Thursday, March 6, 2014
ஒரு உழைக்கும் பெண்ணின் கடிதம் - உழைக்கும் பெண்கள் நாள் பதிவு-3
அனைத்துலக உழைக்கும் பெண்கள் நாள் மார்ச் 8, 2014
மார்ச் 8. ஆண்டுதோறும் வருகின்றது. பெண்கள் தின வாழ்த்துகள் என்று மின்னஞ்சல் வருகின்றது. பெண்களின் மாண்பும், உயர்வும், பெருமையும் பேசப்படுகின்றது. கோலப் போட்டிகள், அழகுப் போட்டிகள், நடனப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. நம்மில் சிலர் புத்தாடை அணிந்து செல்கின்றோம். ஆனால், இவை அனைத்தையும் விட இந்நாளுக்கென்றொரு முக்கியத்துவம் உண்டு. வாக்குரிமைக்காவும் ஆணுக்கு இணையான சம்பளத்திற்காகவும் 12 மணி நேரத்தில் இருந்து 8 மணி நேரமாக வேலை நேரத்தைக் குறைப்பதற்காகவும் பெண்கள் போராடிப் பெற்ற வெற்றியைக் குறிக்கும் நாள். அடிப்படை உரிமையான வாக்குரிமை கூட பெண்களுக்கு மறுக்கப்பட்டு தான் இருந்தது என்பதை உணர்த்தி நிற்கும் நாள். போராடினால்தான் நம் உரிமைகள் கிடைக்கும் என்ற உண்மையை உரைக்கும் நாள்.
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று சொன்ன சமூகத்தில் நாம் படித்து பட்டம் பெற்று பளபளக்கும் கண்ணாடி கட்டிடங்களுக்குள் பணி செய்ய வந்ததற்கு பின்னால் எத்தனையோ பெண்களின் போராட்ட வரலாறு இருக்கின்றது. ஆனால் இன்னும் உடைத்தெறியப்படாத அடிமை விலங்குகள் நம்மீது சுமத்தப்பட்டே இருக்கின்றன.
ஒவ்வொரு நொடிப் பொழுதும் எங்கோ ஒரு மூலையில் யாரோ ஒரு தோழி ஏதோ ஒரு வடிவில் பாலியல் வன்முறைக்கு ஆளாகி வருகின்றாள். பாலியல் சீண்டல், ஆசிட் வீச்சு, பாலியல் வன்புணர்ச்சி, கொலை என்று எத்தனையோ வடிவங்களில் வன்முறை நடந்தவண்ணமே இருக்கின்றது.
தில்லியில் நிர்பயா, காரைக்காலில், வினோதினி, ஆதம்பாக்கத்தில் வித்யா என்று நீளும் பட்டியலில் இப்போது சிறுசேரியில் உமா மகேஸ்வரி. பெண்கள் வன்முறைக்கு ஆட்படும்போது பெண்களே குற்றஞ்சாட்டப் படுகின்றனர். நாம் என்ன ஆடை அணிய வேண்டும், எத்தனை மணி வரை வெளியில் இருக்கலாம், எப்படிப் பேச வேண்டும், எப்படிப் பார்க்க வேண்டும் என்று பெண்களின் தலையில் சுமத்தப்படும் விதிகள். எத்தனையோ! பெட்டிக்குள் பூட்டி வைத்து பாதுகாக்க நாம் ஒன்றும் உயிரற்ற பொருள் அல்ல. வெறும் சதை குவியலும் அல்ல. உயிரும் உணர்வும், விருப்பங்களும், தேர்வுகளும், சுயமாக சிந்திக்கும் ஆற்றலும் கொண்ட மனிதர்கள்.
சென்னையில் மட்டும் 4 இலட்சம் பேர் ஐ.டி. துறையில் பணிபுரிகின்றனர். அதில் 40% பெண்களாம். சரி, ப்ராஜெக்ட் மானேஜர்கள், லீடர்களில் எத்தனை சதவிகிதம் பேர் பெண்கள்? பெண் என்பதால் வெளிநாட்டு வாய்ப்புகள் மறுக்கப்படவில்லையா? பெண் என்பதால் appraisal இல் வேறுபாடு இல்லையா? திருமணத்தின் பெயராலும் குழந்தை பிறந்துவிட்ட காரணத்தாலும் வேலையைவிட்டு வீட்டுக்குள் முடங்கிய பெண்கள் எத்தனை சதவிகிதம் பேர்? ’career’ என்பது ஆணுக்கு மட்டும் உரித்தான சொல்லா? இந்த சமத்துவமின்மைக்காக யார் பேசப் போகின்றார்கள்? சமையல் செய்வதும் குழந்தை வளர்ப்பதும் பெண்ணின் பிறவிக் கடமையென்று சொல்லி வளர்க்கப்படும் ஆண்களா?
இல்லை. நாம் தான் பேசியாக வேண்டும். நமக்காகப் பேசியாக வேண்டும். சுயமரியாதைக்காகவும் பாதுகாப்புகாகவும் சமத்துவத்துக்காகவும் நாம் பேசியாக வேண்டும். கெஞ்சினாலோ கொஞ்சினாலோ இவை மாறப் போவதில்லை. வேண்டிக் கேட்டுக் கொள்ள இவை ஒன்றும் நமக்கு வழங்கப்படும் சலுகைகள் அல்ல. இவை நம் உரிமைகள் இந்த ஆணாதிக்க சமூகத்தின் செவிப் பறைகள் கிழியும்படி உரக்கச் சொல்வோம்!
பாதுகாப்பும் சமத்துவமும் எமக்கு சலுகைகள் அல்ல; எமது உரிமைகள்
இப்படிக்கு,
உழைக்கும் பெண்.
Wednesday, March 5, 2014
அம்மா அவள் தான் முதன்மையானவளாம்!- உழைக்கும் பெண்கள் நாள் பதிவு -2
அம்மா
அவள் தான்
முதன்மையானவளாம்!
அவள்
அரவணைப்பில்தான்
பூமிப்பந்தே
பூத்துக்குலுங்கியதாம்
உயிர்திணைகள்
அஃறிணைகள்
சுற்றி...சுற்றி,..
வலம் வருமாம்
செல்லப் பிராணிகளாய்.
பூக்களைச் சொறிந்து
வாழ்த்தின செடிகள்
பழங்களை உலுக்கி
சந்தோசித்தன மரங்கள்
ஓடைகளும் சுனைகளும்
அவ்வாறே!
கலப்பையோ, மண்வெட்டியோ
கண்டுபிடிக்கவே இல்லை
கரடு முரடானது
அவள் பயணம்
ஓய்வேயில்லாமல்.
இயற்கையின்
இம்சை தாளாது
தாயானாள்!
தந்தையானவன்
உறவுகளை
சொல்லி...சொல்லி...
உட்கார வைத்தான்
சிறைக்குள்.
உணர்ச்சிகளை
காட்டி
படுக்க வைத்தான்
கட்டிலில்
திக்கி, திணறி
திமிறவும் வழியற்று
பீறிட்ட அவள் அழுகை
இன்னும் நிற்கவேயில்லை
இன்றும் தொடர்கிறது !
அம்மா
அவள்தான்
முதன்மையானவளா?...
பாரதிதாசன்
சேவ் தமிழ்சு இயக்கம்
Tuesday, March 4, 2014
காவிரிப்படுகை இனி தமிழ்நாட்டுக்குச் சொந்தமல்ல....
பூவுலகின் நண்பர்கள் மற்றும் சேவ் தமிழ்சு இயக்கம் இணைந்து நடத்திய ”மீத்தேன் எடுக்கும் திட்டம் - விளைவுகளும் புரிதல்களும்” அரங்கக் கூட்டம் நேற்று ( 2 மார்ச் 2014 ) சென்னை மயிலையில் உள்ள கவிக்கோ மன்றத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மீத்தேன் திட்டத்தை எதிர்த்து களப்பணியாற்றிக் கொண்டிருக்கும் சமூகச் செயற்பாட்டாளர்கள், சூழலியல் ஆர்வலர்கள் மற்றும் காவிரிப் படுகை விவசாயிகள், அரசியல் சமுக ஆர்வலர்கள் என இருநூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
’மீத்தேன் திட்டமும் வரவிருக்கும் ஆபத்துகளும்’ என்ற தலைப்பில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு.தோழர் கோ.திருநாவுக்கரசு உரையாற்றும் போது, இயற்கை விவசாயம் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். அதற்கு முன்பு விவசாயமே சாத்தியமற்றதாக மாறக்கூடிய ஒரு சூழல் தான் தற்போது உருவாகிக் கொண்டிருக்கிறது.மனிதனின் அடிப்படை தேவையான உணவு உற்பத்திக்கு மூல ஆதாரமான நிலத்தையும் நீரையும் நஞ்சாக்கக் கூடிய ஒரு திட்டமாகத் தான் மீத்தேன் திட்டம் இருக்கிறது. ஏற்கெனவே பசுமைப்புரட்சி என்ற பெயரில் இந்த மண்ணை சிதைத்து விட்டார்கள். இப்போது மண்,காற்று, நிலம், நீர் ஆகிய அனைத்தையும் இந்த மீத்தேன் திட்டத்தின் மூலம் அழிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இந்த மீத்தேன் திட்டத்திற்காக 500 அடி முதல் 1650 அடிவரை, ஆழ்துளை குழாய்கள் வளமான நிலத்தைக் குடைந்து அமைக்கப்படுகின்றன. அப்போது உருவாகும் வெற்றிடத்தில், நிலக்கரி உருவான காலத்தில் தோன்றிய, கடல் நீரை விட ஐந்து மடங்கு உப்பு நீர் சென்று சேருகிறது. இவ்வாறு சேரும் போது நிலத்தடி நீர் வறண்டு போகிறது. அது மட்டுமின்றி, இராசயனக் கலவையோடு வெளியே கொட்டப் படும் இந்த உப்பு நீர், கதிரியக்கம் வாய்ந்ததாக இருப்பதால் நிலத்தை நஞ்சாக்குவதோடு, பல்வேறு கொடிய நோய்களுக்கும் காரணமாக இருக்கப் போகிறது. வளர்ச்சி என்ற பெயரில் மண்ணின் மைந்தர்களான அம்மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப் படுகிறது. இந்த மண்ணும், நீரும், காற்றும், சூரியனும் அம்மக்களின் உரிமை. இவ்வளங்களை பன்னாட்டு நிறுவனங்கள் ஏலம் போடுவதற்கு துளியளவும் உரிமை கிடையாது.
அடுத்து பேசிய மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு. தோழர் அலிஸ்பாகு, மீத்தேன் திட்டத்தின் செயல்முறை மற்றும் அபாயங்கள் பற்றி விளக்கும் காணொளி ஒன்றை திரையிட்டு பேசினார். ’நீரியல் விரிசல்’ (Hydralic fracturing) என்றழைக்கப்படும், ஓரிடத்தில் துளையிடப்பட்டு, செருகப்படும் இந்த ஆழ்துளைக் குழாய்கள், நீள்வாக்கில் மூன்று அல்லது நான்கு கி.மீட்டர்கள் வரை பயணிக்கக் கூடியது. ஆகவே ஓரிடத்தில் தான் துளையிடப் பட்டுள்ளது. மற்ற இடங்களில் பாதிப்பு இருக்காது என்று நிம்மதியாக உறங்கி விட முடியாது. இத்திட்டத்தின் பிரதான இலக்கு கனிம வளம் நிறைந்த காவிரிப் படுகைகளில் கிடைக்கும் நிலக்கரியே. நேரடியாக திறந்த வெளிச் சுரங்கங்கள் அமைத்து நிலக்கரியை வெட்டி எடுப்பதற்கு முன்பு, இடுக்குகளில் ஒளிந்திருக்கும் மீத்தேன் எரிவாயுவை உறிஞ்சி எடுப்பது தான் இவர்களின் முதற்பணி. அதற்கு முன்பு, நிலக்கரிப் படிமங்களின் மீது அழுத்திக் கொண்டிருக்கும் நிலத்தடி நீரை முற்றிலுமாக வெளியேற்ற வேண்டும். நிலத்தடி நீரையும் உணவு உற்பத்தியையும் பாதிக்கும் இந்நயவஞ்சக திட்டத்தை மக்கள் ஏற்றுக் கொள்ள பகட்டு விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. மக்களுக்கு சாலை வசதிகள் அமைத்து தருவதாகவும் தொழில் வளம் பெருகி மக்கள் செல்வச் செழிப்படைவார்கள் என்றும் பொய்யான பரப்புரைகள் செய்யப்படுகின்றன.
திருவாரூர் வெள்ளக்குடி பகுதியில் ஏற்கெனவே ONGC நிறுவனத் திட்டத்தின் காரணமாக, அந்த மண் முழுதும் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டிருக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் வெகுவாக பாதிப்படைந்துள்ளனர். ஒரு சிறுவனும் உயிரிழக்க இத்திட்டம் காரணமாக இருந்திருக்கிறது. இதுவரை அச்சிறுவனின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கப்படவில்லை. முதல் தகவல் அறிக்கையும் காவல்துறையால் பதிவு செய்யப் படவில்லை. ONGC நிறுவனம், பல கோடி ரூபாய்கள் செலவழித்து, அரசியல்வாதிகளையும் ஊராட்சித் தலைவர்களையும் இவ்விபத்து குறித்து பேசாமல் இருக்க, விலைக்கு வாங்கியிருக்கிறது.
’காவிரிப்படுகையும் மீத்தேன் திட்டமும்’ என்ற தலைப்பில், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு. தோழர் க.மா.இரணியன் உரையாற்றும் போது, தமிழகம் எந்த அளவு கனிம வளச் சுரண்டல்களுக்கு உள்ளாகியிருக்கிறது என்பதை விளக்கினார். தமிழகத்தின் வளம் மிக்க, காவிரிப்படுகையில், காவிரி நீர் மறுக்கப்பட்டிருப்பதால், நிலத்தடி நீரை நம்பி மட்டுமே விவசாயம் செய்யக் கூடிய நிலை தான் இன்று இருக்கிறது. மேலும் காவிரிப்படுகையில், பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. காவிரி நீர் மறுக்கப்படுவதில் தொடங்கி, இரசாயன உரங்களால் மண் பாதிப்பு, நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, மணல் குவாரி கொள்ளையால் நிலத்தடி நீர் பாதிப்பு, அனல் மின் நிலையங்கள் அமைக்கப்பதற்காக நிலங்களை கையகப்படுத்துவதால் பல லட்சம் ஏக்கர் நிலங்கள் தரிசு நிலங்களாக மாற்றப்படுதல், கடலோர பகுதிகளில் அமைக்கப்படும் இறால் குட்டைகள், சர்க்கரை ஆலைக் கழிவுகளால் நிலத்தடி நீர் மாசுபடுதல் என்று ஒட்டு மொத்த காவிரிப்படுகையுமே இன்று பாலைவனமாக மாறக் கூடிய அபாயகரமான சூழலில் தான், மீத்தேன் திட்டம், அம்மக்களை ஒட்டுமொத்தமாக நாடோடிகளாக அம்மண்ணை விட்டு வெளியேறச் செய்யவிருக்கிறது.
2010 காங்கிரசு அரசால் தொடங்கப்பட்ட இத்திட்டம், 2011 திமுக ஆட்சியில், ஸ்டாலின் தலைமையில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்த்ததின் மூலம் வலுப்பெற்றது. தற்போது மீத்தேன் திட்டத்திற்கு எதிராக, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணிகள் நிறுத்தப்படவில்லை. சில இடங்களில் மக்களே போராடி, அக்குழாய்களை உடைத்து அகற்றியிருக்கின்றனர். மன்னார் குடி திறந்த வெளிச்சுரங்கம் தான் இவர்களின் பிரதான இலக்காக இருப்பதால், இத்தகைய மக்கள் போராட்டங்களை ஒட்டுமொத்தமாக நசுக்க வேண்டும். அதற்கு முன்பு, மக்கள் தாமாகவே ஊரை விட்டு வெளியேற வேண்டும். அவர்கள் அப்படி வெளியேற வேண்டுமானால், விவசாயத்தை அடியோடு அழிக்க வேண்டும். விவசாயத்திற்கு ஆதாரமான நிலத்தடி நீரை நஞ்சாக்க வேண்டும். மண்ணை பாலைவனமாக்க வேண்டும் என்பதே அரசுகளின், பன்னாட்டு நிறுவனங்களின் திட்டமாக இருக்கிறது.
தமிழகத்தில் வீராணம் குடிநீர் பாதுகாக்கப்பட வேண்டுமெனில் காவிரிப்படுகை பாதுகாக்கப்பட வேண்டும். காவிரிப்படுகை பாதுக்காக்கப்பட வேண்டுமெனில் குடிநீர்க்குழாய், விவசாயத்திற்கு பயன்படும் நிலத்தடி நீர்க்குழாய், நிலத்தடி நீரை மேம்படுத்த பயன்படுத்தப்படும் குழாய் ஆகிய மூன்று குழாய்களைத் தவிர வேறேந்த குழாய்களையும் நம் மண்ணில் அனுமதிக்கக் கூடாது. கெயில், மீத்தேன் போன்ற அழிவுத் திட்டங்களுக்கு எதிராக மக்களை அணிதிரட்டி போராட வேண்டும்.
பூவுலகின் நண்பர்கள் அமைப்பின், சட்ட ஆலோசகர், வழக்கறிஞர் சுந்தரராசன் அவர்கள், மாற்றுவழிகள் குறித்து தமது விவாதத்தை முன் வைத்தார். மனிதக் கழிவுகளிலிருந்து எரிவாயு எடுக்கப்பட்டு, அதை அன்றாட வீட்டு உபயோகங்களுக்கு பயன்படுத்தலாம் என்பதை செய்முறை வடிவில் எடுத்துரைக்கும் புதிய தலைமுறை காணொளி ஒன்றைத் திரையிட்டார். ஆழ்துளை கிணறுகள் மூலமாகத் தான் மீத்தேன் எடுத்தாக வேண்டும் என்பது பொய்யான பரப்புரை. மனிதக் கழிவுகளிலிருந்து கூட மீத்தேன் எடுக்கலாம். மனிதக் கழிவுகளைக் கையாளுவதில் மன ரீதியான சிக்கல்கள் நம்மிடையே இருக்கின்றன. மலத்தை அள்ளும் வேலை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினுடையது என்ற நமது மனத்தடைகளை அகற்றினால் மட்டுமே, மாற்றுவழிகள் குறித்து நாம் யோசிக்க முடியும். கூடங்குளம் அணு உலையில் உள்ள டர்பனைச் சுழலச் செய்ய, அணுப்பிளவின் மூலம் பயன்படுத்தப்படும் வெப்பத்திற்கு பதிலாக, மீத்தேன் வாயுவைக் கூட பயன்படுத்தலாம். இந்த மீத்தேன் வாயுவை, மேற்சொன்ன மனிதக் கழிவுகளிலிருந்தும் உருவாக்கலாம்.
இன்று பல்வேறு தொழில்கள் இருக்கின்றன. அதில் பல தொழில்கள் இல்லாவிட்டாலும் மனிதன் நிம்மதியாக உயிர்வாழ முடியும். ஆனால் விவசாயமின்றி மனிதன் உயிர் வாழ முடியாது. அத்தகைய விவசாயத்தின் மீது தான் அரசு, அழிவுத் திட்டங்களை ஏவுகிறது. அத்திட்டங்களை சட்டமாக்குகிறது. இது குறித்த விழிப்புணர்வு, விவாதம் இன்று ஊடகங்களிலும் பொதுத் தளங்களிலும் அதிக அளவில் இல்லை. ஏனெனில் ஊடகங்கள் முதலாளிகளிடமும், அரசியல்வாதிகளிடமும் சிக்கிக் கொண்டிருக்கிறது. இது ஒரு ஆபத்தான போக்கு.
சேவ் தமிழ்சு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர், தோழர் செந்தில், யாருக்காக மீத்தேன் திட்டம் என்ற அரசியலை முன் வைத்து தனது கருத்துகளை பதிவு செய்தார். மீத்தேன் திட்டத்திற்கு பல மாற்று வழிகள் இருக்கும் போது, அரசு ஏன் இப்படி ஒரு அபாயகரமான திட்டத்தை கையிலெடுக்க வேண்டும். உலகமய பொருளியல் கொள்கையானது, எவ்வளவு வேகமாக பொருளீட்ட முடியுமோ, அத்தகைய வழிமுறைகளையே பின்பற்றுகிறது. ஆய்வுகள் சார்ந்து, மக்களுக்கு தீங்கு விளைவிக்காத மாற்று வழிகள், கால அவகாசம் எடுப்பதால், அம்மாற்று வழிகள் குறித்து அவர்கள் கவலை கொள்வதில்லை. எவ்வளவு வேகமாக இயற்கை வளங்களைச் சூறையாட முடியுமோ, லாபம் சம்பாதிக்க முடியுமோ அதுவே அவர்களின் குறிக்கோளாக இருக்கிறது. இதை Crony Capitalism என்றழைப்பார்கள்.
இந்திய அரசின் வளர்ச்சிக் கொள்கையில் தான் கெயில்(GAIL), மீத்தேன், கூடங்குளம் அணு உலை ஆகிய அனைத்து நாசகார திட்டங்களும் மையம் கொண்டிருக்கின்றன. ஏற்கெனவே கெயில் நிறுவனம் குழாய்களை நம் நிலத்தினூடே அமைத்து விட்ட காரணத்தால் தான், மீத்தேன் திட்டமும் தமிழகத்தில் எளிதாக ஊடுருவ முடிகிறது. ஆகவே இந்த திட்டங்கள் அனைத்தும், ஒன்றுக்கொன்று மறைமுகமாக தொடர்பு கொண்டவை. மீதேன் திட்டம் விவசாயிகள் பிரச்சினை, கூடங்குளம் அணு உலை மீனவர்கள் பிரச்சினை என அந்தந்த வட்டாரப் பிரச்சினைகளாக இவைகளைச் சுருக்காமல், பரந்து பட்ட மக்களை ஒன்று திரட்டி, இந்திய அரசின் ஏகாதிபத்திய உலக மயப் பொருளாதாரக் கொள்கையை எதிர்க்கும் போராட்டமாக மாற்ற வேண்டும். இந்திய அரசுக்கு எதிராக, தமிழகம் தழுவிய ஒரு போராட்டத்தை நாம் முன்னெடுக்க வேண்டும்.
’மீத்தேன் திட்டமும் நம்மாழ்வாரும்’ என்ற தலைப்பில் உரையாற்றிய, தோழர் அரச்சலூர் செல்வம், விவசாயிகளை முற்றாக ஒழிக்க இந்திய அரசு மேற்கொண்டு வரும் சதித்திட்டங்களை அம்பலப்படுத்தி பேசினார். 68 விழுக்காடாக இருக்கும் விவசாயிகளை, 25 விழுக்காடாக குறைப்பதன் மூலம், உள்ளூர் உற்பத்தியை கட்டுப்படுத்தி, அந்நிய சந்தையிலிருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யலாம். அதன் மூலம் கொள்ளை லாபம் ஈட்டலாம் என்றும் ஆளும் அரசுகள் கணக்கு போடுகின்றன. “விவசாயிகள் வேறு வேலை பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் பேசிய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின், வளர்ச்சி சிந்தனைகளைப் பாருங்கள். இப்படியான விவசாயிகள் விரோதப் போக்கை எதிர்த்துத் தான்,நம்மாழ்வார் போராடினார். தனது உடல்நிலை தொடர்ந்து ஒத்துழைக்காத நிலையிலும், மீத்தேன் திட்டத்தை எதிர்த்து கடுமையாக வேலை செய்து கொண்டிருந்தவர் நம்மாழ்வார். காவிரிப்படுகையில் கிராமம் கிராமமாகச் சென்று பரப்புரை செய்தார். இந்த அழிவுத் திட்டங்களை எதிர்ப்பதோடு மட்டுமின்றி, அதற்கான மாற்று வழிகளையும் முன் வைத்தார். களத்திலியே தனது உயிரையும் இழந்தார். அவர் ஒரு துப்பாக்கி தூக்காத செகுவேரா.
அரங்கக் கூட்டத்தில், திருவாரூரில் மீத்தேன் திட்டத்திற்கு எதிராக தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டு வரும், மத்திய அரசு ஊழியர் தோழர் சக்திவேலும் தனது கருத்துகளை பதிவு செய்தார். மருத்துவர் இரா.பாரதி செல்வன் அவர்கள் எழுதிய, மீத்தேன் திட்டம் - கண்ணை விற்றுச் சித்திரமா? என்ற குறுநூலும் வெளியிடப்பட்டது. முதல் நூலை, தோழர் கோ.திருநாவுக்கரசு பெற்றுக் கொண்டார். தோழர் பாரதி செல்வன், உலகெங்கும் மீத்தேன் திட்டத்தை எதிர்த்து மக்கள் அணி திரண்டு போராடியதால் தான், இன்று அத்திட்டங்கள் தடை செய்யப்பட்டிருக்கின்றன. எனவே, மக்களாகிய நாம் அனைவரும் ஒன்று திரண்டு போராடி, மீத்தேன் எடுக்கும் திட்டத்தை நிறுத்தச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அ.மு.செய்யது
சேவ் தமிழ்சு இயக்கம்.
'நாங்க சாதிகெட்ட குடும்பம்' - உழைக்கும் பெண்கள் நாள் பதிவு -1
நான் காதல் திருமணம் செய்துகொண்டேன். பெரும்பான்மையினர் போல அல்லாது, 'எவ்விதச் சடங்குகளும்' இன்றி ''சுயமரியாதைத் திருமணம்'' செய்துகொண்டேன்.
எனது காதலை வீட்டில் சொன்னபோது கடும் அதிர்ச்சியும், எதிர்ப்பும் வந்தது. எனது அண்ணன் மட்டும் அரைமனதோடு சம்மதித்தார், ஏற்றுக்கொண்டார். அவனது வீட்டில் ஓரளவிற்கு ஏற்றுக்கொண்டார்கள். அந்த சூழ்நிலையில், எனது திருமணம் எந்த முறையில் நடக்கும் என்ற ஐயம் இரு வீட்டிலும் இருந்தது. அவனது வீட்டில், ''சர்ச்சில் வைத்து முறைப்படி தாலி கட்ட வேண்டும். இல்லையென்றால் எங்கள் இருவரது பெயரையும் 'ஊர் வரியில்' சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்'' என்று சொன்னார்கள். பல மாத போராட்டத்திற்குப் பின்பு, 'சர்ச்சில் வேண்டாம், ஆனால் தாலி கட்டிதான் திருமணம் நடக்கவேண்டும்' என்று அடம் பிடித்தனர். ஜோன்சன்(எனது கணவன்) அவன் பெற்றோர்களிடம், ''இந்தியாவில் தாலி கட்டி, திருமணம் செய்து கொள்வது போல்தான் உலகில் உள்ள அத்தனை கிறிசுதவர்களும் திருமணம் செய்துகொள்கிறார்களா? தாலி கட்டிக்கொள்ளச் சொல்லி பைபிளில் எங்கேயாவது சொல்லியிருக்கிறதா?'' என்று கேள்விகளை எழுப்பி அவர்களை யோசிக்க வைத்தான்.
மற்றொரு புறம், எனது நண்பர்கள் என்னிடம் ஆச்சரியமாகக் கேட்டனர். ''சுயமரியாதைத் திருமணமா?'', ''என்ன பெரியார் வழி மாறிட்டீங்களா?'', ''தாலி கட்டாம கல்யாணம் செய்தா, குறைந்தபட்சம் ஒரு மோதிரமாவது மாத்திக்குங்க'' இப்படியெல்லாம் கேள்விகளும் அறிவுரைகளும் குவிந்தன. சிலர் ''தாலி கட்டாம கல்யாணம் செஞ்சா அது செல்லாது. இது ஒரு கல்யாணம், இதற்கு அழைப்பிதழ் வேற!'' என்று எரிச்சலூட்டும் விதமாகவும் பேசினர்.
அவர்களுக்கெல்லாம், திருமணச் சட்டத்தில் இருக்கும் ''சிறப்புத் திருமணச் சட்டம் (Special Marriage Act)" பற்றி விளக்கவேண்டியிருந்தது. இது இந்தியா முழுவதிற்குமானது. திருமணத்திற்கு முன்பே பதிவாளர் அலுவலகத்தில் தகவல்களைக் கொடுத்து, அறிவிப்பெல்லாம் ஒட்டி அதன்பிறகு இதுபோன்ற திருமணங்கள் நடந்தது. ஆனால், தமிழகத்தில் இது பழைய முறையாக மாறிவிட்டது. "தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம் - 2009'' ன் படி, இந்த முன்ன்றிவிப்பெல்லாம் தேவையில்லை. மணமகன், மணமகள் எந்த சாதி எந்த மதம் என்ற கேள்விக்கே இடமில்லை. திருமணம் நடந்து முடிந்த பிறகு, பிறந்த தேதி, முகவரி இவற்றுக்கான சான்று, புகைப்படத்துடன் கூடிய ஒரு அடையாள அட்டை, திருமணம் நடத்தி வைத்தவருடைய ஒப்பம், திருமண அழைப்பிதழ், இவற்றை வைத்து திருமணத்தைப் பதிவு செய்துகொள்ளலாம்.
இந்தச் சட்டத்திலிருந்து சில வரிகள்
// “marriage” includes all marriages performed by persons belonging to any caste or religion under any law for the time being in force, or as per any custom or usage in any form or manner and also includes remarriage.//
//“priest” means any person who performs a marriage.//
தோழர் தியாகு உறுதிமொழிகளைக் கூற சமந்தாவும், ஜோன்சனும் வழிமொழிகின்றார்கள்....
நானும் ஜோன்சனும், திருமணப் பதிவுச் சட்டம் குறித்த புத்தகம் வாங்கிப் படித்தோம். வழக்கறிஞராக இருக்கும் ஜோன்சனின் உறவினர் ஒருவரிடம் மேலும் தகவல்களைக் கேட்டுப் பெற்றுக்கொண்டோம். இதுபோன்ற விளக்கங்கள் தருவதற்கு அது உதவியாக இருந்தது.
நண்பர்கள் கேள்விமேல் கேள்வியாகக் கேட்கும்போது சில நேரம் அழுகையும் பல நேரங்களில் கோபமும் வந்து என் மனதைக் கசக்கிப் பிழியும். இன்னும் பல சந்தேகங்களையும் எழுப்பினார்கள். ''குழந்தையை எந்த சாதி, மத முறையில் வளர்ப்பீங்க?'', ''பள்ளியில் சேர்க்கும்போது சாதி, மதம் என்னவென்று போடுவீங்க?'', ''அவங்களுக்குத் திருமணம் செய்யும்போது, எந்த சாதி, மதத்துல பொண்ணோ பையனோ பார்ப்பீங்க?'' இப்படியான கேள்விகள். இந்தக் கேள்விகள் ஆரம்பத்தில் எனக்கும் இருந்தது. ஜோன்சன் அவ்வப்போது தக்க பதில்கள் அளித்து எனக்குப் புரியவைத்தான்.
நான் என் நண்பர்களுக்கு அளித்த பதில்கள். ''எங்கள் குழந்தைகளை எந்த சாதி, மத முறைப்படியும் வளர்க்க மாட்டோம். பின்னாளில் அவர்களும் எங்களைப்போல கடவுள் மறுப்பாளராக வரலாம். அல்லது பிடித்த மதத்தைப் பின்பற்றும் சுதந்திரம் அவர்களுக்கு உண்டு. பள்ளியில் சேர்க்க சாதி, மதமெல்லாம் தேவையில்லை என்று அரசு ஆணையே இருக்கின்றது. சாதி, மதம் கிடையாது, 'நாங்க சாதிகெட்ட குடும்பம்' என்று சொல்லிக்கொள்கிறோம். பொதுப்பிரிவில்(Open Competition) ல் போட்டியிட்டுக்கொள்ளட்டும். எங்கள் குழந்தைகளின் திருமணத்தைப் பொருத்தவரையில், அது அவர்களுக்கான சுதந்திரம். அவர்கள் யாரைத் தெரிவு செய்தாலும் முழு மனதோடு ஏற்றுக்கொள்வோம். காதலிக்கவில்லையென்றால் எங்களைப்போன்றே சாதி, மதம் பார்க்காமல் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அப்படி ஒரு பெண்ணோ பையனோ கிடைப்பது ஒன்றும் குதிரைக்கொம்பில்லை''.
இதையெல்லாம் கேட்ட நண்பர்கள், 'இதெல்லாம் பேசத்தான் நல்லாயிருக்கும். வாழ்க்கையில் ரொம்ப கடினம்' என்றனர். எங்கள் திருமணம் நடந்து 1 வருடத்திற்கும் மேல் ஆகிவிட்டது. இப்போது எங்கள் திருமணத்தைப் பற்றி யாரும் விமர்சனம் செய்வதில்லை. ஆயினும் இதுபோன்ற கேள்விகளை மீண்டும் மீண்டும் பல தருணங்களில் எதிர்கொண்டுள்ளோம். அவற்றிக்கு விளக்கங்களும் சொல்லி, அவற்றைக் கடந்து வந்துள்ளோம்.
இயக்கத்தோழர்களுடன்....
எங்களிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பும் இந்தச் சமூகத்திற்கு நான் முன்வைக்கும் கேள்விகள்:
1. தாலி கட்டாமல் எந்த வித சாதி, மத கறையும் படியாமல் நடக்கும் திருமணங்களை வினோதமாகப் பார்த்து கேலிசெய்யும் மனநிலை ஏன்?
2. திருமணத்தில் சாதி, மத சடங்குகளால் என்ன பயன்? அதில் செய்யப்படும் சடங்குகளுக்கும் சொல்லப்படும் மந்திரங்களுக்கும் என்ன விளக்கம் என்பதை எத்தனை பேரால் விளக்க முடியும்?
3. 100, 200 ஆண்டுகளுக்கு முன் திருமணங்கள் எப்படி நடந்தன?
4. தாலி என்பது பொண்ணுக்குப் போடப்படும் அடையாளக் கயிறு. மாட்டுக்கு 'மூக்கணாங்கயிறு' போல. பெண்களுக்கு எதற்கு இந்த அடையாளச் சின்னம்?
5. திருமணமான பெண்களுக்கு அடையாளச் சின்னம் இருப்பதுபோல, திருமணமான ஆண்களுக்கு ஏன் ஒரு அடையாளச் சின்னம் இல்லை? இதை, பெண் அடிமைத்தனம் என்று சொல்வதில் என்ன தவறு?
காதல்/கலப்பு திருமணம் செய்பவர்களை, 'அரசு தரும் சலுகைகளுக்காகவே இதெல்லாம் நடக்கின்றன' என்கிற அப்பட்டமான மூடநம்பிக்கையைத் தூக்கி எறிய வேண்டும். ஒரு பெண்/ஆண்/யாராக இருந்தாலும் அவர்களுக்கான வாழ்க்கைத் துணையைத் தேடிக்கொள்ள அவர்களுக்கு முழு உரிமை உள்ளது. சாதி, மத அடையாளத்தை எதிர்க்கும் விதமாக நாங்கள் ஏற்கெனவே எடுத்துள்ள முடிவு என்னவென்றால், 'எங்கள் நண்பர்களின் பிள்ளைகளுக்கு சாதி, மதச் சடங்குகள் கொண்டு நடத்தப்படும் திருமணங்களில் நாங்கள் கலந்துகொள்ளமாட்டோம்'.
சமந்தா
சேவ் தமிழ்சு இயக்கம்
Sunday, March 2, 2014
மீத்தேன் எடுக்கும் திட்டம் – விளைவுகளும் புரிதல்களும்
’மாடு கட்டிப் போரடித்தால்
மாளாது செந்நெல் என்று
யானை கட்டிப் போரடித்த
சோழவள நாடிது’
- என்று போற்றப்பட்டவை தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான காவிரிப் படுகைப் பகுதிகள்.
வளமான ஆற்றுநீர் வளம், நிலத்தடி நீர் வளம் என இயற்கையின் பெருங்கொடைகள் கிடைக்கப்பெற்ற காவிரி படுகைப் பகுதிதான் உலகில் அதிக பரப்பளவு கொண்ட ஒரு தொடர்ச்சியான சமவெளி வேளாண் பகுதி என்றும் கருதப்படுகிறது.
ஆனால், கடந்த 25 ஆண்டுகளாக தமிழகத்திற்கான காவிரி நீர் அநியாயமாக மறுக்கப்பட்டு, நிலத்தடி நீரை மட்டும் நம்பி விவசாயம் செய்யும் வானம் பார்த்த பூமியாக காவிரிப் படுகைப் பகுதிகள் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றப்பட்டு வருகின்றது. தனது வஞ்சகமான போக்கால் காவிரி உரிமையை நமக்கு மறுக்கும் இந்திய அரசு, தற்போது நிலத்தடி நீருக்கும் மொத்தமாக வேட்டு வைக்கும் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை அங்கு தொடங்கியுள்ளது!
மீத்தேன் எடுக்கும் திட்டம் என்றால் என்ன?
பாண்டிச்சேரி அருகே பாகூர் தொடங்கி நெய்வேலி, ஸ்ரீமுஷ்ணம், ஜெயங்கொண்ட சோழபுரம் வழியாக மன்னார்குடி வரை , காவிரிப் படுகையில் நிலத்துக்கடியில் 500 அடி முதல் 1650 அடி ஆழம் வரை வளமான நிலக்கரிப் படிமங்கள் உள்ளன. இந்தப் படிமங்களின் இடுக்குகளில் இருக்கும் மீத்தேன் எரிவாயுவை, நிலக்கரிப் படிமத்தின் மீது அழுத்திக் கொண்டிருக்கும் நிலத்தடி நீரை முற்றிலுமாக வெளியேற்றிவிட்டு, ’நீரியல் விரிசல்’ (Hydarulic fracturing) என்னும் முறையில் எடுப்பது தான் மீத்தேன் எடுக்கும் திட்டம்.
நீரியல் விரிசல் : ஆபத்தான தொழிற்நுட்பம்:
நிலத்துக்கடியில் 2000 அடிவரை துளையிட்டு, குழாய் இறக்கி, அதிலிருந்து பக்கவாட்டில் அனைத்துத் திசைகளிலும் இரண்டு கி.மீ. வரை குழாய்களைச் செலுத்தி, நிலக்கரிப் பாளங்களை நொறுக்கி, இடுக்கில் தங்கியிருக்கும் மீத்தேன் எரிவாயு எடுக்கப்படும். நிலக்கரிப் படிமத்தை நொறுக்க, நீரோடு மணலும் 600 வகை வேதிப்பொருட்களும் கலந்த ஒரு அபாயகரமான (BTEX) கலவை மிக அழுத்தத்துடன் உட்செலுத்தப்படும். கலவை நீரைக் கொண்டு விரிசல் ஏற்படுத்தும் இந்த ‘நீரியல் விரிசல்’ முறையில் உட்செலுத்தப்படும் இந்த வேதிக்கலவையில் (ஈயம், யுரேனியம், ரேடியம், மெத்தனால், ஹைட்ரோகுளோரிக் அமிலம், பார்மால்0டி-ஹைடு மற்றும் பென்சீன், புற்றுநோய் தாக்கும் கார்சினோஜன் பொருட்கள், இன்னும் பெயர் வெளியிடப்படாத பல வேதிப் பொருட்கள்) 30% மட்டுமே மீண்டும் வெளியே எடுக்கப்படும். மீதி 70% நச்சுக் கலவையும் வளமான வேளாண் பகுதியில் நிலத்துக்கடியில் தங்கிவிடும். இது நிலத்தை மட்டுமல்ல, நிலத்துக்கடியிலுள்ள நீர் முழுவதையும் நச்சாக்கும்.
விளைவுகள் :
நிலத்தடி நீரை வெளியேற்றுவதால் குடிப்பதற்கும், விவசாயத்திற்கும் நீர் இல்லாமல் வளமான காவிரிப் படுகைப் பகுதி பாலைவனமாக மாறும்
அடி ஆழத்தில் உள்ள நிலத்தடி நீரே முதலில் வெளியேற்றப்படும். இது கடல் நீரை விட 5 மடங்கு உப்புத்தன்மை கொண்டதாக இருக்கும். இவை நீர் நிலைகளில் கலக்கும் போதும், பாசனக் கால்வாய்கள் மூலம் வெளியேற்றப்படும்போதும் வயல்வரப்புகளில் டன் கணக்கில் உப்பு படிந்து, விவசாயம் மொத்தமாக அழியும். உயிர்கள் அழியும்.
நிலத்தடி நீர் இல்லாத வெற்றிடத்தில் கடல்நீர் புகுந்து, நிலத்தடி நீர் உப்புநீராக மாறும்.
BTEX இரசாயனக் கலவை கழிவு நீர் புற்றுநோய், மூளை பாதிப்பு, கதிரியக்க நோய்கள் என பல நோய்களை உண்டாக்கும்.
குழாய்கள் இறக்கப்படும் பகுதிகள் தான் பாதிக்கும் என்று நாம் தவறாக எண்ணக்கூடாது. நிலத்துக்கடியிலேயே பக்கவாட்டில் கி.மீ கணக்கில் போடப்படும் குழாய்கள் சுற்றுவட்டார நிலத்தடி நீர்த்தொகுப்புகள் (Aquifers) மொத்தத்தையும் காலி செய்யும். காவிரி படுகையைச் சுற்றியுள்ள மாவட்டங்களின் நீர்த்தொகுப்புகள் வறண்டு போகும்.
நிலநடுக்கம், மண் உள்வாங்குதல் ஏற்படும்.
இன்றைய நிலவரம் :
முதற்கட்டமாக திருவாரூர் மாவட்டத்தில் 38 குழாய்களும், தஞ்சையில் 12 குழாய்களும் அமைக்கும் வேலைகள் தொடங்கிவிட்டன. மொத்தம் 691 சதுர கி.மீ வேளாண் நிலத்தில் 2000 குழாய்கள் வரை அமைக்கப்படும். இதற்கான ஒப்பந்தம் கிரேட் ஈஸ்டர்ன் எனெர்ஜி கார்ப்பரேசன் என்னும் தனியார் நிறுவனத்திடம் போடப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 6 லட்சம் கோடி மதிப்புள்ள எரிவாயுவை, 50,000 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போட்டுள்ளனர். மக்கள் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக அழித்து, தமிழகத்தின் வேளாண் தற்சார்பை ஒழித்து நமது மண்ணின் வளத்தை பெரு முதலாளிகள் சூறையாட, நமது அரசே ஒப்பந்தம் போட்டுள்ளது.
மீத்தேன் திட்டத்தால் அப்பகுதி மக்களுக்கும் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கும் உதவும் என்பது கட்டுக்கதையே. மீத்தேன் திட்டத்தின் ஆயுட்காலம் சுமார் 35 ஆண்டுகள். இந்தக் காலகட்டத்தில், அப்பகுதியில் இப்போது கிடைக்கும் உத்தேச வருமானத்தையும் மீத்தேன் எடுக்கும் திட்டம் வந்தால் வரும் உத்தேச வருமானத்தையும் இத்துடன் இணைத்துள்ளோம்.
மீத்தேன் திட்டத்திற்குப் பின்: அரசுக்கு 3300 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்
அய்யா நம்மாழ்வார் விதைத்த போராட்ட விதை :
மீத்தேன் எடுக்கும் அபாயகரமான திட்டத்தை எதிர்த்து அய்யா நம்மாழ்வார் அவர்கள் காவிரிப் படுகையில் கிராமம் கிராமமாகப் பிரச்சாரம் செய்தார். அதன் கொடிய விளைவுகளை மக்களுக்கு எடுத்துரைத்தார். மண்ணின் வளத்தைக் காக்க தனது வாழ்நாள் முழுவதையும் செலவிட்ட நம்மாழ்வார், அந்த மண்ணையும் மக்களையும் காக்க, தனது இறுதி மூச்சு வரை மீத்தேன் திட்டத்தை எதிர்த்து மக்களை ஒன்றிணைத்தார். களத்திலேயே தனது உயிரையும் துறந்தார்.
மக்கள் போராட்டங்கள் :
ஆபத்தான மீத்தேன் திட்டம் பற்றிய விழிப்புணர்வு கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடம் ஏற்பட்டு வருகின்றது. நரசிங்கம்பேட்டை, பாவாஜிக்கோட்டை, போன்ற கிராமங்களில் மீத்தேன் திட்டத்திற்காக போடப்பட்டிருந்த நட்ட கல்லை கிராம மக்கள் பிடுங்கி எறிந்தனர். மன்னார்குடியிலும், திருவாரூரிலும் எழுச்சிகரமான மக்கள் பேரணி சமீபத்தில் நடைபெற்றன. கிராம சபைகளில் இத்திட்டத்திற்கு எதிராக மக்கள் தீர்மானங்கள் இயற்றுகின்றனர்.
நாம் என்ன செய்யப் போகிறோம்?
காவிரி நீரை தமிழகத்திற்கு வரவிடாமல் தடுப்பது
மேற்கு மாவட்ட விளைநிலங்களில் கெய்ல் பைப்லைன் பதிப்பது
காவிரிப் படுகையில் மீத்தேன் எடுக்கும் திட்டம்
விவசாயிகள் விவசாயத்தை விட்டுவிட்டு வேறு தொழிலைச் செய்ய வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனை சொல்வது
- என்று தமிழகத்தின் தற்சார்பு வேளாண் உற்பத்தியையும், தமிழக மக்களின் வாழ்வையும் மொத்தமாக சிதைக்கும் வேலைகளை இந்திய அரசு தொடர்ந்து திட்டமிட்டு செய்து வருகிறது.
வளர்ச்சி என்ற பெயரில் முன்மொழியப்படும் இது போன்ற திட்டங்கள், கண்டிப்பாக மக்களின் வளர்ச்சிக்காக அல்ல. இவை, மக்களை வாழவும் கூட விடாமல் விரட்டியடிக்கும் திட்டங்கள்.
அப்படியென்றால் இவை யாருடைய வளர்ச்சிக்கான திட்டங்கள்?
விவசாயத்தை அழிக்க வரும் இத்திட்டங்களின் உண்மைப் பின்னணி என்ன?
மீத்தேன் எடுப்பதோடு இது நின்று விடுமா?
அரசுக்கு நட்டம் என்று தெரிந்தே மீத்தேன் எடுப்பதன் உள்நோக்கம் என்ன?
வாருங்கள் நண்பர்களே! தெரிந்து கொள்வோம்… போராடும் மக்களுடன் கரம் கோர்ப்போம்! நம்மாழ்வார் வழியில்…
மீத்தேன் எடுக்கும் திட்டத்தினை எதிர்ப்போம்! தமிழக வளங்களைக் காப்போம்!
நாள் : 02-03-2014
நேரம் : 05.00 – 09:30 PM
இடம் : கவிக்கோ மன்றம், இரஹ்மத் வளாகம், இரண்டாவது மெயின் ரோடு, மயிலாப்புர்-4.
Ref:
http://save-tamils.org/index.php?option=com_content&view=article&id=559:methane-project-risks-in-cauvery-delta&catid=3&Itemid=7
http://antimethane.blogspot.in/
http://www.prashantmodi.net/tag/geecl/
http://www.tnpcb.gov.in/pdf/Great_eastern%20Energy_Thiruvarur.pdf
Subscribe to:
Comments (Atom)










.jpg)




