்புச் சட்டம் 370வதை நீக்குவதே பா.ஜ.கவின் நிலை இது குறித்து அம்மாநிலத்துடன் விவாதிக்கப்படும் என்று கூறியுள்ளார்கள்.....

முதல் வரியிலிருந்தே பொய்யுடன் தொடங்கின்றார்கள், காசுமீர் எப்பொழுதும் இந்தியாவுடனான பகுதி அல்ல.
காசுமீர் ஆகஸ்டு 17,1947லிருந்து அக்டோபர் 26,1947 வரை ஒரு சுதந்திர தேசமாக இருந்தது என்ற தீர்ப்பை ஜம்மு காசுமீர் நீதிமன்றம் 1953 அன்று மேகர் சிங் எதிர் ஜம்மு காசுமீர் அரசு வழக்கில் வழங்கியது(1). அதாவது ஒக்டோபர் 26, 1947அன்று மன்னன். ஹரிசிங், இந்தியாவின் கவர்னர் செனரலாக இருந்த மவுண்ட்பேட்டன் பிரபுவிடம் Instrument of Access என்ற ஒப்பந்தம் போட்டதிலிருந்து காசுமீர் இந்தியாவின் வசமானது எனப் பொருள் (2).

நேரு இந்த ஒக்டோபர் 26 ஒப்பந்ததிற்குப் பிறகும் கூட காசுமீர் மக்கள் தான் யார் பக்கம் இணைய வேண்டும் என முடிவு எடுக்க வேண்டும், நாங்கள் அவர்களுக்கு உதவ மட்டுமே சென்றுள்ளோம் என பல உரைகளில் குறிப்பிட்டுள்ளார் (3). இருந்தாலும் இந்துத்துவ இந்தியர்களுக்காக அந்த ஒப்பந்ததில் இருந்து சில வரிகள்…


இந்த ஒப்பந்ததில் இருக்கும் எந்த சரத்தும் எனது அரசின் இறையாண்மையையோ, எனது அதிகாரத்தையோ கட்டுப்படுத்தாது. மேலும் இந்த ஒப்பந்தம் எனது அரசின் தற்போதைய சட்டதிட்டங்களையும் கட்டுப்படுத்தாது.

Nothing in this Instrument affects the continuance of my sovereignty in and over this state, or, save as provided by or under this Instrument, the exercise of any powers, authority and rights now enjoyed by me as Ruler of this State or the validity of any law at present in force in this State (4).

அன்று காந்தி காசுமீர் பற்றிக் கூறியது இன்றும் பொருந்தக் கூடியது, ஆம் அந்த தேசத்தின்(மக்களின்) இறையாண்மை இன்னும் அவர்களுக்கு வழங்கப்படவே இல்லை. அதற்கு நேர்மாறாக அன்று நேரு எதிர்த்த அதே மன்னனின் பணியை இன்று அவரது வம்சாவளியினர் தொடர்ந்து கொண்டுள்ளார்கள். (விரிவாகப் படிக்க - http://natramizhan.wordpress.com/2010/12/03) . இதிலிருந்து நமக்குத் தெரியவருவது, காசுமீர் எப்பொழுதும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்ததில்லை. அப்பகுதி மக்களின் விருப்பத்திற்கு மாறாகவே இணைக்கப்பட்டுள்ளனர். அரசியலமைப்புச் சட்டம் 370வதை நீக்கும் அதே நேரத்தில் அம்மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து அவர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். உடனடி நடவடிக்கையாகக் காசுமீர், வட-கிழக்குப் பகுதிகளில் இருக்கும் யாரை வேண்டுமானாலும் கொலை செய்ய அனுமதிக்கும் "இராணுவ படை சிறப்பு அதிகாரச் சட்டம்" உள்ளிட்ட எல்லாக் கொடுங்கோன்மை சட்டங்களும் நீக்கப்படவேண்டும் என்பது தான் உண்மையான மக்களாட்சியை விரும்பும் ஒருவனின் கோரிக்கையாக இருக்கும். மக்களுக்கு அதிகாரம், மக்கள் பங்குகொள்ளும் சனநாயகம் போன்ற வார்த்தை ஜாலங்களை அள்ளி வீசும் பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கை உண்மையில் சர்வாதிகாரத்தின் வெளிப்பாடேயன்றி வேறல்ல. இந்த இலட்சணத்தில் வட கிழக்கு மாநிலங்களுக்கு சிறப்புக் கவனம் செலுத்தப்படும் எனச் சொல்வதற்கு, மேலும் அதிகமான கொடுங்கோன்மை சட்டங்களை இயற்றுவோம் என்பது தான் பொருளாகும்.....



பட்டியல், பழங்குடி, இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான சமூக நீதி:

பட்டியல், பழங்குடி, இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் குழந்தைகளின் படிப்பில் தனிக்கவனம் செலுத்தப்படும், தீண்டாமையை ஒழிப்பதற்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று வாக்குறுதிகளை வாரி வழங்கியுள்ளார்கள். யதார்த்ததில் இந்துத்துவத்தைத் தனது கொள்கையாக வகுத்துக்கொண்டுள்ள ஆர்.எஸ்.எஸ்-ன் அரசியல் பிரிவு தான் பா.ஜ.க-வும் மோடியும். மனுநீதி தான் இந்துத்துவத்தின் உயிர் மூச்சு. பிறபடுத்தப்பட்ட மக்களுக்குச் சமூகநீதியின் அடிப்படையில் இடப்பங்கீட்டை வி.பி.சிங் கொண்டுவந்த பொழுது, அந்த அரசை கவிழ்த்ததே பா.ஜ.க தான்... அது மட்டுமின்றி.... மோடியின் பத்தாண்டுகளுக்குமேலான ஆட்சியில் குஜராத்தில் தீண்டாமை ஒழிந்து விடவில்லை, உறுதியாக வலுப்பெற்றே வருகின்றது. தீண்டாமை காரணமாக ஐந்தில் ஒரு தலித் குழந்தைக்குப் போலியோ சொட்டு மருந்து கொடுக்க‌ப்படவில்லை என்கிறது அண்மைய ஆய்வு ஒன்று(5). அரசு நலத்திட்டத்திலேயே இப்படியான தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறதென்றால், அங்குச் சமூகத்தில் நிலவும் தீண்டாமையைத் தனியே விளக்க தேவையில்லை. ஒரு புறம் தீண்டாமையை நியாயப்படுத்தும் மனுநீதியை தனது அடிப்படையாக ஏற்றுக்கொண்டு தீண்டாமை ஒழிப்பு என்பது, ஆட்டுக்குட்டியை ஓநாய் பாதுகாக்கும் என நம்புவதற்கு ஒப்பானது.

சிறுபான்மையினருக்குச் சமவாய்ப்பு:

சிறுபான்மையினருக்குச் சமவாய்ப்பு வழங்கப்போவாதாகப் பா.ஜ.க வாக்குறுதியளித்துள்ளது. நடைமுறையில் இருக்கும் மதநல்லிணக்கத்தைக் கெடுத்து சிறுபான்மையினரின் மேல் வெறுப்புப் பிரச்சாரம் செய்வது, சிறுபான்மையின மக்களின் மேல் திட்டமிட்ட முறையில் வன்முறை நிகழ்த்தி, கருவில் இருக்கும் குழந்தையைக் கூடக் கொல்லும் பா.ஜ.கவினர், இரத யாத்திரை என்ற பெயரில் இரத்த யாத்திரை நடத்தும் பா.ஜ.கவினரின் இவ்வாக்குறுதி, தமிழ் மக்களைப் பாதுகாப்பது தான் என் முதல் வேலை என இராஜபக்சே சொல்வதற்கு ஒப்பானாது. பா.ஜ.கவின் பிரதமர் வேட்பாளரான மோடி ஆளும் மாநிலத்தில் இசுலாமியர்கள் வாழ்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக 2012-ல் நடந்த சட்டசபை தேர்தலில் மோடி தலைமையிலான குஜராத் பாரதிய ஜனதா தர்யப்பூர், சுஹீபுரா நகரங்களில் பிரச்சாரமே மேற்கொள்ளவில்லை. 2002 வன்முறைக்குப் பிறகு சுஹுபுரா பகுதியில் இருந்து இந்துக்கள் வெளியேறிய பிறகு அங்கு மாநில அரசால் வழங்கப்பட்டு வந்த குடிநீர், கழிவுநீர் வடிகால் மற்றும் பேருந்து போன்ற அடிப்படைத் தேவைகள் கூட மறுக்கப்பட்டு வருகின்றன(விரிவாகப் படிக்க - http://save-tamils.blogspot.in/2014/01/2.html), ஒரு வேளை மோடி பிரதமரானால், நாடெங்கும் உள்ள சிறுபான்மையினருக்கு, இதே போலச் சமவாய்ப்பு வழங்கப்படும் என்பதைத் தான் தங்களது தேர்தல் அறிக்கையில் அவர்கள் சொல்கின்றார்களோ என்னமோ....... பா.ஜ.கவின் இந்துத்துவ வெறியும் இந்தத் தேர்தல் அறிக்கையில் வெளியாகியுள்ளது. பொதுச் சிவில் சட்டம் என்ற பெயரில் சிறுபான்மையினரின் உரிமைகளை ஒடுக்கும் திட்டத்தை முன்வைப்பதிலும், அயோத்தியில் இராமர் கோயிலை கட்டுவேன் எனக்கூறுவதன் மூலமும் நாங்கள் காவி தான், மற்ற மதத்தினருக்கும், இந்து மதத்திலேயே உள்ள பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரானவர்கள் தான் என முரசறைந்து கூறுகின்றார்கள்.


மோடி தான் மாற்று, அவர் அப்படிச் செய்வார், இப்படிச் செய்வார் என இதுவரை சொல்லி வந்த புதிய நடுத்தர வர்க்கத்திற்குத் தனது தேர்தல் அறிக்கை மூலம், காங்கிரசு செய்ததைத் தான் நானும் செய்வேன், அதைக் கொஞ்சம் அதிரடியாக, இந்துத்துவ வாசனையோடும் செய்வேன் எனச் சொல்லி அவர்களுக்கு இருட்டுக்கடை அல்வாவை கிண்டி கொடுத்துள்ளது இந்தத் தேர்தல் அறிக்கை...........மோடி, பா.ஜ.க மாற்று தான், முதலாளிகளுக்கும், இந்துத்துவவாதிகளுக்கும்....பொது மக்களுக்களுக்கல்ல....

நற்றமிழன்.ப
சேவ் தமிழ்சு இயக்கம்

தரவுகள்...
1) Conveyor Magazine August 2009 Edition, 16th Page, Also in International Crisis group report on Kashmir dated 21 Nov 2002. Page no 3.

2) http://en.wikipedia.org/wiki/Dominion_of_India\

3) http://www.thehindu.com/news/national/article918002.ece

4) House of Commons Library research paper on Kashmir 30th Mrach 2004 , Page no 47. Also available in below link , http://www.parliment.uk

5) http://www.downtoearth.org.in/content/children-gujarats-backward-communities-left-out-vaccination-drives#.U0VrkYm6Ym8

Friday, April 4, 2014

தேவை குற்றப்பத்திரிக்கை அல்ல; தேர்தல் அறிக்கையே???





2014 நாடாளுமன்றத் தேர்தல் முதல்கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 7ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. பிரச்சாரங்கள் மும்முரப்பட்டு அனைத்து கட்சிகளும் தங்களுடைய தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுப் பிரச்சாரம் செய்து வருகின்றன. ஆனால், மக்கள் நரேந்திர மோடியை தேர்தலுக்கு முன்னரே தேர்ந்தெடுத்துவிட்டார்கள் என்று கூறி வெகுநாட்களுக்கு முன்னரே பிரச்சாரக் களத்தையும், சமூக வலை தளங்களையும் ஆக்கிரமித்த பாரதீய ஜனதா கட்சியால் இன்று வரை தங்களுடைய 2014 தேர்தல் அறிக்கையை வெளியிட முடியவில்லை.

இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் இந்த நேரம் வரை, தேர்தல் அறிக்கை வெளிவரவில்லை. அதற்குப் பதிலாக, ஆளும் ஐக்கிய ஜனநாயக கூட்டணி மீதான குற்றப்பத்திரிக்கை என்கிற பெயரில் ஒன்றை வெளியிட்டுள்ளது பா.ஜ.க தலைமை.

தேர்தல் அறிக்கையும், காங்கிரசு மீதான தாக்குதல் தொடுக்கும் குற்றப்பத்திரிக்கையும் எப்படி ஒன்றாக முடியும்?. முடியவே முடியாது. இவை இரண்டும் முற்றிலும் வேறானவை.

தேர்தல் அறிக்கை என்பது " எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தாலோ, வெற்றி பெற்றாலோ" என்று தொடங்கி, அந்தந்த கட்சி மக்களுக்கு என்ன செய்யப் போகிறது என்பதே ஆகும்.

பாரதீய ஜனதா வெளியிட்டுள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீதான குற்றப்பத்திரிக்கை என்பது காங்கிரசு தலைமையிலான அரசின் மீதான குற்றச்சாட்டுகள் கொண்டது. இந்தக் கூச்சல்களைத்தான் நாம் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கேட்டு வருகிறோமே. பின்னர் ஏன் இப்படி ஒரு அறிக்கையை வெளியிடுகிறது பா.ஜ.க.

பாரதீய ஜனதா கட்சிக்குள் இருக்கும் உட்கட்சிப் பூசல் காரணமாகத்தான், இதுவரை அவர்களால் தேர்தல் அறிக்கையை வெளியிட முடியவில்லை. நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் தொடங்கி ஏதோ ஒரு வழியில் உட்கட்சிப் பூசல் வெளிவந்து கொண்டே இருக்கிறது.


மோடியை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்வதால், பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால், மன்னிக்கவும். மோடி ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் செய்வோம் என்று அவர்கள் சொல்லியாக வேண்டும். ஆனால், இதற்கு ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சௌகான், சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங் ஆகியோர்
ஆதரவளிக்காமல் முரண்டு பிடிக்கின்றனர்.

இவர்கள் இப்படியிருக்க, அத்வானியோ " மூவரில் ஒருவர்தான் மோடி" என்று திரி கிள்ளியுள்ளார். அதாவது, மூன்று முறை முதல்வராகப் பதவி வகித்து வரும் சிவராஜ்சிங் சௌகான், ராமன் சிங் ஆகியோரைப் போலத்தான் நரேந்திர மோடியும் என்பதே இதன் அர்த்தம்.

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஐந்து மாநிலத் தேர்தல்கள் முடிந்தவுடன், பிரதமர் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கலாம் என்று அத்வானி அன்று கூறியதற்கான காரணமும் இதேதான். 2013 டிசம்பரில்தான் சிவராஜ்சிங் சௌகான், ராமன் சிங் ஆகிய இருவரும் மூன்றாவது முறை மாநில முதல்வராகப் பதவியேற்றனர். மோடிக்குப் போட்டியாக இவர்கள் இருவரையும் நிறுத்தி தான் பிரதமர் வேட்பாளராகிவிடலாம் என்கிற அத்வானியின் ஆசையில் மண் விழுந்து நாளாகிவிட்டது. ஆனால், இன்று வரை, மோடிக்கான பெருங்குடைச்சல் கட்சிக்குள்ளிருந்து வந்து கொண்டிருக்கிறது.

இன்னொரு விதமாக இதைப் பார்ப்போமானால், 1990-களில் காங்கிரசு கட்சி தலைமையிலான அரசால் திறந்துவிடப்பட்ட சந்தையை, மென்மேலும் திறந்துவிட்டு உலகமயமாக்கலையும், தனியார்மயத்தையும் நாட்டின் மூலை முடுக்கு எங்கும் கொண்டு சென்றது 1999 முதல் 2004 வரை ஆட்சியில் இருந்த வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க அரசுதான். ஆகையால், இவர்கள் மக்களுக்குத் தேவையான கொள்கை அளவிலும், இதரப் பிரச்சனைகளிலும் காங்கிரசின் நிலைப்பாடுகளில் இருந்து வேறுபடுவதில்லை. குற்றப்பத்திரிக்கை வெளியிடும் இவர்களால் மாற்று கொள்கைகளைக் கொண்ட அறிக்கையை வெளியிட முடியுமா என்பதே மிகப்பெரிய கேள்விக்குறி???

இந்த கையாலாகாதனத்தையும் காவி ஆதரவு ஊடகங்கள், " பா.ஜ.க -வின் குற்றப்பத்திரிக்கைக்கு காங்கிரசு என்ன பதில் சொல்லப் போகிறது? " (TIMES NOW) என்று காவிக் கொடி பிடிக்கின்றன. 7ஆம் தேதி முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறவுள்ள நிலையில்,அடுத்த இரண்டு நாட்கள் தேர்தல் காலத் தடை உத்தரவு இருக்கும். அப்படியிருக்கையில், பா.ஜ.க ஏன் இன்னும் தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை என்று கேள்வி எழுப்ப வேண்டிய ஊடகங்கள் நம்முடைய பார்வையை திசைதிருப்பும் வேலையை செய்து வருகின்றன.

தன்னுடைய நிலையான கொள்கையான இந்துத்துவத்தை முன்வைத்தால் மக்கள் நிராகரித்துவிடுவார்கள் என்று அச்சத்தில்தான் வளர்ச்சி என்கிற பெயரில் மோடியின் மீது சவாரி வருகிறது பாரதீய ஜனதா கட்சி. இவர்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டால், தற்போது இருக்கும் பொருளாதாரக் கொள்கைகளுக்கான மாற்றையும், அது எப்படி மக்களுக்கு உதவும் என்பதையும் முன்வைக்க வேண்டும். முந்திரா துறைமுகம் அமைக்க அதானிக்கு உதவி, எரிவாயு விலை நிர்ணயத்தில் அம்பானிக்கு ஆதரவு என்று இவர்களால் அறிக்கை வெளியிட முடியாது.

இந்துத்துவத்திற்கும், சுரண்டல் முதலாளித்துவத்திற்கும் உகந்த கொள்கைகளை எப்படி மாற்று என்று முன்வைக்கப் போகிறார்கள் என்பது அயோத்தியில் வலுக்கட்டாயமாக குடியேற்றப்பட்ட‌ அந்த ராமனுக்கே வெளிச்சம்.

கதிரவன்
சேவ் தமிழ்ஸ் இயக்கம்

Thursday, April 3, 2014

மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு - செய்தியாளர் சந்திப்பு, திருவாரூர் : 2-4-14

மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு - செய்தியாளர் சந்திப்பு, திருவாரூர் : 2-4-14 - அறிக்கை




தொன்மைத் தமிழின நாகரீகம் வளர்ந்த தொட்டிலாகிய காவிரிப் படுகை இன்று வரை தமிழகத்தின் உணவுக் கோப்பையாக விளங்கி வருகிறது. ஆனால், காவிரிப் படுகையில் பல்வேறு அழிவுத் திட்டங்களை அனுமதித்து, விளைநிலப் பரப்பை கணிசமாகக் குறைத்து, சுற்றுச்சூழலைப் பாதித்து, வேளாண்மையை அரசே நலிவுறச் செய்திருக்கிறது. முன்னமே காவிரி நீர் மறுக்கப்பட்டமையாலும், ஓ.என்.ஜி.சி பெட்ரோலியம் & எரிவாயு எடுத்ததன் விளைவாக நிலத்தடி நீர் வறண்டு போனமையாலும் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் குறைந்து, வேதிப்பொருள் கலந்து, குடிக்கத் தகுதியற்றதாக மாறிவிட்டது.



இந்நிலையில் காவிரிப் படுகையில் மீத்தேன் எடுக்க மத்திய அரசு ‘கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன்’ என்ற நிறுவனத்திற்கு 2010-ல் அனுமதியளித்தது. 2011-இல் அன்றைய தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தமிட்டு, அப்பெருமுதலாளிய நிறுவனத்திற்கு நடைமுறப்படுத்த முன்வந்தது. இன்றைய தமிழக அரசு மக்கள் எதிர்ப்பைக் கருத்தில் கொண்டு, இத்திட்டத்திற்கு தற்காலிக தடை விதித்தாலும் பல இடங்களில் ஓ.என்.ஜி.சி-இன் பெயரில் வேலைகள் நடைபெற்று வருகின்றன. நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் இச்சூழலில், மக்களின் எதிர்ப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு “விவசாயம் பாதிக்கும் வகையில் தொழில்துறையை இந்த அரசு ஊக்குவிக்காது”என்று அறிவித்தது. ஆனால், தேர்தல் அறிக்கையில் இது குறித்து அதிமுக தலைமை ஏதும் குறிப்பிடவில்லை.




2011-இல் புரிந்துணர்வு ஒப்பந்தமிட்ட திமுக ‘இத்திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறுவது குறித்து பரிசீலிக்கும்’ என்று தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. இத்திட்டம் முற்றிலுமாக நிராகரிக்கப்படும் என்பதற்கு எந்தக் கட்சியும் உத்தரவாதம் வழங்கவில்லை. மத்தியில் ஆட்சியமைக்கும் வாய்ப்புள்ள காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க இத்திட்டம் பற்றி வாயே திறக்கவில்லை. ஆகவே, தேர்தலுக்குப் பிறகு இத்திட்டத்தின் நிலை குறித்து காவிரிப் படுகை மக்கள் கவலையடைந்துள்ளனர். காவிரிப்படுகையில் உள்ள நாகை, தஞ்சை, மயிலாடுதுறைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள், இத்திட்டத்தை ஏற்கமாடோம் என்றும், தடுத்து நிறுத்த முழுமையாக முயற்சிப்போம் என்றும், அவ்வாறு தடுக்க இயலா நிலையில் பதவி விலகி, மக்களோடு நின்று இத்திட்டத்தை முறியடிப்போம் என்றும் மக்களுக்கு உறுதியளிக்க வேண்டும் என்று கோரி, எதிர்வரும் 07-04-2014 அன்று திருவாரூர் நகராட்சி அலுவலகம் முன்பு இறுதிவரை உண்ணாநிலைப் போராட்டத்தை மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு முன்னெடுக்கிறது. மக்களின் சார்பாக கூட்டமைப்பு அளிக்கும் உறுதிமொழிப் பத்திரத்தில் கையொப்பமிட்டு ஒத்துழைக்க வேட்பாளர்களை மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு கோருகிறது.



இடம்: திருவாரூர்
நாள் : 2-4-14


தலைமை ஒருங்கிணைப்பாளர்
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு




Tuesday, April 1, 2014

இரண்டாயிரம் பேரை கொலை செய்தால் பிரதமர் வேட்பாளர்....



மோடி- வெளிச்சங்களின் நிழலில் நூல் வெளியீட்டு விழா - 30/03/2014 ஞாயிற்றுகிழமை மாலை 5 மணிக்கு வெங்கடேஸ்வரா திருமண மண்டபம், பனகல் பூங்கா, தியாகராயர் நகரில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 150 பேர் கலந்து கொண்டனர்



தோழர்.செந்தில் அவர்கள் 'மோடி - வெளிச்சங்களின் நிழலில்' நூலின் தேவை குறித்தும், சேவ் தமிழ்சு இயக்கம் ஏன் இந்நூலை வெளியிடுகின்றது என்பது குறித்து பேசினார். மோடி மட்டுமே ஆக்கிரமித்திருந்த ஊடகத்தை புது தில்லி சட்டமன்றத் தேர்தலில் இரண்டாம் இடம் பெற்ற ஆம் ஆத்மி உடைத்து, அவர்களும் ஆக்கிரமிக்கத் தொடங்கினார்கள். பா.ஜ.க தமிழகத்தில் ஒரு கூட்டணியை உருவாக்கியது தான் இங்கே இருக்கும் பிரச்சனை. ’வளர்ச்சி’யின் பெயரால் மோடியை ஆதரிக்கும் நடுத்தர வர்க்கம், ஈழத்தின் பெயரால் காங்கிரசுக்கு மாற்று என்று கருதிக் கொண்டு பா.ஜ.க.வை ஆதரிக்கும் மற்றொரு சாரார், என இரு சாரார் தமிழகத்தில் உள்ளனர். தேர்தலைக் கடந்து நீண்ட காலக் கண்ணோட்டத்தில் செயல்பட்டு வரும் சங் பரிவார் அமைப்புகள், தேர்தல் வெற்றி, தோல்விகளுக்கு அப்பால் சமூகத்தின் ஆழ்மட்டத்தில் வேரூன்றி கிளைப் பரப்பக் கூடியவை. இதற்கு மாற்றாக , நாம் தொடர்ந்து புதிய நடுத்தர வர்க்கத்தினரிடையே இந்துத்துவ பாசிசத்தை எதிர்த்தும், போலி வளர்ச்சி கொள்கைகளை எதிர்த்தும் பரப்புரை தொடர வேண்டியுள்ளது என்றார்.


சேவ் தமிழ்சு இயக்கத்தின் தோழர்.செய்யது பேசும் பொழுது இந்திய ஆளும்வர்க்கத்தைப் பொருத்தவரை அவர்கள் விரும்பும் ’வளர்ச்சியை’ வேகமாக உருவாக்க காங்கிரசுக்கு மாற்று பா.ஜ.க. அதிலும் குறிப்பாக, எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் கொள்கை மாற்றங்களை அமல்படுத்தும் பாசிஸ்ட் ஒருவர் தான் இன்று இந்திய ஆளும்வர்க்கத்திற்கு தேவை. அந்த தேவையை நிறைவு செய்யபவர்தான் மோடி. கடந்த பத்தாண்டுகளில் காங்கிரசு தலைமையிலான அரசு செய்ததைவிட, அதிக சேதாரத்தையும், பயங்கரங்களையும் மிகக் குறுகிய காலத்தில் மோடி தலைமையிலான அரசு நிகழ்த்தும் என்பது அபாயகரமான உண்மை.. வளர்ச்சி என்ற பெயரில் மோடி முன்னிறுத்தப்படுவதில் இருக்கும் பிரச்சனைகள் பல. இந்துத்துவமும், முதலாளித்துவத்துவமும் மனித சமூகத்தை தனிமனிதர்களாக மாற்றும் பணியை செவ்வனே செய்கின்றன, சில மாதங்களுக்கு முன்னர் டைம் மாத இதழில் மன்மோகன் அரசை 'Under Achiever" என சொன்னார்கள், இதன் பொருள் அரசு மக்களுக்காக உழைக்கவில்லை என்றல்ல, முதலாளித்துவத்தை நடைமுறைபடுத்துவதில் அவர் மிகவும் மெதுவாக செயல்படுகின்றார். இதை மாற்றி முதலாளித்துவத்தை வேகமாக செயல்படுத்த மோடி முன்னிறுத்தப்படுகின்றார். மோடியின் குஜராத் மிளிர்கின்றது. என்றாலும், அங்கு மோடி அரசை எதிர்த்து பல போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன, அங்கே வளர்ச்சி, வளர்ச்சி என்று கூவினாலும், அந்த வளர்ச்சி என்பது எல்லோருக்குமானது என்பது பொய், அது ஒரு சிலருக்கானது என்பது நடைபெற்று வரும் போராட்டங்கள் மூலம் நாம் புரிந்து கொள்ளவேண்டும். வல்லபாய் படேல், காந்தி இருவருமே குஜராத்தில் பிறந்தாலும், வல்லபாய் பட்டென் முன்னிறுத்தப்படுவதற்கான காரணம், மக்களின் சனநாயக விருப்பங்களை மீறி இராணுவ பலத்தை கொண்டு செயல்திட்டத்தை முன்னெடுத்தவர் படேல். இந்த ஒத்திசைவே மோடி படேலை முன்னிறுத்துவதற்கான காரணமாகும் என்றார்.


இன்று நம்முன் உள்ள பணி - மோடி வெற்றி பெற்றாலும் சரி, வெற்றி பெறாவிட்டாலும் சரி நாம் தமிழகத்தில் பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸை எதிர்த்து தொடர்ந்து போராட வேண்டும், வாக்குவங்கி அடிப்படையில் தமிழகத்தில் குறைவாக தென்படும் பா.ஜ.க, பரப்புரை அடிப்படையில் வலுவாக இருக்கின்றது, தமிழகத்தில் உள்ளவர்கள் சுற்றுசூழலாளர்களானாலும் சரி, மனித உரிமை செயற்பாட்டாளர்களானாலும் சரி, சமூக செயற்பாட்டாளார்களானாலும் சரி அவர்கள் தொடர்ந்து மோடியை எதிர்த்து பணிபுரிந்தேயாக வேண்டும் என்றார் செய்யது.


தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் தலைமை கழக செயற்குழு உறுப்பினர் தோழர். தைமிய்யா பேசும் பொழுது - ஈழத்தமிழர் பிரச்சனை, அணு உலை எதிர்ப்பு போராட்டம், பெண்கள் மீதான பாலியல் வல்லுணர்வுகளுக்கு எதிராகவும் தொடர்ந்து பணியாற்றிவரும் சேவ் தமிழ்சு இயக்கத் தோழர்களை பாராட்டுகிறேன், இந்நூலை எழுதிய தோழர்.கதிரவனையும் பாராட்டுகின்றேன். இந்தியாவில் முதன் முதலில் பயங்கரவாத செயலைச் செய்தவர்கள் மோடியின் முன்னோர்கள், காந்தியை கொன்று விட்டு அவரது சிலைக்கு சிறிதளவும் வெட்கமின்றி மாலையணிப்பவர்கள் தான் இவர்கள், இந்த நாட்டில் ஒன்றுபட்டிருக்கும் இந்து-கிறித்துவ-இசுலாம் மக்களின் ஒற்றுமையை குலைப்பதை தங்கள் நோக்கமாகக் கொண்டவர்கள் தான் இந்த பா.ஜ.க-வினர். இது பார்ப்பனர்களை , அவர்களின் நலன்களை அடிப்படையாக கொண்டு செயல்படும் அமைப்பு. வெறும் 2 விழுக்காடு உள்ள பார்ப்பனர்கள் இந்து என்ற சொல்லாடலின் மூலம் பெரும்பான்மையாகி, தங்களது நலன்களை பாதுகாக்க செயல்பட்டுவருகின்றனர். பா.ஜ.க இசுலாமியர்கள், கிறுத்துவர்களுக்கு மட்டும் எதிரானவர்கள் அல்ல, அவர்கள் பார்ப்பனரல்லாத எல்லா மக்களுக்கும் எதிரானவர்களே.

கார்ப்பரேட்டுகள் மோடி, மோடி என்று ஜெபிக்கின்றனர், இதற்காக காங்கிரசு முதலாளிகளுக்கு எதிரானவர்கள் என்பதல்ல, அவர்களுக்கு இன்னும் அதிகமான தேவை உள்ளது, மோடியின் ஆட்சி அதானிகளுக்கும், அம்பானிகளுக்கும், டாட்டாக்களுக்குமானது .... இந்த நூலானது குஜராத்தில் உள்ள வளர்ச்சியின் உண்மை நிலையை கூறுகின்றது. இந்நூல் நம்மெல்லோரிடமும் இருக்கவேண்டும், இதன் மூலம் மோடியை, ஆர்.எஸ்.எஸை, பா.ஜ.கவை தோலுரித்து காட்ட முடியும், அதே போல இந்நூலில் மோடியை பற்றி கூறும் ஊடகவியலாளர்களின் வேலை பறிக்கப்படுவதும் குறிப்பிடப்பட்டுள்ளது, உதாரணத்திற்கு சன் டிவியின் வீரபாண்டியன், இந்துவின் சித்தார்த் வரதராஜனை குறிப்பிடலாம். இந்திய அரசின் அமைப்பு முழுவதும் ஆர்.எஸ்.எஸாக காவிமயமாகி வருகின்றது,

டெல்லி ஜிம்மா மசூதி குண்டு வெடிப்பு நடந்த உடன் உளவுத்துறை இதற்கு காரணம் டெக்கான் முஜாகிதீன், இந்தியன் முஜாகிதீன் என சொன்னார்கள், பின்னர் விசாரணையில் இந்த குண்டுவெடிப்புகளை நடத்தியது அபினவ் பாரத் என்ற ஆர்.எஸ்.எஸின் கிளை அமைப்பும், ஆர்.எஸ்.எஸின் வனவாசிகள் பிரிவு தலைவருமான அசிமனாந்தாவும் தான். இவர் கேரவன் பத்திரிகைக்கு அளித்த அண்மைய பேட்டியில் ஆர்.எஸ்.எஸின் தலைவர் மோகன் பகவத் தான் இது போன்ற குண்டுவெடிப்புகளை நடத்தச்சொன்னார் என்றார். அதே போல பாகிசுதான் செல்லக்கூடிய சம்ஜவதா இரயில் குண்டுவெடிப்பு ஏற்பட்டவுடன் இதை பாகிசுதானின் I.S.I தான் செய்தது என்றார்கள், பின்னர் இதை செய்தது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு என்பதும், புரோகித் இந்திய இராணுவத்தில் இருந்து தான் இதற்கான வெடிமருத்தை எடுத்துச்சென்றுள்ளார் எனக் கண்டுபிடித்தார் திவிரவாத தடுப்புதுறை தலைவர்.ஹேமந்த் கர்கரே. காந்தியை கொல்ல வேண்டும், அந்த பழியை முசுலிம் மீது போட வேண்டும் என திட்டம் தீட்டியவர்கள் தான் இவர்கள், "Who Killed Karkare" என்ற புத்தகத்தை முன்னால் ஐ.ஜி. முசுரிஃப் எழுதியுள்ளார், இந்த 26/11ல் நடந்த நிகழ்வு முழுவதும் I.B-யினால் திட்டமிட்டு நடத்தப்பட்டது, இதில் இந்துத்துவத்தின் தீவிரவாதத்தை கண்டுபிடித்த கர்கரே கொல்லப்படுவது தான் அவர்களது மைய இலக்கு என்று எழுதியுள்ளார். தென்காசியில் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் குண்டு வைத்தது மட்டுமின்றி, அந்த இடத்தில் முசுலிம் தொப்பியை போட்டார்கள், பின்னர் விசாரித்து பார்த்தால் அதுவும் ஆர். எஸ்.எஸ்ன் வேலை தான் இது, இதன் மூலம் இந்து முசிலிம் கலவரம் உருவாக வேண்டும் என்பதற்காக இதை செய்தோம் என்றார்கள். இவ்வளவு நடந்த பின்னும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இன்னும் இங்கு தடை செய்யப்படவில்லை.


அதுமட்டுமின்றி I.B. " Stock Terrorist" என்ற சில திட்டங்களையும் நடத்தி வருகின்றார்கள். அதாவது நேபாளத்தையொட்டிய இந்திய பகுதியில் அனுமதி இல்லாமல் வணிகம் செய்து வரும் நபர்களை, குறிப்பாக முசுலிம்களை கைது செய்து வைத்திருந்து, ஒரு குண்டுவெடிப்பு, அல்லது தாக்குதல் போன்றவை நடந்த பின்னர், ஏற்கனவே பிடித்து வைத்துளவர்கள் அந்த தாக்குதலில் பங்குகொண்டது போலான புகைப்படம் அல்லது காணொளியை வெளியிடுவது, இப்படிதான் அஜ்மல் கசாப்பின் காணொலியும் ஊடகங்களுக்கு I.Bயால் வழங்கப்பட்டது.

ஈழத்தமிழருக்காக பேசிய வைகோ, சாதி வெறிபிடித்து அலையும் பா.ம.க போன்றவை இன்று தாமரை மலர துடித்து வருகின்றார்கள், வாஜ்பாய் ஆட்சியில் என்ன நடந்தது, அவர் இலங்கைக்கு ஆதரவாக போர்க்கப்பலை அனுப்பினார். ஈழத்தை நாங்கள் ஆதரிக்க முடியாது, என்கிறார் வெங்கய்யா நாயுடு, மக்கள் எங்கு துன்புறுத்தப்பட்டாலும் நாம் அதை எதிர்த்து போராட வேண்டும், ஒரு பக்கம் ஆதரித்துவிட்டு, ஒரு பக்கம் எதிர்ப்பது என்பது கபட நாடகம், இதை தான் வைகோ செய்கின்றார். மோடிக்கும், இராஜபக்சேவுக்கும் எந்த வேறுபாடும் இல்லை, அது இந்த நூலில் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. எச்.ராஜா போன்றவர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார், என்பதும், கருப்பு துண்டை வைத்து கொண்டு மோடியை ஆதரிக்கின்றார் என்றால் எங்கோ கோளாறு இருக்கின்றது,. நாம் ஒருங்கிணைத்து இதையெல்லாம் எதிர்த்து போராட வேண்டும்.



திராவிடர் விடுதலை கழகத்தைச் சேர்ந்த தோழர்.பால தனசேகரன் பேசும் பொழுது, "மோடி ஏன் பிரதமராகக்கூடாது" என தொடர் கூட்டங்களை நடத்திவருகின்றோம், அதற்கு உடனே காவல்துறை அனுமதி கொடுத்தது எங்களை ஆச்சரியப்படுத்தியது, எப்போதும் எங்களுக்கு இரு பிரச்சனைகள் இருக்கும் ஒன்று காவல்துறை, இரண்டாவது மது அருந்திவிட்டு யாராவது வந்து வம்பிழுப்பார்கள், ஆனால் இந்த கூட்டத்திற்கு வந்த காவல்துறை எங்களிடம் வம்பிழுக்க வந்த ஒரு குடிகாரனின் காவல்துறையே பேசியதை வைத்து, சரி ஏதோ ஒரு பின்னணி இருக்கின்றது என புரிந்து கொண்டோம். இந்நூல் சிறிய நூலாக இருந்தாலும், மோடி குறித்த எல்லா கேள்விகளுக்கும் பதிலளிக்கும் வகையில் இருக்கின்றது. 1925ல் தான் சுயமரியாதை இயக்கம் தொடங்கப்படுகின்றது அதே போல ஆர்.எஸ்.எஸூம் அப்போது தான் துவங்குகின்றது. இன்று அவர்கள் எங்குள்ளார்கள், நாம் எங்குள்ளோம் என்பதை வைத்து நாம் நம்மை ஒரு சுயவிமர்சனம் செய்து பார்க்கவேண்டும். பா.ஜ.கவை வைத்து ஒரு கூட்டணி அமைப்பது முட்டாள்தனமானது, அதில் பா.ம.க, வைகோ போன்றோர் உள்ளனர். ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே சட்டம் என்று சொல்லும் பா.ஜ.க தீண்டாமை நடைபெறும் இடங்களின் இதை பேசுவார்களா? அதே போல அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற இடத்தில் அவர்கள் இந்துக்களே திரண்டு வா என இரட்டை நிலைப்பாட்டை எடுக்கின்றார்கள். இசுலாமியர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கக்கூடாது என சொல்கின்றார்கள், நேரடியாக பார்ப்பனர்களுக்கு வழங்கு என்று சொல்லமுடியாதவர்கள் இவர்கள். நான் குஜராத்திற்கு பலமுறை சென்று வந்துள்ளேன். வளர்ச்சியெல்லாம் அங்கு இல்லை, இந்துத்துவம் தான் உள்ளது, பொருளாதார கொள்கையில் காங்கிரசிற்கும், பா.ஜ.கவிற்கும் எந்த வேறுபாடும் இல்லை. புதிய ஓய்வூதிய திட்டம், சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு போன்றவை உதாரணங்களாக உள்ளன, இவர்களிடம் எந்த மாற்றுத்திட்டமும் இல்லை, சிறுபான்மையினருக்கு எதிரான கலவரங்களை உருவாக்கவதையே தங்களது Agenda-வாக இருக்கின்றது, இவர்களை எதிர்ப்பது நமது அடிப்படை கடமையாகும். மதச்சார்பற்ற கட்சிகள், மதச்சார்பு கட்சிகளை கேள்வி கேட்காமல் திமுக வெறுமனே ஜெயலலிதாவை எதிர்ப்பது தான் நடக்கின்றது. இங்கு நாம் தான் இப்பணியை செய்ய வேண்டும், இந்நூலை பரப்பும் பணிகளை நாங்கள் மேற்கொள்வோம் என்றார் தோழர்.


நூல் வெளியீடு தோழர்.இராமகிருஷ்ணன் நூலை வெளியிட தோழர்.தைம்மியா பெற்றுக்கொள்ள, மற்றொரு பிரதியை தோழர்.மீ.த.பாண்டியன் வெளியிட தோழர்.அமீர் அம்சா பெற்றுக்கொண்டார்.



தோழர்.அமீர் அம்சா, மாநில செயலளார், S.D.P.I - இக்கட்சி மதச்சார்பற்ற, ஒடுக்கப்படுபவனின் கட்சியாகும், காந்தியை கொன்றவர்களுக்கு ஆதரவாக காந்திய மக்கள் கட்சி என்ற பெயரை வைத்துள்ள தமிழருவி மணியின் தரகு வேலை செய்து வருகின்றார் !!! நம்முடைய இரத்தச் சொந்தங்களான ஈழத்தமிழர்களை கொன்ற இராஜபக்சேவைப் போன்றவன் தான் மோடியும். தேமுதிகவின் சுதீஷ் சில நாட்களுக்கு முன் சேலத்தில் பிரச்சாரம் செய்த பொழுது எங்களை அழிக்கும் பா.ஜ.க-வின் கூட்டணியில் உள்ள உங்களுக்கு நாங்கள் வாக்களிக்க முடியாது என சொல்லி அவர்களை திருப்பி அனுப்பினார்கள் என்றார்.


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர்- மா.ச.சிந்தனைச் செல்வன் பேசும் பொழுது, இந்நூலில் நிறைவான தர்க்க, நியாயங்களும், புள்ளி விவரங்களும் உள்ளன. இந்நூலில் எனைக் கவர்ந்த பகுதி இராஜபக்சேவோடு மோடியை ஒப்பிட்டு எழுதியிருந்த பகுதி, மோடியை பற்றி புரிந்து கொள்ள இராஜபக்சே உடனான அந்த உரையாடல் உதவியாக இருக்கின்றது. வைகோ போன்றவர்கள் இந்துத்துவத்தை சுமந்து செல்லும் பல்லக்கு தூக்கிகளாகி விட்டனர். மனிதன் சமூகமாக வாழ்வதை பிரித்து உதிரியாக வாழ்ச்செய்யும் வேலையை தனியார்மயமும், இந்துத்துவமும் செய்துவருகின்றன. நெய்வேலியில் அண்மையில் நடந்த ஒரு கொலை மிகவும் அற்பமான ஒரு காரணத்திற்காக நடந்துள்ளது, இங்கு என்னை அதிகம் பாதித்தது கொலை நடந்த பிறகு எந்த ஒரு பெரிய போராட்டத்தையும், யாரும் முன்னெடுக்காததே. மத்திய பாதுகாப்பு படை முதலில் நெய்வேலிக்கு வந்த பொழுது மத்திய தர வர்க்கத்தினர் வரவேற்றனர். இதனால் நெய்வேலியின் வளங்களும், தொழிலாளர்களும் பாதுகாக்கப்படுவார்கள் என்றார்கள், அன்றே நாங்கள் இதை எதிர்த்தோம். இன்று ஒரு தொலைபேசியை பயன்படுத்தும் உரிமைக்காக இங்கே ஒருவர் கொல்லப்படுகின்றார். தேர்தல் அரசியல் வாக்கு வங்கி அடிப்படையில் வேண்டுமானால் பா.ஜ.க -வின் வீச்சு குறைவாக இருக்கலாம். ஆனால், மக்கள் பரப்புரையிலும், இந்துத்துவத்தை கொண்டு சேர்ப்பதிலும் இந்த அமைப்புகளின் வேகம் பலமடங்காக பெருகியுள்ளது. இந்த பலம்தான் எச்.ராஜாவும், சி.பி.ராதாகிருஷ்ணனும் பெரியாரை இகழ்ந்து பேசியதன் பின்னணியில் இருப்பது. தந்தை பெரியார் தன்னுடைய வாழ்நாள் முழுக்க போராடி நமக்குக் கற்று கொடுத்த சுயமரியாதை நிலைக்க வேண்டுமெனில், இது பெரியார் மண் என்ற இறுமாப்பில் இருந்து வெளிவர வேண்டிய தருணம் வந்துவிட்டது. நம்மை சூழ்ந்துள்ள இந்துத்துவ அபாயத்தையும், மோடி முகமூடி அணிந்து வரும் பாசிசத்தையும் எதிர்த்து வருகின்ற தேர்தல் கடந்தும் போராட வேண்டிய தேவை நம்முன் உள்ளது. என்ற பின்னட்டையில் வரும் கருத்தை அவர் மீண்டும்வலியுறுத்தினார்.



கடந்த ஆண்டு தமிழகத்தின் எல்லா கிராமங்களிலும் விநாயகர் சதுர்த்தி நடந்துள்ளது, இதற்காக நிதி திரட்டும் பணியை 9ஆம், 10 ஆம் வகுப்பு பையன்கள் செய்கின்றனர். இதை நாம் தவிர்த்துவிட்டு பார்க்கமுடியாது. எப்படி மோடி தூய்மையானவராக காட்டப்படுகின்றாரோ, அதே போல இங்கே இராமதாசு உள்ளார். எப்படி மோடிக்கும், இராஜபக்சேவும் ஒத்திசைவானவர்களாக உள்ளார்களோ, அதே போல மோடியும், இராமதாசும் இணைந்துள்ளார்கள். சத்ரியன் என்ற சொல்லாடல் இங்கே வலுவாகி வருகின்றது, இதை நாம் கண்டிப்பாக எதிர்க்க வேண்டும். ஆர்.எஸ்.எஸீற்கும் காந்திக்கும் தத்துவார்த்த பகையில்லை, அது வெறும் பங்காளி சண்டை, இவ்வளவு தான் பிரச்சனை, இந்துத்துவத்தை எதிர்ப்பவரல்ல காந்தி, காந்தியை பின்பற்றுபவர்கள் கடைசியாக சென்று சேர வேண்டிய இடம் தான் ஆர்.எஸ்.எஸ். தமிழருவி ஆர்.எஸ்.எஸை எதிர்த்தால் தான் ஆச்சரியப்பட வேண்டும். நமக்கான தத்துவார்த்த பலத்தை தோழர்.பெரியார் வழங்கியுள்ளார். பெரியார் மீதான விமர்சனத்தை நாங்கள் முற்றுமுழுதாக புறக்கணிக்கின்றோம். பெரியாரின் கொள்கைகளை நாம் வளர்த்தெடுக்கவில்லை, பொது தொகுதியில் நாங்கள் நின்று பெரிய வாக்குவித்தியாசத்தில் தோற்றோம், அது யூசுப்பின் தோல்வியா, அல்லது திராவிட கட்சிகளின் தோல்வியா? நாம், நமது தத்துவத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும். நாம் இந்துத்துவத்தை முழுமையாக விரட்டியடிக்கவில்லை. பார்ப்பனர்களை தான் விரட்டியடித்திருகின்றோம். ஒவ்வொரு ஊரிலும், பத்து கோவில்கள் உள்ளன. 1881ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தது முதன்முதலாக, இதில் எல்லோரும் கவுண்டர், வன்னியர் எனக்கூறும் பொழுது, எங்களை தமிழர் என்று பதிவு செய் என்ற குரல் அயோத்திய தாசரிடம் இருந்து எழுந்தது. இந்துத்துவ கோட்டை வெறும் பொய்களால் மட்டும் இல்லை, அது கலாச்சார பண்பாடாக உள்ளது. நாம் செய்திருக்கின்ற பிழைகளை ஆய்வுக்குள்ளாக்க வேண்டும். இங்கே இந்துத்துவம் சாதியமாக உள்ளது, இந்தியா முழுமைக்குமான ஒற்றை பண்பாடாக சாதியம் தான் உள்ளது. நாம் முன்வைப்பது தமிழ் தேசியமானதாக இருந்தாலும் சரி, திராவிட தேசியமானதாக இருந்தாலும் சரி, இந்திய எதிர்ப்பாக இருந்தாலும் சரி இவையெல்லாவற்றிலும் சாதிய எதிர்ப்பு அடிப்படையாக இருக்க வேண்டும். இங்கு விகிதாச்சார தேர்தல் முறை வந்தால் தவிர்க்க முடியாத சமரசத்தில் நாம் ஈடுபட வேண்டியதில்லை. இதை பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும் என்றார்.


தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாலர். தோழர்.கோவை இராமகிருஷ்ணன், பேசும் பொழுது இங்கே மோடி அலையெல்லாம் இல்லை, மோடி தான் அலைகின்றார் ஒவ்வொரு கட்சித் தலைவர் வீடாக.... ஒரு மாதமாக இந்த கூட்டணிக்காக அலைந்தார்கள். தான் காலை ஊன்றுவதற்காக எவ்வளவு அவமானத்தையும் இவர்கள் தாங்குவார்கள், இதே பத்தாண்டுகளுக்கு பிறகு இந்த கூட்டணியில் உள்ள தலைவர்கள் பா.ஜ.கவிடம் சென்று கூட்டணிக்காக வரிசையில் நிற்பார்கள். பெரியாரிய இயக்கங்களாகிய நாம் நம்மை மீள்பரிசீலனை செய்ய வேண்டும். அவர்கள் எதையுமே திட்டமிட்டு செய்கின்றார்கள். மோடியை இங்கே திட்டமிட்டு பரப்புகின்றான். எங்களிடமும்ம் காந்தி மாதிரி ஒரு ஆள் இருக்கார்னு வாஜ்பாயை முன்னிறுத்தினார்கள். பின்னர் ஆயிரம் பேரை கொன்ன அத்வானி வந்த உடன் வாஜ்பாயை கைவிட்டார்கள், அடுத்து இரண்டாயிரம் பேரை கொன்னவன் என்பது தான் மோடியின் தேர்வுக்கான அடிப்படை. எத்தனை கொலை என்பது தான் இங்கு அவர்களுக்குஅடையாளம்.

மக்களிடம் செல்லும் பொழுது இரண்டாயிரம் பேரை கொன்றவன்னு சொல்லமுடியாது, அதனால் தான் முதலில் மோடியை, குஜராத்தை பரப்பினான், மிளர்கிறது என்றான், இங்கே மின்தடை ஏற்பட்ட போது அவன் குஜராத்தில் மின்மிகை மாநிலம் என்றான், இது எளிதாக மக்களை சென்றடைந்தது. ஆனால் உண்மை நிலை வேறானது, குஜராத்தில் 11 இலட்சம் மக்களை இன்னும் மின்சாரம் சென்றடைவதில்லை, அதே போல மின்கட்டணம் பலமடங்கு அதிகம். அவர்கள் திட்டமிட்டு பரப்புகின்றார்கள். பத்ரிநாத்தில் மக்கள் இறந்து கொண்டிருந்த பொழுது , போனவர்கள் என்னானர்கள் என்று எல்லோரும் பதறிக்கொண்டிருந்த பொழுது மோடி சென்று 15,000 குஜராத்தியர்களை காப்பாற்றினார்கள் என செய்தி வந்தது, இதை கேட்ட மக்கள் மோடியின் சாகசத்தை நம்பத்தொடங்கினார்கள். அதே போல மோடி இந்தியாவை நேசிக்கின்றார் எனக்காட்ட படேலை கொண்டு வந்தன், இரும்பு மனிதருக்கு, இரும்பில் சிலை, இதற்காக எல்லா கிராமங்களிலும் இரும்பு வாங்குகின்றேன் என்ற போர்வையில் பா.ஜ.க-விற்கு பிரச்சாரம் செய்கின்றான்.

மாயாவதி 400 கோடியில் அம்பேத்கருக்கும், யானை சின்னத்திற்கும் சிலை வைத்த பொழுது கேள்வியெழுப்பிய ஊடகங்கள் 2300 கோடியில் அமைய இருக்கும் படேல் சிலையை எந்த கேள்வியும் எழுப்பாமல் அப்படியே சொல்லின. இந்த விளம்பரத்திற்கு மட்டும் 500 கோடி செலவாகியுள்ளது. அவர்களது கணக்கு எப்பவும் தெளிவாக உள்ளது. இப்படி தான் அயோத்தியில் இராமர் கோயில் கட்டுகின்றோம் என மக்களிடம் இருந்து செங்கல்லை வாங்கினான், அதை வைத்து எதையும் கட்டவில்லை, அந்த செங்கல்லின்மூலம் அவன் மக்கள் தலையில் இந்துத்துவத்தை ஏற்றுகின்றான் , அதே போல மோடித்துவத்தை ஏற்றுகின்றான் இரும்பின் மூலம். ஒப்பீட்டின் படி பார்த்தாலும் தமிழ்நாடு குஜராத்தை விட பல மடங்கு முன்னேறியே உள்ளது. காந்தி எதற்காக தென்னாப்பிரிக்கா சென்றார், மார்வாடிக்காக வழக்கு நடத்த சென்றார், சென்ற இடத்தில் பொது பயணச்சீட்டு எடுத்து விட்டு ரிசர்வ்டு வகுப்பில் பயணம் செய்வதால் வெளியேற்றப்படுகின்றார், ஆனால் அதை திறமையாக நான் கறுப்பனாக இருந்ததால் தான் வெளியேற்றப்பட்டேன் என கதைவிட்டு அதன் மூலம் இங்கே ஒரு கதாநாயகனாக மாறிவிட்டார், பி.ஜே.பி முசுலிம்களுக்கு மட்டும் எதிரியல்ல, பார்ப்பனரல்லாத எல்லோருக்கும் எதிரி தான். குஜராத் மிளர்கிறது என்றால் ஏன் பீகார், உத்திரபரதேசம், ஒரிசா போன்ற மாவட்டங்களிலிருந்து குஜராத்திற்கு செல்லாமல் அங்குள்ள மக்கள் ஏன் தமிழ்நாட்டிற்கு வருகின்றான், மொழியே தெரியாமல் அவன் இங்கு வருவதற்கு பதிலாக ஹிந்தி தெரிந்த குஜராத்திற்கு செல்வதில்லை ? என்றார் தோழர்.

அடுத்து மாணவர் இயக்கத்தோழர். முகமது இரஃபீக் மோடி எதிர்ப்பு கவிதை ஒன்றை வாசித்தார்.


தோழர்.மி.த.பாண்டியன் - கம்யூனிசுட்டு கட்சி - மக்கள் விடுதலை பேசும் பொழுது ஜெய் காளி, ஓம் காளியின் மாறுபட்ட வடிவம் தான் ஹர...ஹர.... நமோ... நமோ எல்லாம். பாசிச எதிர்ப்பு என்பதும், இந்துத்துவ எதிர்ப்பும் தேர்தல் கால Agenda-வாக இருக்கின்றது, இதை இடது சாரி கட்சிகளும் செய்கின்றன. தொடந்த பாசிச , இந்துத்துவ எதிர்ப்பு எல்லா கட்சிகளின் நிகழ்ச்சி நிரலிலும் , எல்லா காலங்களிலும் இருக்க வேண்டும். தம்முடைய இயக்கங்களில் பா.ஜ.க எதிர்ப்பை வைத்திருந்த திராவிடம், கட்சியாக மாறிய பொழுது அது எங்கே போனது என்பதை நாம் யோசிக்க வேண்டும், 2002ல் குஜராத் இனப்படுகொலை நடந்த பொழுது வாஜ்பாயுடன் இருந்த தமிழக கட்சிகளையும் நாம் நினைவு கூறவேண்டும். பெரியாரின் கொள்கைகளை வரித்து கொண்டவர்கள் இன்று அவரது கொள்கைகளை பிளாட் போட்டு விற்றுவிட்டனர்.

அரசியல் களத்தில் கருத்தியல் ஊழல் ஏற்பட்டுள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 1925ல் அம்பேத்கரின் பின்னால் ஒடுக்கப்பட்ட மக்கள் அணிதிரள்கின்றார்கள், அது சித்பவன் பார்ப்பனர்களை அதிரவைக்கின்றன. .அம்பேத்கர் நாங்கள் இந்துவல்ல என்றார். அவர்கள் அம்பேத்கரை எதிர்த்தால் அழிந்துவிடுவோம் என புரிந்து கொண்டு, ஒரு புதிய எதிரியை உருவாக்குகின்றான், இசுலாமியர்கள் தான் எதிரி என்கின்றான், அதன் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களையும் தன் பின்னே திரட்டுகின்றான். இவனின் தத்துவார்த்த பின்ணனி கோயபல்சு, ஹிட்லரே. ஹிட்லரின் ஸ்வஸ்திக் சின்னத்தை தான் இவன் எடுத்துக்கொண்டான். இந்தியாவின் பயங்கரவாத இயக்கங்களில் முதல் இயக்கம் ஆர்.எஸ்.எஸ் தான். கடந்த பத்தாண்டுகளில் நாம் பாசிசத்திற்கு எதிராக தொடர்ச்சியான பணியை செய்யாத அந்த நேரத்தில், அவர்கள் சிந்திக்க தொடங்குகின்றார்கள். ஆர்.எஸ்.எஸ் பெண்களுக்கும் எதிரான அமைப்பு, இந்துத்துவா அரசியல் என்பது எவன் வேண்டுமென்றாலும் வாழுங்கள், ஆனால் இந்து தான் ஆள வேண்டும் என்கிறது. ஆர்.எஸ்.எஸ் என்பது சிறுபான்மையினரை விழுங்கக்கூடிய, ஒடுக்கக்கூடிய ஒரு வன்முறை ஸ்தாபனம் ஆகும். வெறும் காவியரசியலை மட்டும் பார்க்காதீர்கள், அவனது வர்க்க பின்னனியையும் பாருங்கள் என்று 1996ல் பேசினால், இன்று அவன் தெளிவாக வளர்ச்சி என்று பிரச்சார வடிவத்தை முன்னெடுக்கின்றான்

2000த்திற்கு பிறகு உருவான இந்த புதிய நடுத்தர வர்க்கம், தான் மட்டுமே வாழ்வது, தான் மட்டுமே சொகுசாக இருப்பது என்பதை மட்டுமே சிந்திக்கின்றது, சிந்திக்க வைக்கப்படுகின்றது. இந்நூலில் உள்ள முதல் கட்டுரை குஜராத்தின் வளர்ச்சியை பற்றி சொல்கின்றது, இது இன்றைய காலத்தில் நாம் எதை பேச வேண்டுமோ அதை பேசுகின்றது , அதே போல தமிழகத்தில் இந்துத்துவ அபாயம் பற்றிய கட்டுரையும் காலத்துடன் பொருந்தி போகின்றது. சில கட்டுரைகளில் எனக்கு உடன்பாடில்லை, ஏனென்றால் அவை காலத்துடன் பொருந்திப் போகவில்லை. எப்படி காங்கிரசை இங்கே தனிமைப்படுத்தினோமோ, அதே போல ஆர்.எஸ்.எஸை, பா,ஜ,க.வை நாம் இங்கே தனிமைப்படுத்த வேண்டும். வீதி தான் களம், தேர்தல் களமல்ல.. திமுகவின் பிரச்சாரமும் சரி, அதிமுகவின் பிரச்சாரமும் சரி மோடிக்கு எதிராக பா.ஜ.கவிற்கு எதிராக நடக்கவில்லை. இது தான் இங்கே தமிழகத்தை சூழ்ந்திருக்கும் அபாயம். 99ல் திமுக, மதிமுக, பா.ம.க கூட்டணி வைக்கின்றது, அடுத்த ஆட்சியில் அதிமுக கூட்டணி வைக்கின்றது. இது தான் இங்கே தமிழகத்தை சூழ்ந்திருக்கும் அபாயம். 99ல் திமுக, மதிமுக, பா.ம.க கூட்டணி வைக்கின்றது, அடுத்த ஆட்சியில் அதிமுக கூட்டணி வைக்கின்றது. இப்படி மாறி , மாறி இங்கே தமிழகத்தின் கிராமம் தோறும் தாமரையை மக்கள் மனதில் நிறுத்தியது திராவிடகட்சிகள். சிறைச்சாலைக்கு உள்ளே இருக்க வேண்டியவர்கள் பிரதம வேட்பாளர்களாக உள்ளனர் என்றார் தோழர்.


இறுதியாக பேசிய நூலாசிரியர் தோழர்.கதிரவன் , இந்த கட்டுரைத் தொடரை என்னை எழுத வைத்தது, என்னுடன் பணிபுரியும் சக பணியாள‌ர்களே, மதிய உணவு இடைவேளையில், தேனீர் இடைவேளையில் திரும்பத் திரும்ப மோடி புராணம் பாடி, இக்கட்டுரை தொகுப்பை என்னை அவர்கள் எழுதத்தூண்டினார்கள். இதற்கான தகவல்களை எடுப்பது எனக்கு எளிதாக இருந்தது. என்னை இந்நூலை எழுத வைத்தவர்களைத் தான் ஊடகங்கள் Cyber Hindus, Internet Hindus என்கின்றனர். 2004, 2009 தேர்தலில் பா.ஜ.க படுதோல்வியடைகின்றது. 2002ல் குஜராத்தில் நடந்த இனப்படுகொலை இந்த நடுத்தர வர்க்கம் அறிந்தது தான். ஆனால் கடந்த பத்து ஆண்டுகளாக ஆண்ட காங்கிரசு அரசு உண்டாக்கிய சோர்வு, தொடர்ச்சியாக வெளிவந்த ஊழல்குற்றச்சாட்டுகள் இவர்களை மாற்றை நோக்கி நகர வைத்தது, முதலாளிகளுக்கும் மாற்று தேவையாக இருந்தது. இந்த நேரத்தில் தான் நம் நாட்டில் உள்ள அனைத்து நோய்களுக்குமான ஒரே மருந்தாக மோடி முன்வைக்கப்படுகின்றார். உண்மையில் மோடி யாருக்கானவர். 2002ல் மோடி முதல்வராக மீண்டும் பணியிலமர்ந்த பொழுது வெறும் 7.6 கோடி அமெரிக்க டாலர் சொத்து வைத்திருந்த ஒருவர் தற்சமயம் 880 கோடி அமெரிக்க டாலர் அளவு அதை அதிகரித்துள்ளார், அவர் தான் அதானி, மோடி அதானி, அம்பானி, மிட்டல், டாட்டாக்களுக்கானவர். 1992ல் டி.டி-யில் ஒளிபரப்பாகிய இராமயணம் மூலம் இந்துத்துவம் பரவியது, இன்று அது குழந்தைகளுக்கான சோட்டா பீம் என பல வடிவங்களில் உள்ளது. அதே போல ஆர்.எஸ்.எஸ் ஆதிவாசிகளை வனவாசிகள் என்றே குறிப்பிடுவர், "Making of an Muslim Terrorist" என்ற ஆவணப்படத்தில் இந்த உலகமே இந்துக்களாலானது, அவர்கள் தான் ஆதிகள் என்று வினய் கட்டியார் கூறுகின்றார், அதனால் அவர்கள் ஆதிவாசிகள் என கூறினால் அது முரண்பாடாகிவிடும் என்பதால் எப்பொழுதும் வனவாசி என்றே அழைத்து வருகின்றார்கள். மதமாற்றம் கூடாது எனக்கூறிக்கொண்டே கந்தமால் பகுதியில் இருந்த ஆதிவாசிகளை இந்துக்களாக மதம் மாற்றியுள்ளர்கள் இவர்களே என்றார் தோழர்.

நூல் வாங்க தொடர்பு கொள்ள - 09884468039 - சென்னை, 09886002570 - பெங்களூர்.

நற்றமிழன்.ப
சேவ் தமிழ்சு இயக்கம்.

கொலைகாரர்களிடம் நியாயம் கேட்கும் அவலம் - பிரேமா ரேவதி



ஐந்தாண்டுகளாக கொடூரக் கொலைக்காட்சிகளின் பார்வையாளர்களாக இலங்கையில் போருக்கு பிந்தைய தமிழர் வாழ்வின் வன்முறைகளின் வரைபடத்தை கையறுநிலையில் பார்த்துக்கொண்டிருக்கும் நிலை மட்டுமே உலகெங்கும் உள்ள தமிழருக்கும், மனித உரிமைகளில் நம்பிக்கையுள்ள ஆதரவாளர் சமூகத்திற்கும் ஏற்பட்டிருக்கிறது.


சேனல் 4, மற்றும் பல மனித உரிமை நிறுவனங்களும், ஊடகங்களும் இப்படிப்பட்ட நெஞ்சுலுக்கும் காணொளி ஆவணங்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறார்கள். வன்முறைகளை மீண்டும் மீண்டும் காட்சிப்படுத்துதலின் அரசியலை விமர்சனத்துக்குள்ளாக்கும் அதே வேளையில் குறைந்தபட்ச நியாயம்கூட கிடைக்காமல் அச்சுறுத்தும் வன்முறைகளின் பாழ்வெளியில் நிராதரவாய் நிற்கும் இலங்கைத் தமிழ் மக்களின் குறிப்பாக பெண்களின் நிலையை இந்தியா எனும் அண்டைநாடு(உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக அறியப்படும் நாடு) கேட்காமல் மௌனம் சாதிப்பது கடும் கண்டனத்துக்குரியது.


2009லிருந்து 2014 வரை இலங்கையில் தமிழர் மீது நடத்தப்பட்டுள்ள கொடூரமான பாலியல் வன்முறைகள், கடத்தல்கள், தாக்குதல்கள் பற்றிய ஆவணம் ஒன்றை யாஸ்மின் சூகா என்ற மனித உரிமை வழக்குரைஞர் தலைமையிலான யுனைடட் கிங்டம் பார் மனித உரிமைகள் கமிட்டி வெளியிட்டிருக்கிறது. முடிவடையாத ஒரு யுத்தம் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள இவ்வறிக்கையில் வன்முறைகளுக்குள்ளாக்கப்பட்ட நாற்பது பேரின் விரிவான சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. பல சாட்சியங்கள் படிக்க முடியாத அளவிலான வன்முறை விவரணைகளாக உள்ளன.


யாஸ்மின் சூகா


கூட்டு பாலியல் வல்லுறவு, வாய்வழி பாலியல் வல்லுறவு (பெண்கள் மீது, ஆண்கள் மீது), தண்ணீர் பீய்ச்சியடித்து சித்திரவதை, துப்பாக்கி செலுத்தப்பட்ட பாலியல் வன்முறை என மிகக் கொடூரமான வகைகளில் சித்திரவதைக்குள்ளானவர்களின் சாட்சியங்களின் மூலமாக மறுகட்டமைப்பிலும் மீள் இணக்கத்திலும் ஈடுபட்டுவருவதாகவும் அமைதியை பேணுவதாகவும் சர்வதேச அரங்கில் பேசிவரும் ராஜபக்சே அரசின் வெற்று வாக்குறுதிகளை இந்த அறிக்கை கிழித்தெறிகிறது. இதில் பதிவு செய்யப்பட்டுள்ள வன்முறைச் சம்பவங்கள் அனைத்துமே 2009க்குப் பின் நிகழ்ந்தவை என கூறும் யாஸ்மின் சூகா, “ இந்த அறிக்கையில் விவரிக்கப்படும் சித்திரவதை, பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் வன்முறைகள் தமிழர்கள் மீது நடத்தப்பட்டு வரும் குற்றங்களின் ஒரு சிறு பகுதி உதாரணம் மட்டுமே. சர்வதேச சமூகம் இக்கணமே செயல்படவேண்டும், இல்லாவிட்டால் இந்த வன்கொடுமைகள் தான் போருக்குப் பிந்தைய இலங்கையின் வரையறைகளாகத் தொடரும்.” என்று குறிப்பிட்டுள்ளார். இதில் பதிவு செய்யப்பட்டுள்ள ஆட்கடத்தல்களில் பாதிக்கும் மேற்பட்டவை 2013-14 கடந்த ஓராண்டில் நடந்துள்ளன என்றும் வாக்குமூலம் அளித்த சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட முறைகள் கடத்தப்பட்டிருக்கிறார்கள் என்றும் அறிக்கை கூறுகிறது.

அறிக்கையின் முக்கிய கண்டுபிடிப்புகள்:


1. ஆட்கடத்தல், தன்னிச்சையான சிறைவைப்புகள், சித்திரவதை, பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் வன்முறைகள் போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் அதிகரித்துள்ளன. இந்த வன்முறைகளின் இலக்காக விடுதலைப்புலிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர்கள், அல்லது புலிகளுடன் தொடர்பிருந்தவர்கள் எனச் சந்தேகிக்கப்படும், அல்லது புலிகளின் ஆதரவாளர்கள் எனக் கருதப்படுபவர்கள் இருக்கிறார்கள். இவ்வன்முறைகளின் நோக்கம் இத்தகையோரிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலங்கள் மற்றும்/அல்லது தகவல்கள் பெறுவது என்பதாக தெரிவிக்கப்படுகிறது. புலிகள் அமைப்புடன் ஏதேனும் தொடர்பிருந்தால் அவர்களை தண்டிப்பதற்காக என்பதாகவும் இது நடைபெறுகிறது.


2. பரவலான முறையில் நடந்துள்ள இலங்கை பாதுகாப்பு படைகளின் இந்த மீறல்கள் நிகழ்த்தப்பட்டுள்ள முறைகளைப் பார்த்தால் அவை அரசின் உச்சபட்ச நிலையிலுள்ளவர்களின் அங்கீகாரத்தோடு ஒருங்கிணைந்த முறையான ஒரு திட்டத்தின் அடிப்படையில் செயல்படுத்தப் பட்டவை எனத் தெரிகிறது. இலங்கை பாதுகாப்புப் படையணிகள் தங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்ற தெளிவான பாதுகாப்போடு இயங்குகிறார்கள்.


3. போருக்குப் பிந்தைய மனிதத்திற்கு எதிரான போர்க்குற்றங்களின் அ) சித்திரவதை ஆ) பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் வன்முறை ஆகியவற்றின் உறுதியான ஆதாரத்தை இவ்வறிக்கை கட்டமைக்கிறது.


தென்னாப்பிரிக்காவில் இனவெறிக்கு எதிராக போராடியவரும் சர்வதேச மனித உரிமைப் போராளியுமான ஆர்ச் பிஷப் டெஸ்மண்ட் டுடு இந்த அறிக்கையின் முன்னுரையில், “தன்னுடைய கடந்தகால எதிரிகளுடன் மீள் இணக்கம் செய்துவருவதாக இலங்கை அரசு செய்துவரும் பிரச்சாரங்களின் பொய்யை இவ்வறிக்கையில் வைக்கப்பட்டுள்ள ஆதாரங்கள் உடைக்கின்றன. துவக்குச் சத்தம் ஓய்ந்து ஐந்தாண்டுகள் கழிந்த பின்னும் போரில் தோல்வியடைந்த தரப்புடன் மிகதூரமான தொடர்பிருந்தவர்கள்கூட எப்படி வேட்டையாடப்படுகிறார்கள், சித்திரவதைக்குள்ளாக்கப் படுகிறார்கள், பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்பதை இந்த அறிக்கை காட்டுகிறது. இவ்வறிக்கை பதிவுசெய்துள்ள கடத்தல்களில் பாதிக்கும் மேலானவை 2013-2014ல் நிகழ்ந்துள்ளன என்பது அதிர்ச்சியளிக்கிறது. இதில் வாக்குமூலம் அளித்துள்ள நாற்பது சாட்சியங்கள், இவர்களில் ஏறத்தாழ எல்லோருமே அவர்களின் குடும்பங்கள் அவர்களின் விடுதலைக்காக லஞ்சம் கொடுக்கும் வசதி இருந்ததனாலேயே வெளியே வந்தவர்கள், அப்படி லஞ்சம் கொடுக்க முடியாத குடும்பங்களிலிருந்து வந்தவர்கள் மற்றும் உறவினரே இல்லாதவர்களின் நிலை என்ன என்ற திகைப்பு எழுகிறது. பாலியல் வல்லுறவுகள், வன்முறைகளின் வன்மமும் மிருகத்தனமும் அதிர்ச்சியடைய வைக்கின்றன. இலங்கை பாதுகாப்புப் படைகளின் சித்திரவதையாளர்கள், பாலியல் வன்முறையாளர்களின் இனவெறுப்புமிழும் வார்த்தைகளும் அப்படியே. இந்த சாட்சியங்களில் முப்பத்தைந்து பேர் அவர்களுக்குத் தெரியாத மொழியான சிங்களத்தில் ஒப்புதல் வாக்குமூலங்களில் கையெழுத்திட கட்டாயப்படுத்தப் பட்டிருக்கிறார்கள். சிலர் உயிர் பிழைப்பதற்காக உளவாளிகளாக மாறி அப்பாவி பொதுமக்களை காட்டிக்கொடுக்கும் வேலையைச் செய்யவும் நிர்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள். இது அவர்களின் மீது தொடர்ச்சியான குற்றவுணர்வின் சுமையை ஏற்றியிருக்கிறது.”


வாக்குமூலம் அளித்த நாற்பது பேரில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இலங்கையிலிருந்து தப்பி வெளியேறிய பின்னர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறியிருக்கிறார்கள். டெஸ்மண்ட் டுடு இதை மிகுந்த வேதனையளிக்கும் விஷயமாக குறிப்பிடுகிறார், “ பாதி பேருக்கும் மேல் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்கள் என்பது இலங்கை அரசு அவர்களின் ஆன்மாவை அழிக்கும் தன் நோக்கத்தை எட்டிவிட்டதையே காட்டுகிறது. மீண்டும் தங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் அமைதியையும் எட்ட முடியாத நிலைக்கு இவர்களை தள்ளியிருக்கிறது. என்னுடய ஆழமான எதிர்பார்ப்பு இதுதான், இந்த பழிவாங்கும் வட்டம் உடைக்கப்படவேண்டும். அது நிகழவேண்டுமானால் சர்வதேச சமூகம் தலையிடவேண்டும். போர் இன்னும் முடிவடையாத தீவான இலங்கையை சுற்றியிருக்கும் குற்றமிழைக்கும் அதிகாரத்தை குத்திக் கிழிக்கவேண்டும்” அறிக்கையின் முதல் பக்கத்தில் காஃப்காவின் விசாரணை நாவலில் உள்ள இந்த வாக்கியம் உள்ளது.”இந்த நீதிமன்றத்தின் முன்னால் உன்னை நீ பாதுகாத்துக்கொள்ள வாதாட முடியாது, ஒப்புக்கொள்வது மட்டுமே நீ செய்யலாம். முதல் வாய்ப்பு கிடைக்கும்போதே ஒப்புக்கொள். அது ஒன்றுதான் தப்பிக்க வழி, ஒரே ஒரு வழி. ஆனால் அதுகூட பிறரின் உதவியின்றி சாத்தியமில்லை.”


நீதியின் சட்டத்தின் விதிமுறைகளை அற்பமாக புறந்தள்ளி போரின் காயங்களில் இருந்து மீண்டு இழந்த உறவுகளின் நினைவுகளில் அலைவுற்று வாழ்க்கையின் வாழ்வாதாரத் தேவைகளை பூர்த்தி செய்ய போராடி வரும் மக்களின் மீது ஏவப்படும் இவ்வன்முறைகள், இவ்வன்முறைகளால் பெறப்பட்ட வாக்குமூலங்களின் மீது மேலும் பொய்களை கட்டமைக்கும் ராஜபக்சே அரசின் அநீதி இவற்றை கேள்வி கேட்பாரில்லை எனும் நிலை பூகோள அரசியல் வியூகங்களையும் தாண்டி நாம் வாழும் காலத்தின் விழுமியங்களைப் பற்றிய எதிர்கொள்ளமுடியாத கேள்வியாக இருக்கிறது.

பிரேமா ரேவதி
எழுத்தாளர், பத்திரிகையாளர்.