Monday, December 2, 2013

மின்வெட்டுக் காலங்களும் - கூடங்குள அணுமின் நிலையக் கதைகளும்



கடந்த சில ஆண்டுகளில், தமிழகத்தில் கடும் மின்வெட்டு நிலவிய‌ போதெல்லாம், கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறந்தால் தான், மின் தட்டுப்பாடு குறையும். தமிழ்நாடு பெரும் வளம் பெறும், தொழில் வளம் பெருகும். கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்களால் தான் அந்த மடை திறக்காத மின்சார வெள்ளம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. போராட்டக்காரர்களால் தான் மின் வெட்டு நிலவுகிறது என்று ஒரு மாபெரும் பொய் பரப்புரையை ஊடகம் முழுதும் அரசு பரப்பியது. ஆனால் அணுமின் நிலையம் இயங்கத் தொடங்கி எத்தனை நாட்கள் ஆகின்றது. தமிழகத்தில் இன்று நிலவும் கடும் மின்வெட்டுக்கு அவர்களால் குறைந்த பட்சம் சோளப் பொறியாவது அளக்கும் திராணியிருக்கிறதா? மின் உற்பத்தி தொடங்கியாகி விட்டது. பிளக்கை மாட்டி சுவிட்சைப் போடுங்கள். மின்சாரம் பிய்த்துக் கொண்டு வருவதை உணர்வீர்கள். என்றெல்லாம் கூவிக் கும்மியடித்த அணுமின் வளாக அதிகாரிகளும் மத்திய அரசும் கொஞ்சம் மக்கள் முன் வந்து அவர்களின் வழக்கமான‌ வாய்ச்சவடால்களை இப்போது அவிழ்க்கட்டுமே!



இப்பொழுது தமிழகத்தில் மீண்டும் மின்வெட்டு தொடங்கியிருக்கின்றது. நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் 10 மணி நேரமும், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 6 மணி நேரமும், மற்ற மாவட்டங்களில் 3 மணி நேரமும், நகர்ப்புறங்களில் அறிவிக்கப்படாத நிலையிலும் மின் வெட்டு வழக்கமாகி இருக்கிறது.சிறு குறு தொழில்முனைவோர் மீண்டும் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர். கடும் மின் தட்டுப்பாடுக்கான காரணங்களாக அரசு சொல்லும் சாக்கு போக்குகளை கவனிக்க வேண்டும்.பருவமழை சரியாக கிடைக்கவில்லையாம்.மேலும் தீபாவளி சமயங்களில் மின் நுகர்வு அதிகமாக இருந்ததாம். அதாவது மக்கள் தான் அதிகமாக மின்சாரத்தை பயன்படுத்தி, மின் தட்டுப்பாடுக்கு வழி செய்து விட்ட மாதிரி இருக்கிறது இவர்களின் பதில். இன்னும் கொஞ்சம் மேலே போய், மக்களே மின் வாரிய நிலையங்களுக்கு சென்று ஃபியூஸை பிடுங்கி விடுகிறார்கள் என்று கூட தினமலரில் செய்தி வரலாம். மின்சாரத்தை சேமித்து வைக்க முடியாது என்ற அடிப்படை அறிவியல் தெரியாத மூடர்களே தீபாவளி நேரத்தில் அதிகம் செலவு செய்து விட்டார்கள், அதனால் தான் இப்பொழுது மின்வெட்டு எனக்கூறுகின்றார்கள்.




காற்றாலை மின் உற்பத்தி குறைந்து விட்டதும் மின் தட்டுப்பாடுக்கான ஒரு காரணமே என்பது அவர்கள் முன்வைக்கும் அடுத்தச் சாக்கு. சூரிய மின்சாரம், காற்றாலை மின்சாரம் இவைகளெல்லாம், பெருகி வரும் மின் தேவைக்கு போதுமானதாக இருக்காது. அணு மின்சாரமே தீர்வு என்று அணு ஆற்றல் கொள்கைக்கு கொடி பிடித்தவர்கள், தற்போது சேம் சைடு கோல் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் காற்றாலை மின்சாரத்தை மட்டும் நம்பியா தமிழகம் இருக்கிறது? இன்று தமிழகத்தின் பெரும்பாலான அனல் மின் நிலையங்கள் முக்கி முனகி தான் ஓடிக் கொண்டிருக்கின்றன. முறையான பராமரிப்பு இல்லை. அல்லது பராமரிப்புகளுக்கான செலவீனங்கள் குறித்து அரசுக்கு போதுமான அக்கறை இல்லை.





தமிழகத்தில் உள்ள அனல்மின் நிலையங்களின் தற்போதைய நிலை:

1. வடசென்னையில் புதிதாக தொடங்கப்பட்ட இரண்டாவது அலகில் உள்ள இரண்டு யூனிட்டுகளும் பழுதானதால் சுமார் ஆயிரம் மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

2. மேட்டூர், வ‌ல்லூர் அன‌ல்மின் நிலைய‌ங்க‌ளில் ப‌ராம‌ரிப்பு கார‌ண‌ங்க‌ளுக்காக‌ மின் உற்ப‌த்தி நிறுத்தம்.

3. தூத்துக்குடி அன‌ல்மின் நிலைய‌த்தில் தொட‌ர்ந்து ப‌ழுது. மூன்றாவ‌து அல‌கின் கொதிக‌ல‌னில் கோளாறு ஏற்ப‌ட்டு ச‌ரி செய்ய‌ப்ப‌ட்டு இய‌ங்குமுன், மீண்டும் இய‌ந்திர‌க் கோளாறு என்று மின் உற்ப‌த்தி நிறுத்த‌ம். ப‌ழுதுக‌ள் ம‌ட்டுமில்லாம‌ல், தூத்துக்குடி அன‌ல் மின் நிலைய‌த்தில் அடிக்க‌டி நிக‌ழும் தீ விப‌த்துக‌ள்.




ஒவ்வொரு முறை அன‌ல் மின் நிலைய‌ங்க‌ளில் ப‌ழுது ஏற்ப‌டும் போதும், ப‌ராம‌ரிப்பு ப‌ணிக்காக‌ நிறுத்தி வைக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து என்றும் இன்னும் ஓரிரு நாளில் மின் உற்ப‌த்தி தொட‌ங்க‌ப் ப‌டும் என்றும் ஊட‌க‌ங்க‌ளில் செய்தி வெளியிடுவ‌து இவ‌ர்க‌ளின் வாடிக்கையாக‌ இருக்கிறது. அரசு நடத்திவரும் மின் நிலையங்கள் வேண்டுமென்றே சரியாக பராமரிக்கப்படுவதில்லை, அப்பொழுது தானே எல்லாவற்றையும் தனியாருக்கு தாரை வார்க்கமுடியும்....




ம‌த்திய‌ அர‌சின் வ‌ர‌வு செல‌வு திட்ட‌த்தில், ஆற்றல் சார் ஆய்வுக‌ளுக்கு ஒதுக்க‌ப்ப‌டும் தொகையில் 25 விழுக்காடு, அணுச‌க்தி ஆய்வுக‌ளுக்கு மட்டுமே ஒதுக்க‌ப்ப‌டுவ‌து, மத்திய அரசின் ஊதாரித் தனம் என்ப‌து ம‌ட்டுமின்றி, "நான்" "என‌து த‌லைமையிலான‌ அர‌சு" என‌ அட‌க்க‌மே உருவான தமிழக முதல்வர், மரபு சார் அனல் மின் நிலையங்களின் செயல்பாட்டை மேம்படுத்தாமல், மாற்று எரிசக்திகளுக்கான தேவை குறித்து சட்டமன்றங்களில் விவாதிக்காமல், சீமான்கள் விளையாடும் செஸ் போட்டிகளுக்கும்,கலை நிகழ்ச்சிகளுக்கும் மக்களின் வரிப்பணத்தையும், அரசுகளின் அலுவல் நேரத்தையும் ஊதாரித்தனமாக செலவிடுவதையும் கேள்விக்குள்ளாக்க வேண்டும்.


கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து 350 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப் படுவதாகவும், ஜனவரிக்கு மேல் 1000 மெகாவாட் உற்பத்தி அளவை அடைந்து விடுவோம் என்றும் அணுமின் நிலைய வளாக இயக்குனர் சுந்தர் உண்மைக்கு புறம்பான தகவல்களை அடிக்கடி வெளியிடுகிறார். இது போன்று பொய்யான தகவல்களை, வாய்ச்சவடால்களை அவ்வப் போது வெளியிடுவது இந்திய அணுசக்திக் கழக புனிதப் பசுக்களுக்கு ஒன்றும் புதிதல்ல. ஹோமி பாபா காலத்திலிருந்து கடந்த மூன்று பத்தாண்டுகளாக, இவர்களின் கையாலாகாத திறன் ஏற்கெனவே அம்பலமான ஒன்று தான். ஆனால் இன்றோ , கடுமையான மின்வெட்டு நிலவும் நேரத்தில் கூட, தமிழகத்தில் அது ஒரு விவாதப் பொருளாக இன்னும் மாறாமல், ஒரு திட்டமிட்ட ஊடக இருட்டடிப்பு நடந்து கொண்டிருப்பதை நாம் அவதானிக்கிறோம்.



கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம் உச்சமடைந்த நேரத்திலும், கடுமையான மின்வெட்டு இருந்தது. அப்போதெல்லாம் மின்வெட்டுக்கு போராட்டக்காரர்கள் தான் காரணமென்று ஊடகங்கள் முழுதும் ஒரு மாய பிம்பம் உருவாக்கப் பட்டது. இப்போது அந்த காரணம் என்ன ஆனது? அணு உலை திறக்கப் பட்டால் தமிழகத்தில் பாலாறும் தேனாறும் ஓடும் என பரப்புரை செய்தவர்களெல்லாம், இன்று தமிழகத்தில் மீண்டும் உருவெடுத்திற்கும் மின்வெட்டுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள் ?


அ.மு.செய்யது
சேவ் தமிழ்சு இயக்கம்

-நன்றி - விகடன், Cartoonist.பாலா

No comments:

Post a Comment