Friday, March 14, 2014
ஆதலினால் காதலிப்பீர்…......... - உழைக்கும் பெண்கள் நாள் பதிவு - 7
அண்மையில் தோழர் ஒருவர் இல்லத் திருமணத்துக்குச் சென்றிருந்தேன். திருமண நிகழ்விடத்துக்குள் நுழைந்ததும் சரியான இடத்துக்குத்தான் வந்திருக்கிறோமா என்ற சந்தேகம் மனதில் எழுந்தது. காரணம், ஆடம்பரம். தெருவெங்கும் நூற்றுக்கணக்கில் ஃபிளக்ஸ் பேனர்கள், பிரமாண்டமான அலங்கார வளைவுகள். அலங்காரத் தோரணங்கள். கண்ணைப் பறிக்கும் வண்ண விளக்குகளால் ஆன மண மேடை, அந்த பிரமாண்டமும், அலங்காரமும் அங்கு மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகளும் உண்மையிலேயே எனக்குள் ஒரு சங்கோஜத்தை ஏற்படுத்தியது. சமீப காலங்களில் இன்னும் ஒன்றிரண்டு திருமண நிகழ்வுகளில் காண நேர்ந்த இது போன்ற ஆடம்பரமும், சம்பிரதாய நடவடிக்கைகளும் கூட நினைவுக்கு வந்தன. இதில் வருத்தத்துக்குரிய விஷயம், அனைத்துமே இடதுசாரித் தோழர்களின் வீட்டுத் திருமணங்கள். எனக்குத் தெரிந்து அவர்கள் அத்தனை பேருமே மிக எளிய குடும்பச் சூழலிலிருந்து இயக்கத்துக்கு வந்து சேர்ந்தவர்கள். பின் எதற்காக இத்தனை ஆடம்பரம்? அனாவசியச் செலவுகள்? ஒரு வேளை சோற்றுக்கும் வழியில்லாத ஏழ்மை நிறைந்த மக்கள் தொகையினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட, வறுமையை இன்னமும் துடைத்தழிக்க முடியாத நிலையிலிருக்கும் நம் நாட்டில்தான் இந்த முரண்பாடுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய திருமணங்கள் இடதுசாரிகளைப் பொறுத்தவரை அதிகபட்சமாகப் பத்து சதவீதம் கூட இருக்காது. இருந்தாலும் இது மனதுக்கு வேதனையளிக்கக்கூடியது என்பதுடன் தவிர்க்கப்படக் கூடியதும் கூட.
தந்தை பெரியாரும், பொதுவுடைமை இயக்கத் தலைவர்களும் முன்னோடிகளாக இருந்து தொடங்கி வைத்த சுயமரியாதைத் திருமணங்கள், சடங்குகள் இல்லா எளிய திருமணங்கள் இன்று மிகவும் அருகிக் குறைந்து கொண்டே வருகின்றன. எங்கோ ஒரு இளவரசனும் திவ்யாவும் சாதி மறுத்துத் திருமணம் செய்துகொண்டால் தமிழகம் முழுவதும் ஆதிக்க சாதி உணர்வு மேலெழுந்து ஊரையே கொளுத்துகிறது. காதலர்களைப் பிரித்து கௌரவக் கொலை அல்லது எளிய சாதியைச் சார்ந்தவர்களை உயிர்ப்பலி வாங்குகிறது. இந்தச் சூழ்நிலையில் சாதி, மத மறுப்புத் திருமணம் என்பது இன்றைய இந்துத்வா அபாயம் மற்றும் சாதி உணர்வு மேலோங்கி வரும் காலத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.
மற்றொரு மிக முக்கியமான விஷயம், சாதி மறுப்புத் திருமணங்கள் குறைந்து கொண்டு வருவது. காதல் திருமணம் செய்து கொண்ட தோழர்கள் கூட தங்கள் பிள்ளைக்கோ, பெண்ணுக்கோ தாய் தந்தை இருவரில் ஒரு சாதியையே தேர்வு செய்து வரன் தேடும் நிலைதான் இன்று உள்ளது. காதல் திருமணம் என்றால் ஏற்றுக் கொள்ளும் மனம், ஏற்பாட்டுத் திருமணத்தின்போது மட்டும் தங்கள் சுய சாதியையே தேடுவது வினோதம்தான். அப்படியே சாதி மறுப்புத் திருமணம் செய்து வைக்க முன் வந்தாலும் அதிலும் சில மனத்தடைகள்; தாழ்த்தப்பட்ட சாதியாக இருக்கக்கூடாது, வேற்று மதத்தைச் சார்ந்தவராக இருக்கக்கூடாது, வேறு மொழி பேசுபவராக இருக்கக்கூடாது என நிபந்தனைகள் விதிப்பதையும் காண முடிகிறது.
குறிப்பாக, காலாவதியான இந்துத்வா சடங்குகளைத் திருமண நிகழ்வில் சேர்ப்பது, தாலி கட்டுவதைக் கட்டாயமாக்குவது. ஏன் இன்னமும் தாலியை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டிருக்கிறோம் என்பது புரியவில்லை. அந்த அளவுக்கு எதிர்காலம் குறித்த பயம் நம்மை அச்சுறுத்திக் கொண்டே இருக்கிறது, இந்தத் தாராளமய, உலகமயப் பொருளாதாரச் சூழலில் இதைப் புரிந்துகொள்ள முடிகிறது என்றாலும் இதைவிட எத்தனையோ பிரச்சனைகளையும் சமூக, அரசியல், பொருளாதார அச்சுறுத்தல்களையும் எதிர்த்துப் போராடித்தானே வென்றுள்ளோம். ஒருவேளை நம் பிள்ளைகள் நம்மைவிட போராளிகள் என்ற நம்பிக்கை நமக்கு வரவில்லையோ!
இந்த இணையர் அந்தக் காலத்தில் குடும்பத்தையும், சமூகத்தையும் எதிர்த்துப் போராடி காதல் திருமணம் செய்து கொண்டு பின்னர் வாழ்க்கையிலும் தனியாக நின்று போராடினாலும் இன்று முன்னேறி நல்ல நிலையில் வாழ்பவர்கள். தங்கள் பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைத்திருக்கிறார்கள்; அவர்களும் பெற்றோரை மதித்துக் கல்வி ஒன்றையே குறியாக்கி, தொழிற்கல்வி முடித்து நல்ல வேலையிலும் இருக்கிறார்கள். இது காதல் திருமணங்களின் வெற்றி. இவர்கள் சமூகத்துக்கே முன்னோடிகளாக உலகின் முன் உதாரணமாக நிறுத்தப்பட வேண்டியவர்கள். முற்போக்குக் கொள்கையோ, இடதுசாரிப் பார்வையோ இல்லாத மக்களிடம் கூட இவர்களை உதாரணம் காட்டினால் மனம் மாறி சாதி மறுப்புத் திருமணங்களுக்குச் சம்மதம் தெரிவிக்கக்கூடும், அந்த அளவுக்கு உயர் வாழ்க்கை வாழ்ந்த தோழர்கள் கூட ஏன் இப்படிச் சிந்திக்கிறார்கள் என்பது வியப்பாகத்தான் இருக்கிறது. இவற்றையெல்லாம் பார்க்கும்போது, நாம் கடந்து வந்த பாதையை மறந்து விட்டோமோ என்று கூட ஒரு கணம் தோன்றுகிறது.
ஒரு நிகழ்வை இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும். அப்போது ராஜாஜி முதல்வராக இருந்தார். எதிர்க்கட்சி வரிசையில் கம்யூனிஸ்ட் கட்சி. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் இரு கட்சிகளும் ஒன்றுக்கு ஒன்று பரம வைரிகளான கட்சிகள். ஒரு நாள் அவை கூடியது. சிறிது நேரம் கழித்து தோழர் பி. ராமமூர்த்தி அவைக்குள் நுழைகிறார். அமைச்சர் சி. சுப்பிரமணியம் அவரை வரவேற்கிறார். எதிர்க்கட்சித் தலைவரின் புதிய அந்தஸ்துக்காக அவரை வாழ்த்துவதாகக் கூறுகிறார். அத் தகவல் சற்று திகைப்பூட்டக் கூடியதாக இருக்கவே ராஜாஜி தலையை ஆட்டுகிறார். பின்னர் அவர் அவையில் பேசும்போதுதான் எதிர்க்கட்சித் தலைவர் பி. ராமமூர்த்தி அன்று காலையில்தான் பதிவுத் திருமணம் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டது தெரிய வருகிறது. இது கட்சித் தலைவர்கள் ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்திருந்தது. அதுவரை அத் தகவல் யாருக்கும் தெரியாது. இந்த சுயமரியாதைத் திருமணத்துக்குத் தலைமை வகித்தவர் தந்தை பெரியார். பின்னர் கட்சித் தோழர்களின் ஏற்பாட்டின் பேரில் மிக எளிய முறையில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தேறியுள்ளது. திருமண விருந்தாகத் தேநீர் மட்டும் வழங்கப்பட்டது.
ஒரு மாநிலத்தின் எதிர்க்கட்சித்தலைவர் பதவியில் இருக்கும் ஒருவர் இவ்வாறு மிக எளிய முறையில் பதிவுத் திருமணம் செய்து கொண்டது இன்று நம்ப முடியாத தகவலாக இருக்கலாம். இது காதல் திருமணம் என்றுகூடச் சொல்ல முடியாது. பி. ராமமூர்த்தி ஐயங்கார். அம்பாள் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். பி. ராமமூர்த்தியின் துணைவியார் அம்பாள் விடுதலைக்கு முன்னர் அன்றைய பம்பாய் தொழிற்சங்க அலுவலகத்தில் பணிபுரிந்தவர். விடுதலை கிடைக்கும் வரை பிரம்மச்சாரிகளாக இருந்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் பலரும் விடுதலைக்குப் பின்னர் கட்சிப் பணிகளில் ஈடுபட்டனர். தங்களைப் போலவே இயக்கத்தில் பங்காற்றிய பெண் தோழர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்துப் பெண்களை சாதி மதம் பாராமல் திருமணம் செய்து கொண்டனர். அந்த வரிசையில் பி. ராமமூர்த்தி அம்பாளைத் திருமணம் செய்து கொண்டார்.
அதே போல, தனது தியாகத்தாலும் பேச்சாலும் தமிழகத்தைக் கட்டிப் போட்டிருந்த தோழர் ஜீவானந்தம் அவர்களும் சாதி பாராமல் ஒரு எளிய குடும்பத்தில் பெண்ணைத் தேடி மிக எளிமையாகத் திருமணம் செய்து கொண்டார். திருமணம் குறித்த தகவல் பரப்பப்படவில்லை. அன்றைய கலைஞர்களின் ஆதர்சமாகவும் ஜீவா விளங்கியவர் என்பதும் நாடறிந்ததே! தங்கள் விருப்புக்குரியவராகத் திகழ்ந்தவரின் திருமணம் ரகசியத் திருமணம் போல் நடந்ததால் வருத்தம் கொண்ட கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் தனது சொந்தச் செலவில் திருமண வரவேற்பினை நடத்தினார்.
இதே தலைவர்கள் வழியில் பொதுவுடைமை இயக்கங்களின் முன்னணி ஊழியர்களும் எளிமையான முறையில் சாதி மத ஒழிப்புத் திருமணங்களை மேற்கொண்டனர். இதற்கு எண்ணற்ற உதாரணங்களைக் கூற முடியும். இப்படி எங்கெல்லாம் வாய்ப்புகள் இருந்தனவோ அங்கெல்லாம் சுய மரியாதைத் திருமணங்கள் மிக எளிமையாக நடைபெற்றன என்பதும் கவனிக்கத்தக்கது. இத் திருமணங்கள் கொள்கை, கோட்பாடு சார்ந்தும் எளிமைக்குப் பெயர் பெற்ற பொதுவுடைமைவாதிகள் என்ற முத்திரையைக் காப்பற்றியவாறும் நடந்தேறின. ஆனால், இன்றைக்கு அத்தகைய உத்வேகம் காணாமல் போய் விட்டது. காட்சிகள் மாறி விட்டன.
தற்போது நாம் ஊடகங்களின் பலத்த தாக்குதல்களுக்கும் ஆளாகியுள்ளோம் என்பதையும் மறுப்பதற்கில்லை. நமது பன்முகப்பட்ட பண்பாடுகளை நசுக்கித் தட்டையாக்கி, ஒற்றைப் பண்பாடாக, உலகமயத்தின் தாராளவாதச் சந்தையின் நுகர்பொருளாக நம்மை மாற்றும் மாய்மாலங்களுக்கு இரையாகிறோம். உடையில், அலங்காரத்தில் திருமண ஏற்பாடுகளில், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் எல்லாம் அப்படியே ஊடகங்களைப் பிரதிபலிப்பதைப் பார்க்க முடிகிறது. நம் தோழர்கள் அனைவரும் சிந்தித்தால் திருமணங்களைப் புரட்சிகரமாக மாற்ற முடியும். ’நாங்கள் சாதி, மதம் பாராமல்தால் திருமணம் செய்கிறோம். இன்று சமுதாயத்தில் நல்ல நிலையில் இருக்கிறோம். பொது வாழ்க்கையிலும் சமுதாயத்துக்கு வழிகாட்டியாக வாழ்கிறோம். எங்கள் வாரிசுகளும் எமது பாதையில் இன்னும் முற்போக்கான கொள்கைகளை ஏற்று வாழ்ந்து காட்டுவார்கள்’ என்ற நம்பிக்கையை சமுதாயத்துக்கு உணர்த்த முடியும். இதுவே ஆதிக்க சாதி வெறி, இந்துத்வா கூட்டணிக்கும் தக்க மரண அடியாக இருக்க முடியும்.
தங்களுடைய வாரிசுகளுக்குக் கல்வியூட்டிக் காதலை வளர்க்க வேண்டிய கடமை அல்லது தங்களுக்குப் பொருத்தமான இணையைத் தேர்வு செய்வதில் இளைஞ/இளைஞிகள் சுயமாகச் செயல்படுவதை ஊக்கப்படுத்த வேண்டிய கடமை இடதுசாரித் தோழர்களுக்கு இருக்கிறது என்றே நினைக்கிறேன். காதல் இதையெல்லாம் உடைக்கும் என்றால் காதலைக் கைக்கொள்ள உற்சாகமூட்டுவோம். பாரதியின் சொற்களைத் தாரக மந்திரமாக்குவோம்.
பா.ஜீவசுந்தரி
asixjeeko@gmail.com
பத்திரிகையாளர், எழுத்தாளர்
பாதுகாப்பும் சமத்துவமும் சலுகைகள் அல்ல, எனது உரிமைகள்! - உழைக்கும் பெண்கள் நாள் சந்திப்பு
ஐ.டி.துறையினர் மற்றும் இளைஞர்கள் அமைப்பான சேவ் தமிழ்சு இயக்கத்தின் சார்பில் கடந்த மார்ச் 7ஆம் தேதி சோழங்கநல்லூர் பழைய மாமல்லபுர சாலையில் ஒருங்கிணைக்கப்பட்ட "மார்ச் 8 - அனைத்துல உழைக்கும் பெண்கள் நாள் 2014" சந்திப்பின் முழக்கம் இதுதான் "பாதுகாப்பும் சமத்துவமும் எனக்கான சலுகைகள் அல்ல, எனது உரிமைகள்".
தோழர் சமந்தா இந்த நிகழ்வை தலைமையேற்று ஒருங்கிணைத்து கொடுத்தார். "பெண்களுக்கு வேண்டும் சுதந்திரம், அப்பத்தான் ஆணுக்கும் கிடைக்கும் சுதந்திரம் சுதந்திரம்" என முடியும் எழுச்சிமிகு முழக்கங்களோடு உழைக்கும் பெண்கள் நாள் சந்திப்பு இனிதே தொடங்கியது.
முதலில் சேவ் தமிழ்சு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில் அனைத்துலக உழைக்கும் பெண்கள் நாள் பற்றிய வரலாறைப்பற்றி உரை நிகழ்த்தினார். "அனைத்துலக உழைக்கும் பெண்கள் நாள் என்பது வெறுமனே பெண்கள் தினம் என சுருங்கி கோலப்போட்டி, அழகிய ஆடைப்போட்டி, சமையல் போட்டி என வெறும் பகட்டான நாளாக ஆக்கப்பட்டுவிட்டது, உண்மையில் உழைக்கும் பெண்களுக்கு பல உரிமைகளை பெற்றுத்தந்த நாள் இது, இந்த உரிமைப்போராட்டத்தில் பலரும் ரத்தம் சிந்திய நூறாண்டுகால வரலாறு இருக்கிறது.
மன்னராட்சி காலத்தில் போரில் வெற்றி பெற்றால் தோற்ற நாட்டில் உள்ள ஆடு மாடு கோழி போல பெண்களை அடிமைகளாக எடுத்துச் செல்வார்கள். பின்னர் அனைவரும் சேர்ந்து தொழில் செய்யும் காலகட்டத்தில் வீட்டில் இருந்து நூல் நூற்பது, நெசவு, உழவு, மீன்பிடி என அனைத்து தொழிலிலும் பெண்கள் ஈடுபடுத்தப்பட்டார்கள். 300 ஆண்டுகளுக்கு முன்னால் ஐரோப்பா கண்டத்தில் ஏற்பட்ட தொழில் புரட்சியின் காரணமாக பட்டறைத் தொழில் இயந்திர ஆலைத் தொழிலாக மாறியது. அந்த சமயத்தில்தான் வீட்டில் முடங்கிக் கிடந்த பெண்கள் முதன்முதலில் இந்த புதிய சமூக உற்பத்தியில் ஈடுபடுத்தப்பட்டார்கள். மனித
சமூகத்தில் 50 விழுக்காடாய் இருந்த பெண்கள் தாங்கள் ஒரு இனம் என்பதை உணர்ந்தார்கள்.
பஞ்சாலை தொழிற்சாலை, ஆடை தயாரிக்கும் தொழிற்சாலை போன்றவற்றில் வேலைபார்க்கும் தொழிலாளியிடம் 16 மணிநேரத்திற்கு மேல் வேலைவாங்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட ஆண்கள் போராடினாலும், பெண்களுக்கே உரிய பிரச்சனைகளான குழந்தைப்பேறு காலம் போன்றவற்றை கணக்கில் எடுத்துக்கொண்டு வேலை நேரத்தை 10 மணிநேரமாக குறைக்கவும், ஆணுக்கு சமமான கூலி வழங்கவும் வலியிறுத்தி முதன்முதலில் 1820ல் பெண்கள் குழு ஒரு போராட்டத்தில் அமெரிக்காவில் ஈடுபட்டது. அதன் பிறகு வரிசையாக பல போராட்டங்கள் நடந்தாலும், பல இடங்களிலும் இருந்து பல்லாயிரம் பெண்கள் ஒன்றாக கூடி நியூயார்க் நகரில் 1857ஆம் ஆண்டு இதே மார்ச் 8ஆம் நாள் மிகப்பெரிய அளவில் ஒரு போராட்டத்தை பெண்கள் குழு நடத்தியது. அதில் 16 மணிநேர வேலை நேரத்தை 10 மணிநேரமாக குறைத்தல், ஆணுக்கு சமமான கூலி என்ற கோரிக்கையோடு ஆண்களுக்கு மட்டுமே இருந்த அரசை தீர்மானிக்கும் வாக்களிக்கும் உரிமையை முதன்முதலில் தங்களையும் மனிதனாக அங்கீகரித்து பெண்களுக்கும் வேண்டும் என்று கோரினர். பல ஆண்டுகள் போராடி இந்த கோரிக்கைகளை வென்றெடுத்திருக்கிறோம்., குறிப்பாக பெண்கள் வாக்களிக்கும் உரிமைக்கான போராட்டம் 1847ல் ஆரம்பித்து 1980ல் தான் உலகில் அனைத்து பெண்களுக்கும் வாக்களிக்கும் உரிமை பெற்று முடிவடைந்துள்ளது.
இந்தியாவை பொறுத்தவரையில் வரி போடுவதில் இருந்து மக்களின் தலைவிதி அனைத்தையும் தீர்மானிக்கும் நாடாளுமன்றத்தின் உறுப்பினராக 33% பெண்களுக்கு அரசியல் உரிமைக்கான இடஒதுக்கீடு வேண்டும் என்ற நீண்ட நாளைய கோரிக்கையை எல்லா கட்சிகளும் ஆதரித்தாலும் எந்த கட்சியிலும் 33% இடம் பெண்களுக்கு வழங்கப்படுவதில்லை. வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட இதே மார்ச் 8ஆம் நாள் 1908 ஆம் ஆண்டு மீண்டும் நியூயார்க் நகரில் 15ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள் இதே 3 கோரிக்கைகளுக்காக பேரணியாக திரண்டு போராடியபோது அமெரிக்க அரசு தடியடி, கைது என பயங்கர கொடுமையாக ஒடுக்கியது. அதில் 2
குழந்தைகளும், 15 பெண்களும் கொல்லப்படுகிறார்கள், இந்த தீரமிக்க போராட்டத்திற்கு பின்புதான் உலகில் முதன்முதலாக பெண்ணுக்கு வாக்குரிமை கிடைத்தது.
இப்படியான உயிர்த் தியாகத்தில் கிடைத்ததுதான் நமது உரிமைகள். இதனை நினைவு கூறும் வகையிலும், சாதி, மதம், இனக்குழு, நாடு என அனைத்தும் கடந்து உலகத்தில் உள்ள அனைத்து உழைக்கும் பெண்களும் இணைந்து தங்களுடைய உரிமைகளுக்காக போராட வேண்டியுள்ளது என்பதை வலியிறுத்தியும் ஜெர்மனியைச் சேர்ந்த தோழர் கிளாரா 1910ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் 17 நாடுகளைச் சேர்ந்த உழைக்கும் பெண்களை இணைத்து அனைத்துலக பெண்கள் நாளாக மார்ச் 8ஆம் நாளை கொண்டாடினார்கள். 1911 முதல் உலகம் முழுவதும் அனைத்துலக உழைக்கும் பெண்கள் நாளாக மார்ச் 8 கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் முதன்முதலில் 1943ஆம் ஆண்டு அப்போதைய பாம்பே நகரிலும், பின்னர் 1957ஆம் ஆண்டு
புனாவிலும் அனைத்துலக பெண்கள் நாள் கொண்டாடப்பட்டது.
1910க்கு பிறகான காலகட்டத்தில் வளர்ந்த நாடுகளின் நாடுபிடி போட்டிக்காக நடைபெற்ற முதலாம் உலகப்போரில் பல்லாயிரம் மக்கள் கொல்லப்பட்டனர். அப்போது போரை நிறுத்து, உணவைக்கொடு என்பதே ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாக இருந்தது. அப்போதைய ஆண்டுகளில் மார்ச் 8 ஆம் நாளில் பெண்கள் உணவிற்காகவும், தங்களுடைய சுயமரியாதையை வலியுறுத்தியும் "எங்களுக்கு ரொட்டியைக் கொடு, ரோஜாக்களை கொடு"(Bread and Roses) என்ற முழக்கத்தோடு வீதியில் இறங்கி போராடினார்கள். ஐரோப்பாவில் பல பகுதிகளில் "கந்தக துகள்களில் இருந்து எங்கள் துணைவர்களை விடுவி" என்று முழக்கமிட்டனர் பெண்கள். இரண்டாம் உலகப்போர் காலத்தில் இத்தாலி போன்ற நாடுகளில் நடந்த சர்வாதிகார பாசிச கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக பெண்கள் போராடினார்கள்.
இவ்வளவு வளர்ச்சியடைந்த காலத்திலும் இன்றும் உழைக்கும் பெண்களுக்கான போராட்டம் குறைந்தபாடில்லை. அலுவலகத்திலும், வீட்டிலும் தொடரும் பாலியல் கொடுமை, அலுவலகத்தைவிட்டு வெளியில் வந்தால் பாதுகாப்பற்ற சூழ்நிலை, கண்முன்னால் அலுவலக அருகாமையிலேயே டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை பார்த்த உமா மகேஸ்வரி கொல்லப்பட்டுள்ளார், உயிருக்கே பயந்துதான் பெண் வெளியில் வரவேண்டியுள்ளது... பாதுகாப்பைத்தாண்டி சமத்துவமான சூழல் உழைக்கும் பெண்களுக்கு இன்றளவும் இல்லாமல் தான் உள்ளது. உரிய வேலை, தளத்திற்கே சென்று வேலைபார்க்கும் (Onsite Job) வாய்ப்பு இவற்றில் பாரபட்சம், திருமணமானால் மீண்டும் வேலை பார்ப்பதில் சிக்கல், வேலைக்கு வந்தால் குழந்தைப்பேறு காலத்தில் விடுமுறையில் சிக்கல், பின்னர் குழந்தை வளர்ப்பில் சிக்கல், குழந்தை பிறந்தபிறகு பெரும்பாலான பெண்கள் வேலைக்கு வருவதில் மிகப்பெரிய சிக்கல்... இப்படி வேலை (Career) என்பது ஆண்களுக்கானது என்றே வரையறுக்கிறது. சமத்துவமின்மை எந்த அளவிற்கு வேலையிடத்த்தில் உள்ளது என்பதை நம்மோடு வேலைசெய்யும் குழுத் தலைவர், மேலாளர்களில் எத்தனை பேர் பெண்கள் என்று பார்த்தாலே நமக்கு உண்மை விளங்கிவிடும். பாதுகாப்பும், சமத்துவமும் அரசும், சமூகமும் தரவேண்டிய சலுகையோ கருணையோ பிச்சையோ அல்ல, அது நமது உரிமை. அதை உரக்க சொல்லும்போதுதான் இந்த சமூகம் பெண்கள் உரிமை குறித்த தேவையைப் புரிந்துகொள்ளும். அதற்கு இந்த மார்ச் 8 அனைத்துலக உழைக்கும்
பெண்கள் நாளில் உறுதியேற்போம்."
அதனைத் தொடர்ந்து பெண்களின் இன்றைய நிலை குறித்து வீதி குறுநாடகம் ஒன்று நிகழ்த்தப்பட்டது. தோழர் சமந்தா பெண் நாயகியாக நடிக்க, தோழர்கள் அண்ணன்,தந்தை, வீதியில் பார்க்கும் ஆண்கள், அலுவலக மேலாளர், பெற்றோர் தேர்ந்தெடுத்த துணை ஆகிய பாத்திரத்தில் நடித்தார்கள். நாடகம் முழுவதும் இங்கே பதியப்பட்டுள்ளது, ( http://save-tamils.blogspot.in/2014/03/6.html ).
புதிதாக இயக்கத்தில் இணைந்த தோழர் சபானா அவர்கள் எப்படி ஒரு பெண் தன் ஒவ்வொரு கட்டத்திலும் கொடுமைகளை அனுபவிக்கிறார் என்பதை பற்றி உரையாற்றினார். "ஆண்களுடைய போராட்டம் பணம் சம்பாதிப்பதிலும், குடும்பத்தை வழிநடத்துவதிலும் மட்டும் தான் உள்ளது. ஆனால் ஒரு பெண் தன் வாழ்வின் ஒவ்வொரு படிக்கட்டிலிலும் போராட்டமாகத்தான் உள்ளது. ஒரு பெண் படிக்க பள்ளிக்கு செல்லும்போதே போராட்டம் ஆரம்பித்துவிடுகிறது, பெண்ணை பத்திரமாக பார்த்துக்கொள் என்று சுற்றத்தார் பெற்றோரிடம் சொல்வார்கள், பெற்றோரும் பெண்ணை காயப்படுத்துவார்கள். நினைத்த கல்லூரியில் விரும்பிய பாடம் எடுத்து படிக்க விடமாட்டார்கள். அதைத்தாண்டி வேலைக்கு வருவதாக இருந்தால் பெற்றோர், உற்றார், உறவினர் என அனைவரிடமும் அனுமதி வாங்க வேண்டியுள்ளது. அதன்பிறகு ஐ.டி.துறை வேலை பார்த்தால் பெண்கள் திமிராக ஆணுக்கு சமமாக இருப்பார்கள் என குறை கூறுவார்கள், துணையை பெற்றோரே தேடும் போதும் இதையெல்லாம் சொல்லிக்காட்டி பெண்ணின் மனதை துன்புறுத்துவார்கள். இந்த இடத்திற்கு வேலைக்கு வருவதற்கே பெரும் போராட்டமாக இருக்கையில் பாதுகாப்பு என்பது பெரிய அச்சமாக உள்ளது. பெண்ணுக்கான சுதந்திரம் ஆணிடம் கேட்டுப்பெறுவதல்ல அவளே எடுத்துக்கொள்வதுதான், எப்படி ஒரு ஆண் தனக்கான உரிமையை யாரிடமும் கேட்பதில்லையோ அப்படித்தான் பெண்ணிற்கும். இதை ஆணும் புரிந்து கொள்ளவேண்டும். தனக்கான உரிமையை கேட்பது என்பதே இழிவானது. அப்படியான சூழ்நிலையில் தான் தமிழ்நாட்டு பெண்கள் நிலைமை உள்ளது. இதை மாற்றுவது நமது எல்லோர் கையிலும் தான் உள்ளது".
பின்னர் தோழர் சமந்தா அவர்கள் எப்படி தன்னுடைய சாதி மறுப்பு சுயமரியாதை திருமணத்தின் போது உற்றார் உறவினர் நண்பர்களால் கேள்விகளுக்கு உட்படுத்தப்பட்டார் என்பதை விளக்கினார். சுயமரியாதை திருமணமே பெண்ணுக்கு சமமான மரியாதை தரும் இணை ஏற்பு விழா என்பதை தன்னுடைய அனுபவத்தில் இருந்து எடுத்துக்கூறினார். சாதி மறுத்தும் தனக்கு பிடித்த காதல் துணைவரோடு வெற்றிகரமான வாழ்க்கையை நடத்த முடியும் என்பதை பிறருக்கும் நம்பிக்கையூட்டும்படி எடுத்தியம்பினார். முழுமையான செய்தி ஏற்கனவே பதிவாக நம்மிடம் பகிர்ந்துள்ளார் ( http://save-tamils.blogspot.in/2014/03/1.html ).
அவரை அடுத்து எழுத்தாளரும், சமூக செயற்பாட்டாளரும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு நீதிகிடைக்க வழக்காடு மன்றம் மூலம் பல வழக்குகளை பெண்கள் விடுதலைக்காக பல பெண்கள் அமைப்புகள் மூலம் களமாடிவருபருமான தோழர் ரேவதி அவர்கள் நமது நாட்டில் பெண் உரிமைப் போராட்டியவர்கள் வரலாற்றைப் பற்றியும் இன்றும் அதன் தேவை பற்றியும் பேசினார்கள். "முதன்முதலில் பண்டித ரமாபாய் பெண்கள் உரிமைக்காக இந்திய சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் போராடினார். தமிழ்நாட்டில் குஞ்சிதம் குருசாமி, ராமாமிர்த அம்மையார் என திராவிட இயக்கத்தை, இடதுசாரி அமைப்பை சார்ந்த பல பெண்கள்
போராடினார்கள். ஆனால் இன்றைக்கும் பெண் உரிமை என்பது எட்டாக்கனியாக உள்ளது. திவ்யா என்ற ஒரு பெண் தன் காதல் துணையாக தலித் இளைஞன் இளவரசனை தேர்ந்தெடுத்த ஒரே காரணத்திற்காக மூன்று தலித் கிராமங்கள் தருமபுரியில் எரிகின்றது. எங்கே சென்று கொண்டிருக்கிறோம் நாம். எங்கெல்ஸ் குறிப்பிடுவார் உலகில் தோன்றிய முதல் அடிமைத்தனம் ஆண் பெண்ணை அடிமைப்படுத்தியதுதான் என்று. ஆம் முதலில் தோன்றிய அடிமைத்தனம் கடைசியாகத்தான் போகும். ஆனால் அதுவாகவே போய் விடாது. நம்முடைய இடையறாத போராட்டத்தால் தான் முழுமையான உரிமை பெண்ணுக்கு கிடைத்து பெண்ணடிமைத்தனம் நம் சமூகத்தைவிட்டுப் போகும்".
பின்னர் அனைத்துலக உழைக்கும் பெண்கள் நாள் கொண்டாட்டத்தின் தேவை குறித்து தோழர் செந்திலும், தோழர் நாசரும் வினா விடை பாணியில் ஒரு நகைச்சுவை கலைநிகழ்வை அரங்கேற்றினார்கள். அதனை அடுத்து நிறைவுரையாக தோழர் பரிமளா அவர்கள் பெண்கள் மீதான வன்கொடுமைகள் எந்த அளவிற்கு உள்ளது என்பது பற்றியும், பெண் சமத்துவத்திற்கான உரிமைப் போராட்டத்தின் அடிப்படையைப் பற்றியும் பேசினார்கள். "இலயோலா கல்லூரியில் ஒரு பேராசிரியைக்கு அவரது துறைத் தலைமைப் பேராசிரியரால் கடந்த ஏழு ஆண்டுகளாக நடந்துவரும் பாலியல் கொடுமைக்கு எதிராக இவ்வளவும் கல்லூரிக்குள்ளேயே இருந்து போராடி நீதி கிடைக்காமல் போலீசில் புகார் கொடுத்திருக்கிறார். சட்டமும் கல்லூரி நிர்வாகமும் பாலியல் கொடுமை செய்தவரை தண்டிக்காமல் துன்புறத்தப்பட்டவரை கல்லூரியில் இருந்து நீக்கியுள்ளது. இதுதான் தமிழ்நாட்டிலேயே புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தின் உண்மை நிலை. இதற்கு எதிராக இன்று ஆர்பாட்டம் நடத்தச் சென்றோம், எங்களை 5 நிமிடம் கூட அங்கு நிற்கவிடாமல் கைது செய்கிறது காவல்துறை. அப்படி என்றால் அரசும், காவல்துறையும், சட்டமும் அநீதிக்கு துணை போகிறதா?...
இந்தியாவின் முதன்மை ஐடி நிறுவனம் டிசிஎஸ். அதில் வேலை பார்த்த உமா மாகேஸ்வரி அலுவலகத்திற்கு அருகிலேயே வன்புணர்ச்சி செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார். எதற்கும் வராத ஆளில்லாத விமானம் கொலையின் தடத்தை தேட வந்தது. அலுவலகத்தில் வேலை பார்க்க வந்த பெண்ணின் சாவிற்கு முன்பே பாதுகாப்புக்கு தரமுடியாத நிலைமையில் தான் நாட்டின் பெரிய நிறுவனமான டிசிஎஸ்-யே உள்ளது. அரசிற்கும் அதைப்பற்றி கவலை இல்லை, டிசிஎஸ் பெயர் கலங்கமடையாமல் பார்க்கிற வேலையை முதன்மையாக செய்கிறது.
உலகின் முதன்முதலாக பெண்களுக்கான ஜமாத் அமைத்து பெண்களுக்கான உரிமைக்காக இசுலாத்திற்குள் தொடர்ந்து போராடி வெற்றி பெற்று வருபவரை கூப்பிட்டு சென்னையில் ஒரு கருத்தரங்கம் நடத்த முடியவில்லை. இதுதான் நமது சமூகத்தில் மத நிறுவனங்களின் இன்றைய நிலைமை. திவ்யா காதலித்தவரை திருமணம் செய்யவிடாமல் சாதியவாதிகள் கிராமங்களை எரித்தார்கள். சாதி என்கிற சமூக நிறுவனம் நீதிமன்றம் வரை சென்று அவர்களைப் பிரித்து இறுதியாக இளவரசனையும் கொன்றது. அரசு இதில் வேடிக்கைதான் பார்த்ததே ஒழிய திவ்யாவின் விருப்பம் கிள்ளி எறியப்படுவதைத் தடுப்பதில் சிறு முனைப்பும் காட்டவில்லை.
பெண்ணை வெறும் வீட்டின் சொத்தாகவும், திருமணம் ஆகும்போது வரதட்சணையாக அதிகமாக கொடுக்க வேண்டியிருப்பதால் இந்தியாவில் பல பெண்கள் கருவிலும் சிறுவயதிலும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் 6 வயது முதல் 60 வயது வரை வன்புணர்ச்சிக்கு ஆளாகி பல பெண்கள் மடிகிறார்கள். பல பகுதிகளில் நாட்டில் 1000க்கு 800, 900 பெண்களே உள்ளார்கள். அமர்த்தியாசென் இவர்களை தேடப்படும் பெண்கள் (Missing Women) என்கிறார். ஆராய்ச்சியாளராக, மருத்துவராக, விண்வெளி வீரராக, விளையாட்டில் வீராங்கனையாக வரவேண்டிய எத்தனையோ பெண்கள் இப்படி மாண்டுள்ளார்கள்.
எவ்வளவு புகழ்மிக்க கல்வி நிறுவனமானாலும், தொழில் நிறுவனமானாலும், மத நிறுவனமானாலும், சாதி நிறுவனமானாலும் எந்த நிறுவனமாக இருந்தாலும் பெண்ணிற்கு அங்கே எந்த உரிமையும் தரப்படுவதில்லை... எந்த இடத்திலும் கொடூரமாக வன்கொடுமைக்குள்ளாகிறாள்... அரசும், சமூகமும் வேடிக்கை மட்டும் பார்ப்பதில்லை, கொடியவர்களுக்கு தன் சீரிய அமைதியின் மூலம் ஒத்துழைப்பையும் கொடுக்கிறது. ஆக பெண்களுக்கு உரிய அரசியல் அதிகாரம் கிடைப்பதாலும், சமூகத்தில் தானும் சக மனுசி என்று நிலைநாட்டுவதால் மட்டுமே தனக்கான உரிமையைப் பெண் அடைய முடியும். அதுவரை பாதுகாப்பும்,
சமத்துவமும் பெண்களுக்கு கேள்விக்குறியே..."
இறுதியாக 4 வயது மற்றும் 6 வயது நிரம்பிய இரு குழந்தைகள் மேடையேறி 20க்கும் மேற்பட்ட திருக்குறள் சொல்லி ஆணுக்கு இணையாக பெண்களால் அனைத்தும் முடியும் என்று காட்டி நிகழ்வை அர்த்தமுள்ளதாக்கினார்கள்.
தோழர் செந்தில் நன்றியுரை ஆற்றினார். அனைத்துலக உழைக்கும் பெண்கள் நாள் 2014 இனிதே நிறைவுற்றது.
ஸ்னாபக் வினோத்
சேவ் தமிழ்சு இயக்கம்.
Thursday, March 13, 2014
போர்க்குற்றமா, இனப்படுகொலையா ? உள்நாட்டு விசாரணையா, பன்னாட்டு புலனாய்வா?
பிப்ரவரி 26 அன்று தமிழ்நாடு மாணவர் இயக்கம் வள்ளுவர் கோட்டத்தில் "இலங்கை செய்த போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கெதிரான குற்றங்கள், இனப்படுகொலைக் குற்றங்கள் மீது தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வு நடத்தக்கோரியும், ஈழத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்தும் தீர்மானத்தை ஐ.நா. அவையில் இந்திய அரசு கொண்டுவர வேண்டும்" என்ற கோரிக்கையை மையப்படுத்தி நடந்த கண்டனப் போராட்டத்தில் சேவ் தமிழ்சு இயக்க ஒருங்கிணைப்பாளர் செந்தில் கலந்து கொண்டு ஆற்றிய உரையின் சாரம் பின்வருமாறு....
இப்போராட்டத்திற்கு வருகைதந்திருக்கும் மாணவர்களுக்கும், பல்வேறு இயக்கங்கள், கட்சிகளைச் சார்ந்த தலைவர்களுக்கும் எனது பணிவான வணக்கம் !
2014 ஆம் ஆண்டு மார்ச்சு திங்கள் ஐ.நா. மனித உரிமை மன்றத்திலே அதன் 25 ஆவது கூட்டத்தொடர் நடக்க இருக்கின்றது. இலங்கைக்கு எதிரான ஒரு வலுவானத் தீர்மானம் வரவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்திய அரசை நோக்கி இப்போராட்டம் நடந்து கொண்டிருக்கின்றது. இப்போது நாம் வருகின்ற மார்ச்சு திங்களை எப்படி அணுக வேண்டும் என்பதற்கு ஐந்து ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று பார்க்க வேண்டியிருக்கின்றது. 2009 ஆம் ஆண்டு மே திங்களிலும் இதுபோலவே, இலங்கை குறித்தான ஒரு தீர்மானம் ஐ.நா. மனித உரிமை மன்றத்திலே நிறைவேற்றப்பட்டது. போர் முடிந்து பத்து நாட்கள் ஆகிய வேளையிலே ஐ.நா. மன்றத்திலே உலக நாடுகள் அனைத்தும் சேர்ந்துநின்று இலங்கை அரசைப் பாராட்டி ஒரு தீர்மானம் கொண்டு வந்தன.
அப்போது இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டிக்க வேண்டும் என்று சொன்ன சுவிட்சர்லாந்து தீர்மானத்தை விவாதத்திற்கே கொண்டுவராமல் முடக்கியதில் இந்திய அரசிற்குப் பங்கு இருக்கிறது. இப்படியாக 2009 ஆம் ஆண்டு முடிந்தது. 2010 ஆம் ஆண்டு அயர்லாந்தின் தலைநகரமாகிய இடப்ளினிலே நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் ஒன்றுகூடி, அந்தத் தீர்ப்பாயத்திலே இலங்கையரசு போர்க்குற்றங்களும், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களும் புரிந்திருக்கின்றன, இனப்படுகொலை நடந்ததற்கான கூறுகள் இருக்கின்றன, ஆனால் அதை உறுதி செய்ய மேலதிக விசாரணை தேவை என்று தீர்ப்பளித்து இலங்கையரசு மீது தற்சார்புள்ள ஒரு பன்னாட்டுப் புலனாய்வு நடத்தப்பட வேண்டுமென்று சொன்னது. அத்தீர்ப்பாயம் சொன்ன அறிக்கையை நாம் ஒரு கேடயம் போல எடுத்துக்கொண்டு தமிழ்நாடு முழுவதும் பரப்புரை செய்தோம். அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டிற்கு வெளியேயும் சென்று பல்வேறு மனித உரிமை ஆர்வலர்களைச் சந்தித்து "இதோ பாருங்கள் ஐயா… வியட்நாமில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து தீர்ப்பளித்த அதே தீர்ப்பாயம், இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து ஒரு தீர்ப்பை வழங்கி இருக்கிறது. எங்கள் பக்கம் நீதி இருக்கிறது என்று எடுத்துக் கூறினோம். கர்நாடகா, கேரளா, ஆந்திரா என்று அண்டை மாநிலங்களுக்கு அத்தீர்ப்பாயத்தின் அறிக்கையை எடுத்துச் சென்றோம். அதன் பிறகு இத்தீர்ப்பாயத்தின் தீர்ப்பு கொடுத்த அழுத்தத்தாலும், புலம்பெயர்ந்த தமிழர்களின் போராட்டத்தாலும், தமிழ்நாட்டு மக்களின் போராட்டத்தின் காரணமாகவும் ஐ.நா. பொதுச்செயளாலர் பான் கி மூன் அவர்கள் மூன்று பேர் கொண்ட வல்லுனர் குழு ஒன்றை அமர்த்தி இலங்கையில் நடந்த போரின் இறுதிக்கட்டத்தில் நிகழ்ந்த அத்துமீறல்கள் குறித்து விசாரிக்கச் சொன்னார். அக்குழு விசாரணை செய்து அதனுடைய அறிக்கையை முன்வைத்தது. அவ்வல்லுனர் குழுவின் அறிக்கையும் இலங்கையரசு புரிந்த போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மீது ஒரு தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வு தேவை என்று 2011 ஆம் ஆண்டு சொன்னது. பிறகு 2013 ஆம் ஆண்டில் செர்மனியில் உள்ள பிரம்மன் நகரிலே மீண்டும் நிரந்திர மக்கள் தீர்ப்பாயம் கூடியது. ‘இலங்கையில் நடந்தது இனப்படுகொலையே’ என்று அத்தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது. இவ்வைந்து ஆண்டுகளில் சேனல்4 வெளியிட்ட நிகழ்படங்கள், பல்வேறு மனித உரிமை அமைப்புகள் வெளியிட்ட அறிக்கைகள், புகைப்படங்கள் என்று பல்வேறு சான்றுகள் வந்த வண்ணம் உள்ளன.
மேலும் தமிழ்நாட்டு மாணவர்கள், மக்கள் போராட்டத்தின் காரணமாக தமிழ்நாட்டுச் சட்டமன்றத்திலே இரண்டு முறை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. முதல் தீர்மானம் 2011 ஆம் ஆண்டிலும் மற்றொன்று 2013 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்டது. 2011 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானத்திலே போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரானக் குற்றங்களை இலங்கையரசு புரிந்துள்ளது என்றும், அதன் மீது ஒரு தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வு தேவை என்றும் தமிழ்நாட்டுச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2013 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டத் தீர்மானத்திலே இலங்கையரசு புரிந்த இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் மீது ஒரு தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வு தேவை என்றும், ஈழத்திலே பொதுவாக்கெடுப்பு நடத்தி தமிழர்களின் அரசியல் வேட்கையைக் கண்டறிய வேண்டும் என்றும் கோரப்பட்டது. இவை தமிழ்நாட்டில் நடந்த மாற்றங்கள்.
2009 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஐ.நா. மனித உரிமை அவையில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 2012, 2013 ஆம் ஆண்டுகளில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவ்விரண்டு தீர்மானங்களும் தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வு பற்றிப் பேசவில்லை எனவே நாம் அத்தீர்மானங்களை ஏற்கவில்லை. 2012 ஆம் ஆண்டிலும், 2013 ஆம் ஆண்டிலும் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள், இலங்கையரசு அமைத்த ‘கற்றப் பாடங்கள் - நல்லிணக்க ஆணைக்குழு’வின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அங்கே ஒர் உள்நாட்டு விசாரணை வேண்டும் என்றும் முன்வைக்கப்பட்டன. அப்படி முன்வைக்கபட்ட தீர்மானங்களைச் சீர்குலைப்பதில் இலங்கையரசிற்குத் துணை நின்றது யார் தெரியுமா? 2009 ஆம் ஆண்டு இனப்படுகொலை வெற்றிகரமாக நடந்து முடிவதற்குத் துணை செய்த அதே இந்திய அரசுதான். தமிழ்நாட்டின் இறையாண்மையைக் கோருகின்ற இந்திய அரசுதான் ஐ.நா. மனித உரிமை மன்றத்திலே இலங்கையரசுக்கு சார்பாக நின்று அத்தீர்மானத்தை சீர்குலைத்தது.
அத்தீர்மானம் எப்படி நீர்த்துபோகச் செய்யப்பட்டது? 2012 ஆம் ஆண்டில் வந்தத் தீர்மானத்திலே "இலங்கை அரசின் உடன்பாட்டுடன்தான் (in consultation and concurrence) ஐ.நா. மனித உரிமை மன்றம் தலையிட முடியும்" என்ற இரண்டு வரிகளைச் சேர்த்ததிலே இந்திய அரசுக்குப் பங்கு இருக்கின்றது. 2013 ஆம் ஆண்டில் வந்தத் தீர்மானத்தை ஏற்பதா? எதிர்ப்பதா என்று தமிழ்நாட்டிலே நாம் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டு இருந்த வேளையிலே இந்திய அரசு மிக நேர்த்தியாக அத்தீர்மானத்தை ஒவ்வொரு வரிகளாக நீர்த்துப் போகச்செய்தது.
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், ஊடகத்துறை, மனித உரிமை அமைப்புகள், நீதித்துறை எனப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிறப்புப் பேராளர்கள் (பிரதிநிதி) இலங்கைக்குள் தங்கு தடையின்றி நுழைய வேண்டுமென்று கடந்த ஆண்டு வந்தத் தீர்மானத்திலே ஒரு பரிந்துரை இருந்தது. அதன் சாரம் என்பது, ஐ.நா. அலுவளர்களுக்கு இலங்கைக்குள் செல்ல தங்குதடையற்ற இசைவு வழங்கப்பட வேண்டும் என்பதாகும். ஒருவேளை அத்தீர்மானத்தில் இப்பரிந்துரை நீக்கப்படாமல் இருந்திருந்தால் ஐ.நா. அவையின் சிறப்புப் பேராளர்கள் அங்கு சென்று இன்னும் பல்வேறு சான்றுகள், பல்வேறு அறிக்கைகள் கொடுத்திருக்க வாய்ப்பிருக்கிறது. மொத்தமாக நான்கு வரைவுகள் வந்தன. நான்காவது வரைவுதான் இறுதியானது, அதுவே நிறைவேற்றப்பட்டது. ஒவ்வொரு வரைவிலும் கொஞ்சம், கொஞ்சமாக இலங்கைக்கு எதிராக இருந்தவை நீக்கப்பட்டும் திருத்தப்பட்டும் இறுதி வரைவில் உப்புச்சப்பில்லாத ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை மிக எளிதாகவும், நேர்த்தியாகவும் செய்து முடிப்பதற்கு இந்திய அரசுதான் பக்கபலமாக இருந்தது. இவைதான் கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த காட்சிகள். இப்பொழுது ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் உயர்ஆணையர் நவநீதம் பிள்ளை அவர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கின்றார். அதில் தெளிவாக இரண்டு பரிந்துரைகளை வழங்கியுள்ளார். ஒன்று இலங்கையரசுக்கும் மற்றொன்று பன்னாட்டுக் குமுகத்திற்கும் ஆகும். இலங்கையரசு புரிந்த பன்னாட்டு விதிமீறல்கள், குற்றங்கள் குறித்து தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வு தேவை என்று ஒரு பரிந்துறையை முன்வைத்துள்ளார். வரும் மார்ச்சு 3 ஆம் நாள் (2014) ஐ.நா. மனித உரிமை மன்றம் ஒன்றுகூட இருக்கிறது. ஒரு திங்களுக்கு இவ்விவாதம் நடக்கும், அதில் ஏதோ ஒரு நாளில் இலங்கை குறித்த விவாதம் நடக்கும். அப்பொழுதும் ஏதோ ஒரு தீர்மானம் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கிறோம். மேற்குலக நாடுகள்தான் இத்தீர்மானத்தைக் கொண்டு வரப்போகின்றது என்பதுதான் இன்றைய நிலை.
நாம் இன்று பிப்ரவரி 26 ஆம் நாள் நின்றுகொண்டு இந்திய அரசை நோக்கி இக்கோரிக்கையை வைத்துள்ளோம். இதுவரை தமிழ்நாட்டுச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றதேவொழிய, இந்திய நாடாளுமன்றத்திலே எந்த ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. இந்த வேளையிலேதான் நாம் இங்கு தமிழ்நாட்டிலே ஒரு முதன்மையான விவாதத்தை நடத்திக் கொண்டிருக்கின்றோம். 2009 ஆம் ஆண்டு மே 19 ஆம் நாள் போர் முடிந்த நாளிலிருந்து, 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 ஆம் நாளுக்குள் ஏறத்தாழ 1500 நாட்கள் கடந்துவிட்டன. இந்த 1500 நாட்களிலும், அதற்கு முன்னதாகவும் இலங்கையில் நடந்து கொண்டிருப்பது இனப்படுகொலை என்பதை தமிழ்நாட்டில் உள்ள எவரும் மறுக்கவில்லை. இந்த ஐந்து ஆண்டுகளிலே இந்திய நாடாளுமன்றத்திலே ஒரு தீர்மானத்தை கொண்டுவந்து, அதைப் பன்னாட்டு அளவில் எடுத்து செல்லுக்கூடிய வலிமை நமக்கில்லை. அதை நாம் ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும். இந்த ஐந்து ஆண்டுகளுக்கான நாடாளுமன்ற கூட்டத்தொடரும் முடிந்துவிட்டது. இனி அடுத்தத் தேர்தல்தான் வரப்போகிறதேவொழிய இடையே அவர்கள் (நாடாளுமன்றம்) கூடுவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை. ஒருவேளை ஈழச்சிக்கலை முன்னிட்டு இங்கு போராட்டம் கொழுந்துவிட்டு எரிந்தால், தமிழ்நாட்டில் உற்பத்தி முடக்கப்பட்டால், இந்திய அமைச்சரவை கூடி ஒரு தீர்மானத்தை ஐ.நா. மன்றத்தில் முன்மொழிவது குறித்து முடிவு எடுக்கலாம்.
மற்றபடி இந்திய அரசே ஒரு தீர்மானத்தைக் கொண்டு செல்வதற்கான வாய்ப்புகள் குறைவு. ஏனென்றால் இயல்புநிலையில் (யதார்த்தம்) இருந்து என்ன நடக்கப் போகின்றது? நாம் எப்படி வினையாற்றுவது? என்று முடிவு எடுக்க வேண்டி உள்ளது. மார்ச்சு திங்களை நெருங்கிவிட்டோம். இத்திங்கள் முடியும்வரை இந்திய அரசு தீர்மானம் கொண்டுவரும், கொண்டுவரும் என்று சொல்வதில் எந்த ஒரு பொருளும் இல்லை. மேற்குலக நாடுகள்தான் தீர்மானத்தைக் கொண்டு வரப்போகின்றன. அத்தீர்மானத்தின் சாரமாக ஒரு தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வு இலங்கையரசு மீது நடத்தப்பட வேண்டும் என்று வந்தால் இந்திய அரசு என்ன செய்ய வேண்டும்? என்பதுதான் நம்முன் உள்ள வினா.
இலங்கையரசு என்ன செய்து கொண்டு இருக்கின்றது? இப்படி ஒரு தீர்மானம் வரப்போகின்றது, அத்தீர்மானத்தை வரவிடாமல் தடுப்பதற்காகவும், தனக்குச் சார்பாகப் பல்வேறு நாடுகளை அணி சேர்ப்பதற்காகவும் இராசபக்சே நடுக்கிழக்கு நாடுகள் தோறும், ஆப்பிரிக்க நாடுகள் தோறும் பயணம் செய்து முடித்துவிட்டு, இலங்கைக்குத் திரும்பி விட்டார். இராசபக்சேவின் தனிச்செயலர் இலலித் வீரதுங்கா என்பவர் கொழும்பில் இருந்து புறப்பட்டு, இசுரேல் வழியாக அமெரிக்கா (வாசிங்டன்) சென்று இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்று வருவதைத் தடுக்க முயற்சி எடுக்கின்றார். இலலித் வீரதுங்கா என்பவர் 2009 ஆம் ஆண்டு போர் நடைபெற்றபோதும் இராசபக்சேவின் செயலாளராக இருந்தார், இப்போதும் அவரே தனிச்செயலர் ஆவர்.
இலங்கையரசின் முன்னாள் கொள்கை வகுப்பாளர்களில் ஒருவர் ’groundviews’ வலைத்தளத்தில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அவர் என்ன சொல்கிறார் என்றால், "அமெரிக்காவிடவும், இசுரேலிடமும் உதவி பெறுவதை விட, அதன் திறவுகோல் என்பது புதுதில்லியில்தான் உள்ளது. அங்கு சென்று பேசினால் அத்தீர்மானத்தைத் தடுக்கவோ அல்லது நீர்த்துப்போகச் செய்யவோ முடியுமேவொழிய அமெரிக்காவிடமும், இசுரேலிடமும் செல்வதால் பயனில்லை" என்று தன் நண்பர் இலலித் வீரதுங்காவுக்கு அறிவுரை வழங்குகின்றார். இப்படியாக இலங்கை அரசுத் தரப்பு தமக்கு எதிராக ஒரு தீர்மானம் வருவதை தடுக்க முயன்று வருகின்றது. வரவிருக்கும் ஒரு திங்கள் கால அளவிற்கு இலங்கையின் குறிக்கோள் என்பது தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வைத் தடுக்க வேண்டும், அதை உள்நாட்டு விசாரணையாக மாற்ற வேண்டும், இப்படியே காலத்தை இழுத்தடிக்க வேண்டும் என்பதுதான்.
இப் பின்னணியிலிருந்து, நாம் என்ன செய்யப்போகின்றோம் என்பதுதான் நம்முன் இருக்கும் வினா. இப்போது நாம், ‘அந்தப் போரே குற்றம் - அதில் என்னப் போர்க்குற்றம்? போர்க்குற்றம் என்பதை நாம் ஏற்கவில்லை’ என்று சொல்கின்றோம். யாரெல்லாம் அன்று இடப்ளின் நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் தீர்ப்பைத் வைத்துக்கொண்டு எல்லா இடங்களிலும் பரப்புரை செய்தார்களோ அத்தோழர்களே, ‘போர்க்குற்றம் என்று சொல்வதை நாங்கள் ஏற்கவில்லை’ என்ற இடத்திற்குப் போய்விட்டார்கள். போர்க்குற்றத்தையும், இனப்படுகொலைக் குற்றத்தையும் நேரெதிராக பேசிக்கொண்டிருக்கும் விவாவதம் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது.
சட்ட நுணுக்கங்களுக்குள் சென்று முன்மாதிரிகளைக் காட்டி உருவாண்டா, சூடான், கிழக்கு தைமொர் என்று விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. சட்ட விதிகள் எப்போதும் இருந்து கொண்டுதானிருக்கின்றன. பன்னாட்டு விதிகளும்சரி உள்நாட்டுச் சட்டங்களும்சரி மக்களுடைய போராட்டங்களின் அழுத்தத்திற்கேற்பவும், உலக அரசுகளின் நலன்களுக்கு ஏற்பவும்தான் பயன்படுத்தப்படுகின்றன. சட்டத்தில் உள்ள நுணுக்கங்களை மட்டுமே வைத்து அரசியலை முடிவு செய்ய முடியாது. நமக்கிருக்கும் சிந்தனைத் தடை என்னவென்றால் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னால் தமிழ்நாட்டில் வந்திருக்கும் ஆற்றல்களும், புலம்பெயர் நாடுகளில் வந்திருக்கும் ஆற்றல்களும் சூரப்புலிகளாக மாறி ஐ.நா. அவைக்குள்ளேயே தமிழீழ விடுதலையை பெற்றுத்தந்துவிட முடியும் என்று நினைக்கிறார்கள். ஆனால் தமிழீழ விடுதலை என்பது ஈழத்தில்தான் இருக்கின்றது. தாயகத்திலிருந்து போராடுவதிலிருந்துதான் சிங்களப் பேரினவாத அச்சை முறிக்க முடியுமேவொழிய தமிழ்நாட்டில் இருப்பவர்களோ, புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கும் தமிழர்களோ ஈழத்தமிழர்களுக்கு விடுதலையை வாங்கி, தங்கத்தாம்பாளத்தில் வைத்துத் தரமுடியாது. நம்முடையப் போராட்டம் அனைத்தும் ஈழத்தமிழர்கள் போராடுவதற்கான ஓர் அரசியல் வெளியை உருவாக்குவதற்கு மட்டுமேவொழிய, நாமே அவர்களின் விடுதலை பாரத்தைச் சுமந்துவிடமுடியாது. நம் தோழர்களில் சிலர் இப்படி நினைக்கிறார்கள், இங்கு நாம் போராடுவதால் மேற்குலக அரசுகள் ஐ.நா. அவையில் "பாருங்க, பாருங்க இனப்படுகொலை நடந்திருக்கு என்று ஒரு புலனாய்வு ஆணையம் அமைத்து, அதன் தொடர்ச்சியாக இனப்படுகொலை என்று நிறுவப்பட்டு, அதன் தொடர்ச்சியாக பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டு, தமிழீழத்தைக் கையில் கொடுத்து விடுவார்கள்” என்று நினைக்கின்றார்கள். அப்படியெல்லாம் கொடுக்கமாட்டார்கள்.
நம்முடையப் போராட்டம் அனைத்தும் ஈழ்த்தில் ஒரு மக்களாட்சி வெளி உருவாவதற்கும், தமிழீழ மக்கள் மீண்டும் சிங்கள அரசிற்கு எதிராக எழுந்து நின்று போராடுவதற்கும் உதவ முடியுமேவொழிய, நாமே விடுதலையைப் பெற்றுத் தந்துவிட முடியாது. இதைப் புரிந்துகொள்ளாமையால்தான் ‘போர்க்குற்ற விசாரணை’ என்ற தீர்மானம் வந்துவிட்டால் இதுவாகிவிடும், அதுவாகிவிடும் என்றெல்லாம் விவாதித்துக்கொண்டு இருக்கிறோம்.
நான் சில வாதங்களை இங்கிருக்கும் தோழர்களுக்கும், மாணவர்களுக்கும் முன்வைக்க விரும்புகின்றேன். இந்த மேடையில் அமர்ந்து இருக்கும் மாணவர் கிருட்டிணாவோடு இணைந்து 2009 ஆம் ஆண்டு ஐ.நா. மன்றத்தை நோக்கி ‘பொதுவாக்கெடுப்பு நடத்து’ என்ற கோரிக்கையை முன்வைத்து, (போர் முடிந்து மூன்று திங்கள் முடிந்தநிலையில்) மதுரையில் ஒரு மாநாடு நடத்தினோம். அப்போது தமிழ்நாட்டில் என்ன விவாதம் நடந்தது தெரியுமா? "ஏம்பா 1977 ஆம் ஆண்டிலேயே தமிழீழ மக்களெல்லாம் வாக்களித்து தனிநாடுதான் வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். நீங்க என்ன புதுசா பொதுவாக்கெடுப்பு நடத்தனும்னு சொல்லி கோரிக்கை வைக்குறீங்க. ஈழக்கோரிக்கையை கைவிட்டுவிட்டு பொதுவாக்கெடுப்பு நடத்துனு சொல்றீங்க" என்று சொன்னார்கள். பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்து, “பொதுவாக்கெடுப்பு நடத்தக்கோருவது சரியானதுதான். இன்னும் பரவலாக ஆற்றல்களை நாம் அணிதிரட்ட முடியும்” என்று சொன்ன பிறகு தமிழ்நாட்டில் ஒப்புக்கொண்டார்கள். அது வரைக்கும் பொதுவாக்கெடுப்பையும் தனிஈழத்தையும் எதிராக நிறுத்திவைத்துப் பேசினார்கள். பொதுவாக்கெடுப்பு நடத்தினால் இலங்கையா, தமிழீழமா என்ற வினாவைத் தமிழீழ மக்களிடம் வைப்பார்கள். பொதுவாக்கெடுப்பு என்று சொன்னால் இலங்கையைக் கூட தமிழீழ மக்கள் தேர்ந்தெடுக்க வாய்ப்பிருக்கிறது. அதனால் நீங்கள் ஈழக் கோரிக்கைக்கு எதிராகப் பேசுகின்றீர்கள் என்று சொல்வது தவறான கருத்து. தமிழீழ மக்களை ஒரு போராட்ட ஆற்றல் என்று கணக்கில் எடுக்காதவர்கள்தான் இப்படிப் பேசுவார்கள். ‘வீரவிடுதலை வேண்டி நின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ’ என்ரொரு பாரதியார் கவிதை இருக்கின்றது. இலங்கையா? ஈழமா? என்று கேட்டால் தமிழீழ மக்கள் ஈழம் என்று தேர்ந்தெடுப்பார்கள் என்ற அடிப்படையில்தான் நாம் பொதுவாக்கெடுப்பு என்ற கோரிக்கையை முன் வைக்கின்றோம். எனவே தமிழீழ மக்களின் போராட்டமும், அவர்களின் விடுதலை வேட்கையும்தான், அரசியலின் அடுத்தடுத்த நகர்வுகளைத் தீர்மானிக்கின்றது என்பதை நாம் எப்போதும் கணக்கில் எடுக்க வேண்டும்.
இரண்டாவது கூடங்குளம் அணுவுலைப் போராட்டம் நடந்து கொண்டிருக்கின்றது. அணுவுலையை மூட வேண்டும் என்பதுதான் நமது கோரிக்கை. போராட்டம் நடந்து கொண்டு இருக்கும்போது, மக்கள் மீது வழக்குகள் போடப்பட்டன. அப்போது போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப்பெறு என்று ஒரு கோரிக்கை வைக்கிறோம். உடனே வழக்குகளைத் திரும்பப்பெறு என்று கோரிக்கை வைக்கிறார்கள், அணுவுலையை மூட வேண்டாமா? என்று கேட்பார்களாயின் நம்முடைய பதில் இதுதான் - அவ்வழக்குகளைத் திரும்பப்பெறவேண்டும் என்று சொல்வதே மக்கள் போராடுவதற்கான வெளியை உருவாக்கத்தான். அப்போரட்டத்தின் மூலமாக அணுவுலையை மூட வேண்டும் என்பதற்காகவேவொழிய வழக்குகளை திரும்பப்பெறு என்பதும் அணுவுலையை மூடவேண்டும் என்பதும் ஒன்றுக்கொன்று எதிரானது அல்ல.
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் தூக்குத் தண்டனையை எடுத்துக் கொள்வோம். மூன்று தமிழர்களும் குற்றமற்றவர்கள் என்பதை மக்கள் மன்றத்தில் எடுத்துச் சென்றோம். தலைமைநீதிமன்றத்திற்குள் நமது தரப்பால் முன்வைக்கப்பட்ட வாதம் என்ன? மூத்த வழக்குரைஞர் இராம் செத்மலானி எப்படி வாதாடினார்? மூன்றுபேரும் குற்றமற்றவர்கள் என்று சொல்லியா வாதாடினார்? இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்குள் என்ன வாய்ப்பு இருக்கிறதோ அவ்வாய்ப்புகளைப் பயன்படுத்தித் தன் வாதத்தை முன்வைத்தார். ‘23 ஆண்டுகள் சிறைக்குள் கழித்து விட்டார்கள், இதற்குப் பிறகும், மீண்டும் ஒருமுறை அவர்களைத் தூக்கில் போடக்கூடாது’ என்றுதான் வாதாடினார். மூவருக்கும் சாவுத்தண்டனைக் கொடுத்த முந்தைய தீர்ப்பை வினாவிற்குட்படுத்தவில்லை அவர். அவர்களுக்கான வாழ்வுரிமை என்ற அடிப்படையிலேயே வாதத்தை முன்வைத்து வெற்றி கண்டார். மூவரும் குற்றமற்றவர்கள் என்று இராம் செத்மலானி வாதாடி இருக்க வேண்டும் என்று யாராவது குறை கூறினார்களா? நமது நோக்கமான மூவரை தூக்குக் கயிற்றிலிருந்து விடுவிக்க முடிந்தது என்று எல்லோரும் பாராட்டத்தானே செய்தார்கள்.
அது போலத்தான், ஐ.நா. மனித உரிமை மன்றத்திற்குள்ளே நாம் வைக்க வேண்டிய வாதம், அங்குள்ள விதிகள், வாய்ப்புகள் ஆகியவற்றைப் பயன்படுத்திக்கொண்டு நாம் எப்படி முன்னேறிச் செல்ல வேண்டும் என்று நாம் ஆராய வேண்டும். இங்கு மக்கள் மன்றத்திலே நாம் வைத்துக் கொண்டிருக்கும் முழக்கங்களை ஐ.நா. மன்றத்திலேயும் வைத்தால், நாம் ஆட்டத்திலேயே இல்லை என்று பொருள். பல நாடுகள் இதுபோன்ற தீர்மானம் வரும்போது யாருக்கும் வாக்களிக்காமல் விலகி நிற்கின்றார்கள். அது போல் நாமும் புறக்கணிக்கின்றோம் என்பதுதான் மேற்படி வாதங்களின் பொருள். அத்தீர்மானத்தைக் கண்மூடித்தனமாக எதிர்ப்பதோ அல்லது கண்டும் காணாமல் இருப்பதோ அரசியல் போராட்டத்தில் முன்னேறிச் செல்வதற்கு உதவாது.
வரலாறு நமக்கு தந்திருக்கும் படிப்பினைகளை, தங்கத்தாம்பளத்தில் வைத்துக் கொடுக்கவில்லை. குருதியும் சதையுமாக பல்லாயிரணக்கான உயிர்களின் அழிவில்தான் சில படிப்பினைகளைக் கொடுத்திருக்கிறது. எதிரிகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம் நிறையவே இருக்கின்றது. அவன் நம்மைவிட வலிமையுடையவனாக, திறமையாளனாக, பலரையும் தன்னோடு இணைத்துக்கொண்டுதான் இப்போரில் வெற்றி பெற்றிருக்கின்றான். அதை யாரும் மறுப்பதற்கில்லை. அவன் வெற்றியின் உச்சத்தில்தான் நின்றுகொண்டிருக்கின்றான். இந்த ஐந்து ஆண்டுகாலத்தில் நாம் போராடிப் போராடி அவனுக்குச் சில நெருக்கடிகளைத் தந்துகொண்டிருக்கின்றோம். இயங்கியலில் ஒரு விதியிருக்கிறது, எல்லா முரண்பாடுகளும் ஒரு புள்ளியில் இரு அணிகளாகப் பிரிகின்றன. இராசபக்சே அதை மிக நேர்த்தியாகக் கையாண்டு, ‘விடுதலைப் புலிகள் எதிர்ப்பு’ என்ற ஒற்றைப்புள்ளியிலே, இலங்கைக்குள்ளே அவனால் சே.வி.பியையும் தன்னருகில் வைத்துக்கொள்ள முடிந்தது, கருணாவையும் தன்னருகில் வைத்துக்கொள்ள முடிந்தது. உலக நாடுகளிலே பாகிசுதான், இந்தியா, சீனா, இசுரேல், பாலசுதீனம், அமெரிக்கா, கியூபா என்று ஒன்றுக்கொன்று முரண்பட்ட நாடுகளைத் தன்னருகே வைத்துக்கொள்ள முடிந்தது. தீவிரவாத எதிர்ப்பு, விடுதலைப் புலிகள் எதிர்ப்பு என்ற ஒற்றைப்புள்ளியிலே அந்த வெற்றியை ஈட்டினான். இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் அந்த ஒற்றைப்புள்ளியைக் கண்டுபிடித்து, அந்த ஒற்றைப்புள்ளியிலே நின்று கொண்டு இலங்கை அரசை தனிமைப்படுத்துவதன் மூலமாகத்தான் தமிழீழ மக்கள் போராடுவதற்கான அரசியல் வெளியை உருவாக்க முடியும். இந்த மார்ச்சு திங்களில் நாம் பற்றிப்பிடிக்க வேண்டிய ஒற்றைப்புள்ளி எது? தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வா? அல்லது இலங்கை அரசே நடத்தும் உள்நாட்டு விசாரணையா? என்பதுதான் அந்த ஒற்றைப்புள்ளி. அந்த ஒற்றைப்புள்ளியிலே மேற்குலக நாடுகளும் உலகெங்கும் உள்ள பல்வேறு நாடுகளும், தமிழர்களாகிய நாமும் பன்னாட்டுப் புலனாய்வு என்று ஒரு பக்கம் நின்றோமென்றால் இராசபக்சே தனிமைப்படுத்தப்படுவார்.
அந்த ஒற்றைப்புள்ளியிலே இராசபக்சேவிற்கு பக்கபலமாக இருப்பது இந்திய அரசு. இந்திய அரசின் கைகளை முறித்து வரவிருக்கின்ற தீர்மானத்தை நீர்த்துப்போகச் செய்யாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு தமிழ்நாட்டிற்கு இருக்கின்றது.
இந்த ஒருமாத காலம் இந்திய அரசு அத்தீர்மானத்தை நீர்த்துப்போகச் செய்யவிடாமல் தடுத்து, தற்சார்புள்ள ஒரு பன்னாட்டுப் புலனாய்வைக் கொண்டுவருவதும், அதில் இனப்படுகொலைக் குற்றத்தையும் சேர்க்கச் சொல்லி இந்திய அரசை கட்டாயப்படுத்த வேண்டும். அந்தக் கடமையை நோக்கிப் பயணிப்போம். நமக்குள் இருக்கும் முரண்பாடுகளை அறிவுப்பூர்வமாக அணுகி சிங்கள அரசை தனிமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தை மட்டும் நாம் குறியாகக்கொண்டு, சிங்கள அரசிடமிருந்து பாடத்தைக் கற்றுக்கொண்டு வருகின்ற (மே 19 ஆம் நாள்) முள்ளிவாய்க்கால் நினைவுநாளுக்குள் ‘சிங்கள அரசின் மீது தற்சார்புள்ள ஒரு பன்னாட்டுப் புலனாய்வை கொண்டுவந்தோம்’ என்ற ஒரு வெற்றியை நாம் அடைவோம்.
நன்றி !
உரைத் தட்டச்சு -
தோழர். இராகவன்
சேவ் தமிழ்சு இயக்கம்
மார்ச்சு 2014 : தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வே இலக்கு
மார்ச்சு 2014 : தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வே இலக்கு - திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், தமிழ்நாடு மக்கள் கட்சி, சேவ் தமிழ்சு இயக்கம் ஆகியவற்றின் கூட்டறிக்கை
03 மார்ச் 2014 அன்று தொடங்கி ஐ.நா மனித உரிமை மன்றத்தின் 25வது கூட்டத் தொடர் நடந்து வருகின்றது. இதை முன்னிட்டு, இலங்கையில் நடந்ததாக சொல்லப்படும் சர்வதேச மனித உரிமைச் சட்டமீறல்கள் மற்றும் மனிதாபிமான சட்டமீறல்கள் குறித்த தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வை மேற்கொள்ள புலனாய்வு பொறியமைவு ஒன்றை ஐ.நா.மனித உரிமை மன்றம் அமைக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை மன்ற ஆணையர் நவி பிள்ளை அவர்கள் பிப்ரவரி 26 ஆம் தேதி முன் வைத்த அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதை வரவேற்கின்றோம்.
இலங்கை தொடர்பான தீர்மானத்தின் முதல் வரைவு அமெரிக்கா, இங்கிலாந்து, மொரிசீயசு, மான்டீநிக்ரோ, மாசிடோனியா ஆகிய நாடுகளால் விவாதத்திற்கு முன்வைக்கப்பட்டுள்ளது. அத்தீர்மான வரைவு இலங்கை அரசு நம்பகமான தேசிய செயல்முறை ஒன்றை நிறுவத் தவறிய நிலையில் தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வு நடத்தப்பட வேண்டியது அவசியம் என்ற ஐ.நா. மனித உரிமை மன்ற ஆணையர் நவிபிள்ளையின் பரிந்துரைகளையும் முடிவுகளையும் வரவேற்றுவிட்டு அத்தகையதோர் பொறியமைவை ஏற்படுத்துவது குறித்து வெளிப்படையாகப் பேசவில்லை. மாறாக ஐ.நா. மனித உரிமை ஆணையர் அலுவலகம் இலங்கையில் இரு தரப்பினரும் புரிந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் அவ்வாறான குற்றங்கள் தொடர்பாகப் புலனாய்வு செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றது. இன்னொரு புறம், நம்பகமான உள்நாட்டுப் பொறியமைவை ஏற்படுத்தச் சொல்லி இலங்கை அரசை வலியுறுத்துகின்றது. ஐ.நா. மனித உரிமை ஆணையர் அலுவலகம் இவற்றைக் கண்காணிக்க வேண்டும் என்று கோருகின்றது. இன்னும் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு இந்த முயற்சிகளின் முன்னேற்றங்கள் குறித்து அறிக்கை சமரிப்பிக்குமாறு ஐ.நா. மனித உரிமை மன்ற ஆணையர் அலுவலகத்தை வேண்டுகின்றது. மேலும் இத்தீர்மான வரைவு 13 ஆவது சட்டத் திருத்தத்தின்படி மாகாண சபைக்கு அதிகாரம் வழங்கக் கோருகின்றது.
இப்படியாக, ஒருபுறம் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை என்று சீன சார்பு கொண்ட இராசபக்சே தலைமையிலான சிங்கள அரசை ஒரு கயிற்றிலும், மறுபுறம் ஈழத் தமிழர்கரின் விடுதலை அரசியலை மாகாணசபைக்குக் கூடுதல் அதிகாரம் என்ற வகையில் முடக்கி ஈழத் தமிழரை இன்னொரு கயிற்றிலும் கட்டிப் போட முயல்கின்றது. இதன் மூலம், சிங்கள அரசு, தமிழர் ஆகிய இரண்டு தரப்பையும் அமெரிக்கத் தலைமையிலான மேற்குலக அரசுகளும் இந்திய அரசும் இணைந்த கூட்டணியின் பிடிக்குள் வைக்கும் நோக்கம் கொண்டதாய் இருக்கின்றது. இனப்படுகொலைக்கு ஆளாகிவரும் தமிழர்களுக்கான நீதியை மறுக்கும் இத்தீர்மான வரைவு ஏற்கத்தக்கதன்று..
இம்முறையும் உள்நாட்டு விசாரணையா? அல்லது தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வா? என்ற புள்ளியிலேயே சிங்கள அரசுக்கும் தமிழர்களுக்கும் இடையேயான சர்வதேசப் போராட்டம் நடந்து வருகின்றது. 13 ஆவது சட்டத்திருத்தத்தின்படி மாகாண சபைக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற பரிந்துரை தீர்மானத்தின் வரைவில் வருவதன் மூலம் இந்தியாவின் கோரக்கரங்கள் இருப்பது அம்பலமாகின்றது. 13 ஆவது சட்டத்திருத்தை சர்வதேச அரங்கிற்கு இந்தியா கொண்டு சென்றுவிட்டது. இதன் மூலம், தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வைத் தடுக்க அதிகாரப்பகிர்வை பேரப் பொருளாக இலங்கை அரசு பயன்படுத்தி இருப்பதும் புலப்படுகின்றது. ஆயினும், 13 ஆவது சட்டத்திருத்ததைச் சிங்களப் பேரினவாதமும் தமிழீழ மக்களின் விடுதலை வேட்கையும் முறியடித்த வரலாறு இருப்பதால் நாம் தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வையே குறிவைக்க வேண்டியுள்ளது. தமிழர் தாயகப் பகுதியில் சிங்கள இராணுவத்தைக் குவித்து வைத்திருக்கும் இலங்கை அரசுக்கு சர்வதேச அழுத்தம் கொடுப்பதற்கும் வடக்கில் நடந்துவரும் சிங்கள மயமாக்கலுக்கு எதிராகத் தமிழீழ மக்கள் போராடுவதற்கும் தேவையான புற அழுத்தத்தை ஏற்படுத்துவதற்கும் தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வு துணை செய்யும்.
கடந்த இரண்டு முறையும் தீர்மானத்தை ஆதரிப்பது போல் ஆதரித்து அதை நீர்த்து போகச் செய்தது இந்தியா என்பதை நாம் அனைவரும் அறிவோம். இம்முறையும் தீர்மானத்தின் வரைவில் இந்தியாவின் பங்கு மறைமுகமாக இருப்பது அம்பலமாகியுள்ளது. இந்நிலையில், காங்கிரசுத் தலைமயிலான இந்திய அரசு கடந்த முறை போலவே இம்முறையும்தன்னுடைய நிலைப்பாட்டை இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. காங்கிரசுக்காரர்கள் ஐ.நா. தீர்மானத்தை நாங்கள் ஆதரிப்போம் என்று தொலைக்காட்சிப் பேட்டிகளில் பொத்தாம் பொதுவாக பேசத் தொடங்கியுள்ளனர். பா.ஜ.க.வினரோதங்கள் நிலைப்பாட்டைத் தெரிவிக்காமல் பொத்தாம் பொதுவாக இலங்கைத் தமிழர்களுக்காகக் கண்ணீர் விடுவது போல் நடித்து காங்கிரசு எதிர்ப்பு வாக்குகளைக் குறிவைக்கின்றனர். இந்நிலையில் நமது கோரிக்கை என்ன என்பதையும் தீர்மானத்தின் உள்ளடக்கத்தில் என்ன இருக்க வேண்டும் எனபதையும் நாம் தெளிவாக முன்வைக்க வேண்டியுள்ளது.
எட்டாவது பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ள ஐ.நர மனித உரிமை ஆணையர் அலுவலகம் புலனாய்வு செய்ய வேண்டும் என்ற வரிகள் நீக்கப்பட்டுவிடாமல் தடுக்க வேண்டும். அத்துடன், இலங்கை அரசு புரிந்த போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை குற்றங்கள் மீதான தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வு நடத்த புலனாய்வு ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்ற திருத்தம் இத்தீர்மானத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும். கடுமையான தீர்மானம் ஒன்றை நிறைவேறவிடாமல் தடுத்துக் கொண்டிருப்பது இந்தியஅரசு தான். இந்திய அரசின் துணையுடன் தான் இலங்கை அரசு மேற்குலக அரசுகளை எதிர்கொண்டு வருகின்றது. எனவே, இந்திய அரசை நம் மக்களிடம் அம்பலப்படுத்தி தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வர வலியுறுத்த வேண்டியதே நமது உடனடிக் கடமை.
அமெரிக்கத் தீர்மானம் குறித்து ஏமாற்றம் தெரிவிப்பது, எதிர்ப்புத் தெரிவிப்பது என்ற அளவோடு நிறுத்திக் கொள்ளாமல், நாம் கோருவது போன்ற தீர்மானத்தை இந்தியாவே கொண்டுவர வேண்டும், அல்லது அமெரிக்கத் தீர்மானத்தில் உரிய திருத்தம் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கில் இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இவ்வாறு நமது போராட்டத்தை இந்திய அரசை நோக்கிக் குவிமையப்படுத்த வேண்டும். இத்தனைக்குப் பிறகும் இந்திய அரசு இருப்பதையும் கெடுத்து நீர்த்துப் போகச் செய்யுமானால் தமிழ்நாட்டு மக்களிடம் இருந்து மேலும் அயன்மைப்பட நேரிடும் என்று எச்சரிக்கின்றோம்.
தா.செ மணி,
தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்
தியாகு,
பொதுச் செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்
செல்வி
பொதுச் செயலாளர், தமிழ்நாடு மக்கள் கட்சி
தி. செந்தில்
ஒருங்கிணைப்பாளர், சேவ் தமிழ்சு இயக்கம்
03 மார்ச் 2014 அன்று தொடங்கி ஐ.நா மனித உரிமை மன்றத்தின் 25வது கூட்டத் தொடர் நடந்து வருகின்றது. இதை முன்னிட்டு, இலங்கையில் நடந்ததாக சொல்லப்படும் சர்வதேச மனித உரிமைச் சட்டமீறல்கள் மற்றும் மனிதாபிமான சட்டமீறல்கள் குறித்த தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வை மேற்கொள்ள புலனாய்வு பொறியமைவு ஒன்றை ஐ.நா.மனித உரிமை மன்றம் அமைக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை மன்ற ஆணையர் நவி பிள்ளை அவர்கள் பிப்ரவரி 26 ஆம் தேதி முன் வைத்த அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதை வரவேற்கின்றோம்.
இலங்கை தொடர்பான தீர்மானத்தின் முதல் வரைவு அமெரிக்கா, இங்கிலாந்து, மொரிசீயசு, மான்டீநிக்ரோ, மாசிடோனியா ஆகிய நாடுகளால் விவாதத்திற்கு முன்வைக்கப்பட்டுள்ளது. அத்தீர்மான வரைவு இலங்கை அரசு நம்பகமான தேசிய செயல்முறை ஒன்றை நிறுவத் தவறிய நிலையில் தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வு நடத்தப்பட வேண்டியது அவசியம் என்ற ஐ.நா. மனித உரிமை மன்ற ஆணையர் நவிபிள்ளையின் பரிந்துரைகளையும் முடிவுகளையும் வரவேற்றுவிட்டு அத்தகையதோர் பொறியமைவை ஏற்படுத்துவது குறித்து வெளிப்படையாகப் பேசவில்லை. மாறாக ஐ.நா. மனித உரிமை ஆணையர் அலுவலகம் இலங்கையில் இரு தரப்பினரும் புரிந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் அவ்வாறான குற்றங்கள் தொடர்பாகப் புலனாய்வு செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றது. இன்னொரு புறம், நம்பகமான உள்நாட்டுப் பொறியமைவை ஏற்படுத்தச் சொல்லி இலங்கை அரசை வலியுறுத்துகின்றது. ஐ.நா. மனித உரிமை ஆணையர் அலுவலகம் இவற்றைக் கண்காணிக்க வேண்டும் என்று கோருகின்றது. இன்னும் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு இந்த முயற்சிகளின் முன்னேற்றங்கள் குறித்து அறிக்கை சமரிப்பிக்குமாறு ஐ.நா. மனித உரிமை மன்ற ஆணையர் அலுவலகத்தை வேண்டுகின்றது. மேலும் இத்தீர்மான வரைவு 13 ஆவது சட்டத் திருத்தத்தின்படி மாகாண சபைக்கு அதிகாரம் வழங்கக் கோருகின்றது.
இப்படியாக, ஒருபுறம் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை என்று சீன சார்பு கொண்ட இராசபக்சே தலைமையிலான சிங்கள அரசை ஒரு கயிற்றிலும், மறுபுறம் ஈழத் தமிழர்கரின் விடுதலை அரசியலை மாகாணசபைக்குக் கூடுதல் அதிகாரம் என்ற வகையில் முடக்கி ஈழத் தமிழரை இன்னொரு கயிற்றிலும் கட்டிப் போட முயல்கின்றது. இதன் மூலம், சிங்கள அரசு, தமிழர் ஆகிய இரண்டு தரப்பையும் அமெரிக்கத் தலைமையிலான மேற்குலக அரசுகளும் இந்திய அரசும் இணைந்த கூட்டணியின் பிடிக்குள் வைக்கும் நோக்கம் கொண்டதாய் இருக்கின்றது. இனப்படுகொலைக்கு ஆளாகிவரும் தமிழர்களுக்கான நீதியை மறுக்கும் இத்தீர்மான வரைவு ஏற்கத்தக்கதன்று..
இம்முறையும் உள்நாட்டு விசாரணையா? அல்லது தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வா? என்ற புள்ளியிலேயே சிங்கள அரசுக்கும் தமிழர்களுக்கும் இடையேயான சர்வதேசப் போராட்டம் நடந்து வருகின்றது. 13 ஆவது சட்டத்திருத்தத்தின்படி மாகாண சபைக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற பரிந்துரை தீர்மானத்தின் வரைவில் வருவதன் மூலம் இந்தியாவின் கோரக்கரங்கள் இருப்பது அம்பலமாகின்றது. 13 ஆவது சட்டத்திருத்தை சர்வதேச அரங்கிற்கு இந்தியா கொண்டு சென்றுவிட்டது. இதன் மூலம், தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வைத் தடுக்க அதிகாரப்பகிர்வை பேரப் பொருளாக இலங்கை அரசு பயன்படுத்தி இருப்பதும் புலப்படுகின்றது. ஆயினும், 13 ஆவது சட்டத்திருத்ததைச் சிங்களப் பேரினவாதமும் தமிழீழ மக்களின் விடுதலை வேட்கையும் முறியடித்த வரலாறு இருப்பதால் நாம் தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வையே குறிவைக்க வேண்டியுள்ளது. தமிழர் தாயகப் பகுதியில் சிங்கள இராணுவத்தைக் குவித்து வைத்திருக்கும் இலங்கை அரசுக்கு சர்வதேச அழுத்தம் கொடுப்பதற்கும் வடக்கில் நடந்துவரும் சிங்கள மயமாக்கலுக்கு எதிராகத் தமிழீழ மக்கள் போராடுவதற்கும் தேவையான புற அழுத்தத்தை ஏற்படுத்துவதற்கும் தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வு துணை செய்யும்.
கடந்த இரண்டு முறையும் தீர்மானத்தை ஆதரிப்பது போல் ஆதரித்து அதை நீர்த்து போகச் செய்தது இந்தியா என்பதை நாம் அனைவரும் அறிவோம். இம்முறையும் தீர்மானத்தின் வரைவில் இந்தியாவின் பங்கு மறைமுகமாக இருப்பது அம்பலமாகியுள்ளது. இந்நிலையில், காங்கிரசுத் தலைமயிலான இந்திய அரசு கடந்த முறை போலவே இம்முறையும்தன்னுடைய நிலைப்பாட்டை இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. காங்கிரசுக்காரர்கள் ஐ.நா. தீர்மானத்தை நாங்கள் ஆதரிப்போம் என்று தொலைக்காட்சிப் பேட்டிகளில் பொத்தாம் பொதுவாக பேசத் தொடங்கியுள்ளனர். பா.ஜ.க.வினரோதங்கள் நிலைப்பாட்டைத் தெரிவிக்காமல் பொத்தாம் பொதுவாக இலங்கைத் தமிழர்களுக்காகக் கண்ணீர் விடுவது போல் நடித்து காங்கிரசு எதிர்ப்பு வாக்குகளைக் குறிவைக்கின்றனர். இந்நிலையில் நமது கோரிக்கை என்ன என்பதையும் தீர்மானத்தின் உள்ளடக்கத்தில் என்ன இருக்க வேண்டும் எனபதையும் நாம் தெளிவாக முன்வைக்க வேண்டியுள்ளது.
எட்டாவது பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ள ஐ.நர மனித உரிமை ஆணையர் அலுவலகம் புலனாய்வு செய்ய வேண்டும் என்ற வரிகள் நீக்கப்பட்டுவிடாமல் தடுக்க வேண்டும். அத்துடன், இலங்கை அரசு புரிந்த போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை குற்றங்கள் மீதான தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வு நடத்த புலனாய்வு ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்ற திருத்தம் இத்தீர்மானத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும். கடுமையான தீர்மானம் ஒன்றை நிறைவேறவிடாமல் தடுத்துக் கொண்டிருப்பது இந்தியஅரசு தான். இந்திய அரசின் துணையுடன் தான் இலங்கை அரசு மேற்குலக அரசுகளை எதிர்கொண்டு வருகின்றது. எனவே, இந்திய அரசை நம் மக்களிடம் அம்பலப்படுத்தி தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வர வலியுறுத்த வேண்டியதே நமது உடனடிக் கடமை.
அமெரிக்கத் தீர்மானம் குறித்து ஏமாற்றம் தெரிவிப்பது, எதிர்ப்புத் தெரிவிப்பது என்ற அளவோடு நிறுத்திக் கொள்ளாமல், நாம் கோருவது போன்ற தீர்மானத்தை இந்தியாவே கொண்டுவர வேண்டும், அல்லது அமெரிக்கத் தீர்மானத்தில் உரிய திருத்தம் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கில் இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இவ்வாறு நமது போராட்டத்தை இந்திய அரசை நோக்கிக் குவிமையப்படுத்த வேண்டும். இத்தனைக்குப் பிறகும் இந்திய அரசு இருப்பதையும் கெடுத்து நீர்த்துப் போகச் செய்யுமானால் தமிழ்நாட்டு மக்களிடம் இருந்து மேலும் அயன்மைப்பட நேரிடும் என்று எச்சரிக்கின்றோம்.
தா.செ மணி,
தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்
தியாகு,
பொதுச் செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்
செல்வி
பொதுச் செயலாளர், தமிழ்நாடு மக்கள் கட்சி
தி. செந்தில்
ஒருங்கிணைப்பாளர், சேவ் தமிழ்சு இயக்கம்
Wednesday, March 12, 2014
ஐ.டி தோழி பேசுகின்றேன்... - உழைக்கும் பெண்கள் நாள் பதிவு - 5
தொழில் நுட்பத் துறையில் வேலைப் புரியும் நான் என் அனுபவங்களை உங்களோடு பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன். எழாண்டுகளாக இத்துறையில் ஒரே நிறுவனத்தில் வேலை செய்கின்றேன். இங்கு வேலைக்குச் செல்லும் பெண்களின் உண்மை நிலைமையைப் பலர் அறிந்திருக்கவில்லை என நான் கருதுகின்றேன்.
இங்கே வேலை செய்பவர்களை மதீப்பீடு செய்ய பயன்படுத்தும் முறைக்கு அப்ரைசல் (Self Appraisal) எனப்பெயர், உண்மையில் இது சுயதம்பட்டமே. எப்படி ஆஸ்கார் விருதிற்கு பரிந்துரைக்கப்படும் படங்கள் தங்களைத் தாங்களே விளம்பரம் செய்கின்றார்களோ அதைப் போல, நன்றாக திறன்பட வேலை செய்தாலும், நம்மை நாமே விளம்பரப்படுத்திக் கொள்ள வேண்டும். இதுதான் அப்ரைசல். இந்தப் போட்டியின் மதிப்பெண்னைக் கொண்டே அந்த ஆண்டுக்கான போனஸ்(Bonus/incentive), ஊதியம் தீர்மானமாகிறது. என்னுடன் வேலை செய்யும் தோழிக்கு நடந்த சம்பவம் இது. அவளுக்கும், அந்த அணியில் பணிப் புரியும் ஆண் நண்பனுக்கும் கடும் போட்டி. அவனை விட அவள் தொழில் நுட்பத் திறன் மிகுந்தவள் என்பது எங்கள் அனைவருக்கும் தெரியும். அயினும் அந்த ஆணுக்கே முன்னுரிமை வழங்கி, அங்கீகாரம் கிடைத்தது. அந்தப் பெண் தன் மேலதிகாரியிடம் முறையிட்ட போது கிடைத்த பதில், “ You haven’t created the visiibily. I was not aware that you would be expecting a good rating!! I know that you are a key resource in this project. But still we missed to recognize you.”. பெண் என்ற காரணத்தால் அவளுக்கு அங்கீகாரம் மறுக்கப்பட்டது என்பதையே இந்த சம்பவம் உணர்த்துகிறது.
பெண்கள் சிறிய காலம் வேலை செய்வார்கள், அப்புறம் கல்யாணம் செய்து ஒரு குழந்தைப் பெற்றப் பிறகு வேலை விட வேண்டிய கட்டாயம் உருவாக்கப்படுகின்றது, கர்ப்பமான பெண்ணை ப்ரோஜெக்ட்டில் சேர்க்க தயங்குகின்றனர். இப்பெண்களால் ப்ரொஜெக்ட்டில் நீண்ட நேரம், பணிச்சுமையால் ஏற்படும் மனஅழுத்தத்தோடு (Stress due to work load) வேலை செய்ய முடியாது என்றுக் காரணம் சொல்லப்படுக்கின்றது. கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு உடலாலும், மனதாலும் பல்வேறு மாற்றங்கள் நிகழும், எனவே அவர்களால் முழுக் கவனமும் செலுத்தி வேலை செய்ய முடியாது போகாலாம். இது இயற்கையில் நடக்கும் மாற்றம் என்பதை இந்த சமூகம் உணர வேண்டும்.
திறன் மிக்கவர்களாக இருந்தாலும் மகப்பேறு விடுப்பு எடுக்கும் பெரும்பாலான பெண்களுக்கு அப்ரைசலில் குறைந்த மதீப்பீடு வழங்கப்படுக்கின்றது. சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு காலம் 3 மாதமாக உள்ளது. மருத்துவரின் சான்றிதழ் வாங்கினால் மேலும் 1 மாதம் விடுப்பு எடுக்கலாம். தனிப்பட்ட விருப்பத்திற்கு ஏற்ப 1 வருடம் வரை விடுப்பு எடுக்கலாம். ஆனால் அதற்கு சம்பளம் வழங்கப்படுவதில்லை. 4 மாதக் கால மகப்பேறு விடுப்பை இந்த ஆண் சமூகம் பெண்களுக்கு அளிக்கும் சலுகையாகவே பார்க்கிறது. சில நிறுவனங்களில் 3 மாதம் மட்டுமே விடுப்பு தரப்படுகிறது.
வெளிநாட்டுக்குச் சென்று பணிப் புரிய தரப்படும் அனுமதிச்சீட்டும் (விசா) பெண்களுக்கு மறைமுகமாக மறுக்கப்படுகிறது. விசா பெற்ற பெண்கள் குடும்பச் சூழல் காரணம் காட்டி போவதில்லை என்ற காரணத்தை பயன்படுத்தி, அந்த வாய்பை விருப்பமுள்ள ஒரு ஆணுக்குத் தரலாம் என்ற கருத்து பெரும்பான்மையான மேனேஜர்களிடம் இருக்கின்றது.
குழந்தை பெறுதல், அவர்களை பேணுதல் என்பது ஒரு பெண்ணின் கடமையாகவே இருக்கின்றது. பெரும்பாலான பெண்கள் குடும்பம், வேலைப் பளு இரண்டையும் சமாளிக்க முடியாமல் வேலையை விட வேண்டிய சூழலுக்குத் தள்ளப் படுகின்றனர். ஆணுக்கும் தன் குடும்பத்தை கவனிக்கும் பொறுப்புள்ளது என்பதை இந்த சமூதாயம் ஏற்க மறுக்கின்றது.
வர்மா கமிடியின் பரிந்துரையின் படி வேலையிடத்தில் நடக்கும் பாலியல் சீண்டலகள் குறித்துப் புகார் அளிக்க "Sexual Harassment Complaints Committee" எல்லா நிறுவனங்களிலும் அமைத்திட வேண்டும். அந்த கமிட்டியில் பெண்கள் சுதந்திரமாக தனது பிரச்சனைகளைப் பற்றிப் பேசி, அதற்கான தீர்வுகள் கிடைக்க வேண்டும். ஆனால் இதுவரை பெரும்பாலான நிறுவனங்கள் இதை அமல்படுத்தவில்லை, இதை நடைமுறைப்படுத்துவதை தடுப்பதை முதலாளித்துவத்தோடு சேர்ந்து ஆணாதிக்கமும் தடுக்கின்றது.
என் கோரிக்கைகள் சில...
1) அரசு நிறுவனங்களில் சம்பளத்துடன் 6 மாதக் காலம் "மகப்பேறு விடுமுறை" தரப்படுவது போல ஏன் தொழில் நுட்ப நிறுவனங்கள் தரக்கூடாது?
2)கர்ப்பிணி பெண்கள் ஓய்வு எடுக்க இட வசதி எத்தனை நிறுவனங்களில் இருக்கிறது? அலுவங்களில் தங்கள் குழ்ந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் வசதி வெளிநாடுகளில் இருப்பது போல ஏன் இங்கே இல்லை? ஏன் இந்த இரட்டைச் செயல்பாடு ?
இந்தக் கட்டுரைப் படித்துவிட்டு ஆண் வர்க்கத்திர்க்கு எதிராக இருக்கிறது என்றுப் போர்க்கொடித் தூக்க வேண்டாம். பெண்களும் ஆண்களைப் போல எந்த தடையும் இன்றி பணியிடத்தில் சாதிக்க வேண்டும். அதற்கு இந்த சமூகம் பெண்களுக்கு போட்டு இருக்கும் கைவிளங்கை உடைத்தெரிய ஆண்களின் பங்களிப்பு இன்றியமையாதது என்பதை ஆண்கள் உணர்ந்து செயல்ப்பட வேண்டும்.
சமந்தா
சேவ் தமிழ்சு இயக்கம்
Subscribe to:
Comments (Atom)
.jpg)












