Sunday, July 6, 2014

சேவ் தமிழ்ஸ் முதல் இளந்தமிழகம் வரை


                                              
சேவ் தமிழ்ஸ் இயக்கம்  2008 -09 ஆம் ஆண்டுகளில் ஈழத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இன அழிப்புப் போரை நிறுத்தக் கோரி போராட்டக் களத்திற்கு வந்த தகவல் தொழில்நுட்பத் துறை இளைஞர்கள் சிலரால் தொடங்கப்பட்டது; ”குளிரூட்டப்பட்ட கண்ணாடிக் கூடங்களுக்குள் பணியாற்றிக் கொண்டிருக்கும் இவர்கள் சமூகத்தைப் பற்றி அதிகம் அக்கறை கொள்ளாதவர்கள்;  போராடிப் பெற்ற எட்டு மணி நேர வேலை  உரிமையைப் பறிகொடுத்ததைப் பற்றி எந்த கவலையும் இல்லாதவர்கள்; அரசியலை சாக்கடை என்று சொல்லி ஒதுங்கி நிற்பவர்கள்; நுகர்வியல் பண்பாட்டிற்குள் சிக்கி தனி மனிதர்களாக மாற்றப்பட்டவர்கள்; தனி மனித உழைப்பு, தனி மனித வெற்றி, தனி மனித உணர்வு, தனி மனித சிந்தனை, தனி மனிதப் பிரச்சனை என்று சமூகத்தை விட்டுப் பெருமளவில் அந்நியப்பட்டு போனவர்கள்.” இப்படியெல்லாம் அறியப்படுகின்ற நகர்ப்புறத்தில் உள்ள புதிய நடுத்தர வர்க்கப் பிரிவினரில் இருந்து வந்த சிலரால் தோற்றுவிக்கப்பட்டதே இவ்வியக்கம்.


 அன்றைய  நிலைமையில் ‘போரை நிறுத்துங்கள்; தமிழர்களைக் காப்பாற்றுங்கள்’ (Stop War; Save Tamils ) என்ற முழக்கத்தோடு செயல்படத் தொடங்கியதால் இவ்வியக்கத்தின் பெயரே ’சேவ் தமிழ்சு’ (Save Tamils) என்று மாறிப் போனது. போர் நின்றுவிடும் என்று நம்பினோம். ஆனால் அது பேரழிவோடு முடிவுக்கு வந்தது. குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என்று வகைதொகையின்றி நடந்த படுகொலைகள், உலகின் மிகப் பெரிய ’ சனநாயக’ நாடென்று சொல்லப்படும் இந்தியா போருக்கு துணை நின்றமை, மெளனத்தோடு வேடிக்கை பார்த்த சர்வதேச  சமூகம், தமிழ்நாட்டில் நடந்த தீக்குளிப்புகள், போரை நிறுத்த முடியாமல் கையறு நிலையில் நின்ற  தமிழ்நாடு – இவை அனைத்தும் வாழ்நாள் அர்ப்பணிப்புக்கும் நீண்ட போராட்டத்திற்கும் கட்டளையிட்டன. தொடர்ந்து செயல்பட்டோம். ஒன்றன் பின் ஒன்றாக தமிழ்நாட்டில் நிலவும் சாதி, மதம், பாலினம் உள்ளிட்ட அனைத்துவகை  முரண்பாடுகளிலும் ஒடுக்கப்பட்டோர்  பக்கம் நிற்கத் தொடங்கினோம். வளங்களையும், வாழ்வாதாரங்களையும் காக்கும் பொருட்டு போராடும் மக்களுக்கு ஆதரவாக நடுத்தர வர்க்கத்தினரிடையே கருத்தை உருவாக்க முயன்றோம். ’வளர்ச்சி’ என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்படும் உலகமய பொருளாதார கொள்கைகளை அம்பலப்படுத்தத் தொடங்கினோம். சமூகத்தில் இருந்து பிரித்து தனி மனிதர்கள் ஆக்கப்பட்ட  நகர்ப்புற நடுத்தர வர்கத்தினரிடம் கூட்டு உணர்வும், கூட்டு சிந்தனையும், கூட்டு உரிமை பற்றி விழிப்பும் வளர்க்கப் பாடுபடுகின்றோம்.

சமூகத்தின் உழைப்பால் விளைந்த நாங்கள் எங்களுக்கு வாய்க்கப்பெற்றுள்ள தொழில்நுட்ப ஆற்றல்களை இச்சமூகத்தின் நீடித்த வளர்ச்சிக்கும் நேர்வகை மாற்றத்திற்கும் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.   இந்தப் பயணத்தில் சமூக மாற்றத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கும் இயக்கங்களும், அமைப்புகளும், பல ஆண்டுகள் போராட்டக் களத்தில் நின்றதால் பட்டறிவு பெற்ற தோழர்களும் எமக்கு தோள் கொடுத்து இச்சமூகத்திற்கு பயனுறும் வகையில் எம்மை வளர்த்தெடுத்தார்கள்.
இப்போது  எமக்கு அகவை ஐந்து நிறைந்து  ஆறாம் ஆண்டில் நடை போட்டுக் கொண்டிருக்கின்றோம். இயக்கத்தின் பெயர் தமிழில் இல்லை என்பதும் பாதிக்கப்பட்ட கையறு நிலையினராக தமிழர்களைக் காட்டுவதும் பெயர் மாற்றத்தைக் கோரி நிற்கும் முதன்மைக் காரணங்கள். வரலாற்றின் இந்தக் கட்டத்திற்கும்  எமது செயற்பாட்டுக்கும் பொருத்தமான  ஒரு பெயரைத்  தேடி கண்டடைந்துள்ளோம். அப்பெயர் தான் இளந்தமிழகம்!

கடந்த காலத்தை உள்வாங்கி நிகழ்காலத்தில் ஊன்றி நின்று எதிர்காலத்தை நோக்கிப் பயணித்து, பழையன கழித்து புதியன புகுத்தும் மரபினை ஏற்று, புதுமையை உட்செரித்து மாறவும் மாற்றவும் துணிவு கொண்டு, புதிய சிந்தனைகளின் ஊற்றுக் கண்ணாய் திகழும் இளம்பருவத்தின் பண்புகளோடு மிளிரும் இளந்தமிழகத்தின் ஓர் அமைப்பு வடிவமே இந்த இளந்தமிழகம். இது இளந்தமிழகம்! சமூக நீதிக்காகவும், சனநாயகத்திற்காகவும், சமத்துவத்திற்காகவும் உள்ளாற்றலுடன் எழும் தமிழகம்!
21 ஆம் நூற்றாண்டில் தமிழகம் என்ற தலைப்பிட்ட இந்நிகழ்வினூடாக புதிய பெயரை அறிவித்து எமது கொள்கை அறிக்கையை வெளியிடுகின்றோம். தமிழகத்தின் இன்றைய நிலை, தமிழ்ச் சமூகத்தின் எதிர்கால தேவை ஆகியவைக் குறித்து பல்வேறு அரசியல் நீரோட்டங்களைச் சேர்ந்த தோழர்களும், ஆன்றோர் அறிஞர் பெருமக்களும் உரையாற்ற இருக்கின்றார்கள். இதை படித்துக்  கொண்டிருக்கும் உங்களையும் இந்நிகழ்வுக்கு அன்புரிமையோடு அழைக்கின்றோம்.
                                    
தலைப்பு: 21 ஆம் நூற்றாண்டில் தமிழகம்

நாள்: 13-ஜூலை-2014, நேரம்: மாலை 3 மணி முதல் 8 மணி வரை

இடம்: செ.தெ. நாயகம் பள்ளி, வெங்கட்நாராயணா சாலை,(திருப்பதி கோயில்) எதிரில்), தியாகராய நகர், சென்னை.

சேவ் தமிழ்ஸ் இயக்கத்தின் பெயர் மாற்றம், கொள்கை அறிக்கை வெளியீடு
இளந்தமிழகம் இயக்கம்
Young Tamil Nadu Movement
www.ilanthamizhagam.com
iianthamizhagam@gmail.com  , 98844 68039, 99419 06390
முகநூல், ட்விட்டர்: இளந்தமிழகம்
அலுவலக முகவரி: 42/21, மேட்டுத் தெரு, வேளச்சேரி, சென்னை 600 042.

                                                
முதலாம் அமர்வு:

தலைமை: தோழர். சமந்தா, பொதுக்குழு உறுப்பினர், இளந்தமிழகம்

வரவேற்புரை:  தோழர். சரவணக்குமார், பொதுக்குழு உறுப்பினர், இளந்தமிழகம்

சிறப்புரை:

கவிஞர் இன்குலாப்

பேராசிரியர் மணிவண்ணன், அரசியல் துறை தலைவர், சென்னை பல்கலைகழகம்
தோழர் சுந்தரி, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்

தோழர் சீதாராம், மாணவ செயற்பாட்டாளர், தெலங்கானா

சேவ் தமிழ்ஸ் முதல் இளந்தமிழகம் வரை – தோழர் செய்யது, பொதுக் குழு உறுப்பினர், இளந்தமிழகம்
நன்றியுரை: தோழர் சஃபானா, இளந்தமிழகம்
கலை நிகழ்ச்சிகள்  - பறை இசை, நடன நிகழ்ச்சிகள், நாடகம், கவிதை , பாடல்.

தோழமைகள் மதிப்பியல் நிகழ்வு

இரண்டாம் அமர்வு:

தலைமை: ஜார்ஜ், பொருளாளர், இளந்தமிழகம்

வரவேற்புரை: தோழர் நற்றமிழன், பொதுக்குழு உறுப்பினர், இளந்தமிழகம்

சிறப்புரை:

தோழர் ஜவாஹிருல்லா, சட்டமன்ற உறுப்பினர், மனித நேய மக்கள் கட்சி

தோழர் கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்

தோழர் தியாகு, பொதுச் செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

தோழர் மீ.த. பாண்டியன், பொதுச் செயலாளர், கம்யூனிஸ்ட கட்சி(மா.லெ), மக்கள் விடுதலை, தமிழ்நாடு

தோழர் வ.கீதா, அரசியல் செயற்பாட்டாளர்.

ஈழ விடுதலை – எமது பார்வை: தோழர் இளங்கோ, செய்தித் தொடர்பாளர், இளந்தமிழகம்

தமிழகத்தின் சமூக வளர்ச்சி நிலை – எமது பார்வை தோழர் பரிமளா, செயற்குழு உறுப்பினர், இளந்தமிழகம்

தமிழகத்தின் அரசியல் வளர்ச்சி நிலை – எமது பார்வை தோழர் செந்தில், ஒருங்கிணைப்பாளர், இளந்தமிழகம்

இளந்தமிழகம் இயக்கத்தின் நோக்கமும், தேவையும்  - தோழர் கதிரவன், செயற் குழு உறுப்பினர், இளந்தமிழகம்
நன்றியுரை: தோழர் பிரவீன் ராஜ், செயற்குழு உறுப்பினர், இளந்தமிழகம்.

Thursday, July 3, 2014

சாதி வெறிக் கட்சிகளை அரசியலில் தனிமைப்படுத்துவோம் - தோழர். செந்தில்

நுகும்பல் தாக்குதல்: சாதிய தாக்குதல்களைத் தொடரும் சாதி வெறிக் கட்சிகளை அரசியல் அரங்கில் தனிமைப்படுத்த வேண்டும் – தோழர். செந்தில் 

கடந்த 16 சூன் திங்கட்கிழமை அன்று காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் தாலுகா நுகும்பல் கிராமத்தில் பகல் 1 மணி அளவில் சாதி வெறியர்கள் கும்பலாக சென்று தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தி பொருட்களைச் சூறையாடி வீடுகளுக்கு தீ வைத்து எரித்துள்ளனர்.  
 இந்த தாக்குதலில் 22 விடுகளும், பொருட்களும் எரிந்து சாம்பலாகியுள்ளன. பகல் வேலையில் ஊர் மக்கள் அனைவரும் ஏரி வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில் ஆதிக்க சாதி கும்பல் குடியிருப்புகளை முழுமையாக கொளுத்தியுள்ளனர்.

நடந்ததை விபத்து என சித்தரிக்க முயன்று, சாதி வெறியர்களுக்கு துணை நிற்க முயன்ற காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டத்திற்கு பிறகு, விபத்து நடந்து நான்கு நாட்கள் கடந்த பிறகு இந்த தாக்குதல் குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. தாக்குதலை நடத்தியவர்களை பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காட்டியும் சம்பவம் நடந்து 15 நாட்கள் ஆகியும் காவல்துறை இதுவரை யாரையும் கைது செய்யவில்லை.    

இந்நிலையில் தாக்குதல் நடத்திய சாதி வெறியர்கள் 13 பேரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உரிய இழப்பீடு வழங்க வேண்டும், தாக்குதல் குறித்து உரிய நடவடிக்கை எடுக்காது சாதி வெறியர்களுக்குத் துணை நின்ற சித்தாமூர் காவல் நிலைய துணை ஆய்வாளர் சீதேவியை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும், முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய மெத்தனம் காட்டிய காவலர்கள் மீதும் தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்யாத காவலர்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சாதி வன்முறையைத் தூண்டி வரும் வன்னியர் சங்கம் உள்ளிட்ட ஆதிக்க சாதிச் சங்கங்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மக்கள் கட்சியின் சார்பாக சென்னை வள்ளூவர் கோட்டத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு இந்தத் தாக்குதலை கண்டித்து சேவ் தமிழ்சு இயகக்த்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில் ஆற்றிய கண்டன உரை:

”நேற்று நத்தம் இன்று நுகும்பல் என்று இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைப்பை கொடுத்திருப்பது மிகவும் பொருத்தமானது. பல நூறு ஆண்டுகளாக சாதி ஒடுக்குமுறைகளும் சாதி அடிப்படையிலான தாக்குதல்களும் நம் நாட்டில்  நடந்து வந்தாலும் நத்தத்தில் நடந்த தாக்குதலுக்கும் இந்த தாக்குதலக்கும் ஒரு தொடர்பு இருக்கின்றது
முதலாவதாக, இது ஒரு இடைநிலை சாதியைச் (வன்னியர் வகுப்பை) சேர்ந்த ஒரு சிலர் தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் மீது நடத்திய தாக்குதல். இரண்டாவதாக, வடக்கு தமிழகத்திலே நடந்த தாக்குதல்
மூன்றாவதாக, முந்தைய கொடியன்குளம், திண்ணியம் போன்ற இடங்களில்  நடந்த வன்கொடுமைகளுக்கு மாறாக இங்கு நடந்த தாக்குதலுக்கு உள்ள தொடர்பு என்பது இது முழுக்க முழுக்க தேர்தல் அரசியலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பதவி அரசியலுக்காக பா.ம.க வால் துண்டிவிடப்பட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்பது தான் இந்த இரண்டு தாக்குதலுக்கும் உள்ள ஒற்றுமை. கடந்த கால தாக்குதலுக்கும் இவற்றுக்கும் உள்ள வேறுபாடு.

அனைத்தும் சாதிய தாக்குதலாக இருந்தாலும் இந்ததாக்குதல்களின் நோக்கத்தில் ஓர் ஒற்றுமை உள்ளது. அது தான் நாம் இங்கு உன்னிப்பாக‌ கவனிக்க வேண்டியதாகும்.  


இந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முந்தைய நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் பா.ம.க தோல்வி அடைகின்றது. சட்டமன்றத் தேர்தலிலும் பெருந் தோல்வி அடைந்தது.   இந்த நிலையில் தான் முந்தைய காலங்களில் தேர்தல் அரசியலுக்காக வாக்கு நலனுக்காக தமிழ்த்தேசியத்தை உயர்த்திப்பிடித்த மருத்துவர் இராமதாசு அவர்கள், தேர்தல் தோல்விகளுக்கு பிறகு சாதி வெறி அரசியலைத் தன்னுடைய மூல உத்தியாக கையிலெடுத்து கடந்த இரண்டு ஆண்டு காலமாக இந்த அரசியலை செய்து கொண்டிருக்கின்றார்.



அவர்கள் இளவரசன் – திவ்யா காதலில் இருந்து தொடங்கி நத்தம், அண்ணா நகர், கொண்டாம்பட்டி இந்த மூன்று கிராமங்களில் நுழைந்து தாக்குதல் நடத்தி வீடுகளையும் பொருட்களையும் சூறையாடினர். அதற்கு பிறகு மரக்காணத்தில் நடத்தப்பட்ட  தாக்குதல். தொடர் முயற்சியால் இளவரசனையும் திவ்யாவையும் பிரித்தார்கள். சந்தேகத்திற்குரிய வகையில் இளவரசன் இறந்து போனது. இக்காலகட்டங்களில் பா.ம.க. வால் தொடர்ச்சியாக முன் வைக்கப்பட்ட தலித் எதிர்ப்பு சாதி அரசியல்,   இந்த தொடர் நிகழ்ச்சிப் போக்கின் பகுதியாகத் தான் நுகும்பலில் இப்போது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதலைப் புரிந்து கொள்ள வேண்டும்.இதற்கு இடையிலேயே ஒரு நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்து விட்டது அந்த தேர்தலிலே இராமதாசு(ஐயா) என்ற மன்னரின் மகன் இளவரன் அன்புமனி(சின்ன ஐயா) என்பவர் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு சென்று கொண்டிருக்கின்றார். அதுவும் பா.ம.க, பா.ச.க போன்ற இந்துத்துவ பாசிச சக்தியோடு கூட்டணியை வைத்து இந்த தேர்தலில் களம் கண்டது. ஆக மொத்தத்தில் இந்துத்துவமும் சாதி வெறி அரசியலை உயர்த்திப்பிடிக்கும் பா.ம.க வும் ’வளர்ச்சி’ என்ற முழக்கத்தை முன் வைத்து ஒரு மிகப்பெரிய எதிரியாக நம் முன் காட்சியளித்துக் கொண்டிருக்கும் ஒரு அரசியல் காலகட்டத்திலே நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்
சூலை 4 வந்தால் இளவரசன் கொல்லப்பட்டு ஓர் ஆண்டு நிறைவடைகின்றது. அதற்காக ஒரு கண்டனக் கூட்டம் அல்லது நினைவுக் கூட்டம் நடதத வேண்டும் என நத்தம் ஊர் மக்கள் முயன்று வருகின்றார்கள். ஆனால் அங்குள்ள நத்தம் கிராமத்தை சேர்ந்த துரை உள்ளிட்ட ஐந்து நபர்களை நேற்று இரவு காவல்துறை கடத்திச் சென்றுள்ளது

அதாவது வன்னிய சாதி வெறி சக்திகள்  எங்கு வேண்டுமானாலும் கூட்டம் நடத்தலாம்; அவர்கள் சாதி வெறியை தூண்டிவிடலாம். ஆனால் சாதிய தாக்குதலுக்கு உள்ளான தாழ்த்தப்பட்ட மக்கள் அதற்கு எதிராக கண்டனக் கூட்டமோ நினைவுக் கூட்டமோ நடத்த வேண்டும் என்றால் அவர்களை கட்டுப்படுத்துவதற்கும் அவர்கள் மீது வழக்குப் போடுவதற்கும் அவர்களை ஒடுக்குவதற்கும்தான் இந்த காவல்துறை பயன்படுத்தப் படுகின்றது. பொதுவாக பல்வேறு ஒடுக்குமுறைகளில் நாம் சந்தித்துவரும் பிரச்சனை இது தான். தாக்கியர்களையும் தாக்கப்பட்டவர்களையும் ஒன்றைப் போல் நடத்துவதாக காட்டி கொண்டு அதன் இறுதி அர்த்தத்தில் தாக்கியவர்கள் பக்கம் நிற்பது தான் இந்த அரசின் வேலையாக இருக்கின்றது. பொதுவாக எல்லா அரசுகளும் இப்படி நடந்து கொள்கின்றன.



நேற்று மாலை கைது செய்யப்பட்டவர்களை இப்போது வரை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவில்லை காவல் துறை. ஆயுதங்கள் வைத்திருக்கின்றார்கள் என்றொரு பொய்வழக்கைச் சோடித்துக் கொண்டிருக்கின்றார்கள். இதற்குக் காரணம் கைதுசெய்யப்பட்ட நபர்கள் நீதிமன்றத்திற்கு சென்று இளவரசனுக்கு ஒரு  நினைவுக் கூட்டத்தை நடத்திவிட வேண்டும் என்று முயன்று வருகின்றார்கள். காவல்துறை 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது அதனால் எங்களை மீறி நீங்கள் நீதிமன்றம் சென்று நினைவுக் கூட்டம் நடத்திவிடுவீர்களா என்று இந்த ஐவரை கைது செய்வதன் மூலம் நத்தம், அண்ணாநகர், கொண்டாம்பட்டியில் வாழும் தாழ்த்தப்பட்ட மக்களை அச்சுறுத்திப் பார்க்கின்றது காவல் துறை.

அதாவது தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியைச் சேர்ந்த கும்பல் தாக்குதல் நடத்தலாம்; காவல்துறை தாழ்த்தப்பட்ட மக்களை அச்சுறுத்தும் விதமாக கைது செய்யலாம்; தாழ்த்தப்பட்ட மக்களை தாக்கலாம். ஆனால் இவற்றை எல்லாம் எதிர்த்து கேள்வி கேட்பதற்கு இங்கு நாதி இல்லை என்ற நிலைதான் கடந்த இரண்டு ஆண்டு காலமாக இங்குஇருந்து வருகின்றது.

பா.ம.க வை பொறுத்த வரை தன்னுடைய பதவி அரசியலுக்காக முதலில் தமிழ்த்தேசியம் பேசினார்கள் பதவி அரசியலுக்காக தமிழ்நாட்டை இரண்டாக உடைத்து வடக்கு தமிழகத்திலாவது தாங்கள் முதல்வர் பதவிக்கு வந்துவிட முடியாதா என்று கனவு கண்டார்கள். பதவி அரசியலுக்காக காங்கிரசோடு கூட்டணியில் இருந்தார்கள் இப்பொழுது பதவிக்காக பா.ச.க வோடு கூட்டணியில் இருக்கின்றார்கள்.
காங்கிரசோடு இருந்தாலும் சரி, பா.ச.க. வோடு இருந்தாலும் சரி  தமிழ்நாட்டு மக்களின் நலனை ஆளும் வர்க்கத்திற்கு பலியிடுவதுதான் இதுவரை பா.ம.க செய்து வந்தது எனதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

எனவே பா.ம.க வை அரசியல் களத்தில் இருந்து தனிமைப்படுத்த வேண்டியது தமிழகத்தில் உள்ள அனைத்து சனநாயக சக்திகளின் முதன்மைக் கடமையாக நான் கருதுகின்றேன். ஏனென்றால் கடந்த தேர்தலின் பொழுதும் பா.ம.க – பா.ச.க கூட்டணியைப் பொறுத்தவரை நாம் பா.ச.க. வை தோற்க வேண்டும் என்று முனைந்த அளவுக்கு பா.ம.க வை நோக்கி நாம் வினையாற்றவில்லை. வை  பா.ம.க வை வீழ்த்த வேண்டும் என்பதை ஒரு அரசியல் முழக்கமாக முன்னெடுத்து அதற்கான போதிய முயற்சிகளை செய்யவில்லை என்பதை குற்ற உணர்ச்சியோடு நான் இங்கு பதிவு செய்கின்றேன்.


ஏனென்றால் அந்த தேர்தலுக்கு முந்தைய மார்ச் மாதத்தில் ஐ.நா. தீர்மானம் உள்ளிட்ட வேறு பிரச்சனைகளில்  நாம்  கவனம் செலுத்திக் கொண்டிருந்தோம். நாடாளுமன்றத்  தேர்தலை முன்னிட்டு பா.ம.க வை வீழ்த்துவதற்கான வியூகத்தை நாம் வகுக்கவில்லை அதற்கான போதிய தயாரிப்பை நாம் செய்யவில்லை. அதன் விளைவு தான் இன்று அன்புமனி முடி சூடியவராக நாடாளுமன்றத்திற்குள் சென்றிருக்கின்றார்.

தமிழக அரசு இது போன்ற தாக்குதலில் என்ன பாத்திரத்தை வகிக்கின்றது என்பதை நாம் இங்கு கவனிக்க வேண்டியுள்ளது. தமிழக அரசு மக்கள் நல அரசாக இன்று காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது ஆனால் உள்ளார்ந்த பொருளில் இது உண்மையில்லை. இதை நாம் தோலுரித்துக் காட்டாவிட்டால் சனநாயகத்திற்கான நமது போராட்டத்தில் ஓர் அங்குலம் கூட நம்மால் முன்னேறிவிட முடியாது.


ஏனென்றால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தாக்குதல் ஆனாலும் சரி, இளவரசன் மரணம் ஆனாலும் சரி இந்த தாக்குதலை நடத்தியவர்கள் மீதோ அதை தூண்டியவர்கள் மீதோ வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் மீது வழக்கு பதிவு செய்து அவர்கள் மீது நடவடிக்க எடுக்கவில்லை. சித்திரை திருவிழாவிற்காக மாமல்லபுரத்திலே நடந்த வன்னியர் சங்கக் கூட்டத்தில் தமிழக முதல்வர் செயலலிதாவை நோக்கி சவால் விடுவது போல் பேசிய காரணத்திற்காகத்  தான் பா.ம.க. வைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளைக் கைது செய்தார்களே ஒழிய,  அந்த கூட்டத்தைக் கால நீட்டிப்பு செய்து நடத்தினார்கள் என்ற காரணத்திற்காக தான் கைது செய்தார்களே ஒழிய சாதி வெறியை தூண்டியதற்காகவோ தாழ்த்தப்பட்ட மக்கள் மீது  தாக்குதலை நடத்தியதற்காகவோ வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்களைக் கைது செய்யவில்லை. ஏனென்றால் தமிழக அரசு எண்ணிக்கை அளவிலே பெரும்பான்மையாக இருக்கும் சாதிகளைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாகச் சொல்லிக் கொள்ளும் கட்சிகளைப் பார்த்து அச்சப்படுகின்றது. தனது தேர்தல் நலன் பாதித்துவிடக் கூடாதென்பதற்காக தாழ்த்தப்பட்ட மக்களைப் பலி பீடத்தில் ஏற்றத் தயங்குவதில்லை. 

தமிழக அரசு தமிழ்நாட்டு மக்களுக்கான ஒரு பொதுவான அரசாக நடந்து கொள்ளவில்லை. எனவே தமிழக அரசு தோற்றத்திலே தமிழ் மக்களின் நலன்களைப் பாதுகாப்பது போல காட்சியளித்தாலும்  இங்குள்ள உழைக்கும் மக்களுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் சிறுபான்மையின மக்களுக்கும் எதிராகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதை நாம் தோலுரித்துக் காட்ட வேண்டும். எல்லாமே தோற்றத்தில் நன்றாக போய்க் கொண்டிருப்பது போலத் தெரியும். நாமும் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்போம் ஆனால் நம்முடைய சனநாயகத்திற்கான போராட்டத்திலே ஒரு சிறு அடி கூட நாம் முன்னேறி சென்றுவிட முடியாது என்பதை நான் இங்கு பதிவு செய்ய விரும்புகின்றேன்.

இன்று தமிழகம் இரண்டு தமிழகமாக இருக்கின்றது. ஒன்று நகரம் இன்னொன்று கிராமம். நகரத்திலே பளபளக்கும் சாலைகள் இருக்கின்றன. பல்வேறு பன்னாட்டு நிறுவன‌ங்களின் மூலதனம் இறங்கிக் கொண்டிருக்கின்றது. அரசின் பல்வேறு நலத்திட்டங்களும் நகர வாழ் மக்களைக் குறி வைத்து வந்து கொண்டிருக்கின்றது. நகரத்தின் நுகர்வுக் கலாச்சாரமும், நகரத்தில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் வளர்ச்சியும் நகரத்தில் பாய்ந்து கொண்டிருக்கும் மூலதனமும் ஒருபக்கம். மறுபக்கத்தில் கிராமங்களில் படுத்துக் கிடக்கும் விவசாயமும் எந்த நுகர்வுக்கும் உள்ளாகாத கிராமப்புற மக்கள், நகரங்களின் வளர்ச்சிக்காக தங்களுடைய நிலம், நீர் வளங்களை அள்ளிக் கொடுத்தார்கள். 

ஆனால் நகர்ப்புற மக்களின் நுகர்வுக்கும் கிராமப் புற மக்களின் நுகர்வுக்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமான இடைவெளி உருவாகியுள்ளது. நகரங்களும் கிராமங்களும் நாட்டில் இரு இரு துருவங்களாக மாறிப் போயுள்ளன. குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்ட சென்னை நகர வளர்ச்சிக்கு தன்னுடைய மண் வளத்தையும், நீர் வளத்தையும் தந்துள்ளது. இப்படி நகரத்திற்கும் கிராம‌த்திற்குமான முரண்பாடு பகைத் தன்மையை அடைந்துள்ளது. நகரத்தில் நடப்பவை அனைத்துமே நாட்டின் பேசு பொருளாகின்றது. 

இன்று தமிழ்நாட்டில் அரசியலைப் பார்த்தால் இராக்கில் நடந்து கொண்டிருக்கும் சண்டையை பற்றி பேசுகின்றோம், இலங்கையில் நடக்கும் தாக்குதலைப் பற்றிப் பேசுகின்றோம், உத்திரப் பிரதேசத்தில் நடப்பதைப் பற்றிப் பேசுகின்றோம். ஆனால் தமிழ் நாட்டில் நடக்கின்ற ஒடுக்கப்பட்ட மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலோ அநீதியோ ஒரு பேசு பொருளாகக் கூட மாறுவதில்லை. 

முகநூலில் பார்த்தால் அண்மையில் வந்த ‘with you and without you’ திரைப்படம் எந்த அளவிற்கு பேசு பொருளானதோ அதில் ஒரு சதவிகிதம் கூட நுகும்பல் கிராம மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் விவாதிக்கப்பட வில்லை. எது பேசப்பட வேண்டும், எது இந்நாட்டு அரசியலில் மைய விவாதப் பொருளாக வேண்டும் என்பதை நகரங்கள் தீர்மானித்துக் கொண்டிருக்கின்றன.


தமிழ்த்தேசியம் என்பது தமிழ்நாட்டு மக்களின் சனநாயகத்திற்கான போராட்டத்தைத் குறிக்கும் சொல்.    சமூக நீதி, சமூக ஜனநாயகம் ஆகியவற்றைக் கைவிட்டுப் பேசப்படும் தமிழ்த் தேசியம் என்பது தமிழ்த் தேசியம் அல்ல. அது இனவாதமாகவும், சாதியவாதமாகவும்தான் இருக்க முடியும்.எனவே தமிழ்நாட்டு உழைக்கும் மக்களின் சனநாயகத்திற்கானப்போராட்டத்தை முன்னெடுப்பது தான் நமது முதன்மைக் கடமையாக கருதி தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை முதலில் நகரங்களில் பேசு பொருளாக்குவோம். 

ஒடுக்கப்படும் மக்கள் பக்கம் நிற்க வேண்டும் என்ற சனநாயக உணர்வை வளர்த்தெடுப்போம். இவை மட்டுமின்றி பா.ம.க வை அரசியல் அரங்கிலிருந்து தனிமைப்படுத்தவதற்காக சூளுரைத்து அதற்கான வியூகங்களை நாம் வகுக்க வேண்டும் என்று கூறி என்னுடைய உரையை முடிக்கின்றேன்.  

உரை குறிப்பு, தட்டச்சு : இளங்கோவன்

புகைப்படங்கள் : நுகும்பல் கிராமம் பா.ம.க-வின் தாக்குதலுக்கு பிறகு

நத்தம் காலனியில் ஆதிக்க சாதியாக காவல் துறை....


தருமபுரி -  எரிக்கப்பட்ட நத்தம் அண்ணாநகர், கொண்டம்பட்டி கிராமங்களைச் சேர்ந்த 28 தாழ்த்தப்பட்ட  இளைஞர்கள் மீது பொய் வழக்கு

துப்பாக்கி பயிற்சி எடுத்ததாக ஒத்துக்கொள்ள சொல்லி

12 பேர்  அடித்து சித்ரவதை, நத்தம் கிராமத்தின்மீது 4 நாட்களாக தொடர்ந்திடும் காவல்துறை அதிகாரவர்க்கத்தின் வன்முறை வெறியாட்டம்.

வருகிற சூலை-4 அன்று கௌரவக்கொலைக்கு பலியான இளவரசனின் நினைவுதினத்தை அனுசரிக்க நத்தம் கிராமத்து மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டிருந்தனர். அனுமதி மறுக்கவே உயர்நீதிமன்றத்தில் அனுமதி வாங்கி அந்நிகழ்வை அனுசரிக்க முடிவுசெய்து, அனுமதி கோரிய கடிதத்தைக் கேட்டு மாவட்ட நிர்வாகத்திடம் சென்ற கிராமப் பொறுப்பாளர் துரை, ஊர்த்தலைவர் சக்தி ஆகிய இருவரையும் மூன்று நாட்கள் தர மறுத்து அலைகழித்துள்ளது. உடனடியாக 144 தடை உத்தரவை அமல்படுத்தியது. பின் 27.06.2014 அன்று மாலை 4.மணியளவில் எஸ்.பி.சி.ஐ.டி சிங்காரம் நத்தம் கிராமத்திற்கு வந்து அதியமான் சவுண்ட்சிஸ்டம் தொழில் நடத்திவரும் சிவலிங்கத்தை விசாரிக்கிறார். இளவரசன் நினைவுதினத்தன்று மைக்செட் வைக்கக்கூடாது என எழுதி எடுத்துவந்த தாளில் கையெழுத்துப்போட சொல்லி மிரட்டினார். தந்தை சிவலிங்கம் மறுக்கவே மகன் அதியமான் எண்ணை வாங்கிக்கொண்டு சென்றார். அப்பொழுதிலிருந்தே காவல்துறையினரின் வன்முறை நாடகம் ஆரம்பித்துவிட்டது.

முதல் கட்டமாக விசாரணை எனக்கூறி மூன்று பேரை மாலை 4 மணியிலிருந்து தருமபுரி பி1 காவல்நிலையத்தில் விசாரித்தனர். பிறகு சுமார்  இரவு 11 மணியளவில் எஸ்.பி.சி.ஐ.டி சிங்காரம் நீங்கள் 6 பேர் வாருங்கள், கையெழுத்திட்டுவிட்டு அவர்களை அழைத்துச் செல்ல எஸ்.பி அழைக்கிறார் என்று கூறியிருக்கிறார். பிறகு 10க்கும் மேற்பட்ட நபர்கள்  இரவு 12 மணியளவில் தருமபுரி பி1 காவல்நிலையத்திற்குச் சென்றுள்ளனர். சென்ற ஒவ்வொருவரையும் மிரட்டி விசாரித்துள்ளனர். அவற்றில் 3 நபர்களை மட்டும் பிடித்து வைத்து கிட்டதட்ட 4 மணிநேரம் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். துரை, சக்தி, சங்கர், அதியமான், சந்தோஸ், அசோக், ஆகிய ஆறுபேரையும் 2 மணிநேரமாக காவல்நிலையத்தில் வைத்து காட்டுமிராண்டித்தனமாக தாக்கியிருக் கிறார்கள். இளவரசன் என்ன தியாகியாக? அவனுக்கு இறங்கல் நிகழ்ச்சி வேறா? என்று சொல்லி அடித்திருக்கிறார்கள்.

ஒவ்வொருவரையும் துப்பாக்கி வைத்திருந்ததாக, பயிற்சி எடுத்ததாக ஒத்துக்கொள்ள சொல்லி சித்ரவதை செய்திருக்கிறார்கள். காவல்துறையினரே எழுதிய வாக்குமூலத்தில் கையெழுத்திடச் சொல்லி தாக்கியிருக்கிறார்கள்.
விடியற்காலை 4 மணியளவில் துரை என்பவரை மட்டும் கைவிலங்கிட்டு நத்தம் கிராமத்திற்கு அழைத்துச் சென்றனர். கூடவே 15க்கும் மேற்பட்ட வாகனத்தில் 100க்கணக்கான சிறப்பு படையினர் வந்திருக்கிறார்கள். ஒரு காவலாளி இரு சக்கர வாகனத்தில் துப்பாக்கி வெடிமருந்தை எடுத்துவந்ததை அந்த ஊர் மக்கள் பார்த்திருக்கிறார்கள். பின் துரை என்பவரின் வீட்டில் சோதனையிட்டு வீட்டில் உள்ள கடப்பாரை சம்மட்டியை எடுத்துக்கொண்டு இளவரசன் குழி அருகில் சென்று குழி தோண்டச் சொல்லி புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். அவரது 15 வயது மகனை அழைத்துச்சென்று இளவரசன் புதைகுழி அருகில் தோண்டச்சொல்லி புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். பின் ஊருக்கு பின்புறம் உள்ள கிணற்று அருகில் சென்று காவல்துறையினர் எடுத்துவந்த துப்பாக்கியை கீழே போட்டு அதனை எடுத்துத்தர சொல்லி துரையை அடித்திருக்கிறார்கள். அதனை புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். மொத்தம் 28 நபர்களை கைதுசெய்வது காவல்துறையின் நோக்கம். இதனால் பாதிக்கப்பட்ட மூன்று கிராம மக்களும் அச்சத்தில் இருக்கிறார்கள்.

இத்தகைய காட்டுமிராண்டித்தனமான வன்முறைச்செயல் அன்றோடு முடியவில்லை. 29.06.2014 அன்று விடியற்காலை திருப்பதி என்கிற 23 வயதுடைய பாலிடெக்னிக் கல்லூரி மாணவனை குடுப்பட்டி என்கிற கிராமத்திற்கு தேடிச்சென்று கைதுசெய்துள்ளனர். இதுவரை அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவல் தெரியவில்லை. இதனை அறிந்த ஊர் மக்கள் இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்


அந்த மக்களிடம் இனிமேல் யாரையும் கைது செய்யமாட்டோம், ஆனால் இன்னும் மீதம் இருக்கும் நபர்களை சரணடையச் சொல்லுங்கள், இனிமேல் எந்த இளைஞரும் வெளியே செல்லக்கூடாது. இத்தகைய தீய சக்திகளை மக்கள் நீங்கள்தான் பிடித்துக்கொடுக்கனும் என்று பேசியிருக்கிறார். அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரை அம்மக்கள் சந்தித்தபோது, இன்னும் 5 பேர் சரணடையனும், இல்லாவிட்டால் நாங்கள் ஊரையே கைதுசெய்ய வேண்டியிருக்கும் என்று மக்களை மிரட்டி அனுப்பியிருக்கிறார்.

இளவரசன் நினைவுதினத்தை தடுப்பதும், பாதிக்கப்பட்ட அக்கிராம மக்களுக்கு ஆதரவாக எந்த முற்போக்கு இயக்கங்களும், ஜனநாயக சக்திகளும் கால்பதித்துவிடக்கூடாது என்பதே அதிகாரவர்க்கத்தின் சாதி ஆதிக்க சக்திகளின் நோக்கமாக இருந்துவருகிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களின் உரிமைகளுக்காக போராடுவதைவிடுத்து, அரசிடமும், மாவட்ட நிர்வாக, காவல்துறையிடமும் கையேந்தி நிற்கும் நிலையை உருவாக்குவதைத்தான் விரும்புகிறது. அதனை அம்மக்கள் விரும்பாமல் சுயமாக நிற்பதை ஏற்காத நிர்வாகம் மக்களை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவரவே இத்தகைய கொடூரமான வன்முறைத் தாக்குதல். பொய் வழக்கு, அரச பயங்கரவாத நாடகம். தொடர்நது மூன்று நாட்களாக தாழ்த்தப்பட்ட கிராமத்தை முற்றுகையிட்டு தேடுதல் வேட்டை நடத்தி அம்மக்களை அச்சுறுத்திவருவதை மறைத்து அவர்கள் துப்பாக்கி வைத்திருந்ததாக துடி என்கிற இயக்கம் பயிற்சி கொடுத்ததாக பொய்யான தகவலை திட்டமிட்டு  பரப்பிவருகிறது.

30.06.2014 அன்று விடியற்காலை கைது: மேலும் ஐந்து இளைஞர்கள்(சங்கர், சண்முகம், அருள், சசிகுமார், தலைவன்) பெங்களூரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்கள்.  பெங்களூரில் சென்று பணி புரிந்து வந்த இவர்களை அங்கு பதுங்கி இருந்தனர் என்று குறிப்பிட்டுள்ளது காவல்துறை.

காவல்துறையின் தொடரும் இந்த ஒடுக்குமுறையக்கு எதிராக களமிறங்குவதும், குரல் எழுப்புவதும் கம்யூனிஸ்டுகளும், ஜனநாயக சக்திகளும்  முதன்மைப் பணியாக‌ முன்னிற்கிறது.


இரமணி
மா.லெ மக்கள் விடுதலை

Wednesday, July 2, 2014

மாக்களின் சாதி



பொத்தி பொத்தி ஈன்ற எம்மனம் அவர்தம் வேள்வியிலே
கத்தி கத்தி அழுத தெம்மனம் அச்செந்தழல் மீதினிலே
பத்திரமா யோர் வாழ்க்கை அன்றோ நிறைவாக
பித்தம் பிடித்துத் திரிவ தின்றோ இழிநிலையாக
எத்திசை யும்பல சாதி வெறியர் கூட்டம்
சத்திய சோதனையு மதனால் எடுத்தது தெருவிலோட்டம்
நித்தமும் நில்லாது அழிக்கிறது மாக்களின் சாதி
நத்தம்காலனியி லதனால் ஓலமும் பழிபாவமும் மீதி
 
-    குட்டிமணி செங்குட்டுவன்


Tuesday, July 1, 2014

கெயில் எரிவாயுக்குழாய் விபத்து, தமிழ் நாட்டிற்கு ஒர் எச்சரிக்கை



ஜூன் 27 அன்று ஆந்திராவில் எரிவாயு எடுத்துச் செல்லும் குழாயில் ஏற்பட்ட கசிவால் நடந்த பயங்கர தீ விபத்தில் 19 பேர் இறந்துள்ளனர். 20-க்கும் அதிகமானோர் தீவிர தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.



நிலத்துக்கடியில் கெயில் பைப்லைன் :

ஆந்திர மாநிலத்தில், ஹைதராபாத்தில் இருந்து 560 கி.மீ தொலைவில், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ளது நகரம் என்னும் கிராமம்.  விஜயவாடாவிற்கு அருகில் இருக்கும் லான்கோ கொண்டபள்ளி அனல் மின் நிலையத்திற்கு எரிவாயு கொண்டு செல்லும் எரிவாயுக்குழாய் , நகரம் கிராமத்தின் வழியாக செல்கிறது. கெயில் (GAIL - Gas Authority of India Limited) நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த பைப்லைன்கள் நிலத்துக்கடியில் 4 மீட்டர் ஆழத்திற்குப் புதைக்கப்பட்டுள்ளன.

15 ஆண்டுகளுக்கு முன்பு பதிக்கப்பட்ட இக்குழாய்கள் துருப்பிடித்த நிலையில், இவற்றிலிருந்து எரிவாயு கசிவதாக கிராம மக்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்துள்ளனர். ஆனால், புகாருக்கு உரிய நடவடிக்கையை கெயில் நிர்வாகம் எடுக்கவில்லை.

வெடிப்பு எப்படி நடந்தது ?

இந்நிலையில் கடந்த ஜூன் 27 நள்ளிரவில் அதிகளவு எரிவாயு கசிந்து அந்தப் பகுதி முழுக்க எரிவாயு படர்ந்திருக்கிறது. அடுத்த நாள் ஜூன் 28 அதிகாலை 4.30 மணியளவில் அப்பகுதி டீக்கடைக்காரர் கடையைத் திறந்து அடுப்பைப் பற்றவைத்த போது, கசிந்திருந்த எரிவாயு தீப்பிடித்துப் பரவி எரிவாயுக் குழாய் வெடித்துச் சிதறியது. இதில், அதே இடத்திலேயே டீக்கடைக்காரர் உட்பட அவர் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரும் தீயில் கருகி உயிரிழந்ததாகச் சொல்லப்படுகிறது. நன்றாக உறங்கிக் கொண்டிருந்த போது திடீர் வெடிச்சத்தம் கேட்டு வெளியில் வந்தவர்கள் தீயில் கருகி உயிரிழந்தனர். இதுவரை, 3 பெண்கள், 3 குழந்தைகள் உட்பட 19 பேர் உயிரிழந்துள்ளனர்.


குழாய் வெடித்ததில் 30 மீட்டர் உயரத்திற்கு தீ பற்றி எரிந்திருக்கிறது. அருகில் இருந்த வீடுகள், கால்நடைகள், பறவைகள், தென்னை மரங்கள் என அரைக் கிலோமீட்டர் சுற்றளவில் இருந்த அனைத்தும் தீயில் கருகிச் சாம்பலாயின. காயமடைந்தவர்கள் 30 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். 80 சதவிகித தீக்காயங்களுடன் 5 பேர் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

எரிவாயு கசிவு பற்றி தொடர்ச்சியாகப் புகார் அளித்த பின்னும் நடவடிக்கை எடுக்காத கெயில் நிர்வாகம் மீது ஆத்திரமுற்ற மக்கள் அருகிலிருந்த கெயில் அலுவலகத்தை அடித்து நொறுக்கினர்.


கெயில் நிறுவனமே பொறுப்பு :

ஆந்திர அரசு மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ள நிலையில், இந்த விபத்திற்கு கெயில் அதிகாரிகளின் அலட்சியப் போக்கே காரணம் என்று ஆந்திர துணை முதல்வர் என்.சின்னராஜப்பா குற்றஞ்சாட்டியுள்ளார்.

துருப்பிடித்த எரிவாய்க்குழாயிலிருந்து  எரிவாயு கசிந்ததை மக்கள் பலமுறை தெரிவித்தும் கெயில் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்று ஆந்திர நிதியமைச்சர் யனமல ராமகிருஷ்னுடு தெரிவித்துள்ளார்.

கெயில் நிறுவனம் மீது ஆந்திர காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ள்து.

இதையொட்டி, கெயில் நிறுவனம் இரண்டு அதிகாரிகளை இடைநீக்கம் செய்துள்ளது.

உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகப் பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.


ஆந்திர மக்களின் படிப்பினை :

நகரம் கிராமத்திற்கு அருகிலேயே எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆணையமான ஓ.என்.ஜி.சி (ONGC - Oil & Natural Gas Commission) -க்கு சொந்தமான ’தாதிபாகா’ சுத்திகரிப்பு நிலையமும், எரிவாயு சேகரிப்பு நிலையங்களும் உள்ளன. இவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று  நகரம் சுற்றுவட்டார மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

குடியிருப்பு பகுதிகளில் கெயில் பைப்லைன்கள் அமைத்து தங்கள் உயிரையும், உடைமைகளையும் நிரந்தர ஆபத்தில் வைத்திருப்பதாக அம்மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மேலும், வாழ்விடங்களுக்கு அருகிலேயே ஓ.என்.ஜி.சி & கெயில் நிலையங்கள் இருப்பது தங்களுக்கு விடப்பட்ட சாபமாகவும் அம்மக்கள் மிகுந்த கவலையோடு தெரிவித்துள்ளனர்.

இந்தத் தருணத்தில், கெயில் எரிவாயுக்குழாய் திட்டத்தைப் பற்றியும், அதனால் பாதிக்கப்பட்ட ஆந்திர மக்களின் படிப்பினைகளையும் தீவிரமாகக் கவனத்தில் கொள்வது தமிழக மக்களின் உடனடித் தேவையாகும்.

தமிழகத்தில் கெயில் எரிவாயுக்குழாய் :

கேரளாவிலிருந்து கர்நாடகாவிற்கு எரிவாயு எடுத்துச் செல்வதற்கு தமிழகத்தின் வளமான மேற்கு மாவட்ட விவசாய நிலங்கள் வழியாக கெயில் நிறுவனம் எரிவாயுக்குழாய் பதித்து வந்தது.

கேரளாவில் கொச்சியில் தொடங்கும் இந்த எரிவாயுக்குழாய் இணைப்பு தமிழகத்தில் கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட ஏழு மாவட்டங்கள் வழியாக பெங்களூரு வரை செல்கிறது. வழியில் 137 தமிழகக் கிராமங்கள் வழியாக செல்லும் இணைப்பு மொத்தம் 5,000 ஏக்கர் விவசாய நிலங்களை நேரடியாகப் பாதிக்கும். 50,000 ஏக்கர் விளைநிலங்களில் மறைமுக பாதிப்பு இருக்கும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.


எரிவாயுக்குழாய் பதிக்கும் வேலைகளின் போதும், கனமான குழாய்களைத் தூக்கிக் கொண்டு கிரேன் உள்ளிட்ட கனரக வாகனங்கள் விளைநிலங்கள் வழியே செல்லும்போதும், பராமரிப்புப் பணிகளின் போதும் விளை நிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும்.



விவசாயிகள் போராட்டம் :

எரிவாயுக்குழாய்  இடப்படும் இடங்களில் இருந்து 20 மீட்டர் வரை இருபுறமும் மரங்களோ வேறு கட்டிடங்களோ இருக்கக் கூடாது, குழாய்களுக்கு சிறு பாதிப்பு ஏற்பட்டாலும் விவசாயிகளுக்குக் கடுமையான தண்டனை போன்ற பல கடுமையான விதிமுறைகள் விவசாயிகளை கொந்தளிக்கச் செய்துள்ளது.

கேரளாவில் இருந்து பெங்களூர் செல்வதற்கு சம்பந்தமே இல்லாமல் சுற்று வழியான தமிழகம் வழியாக 310 கி.மீ எரிவாயுக்குழாய் பதிக்கும் திட்டம் போடும் கெயில் நிறுவனத்தைக் கண்டித்து போராட்டங்கள் வெடித்தன. விளைநிலங்கள் வழியாகப் போடக்கூடாது, நெடுஞ்சாலை வழியாகப் போடவேண்டும் என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால், இந்த வழக்கை நீதிமன்றம் இரத்துச் செய்தது.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு :

இதையடுத்து, கெயில்  எரிவாயுக்குழாய் பதிக்கும் திட்டத்தை விளைநிலங்கள் வழியாக செயல்படுத்துவதைத் தடுத்து நிறுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் விவசாயிகள் சார்பாகவும், தமிழக அரசு சார்பாகவும் தனித் தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கூடுதலாக, நெடுஞ்சாலை வழியே எரிவாயுக்குழாய் பதிக்க தமிழக அரசு பரிந்துரைத்தது. இந்தப் பரிந்துரையை கெயில் நிறுவனம் நிராகரித்துவிட்டது. வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.


மக்கள் போராட்டமே தீர்வு :

கெயில்  திட்டங்கள் பெருமுதலாளிகளின் தனியார் அனல் மின் நிலையங்களுக்கு எரிவாயு கொண்டு சென்றுகொண்டிருக்கும் இவ்வேளையில், முதலாளியக் கொள்கைகளைத் தீவிரமாக அமுல்படுத்திக் கொண்டிருக்கும் இன்றைய அரசுக் கட்டமைப்பில், கெயில் நிறுவனத்தின் மக்கள் விரோத செயல்பாடுகளுக்கு எதிராக சட்டப் போராட்டங்கள் எவ்வளவு தூரம் வெற்றி பெறும் என்பது மிகப் பெரிய கேள்விக் குறியே. 

சென்னை உயர் நீதிமன்றம் கெயில் பைப்லைன் திட்டத்திற்கு ஒப்புதல் கொடுத்ததுபோல், உச்ச நீதிமன்றம் கொடுக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஒருவேளை, உச்ச நீதிமன்றம் கெயில் நிறுவனத்திற்கு சாதமாகத் தீர்ப்பளித்தால், அசுர வேகத்தில் தமிழகத்தின் விளைநிலங்கள் நாசம் செய்யப்படும் என்பது உறுதி. கண்முன்னே தங்கள் நிலம் வீணாவதை வேடிக்கை மட்டுமே பார்க்கும் அவலநிலைக்குத் தமிழக விவசாயிகள் தள்ளப்படுவார்கள். மேலும், உயிருக்கும், உடைமைகளுக்கும் உத்திரவாதமின்றி, சொந்த மண்ணிலேயே திக்கற்றவர்களாக நிற்கும் மிக மோசமான நிலைக்கு விவசாயிகள் மட்டுமல்ல, மேற்கு மாவட்ட மக்களும் தள்ளப்படுவர். இதற்கு ஒரே மாற்று, கெயில் பைப்லைன் திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டங்கள் பரவலாக்கப்பட வேண்டும்.

விவசாயிகளின் போராட்டம் என்பது பரந்துபட்ட மக்கள் போராட்டமாக விரிவடைய வேண்டும். தமிழகத்தின் வாழ்வாதாரங்களைச் சூறையாடும் இதர திட்டங்களான மீத்தேன் திட்டம், தாதுமணல் கொள்ளை, கூடங்குளம் அணுமின் நிலையம் போன்றவற்றை எதிர்க்கும் மக்கள் போராட்டங்களுடன் கெயில் எரிவாயுக்குழாய் எதிர்ப்புப் போராட்டம் இணைக்கப்பட வேண்டும்.

தமிழகத்தின் கிழக்குப் பகுதியான காவிரிப் படுகையில் மீத்தேன் திட்டம் கொண்டுவருவதற்கு, தமிழகத்தின் மேற்குப் பகுதியில் நல்ல எரிவாயுக்குழாய் கட்டமைப்புகள் கொண்டு வரப்படுவதும் ஒரு காரணம் என்று மீத்தேன் எடுக்க ஒப்பந்தம் போட்டிருக்கும் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் நிறுவனமே கருத்து தெரிவித்துள்ளது. எனவே, வாழ்வாதாரப் போராட்டங்களின் ஒற்றுமை வலிமை என்பது கட்டாயமாகக் காலத்தின் தேவையாக இருக்கின்றது.

எரிவாயுக் குழாய் திட்டங்கள் மேற்குலக நாடுகளில் செயல்முறையில் உள்ளன. ஆனால், அவை அவற்றுக்கான பாதுகாப்பு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டே செயல்படுத்தப்படுகின்றன. அதில் மிகவும் முக்கியமானது, முறையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது போன்றவை. ஆனால், இவை எதுவும் இந்தியத் துணைக்கண்டத்தில் பின்பற்றப்படுவதே இல்லை. மக்கள் அடர்த்தியாக வாழும் கிராமத்தில் எரிவாயுக் குழாய் பதித்தது மட்டுமல்ல, எரிவாயுக் கசிவைப் பற்றி மக்களே பல முறை புகார் தெரிவித்தபின்னும் கெயில் நிர்வாகம் அலட்சியமாக இருந்தது இன்று 16 பேர் உயிரை காவு வாங்கி, ஒரு கிராமத்தையே எரித்திரிக்கின்றது. முறையாக, ஆய்வுப் பணிகளை கெயில் நிறுவனம் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் செய்திருக்க வேண்டும்.

நாட்டின் வளர்ச்சிக்கு எரிவாயு முக்கியம், அணுமின் நிலையம் முக்கியம் என்று நியாயம் பேசுபவர்கள் கேள்விக்கு உட்படுத்த வேண்டியது அரசு, அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் பெருநிறுவனங்களின் இந்த அலட்சியப் போக்கையே. மக்கள் உயிரைப் பற்றி கிஞ்சித்தும் அக்கறை கொள்ளாத இந்த ‘வளர்ச்சிக்கு’ ஆதரவு கொடுக்க வேண்டிய அவசியம் மக்களுக்கும் கிஞ்சித்தும் கிடையாது. மக்களின் உயிருக்கு உத்திரவாதம் அளிக்காத அரசும், அரசு மற்றும் தனியார் பெருநிறுவனங்களுக்கு தங்களின் அலட்சியப் போக்கை மாற்றிக் கொள்ளாத வரை
மக்களுக்கு ‘வளர்ச்சி’ உபதேசம் சேய்யும் யோக்கியதை சிறிதும் கிடையாது.

வாழ்விடங்களில் கெயில் எரிவாயுக்குழாய்களை அனுமதித்ததால் சொந்த பந்தங்களையும், உடைமைகளையும் இழந்ததோடு மட்டுமல்ல எதிர்கால வாழ்க்கை குறித்தும் சந்ததிகளின் நல்வாழ்வு குறித்தும் திக்குத் தெரியாமல் கண்ணீர் வடிக்கும் நகரம் பகுதி வாழ் ஆந்திர மக்களின் படிப்பினைகளிலிருந்து நாம் உடனடியாக கற்றுக் கொண்டு விரைந்து செயலாற்ற வேண்டிய தருணம் இது.

தமிழ் நாசர்