நேற்று நள்ளிரவைக் கடந்து, தமிழக மக்கள் ஆழ்ந்த நித்திரைக்கு மூழ்கிப் போயிருந்த இரண்டாம் சாம வேளையில், கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து மின்சாரம் தயாரித்து விட்டார்கள். அதாவது அதிகாலை 2.45 மணி அளவில் இந்த அற்புதம் நிகழ்ந்தேறியிருக்கிறது.இந்த நற்செய்தியை கூடங்குள அணுமின் நிலைய வளாக இயக்குனர் ஆர்.எஸ்.சுந்தர், அறிவித்த போது, படிப்படியாக இந்த உற்பத்தி உயர விருப்பதாகவும், நிர்ணயிக்கப்பட்ட 400 மெகாவாட் மின்சாரம், இந்திய அணுசக்திகழகத்தின் அனுமதி கிடைத்த பிறகு உற்பத்தி செய்யப் போவதாகவும் கூடுதல் மகிழ்ச்சி தெரிவித்தார்.சில நாட்களுக்கு முன்பு, அதாவது அக்டோபர் 6, 2013 அன்று மத்திய இணை அமைச்சர் திரு. நாராயணசாமி தந்தி தொலைக்காட்சியில் பேசும்போது, கூடங்குளத்தில் 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகி தமிழகத்துக்குக் கொடுத்தாகி விட்டது என்ற அரிய உண்மையைச்சொன்ன போது, அணுமின் நிலைய அதிகாரிகள் நிச்சயம் புரண்டு படுத்திருப்பர்.
அது என்னவோ இந்திய பிரதமர் மன்மோகன்சிங் ரஷ்யப் பயணம் மேற்கொள்ளும் போதெல்லாம் இது போன்ற அற்புதங்கள் உடனடியாக நடந்து விடுகின்றன. நேற்றைக்கு இந்த அறிவிப்பு வெளியான போது கூட பிரதமர் மாஸ்கோவில் தான் இருக்கிறார். அணு உலை 3 & 4 விரிவாக்க ஒப்பந்தம் பற்றி பேச வேண்டுமானால், 1 & 2 ஆம் அணு உலைகளின் வீர பராக்கிரமங்களைப் பற்றி கதைக்கத் தான் வேண்டுமல்லவா ?
ஏற்கெனவே 2011 டிசம்பரில் கூடங்குளம் அணு உலை ஓரிரு நாளில் இயங்கும் என சூளுரைத்த மன்மோகன்சிங் அவர்கள், இரஷ்ய அதிபர்
புதினை திருப்தி படுத்தவோ என்னவோ இரண்டாம் ஆண்டாகவும் உற்பத்தி ஆகவில்லை என்பதால், மாஸ்கோவில் எடுத்து விட தயாரிக்கப்பட்ட துரித உணவாகத் தான் நேற்றைய அறிவிப்பு இருக்கிறதா என்ற கேள்வியும் இங்கு எழுகிறது. பொய்ப் பிரச்சாரம், ஊழல், தரமற்ற பொருட்கள், வால்வுகளில் பழுது என முழு முதற்கொண்டு மோசடியான ஒரு அணு உலையிலிருந்து வெளிவரும் சிறு அறிவிப்பைக் கூட எப்படி கேள்வியின்றி நம்ப முடியும் ?
கூடங்குளம் அணு உலையில் நிறுவப் பட்டுள்ள இரண்டாம் அமைப்பு பழுதடைந்திருக்கிறது என்று தென்மண்டல மின்சுமை பகிர்மான மையம் (SOUTHERN REGIONAL LOAD DESPATCH CENTRE) தெரிவித்திருக்கும் நிலையில், நேற்றைய அறிவிப்பின் உண்மை நிலையை இன்னும் கொஞ்சம் அறிவியல் பூர்வமாக அறியலாம். கூடங்குளம் அணு மின் நிலையம் VVER தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப் பட்டிருக்கிறது. இத் தொழில்நுட்பத்தில் முதன்மை அமைப்பில் அணுக்கருப் பிளவு நடக்கிறது. இரண்டாம் அமைப்பில் அணுக்கருப் பிளவினால் ஏற்படும் வெப்பத்தின் மூலம் தண்ணீர் கொதிக்க வைக்கப் பட்டு நீராவியாகிறது. இப்படி உருவாகும் நீராவி நேரடியாக சுழலி (Turbines) மின்னாக்கியை இயக்குகிறது. இந்த இரண்டாம் அமைப்பில் தான் கோளாறு என்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், இவர்கள் எங்கிருந்து மின்சாரம் உற்பத்தி செய்தார்கள் என்று தெரியவில்லை.மேலும் இதே ரஷ்யா வழங்கி, ரஷ்யர்களே இயக்கி கொண்டிருக்கும் இதே கூடங்குளம் VVER தொழில் நுட்பத்தில் இயங்கும் சீன அணு உலை ஒன்றிலும் இதே பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். காரணம் தரம் குறைந்த உதிரி பாகங்கள். ஆக ஒரு சிறு குழு, கொஞ்சம் பொறுப்புணர்வின்றி மக்களின் உயிரோடு விளையாடுகிறோம் என்ற மனசாட்சின்றி 120 கோடி இந்திய மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறது. ( படம் தகவல் உதவி: தோழர் சுந்தராஜன், பூவுலகு )
.
அணு உலையைச் சுற்றி அடர்த்தியாக வாழும் மக்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி இல்லை.தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அம்மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் இல்லை. தள ஆய்வறிக்கை தர மாட்டார்கள். விபத்து ஏற்பட்டால் இழப்பீடு தர மாட்டோம் என்று ரஷ்யா கை விரித்தாலும் தங்கள் பாக்கெட்டுகளுக்கு தரகு பணம் மட்டும் கொடுத்தால் போதும் என்று பல்லிளித்துக் கொள்வார்கள். பழுதுகள் ஏற்பட்டிருக்கின்றன, ரஷ்யாவிலிருந்து உதிரி பாகங்கள் வந்ததும் சரி செய்யப் படும் என்று ஒருஅமைச்சர் பத்திரிக்கையில் பேட்டிக் கொடுக்கும் இரு நாள் முன்பு, 400 மெகாவாட் மின்சாரம் தயாரித்தாகி விட்டது என்று மற்றொருஅமைச்சர் புளுகுவார். அல்லது தொடர்ந்து பதினைந்து நாளில் மின்சாரம் கிடைக்கும் என்று வாரா வாரம் ஆரவாரம் செய்வார். வால்வுகள் பழுதாகும். உபகரணங்கள் வழங்கிய ரஷ்ய நிறுவன ஆட்களை அந்நாட்டினராலேயே கைது செய்யப்படுவார்கள்.இப்படி மோசடிகளின்ஒட்டுமொத்த கூடமாக கூடங்குளம் அணு உலை அமைந்திருக்கிறது.
இந்நிலையில் தான் நேற்றைய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. உண்மையாகவே அணு உலையிலிருந்து மின்சாரம் உற்பத்தியானது என்றே வைத்துக் கொண்டால் கூட, இரண்டு வாரத்தில் வருகிறது 15 நாளில் வருகிறது என பூச்சாண்டி காட்டியபிரதமர் முதற்கொண்டு நாராயண சாமி உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் வரை அனைவருமே பொய்யர்கள் தான் என்றுசந்தேகத்திற்கிடமின்றி அம்பலமாகிறது. மேலும் உலகமே எதிர்நோக்கியிருக்கும் ஃபுகுஷிமா கதிர்வீச்சு ஆபத்திலிருந்து எப்படி தப்பிக்கப் போகிறோம் என்று ஜப்பான் போன்ற தொழில் நுட்ப ஜாம்பன்வான்களே போராடிக் கொண்டிருக்கும் போது, கழுத்தளவுஊழல் சேற்றில் சிக்கியிருக்கும் இந்தியப் பிரதமர் ரஷ்யாவில் 3 & 4 ஆம் அணு உலைகளுக்கு அஸ்திவாரம் போட்டுக்கொண்டிருப்பது எப்பேற்பட்ட களவாணித் தனமென்று விளக்க வேண்டியதில்லை.
அணு உலை இயங்கத் தொடங்கினால் நிகழப் போகும் பேராபத்தென்ன? 400 மெகாவாட் மின்சாரத்தில் எத்தனை விழுக்காடு அணு உலையின் பயன்பாட்டிற்கே செல்லப் போகிறது? எத்தனை விழுக்காடு மின் கடத்திகளில் வீணாகப் போகிறது? குரங்கின் கையில்கிடைத்த ஆப்பமாக 400 மெகாவாட்டை எத்தனை பங்கு வைத்து, எத்தனை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப் போகிறார்கள்? 4000 மெகாவாட் மின் பற்றாக்குறை உள்ள தமிழகத்துக்கு இதில் எவ்வளவு பங்கு? கூடங்குளம் அணு உலை வந்தால் தமிழக மின்பற்றாக்குறை தீர்ந்து விடும் என குழலூதும் அணு உலை ஆதரவாளர்களின் நிலைப்பாடு என்ன ? இப்படி நிறைய கேள்விகள் இருக்கின்றன.
அ.மு.செய்யது
சேவ் தமிழ்சு இயக்கம்
No comments:
Post a Comment