Saturday, February 8, 2014

மோடி - வெளிச்சங்களின் நிழலில் ! - 3




நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிக்கான காய்நகர்த்தல்கள் பேச்சுவார்த்தை என்ற கட்டத்தைத் தாண்டி உருப்பெற்றுக் கொண்டிருக்கின்றன. மோடி அலை என்ற கருத்துருவாக்கத்தை முன்வைத்து, மோடியை பிரதமராக்குவதே இலக்கு என்று பா.ஜ.க. ஒருபக்கம் கூட்டணியை அமைக்க திட்டமிட்டு செயல்படுகிறது. மறுபுறம், காங்கிரசு மற்றும் பா.ஜ.க என்கிற இரண்டு கட்சிகளும் இல்லாத மூன்றாவது அணியை அமைப்பதில் இடதுசாரிகள் மும்மரமாக உள்ளனர். காங்கிரசு கட்சியோ தங்களின் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. மோடி அலையில் வெற்றி பெற்றதாக பா.ஜ.க-வால் விமர்சிக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி தங்களுக்கு விழப்போகும் வாக்குகளை பிரித்துவிடக் கூடாது என்பதில் பா.ஜ.க மிகக் கவனமாக செயலாற்றி வருகின்றது.


இவ்வாறு கூட்டணிக் கணக்குகளும், பேரங்களும் நடந்து கொண்டிருக்க அனைத்து இடங்களிலும் மக்கள் மோடியைப் பற்றியே பேசுவது போலவும், நாட்டின் அனைத்து பிரச்சனைகளுக்கும் அவரே சர்வரோக நிவாரணி என்பது போலவும் ஒரு மாயை கட்டமைக்கப்படுள்ளது. இந்தப் புனைவை கட்டமைத்ததில் மோடிக்கும், பா.ஜ.க -விற்கும் எவ்வளவு பங்களிப்பு உள்ளதோ அதற்கு சற்றும் குறைவில்லாத பங்கு கார்பரேட் ஊடகங்களுக்கும், சமூக வலைதளங்களுக்கும் மற்றும் மோடிக்காக நியமிக்கப்பட்ட பிரசாரக் குழுவிற்கும் உண்டு. மோடிக்கான பிரச்சாரம் என்பது அவர் பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்கப்படுவதற்கு முன்னரே மிகத் துல்லியமாக திட்டமிட்டு நடைபெற்று வருகின்றது.


2002- ல் இனப்படுகொலையாளராக ஊடகங்களால் தூற்றப்பட்ட ஒருவர் எப்படி அடுத்த பத்தாண்டுகளில் வளர்ச்சியின் நாயகராக ஆக முடியும் என்று நான் பலமுறை வியந்ததுண்டு, பிறகுதான் அறிய முடிந்தது APCO என்னும் அமெரிக்க மக்கள் தொடர்பு நிறுவனம்தான், மோடியை சந்தைப்படுத்தி கொண்டிருக்கிறது என்பது.அத்தோடு ஊடகங்களில் பணிபுரியும் யாரெல்லாம் மோடியைப் பற்றியும், குஜராத்தைப் பற்றியும் பரப்புரை செய்ய விரும்புவார்கள் என்பதை கண்டறிந்து அவர்களை பிரச்சாரத் தூதுவர்களாக உருவாக்கும் பணியையும் மேற்கொண்டது. இதற்காக மோடி அரசு, அப்கோ நிறுவனத்துடன் ஆண்டிற்கு 2.25 கோடி அமெரிக்க டாலர் தருவதாக 2010 ஆண்டு ஒப்பந்தம் செய்துள்ளது, அதுவும் இந்த தொகை வழங்கப்படும் அன்று உள்ள இந்திய ரூபாய்க்கு சமமான டாலர் மதிப்பில் வழங்கப்படும் என்று செய்துள்ளது.இப்படி மக்கள் வரிப்பணத்தை வாரி இறைத்துதான் ஊழல் கறை படியாதவர் ஆக்கப்பட்டார் மோடி.


மோடியின் நிறுவனமயப்படுத்தப்பட்ட பிம்பப்பெருக்கதிற்கும், கெஜ்ரிவாலின் பிரச்சாரத்திற்கும் இடையில் சிக்கித் தவிக்கும் காங்கிரசு, ராகுல் காந்தியை நாடு முழுக்க கொண்டு சேர்க்கும் முயற்சியாக நரேந்திர மோடியின் அடியொற்றி DENTSU என்கிற ஜப்பானை சேர்ந்த நிறுவனத்தையும், Burson-Martseller என்கிற மக்கள் தொடர்பு நிறுவனத்தையும் பணிக்கு அமர்த்தியுள்ளது.


கட்சிகளால் பணிக்கமர்த்தப்பட்ட மக்கள் தொடர்பு நிறுவனங்கள்தான் இவ்வாறு செய்கின்றன என்று நாம் நினைத்தால், தங்களைத் தாங்களே நடுநிலையாளர்கள் என்று நெஞ்சை உயர்த்தி சொல்லும் நாளிதழ்களும், 24 மணி நேர செய்தி ஊடகங்களும் இதையேதான் செய்கின்றன.


நம் நாட்டில் உள்ள பாராளுமன்ற சனநாயக முறைப்படி மக்கள் பிரதமரை நேரடியாக தேர்ந்தெடுக்க முடியாது என்கிற பட்சத்திலும், எப்படியாவது மோடி பிரதமர் ஆகிவிட வேண்டும் என்கிற எண்ணத்தை படித்த மத்தியதர வர்க்கத்தினரிடம் விதைத்ததில் இந்த ஊடகங்களுக்கு பெரும்பங்கு உண்டு.



பா.ஜ.க -வினால் மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அடுத்த நாள் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ் பின்வருமாறு முகப்புச் செய்தி வெளியிட்டு, “Prime Modi: Gujarat CM is BJP’s choice -- despite Advani", அதில் மோடிக்கு மக்கள் மத்தியில் இருக்கும் ஆதரவை பயன்படுத்திக் கொள்ள எடுக்கப்பட்ட முடிவு என்று எழுதியிருந்தது.


"டைம்ஸ் ஆப் இந்தியா", ஒருபடி மேலே சென்று மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க பாரதீய ஜனதாவின் மூத்த தலைவரின் கடுமையான எதிர்ப்பையும் மீறியுள்ளது என்று செய்தி வெளியிட்டது, “ BJP topples LK, crowns Modi”.


நரேந்திர மோடி அவர்கள் பிரதமராக அறிவிக்கப்பட்டதற்கு பின்னர் REUTERS பத்திரிக்கைக்கு அளித்த நேர்காணலின் போது, 2002 குஜராத் வன்முறையில் உயிரிழந்தவர்களை பற்றிக் கருத்துக் கூறும் போது, தன் காரில் அடிப்பட்ட நாய்க்குட்டி என்று ஒப்பிட்டிருந்தார். இதற்கு ஜூலை 15, 2013 என்று வெளியான டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையும், 16 ஜூலை வெளியான இந்தியன் எக்ஸ்ப்ரசும், 2002 குஜராத் படுகொலை பற்றி கிஞ்சித்தும் சிந்தித்துப் பார்க்காமல் நரேந்திர மோடி 2014 தேர்தலுக்கு முன் தன்னைச் சரியாக வெளிப்படுத்தும் திறமையை (Communication Skills) வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறி தலையங்கம் தீட்டியிருந்தன. ஆயிரம் பேரின் கொலை பற்றி கவலைப்பட வேண்டிய ஊடகங்கள், மோடியின் ஆங்கில அறிவின்பால் அக்கறை செலுத்தின.


உத்தரகண்டில் மக்கள் பெருவெள்ளத்தில் சிக்கித் தவித்த போது, 15,000 பேரை நேரில் சென்று காப்பாற்றினார் மோடி என்று செய்தி வெளியிட்டது டைம்ஸ் ஆப் இந்தியா. மோடி சென்று 15,000 பேரைக் காப்பாற்றிய போது ஹெலிகாப்ட்டர் கொண்டு மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவமே திணறிக் கொண்டிருந்தது என்னும் செய்தி மோடியின் விளம்பரப் புரட்டை அவிழ்த்ததுடன், மக்களின் துன்பத்தில் அரசியல் செய்ததை வெளிச்சம் போட்டுக் காட்டியது.


இந்தியா முழுக்க எங்கு குண்டுவெடிப்பு நடந்தாலும் குற்றஞ்சாட்டப்பவர்களாக தாடியுடன் நாலு இளைஞர்களின் புகைப்படங்களைப் போட்டு தீவிரவாதிகள் பின்னணி என்று செய்தி வெளியிடுகின்றன ஊடகங்கள். பீகாரில் நடைபெற்ற மோடியின் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்புக்கு காரணம் என்று குற்றஞ்சாட்டப்பட்டவர்களை இந்து இளைஞர்கள் என்று வகைப்படுத்தி விளித்தது எப்படிப்பட்ட நடுநிலை?. குண்டுவெடிப்பு நிகழ்ந்த அதே இடத்தில், உடனே பொதுக்கூட்டம் நடத்த எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்பதை எத்தனை ஊடகங்கள் கேள்விக்கு உட்படுத்தின?.


இந்த கட்டுரைத் தொடரின் முதல் பாகத்தில், நான் பயன்படுத்திய ஒரு வாக்கியத்தை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். " தனியார் பெருமுதலாளிகள் என்றும் பாசிசத்தின் நண்பர்களே, பாசிசத்தின் தொடக்கம் தனிமனிதத் துதிகளிலே உள்ளது". அதேபோல், பாசிசவதிகள் என்றும் துதிகளையும், தம்மைப் பற்றி பிரச்சாரம் செய்வதையுமே விரும்புகின்றனர். ஹிட்லருக்கு எப்படி கோயபல்சோ, அதேபோல மோடிக்கு இந்த கார்பரேட் ஊடகங்கள்.


தாங்கள் விரும்பிய செய்திகளை வெளியிடாத, தங்களைப் பற்றி விமர்சிக்கும், ஊடக தர்மத்தைக் காத்து நிற்கும் பத்திரிக்கையாளர்களை களையெடுக்கவும்,கருத்துச் சுதந்திர குரல்வளையை நெரிக்கவும் பாசிசவாதிகள் தவறுவதும், தயங்குவதும் இல்லை.




அண்மையில் இந்திய பத்திரிக்கைத் துறையில் இருந்து களையெடுக்கபட்டவர்களில் ஒருவரான சித்தார்த் வரதராஜன், "தி இந்து" நாளிதழின் முதன்மை ஆசிரயர் பணியில் இருந்து நீக்கப்பட்டார். தி இந்து நாளிதழின் திருவனந்தபுரம் பதிப்பில், மோடி அமிர்தானந்தமயிடம் ஆசி வாங்கும் செய்தியை முதல் பக்கத்தில் வெளியிட்டதைக் கண்டித்ததுடன், தேர்தல் நேரங்களில் இது போன்ற சம்பவங்கள் வாடிக்கையானவை என்று சித்தார்த் வரதராஜன் தெரிவித்ததும்தான் அதற்குக் காரணம்.

இது பற்றி தன்னுடைய கருத்தை சித்தார்த் வரதராஜன் பின்வருமாறு கூறினார்,

" பெரும்பாலான ஊடக நிறுவனங்கள் இயல்பாகவே நெருக்கடிக்கு உள்ளாக விரும்பமாட்டார்கள், அதேபோல், நரேந்திர மோடியோ விமர்சனங்களை விரும்பமாட்டார், இப்படியிருக்கையில் மோடியை விமர்சித்து அவரின் கோபத்திற்கு ஆளாகக்கூடாது என்று ஊடகங்கள் நினைப்பதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. இது போன்ற முடிவுகள் அந்தந்த பத்திரிகை குழுமங்களின் சார்புத்தன்மை அடிப்படையிலேயே அமைகிறது. சில நடவடிக்கைகள் வெளியில் தெரிகின்றன, பல உள்ளேயே தணிக்கை செய்யப்பட்டுவிடுகின்றன."

ஒருபுறம் மோடியை விமர்சித்து தன்னுடைய இளஞ்சிவப்பு நிறத்தை காப்பாற்றிக் கொள்ளும் "தி இந்து" நாளேடு, சித்தார்த் வரதராஜனை பணிநீக்கம் செய்து காவிப் பாசத்தைக் காட்டியுள்ளது.




17 ஆண்டுகளாக சன் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியை நடத்தி வரும் திரு. வீரபாண்டியன், தொலைக்காட்சிக்கு வெளியே ஒரு நிகழ்வில் தெரிவித்த மோடி அலை பற்றிய கருத்திற்காகவே அந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு பணியை இழந்தார். இதற்கும் அவர் கூறிய கருத்து மிகவும் பொதுமையான ஒன்று, " மோடி அலை என்ற காரணத்திற்காக வாக்களிக்காமல்,மக்கள் வாக்களிக்கும் முன்பு நன்கு சிந்திக்க வேண்டும்; நீங்கள் இப்போது எடுக்கும் முடிவை இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கும் சுமக்க வேண்டியிருக்கும்" என்று தெரிவித்திருந்தார்.


ஓபன் (OPEN) வார இதழில் அரசியல் பிரிவு ஆசிரியராக பணியாற்றிய ஹர்தோஷ் சிங் பால், அரசியல் அழுத்தங்கள் காரணமாகவே தான் பணிநீக்கம் செய்யப்பட்டதாக தன்னுடைய பத்திரிக்கை ஆசிரியர் கூறியதாக தெரிவித்தார். இந்த இதழில்தான் 2002 குஜராத் படுகொலையில் இறந்தவர்களின் மண்டை ஓடுகளின் மீது மோடி நிற்பது போலவும், காங்கிரசின் ராகுல் காந்தி பெற்றவர்களின் தோளில் அமர்ந்து அரசியல் செய்வது போலவும் சித்திரம் வெளியிட்டிருந்தனர்.பின்னர் மோடி அணியினரின் அழுத்தத்தால் இந்த புகைப்படம் விலக்கிக் கொள்ளப்பட்டது.


நெட்வொர்க் 18 ஊடக குழுமத்தின் செயல்பாடுகள் வலதுசாரித்தனமாக திரும்பியதில், இந்த குழுமம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானியால் வாங்கப்பட்டதுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. நெட்வொர்க் 18 குழுமத்தின் பத்திரிக்கைகளில் ஒன்றான "போர்பஸ்" (FORBES) ஆசிரியரிடமும், நிருபர்களிடமும் மோடியிடம் சார்புப் போக்கை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனாலயே இந்த்ரஜித் குப்தா உட்பட நான்கு ஆசிரியர்கள் பத்திரிக்கையில் இருந்து வெளியேறினர்.


அண்மையில் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசிய சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா செசல்வாத் கூறியதை இங்கு நாம் நினைவில் கொள்ள வேண்டும், "நாஜிக்கள் செர்மனியில் பாசிசவாதத்தைத் தனியாக கட்டமைத்துவிடவில்லை, அவர்களுக்கு ஆதரவாக அன்றைய கோலா(பெப்சி), கோக கோலா போன்ற தனியார் பெருநிறுவனங்களும் செயல்பட்டனர் " என்று கூறினார். இது நெட்வொர்க்18-ஐ விலைக்கு வாங்கியுள்ள அம்பானிக்கும், இந்தியப் பெருநிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் மத்தியில் நடைபெற்ற இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? என்கிற கருத்துகணிப்பில் மோடிக்கு ஆதரவாக வாக்களித்த நான்கில் மூன்று பங்கு முதலாளிகளுக்கும் பொருந்தும்.





இவ்வாறு பத்திரிக்கைகளில் நடந்த கட்டம் கட்டும் வேலை, சமூக ஊடகமான ட்விட்டரையும்(Twitter) விட்டு வைக்கவில்லை. செய்தி, அரசியல் பிரிவு தலைமைப் பொறுப்பில் இருக்கும் ராகுல் குர்ஷீத், மோடி மீதான தன்னுடைய அரசியல் இடுகைகளுக் காகவே (tweets) பணிநீக்கம் செய்யபடுவது வரை நடந்தேறியுள்ளது.


குஜராத்தின் வளர்ச்சி என்னும் மாயையையும், தனியார் பெருமுதலாளிகளின் உத்தரவுபடி மோடிக்கு இனிக்கும் செய்திகளை வெளியிடும் செய்தி நிறுவனங்கள், குஜராத்தின் மிதிவிர்டியில் அணு உலைக்கு எதிராக நடக்கும் மக்களின் போராட்டத்தையும் ,25 நாட்களையும் தாண்டி போராடி வரும் குஜராத் துப்புரவுத் தொழிலாளர்களின் போராட்டத்தைப் பற்றிய செய்திகளையும், 8000 முதல் 10000 விவசாயிகள் குஜராத்தின் வடோதராவில் நடத்திய போராட்டம் பற்றியும் இருட்டடிப்பு செய்தது ஏன்?. இதுதான் ஊடக அறமா?

சனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்லப்படும் பத்திரிக்கைகள்/ஊடகங்கள் சில தனியார் முதலாளிகளின் கைகளுக்கு போனபோதே, அந்த தூண் சரியத் தொடங்கிவிட்டது. அந்தத் தூணை அதிகார பலம் கொண்ட யாரும் தன் வீட்டு முற்றத்தில் வைத்துக் கொள்ளலாம் என்பது பத்திரிக்கைத் துறையின் பெரும்பகுதி செல்லரித்துக் கிடப்பதைத் தோலுரித்துக் காட்டுகிறது.


நாளுக்கு நாள் செல்லரித்துக் கொண்டிருக்கும் ஊடகத் துறையை நினைக்கும் போது எப்போதோ படித்த கவிதை ஒன்று நினைவில் வருகிறது,


"பட்டுவேட்டி பற்றிய

கனவில் இருந்தபோது

கட்டியிருந்த கோவணம்

களவாடப்பட்டது "


அதீத தொழில்நுட்ப வளர்ச்சி, நொடிக்கு நொடி செய்திகள், 24 மணி நேர தகவல்கள், நடுநிலையான விவாதங்கள் என்று சவடால்விடும் ஊடகங்களின் அறம் என்னும் கோவணத்தை மோடி போன்ற பாசிஸ்டுகள் உருவிக் கொண்டிருக்கின்றனர், அதை இறுக்கிக் கட்ட நினைக்கும் ஊடகவியலாளர்களின் கைகள் தனியார் பெருமுதலாளிகளால் துண்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.


- வெளிச்சம் தொடர்ந்து படரும், நிழல்களின் மீது!

பாகம் -1 - http://save-tamils.blogspot.in/2013/09/1.html
பாகம் -2 - http://save-tamils.blogspot.in/2014/01/2.html

கதிரவன்
சேவ் தமிழ்சு இயக்கம்

புகைப்படங்கள் ஒப்பன், அவுட்லுக் மாத இதழிலிருந்தும், மற்ற வலைதளங்களிலிருந்தும் எடுக்கப்பட்டுள்ளன. நன்றி...

Thursday, February 6, 2014

கோலி சோடா - எளியவர்களுக்கான பானம்!




உலகமய சூழலில் பெப்சியும், கோக்கும் மட்டுமே குடித்து பழகிய ஒரு தலைமுறையான நாம் முற்றிலும் மறந்துவிட்ட எளியவர்களின் பானம், " கோலி சோடா ". 1990-க்குப் பிறகு நடந்த பொருளாதார மாற்றத்தில் நம் மண்ணிலிருந்து அகற்றப்பட்ட எளியத் தொழில்களில் ஒன்று சோடா சுற்றுவது.


இப்படி நாம் எல்லோரும் மறந்துவிட்ட ஒன்றுதான் இந்த திரைப்படத்தின் தலைப்பு " கோலி சோடா ". கதாபாத்திரங்களின் எளிமையையும், பொங்கி வரும் கோபத்தையும் வெளிக்காட்டும் மிகப் பொருத்தமான தலைப்பு.


கொத்தவால் சாவடியாக இருந்து கோயம்பேடு மார்க்கெட்டாக மாறிய காய்கறி சந்தைதான் கதைக்களம். மூட்டை தூக்கி பிழைப்பை நடத்தும் நான்கு சிறுவர்கள், கடை வைத்திருக்கும் ஆச்சி, அவரது மகள், பெற்றவர்களிடம் இருந்து விலகி விடுதியில் இருக்கும் ஒரு செடி ஒரு ப்ளவர் என்று அழைக்கப்படும் பெண் என்று எளியவர்களின் வாழ்க்கையால் நிரம்பியிருக்கிறது படம்.


நமக்கான அடையாளம் என்ன என்பதை பற்றிக் கவலைப்படாமல் இருக்கும் சிறுவர்கள், ஆச்சி மற்றும் சிறுவர்களின் தோழியின் உந்துதலில் மூட்டை தூக்கும் நேரம் போக மீதி நேரங்களில் உழைத்து "ஆச்சி மெஸ்" என்னும் உணவகம் வழியாக ஒரு அடையாளத்தைப் பெறுகின்றனர்.


மெஸ் நடத்த தன்னுடைய இடத்தை உள்நோக்கத்தோடு கொடுத்த என்.கே.பி. எனப்படும் வட்டிக்கு பணம் கொடுக்கும் நாயுடுவால்(சாதிப் பெயரை கதாபாத்திரத்திற்கு பயன்படுத்தியதை தவிர்த்திருக்கலாம், இவ்வாறு சாதிப் பெயரை பயன்படுத்துவதை பற்றிய பரவலான விமர்சனம் எதுவும் இல்லாதாது தவறான பார்வையாகும்). இடையூறு வரும் போது, அதை எதிர்க்கும் சிறுவர்கள் கடையை இழக்க வேண்டி வருகிறது. என்.கே.பி.யின் ஆள் மற்றும் அதிகார பலத்தோடு போராடி தங்களுடைய அடையாளமான உணவகத்தை எப்படி மீட்கிறார்கள் என்பதே கதை.


தங்களுடைய அடையாளத்தை மீட்கும் சிறுவர்கள், கடைக்காரர்களுக்கு தன் மேலுள்ள பயத்தை பயன்படுத்தி வட்டி தொழில் நடத்தும் என்.கே.பி.யின் அடையாளத்தை எப்படி மாற்றுகிறார்கள் என்பது " அட!" போட வைக்கும் நேர்மறை சினிமா.


"எதுவும் இல்லாதவனை எல்லாம் இருக்கிறவன் என்ன வேணாலும் செய்யலாங்கிரத உடைக்கணும்-டா" போன்ற வசனங்கள் மிகக் கூர்மை.


"நான் உழைக்கற சாதி" என்று கையை ஓங்கி கதாநாயகன் பேசும் வசனங்கள் இல்லாமலயே படத்தின் பாத்திரங்கள் நாம் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் அடித்தட்டு உழைக்கும் மக்களை அவர்கள் வியர்வையுடன் பதிவு செய்கிறது.


முன்பாதியில் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை பற்றி எதார்த்தமாக பயணிக்கும் படம், இரண்டாம் பாதியில் சிறுவர்கள் நாயுடுவின் அடியாட்களை அடித்து நொறுக்கும் போது வழமையான சினிமாதனத்துக்குள் சிக்கிக் கொள்கிறது. சிறுவர்கள் நான்கு பேர் சேர்ந்து வெகு எளிதாக திட்டமிட்டு நாயுடுவை வீழ்த்துவது நடைமுறைக்கு முரணாக உள்ளது.


நாயகன் வந்தேதான் தவறைத் தட்டி கேட்க வேண்டும் என்ற நடைமுறையை கட்டுடைதமைக்கே படக்குழுவினரைப் பாராட்டலாம்.


தாகம் தணிக்க நாம் பருகிக் கொண்டிருந்த சோடா போன்றல்லாமல், நல்ல சினிமாவுக்கான நம்முடைய நம்பிக்கை தாகத்தை அதிகரித்துள்ளது, இந்த "கோலி சோடா " !

கதிரவன்
சேவ் தமிழ்சு இயக்கம்

Tuesday, February 4, 2014

கூடங்குளம் காலவரையற்ற பட்டினிப் போராட்டமும் - தேர்தல் அரசியலும்





கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம் தொடங்கி 900 நாட்கள் நிறைவடைந்த‌ ஜனவரி 31,2014 ஆம் நாளிலிருந்து, அணுசக்திக்கெதிரான மக்கள் இயக்கத்தின் போராட்டக்குழுவைச் சார்ந்த‌ சிலர், பின்வரும் ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி, காலவரையற்ற பட்டினிப் போரைத் தொடங்கியிருக்கின்றனர்.


[1] கூடங்குளம் 3 மற்றும் 4 அணுஉலைகளை தடுத்து நிறுத்த வேண்டும்.


[2] தரமற்ற உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும், ஊழல்கள் மலிந்திருக்கும், குளறுபடிகள் நிறைந்திருக்கும், நம்பகத்தன்மையற்ற முதலிரண்டு அணுஉலைகளின் முழுமையான, உண்மை நிலையை சார்பற்ற விஞ்ஞானிகளால் பரிசோதித்து, உச்சநீதிமன்றம் தெரிவித்த 15-அம்ச பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட்டிருக்கின்றனவா எனும் தகவல்களை மக்களிடம் முழுமையாகச் சொல்ல வேண்டும். எங்கள் குற்றச்சாட்டுக்கள் உண்மையென்று தெரியும்போது, 1-2 உலைகளை இழுத்து மூடவேண்டும்.


[3] மத்தியத் தகவல் ஆணையம் பணித்திருப்பது போல, கூடங்குளம் அணுஉலைகள் சம்பந்தமான தள‌ ஆய்வறிக்கை (Site Evaluation Report), பாதுகாப்பு ஆய்வறிக்கை (Safety Analysis Report), பேரிடர் தயாரிப்பு அறிக்கை (Emergency Preparedness Report), விவிஇஆர்--ரக அணுஉலை செயல்திறன் அறிக்கை (VVER Reactors Performance Report) போன்றவற்றை மக்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

[4] மீனவர்கள், விவசாயிகள் போன்றோரின் பாதுகாப்பு பிரச்சினைகள் மற்றும் வாழ்வாதார இழப்பு போன்றவற்றுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம் மற்றும் ஏற்பாடுகள் பற்றி முழுமையானத் தகவல்களைச் சொல்ல வேண்டும்.


[5] இரண்டு லட்சத்து இருபத்தேழாயிரம் மக்கள் மீது போடப்பட்டிருக்கும் 360 பொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்.




2011 செப்டம்பரில் போராட்டக் குழு, முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்த போது, வங்கத்தில் மம்தா பானர்ஜி, ஹரிப்பூர் அணு உலையை தடுத்து நிறுத்தியதைப் போல, கூடங்குளம் அணு உலையையும் மூட வழி வகை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்ட போது, “அந்தத் திட்டம் துவக்க நிலையில் இருப்பதால் அவரால் அப்படி கேட்டுக் கொள்ள முடிகிறது; ஆனால் கூடங்குளம் திட்டம் முடியும் தருவாயில் இருக்கிறதே” என்று முதல்வர் ஜெயலலிதா பதிலளித்திருக்கிறார்.



ஆனால் இன்று கூடங்குளத்தில் 3 & 4 அணுஉலைகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கி, இடமும் தேர்ந்தெடுத்து விட்டோம் என்று அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் அறிவித்து விட்ட போதிலும், முதல்வர் ஜெயலலிதா ஏன் மம்தாவின் வழியைப் பின்பற்றாமல், அமைதி காக்கிறார் என்ற கேள்வி எழுகிறது. தவிர, போராட்டக்காரர்களின் மீது போடப் பட்ட 360 வழக்குகளை
திரும்பப் பெறக் கூறி, உச்சநீதிமன்றமும் உயர்நீதிமன்றங்களும் தீர்ப்பளித்து விட்டாலும், தமிழக அரசு அவ்வழக்குகளை திரும்பப் பெறவில்லை.



கூடங்குளம் அணு உலை கழிவுகளை கூடங்குளத்திலேயே புதைத்து வைக்கப் போவதாய், மத்திய அமைச்சர் நாராயண சாமி சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருக்கிறார்.. கர்நாடக மாநிலம், கோலார் தங்கச் சுரங்கத்தில் அணு உலை கழிவுகளை புதைக்கப் போவதாய் அறிவிக்கப் பட்டதை எதிர்த்து, அப்பகுதி முழுதுமே கொதித்தெழுந்து போராடியது. தமிழக மண்ணிலிருந்து என்ன மாதிரியான எதிர்வினைகளை ஆற்றப் போகிறோம். உலகமே அணுக் கழிவுகளை அகற்றுவதற்கு, திண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், இந்திய விஞ்ஞானிகளான பாலு போன்றோர், அதை அணுக்கழிவுகள் (Nuclear Waste ) என்று சொல்லக் கூடாது, பயன்படுத்தப் பட்ட எரிபொருள் ( Spent Fuel ) என்று சொல்லுங்கள் என்று கதை விடுவது வாடியாகி விட்டது.



போராட்டம் தொடங்கிய நாளிலிருந்து, இத்தனை நாட்கள் மத்திய மாநில ஆளும் அரசுகளிட‌ம் நீதி வேண்டியே அம்மக்களுடைய கோரிக்கைகள் இருந்தன. ஆனால் இப்போது தொடங்கப்பட்டிருக்கும் இந்த காலவரையற்ற பட்டினிப் போராட்டமானது, அரசுகளை மட்டுமின்றி, இதுநாள் வரை உடனிருந்து போராட்டத்திற்கு ஆதரவளித்து வந்த சில பல‌ கட்சிகளின் மெளனத்தையும் கேள்விக்குள்ளாக்கி இருக்கிற‌து. இங்கு நடக்கும் தேர்தல் கூட்டணிக் கணக்குகள், தமிழக மக்களின் நலன்களை கருத்தில் கொள்ளாமல் மேற்கொள்ளப்பட்டவையாகவே அறிய முடிகிறது. இது ஒன்றும் புதிதில்லை என்றாலும், குஜராத்தில் "மிதி விர்டி"என்ற இடத்தில் அணு உலை நிறுவப்படுவதை எதிர்த்து, அங்கு வாழும் விவசாயிகளும் பொதுமக்களும் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் தான் மோடி தலைமையிலான பா.ஜ.கவோடு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கூட்டணி வைக்கிறது. அணு உலை ஆதரவு கட்சியான தி.மு.கவோடு, அணு உலை எதிர்ப்பு கட்சிகளான விடுதலை சிறுத்தைகள் கட்சியும், மனித நேய மக்கள் கட்சியும் கை கோர்த்திருப்பதையும் காண்கிறோம். அணு உலை எதிர்ப்பு கட்சிகள், இத்தகைய தேர்தல் கூட்டணியின் போது, குறைந்த பட்சம் தங்கள் கோரிக்கைகளை, நிலைப்பாடுகளை முன்னிறுத்தியாவது, பெரிய கட்சிகளோடு இணைதல் என்பது சாத்தியமானதே.


இப்படியான ஒரு அரசியல் சூழ்நிலையில் தான் அணு உலை எதிர்ப்பு போராட்டக்காரர்களின் காலவரையற்ற பட்டினிப் போராட்டம், அனைத்து தரப்பினரின் ஆதரவையும் கோருகிறது. போராளிக் குழுக்கள், மாணவர்கள் மற்றும் சமூக அக்கறையுள்ள அனைவரும் அம்மக்களின் போராட்டத்திற்கு துணை நிற்றலும் முடிந்தவரை போராட்டம் குறித்த பரப்புரைகளை மேற்கொள்ளுதலும், 900 நாட்கள் இடையறாது எரிந்து கொண்டிருக்கும் தணலை அணையாது பாதுகாக்கும்.


ம‌க்க‌ள் போராட்ட‌ங்க‌ள் வெல்க‌!


அ.மு.செய்ய‌து

சேவ் த‌மிழ்சு இய‌க்க‌ம்

"பல்லாங்குழி" விளையாட்டும் - அரசியலும்....




விளையாட்டை விளையாட்டாப் பாருங்க, ஏங்க விளையாட்டுல அரசியலை நுழைக்கிறீங்க என்பது போன்ற கேள்விகள் எப்பொழுதும் நம்மை நோக்கி முன்வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. குறிப்பாக இந்திய மட்டைப்பந்து அணி இலங்கையில் சென்று விளையாடக்கூடாது எனச் சொல்லும் போது, இந்த கேள்விகள் மிகவும் அதிகமாக வருகின்றன... உண்மையிலேயே விளையாட்டை விளையாட்டாத் தான் இந்தச் சமூகம் பார்த்து வந்துச்சா?, விளையாட்டில் அரசியலே இல்லையா? என்ற கேள்விகளுக்கான பதிலைத் தேடியே இக்கட்டுரை.

தமிழ்நாட்டில், குறிப்பாக கிராமப்புறங்களில் பிறந்து வளர்ந்த அனைவருக்கும் தெரிந்த விளையாட்டு "பல்லாங்குழி". இந்த விளையாட்டைத் தற்ச்சமயம் பெரும்பான்மையாகப் பெண்கள் மட்டுமே விளையாடி வருகின்றார்கள். இந்த விளையாட்டின் தோற்றம், தேவை குறித்து பல நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்துள்ளார்கள், அவற்றில் குறிப்பிடத்தக்கது தேவநேயப்பாவாணர் ஆய்வும், பேராசிரியர். தாயம்மாள் அறவாணனின் "பல்லாங்குழி" (திராவிட-ஆப்பிரிக்க ஒப்பீடு) என்ற ஆய்வு நூலுமாகும், இவ்விரு ஆய்வுகளின் சாரம்சத்தை பேராசிரியர்.தொ.பரமசிவம் அவர்கள் தனது "அறியப்படாத தமிழகம்" என்ற நூலில் பல்லாங்குழி என்ற தலைப்பில் தொகுத்துள்ளார். இதை பார்க்கும் முன்பு, இந்த விளையாட்டு எப்படி விளையாடப் படுகின்றது என்பதை மீண்டும் ஒருமுறை நமக்கு நினைவூட்டிக்கொள்வோம்...



* இருவர் ஆடும் பல்லாங்குழி ஆட்டத்தில் (பக்க எல்லைக்குழியாக இருந்தால் வலதுகைப் பக்க குழியையும் சேர்த்து) குழிக்கு ஐந்து காய்களாக(இங்கு சில இடங்களில் புளியமுத்தும், சில இடங்களில் கொடுக்காப்புள்ளி விதையும் , சோழி யும் பயன்படுத்தப்படுகின்றது) ஆளுக்கு ஏழு குழிகளாக துல்லியமான சமத்தன்மையுடன் ஆட்டம் தொடங்குகிறது.

*தன்னுடைய காய்களை எடுத்து முதல் ஆள் ஆடத் தொடங்குகிற பொழுது முதன்முறையாகச் சமத்தன்மை குலைகின்றது.

*எடுத்தாடுபவர் குழியில் காய்கள் தற்காலிக இழப்புக்கு உள்ளாகின்றன.

* சுற்றிக் காய்களை இட்டுவந்து வெற்றுக்குழியினைத் துடைத்துவிட்டு அதற்கடுத்த குழியினை எடுக்கும் பொழுது முதலில் இட்ட ஐந்து காய்களுக்கு பதிலாக நிறைய காய்கள் (பெருஞ்செல்வம்) கிடைக்கின்றது, அல்லது குறைந்த காய்களையுடைய குழி கிடைக்கின்றது, சில நேரங்களில் துடைத்த குழிக்கு அடுத்த குழி வெற்றுக்குழியாக இருந்தால் ஒன்றுமே கிடைக்காமல் போய்விடுகின்றது.

* அதே போல வெற்றுக்குழியில் காய்கள் இடப்பட்டு வந்து அது நான்காக ஆகும் பொழுது அது பசு என்ற பெயரில் குழிக்குரியவரால் எடுத்துக்கொள்ளப்படுகின்றது.

*ஒருவரிடம் காய்களற்ற நிலை வரும் வரை ஆட்டம் விளையாடப்படுகின்றது.

இப்படி தான் இந்த விளையாட்டு பெரும்பான்மையாக விளையாடப்படுகின்றது.


இந்த விளையாட்டு பொது உடைமை சமூகத்திலிருந்து தனியுடைமை சமூகமாக மாறத்தொடங்கிய காலகட்டத்தில் (இனக்குழு சமூகத்தில் தனிச்சொத்து என்று எதுவும் கிடையாது எல்லாப் பொருட்களும் பொதுவில் இருந்தன, நாளடைவில் குழுவிடம் சேரத்தொடங்கிய சொத்து தனிநபர்களுக்கு சொந்தமாகத் தொடங்கியது) தனியுடைமையை(தனிச்சொத்தை) நியாயப்படுத்த உருவான விளையாட்டாகும். சமத்தன்மை நிலவிவரும் பழையச் சமூகத்தில் ஆட்டத்தின் பெயரால் சமத்தன்மை குலைக்கப்பட்டு ஒருவனது செல்வம்(காய்கள்) அடுத்தவன் கைக்கு நேரடியாக வன்முறையில்லாமல் எளிமையாகப் போய்ச் சேர்ந்துவிடுகின்றது. தோற்றவனின் இழப்பு நிரந்தமாக்கப்படுகின்றது. தோற்றவன் தனது திறமையின்மை அல்லது ஏதோ ஒன்றின் காரணமாகத் தான் தோற்றோம் என்ற எண்ணமும், எதிராளி தனது திறமையின் காரணமாகத் தான் வெற்றி பெற்றான் என்ற எண்ணத்தையும் இவ்விளையாட்டு மக்கள் மத்தியில் உருவாக்குகின்றது. அதாவது தனியுடைமை உணர்வினையும், தனிச்சொத்தின் வளர்ச்சியினையும் அதன் மறுவிளைவாகப் பிறந்த வறுமையினையும், பண்பாட்டு ரீதியாக நியாய்ப்படுத்தும் வெளிப்பாடே பல்லாங்குழி ஆட்டம். இந்த நியாய உணர்ச்சி மனித மனங்களில் திணிக்கப்பட்ட பிறகு தனிச் சொத்துரிமையின் வளர்ச்சி தங்கு தடையற்ற மிகப்பெரிய வேகத்தினைப் பெற்றிருக்க வேண்டும் என கருதுகின்றார் தொ.பரமசிவம்.



இதுபோலவே எல்லா விளையாட்டுகளின் தோற்றத்திற்கும் காரணமும், அரசியலும் உண்டு. எனது பள்ளிக்காலங்களில் நான் விளையாடிய நாடு பிடிக்கும் விளையாட்டு(நாலு கட்டம் கட்டி விளையாடும் விளையாட்டு) வெற்றி பெற்றவன், தோல்வியடைந்த நாட்டின் ஒரு பகுதியை கைப்பற்றுவது சரியே என்ற எண்ணத்தை எனது மனதில் விதைத்துள்ளதை இன்று என்னால் அறியமுடிகின்றது. அதற்கு அடுத்து நான் விளையாடிய "Business"(சில இடங்களில் இது Trade என அழைக்கப்படுகின்றது) விளையாட்டும் அதைப் போலவே வர்த்தகத்தில் வெற்றியும், தோல்வியும் ஏற்படும், திறமையிருப்பவன் வெற்றியடைவான், திறமையற்றவன் தோற்று ஓட்டாண்டியாவன் என்ற கருத்தை விதைத்தது. இன்றைய மக்களாட்சி காலத்திலும் நாமெல்லாம் பரவலாக விளையாடும் சதுரங்க (Chess) விளையாட்டை எடுத்துக் கொள்வோமே, அந்த விளையாட்டின் வெற்றி மன்னரை காப்பதில் தான் இருக்கின்றது. இதை தான் நம் மனதில் அந்த விளையாட்டு விதைக்கின்றது. இதில் ஒரு கொடுமை என்னவென்றால் குதிரை, யானையை விட சிப்பாய்களின் மதிப்பு இங்கே குறைவு என்பதே. மக்களாட்சி காலத்திலும் இந்த மன்னரை காக்கும் விளையாட்டை தான் நாம் விளையாடி வருகின்றோம் என்பது நகைமுரண். தெற்காசியாவில் (இந்தியா, பாகிசுதான், இலங்கை, நேபாளம், பூட்டான், வங்கதேசம், மியான்மர்) மன்னரை வீழ்த்தி மக்களாட்சி மலரவில்லை, மன்னரை வீழ்த்தியது நம்மை அடிமைப்படுத்த வந்த பிரிட்டன், டச்சு, போர்ச்சுகீசிய நாடுகள், பின்னர் இவர்கள் தங்களின் நிர்வாக வசதிக்காக பல அமைப்புகளை உருவாக்குகின்றார்கள், அந்த அமைப்பு தான் இங்கிருக்கும் நாடாளுமன்றம், சட்டமன்றம் எல்லாம். அதனால் தான் தெற்காசியாவில் குடும்ப(மன்னர்) ஆட்சி, நிரந்தர பொது செயலாளர்கள், தளபதிகள் என்பன எல்லாம் இன்றைய மக்களாட்சி காலத்திலும் முரணாக பார்க்கப்படாமல் உள்ளது என்பதையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும்...


இதனடிப்படையில் தான் இங்கு மட்டைப்பந்து விளையாட்டையும், இன்று குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அதிகமாக விளையாடியும், கண்டு கழித்தும் வரும் பல Video Games-களையும் பார்க்க வேண்டும். மட்டைப் பந்து விளையாட்டு ஆங்கிலேயர்களால் விளையாடப்பட்டது, ஆங்கிலேயர்களை அண்டி பிழைத்த அன்றைய மன்னர்கள், ஜமீன்தார்கள், அப்பொழுது அதிகாரம் செலுத்திய சமூகத்தினர் இந்த விளையாட்டை எஜமான விசுவாசத்தை வெளிப்படுத்த விளையாடத்தொடங்கினர். சென்ற மாதம் இறந்த உடையார் மன்னர்(மைசூர்) தான் இறக்கும் வரை கர்நாடக மட்டைப்பந்து வாரியத் தலைவர் என்பது மக்களாட்சி காலத்திலும், இந்த மட்டைப்பந்து விளையாட்டு யாருடைய ஆதிக்கத்தின் கீழிருக்கின்றது என்பதை காட்டும். அதை போலத் தான் எல்லா மாநில மட்டைப்பந்து வாரியங்களும் ஆதிக்கம் செய்யும் ஒருசிலரின் கையிலேயே இருக்கின்றன.


அந்தந்த காலங்களில் ஆதிக்கத்தில் இருப்பவர்கள் சமூகம் எதைப் பார்க்க வேண்டும், எந்த மனநிலையில் இருக்க வேண்டும் என எண்ணுகின்றார்களோ, அதை வைத்து தான் எல்லா விளையாட்டுகளும் உருவாகி வந்துள்ளன. இன்று வன்முறையை, கொலையை நியாயப்படுத்தும் பொதுக்கருத்தை உருவாக்கியதில் குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை இன்று விளையாடி வரும் Video Games (Counter Attack, War Games...) மிக முக்கியப்பங்கு வகிக்கின்றது. இதையும், காவல்துறையின் மீதான வெறுப்பையும் அடிப்படையாக வைத்து வெளிவந்த படம் தான் ஜாக்கிசானின் "Police Story" போன்ற படங்கள். யதார்த்த உலகத்தை பார்க்காதீர்கள், கற்பனை உலகத்தில்(Virtual World) மிதந்து செல்லுங்கள் எனச் சொல்கின்றன இவ்விளையாட்டுகள்......, இந்திய விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு இருக்கும் அதே நேரத்தில் தான் நம் இளைஞர்கள் Farmville விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். அரசுக்கும் அது தான் வேண்டும். விவசாயம் செய்ய வேண்டுமா, இணையத்திற்கு வாருங்கள் Farmville மூலம் விவசாயம் செய்யுங்கள். அலுவலகத்தில் மேலாளர் மீது கோபமா Angry Birds மூலம் அதை போக்கிக்கொள்ளுங்கள்...


இது போல நம் மனதில் நம்மை அறியாமலேயே கருத்தை விதைத்துச் செல்வதில் விளையாட்டு, கலை, இலக்கியம் போன்றவற்றின் பங்கு அதிகம். எப்படி அறிவியலின்றி ஓர் அணுவும் இப்பிரபஞ்சத்தில் அசையாதோ, அது போலவே சமூக அறிவியலான அரசியலின்றி இங்கு எதுவும் கிடையாது எனும் பொழுது, இச்சமூகத்திலிருந்து தோன்றிய விளையாட்டில் மட்டும் அரசியலிருக்காது என எண்ணுவதும் கூட ஒரு வகையில் நம் புரிதலின்மையே. ஆதிக்க வர்க்கம் நம் மீது திணித்துள்ள இதுபோன்ற சர்வாதிகார, தனிநபர், கற்பனாவாத விளையாட்டுகளை, அதன் அரசியலை புரிந்து கொண்டு நாம் தூக்கியெறிய வேண்டும். மக்களுக்காக, மக்களால், மக்களே பங்கு கொள்ளுவதே மக்களாட்சி எனும் பொழுது, நாம் விளையாடும் விளையாட்டுகளும் அதை பிரதிபலிக்க வேண்டும், நமக்கான விளையாட்டுகளை நாமே உருவாக்குவோம் !...

நற்றமிழன்.ப

தரவுகள்:

1) அறியப்படாத தமிழகம் - தொ.பரமசிவம். காலச்சுவடு வெளியீடு.

Monday, February 3, 2014

மார்ச் 2014 ஐநா மனித உரிமை மன்றக் கூட்டத்தொடர் - தமிழ்நாடு என்ன செய்ய வேண்டும் ?

மார்ச் 2014 ஐநா மனித உரிமை மன்றக் கூட்டத்தொடர்

தமிழ்நாடு என்ன செய்ய வேண்டும் ?

கருத்தரங்கம்

வருகின்ற மார்ச் 2014ல் கூடும் ஐநா மனித உரிமை மன்றத்தில் இலங்கை தொடர்பான தீர்மானம் குறித்து அரசுகளும் புலம்பெயர் வாழ் தமிழர்களும் தங்களது செயல் திட்டங்களை வகுக்க தொடங்கியுள்ளனர். தமிழக மக்களாகிய நாம் என்னென்ன கோரிக்கைகளை யாரை நோக்கி முன்வைக்க போகின்றோம் என்ற விவாதங்கள் ஈழ விடுதலை ஆதரவு இயக்கங்கள் / கட்சிகள் இடையே எழத்தொடங்கியுள்ளது


ஐ.நா மனித உரிமை மன்றத்தில் இலங்கை குறித்து மே 2009 இனப்படுகொலை போருக்குப் பின் முன்மொழியப்பட்ட / விவாதிக்கப்பட்ட / நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் சுருக்கம் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.






மே 2009 ல் இலங்கை குறித்து ஐநா மனித உரிமை மன்றத்தில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில், இந்திய அரசின் ஆதரவுடன் ,இலங்கை அரசைப் பாராட்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இன அழிப்புப் போர் பேரழிவுடன் முடிந்த நிலையில் தமிழகத்திலோ, புலம்பெயர் நாடுகளிலோ ஐ.நா மன்றக் கூட்டத் தொடரை முன்னிட்டு எந்தவிதப் போராட்டங்களும் கோரிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை. இந்தப் பின்னணியில் இந்திய அரசும் மற்ற நாடுகளும் இலங்கைக்குப் பகிரங்கமாக ஆதரவளித்தன.

மார்ச் 2012 மனித உரிமை மன்ற கூட்டத்தில் இலங்கை குறித்து அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தில் போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், இனக்கொலை குற்றங்கள், சர்வதேச விசாரணை என எதையும் வலியுறுத்தாமல் இலங்கையின் ஒப்புதலுடன் ஐநா அதிகாரிகள் ஆலோசனைகளை வழங்கலாம் என்று தீர்மானத்தை மேலும் வலுவிழக்கச் செய்து இந்திய அரசு வாக்களித்தது. தமிழகத்திலோ, அமெரிக்கா ஐ.நா வில் கொண்டு வந்த தீர்மானத்தில் என்ன உள்ளது? என்பது தெரியாமலேயே இந்திய அரசை இலங்கைக்கு எதிராக வாக்களிக்குமாறு போராட்டங்கள் நடந்தன. அதாவது , ஐநா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்குமா? எதிர்க்குமா? என்று விவாதிக்கப்பட்டதே அன்றி, எவ்வகையான தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும் என்றல்ல. முதலில் முரண்டு பிடிப்பது போல பாவனை செய்த இந்திய அரசோ பிறகு தமிழர்களை ஆதரிப்பதைப் போல் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தது. அப்போது இந்திய அரசின் இலங்கை ஆதரவு நிலையை மக்களிடையே அம்பலபடுத்த முடியவில்லை.


மார்ச் 2013 ஐ.நா. மனித உரிமை மன்ற கூட்டத்தொடரிலும் அமெரிக்கா முன்மொழிந்த இலங்கை குறித்த தீர்மானத்தை இந்திய அரசு ஆதரித்தது. இம்முறை வரைவு தீர்மானத்தில் தமிழர்களின் கோரிக்கைகள் முற்றிலுமாக இல்லாத காரணத்தினால் அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? என்ற விவாதத்திற்குள் கோரிக்கை சுருங்கிவிட்டது. அமெரிக்கா முன்மொழிந்த முதல் வரைவு தீர்மானத்திற்கும் நீர்த்துபோன நிலையில் இறுதியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கும் இலங்கை அரசிற்கு சாதகமாக இந்திய அரசு செய்த துரோக செயல்கள் அம்பலப்படவில்லை.

ஐ.நா மனித உரிமை மன்ற ஆணையர் நவநீதம் பிள்ளை இலங்கை சென்றது, வட மாகாணத் தேர்தல், பொதுநலவாய மாநாடு, பிரித்தானிய பிரதமர் கமரூன் தமிழர் தாயகம் சென்றது, மன்னார் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள், இனப்படுகொலை என்றும் ஈழத் தமிழர் தனித்த தேசிய இனம் என்றும் அங்கீகாரம் அளித்த நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு, உள்ளிட்ட பல அரசியல் நிகழ்வுகள் கடந்த ஒராண்டில் நடைபெற்றுள்ளன. இவற்றைக் கருத்தில் கொண்டும் எதிர்வரும் இந்தியப் பொதுத் தேர்தலையும் அளவிட்டு ஐ.நா மனித உரிமை மன்றத்தில் மார்ச் 2014ல் வரும் இலங்கை தொடர்பான தீர்மானம் குறித்து தமிழ்நாட்டின் பார்வை, கோரிக்கைகள், முழக்கங்கள் முதலியவற்றில் ஓர்மை வந்தடையவேண்டிய தேவை உள்ளது.

இதனை முன்னிட்டு சேவ் தமிழ்சு இயக்கம் சார்பாக வரும் பிப்ரவரி 8 ஆம் நாள், சனிக்கிழமை அன்று மாலை 4 மணி அளவில் சென்னை தியாகராயர் நகர், பனகல் பூங்கா அருகில் உள்ள வெங்கடேசுவரா திருமண மண்டபத்தில் கருத்தரங்கம் ஏற்பாடு செய்துள்ளோம்.

- சேவ் தமிழ்சு இயக்கம்