Thursday, February 20, 2014
நாளை நாமாகக் கூட இருக்கலாம் ?!
வார விடுமுறை நாட்கள் முடிந்து திங்கள் காலை பணிக்குச் சென்ற நம்மிடம், "இனிமேல் உங்களுக்கு இங்கு வேலை இல்லை; ஒன்றரை மாத முழு ஊதியத்தைத் தருகிறோம்; உங்கள் பொருட்களோடு வெளியேறுங்கள்" என்று நம் அலுவலக மேலாளர் சொன்னால் நமக்கு எப்படிப்பட்ட அச்சமும், விரக்தியும் வருமோ, அதே மனவோட்டத்துடன் தான் இந்தக் கட்டுரையை எழுதத் தொடங்குகிறேன்.
அண்மையில் பெங்களூரில் உள்ள ஐ.பி.எம். நிறுவனத்தின் கணினித் தொழில்நுட்பப் பிரிவின் ஊழியர்கள் 40 பேர் பணிக்குச் சென்ற சில மணி நேரத்திலேயே வெளியில் அனுப்பப்பட்ட செய்தி என்னுடைய அலுவலக நண்பர் வாயிலாக தெரிய வந்தது.
சரிந்த தன்னுடைய லாப அளவை ஈடுசெய்ய முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் ஐ.பி.எம் நிறுவனம், 1 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கான ஈடுசெய்யும் திட்டத்தில் முதல் பகுதியை இந்தியாவில் இருந்து தொடங்கியுள்ளது. இதற்காக "வளங்களுக்கான செயல்பாடு" (RESOURCE ACTION) என்ற பெயரில் 40 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. ஆய்வுத் தகவல்களின்படி, தன்னுடைய மனிதவள அளவான 4,34,000 பணியாளர்களில் 13,000 பேர் வேலை நீக்கம் செய்யப்படவுள்ளதாகத் தெரிகிறது.
நாளுக்கு நாள் சரிந்துக் கொண்டிருப்பதாக சொல்லப்படும் தன்னுடைய லாபத்தை உயர்த்த எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஐ.பி.எம் வைத்துள்ள பெயர் என்ன தெரியுமா ? "அப்போல்லோ திட்டம்" (PROJECT APOLLO). மனிதனை நிலவுக்கு அனுப்பியதற்கு அமெரிக்க விண்வெளி நிறுவனம் நாசாவால் சூட்டப்பட்ட பெயர். தன்னுடைய லாபத்தை வானளாவ உயர்த்தும் ஒரே குறிக்கோளோடு 13000 பணியாளர்களின் வாழ்வாதரதைக் குழி தோண்டி புதைக்கும் திட்டத்தின் பெயரிலேயே தெரிகிறது நிறுவனங்களின் நோக்கம்.
பணி நீக்கங்கள் நடைபெறுவது தகவல் தொழில்நுட்பத் துறை என்பதால், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மட்டுமின்றி, வட்டி செலுத்த வேண்டிய பல்வேறு கடன்களும் கழுத்தை இறுக்கக்கூடும்.
இந்தத் தகவலை தாங்கி வந்த வலைத்தளச் செய்திகள், ஒரு முக்கியமான விடயத்தை இந்தியத் தகவல் தொழில்நுட்பத் தொழிலாளர்களுக்கு விட்டுச் சென்றுள்ளது. அதாவது, " இந்த நடவடிக்கை வட அமெரிக்காவில் உள்ள ஐ.பி.எம் நிறுவனத்திலும் பிப்ரவரிக்கு முன் எடுக்கப்படும் என்பதைச் சொன்னவர், ஐ.பி.எம் ஊழியர்களை ஒருங்கிணைத்து சங்கம் கட்டும் பணியில் ஈடுபட்டு வரும் முதன்மை ஒருங்கிணைப்பாளர் லீ கோனர்ட் என்பவரே". பெருமுதலாளித்துவ மற்றும் ஏகாதிபத்திய நாடான அமெரிக்காவிலேயே
சங்கம் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன என்பதே அந்தச் செய்தி.
ஆனால் இங்கு, கடந்த அக்டோபர் மாதம் (2013 ஆம் ஆண்டு), கர்நாடக மாநில அரசு தொழிலாளர் நலச் சட்டங்களில் இருந்து தகவல் தொழில்நுட்பத் துறைக்கு மேலும் ஐந்து வருடங்களுக்கு விலக்கு அளித்ததை நாம் மறந்துவிடக் கூடாது.
1990-க்குப் பிறகு இந்தியாவில் கால்பதித்த நிறுவனங்களின் நோக்கம் கொழுத்த லாபம் மட்டுமே. அத்தோடு நிற்காத ஐ.பி.எம்-மின் போட்டி நிறுவனங்கள், இழவு வீட்டில் இறந்தவரின் கை, கால்களில் இருக்கும் நகைக் கணக்குப் போடுவது போல, பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் நன்றாக வேலை செய்யும் யாரையேனும் குறைந்த சம்பளத்திற்கு பிடித்துவிட முடியுமா? என்று தேடித் திரிகின்றன. போட்டி நிறுவனங்களில் வேலை கிடைத்தால் நல்லதுதானே, நம்முடைய பிரச்சனைத் தீர்ந்துவிடும் என்று நாம் நினைக்கலாம் ஆனால், நாளை அந்த போட்டி நிறுவனமும் லாபக் கணக்கை மட்டுமே பார்க்கும் என்பதே உண்மை. வெளிநாட்டு நிறுவனங்கள்தான் இதுபோன்ற ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் என்பதில்லை, தங்களுடைய லாபத்திற்கு பங்கம் வரும்போது இந்திய பன்னாட்டு நிறுவனங்களும் இதையே செய்யும்.
தகவல் தொழில்நுட்பத் தொழிலாளர்களின் பணிப் பாதுகாப்பிற்கும், சூழலில் உள்ள பிரச்சனைகளுக்கும் நிரந்தர தீர்வுகள் பற்றி ஊழியர்களான நாம் சிந்தித்து செயல்பட வேண்டிய நேரமிது. என்னுடைய இந்த கட்டுரையும், அதன் தலைப்பும் எதிர்மறையாக இருப்பது போல் தோன்றலாம் ஆனால், இங்கு நடந்து கொண்டிருப்பவையும் நேர்மறையாக இல்லை என்பதே நிதர்சனம்.
வேலைப் பறிப்பு என்பது தனிமனிதன் சார்ந்த பிரச்சனை இல்லை.ஊழியர் ஒருவர் பணியிலிருந்து நீங்கிச் செல்லும் போது, மூன்று மாதத்திற்கு முன்னதாகவே தலைமையிடம் அறிவிக்க வேண்டும் என்று விதிகளை வைத்துள்ள இதே நிறுவனங்கள்தான், தங்கள் லாபத்திற்காக ஆட்குறைப்பு செய்யும் போது விதிகளை மீறுகின்றன. இவ்வாறான, விதிகள் என்பது நிறுவனங்களுக்கும், நிறுவன ஊழியர்களுக்கும் பொதுவாகவும், பாகுபாடின்றி இருக்கவும் நாம் ஒன்றிணைந்து வலியுறுத்த வேண்டும்.
“புவியை நடத்துவோம்! பொதுவில் நடத்துவோம்!”
படங்கள் : நன்றி BioJobBlog , DNA.
கதிரவன்
சேவ் தமிழ்சு இயக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
நல்லதொரு பதிவு...வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி சிவா..
ReplyDelete