Thursday, October 17, 2013

தோழர் தியாகுவின் பட்டினிப் போராட்டம் நிறைவு பெறுகிறது



தோழர் தியாகுவின் பட்டினிப் போராட்டம் நிறைவு பெறுகிறது
இலங்கையில் காமன்வெல்த் – எதிர்ப்பியக்கம் அறிவிப்பு

வணக்கம். ‘ஈழத் தமிழர்களை இனக்கொலை செய்த இலங்கையைக் காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்து நீக்கி, கொழும்பில் நடக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கும் காமன்வெல்த் உச்சி மாநாட்டைத் தடுத்து நிறுத்த வேண்டும். அப்படி அம்மாநாடு அங்கு நடைபெறுமானால், இந்தியத் தலைமை அமைச்சர் அதில் கலந்துகொள்ளக் கூடாது‘ என்ற உடனடிக் கோரிக்கை உள்ளிட்ட 9 முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தி, இலங்கையில் காமன்வெல்த் எதிர்ப்பியக்கத்தின் சார்பில், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் தியாகு ‘வெற்றி அல்லது வீரச் சாவு‘ என்ற முழக்கத்துடன் அக்டோபர் 1 ஆம் நாள் தொடங்கிய தனது பட்டினிப் போராட்டத்தை இன்று 15 ஆம் நாளாகத் தொடர்ந்து நடத்திவருகிறார்.




காலவரையற்ற பட்டினிப் போராட்டம் சட்ட விரோதமானது என்று கூறி காவல்துறை அனுமதி மறுத்த போதும், உயர் நீதி மன்றத்தில் வழக்காடி ‘சனநாயக நாட்டில் காலவரையற்ற பட்டினிப் போராட்டம் என்பது அனைவருக்கும் உரிமையுள்ள போராட்ட வடிவம்‘ என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க, முன்னுதாரணமான தீர்ப்புடன் களமிறங்கியது இப் போராட்டத்தின் முதல் வெற்றி. தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகள்/ இயக்கங்கள், மாணவர்கள் மற்றும் சனநாயக சக்திகளின் ஆதரவோடு சீரான வேகத்துடன் முன்னேறிய இப்போராட்டம், தமிழகம் தழுவிய எழுச்சியாக பரந்து விரிந்து எழுந்துள்ளது. மேதா பட்கர் போன்ற மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததோடு இந்தியா முழுவதும் போராட்ட இயக்கமாகவும் எடுத்துச் செல்கிறார்கள். நேற்று (14.10.2013) இந்தியத் தலைமை அமைச்சர், தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தின் மூலம் ‘இலங்கையில் இவ்வாண்டு நவம்பரில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் நான் கலந்துகொள்வது குறித்த முடிவில், தமிழர்களின் உணர்வையும் கருத்தில்கொண்டு முடிவெடுப்பேன். எனவே அம்மாநாட்டில் நான் கலந்துகொள்ளக் கூடாது என்ற கோரிக்கைக்காக அக்டோபர் 1 ஆம் நாள் முதல் பட்டினிப் போராட்டம் நடத்திவரும் திரு.தியாகு பட்டினிப் போராட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும்‘ என்று கேட்டுக்கொண்டுள்ளார். இவையனைத்தும் நமது கோரிக்கைக்கான போராட்டக் களத்தில் நாம் சீராக முன் நகர்ந்து செல்கின்றோம் என்பதற்குச் சான்றுகளாக இருக்கின்றன.


இந் நிலையில், இன்று (15.10.2013) 15 ஆம் நாளாக பட்டினிப் போராட்டம் தொடர்ந்துவரும் நிலையில் தோழர் தியாகுவின் உடல் நிலையைக் கருத்தில்கொண்டும், இக் கோரிக்கை உள்ளிட்ட 9 முக்கியக் கோரிக்கைகளையும் முழுமையாக வென்றெடுக்கும் போராட்டக் களத்தில் அவரது அறிவும் உழைப்பும் தேவை என்ற விதத்திலும் பட்டினிப் போராட்டத்தை முடித்துக்கொள்ள, தோழமை இயக்கங்கள் / கட்சிகள் தொடர்ந்து வலியுத்திவருவதை இலங்கையில் காமன்வெல்த் – எதிர்ப்பியக்கம் ஏற்றுக்கொள்கிறது. இதனடிப்படையில் தோழர் தியாகுவின் பட்டினிப் போராட்டத்தை முடித்துக்கொண்டு, சூழலுக்கேற்ற பிற போராட்ட வடிவங்களில் தொடர்ந்து போராடுவோம் என்று ‘இலங்கையில் காமன்வெல்த் – எதிர்ப்பியக்கம்‘ அறிவிக்கிறது.




மதியவன்
அமைப்பாளர்
இலங்கையில் காமன்வெல்த் – எதிர்ப்பியக்கம்

No comments:

Post a Comment