Saturday, July 6, 2013

இளவரசனின் உயிர் தின்ற சாதிவெறி அரசியல் ...கண்டனக் கூட்டம்

இளவரசனின் உயிர் தின்ற சாதிவெறி அரசியல் ...
கண்டனக் கூட்டம்

ஞாயிறு ( 7-7-2013) மாலை4 மணி அய்க்கப் அரங்கம், இலயோலா கல்லூரி எதிரில், சென்னை


இளவரசனைக் கொன்று தனது அகோரப் பசியைத் தீர்த்து கொண்டது சாதிய சமூகமும், பா.ம.க-வின் அரசியலும். நேற்று கண்ணகி-முருகேசன், இன்று திவ்யா-இளவரசன் என்று பல சாதி படுகொலைகளை தொடர்ந்து நடத்தி வருகின்றது இந்த சாதிய சமூகம். இன்னும் ஆயிரமாயிரம் இளவரசன்களையும், திவ்யாக்களையும் இந்த சாதிய அரக்கர்களிடமிருந்தும், அரசியல்வாதிகளிடமிருந்தும் எப்படி காப்பாற்றப் போகிறோம்?

திவ்யாவின் தந்தையின் மர்ம மரணம், அதன் பிறகு முன்னூறு தலித் குடியிருப்புகள், உடைமைகள் எரிப்பு, இன்று இளவரசனின் மர்ம மரணம் என்று தொடர்ச்சியாக பா.ம.க-வினரால் தூண்டப்பட்ட வன்னிய ஆதிக்க சாதி வெறியர்கள் நிகழ்த்திய வெறியாட்டங்களுக்கு விடை தேட‌ வேண்டிய கட்டாயத்திற்கு நாம் வந்திருக்கின்றோம்.

இளவரசனின் மரணம் கொலையாக இருந்தாலும், தற்கொலையாக இருந்தாலும் அதற்கு முழு பொறுப்பு வன்னிய ஆதிக்க சாதி வெறியை தூண்டி விட்டு ஆதாய‌ம் அடைய‌ நினைத்த‌ ராமதாசும், தலித் மக்களின் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாத வன்னிய ஆதிக்க சாதி வெறியும், சாதிப் படுகொலைகளை கண்ணை மூடிக்கொண்டு மௌனமாக கடந்து செல்லும் நம் சமூகமும் தான். சென்ற தேர்தலில் படுதோல்வியடைந்த பா.ம.க இந்த‌ சாதிய‌ ச‌மூக‌த்தில் தாழ்த்த‌ப‌ட்டோருக்கு எதிரான‌ மனநிலையை பயன்படுத்திக்கொண்டு தங்களுக்கு சாதகமான அரசியல் நலன்களை அறுவடை செய்ய ஒரு தீவிரமான பிரச்சாரத்தை முன்னெடுத்தது. சென்ற ஆண்டு மகாபலிபுரத்தில் காடு வெட்டி குரு பேசியதன் விளைவே தர்மபுரி வன்முறை. இந்த ஆண்டு மரக்காணத்தில் திட்டமிட்டு வன்முறையை உருவாக்கியதும் பா.ம.க.வே, பெரும்பான்மை மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளிலிருந்து வன்னிய மக்களை திசை திருப்பி சாதி ஆதிக்க அரசியல் பக்கம் அழைத்து செல்கின்றது பா.ம.க. தனக்கான துணையைத் தேர்ந்தெடுக்கும் பெண்க‌ளுக்கு உள்ள‌ ச‌ன‌நாய‌க‌ உரிமையையும் பா.ம‌.க மறுக்கின்ற‌து.





முன்னாள் நக்சல்பாரி கிராமங்களான நத்தம், அண்ணா நகர்,கொண்டம் பட்டி இந்த மூன்று கிராமங்களும் தொடர்ச்சியாக உளவுத்துறையின் 24 மணி நேர கண்காணிப்பில் இருந்து வந்துள்ளது. இந்த மூன்று கிராமங்களில் 2000த்திற்கும் அதிகமான வன்னியர் வந்து தாக்குதலை நிகழ்த்தியதை கண்டுகொள்ளாமல் விட்ட காவல்துறையின் பங்கு இன்னும் விசாரிக்கப்பட‌வில்லை? தருமபுரி வன்முறையை தடுத்திருந்திருக்க வேண்டிய தமிழக அரசு, அதை தடுக்காமலும், அந்த வன்முறைக்கு காரணமானவர்களை விசாரணை செய்து தண்டிக்காமல், பேருக்கு ஒரு விசாரணை குழுவை(CBCID) அமைத்தது. ஒன்பது மாதங்களாகியும் இன்னும் விசாரணை முடியவில்லை. 900 பேரின் மேல் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு,வெறும் 150 பேரை கைது செய்து, இன்று அந்த 150 பேரும் பிணையில் வந்து சுதந்திரமாக‌ பல குற்றங்கள் செய்ய வாய்ப்பளித்து வருகின்றது அரசும், காவல்துறையும். தர்மபுரி வன்முறையில் முதன்மை குற்றவாளிகள் சரியான சட்டங்களின்(வன்கொடுமை தடுப்பு சட்டம்) வழியே தண்டிக்கப்பட்டிருந்தால் மரக்காணம் வன்முறை நிகழ்ந்திருக்காது. அரசு தர்மபுரியில் நடந்து கொண்டதைப் போலவே மரக்காணத்தில் நடந்த வன்முறையையும் தடுக்காமல் வேடிக்கை பார்த்தது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக திட்டமிட்டு நடக்கும் வன்முறைகளையும், படுகொலைகளையும் அரசின் இவ்வமைதி ஊக்குவித்து வருகின்றது..

ஒரே சாதியில் திருமணம் செய்திருந்தால் இம்மரணம் நிகழ்ந்திருக்காது என்று கூறும் ஒவ்வொருவரும் மனதில் சாதிய வன்மத்தோடும், கைகளில் இரத்தக்கறையோடும் நிற்கின்றோம்.நாம் நாகரீக சமூகத்தில் தான் வாழ்கின்றோமா? அல்லது இன்னும் காட்டுமிராண்டி நிலையில் தான் இருக்கின்றோமா? என்ற கேள்வியை நம்முன் எழுப்புகின்றது இப்படுகொலை. காதல் திருமணம் தோல்வியடைந்ததால் தற்கொலை, கணவர் மரணம் என்று ஊடகங்களும் வழக்கமான ஒரு நிகழ்வாக இதையும் கடந்து செல்லும். ஒரு வெற்று கண்டனம் கூட தெரிவிக்காமல், விசாரணைக்கு உத்தரவிட்டு விட்டு தமிழக அரசும் கை கழுவிவிடும். நாமும் ஆர்ப்பாட்டங்களும், கண்டனக் கூட்டங்களுமாக சில நாட்கள் மேடைகளில் முழங்கி விட்டு கலைந்து செல்லப் போகிறோமா ? சாதிய கட்டமைப்புகளை நிலை நிறுத்துவதற்காக அரங்கேற்றப்படும் படுகொலைகளை எப்படி தடுத்து நிறுத்தப் போகிறோம்?

க‌ண்ட‌ன‌ உரையாற்றுவோர்:

தோழர்.செந்தில்- சேவ் த‌மிழ்சு இய‌க்கம்
தோழர்.விடுத‌லை இராசேந்திர‌ன் - திராவிட‌ர் விடுதலை க‌ழ‌கம்
தோழர்.ஆளூர் ஷ‌ந‌வாஸ் - விடுத‌லை சிறுத்தைக‌ள் க‌ட்சி
தோழர்.நீதிராஜ‌ன் - தீண்டாமை ஒழிப்பு முன்னணி
தோழ‌ர் தியாகு -த‌மிழ்த்தேசிய‌ விடுத‌லை இய‌க்க‌ம்
வ‌ழ‌க்க‌றிஞர்.அம‌ர்நாத்- த‌ந்தை பெரியார் திராவிட‌ர் க‌ழ‌கம்
தோழர்.சிவகாமி - சமத்துவ மக்கள் படை
தோழர்.செல்வி - தமிழ்நாடு மக்கள் கட்சி
ஏகலைவன் - ஊட‌க‌விய‌லாள‌ர்
குட‌ந்தை அர‌சன் - த‌மிழ் புலிக‌ள்
தோழர்.உத‌ய‌ன் - த‌மிழ்த் தேசிய‌ பொதுவுட‌மை க‌ட்சி
தோழர்.சேக‌ர்- தொழிலாள‌ர் சீர‌மைப்பு இய‌க்க‌ம்
தோழ‌ர்.இளைய‌ராஜா - த‌மிழ்நாடு மாண‌வ‌ர் இய‌க்க‌ம்
தோழ‌ர்.ச‌ந்தோஷ்- இல‌யோலா க‌ல்லூரி மாண‌வர்
பேராசிரியர்.லெனின் - இல‌யோலா க‌ல்லூரி.

ஒருங்கிணைப்பு - சேவ் தமிழ்சு இயக்கம் - 09884468039 - www.Save-tamils.org.

No comments:

Post a Comment