Wednesday, February 8, 2012

கூடன்குளம் அணு உலை - அழிவின் விளிம்பில் மக்கள் : படைப்பாளிகள் விளக்கம்

கூடன்குளம் அணு உலை - அழிவின் விளிம்பில் மக்கள் : படைப்பாளிகள் விளக்கம்

எழுத்தாளர்கள் அருள் எழிலன், யுவபாரதி மணிகண்டன், சந்திரா ஆகியோரின் முயற்சியில் அணு உலைகளுக்கெதிரான படைப்பாளிகளின் விளக்கக்கூட்டம் நேற்று (04-பிப்ரவரி-2012) சென்னை லயோலா கல்லூரியில் வெகு சிறப்பாக நடந்தேறியது. தமிழின் தேர்ந்த எழுத்தாளர்களான பா.செயப்பிரகாசம், மனுஷ்யபுத்திரன், குறும்பனை பெர்லின், அஜயன் பாலா சித்தார்த், பாமரன், பாஸ்கர் சக்தி, நிர்மலா கொற்றவை, ஞானி உட்பட பல எழுத்தாளர்கள் பங்கேற்ற இந்நிகழ்வு அணு உலைகளுக்கெதிரான படைப்பாளிகளின் நிலைப்பாட்டை தெளிவாகவும், எளிமையாகவும் வெளிக்கொணர்ந்தது.

எந்தவொரு ஒரு அரசியல் கட்சியும் முன்னின்று நடத்தாத ஒரு போராட்டம் அறவழியில் மிகப்பெரிய மக்கள் எழுச்சிப் போராக நெல்லையில் உருவெடுத்திருக்கின்றது. பன்னாட்டு முதலாளித்துவத்தையும், மக்கள் விரோத இந்திய அரசையும் எதிர்த்து, தத்தமது வாழ்வாதாரங்களுக்காக போராடி வரும் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும், கூடன்குளத்தையும் அதைச்சுற்றியுள்ள மீனவ மக்களும் தலித்துகளும் ஒரு மிகச்சிறந்த முன்னுதாரணமாக திகழ்ந்து வருகின்றனர்.

கூடங்குளம் மக்கள் போராட்டம் மீதான எங்கள் பார்வையை இவ்வரங்க கூட்டம் மாற்றியுள்ளது. இருப்பினும் இவ்வியக்கத்தின் முழு வெற்றி என்பது அணு உலை முற்றிலுமாக கைவிடப்பட்டு கூடன்குளம் அணு உலை திட்டத்திற்கே மூடுவிழா நடத்தப்படும் நாளில் தான். விழாவில் பேசிய படைப்பாளிகள் அனைவரது கருத்துகளும் கொண்ட ஒரு செய்திச் சுருக்கம்.

அணு உலைகளுக்கெதிராக போராடுவது இங்கே மிகப்பெரிய தேசத்துரோகமாக பார்க்கப்படுகின்றது. ஆகவே நாமனைவரும் தேசத்துரோகிகள். எனவே அங்கு போராடும் லட்சக்கணக்கான மக்கள் அனைவரும் தேசத்துரோகிகள் என தனது உரையை ஆரம்பித்தார்.

எழுத்தாளர். பா.செயப்பிரகாசம்.

நெய்தல் இயக்கச் செயலாளரான குறும்பனை பெர்லின் குமரியில் உள்ள ஒரு மணல் ஆலை வெளிப்படுத்தும் கதிர்வீச்சு (தோரியத்தை மணலில் இருந்து பிரிப்பதால் கதிர்வீச்சு ஏற்படுகின்றது) பாதிப்புகளினால் தனது குடும்பத்தில் பலரை புற்றுநோய் தாக்கியிருக்கிறது என்பதை தெரிவித்தார். 30,000 பேரிடம் நடத்திய ஆய்வில் 494 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார்கள். இத்தரவுகளை வெளியிடாத நிர்வாகம், மீண்டும் மருத்துவர்களை வைத்து சோதித்ததில் வெறும் 19 பேர் மட்டுமே புற்றுநோய் சிகிச்சை பெற்று வருவதாக திரித்து வெளியிட்டிருக்கின்றது.

வெறும் மணல் ஆலையினால் கிளறிவிடப்படும் கதிரியக்கமே இத்தகைய பாதிப்புகளை தோற்றுவிக்குமாயின், அணு உலைகளால் ஏற்படும் பாதிப்பு எந்த அளவிற்கு இருக்கும் என்பதை நம்மால் கணிக்க முடியும். ஆனால் அரசோ கதிர்வீச்சால் புற்றுநோய் ஏற்படாது எனக்கூறுகின்றது, அப்படியென்றால் இந்த புற்றுநோயெல்லாம் எங்கள் முன்னோர் கருதியது போல கடவுள் கொடுத்ததா?

கூடங்குளம் அணு உலை போலவே நம்மை அச்சுறுத்தும் இன்னொரு பிரச்சனையும் நம்மை நெருங்குகின்றது. அது நியூட்ரினோ ஆய்வகம். அணு உலைக்கு எதிராக குறைந்தபட்ச விழிப்புணர்வாவது இருக்கின்றது. ஆனால் நியூட்ரினோ ஆய்வகம் பற்றியும், அதனால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு பற்றிய பரவலான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவேண்டும்.
கூடங்குளம் மக்களின் உண்மையான போரட்டத்திற்கு படைப்பாளிகளாகிய நாம் என்றுமே ஆதரவாக இருக்கவேண்டும். இருப்போம் என்றார் எழுத்தாளர். பாஸ்கர் சக்தி


எழுத்தாளர். அஜயன் பாலா சித்தார்த்தோ, இது மண்ணின் மைந்தர்களுக்கெதிராக நடக்கும் அடக்குமுறையாகும். நமது பொருளாதார சுழற்சி என்பது, நடுத்தர வர்க்கத்தின் வருவாய் மேல்தட்டு முதலாளித்துவத்தை நோக்கி திருப்பி விடப்பட்டுக்கொண்டிருக்கிறது. இது தான் இத்தகைய அணு உலைகளை இந்திய அரசு ஊக்குவிப்பதன் காரணியாகும் என அவர் கூறினார்.

எழுத்தாளர். மனுஷ்யபுத்திரன் பேசியதிலிருந்து ’’எந்த சமூகப் பிரச்சினையிலும் அபிப்ராயம் சொல்வதில் குறிப்பிட்ட சில எழுத்தாளர்களின் பெயர்கள் மட்டுமே ஏன் எப்போதும் இடம்பெறுகின்றன? பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு எந்தப் பிரச்சினையிலும் எந்தக் கருத்துக்களும் இல்லையா’என்று கேட்டார். ’’அணு உலை ஆதரவாளர்களின் கைகளில் அதிகாரம், ஊடகம் எல்லாம் இருக்கின்றது.... மக்களுக்கு இருப்பதோ தெருக்கள் மட்டுமே. அவர்கள் தொடர்ந்து தங்களுக்கு எதிரான அநீதிகளுக்கு எதிராக தெருக்களில் திரள்வதே ஒரே வழி…… படித்தவர்கள் அயோக்கியர்களாக மாறி வரும் ஒரு சமூகத்தில் ஆதிவாசிகளும், கிராம மக்களும் தான் நீதிக்காக போராடி வருகின்றார்கள். இன்று கம்யூனிஸ்டுகளும், காங்கிரஸ்காரகளும், இந்துத்துவவாதிகளும் கூடங்குளம் விவகாரத்தில் ஒரு அணிக்கு வந்துவிட்டது தான் பெரும் வரலாற்று அவலமாகும். வளர்ச்சி என்ற பெயரில் அரசு செய்யக்கூடிய படுகொலைக்கு எதிரான போராட்டம் தான் கூடங்குளம் போராட்டமாகும் .’’

எழுத்தாளர். பாமரன் பேசும் பொழுது “அணு உலையில் விபத்து ஏற்பட்டால் கையால் வாயைப் மூடிக்கொண்டு ஐந்து கிலோ மீட்டர் ஓட வேண்டும்” என்ற அணு உலை அதிகாரிகளின் ஆலோசனைகளே மக்களின் போராட்டத்திற்கு மிக முக்கிய காரணமாகும், மேலும் 1988ல் அவர் எழுதிய 'புத்தர் சிரித்தார்’ என்ற நூலை இரண்டாம் முறையாக அவர் “அணு அணுவாய் சாவோம்” என்ற நூலாக வெளியிட்டுள்ளார், அந்த நூலிலிருந்து அப்துல் கலாமுக்கான பல கடிதங்களை வாசித்தார்.

“இந்த உலகத்திலேயே அணு குண்டை நேசிக்கிற அதே நேரத்தில் குழந்தைகளை நேசிக்கிற விஞ்ஞானி நீங்க மட்டும் தான் கலாம். எவ்வளவோ ஏவுகணை கண்டுபுடிச்சீங்க ஆனா நீங்க சொல்லாத ஒன்னே ஒன்னு அந்த ஏவுகணைக்கெல்லாம் இலக்கு மக்களாகிய நாங்கள் தானென்று”.

பெண்ணிய செயல்பாட்டாளர் நிர்மலா கொற்றவை கூறுகையில் – பெண்கள் தான் கூடங்குளம் போராட்டத்தின் பலம், பெண்கள் சமூக பங்களிப்பு அளிப்பதையும் ,போராடுவதையும், மதவாதிகளாலும், முதலாளித்துவத்திற்கு துணை நிற்கும் எந்த அரசு அமைப்புகளால் சகித்து கொள்ளமுடியாத ஒன்றாக இருக்கின்றது என்றார்.

இந்த விழாவின் குறிப்பிடத்தக்க நிறைவுரையாக எழுத்தாளர். ஞானியின் பேச்சு இருந்தது.1987 லேயே 15,000 மீனவர்கள் கூடிய ஒரு கூட்டத்தில் அணு உலைக்கெதிராக பேசிய பேச்சாளர்களில் ஞானியும் ஒருவர். இப்போராட்டத்தின் வயது 25 வருடம் என்பதற்கு தானும் ஒரு சாட்சியம் என்பதை எடுத்துரைத்தார்.அக்கால கட்டங்களிலேயே போராட்டங்களில் பங்கேற்றவர்களின் மீது பொய் வழக்கு போடப்பட்டதால், வெளிநாடுகளில் தஞ்சமடைந்த இடிந்த கரையைச் சேர்ந்த பலரின் கடிதங்களை அவர் குறிப்பிட்டார். 80-களில் அமெரிக்காவின் ஒரு சின்ன பஞ்சாயத்தான ச‌ஃபோக் கவுண்டியின் எதிர்ப்பால் அவ்வூரில் கட்டப்பட்ட அணு உலையை அமெரிக்க‌ ஃபெடரல் அரசாங்கத்தையும் மூடியது. அந்த இழப்பீட்டை அவர்கள் எப்படி ஈடுகட்டினார்கள் என்பதையும் தெளிவாக முன்வைத்தார் ஞானி.

அணு உலையை எரிபொருள் மாற்று முறையின் மூலம் அனல்மின் உற்பத்தி நிலையமாக மாற்றி உபயோகித்தார்கள் எனக்கூறினார். தமிழ்நாட்டில் குண்டுபல்புகளை பயன்படுத்துவதை நிறுத்துவிட்டு, அனைவரும் CFL என்றழைக்கக்கூடிய குழல் விளக்குகள் பயன்படுத்துவதால் மட்டுமே 500 மெகாவாட் உபரியாக மின்சாரம் சேமிக்கலாம் என்ற கருத்தையும் கூறினார்.

இத்திட்டத்தை தமிழக அரசே மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்தியது போல திட்டமிடலாம் என்பதோடு ரேஷன் கடையிலேயே குழல் விளக்குகளை விநியோகிக்கலாம் என்றுரைத்தார். மேலும், இன்று (04-பிப்ரவரி 2012) தமிழக முதல்வர் நியமித்துள்ள நிபுணர் குழுவில் போராட்டக்குழு நிபுணர்களும் இடம் பெறவேண்டும் ;அனைத்து எழுத்தாளர்களும் ஒன்று திரண்டு தமிழக முதல்வரைச் சந்தித்து இதை ஆவணச் செய்ய வேண்டும் என்று தன்னுரையை நிறைவு செய்தார் ஞானி.

Friday, February 3, 2012

அங்கு சிவக்குமாரன்... இங்கு முத்துக்குமார்...

வரலாற்றுச் சக்கரத்தை வேகமாய் சுழலச் செய்தவன்...
ஒடிக் கொண்டிருந்தவர்களை நின்று யோசிக்க வைத்தவன்...
அவன் எரிந்து பொசுங்கிய சாம்பலில் இருந்து
எழுந்து நின்ற இளைஞர்களை நானறிவேன்..
அவன் மரணம் சிலர் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுள்ளது..
நிச்சயம் ஒருநாள்
அவர்கள் இந்த சமூகத்தைப் புரட்டிப் போடுவார்கள்..

ஆனால்,,இன்னும் பலர் இருக்கின்றோம்...
இன்னும் எத்தனை முத்துக்குமரன்கள் வேண்டுமென்று தெரியவில்லை..
விலங்கொடித்து விடுதலையின் பாதையில் வீறு நடை போட...

உருண்டோடி விட்டது மூன்றாண்டுகள்....
இன்னும் சில ஆண்டுகள் சேமித்து விட்டு....விட்டு...
இன்னும் கொஞ்ச நாளில் களமிறங்கி ... இறங்கி...’’
இந்த வாக்கியங்களை ஒவ்வொரு முறை உச்சரிக்கும் போது
உயிரைவிட்ட முத்துக்குமாரை முட்டாளாக்கி விடுகின்றோம்...
ஒரு வேளை தியாகி என்பதன் பொருள் கூட முட்டாள் தானோ?

அவன் முட்டாளா? இல்லை.

அவன் புத்திசாலிகளை, எச்சரிக்கையானவர்களை...
உன்னையோ, என்னையோ நம்பவில்லை..

அவன் வரலாற்றை நம்பினான்..
கண்ணுக்கு தெரியாத ...முகநூலில் இல்லாத ....
ஊடகங்கள் காட்டாத...மேடைகளில் வாராத...
வரலாற்றைப் படைக்க போராடிக் கொண்டிருக்கும்
இளைஞர்களை அவன் நம்பினான்...

அவர்கள் அலைகளைப் போல...
ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்கு வருவோருக்காக காத்திருப்பதில்லை...

அவர்கள் காற்றைப் போல...
நெருப்பு அணையட்டும் என்று காத்திருப்பதில்லை...

அவர்கள் பாதுகாப்பதற்காக களம் இறங்குவார்கள்...
தம்மைப் ’பாதுகாப்பு’ ஆக்கிக் கொண்டு இறங்க மாட்டார்கள்...

மூளையில் இருந்து இன்னொரு குரல்..
போதும்..நிறுத்து...
கவிதை ரசிக்க மட்டுமே....
தியாகிகளும், மாவீரர்களும் வீர வணக்கத்திற்கு மட்டுமே!

செந்தில் - தமிழர் காப்பு இயக்கம் (Save Tamils Movement)

Thursday, February 2, 2012

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழு துணைத் தலைவர் எஸ்.குணசேகரன் எம்.எல்.ஏ. உரை

சென்னை: ஆளுநர் உரை மீதான விவாத்தில் கலந்து கொண்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.குணசேகரன் பேசியதாவது:
பாக். வளைகுடா பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும் பாரம்பரிய உரிமையைப் பாதுகாக்கவும், மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளவும், கச்சத் தீவை திரும்பப் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தமிழக அரசின் நிலைபாட்டினை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முழுக்க, முழுக்க ஆதரிக்கிறது.

இன்றும் தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவம், சிங்கள மீனவர்களால் தாக்கப்படுவது, கொடுமைப்படுத்தப்படுவதும் தொடர்கிறது. இது குறித்து ஒவ்வொரு தமிழனும் வெட்கித்தலைகுனிய வேண்டும். தமிழக மீனவர்கள் தாக்கப்படும் போதெல்லாம் அவமானத்தால் கூனிக்குறுகும் நிலை ஏற்படுகிறது. மத்திய அரசை வலியுறுத்தி இதற்கு உறுதியான நடவடிக்கையை சட்டப்பூர்வமாகவும், அரசியல் பூர்வமாகவும் தமிழக அரசு எடுத்திட வேண்டும். இப்பிரச்சனைக்கு இறுதியான முடிவை எடுத்திட வேண்டும். சமீபத்தில் பாக். ஜல சந்தி, மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடிக்கும் உரிமை பற்றி வெளியுறவுத் துறை அமைச்சர் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்திகள் பத்திரிக்கைகளில் வெளிவருகின்றன. அதுபற்றிய விபரம் தமிழக அரசிற்கு தெரியுமா? என்பதை அவைக்கு தெரிவிக்க வேண்டும். ஏற்கனவே கச்சத்தீவை இழந்து தமிழக மீனவர்கள் கடும் துயருக்கு ஆளாகியுள்ள நிலையில், தமிழக மீனவர்கள் நலன் பாதுகாக்க மீன்பிடிக்கும் உரிமைக்கான பேச்சுவார்த்தைக் குழுவில் தமிழக அரசின் பிரதிநிதிகளும், தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்க வேண்டும். இக்கருத்தை வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

அதேபோல ஏற்கனவே தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய இலங்கைத் தமிழர்களுக்கான தீர்மானத்தை மத்திய அரசு ஏற்று செயல்படுத்திட தமிழக அரசு வலியுறுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதுவரை ஈழத்தமிழர்களுக்கு அரசியல் உரிமை, மொழி, தாயக உரிமை கிடைக்காத நிலையில் தமிழர்கள் அடிமைகளாக எந்தவிதப் பாதுகாப்பும் இன்றி உள்ளார்கள். அவர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன. சொத்துக்கள் அபகரிக்கப்படுகின்றன. இந்திய அரசு இதுவரை 1500 கோடி நிதி வழங்கியும் இலங்கை அரசு இதுவரை தமிழர்களுக்கு நிதியை முழுமையாக செலவிடவில்லை. எனவே இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு ராஜபக்சே மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும். மார்ச் 27ம் தேதி ஜ.நாவின் மனித உரிமை ஆணையம் நவநீதம் பிள்ளை தலைமையில் இலங்கையில் நடந்த போர்க்குற்றம் பற்றிய விசாரணையைத் தொடங்க உள்ளது. 50க்கும் மேற்பட்ட நாடுகள் இலங்கையில் போர்க்குற்றம் நடந்ததை முதல்கட்டமாக ஏற்றுக் கொண்டுள்ளன. இவ்விசாரணையில் மத்திய அரசு தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் இலங்கை போர்க்குற்றத்தை பகிரங்கப் படுத்துவதோடு, தமிழக பிரதிநிதிகள் கலந்து கொள்ளவும் வழிசெய்திட மத்திய அரசை வலியுறுத்தி மீண்டும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு எஸ்.குணசேகரன் பேசினார்.

Friday, January 13, 2012

பசுபதி பாண்டியன் படுகொலை - தொல். திருமாவளவன் கண்டனம்

தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் திரு. பசுபதி பாண்டியன் நேற்று (10.1.2012) இரவு திண்டுக்கல் அருகே நந்தவனப்பட்டியில் உள்ளஅவரது இல்லத்தில் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த காட்டுமிராண்டித்தனத்தை நடத்திய வன்முறை கொலையாளிகளை விடுதலைச்சிறுத்தைகள் மிக வன்மையாக கண்டிக்கிறது.

ஒடுக்கப்பட்ட மக்களின் தலைநிமிர்வுக்காக பொது வாழ்வில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட பசுபதிபாண்டியன் பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்து முக்கிய பொறுப்புவகித்து அரசியல் பாணியாற்றினார். அத்துடன், தலித் அமைப்புகளோடும் தமிழ்த்தேசிய அமைப்புகளோடும் பல களப் பணிகளை ஆற்றினார்.

ஈழத்தமிழரின் உரிமைகளுக்காகவும் தோழமை இயக்கங்களோடு சேர்ந்து குரல் எழுப்பினார். இந்தக் கொடூர படுகொலை சம்பவத்தின் முதல் நாள் தேனி நகரத்தில் முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பை வலியுறுத்தி தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் சார்பில் உண்ணாநிலையிருந்து போராட்டம் நடத்தினார்.

இவ்வாறு பொது வாழ்வில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு ஏழை-எளியோருக்காகவும் ஈழத் தமிழருக்காகவும் போராடிவந்த பசுபதிபாண்டியன் அவர்களை சமூக விரோதக் கும்பல் படுகொலை செய்திருப்பது மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது.

பொதுவாக, தமிழகத்தில் தலித் சமூகத்தைச் சார்ந்த தலைவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையே நிலவுகிறது. அனைத்துத் தரப்பு மக்களுக்காகப் போராடுகிற தலைவர்கள் இருந்தாலும் அவர்கள் தலித் சமூகத்தைச் சார்ந்தவர்களாக இருந்தால் சுற்றுப் பயணங்களின்போதும் போராட்டங்களின்போதும் போதிய அளவில் காவல்துறையினர் பாதுகாப்பு வழங்குவதில்லை. பொது இடங்களில் கொடியேற்றுகிற நிகழ்ச்சியின்போதும் சுற்றிவளைத்து கல்வீசித் தாக்குவதும், நாட்டு வெடிகுண்டுகளை வீசுவதும் படுகொலை செய்வதுமான நடவடிக்கைகள் தமிழகத்தில் தலித் தலைவர்களுக்கு எதிராக மட்டுமே நிகழ்ந்து வருகின்றன.

தியாகி இமானுவேல்சேகரன், மேலவளவு முருகேசன் படுகொலை முதல் பசுபதி பாண்டியன் படுகொலை வரை அண்மைக்கால நிகழ்வுகள் இதனை உறுதிப்படுத்துகின்றன. ஒரு சமூக அமைப்பின் தலைவர் என்கிற முறையிலும் ஒரு அரசியல் பிரமுகர் என்கிற வகையிலும் அவருக்கு காவல்துறையினர் சார்பில் உரிய பாதுகாப்பை வழங்கியிருக்க வேண்டும். தமிழ்நாட்டில் எந்த ஒரு தலித் தலைவருக்கும் அத்தகைய பாதுகாப்பு வழங்குவதில்லை என்கிற நிலையே உள்ளது. ஆகவேதான், இந்தப் படுகொலையும் சமூக விரோதிகளால் மிக இலகுவாக செய்யப்படுகிறது.

பசுபதி பாண்டியன் அவர்களின் மறைவால் பெரும் துக்கத்தில் ஆளாகியுள்ள அவரது பச்சிளம் குழந்தைகள் உள்ளிட்ட உற்றார் உறவினர் யாவருக்கும் விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். அவரது உடலை கட்டுப்பாட்டுடன் நல்லடக்கம் செய்திட அவரது இயக்கத் தொண்டர்கள் முன்வரவேண்டும். அதுவே அவருக்கு செய்கின்ற உண்மையான அஞ்சலியாகும். சமூக விரோதிகள் திட்டமிட்டே நல்லடக்க நிகழ்ச்சியிலும் வன்முறையை தூண்ட முயற்சிப்பார்கள். அதற்கு இடம் கொடுக்காத வகையில் நல்லடக்கம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவண்

(தொல். திருமாவளவன்)

http://www.thiruma.in/2012/01/blog-post_11.html

Wednesday, December 28, 2011

அணு உலையை திணிக்க துடிக்கும் இந்திய அரசு ! தமிழகத்தைப் பலியிட்டு அணு வியாராமா?

அணு உலையை திணிக்க துடிக்கும் இந்திய அரசு !
தமிழகத்தைப் பலியிட்டு அணு வியாராமா?


’இந்த மண்ணில் தான் எங்கள் முன்னோர்கள் பாதுகாப்பாக வாழ்ந்தார்கள். எங்களுக்கு இதை அப்படியே விட்டுச் சென்றார்கள் அவர்கள். இப்போது எங்கள் முன் இருக்கும் கடமை இதை அப்படியே எங்கள் அடுத்த தலைமுறைக்கு விட்டு செல்வது. எனவே தான், கூடங்குளத்தில் அணு உலை என்ற பெயரில் ஒரு கொலைக்களம் வந்துவிடக்கூடாது என்று போராடிக் கொண்டிருக்கின்றோம்.’ இது தான் மூன்று மாதங்களாக இந்திய அரசின் மக்கள் விரோதப் போக்குக்கு எதிராகப் போராடிவரும் குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் தம் போராட்டத்தின் ஆழத்தில் படிந்திருக்கும் மானுடக் குரல்.


அணு குண்டு - தமிழ்நாடின் தலையில் ஒன்று…காலில் ஒன்றா?

’அணு உலை பாதுகாப்பானது தான். அறியாமையால் பாமர மக்கள் தேவையற்ற அச்சம் கொள்கின்றனர்’ என்று பாதுகாப்பைப் பற்றி பக்கம் பக்கமாக அறிக்கைவிடுகின்றது அரசு தரப்பு. 25 வருடங்களாக நடுக்கடலில் சுட்டுக் கொல்லப்படும் தமிழ்நாட்டு மீனவனின் பாதுகாப்புக்காக ஒன்றுமே செய்யவில்லை. அது மட்டும் அல்ல ஒருவன் சாவுக்கு கூட ஒரு சொட்டுக் கண்ணீர் வடிக்கவில்லை. பாதுகாப்புப் பற்றி நாம் கேள்வி கேட்ட போதெல்லாம் தேசியப் பாதுகாப்பு சட்டத்தைக் காட்டி சிறையிலடைத்தது. காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு என்று நமது நீர் உரிமைகளைப் பாதுகாக்க மறுத்தது. எல்லாவற்றுக்கு மேலாக ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க நாம் துடித்த போது, பச்சை படுகொலைக்கு பக்கபலமாக நின்றது இதே அரசு. முதலை கண்ணீர் வடிப்பது போல் இன்று நமது பாதுகாப்புப் பற்றி இந்திய அரசு பேசுகின்றது. கேப்பையில் நெய் வடியுது என்றால் நம்பிவிடுவோமா?

ஏற்கெனவே சென்னையில் கல்பாக்கத்தில் அணு உலை இயங்கிகொண்டிருக்கின்றது. நம் தலையில் புதைக்கப்பட்ட ஒரு அணு குண்டு. ’இதோ உன் காலிலும் ஒரு அணு குண்டைக் கட்டுகின்றேன்’ என்று கூடங்குளத்திலும் அணு உலையா? கல்பாக்கத்திலும் அடுத்ததடுத்து புதிய அணு உலைகளைத் திறக்கப் போகின்றனர். காலுக்கு தான் ஆபத்தென்று அலட்சியப்படுத்தப் போகின்றோமா? 1987 இல் கல்பாக்கத்திலும் விபத்து நடந்துள்ளது. இரண்டாண்டுகள் அணு உலை மூடப்பட்டிருந்தது என்பதை நினைவில் கொள்வோம்.

கொக்கோலா விளம்பரத்திற்கு விஜய், அணு உலை விளம்பரத்திற்கு அப்துல் கலாம்கள் – அறிவியல் பேசும் ஜோதிடம்


இந்த மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் என்றுமே வாய் திறவாத அப்துல் கலாம் ஓடோடி வந்து விட்டார்; மண்ணின் மைந்தன் என்று மார்தட்டிக் கொண்டு அணு உலை அமைக்கும் அத்தியாயத்தில் நடிப்பதற்கு. அதுவும் ’ரிஸ்க்’ எடுக்க வேண்டும் என்று அறிவுரை சொல்கின்றார். யாரிடம்? சுனாமியை வயிற்றில் வைத்திருக்கும் கடலுக்குச் சென்று மீன் பிடித்து கரை திரும்பும் மீனவர்களிடம். இயற்கை தாயின் வயிற்றைக் கிழித்து வைரம் தேடும் இலாப வெறிக்கு வழிவிடுவது தான் துணிச்சலா? நாங்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வுக்கு பழக்கப்பட்டு நாகரிகம் வளர்த்தவர்கள்.

’கூடங்குளத்தில் அணு உலை விபத்தே நேராது’ என்கின்றார் கலாம். ஜப்பானில் சுனாமி வந்து புகுசிமாவில் அணு விபத்து ஏற்பட்டது போல் இங்கு நேராதாம். அணு உலை வெடிக்கும் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்படாதாம். இது அறிவியலா? இல்லை ஜோதிடமா?

அணு உலைக்குள் ஒளிந்திருக்கு 5 லட்சம் கோடி சந்தை கணக்கு

’அணு மின்சாரத்தை விட்டால் தமிழ்நாட்டுக்கு வேறு நாதியில்லை’ என்று அடுத்தொரு வேடிக்கை பேசுகின்றது இந்திய அரசு. இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 3% தான் அணுமின்சாரம். அதை 2020 க்குள் ஏழு சதவிகிதமாக உயர்த்த வேண்டுமாம். 97% மின்சாரம் அனல், நீர், காற்று, தாவரக்கழிவு என்று பிற வழிகளில் வருகின்றது. குறிப்பாக, தமிழ்நாட்டின் 30 விழுக்காடு மின்சாரம் காற்றிலிருந்து பெறப்படுகின்றது. சுமார் 900 மைல் கடல் பரப்பைத் தன்னகத்தே கொண்ட தமிழகத்தில் காற்றுக்கு பஞ்சம் இல்லை. காற்றிலிருந்து மின்சாரம் எடுப்பதை விரிவாக்க இந்திய அரசு போதிய முனைப்பு காட்டாதது ஏன்?

மறுபுறம், இந்தியாவிடம் அணு மின்நிலையத்தை நிறுவவோ, செயலிழக்கச் செய்யவோ கைவசம் தொழிற்நுட்பம் இல்லை. அணு உலைக்கு தேவையான எரிபொருள் யூரேனியம். அதுவும் இங்கு இல்லை. அணு உலை வெடித்தால் இழப்பீடு தரவல்ல காப்பீடு நிறுவனங்களும் இங்கு இல்லை.மொத்தத்தில் நிர்மானம், எரிபொருள், காப்பீடு என்று எல்லாவற்றுக்கும் வெளிநாட்டுக்காரனிடம் பணம் கட்ட வேண்டும். இன்னும் 36 அணு உலைகளை இந்தியப் பரப்பெங்கும் திறக்கும் பொருட்டு அமெரிக்கா, ரஷ்யா, பிரான்சு, ஜெர்மனி என்று எல்லா மேற்கத்திய நாடுகளும் வரிசை கட்டிக்கொண்டு நிற்கின்றன . இப்படி உருவாகப் போகும் அணு சந்தையின் மதிப்பு சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் என்று நமக்கு தெரிகின்றதோ இல்லை ஒப்பந்தம் போட்ட வெளிநாட்டுக்காரனுக்கு தெரியும். மொத்தத்தில் 5 லட்சம் கோடி ரூபாய் அணு சந்தையை உருவாக்கி அதை பன்னாட்டு முதலாளிகளுக்கு பங்கு போட்டுக் கொடுப்பது தான் இந்திய அரசின் நோக்கம். அதன் தொடக்கப் புள்ளிதான் கூடங்குளம்.

தமிழ்நாட்டில் இன்று தயாரிக்கப்படும் மின்சாரத்தில் 18% மின் கடத்தும் பொழுதே வீணாகிவிடுகின்றது. இது இந்திய அளவில் 40%. இப்படிப்பட்ட ஓட்டைப் பாத்திரத்தில் எதைக் கொண்டும் நிரப்பமுடியாது.. ஆனால், அணுமின்சார தொழிற்நுட்பத்தை நமக்கு விற்று இலாபம் பார்க்க ஏங்கும் அதே நாடுகளில் இந்த மின் கடத்தல் இழப்பு மிக மிகக் குறைவு((8%க்கும் கீழ்). ஆனால் அவர்கள் அந்த தொழிற்நுட்பத்தை நமக்குத் தர மாட்டார்கள். இந்திய அரசும் கேட்காது. விலை அதிகமான பொருள் தான் சிறந்தது என்று தரகன்(இந்திய அரசு) சொல்வான்; வியாபாரி(பன்னாட்டு கம்பெனிகள்) விற்பான். இதில் கொடுமை என்னவென்றால் அவன் நாட்டில் காலாவதியாகிப் போன, குப்பையில் தூக்கி வீசப்படும் சரக்கைத் தான் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்கின்றான். இன்னும் 10 ஆண்டுகளுக்குள் அணுமின் உற்பத்தியை கைவிட ஜெர்மனியும், சுவிட்சர்லாந்தும் முடிவு செய்துள்ளன. ஆனால், ஜெர்மனி அணுமின் தொழிற்நுட்பத்தை விற்க இங்கே கடை விரிக்கின்றது.

’நாமெல்லாம் ஆட்டு மந்தை. மொத்தத்தில் எல்லாம் சந்தை’ – இந்தியாவின் வளர்ச்சிக் கொள்கை


கல்வி கடை சரக்காகிவிட்டது. தரமான மருத்துவம் ஏழைக்கு எட்டாக் கனியாகிவிட்டது. விவசாயம் வளர வேண்டியது நம்முடைய தேவை. அதை பயன்படுத்திக் கொண்டு ’பசுமைப் புரட்சி’ என்று சொல்லி உர சந்தையை உருவாக்கியது இந்திய அரசு. யூரியாவை. விற்றுத் தீர்த்து கொள்ளை லாபம் பார்த்தார்கள். ஆனால், விளைநிலம் மலடாய் போனது. உரம் வாங்கியே கடனாளி ஆனான் நம் விவசாயி. கடைசியில் மானத்துக்காக தற்கொலை செய்து கொள்ளும் அவல நிலைக்கு ஆளானான். இங்கு வளர்ச்சி விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கையில் மட்டும் என்று ஆனது. பதினைந்து வருடத்திற்கு முன் தொடங்கி இப்போது குடிக்கும் தண்ணீருக்கு கூட இங்கு ஒரு சந்தை உருவாகிவிட்டது.

உள்நாட்டு சில்லறை வணிக சந்தையைப் பன்னாட்டு கம்பெனிகளுக்கு வாரி கொடுப்பது ஒரு புறம். இருக்கும் மின்சாரத் தேவையைப் பயன்படுத்தி அணு வியாபாரிகளுக்காக அடுத்தொரு சந்தை உருவாக்கம் இன்னொருபுறம். அதுவும் கொலைகார அணுமின் தொழிற்நுட்பம் அது! இதற்காக பால்,பேருந்து,சமையல் எரிவாயு உள்ளிட்ட அடிப்படை வசதிகளின் விலையை உயர்த்தி 'வளர்ச்சிக்கான சுமையை' மக்களின் தலையில் ஏற்றுவது தவிர்க்க முடியாததாம்.

இந்தியாவின் காலடியில் தமிழ்நாட்டின் மானமும் ஜனநாயக உரிமையும்


ஈழத் தமிழர்களைக் காக்கத் தமிழகம் துடித்தெழுந்த போது துச்சமாக மதித்தது இந்தியா. தமிழினப்படுகொலைக்கு துணை நின்றது. போர்க்குற்ற விசாரணைக்கு போராடிக் கொண்டிருந்த போது மூன்று தமிழர் உயிரைப் பகடைக் காயாக்கி நம்மைச் சிதறதடித்தது. போராட்டம் திசை மாறித் தொடர்ந்தது. கூடங்குளத்தில் அணு உலை வேண்டாம் என்று போராடிக் கொண்டிருக்கின்றோம். அன்னிய சக்தியின் சதி என்று அவமானப்படுத்தியது. அதற்குள் முல்லைப் பெரியாறு அணை உரிமையைப் பகடைக் காயாக்கி, கேரளத்திற்கும் தமிழ்நாட்டிற்கு பகை மூட்டத் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு முறையும் நாம் உரிமைப் போராட்டம் நடத்தும் போது அடுத்தொரு உரிமையைப் பறித்து நம்மைத் சுழற்றி அடிப்பதைத் தன் உத்தியாகக் கையாள்கின்றது. முதுகில் குத்தும் துரோகம் என்று நாம் எச்சரித்த காலம் ஒன்றுண்டு. இப்போது நடப்பது வேறு. ஒவ்வொரு முறை நாம் கண்ணை மூடித் திறக்கும் போது நம் நெஞ்சில் குத்தி இரத்த சுவை பார்க்கின்றது.

அணு உலைக்கு எதிராக நடந்துவரும் போராட்டம்,
தமிழ்நாட்டு மக்களின் ஜனநாயக உரிமையை
மீட்க நடக்கும் போராட்டம் !

பெருமுதலாளிகளின் வேட்டைக்காடாக தமிழ்நாட்டை
மாற்றுவதைத் தடுக்கும் போராட்டம் !

இந்திய துணைகண்டத்தில் கண்ணி வெடிகள் போல
அணு உலைகளைப் புதைக்க நினைக்கும்
இந்தியாவின் மனிதகுல விரோத கொள்கைக்கு
எதிரானப் போராட்டம்.

இந்த போராட்டத்தில் நாம் வென்றாக வேண்டும்.
அதற்கு நாமெல்லோரும் ஒன்றாக வேண்டும்.

----தமிழர் பாதுகாப்பு இயக்கம் (Save Tamils Movement)