Tuesday, December 17, 2013

இலங்கை அரசு ஒரு இனப்படுகொலை குற்றவாளி - நிரந்தர மக்கள் தீர்ப்பாயம்..




யார் இந்த நிரந்தர மக்கள் தீர்ப்பாயம்? அவர்களது தீர்ப்பிற்கு உலக நாடுகள் ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?. இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஏற்பட்ட ஐக்கிய நாடுகள் சபை என்பது அடுத்து ஒரு உலகப்போர் வராமலும், உலக அமைதி சீர்குலையாமலும் பார்த்துக் கொள்ள ஏற்படுத்தடுத்தப்பட்டதாக கூறப்பட்டாலும் , அமெரிக்க உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் நலன்களை பாதுகாக்கும் வேலையை மட்டுமே இன்று வரை அது செய்து வருகின்றது. மேலும் இது அரசுகளின் கூட்டமைப்பாகும். இது அரசுகளைச் சாராத உலக‌ நாடுகளில் உள்ள சட்ட நிபுணர்கள் , எழுத்தாளர்கள், பண்பாட்டு, சமூகத் தலைவர்களை உள்ளிடக்கிய ஒரு அமைப்பின் தேவையை சர்வதேச அரசியல் வெளி உருவாக்கியது. 1966-67ல் வியட்நாமில் நடந்த போர் தொடர்பாகவும்,1974-76ல் நடந்த இலத்தின் அமெரிக்காவில் சர்வாதிகாரம் தொடர்பாகவும் நடைபெற்ற இரசல் தீர்ப்பாயத்தை தனது அடிப்படையாக கொண்டு 1979ல் உருவானது நிரந்தர மக்கள் தீர்ப்பாயம். இதன் தலைமையகம் ரோமில் உள்ளது. இதுவரை 20 தீர்ப்பாயங்களை நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் நடத்தியுள்ளது. ஐ.நா சபை போலல்லாமல் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் அரசுகளின் கையிலில்லை, மக்களே அதன் பிரதிநிதிகள், இங்கு வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்ற சித்தாந்தம் கிடையாது. அதுமட்டுமின்றி நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் ஒரு நடுநிலையான அமைப்பு, அதற்கு இதுவரை இந்த தீர்ப்பாயம் நடத்திய 20 க்கும் மேற்பட்ட விசாரணைகளே சாட்சி. இந்த 20 விசாரணைகளின் அறிக்கையை இந்த இணையதளத்தில் நீங்கள் காணலாம் ..

http://www.internazionaleleliobasso.it/


2009 மே வரை ஈழத்தில் இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலையை சர்வதேச சமூகமும், நாங்கள் தான் உலக பாதுகாப்புக்கு உத்தரவாதம் என்று நிற்கும் ஐ.நா சபையும், உலக நாட்டாமையுமான அமெரிக்க உள்ளிட்ட எந்த வல்லரசுகளோ, அமைப்புகளோ தடுக்காமல், வேடிக்கை மட்டுமே பார்த்தனர். அதற்கு பிறகான காலகட்டத்தில் சிங்கள படையினர் தங்கள் வீர பிரதாபங்களை காட்டுவதற்காக எடுத்து வைத்திருந்த புகைப்படங்களும், காணொளிகளும் வெளிவரத் தொடங்கின. அப்பொழுதும் மேற்கூறியவர்கள் எல்லாம் கள்ள மௌனம் சாதித்தனர். இந்நிலையில் தான் நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்திடம் மனித உரிமை அமைப்புகளும், பல அரசு சாரா அமைப்புகளும் சூலை மாதம் முதல் முறையிடத் தொடங்கினர். நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் தனக்கு கிடைத்த தரவுகள், செய்திகளை வைத்து நவம்பர்,19,2009 அன்று "சமாதானப் பேச்சுவார்த்தை முறிவுக்கு பின்னரான கால கட்டம்", "இறுதி போர்", "குறிப்பாக இறுதி மாதங்களில்(ஏப்ரல், மே-2009) நடைபெற்றவற்றை" விசாரிக்க ஒப்புக்கொண்டது. அதன் படி அதற்கான பணிகளை தொடங்கிய தீர்ப்பாயம் 14 சனவரியில் இருந்து 16 சனவரி 2010 வரை தனது முதல் அமர்வை(விசாரணையை) நடத்தியது.


இதில் "போர்க்குற்றம், மனிதகுலத்திற்கெதிரான குற்றங்களை இலங்கை அரசு புரிந்துள்ளது" என்றும்,மேலும் இனப்படுகொலை நடந்தற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன என்றும், அதை உறுதிப்படுத்த மேலும் விசாரணை தேவைப்படுகின்றது என்றும் தனது தீர்ப்பில் கூறியிருந்தது. அதுமட்டுமின்றி இலங்கையில் நடைமுறையில் இருந்த அமைதி ஒப்பந்தத்தை சீர்குலைத்து இலங்கையை போரை நோக்கி நகர்த்திய குற்றத்திற்காக அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகளும், தனது கடமையைச் செய்யத் தவறிய ஐக்கிய நாடுகள் சபையும் குற்றம் சாட்டப் பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த விசாரணை அறிக்கை தான் சர்வதேச சமூகத்திற்கும், ஐ.நா சபைக்கும் அழுத்தத்தை கொடுத்தது. இதன் பின்னர் தான் ஐ.நா வின் பொதுச் செயலாளரால் ஒரு சிறப்புக் குழு அமைக்கப் பட்டு இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மீதான விசாரணை தொடங்கியது. சனவரி 2010-ல் நடந்த முதல் அமர்வின் தொடர்ச்சியாக திசம்பர் 7லிருந்து 10 ஆம் திகதி வரை ஜெர்மனியில் உள்ள ப்ரமன் என்ற நகரில் இரண்டாம் அமர்வு நடந்தது. இதில் இலங்கை இனப்படுகொலை செய்துள்ளதா என்ற விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையின் முக்கியத்துவம் என்ன? இலங்கை விவகாரத்தில் இனப்படுகொலை என்ற சொல்லை சர்வதேச சமூகமும், ஐ.நா.சபையும் தொடர்ந்து பேச மறுத்து வருகின்றனர். ஏனென்றால் எப்பொழுது இலங்கை அரசு ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்துள்ளது என்று சொல்லப்பட்டால், அடுத்த கட்டமாக ஈழத்தமிழர்களிடம் ஐ.நா சர்வதேச பார்வையாளர்கள் முன்னிலையில் தனி நாடு குறித்த பொது வாக்கெடுப்பை நடத்த வேண்டும், எனவே தான் மேற்குலகும், ஐ.நா வும் இலங்கையில் நடந்தது போர்க்குற்றம், மனித குலத்திற்கெதிரான குற்றம் என்பதோடு நிறுத்திக் கொள்கின்றது.




இலங்கையில் இனப்படுகொலை நடந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் தெரிகின்றன என முதன் முதலாக கூறியது நிரந்தர மக்கள் தீர்ப்பாயே. அதை உறுதிப்படுத்த மேலதிக விசாரணை தேவை என்றும் சொன்ன தீர்ப்பாயம், இன்று தானே மீண்டும் இனப்படுகொலை தொடர்பாக விசாரித்து, இலங்கை அரசு ஒரு இனப்படுகொலை அரசு என்றும், மேலும் இதில் பாதிக்கப்பட்டவர்கள் (இனப்படுகொலை செய்யப்பட்டவர்கள்) ஈழத்தமிழர்கள் என்றும்,அமெரிக்க ஐக்கிய நாடுகளும், இங்கிலாந்தும் இதில் இலங்கை அரசின் கூட்டாளிகளாக செயல்பட்டுள்ளன என்றும், இந்தியாவும் கூட்டாளியாக இருக்கக்கூடும் ஆனால் அதை உறுதிப்படுத்த மேலதிக விசாரணை தேவை என்றும் தீர்ப்பாயம் விசாரணையின் இறுதியில் கூறியுள்ளது. இந்தியாவின் போரைத்தான் நான் நடத்தினேன் என இராஜபக்சே பகிரங்கமாகவே கூறியுள்ளார். அதனால் இந்தியாவும் இலங்கையின் கூட்டாளி என்பதில் நமக்கு எந்த ஐயமும் இல்லை.



நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் இலங்கை அரசு மீதான இரண்டாம் அமர்வின் இறுதியில் கொடுக்கப்பட்ட பத்திரிக்கை செய்தி...

------------

இலங்கையின் மீதான மக்கள் தீர்ப்பாயம் - இரண்டாம் அமர்வு
7-10 திசம்பர் 2013 - ப்ரமன், ஜெர்மனி.


இலங்கை அரசு ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்துள்ளது; இந்த இனப்படுகொலை குற்றத்தில் அமெரிக்க ஐக்கிய நாடுகளும், இங்கிலாந்தும் கூட்டாளிகளாக இருந்துள்ளனர். இந்தியாவும் இலங்கையின் கூட்டாளியாக செயல்பட்டதற்கு மேலதிக ஆதாரங்கள் தேவைப்படுவதால் இந்தியா கூட்டாளியாக அறிவிக்கப்படவில்லை என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

மக்கள் தீர்ப்பாயத்தின் இரண்டாம் அமர்வு இன்று (10 திசம்பர்) ஜெர்மனியில் உள்ள ப்ரமன் நகரில் தீர்ப்பு கூறலுடன் முடிவுற்றது. இலங்கை அரசு ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்துள்ளது, அது இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது என 11 நீதிபதிகளும் ஒருமனதாக தங்கள் தீர்ப்பில் கூறினர்.

இதில் பாதிக்கப்பட்டவர்கள் (இனப்படுகொலைக்குள்ளானவர்கள்) ஈழத்தமிழர்கள் என்ற தேசிய இனம் என்பதை தீர்ப்பாயம் குறிப்பிடுகின்றது.

ஈழத்தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை அவர்களது அடையாளத்தை இன்னும் முற்றிலுமாக அழிக்கவில்லை என்பதையும் தீர்ப்பாயம் கண்டறிந்துள்ளது. ஒருங்கிணைக்கப்பட்ட இனப்படுகொலை திட்டங்கள் 2009 மே மாதத்தில் அதன் இறுதி கட்டத்தை எட்டின. ஆனால் இலங்கை அரசு ஈழத்தமிழர்களின் அடையாளத்தை அழிக்கும் திட்டத்தை இன்றும் கொண்டுள்ளது. இதன் மூலம் நமக்கு தெரிவது என்னவென்றால் இனப்படுகொலை என்பது ஒரு ஒரு திட்டம், அந்த திட்டம் இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. குற்றவாளிகள் நிலப்பரப்பை கைப்பற்றியவுடன் தங்களது இனப்படுகொலை செயல்திட்டத்தை மாற்றினார்கள். ‌மக்களை கொல்வதற்கு பதிலாக மற்ற பணிகளை செய்யத் துவங்கினார்கள். ஆனால் மக்கள் குழுவையும்,அவர்களது அடையாள‌த்தையும் அழிக்கும் அவர்களின் நோக்கம் ஈழத்தமிழின மக்களை உடலளிவிலும் ,மனதளவிலும் பெரிதாக காயப்படுத்துவதன் மூலம் இன்றும் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றது.



கீழ்க்காணும் செயல்களை இலங்கை அரசு செய்துள்ளது என்பது ஐயத்திற்கிடமில்லாத வகையில் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று தீர்ப்பாயம் கருதுகின்றது.

அ) (ஈழத்தமிழ்) மக்கள் குழுவில் உள்ளவர்களை கொல்லுதல். இதில் திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலைகளும், வேண்டுமென்றே மக்கள் மீது குண்டு வீசி தாக்கியதும், மக்களை "போரில்லாப் பகுதி" என்றழைக்கப்பட்ட பகுதிக்குள் ஒன்று சேரச் செய்து மிகப்பெரிய அளவிலான படுகொலைகளைத் திட்டமிட்டுச் செய்தது. இலங்கையின் இனப்படுகொலைத் திட்டத்தை வெளியுலகிற்கு எடுத்துச் சொல்லக்கூடிய ஈழத்தமிழ்ச் சமூகத் தலைவர்களை திட்டமிட்டு சதிக்கொலை செய்தது என எல்லாம் அடங்கும்.

ஆ) (ஈழத்தமிழ்) மக்கள் குழுவில் உள்ளவர்களுக்கு உடலளவிலும் , மனதளவிலும் பெரிய அளவில் காயங்களை ஏற்படுத்துதல், இதில் சித்ரவதை செய்தல், மனிதத்தன்மைக்கு கீழாக நடத்துதல், பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குதல், விசாரணை என்ற பெயரில் அடித்தல், உயிர்ப்பயத்தை உருவாக்குதல், உடலில் ஆறாவடுக்களை உருவாக்கும் அளவிற்கு காயப்படுத்துதல் என எல்லாம் அடங்கும்.

இ) மக்களின் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயல்களைத் திட்டமிட்டு செய்தல், இதில் *பாதிக்கப்பட்டவர்களை அவர்கள‌து வீடுகளிலிருந்து வெளியேற்றுதல், *தனியார் இடங்களை கைப்பற்றுதல், *மிகப்பெரியப் பகுதிகளை உயர் பாதுகாப்பு இராணுவ வளையங்களாக பிரகடனப்ப‌டுத்தி தமிழ் மக்களின் நிலங்களை இராணுவம் கையக‌ப்படுத்துதல் என எல்லாம் அடங்கும்.



இதுமட்டுமின்றி கீழ்க்காணும் செயல்களுக்கும் ஆதாரம் உள்ளது என‌ தீர்ப்பாயம் கருதுகின்றது...


ஈ) ஒரு இனத்திற்குள்ளே பிறப்புகளை தடுக்கும் செயல்களை மேற்கொள்ளுதல், இதில் கட்டாய குடும்பக் கட்டுப்பாடு, கட்டாயக் கருக்கலைப்பை மேற்கொள்ளுதல் என எல்லாம் அடங்கும். இதை உறுதிப்படுத்தவும், இதே நிகழ்வு மற்ற தமிழர் பகுதிகளிலும் நடக்கின்றதா என்ற விசாரணையும் தேவைப்படுகின்றது. இதை வைத்தே இந்த செயலும் இனப்படுகொலை திட்டத்தில் ஒன்று என சொல்ல இயலும்.

இங்கிலாந்தும், அமெரிக்க ஐக்கிய நாடுகளும் இலங்கை செய்த இனப்படுகொலை குற்றத்தின் கூட்டாளிகளாவர். இதில் - ஆயுதங்களும், கருவிகளும் வழங்குதல், இவற்றை எல்லாம் அவர்கள்(இலங்கை) இனப்படுகொலைக்கு பயன்படுத்துவார்கள் எனத் தெரிந்தே தேவையான உதவிகளைச் செய்தல், என எல்லாம் அடங்கும்.

இலங்கை அரசினால் மட்டுமே தங்களது இனப்படுகொலை திட்டத்தை நிறைவேற்ற முடியாது என்பதை புரிந்து கொண்டு, தீர்ப்பாயத்தில் கொடுக்கப்பட்ட ஆதாரங்களையும், தீர்ப்பாயத்தின் விசாரணையையும் அடிப்படையாகக் கொண்டு அமெரிக்க ஐக்கிய நாடுகள், இங்கிலாந்து, இந்தியா என்ற மூன்று நாடுகளும் இலங்கையின் இனப்படுகொலை குற்றத்தில் கூட்டாளிகளாக செயல்பட்டுள்ளனர் என தீர்ப்பாயம் நம்புகின்றது. மேலும் கொடுக்கப்பட்ட ஆதாரங்களை பார்க்க போதிய நேரமின்மையால் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளும் ஈழத்தமிழர்களுக்கு எதிரான இந்த இனப்படுகொலையில் கூட்டாளிகளாக செயல்பட்டுள்ளார்கள் என்ற தீர்ப்பை நிறுத்தி வைக்கின்றோம்.


30க்கும் அதிகமான நேரடி சாட்சிகளும், பல நிபுணர்களும், பிரதிவாதியின் தரப்பை வலுப்படுத்த தேவையான ஆதாரங்களை அளித்தனர், இந்த ஆதாரங்களை வைத்துப் பார்க்கும் போது இக்குற்றங்கள் எல்லாம் இனப்படுகொலை குற்றத்திற்கு தேவையான அடிப்படை அமைப்புகளைக் கொண்டிருக்கின்றன. அதுமட்டுமின்றி சட்டப்பூர்வமாகவும், வரலாற்று ரீதியாகவும் இக்குற்றத்திற்கு உதவிய கூட்டாளிகளையும் அடையாளம் காட்டுகின்றன.
இந்த இரண்டாம் அமர்வு இணையத்தில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. இந்த காணொளியை பின்வரும் இணையத்தில் நீங்கள் பார்க்கலாம்.

http://ptsrilanka.org/

2009ஆம் ஆண்டின் தொடக்க காலத்தில் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம், மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் தொடர்பாக 2010 சனவரி மாதம் அயர்லாந்தின் டப்ளின் நகரில் நடந்த முதல் அமர்வின் தொடர்ச்சியாக இனப்படுகொலையை உறுதிப்படுத்தவே ஜெர்மனியில் உள்ள ப்ரமன் நகரில் இந்த இரண்டாவது அமர்வை நாங்கள் மேற்கொண்டோம்.

பன்னாட்டு மனித உரிமை அமைப்பு ப்ரமன்(IMRV- International Human rights Association Bremen), இலங்கையில் அமைதிக்கான ஐரிஷ் மன்றம் (Irish forum for peace in Sri Lanka - IFSPL) என்ற இரண்டு அமைப்புகளும் தாக்கல் செய்த அறிக்கைகளை ஏற்று இலங்கை தொடர்பான இந்த இரண்டு அமர்வுகளையும் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் நடத்தியது. முதல் அமர்வைப் போலவே, இந்த அமர்விலும் கலந்து கொண்ட நீதிபதிகள் குழுவில் - இனப்படுகொலை ஆராய்ச்சி தொடர்பான நிபுணர்களும், முன்னாள் ஐ.நா அதிகாரிகளும், பன்னாட்டு சட்ட நிபுணர்களும், பிரபல மனித உரிமை , சமாதானச் செயற்பாட்டாளர்களையும் கொண்டிருந்தது.

10 திசம்பர் 2013
மனித உரிமை நாள்

PERMANENT PEOPLES’ TRIBUNAL
General Secretary:
GIANNI TOGNONI (ITALY)
GENERAL SECRETARIAT: VIA DELLA DOGANA VECCHIA 5 ‐ 00186 ROME
Tel/Fax:0039 06 6877774
E‐mail; tribunale@internazionaleleliobasso.
Web: http://www.internazionaleleliobasso.it

--------------------------

இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழ்னெட் நிருபர் "தமிழீழ விடுதலைப்புலிகள்" அமைப்பின் மேல் தீவிரவாதிகள் என்ற முத்திரை குத்தியது சரியா என்ற‌ கேள்விக்கு பதில் சொன்ன பர்மிய சனநாயக செயற்பாட்டாளரும், நிரந்தர மக்கள் தீர்ப்பாய நீதிபதிகள் குழுவில் ஒருவருமான‌ மௌங் சர்னி - தீவிரவாதிகள் என்ற சொல்லே ஒரு "மேலோட்டமான,செயலுத்தி கொண்ட ஒரு அரசியல் பதம்". இதை உலக நாடுகள் தங்களது புவிசார் அரசியல் நலன்களுக்காக பயன்படுத்திக்கொள்கின்றனர் என்றார் அவர்.

தமிழீழ விடுதலை புலிகளையும், நெல்சன் மண்டேலா பங்கு கொண்ட ஆப்பிரிக்க‌ தேசிய காங்கிரசு அமைப்பையும் ஒப்பிட்டு பேசிய அவர், சில செயல்களை மட்டுமே வைத்துக் கொண்டு ஒரு முழு இயக்கத்தையும் தீவிரவாத இயக்கம் என வரையறுக்கக்கூடாது என்றார்.


குறிப்பு: இக்கட்டுரையில் முதல் ஐந்து பத்திகளுக்கு பிறகு வருபவை அனைத்தும் மொழியாக்கம் செய்யப்பட்டவை. ஆங்கில மூலங்கள் தரவுகளாக கட்டுரையின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இருந்து மே 17 இயக்கம் சார்பாக தோழர்.திருமுருகனும், தோழர்.உமரும் நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் இந்த இரண்டாம் அமர்வில் கலந்துகொண்டனர்.

தரவுகள்:
1. http://www.jdslanka.org/index.php/2012-01-30-09-30-42/human-rights/426-sri-lanka-guilty-of-genocide-against-tamils-with-uk-us-complicity-ppt-rules

2. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=36878


நற்றமிழன்.ப‌
சேவ் தமிழ்சு இயக்கம்


No comments:

Post a Comment