Wednesday, June 26, 2013

அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி யாருக்கு சேவகம் செய்ய இந்த ஏற்பாடு ?



தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி என்ற தமிழக அரசின் அறிவிப்பு, கல்வியாளர்களாலும், அறிஞர்களாலும், உணர்வாளர்களாலும் பல்வேறு தளங்களில் பேசப்பட்டும் விவாதிக்கப்பட்டும் கடும் எதிர்ப்புகளுக்கும் ஆளாகி வருகிறது.ஆனால் பெருவாரியான மக்கள், ஏழைகளுக்கும் ஆங்கில வழிக்கல்வி கிடைக்கப் போகிறதே என்ற ஆதரவான மனநிலையில் தான் இருக்கின்றனர். இந்த "இங்கிலிஷ் மீடிய" போதை என்பது அணுஉலை வந்து விட்டால் மின்சாரம் கிடைத்து விடும் என்ற போதைக்கு நிகரானது. ஆங்கில வழிக்கல்வியில் பயின்று விட்டால் ஆங்கில அறிவு வளர்ந்து விடும். எனவே உயர்கல்வி, பன்னாட்டு நிறுவன வேலை என பிய்த்து உதறிவிடலாம் என்ற பொதுக்கருத்தே ஆங்கில வழிக்கல்வியை ஆதரிக்கச் செய்கிறது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு, அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை அடித்தட்டு தாழ்த்தப்பட்ட மாணவர்களின் மீதான உண்மையான அக்கறையோடு தான் வெளியிடப்பட்டதா? இந்த அறிவிப்பு அடிப்படையில் யாருக்கு சேவகம் செய்யப் போகிறது ? என்ற பல கேள்விகளுக்கான விடையை யதார்த்த நிலையிலிருந்து அணுக வேண்டியிருக்கிறது.


ஏழை தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு ஆங்கில வழிக்கல்வி வரமா? சாபமா ?

கடந்த ஆண்டு சென்னையில் சில குடிசைகள் நள்ளிரவோடு எரிந்து சாம்பலாயின. சென்னை கிரீம்ஸ் ரோடு, மக்கீஸ் கார்டன் போன்ற பகுதிகளில் வாழும் தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்புகள் அவை. இச்சம்பவம் நடைபெற்ற சில மாதங்களுக்கு முன், அவர்களின் குடிசைகளை விட்டு வெளியேறி சென்னையின் ஒதுக்குப்புறமான கண்ணகி நகர், செம்மஞ்சேரி பகுதிகளுக்கு குடியேறுமாறு ஆணையிட்ட சென்னை மாநகராட்சியை புறக்கணித்த அம்மக்களுக்கு கிடைத்த பரிசு அது. போராட்டத்தில் குதித்த அம்மக்கள் அக்குடிசைகளை விட்டு வெளியேற மாட்டோம் என்று உறுதியாக நின்றதற்கு, இரண்டு முக்கிய காரணங்கள் இருந்தன.

ஒன்று அரசு மருத்துவமனை வெகு அருகாமையில் இருப்பது. மற்றொன்று கல்வி. அம்மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளானாலும் பரவாயில்லை என்று தம் குழந்தைகளை நகரத்திற்குள் அமைந்திருக்கும் தனியார் பள்ளிகளில் படிக்க வைத்திருந்தினர். அதில் ஒரு சிறுமி சர்ச் பார்க் கான்வென்ட் சீருடையோடு வந்து ஒலிபெருக்கியில் பேசினாள். "நாங்க இங்க தான் இருப்போம். எங்கயும் போக மாட்டோம்!"

நான் மேலே கூறிய நிகழ்வை, ஏழைகள் கூட தனியார் பள்ளிகளில் படிக்க முடிகிறதே என்று தட்டையாக புரிந்து கொள்ளக் கூடாது. தரமான கல்வி தனியாரில் தான் கிடைக்கும், அரசு பள்ளிகளில் கிடைக்காது என்ற தொடர் ஊடக பிரச்சாரத்தின் மூலம் நமது சமூகத்தில் உள்ள பொது கருத்து மற்றும் ஆங்கிலம் மீதான மக்களின் மோகம், அவ்வெளிய பெற்றோரை தனியாரை நோக்கி ஓட வைத்திருக்கிறது. இப்ப‌டி எல்லா ஏழை ம‌க்க‌ளாலும் த‌னியாரை நோக்கி ஓட‌ முடியுமா என்ன‌ ?

இன்றைய அரசு பள்ளிகளின் நிலைமை என்ன? அடிப்ப‌டை வச‌திக‌ளான‌ க‌ழிவ‌றையிலிருந்து, வ‌குப்ப‌றை முத‌ல் ஆசிரிய‌ர்க‌ள் வ‌ரை பெய‌ர் சொன்னாலே போதும் த‌ர‌ம் எளிதில் விள‌ங்கும் நிலைமை தான். மேலும் இருக்கும் ஒரு மொழிப்பாடமான ஆங்கிலத்தை கற்றுக் கொடுக்கவே சரியான ஆசிரியர்கள் அரசு பள்ளிகளில் இல்லை, இருக்கும் ஒரு சிலரும் மாணவர்களுக்கு முறையாக பயிற்றுவிப்ப‌தில்லை.( தனியார் ஆங்கில வழிக்கல்வி பள்ளிகளிலேயே ஆங்கில மொழிப் பாடம் சரியாக கற்றுக் கொடுக்கப்படுவதில்லை) எனவே ஆங்கில பாடத்திற்கு மட்டும் தனியாக சிறப்பு பயிற்சி வகுப்பு(Tution) வைத்துக் கொள்ளும் சூழல் ஏற்கெனவே இருக்கிறது. ஆக அரசு பள்ளிகளின் தேவைகளை பூர்த்தி செய்யாமல், அடிப்படை வசதிகளை மேம்படுத்தாமல்,ஆங்கில வழிக்கல்வியை திணிப்பதில் ஒரு வியாபார நோக்கமிருப்பதை யூகிக்க முடிக்கிறது. அது என்ன வியாபார நோக்கம் என்பதை பிறகு பார்ப்போம்.


அரசு பள்ளிகளில் யார் அதிகம் படிக்கிறார்கள்? தாழ்த்தப்பட்ட, ஏழை, அடித்தட்டு மக்களின் குழந்தைகள் தான். இவர்களில் பெரும்பான்மை முதல் தலைமுறை கல்வி பெறுபவர்களாகவே இருக்கின்றனர். ஒரு குழந்தை கல்வியுலகில் காலடி எடுத்து வைத்து, தன் தாய்மொழியை கற்குமுன்னரே, அன்னிய மொழியான ஆங்கில வழிக்கல்வியை கற்க வேண்டிய அவலத்தை என்னவென்று சொல்ல? உலகின் எந்த பகுதியிலும் நிகழாத கொடுமை இது. அரசு பள்ளிகளில் இருக்கும் பல ஆசிரியர்களால் ஆங்கிலத்தை மாணவர்களுக்கு சரியாகச் சொல்லிக் கொடுக்க தெரியவில்லை, தெரிந்த சில ஆசிரியர்களாலும் கால அட்டவணையின் நிர்ப்பந்தத்தால் ஒருமுறை மட்டுமே ஒரு பாடத்தை சொல்லிக்கொடுக்க வேண்டிய கட்டாயம், அன்னிய மொழியில் ஒரு முறை மட்டுமே சொல்லிக் கொடுப்பதால் அது அரைகுறையாகத் தான் புரியும். வீட்டிற்கு வந்தால் பெற்றோர்களால் சொல்லி கொடுக்க முடியாத சூழல், சிறப்பு பயிற்சி வகுப்பிற்கு (Tution)செல்ல முடியாத பொருளாதார நிலைமைகளால், பாதியிலேயே படிப்பை நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு பிள்ளைகள் ஆளாக நேரிடுகிறது. அல்லது இந்த‌ மதிப்பெண் கலாச்சார சமூக அமைப்பில் அவர்கள் திறமை குறைந்தவர்களாக, வாய்ப்புகளை இழப்பவர்களாக முன்னிறுத்தப்படுவார்கள். ஆக குறைந்த கட்டணத்தில் தரமான கல்வியை நோக்கி வரும் இவ்வெளிய மக்களை இருகரம் நோக்கி வரவேற்கும் திட்டமாக இது நிச்சயம் இருக்க முடியாது. படித்தால் தனியார் பள்ளியில் போய் படி, இங்கே வந்தால் இப்படி தான் இருக்கும் என்று படிக்க வரும் ஏழை மாணவர்களை அரசு பள்ளிகளின் வாயிலோடு அடித்து விரட்டும் ஒரு சூழ்ச்சியாகத் தான் இதைக் கருத முடிகிறது.



மொழிப்பாடங்களை பயிற்றுவிப்பதில்,பயில்வதில் ஆசிரியர்களும் மாணவர்களும் எத்தகைய அணுகுமுறையை கையாள்கின்றனர் ?

மேனிலைப் பள்ளி மாணவர்கள், மொழிப் பாடங்களான தமிழையும், ஆங்கிலத்தையும் தேர்வுகளுக்கு மட்டுமே படிக்கும் வழக்கத்தை பின்பற்றுகின்றனர்.பிரதானமாக கணக்கு,வேதியியல்,இயற்பியல் போன்ற மதிப்பெண் முக்கியத்துவம் வாய்ந்த பாடங்களை மட்டுமே வருடம் முழுதும் அதிக கவனம் செலுத்தி படிக்கின்றனர்.
ஆசிரியர்களும் பிரதான பாடங்களை மட்டுமே சிரத்தையோடு பயிற்றுவிக்கின்றனர். மற்றபடி மொழிப்பாட வகுப்புகள் சற்றே இளைப்பாற வசதியான வகுப்புகளாகத் தான் மாறிப்போயிருக்கின்றன. எனவே அரசோ தனியாரோ எப்பள்ளியானாலும் சரி, குறிப்பிட்ட ஒரு மொழியறிவை மேம்படுத்த‌ வாய்ப்பில்லாத சூழல் தான் எஞ்சியிருக்கிறது. எனவே ஆங்கில வழிக்கல்வியில் கற்றாலும் கூட ஒரு சில ஆங்கில கலைச் சொற்களை கற்றுக் கொள்ள முடியுமே தவிர, ஆங்கில இலக்கண அறிவோ, ஆங்கில இலக்கிய புலமையோ பெற்று விட‌ முடியாது.

அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியால் யாருக்கு லாபம்?

சமகால சமூக அமைப்பு என்பது மதிப்பெண்களால் கட்டமைக்கப்பட்டு விட்டது. நல்ல கல்வியைத் தேடி பெற்றோர்கள் சென்ற காலம் அருகி, எந்த‌ பள்ளியில் படித்தால் நல்ல மதிப்பெண் கிடைக்கும்? அதன் மூலம் நல்ல கல்லூரியில் இடம் கிடைக்குமா? அந்த கல்லூரி மூலம் பன்னாட்டு நிறுவனத்தில் ஐந்திலக்க சம்பளத்தில் ஒரு வேலை கிடைக்குமா என்ற நிலைக்கு சமூக அமைப்பு இறங்கி வந்தாகி விட்டது. குழந்தைகள் பந்தயக் குதிரைகளாக்கப் படுகிறார்கள்.


பெற்றோர்கள் தங்கள் முதலீடுகளுக்கு இலாபமாக,குழந்தைகளின் மதிப்பெண்களைக் கேட்கின்றனர்.எந்த குழந்தை அதிக மதிப்பெண் பெறுகிறதோ, அதுவே அதிகம் விலைபோகும் சந்தைப் பொருளாக்கப் படுகிறது. ஆக போட்டி நிறைந்த இந்த சந்தையுலகில் தான் அரசுகளின் வியாபார யுக்திகளை புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஏற்கெனவே சமச்சீர் கல்வியை முடக்குவதில் தீவிர ஆர்வம் காட்டிய ஜெயலலிதா அரசின் கல்விக் கொள்கையானது தனியார் முதலாளிகளுக்கு லாபம் சம்பாதித்துக் கொடுப்பதில் தான் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. சமச்சீர் கல்வி நடைமுறைக்கு வந்தால், மெட்ரிகுலேஷன் பேனர் வைத்து அரசு நியமிக்கும் கட்டணத்தை விட அதிகமாக டொனேஷன் என்ற பெயரில் கொள்ளையடிக்க முடியாதே என்ற கவலையில், தனியார் முதலாளிகள் திரண்டு வந்து இத்திட்டத்தை எதிர்த்தனர். அவர்களின் எதிர்ப்பு தோல்வியடைந்தாலும், தற்பொழுது வந்துள்ள அரசின் இந்த அறிவிப்பு அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.


அரசுகளின் ஆசிர்வாதம் அவர்களுக்கு எப்போதும் அவர்களுக்கு துணை நிற்கின்றது. இன்றைக்கு ம‌த்தியில் ஆளும் ம‌ன்மோக‌ன் அர‌சு க‌ல்வி, ம‌ருத்துவ‌ம் உள்ளிட்ட‌ எல்லா அடிப்ப‌டை தேவைக‌ளையும் த‌னியாரிட‌ம் கைய‌ளித்து வ‌ருகின்ற‌து. அத‌ன் ஒரு ந‌ட‌வ‌டிக்கைகாக‌ தான் த‌னியார் ப‌ள்ளிகூட‌ங்க‌ளில் ப‌டிக்கும் ஏழை மாண‌வ‌ர்க‌ளுக்கான‌ க‌ல்வி க‌ட்ட‌ண‌த்தை அர‌சே செலுத்தும் திட்ட‌ம். இந்த‌ திட்ட‌த்தில் அதிக‌ள‌வு மாண‌வ‌ர்க‌ளை சேர்க்க‌ வைப்ப‌த‌ற்காக‌வே ஜெய‌ல‌லிதா அர‌சு இந்த‌ அறிவிப்பை வெளியிட்டுள்ள‌து.


தனியார் நிறுவனங்களும், அறக்கட்டளைகளும் பள்ளிக்கூடங்களைக் கட்டி, அதற்கு அரசு உதவி பெறும் ( Government Aided ) அமைப்புகளாகும் நடைமுறை தான் வழக்கத்தில் இருந்தது.தமிழகத்தின் பெருவாரியான கிறித்துவ அமைப்புகள் இப்படியான அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களை நடத்தி வருகின்றன. ஆனால் நிலைமை இப்போது தலை கீழாக மாறி வருகின்றது. அரசு பள்ளிக்கூடங்களைக் கட்டி, அதை தனியார் வசம் ஒப்படைக்கும் புதிய கொள்கை நடைமுறைக்கு வருகிறது.25 லட்சம் முன்பணமாக கட்டும் எந்த தனியார் முதலாளியும் அரசு பள்ளிகளை ஏற்று நடத்தலாம். தங்கள் விருப்பம் போல கட்டணமும் வசூலித்துக் கொள்ளலாம்.மாலை நேர சிறப்பு வகுப்புகள் வைத்து, தமக்கு தேவையான அடிமைக் கல்வியை போதிக்கலாம் என்ற தனியார் மயமாக்கலுக்கு முழுவீச்சில் அடிக்கல் நாட்டப்பட்டு விட்டது. இந்த புதிய கொள்கை தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் செயல்பட்டு வருகிறது.




அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தாமல், தரத்தை உயர்த்தாமல் எப்படி கருணாநிதி, மருத்துவ‌ காப்பீட்டு திட்டம் என்ற ஒன்றை உருவாக்கி, தனியார் மருத்துவமனைகளுக்கு லாபம் ஈட்டிக் கொடுத்தாரோ, அதே பாணியில் இப்போது ஜெயலலிதா அரசு, அரசு பள்ளிகளை தனியாருக்கு தாரை வார்க்க, ஆங்கில வழிக்கல்வியை அறிமுகப்படுத்துகிறது. அரசு பள்ளிகளின் மாணவர் சேர்க்கை விகிதம் ஏற்கெனவே வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், ஆங்கில வழிக்கல்வி மூலம் அச்சேர்க்கை விகிதத்தை உயர்த்தி அதை தனியார் வசம் ஒப்படைப்பது, சேர்க்கை விகிதம் குறைந்தால் இருக்கும் பள்ளிகளை மூடிவிடுவது என்பதைத் தான் அரசு அமல்படுத்தப் போகின்றது. ஆகவே ஆங்கில வழிக்கல்வி அறிமுகப்படுத்துவதினால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்தாலும், குறைத்தாலும் லாபமென்னவோ தனியாருக்கு தான்.


அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி வெறும் மொழிப்பிரச்சினை மட்டுந்தானா?


தாய்மொழியில் கல்வி கற்பதால் தொழிற்நுட்பத்திலும் வளர்ச்சியிலும் சக்கைபோடு போடும் சீனா, ச‌ப்பான், செர்மனி என பல எடுத்துக்காட்டுகள் நம் முன் வைக்கப்படுகின்றன. தாய்மொழியில் கல்வி கற்பதால் என்னென்ன சிறப்புகள் என்று ஓராயிரம் கட்டுரைகள் எழுதப்பட்டு விட்டன. அரசால் அமைக்கப்பட்ட எல்லா ஆணையங்களும் தாய்மொழி வழியில் தான் கல்வி இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தும் உள்ளன. இருப்பினும் பொதுபுத்தியில் உறைந்து போயிருக்கும் அந்த ஆங்கில‌ மோகம், ஆங்கிலத்தை வளர்த்துக் கொள்ளக் கூடிய ஒரு ஆற்றலாக (Skill) பார்க்காமல், ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதையே ஒரு அறிவாக, ஆங்கிலத்தில் பேசுபவர்களை மேதைகளாக பாவிக்கக் கூடிய அவல நிலையைக் காண்கிறோம்.

அது மட்டுமின்றி, நம் வாழும் சமூகத்தில் கல்வி என்பது சாதிய கட்டமைப்புக்கு நிகரான ஒரு அடுக்குமாடி வழிமுறையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. “வேதம் ஓதும் சூத்திரன் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்று! என்கிற மனுதர்மம், தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி உரிமையை அடிப்படையிலேயே மறுக்கிறது. அந்த மனு விஷத்தை குடித்து வாழும் சமகால இன்டெக்லெக்ச்சுவல் பார்ப்பன சமூகம், அதன் வன்மத்தை எல்லா ஆதிக்க சாதி சமூகத்திலும் தூவிப் பார்க்கிறது.பார்ப்பனிய, சத்திரிய,வைசியர் என்ற வர்ண அடுக்குமுறையானது, கல்வியிலும் CBSE, Metriculation, State Board, தனியார்,அரசு பள்ளிகள் என்று பேதத்தை விளைவிக்கிறது. அக்கட்டமைப்புகளின் அடித்தளத்தை உலுக்கும் ஒரு முயற்சியாக அமைந்த சமச்சீர் கல்வியை, பத்மா சேஷாத்ரி வகையறா தனியார் , பார்ப்பனீய முதலாளிகள் தான் முன்னணியில் நின்று எதிர்த்தனர். வெண்ணெய், நெய் உண்டு ஆச்சாரமாக வாழும் உயர்சாதியும், சாக்கடை அள்ளுபவனும் ஒரே கல்வியை கற்பதா என்ற அடிப்படை மனுதர்ம சிந்தனை, வியாபார நோக்கங்களைக் கூட மிஞ்சி நிற்கின்றது.பார்ப்பனீயமும், முதலாளித்துவமும் கை கோர்ப்பது இந்த புள்ளியிலிருந்து தான்.


கல்வி தனியார் மயமாவது முதலாளிகளின்,அரசுகளின் லாபவெறி என்றால், அதோடு தாய்மொழி புறக்கணிக்கப்படுவதும் ஒரு திட்டமிட்ட இன, கலாச்சார ஒடுக்குமுறை தான்.ஜெயலலிதா ஒரு சமூகத்தின் அறிவு வளர்ச்சியின் மீதான‌ தனது தாக்குதல்களை தொடர்ந்து தொடுத்துக் கொண்டிருக்கிறார். போரில் ஒரு நாட்டின் இராணுவம், எதிரி நாட்டை தாக்கும் போது, நூலகங்களைத் தான் திட்டமிட்டு முதலில் அழிப்பார்களாம்.சமச்சீர் கல்வியை எதிர்ப்பதும், கோட்டூர்புரம் அண்ணா நூலகத்தை குழந்தைகள் மருத்துவமனையாக்குவேன் என வரிந்து கட்டிக் கொண்டு நிற்பதும்,செம்மொழி நூலகத்தை செல்லரிக்க விடுவதும் வெறும் அரசியல் காழ்ப்புணர்ச்சியாக,லாப நோக்குக்காக என மட்டுமே பார்க்காமல் தமிழ் இன,மொழி மீதான படையெடுப்பாக, ஒரு இனத்தின் அடையாளங்களை அழிக்கும் நடவடிக்கையாக பார்த்தால் அந்த உண்மை புரியும். ஆகவே கல்வி மீதான எந்த ஒரு ஒடுக்குமுறையும், சமூக நீதியின் மீதான தாக்குதல் தான்.



- அ.மு.செய்யது
சேவ் தமிழ்சு இயக்கம்


1 comment:

  1. சிறப்பான கட்டுரை தோழர் செய்யது.

    ReplyDelete