Monday, July 28, 2014

இன்றுமுதல் விசை.IN

தோழர்களுக்கு வணக்கம்.

''சேவ் தமிழ்ஸ் இயக்கம்'' என்ற பெயரில் செயல்பட்டுவந்த எமது இயக்கம், கடந்த 13-ம் தேதியிலிருந்து(13 சூலை 2014) 'இளந்தமிழகம்' என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இந்த மாற்றங்களின் ஒருபகுதியாக எங்களது வலைப்பக்கங்களை புதிய பெயர்களில் புதிய வடிவமைப்புகளில் மாற்றியுள்ளோம். மேலும், இத்தளத்தில் கட்டுரைகளை வெளியிடுவதையும் நிறுத்திக்கொள்கிறோம். இன்றுமுதல் எங்களது கட்டுரைகள் www.visai.in தளத்தில் வெளியிடப்படும். தோழர்கள், 'விசை' தளத்தில் தங்களது ஆதரவுகளைத் தர வேண்டிக்கொள்கிறோம்.

எமது கட்டுரைகளுக்கான இணையதளம்: www.visai.in
எமது இயக்கத்தின் இணையதளம்: www.ilanthamizhagam.com
எமது மின்னஞ்சல் முகவரி: ilanthamizhagam@gmail.com
ட்விட்டர் முகவரி: https://twitter.com/ilanthamizhagam
முகநூல் பக்கம்: https://www.facebook.com/ilanthamizhagam
யூடியூப் முகவரி: https://www.youtube.com/user/ilanthamizhagam


செய்திகளை மின்னஞ்சலில் படிப்பதற்காக இத்தளத்தில் மின்னஞ்சல் முகவரிகளைப் பதிவுசெய்துள்ளவர்கள் கவனத்திற்கு:
உங்கள் மின்னஞ்சலுக்கு விசை தளத்திலிருந்து, மின்னஞ்சல் மூலம் செய்திகளைப் பெறுவதை உறுதிப்படுத்துவதற்கான புதிய சுட்டிகளை (Links) அனுப்புகிறோம். அவற்றைச் சொடுக்கி, உறுதி செய்துகொள்ளவும். நன்றி.

-இளந்தமிழக இயக்கம் (முன்பு 'சேவ் தமிழ்ஸ் இயக்கம்). 

Friday, July 18, 2014

ஜெயலலிதாவின் புதிய பரிணாம‌ம்.......




2011ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதாவிடம்  ஒரு அரசியல் முதிர்ச்சி தெரிந்தது.  முன்பு போல அதிரடியாக தனது சர்வாதிகாரத்தை செயல்படுத்தாமல் அரசியல் சாணாக்கியத்தனத்தோடு செயல்படத்தொடங்கினார்.  அதன் விளைவே அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா உப்பு..... இன்னும் எல்லாம்,  இதுமட்டுமின்றி தமிழக சட்டசபையில் ஈழத்தமிழர்களுக்கு  ஆதரவான இரு தீர்மானங்களை இயற்றினார். பொது வெளியில் தனது பிம்பத்தை எப்படி கட்டமைப்பது என்பதை அவர் நன்கு கற்ற‌றிருந்திருந்தார்.  கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 36 தொகுதிகளில் வெற்றி பெற மேற்கூறியவைக்கும் பங்குண்டு.  இதன் மூலம் ஜெயலலிதா மாறி விட்டாரோ என்று கூட சிலர் எண்ணினர்.   முன்னர் கூறியது ஊடகங்களில் ஜெயலலிதா பற்றி காட்டப்படும் பிம்பம் மட்டுமே...




தமிழகத்தில் சிறப்பு முகாம்கள் என்றழைக்கப்படும் வதை முகாம்களில் வாடும் ஈழத்தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத்தொடங்கிய நேரத்தில் தான் சட்டசபையில் ஈழத்தமிழர்களுக்காக தீர்மானம்  இயற்றினார், அதெல்லாம் வெற்றுத் தீர்மானம் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும்,  அதுமட்டுமின்றி முள்ளிவாய்க்கால் முற்றச்சுவரை இடித்து, தனது சர்வாதிகாரத்தைத் தங்கு தடையின்றி செயல்படுத்தினார். அது போலவே நான்கு தமிழர்களின் விடுதலைக்காக தமிழகமெங்கும் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த பொழுது செங்கொடியின் உயிர்த்தியாகம் அந்த போராட்டத்தை இன்னும் அதிகரிக்கச் செய்யும்  நிலைமை இப்படியே செல்லக்கூடாது அதை தனது கட்டுக்குள் கொண்டுவர அடுத்த நாளே தீர்மானம் இயற்றினார்,  அந்த வழக்கின் தீர்ப்பு வந்த பொழுது, அவர்களையெல்லாம் விடுதலை செய்வேன் என்று அறிவிக்கவும் செய்தார், ஆனால் இன்று வரை விடுவிக்காமல் அவர்களை மேலும் ஒரு வழக்குச் சுழலுக்குள் தள்ளிவிட்டுள்ளார்.



        தமிழகத்தின் மின்தட்டுப்பாட்டை ஆட்சிக்கு வந்த மூன்றே மாதங்களில் நீக்குவேன் என்றார், மூண்றாண்டுகள் ஆகிய பின்னும் காகிதப்புலியாக வெறும் அறிக்கைகளில் மட்டும் மிந்தட்டுப்பாட்டை ஒழித்திருக்கின்றார்,  மின்சாரமே இல்லாத நிலையில் பொது மக்கள் பயன்படுத்தும்  மின்சாரத்தின் கட்டணம் மட்டும் ஆண்டாண்டுக்கு உயர்ந்தும்,  தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட  பெரு நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கான கட்டணம் குறைந்தும் வருகின்றது.  இதில் பின்னவர்களுக்கு  மட்டும் மிந்தட்டுப்பாடே இல்லை.   அரசு மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய குடிநீரை ஒரு முதலாளியைப் போல  விற்பனை செய்யும் முறையை இந்தியாவிலேயே முதல் முறையாக செய்தார் ஜெயலலிதா.  மோடியை வீழ்த்திய லேடி என்று ஊடகங்கள் இவரை கொண்டாடுவது இதனால் தான், முதலாளித்துவத்தை செயல்படுத்துவதில்,  Vision 2023  போன்று ஒரு திடமான செயல்திட்டத்தை முதலாளிகளுக்காக உருவாக்குவதில் அவருக்கு இணையாக எந்த முதலமைச்சரும் முன் நிற்கமுடியாது.  அதனால் தான் ஊடகங்கள் இவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றன.  பால் விலை, பேருந்து கட்டணம் என விலைவாசியை தன் பங்குக்கு உயர்த்தினார் இந்த மிகச்சிறந்த நிர்வாகி.


                       ஒவ்வொரு முறை ஆட்சிக்கு வரும் போதும் அரச இயந்திரத்தின் கடை நிலை ஊழியர்களை நடுத் தெருவிற்கு கொண்டு செல்வதன் மூலம் தனது அகங்காரத்திற்கு தீனி போட்டுக்கொள்வார்.  கடந்த ஆட்சியில் சாலைப்பணியாளர்களை வேலை விட்டுத்தூக்கி நடுத்தெருவிற்கு கொண்டு வந்தார், இந்த முறை 10,000 மக்கள் நலப்பணியாளர்களை வேலையை விட்டு நீக்கினார்.  பல போராட்டங்களை அவர்களும் தொடர்ந்து நடத்தி வந்தனர், இறுதியில் பட்டினியால் சிலர் மரணமடைந்தனர் (கொல்லப்பட்டனர் என்பதே சரி).  இன்று இவர்களெல்லாம் கிடைக்கும் ஏதோ ஒரு கூலி வேலைக்குச் சென்று வாழ்க்கையை நடத்தி வருகின்றார்கள்.   மாற்றுத்திறனாளிகள்  தாங்கள் முதல்வரைச் சந்தித்து தங்கள் கோரிக்கைகளை கையளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர், ஆனால்  "அம்மா" என தனது தொண்டர்களால் அழைக்கப்படும் அவரால் அதற்கு நேரமில்லை,  அந்த நேரத்தில் அவர் நூற்றாண்டு சினிமா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு தன்னை மற்றவர்கள் புகழுவதை கேட்டு மனமகிழ்ந்து கொண்டிருந்தார்.  பின்னர் போராட்டம் ஒன்றே வழி என முடிவெடுத்து சாலைமறியல் செய்தவர்களை கடுமையாக ஒடுக்கினார்.  காவிரித்தீர்ப்பை அரசிதழில் கொண்டு வந்து "காவிரித்தாய்" ஆனார், ஆனால் ஏனோ காவிரி நீர் மட்டும் தமிழ்நாட்டிற்கு இன்னமும் வரவில்லை.  நிர்வாகப்புயல் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியில் தான் தமிழகத்தில் கொள்ளை, கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து, ஸ்காட்லாந்து யார்டுக்கு அடுத்த இடத்தில் இருந்ததாக சொல்லப்பட்ட‌ தமிழக காவல்துறை இன்று வடிவேலுவின் என்கவுண்டர் ஏகாம்பரம் கதாபாத்திரத்திற்கு நிகராக வந்துள்ளது. கொலை, கொள்ளைகளை தடுக்க இயலாத காவல்துறை முல்லைப்பெரியாறிலும், கெயில் எரிவாயுக்குழாய் எதிர்த்தும், கூடங்குளம் அணு உலையை எதிர்த்தும் போராடும் மக்கள் மீதும், ஒடுக்கப்பட்ட மக்கள் மீதும் தங்கள் வீரத்தை காட்டிவருகின்றனர்.  சமூக ஏற்றத்தாழ்வுகள் அதிகரிப்பதே இங்கு கொலை, கொள்ளைகள் அதிகரிக்கக் காரணம்,  "கற்றது தமிழ்" படத்தில் சொல்லப்படுவது போல நீங்க சாப்பிடுற ஒரு வாய் பீசாக்காக, போட்டுறக்க ஷீக்காக,  கண்ணாடிக்காக கொலை செய்யப்படலாம் என்பது இங்கே அதிகளவில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.  சமூக ஏற்றத்தாழ்வுகளை சரி செய்ய சிறந்த நிர்வாகியான ஜெயலலிதா ஆட்சியில் ஏதும் செய்யப்படவில்லை.




                         2011 ஆட்சி பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே இம்மானுவேல் சேகரன் அவர்களது நினைவு தினத்தை அனுசரிக்க கூடிய மக்களை காவல்துறை ஏவி சுட்டுக்கொன்றார், சென்ற ஆண்டு முத்துராமலிங்கம் சிலைக்கு தங்க கவசம் அணிவித்துள்ளார். தர்மபுரியில் மூன்று கிராமங்களை எரித்தவர்கள்,  இளவரசன்-திவ்யா இணையரை பிரித்தவர்களும்,  தினம், தினம் சாதி வெறியை தூண்டி வருபவர்களும் சுதந்திரமான நடமாடிவருகின்றார்கள். ஆனால் இளவரசனின் முதலாமாண்டு நினைவு தினத்தை அனுசரிக்க இருந்த மக்கள் மீது அடக்குமுறையை ஏவி, இன்று பாதிக்குமதிகமானோர் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்துள்ளார். சமூக ஒழுங்கை ஜெயலலிதா அவர்கள் இப்படித்தான் கட்டிக்காத்து வருகின்றார். தமிழக அரசு என்பது சாராயம் விற்றுக் கிடைக்கும் பணத்தால் தான் இயங்கிவருகின்றது, பொது மக்களுக்கு இடைஞ்சலாக இருக்கும் இது போன்ற சாராயக் கடைகளை மூடக்கோரி நாளுக்கு நாள் போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன, திண்டுக்கல்லில் நடைபெற்ற ஒரு போராட்டத்தில் அப்பகுதி சட்டமன்ற உறுப்பினர், தோழர்.பாலபாரதி கலந்து கொண்டார், காவல்துறை அவரையும் கைது செய்தது.  ஒவ்வொரு நாளும் குடிகாரர்களின் எண்ணிக்கையை, குடிக்கும் அளவை உயர்த்தும் ஒப்பற்ற சாதனையைத் தான் இந்த மூண்றாண்டுகளில் ஜெயா செய்துள்ளார்.




         ஜெயலலிதாவின் புதிய பரிணாமம் என்பது "புதிய மொந்தையில் பழைய கள்ளேயன்றி" வேறல்ல.  அவர்  என்றுமே முதலாளிகளின் விசுவாசி, பார்ப்பணீயத்தின் சகோதரி தான்.   கடந்த நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியைப் போல, அடுத்த சட்ட மன்றத் தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை அவரது கண்களில் தெரிகின்றது, அதற்காக அம்மா மருந்தகம் உள்ளிட்ட அடுத்த கட்ட திட்டங்களை அவர் அறிவிக்கத் தொடங்கிவிட்டார்.  சரியான மாற்று கட்சிக்காக‌  தமிழகம் காத்திருக்கின்றது.  தினந்தோறும் நடைபெறும் மக்கள் போராட்டங்களே மாற்று. மக்கள் போராட்டங்களுக்கே அரசை, அதிகாரங்களை மாற்றும் வல்லமை உண்டு. மக்கள் போராட்டங்கள் ஓங்குக...


நற்றமிழன்.ப‌

நன்றி: கேலி சித்திர கலைஞர்.பாலா

Thursday, July 17, 2014

நேற்று IBM...இன்று Bally Technologies...நாளை ???



தகவல் தொழில்நுட்பத் துறைத் தொழிலாளர்களின் ஒவ்வொரு நாளும் விளையாட்டும், வேடிக்கையுமாகவே இருக்கும் என்று இருக்கும் பிம்பம் மீண்டும் ஒருமுறை சுக்குநூறாக உடைந்து சிதறியுள்ளது. ஆனால்,எந்தவித சத்தமோ, சிறு சலசலப்போகூட இல்லாமல் நடந்தேறியுள்ளது. இந்த முறையும் இது பற்றிய தகவல்கள் எதுவும் தகவல் தொழில்நுட்ப ஊழியர்களையோ, பொது மக்களையோ எட்டவில்லை, எட்டாதவண்ணம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த வாரம், பேலி டெக்னாலஜீஸ் (Bally Technologies) என்னும் தொழில்நுட்ப நிறுவனம் தன்னுடைய மொத்த பணியாளர்  எண்ணிக்கையில் 10 விழுக்காட்டிற்கும் மேலான ஊழியர்களை வேலையை விட்டுத் தூக்கியுள்ளது. இதற்கும் இந்த நிறுவனத்தின் சென்னை, பெங்களுரு கிளைகள் இரண்டையும் சேர்த்து மொத்தம் பணிபுரிபவர்கள் 1300 ஊழியர்கள்தான்.

இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையை நேரில் கண்ட ஊழியர் ஒருவர் பின்வருமாறு கூறினார்,"எப்போதும் போல பணிக்கு வந்து வேலை செய்து கொண்டிருந்த ஊழியர்களின் தளத்திற்குள், சிபிஐ ரெய்டு போல உள்நுழைந்த மனிதவள ஊழியர்கள் அடுத்த ஐந்து நிமிடங்களில் பணிநீக்கம் செய்யப்படவிருக்கும் ஊழியர்களை குற்றவாளிகளைப்  போன்று வெளியில் இழுத்துச் சென்றனர்."



பேலி டெக்னாலஜீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, "எங்கள் நிறுவனம் நட்டத்தில் இயங்கவில்லை. அண்மையில் நாங்கள் விலைக்கு வாங்கிய ஒரு நிறுவனத்தை உட்கொண்டு வரும் மறுசீரமைப்பின் ஒருபகுதியாகவே ஆட்குறைப்பு செய்துள்ளோம்" என்று கூறியுள்ளது.

சென்னை, பெங்களூர் உள்ளிட்ட கிளைகளில் 150 பேரோடு சேர்த்து, உலகம் முழுக்க 270 ஊழியர்களை, அதாவது நிறுவனத்தின் மொத்த மனித வளத்தில் 7 விழுக்காட்டைக் குறைக்கும் நடவடிக்கையினால் சந்தையில் தன் மதிப்பு சரிந்துவிடக் கூடாது என்பதற்காகவே இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

1.3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள தனது போட்டி நிறுவனமான SHFL எண்டெர்டைன்மெண்ட்(SHFL Entertainment) என்னும் நிறுவனத்தை அண்மையில் விலைக்கு வாங்கியது பேலி டெக்னாலஜீஸ்.

மென்மேலும் லாபம் சேர்க்க போட்டி நிறுவனத்தை கையகப்படுத்துவதையும், புதிய பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதையும் செய்து கொண்டே பணியில் இருந்த 150 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது பேலி டெக்னாலஜீஸ். இப்போது பணிக்கமர்த்தும் புதிய ஊழியர்களை வேறொரு காரணம் காட்டி வெளியே விரட்டமாட்டர்கள் என்று எந்தவொரு உத்திரவாதமும் இல்லை.




பேலி டெக்னாலஜீஸ் மட்டுமல்ல, புதிய ஊழியர்களையும்,கல்லூரி முடித்து வரும் இளம் பட்டதாரிகளையும், ஒப்பந்தத் தொழிலாளர்களையும் ஒருபக்கம் வேலைக்கு அமர்த்திக் கொண்டே, மறுபுறம் வெவ்வேறு காரணங்களைக் கூறி ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளன தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள்.

வேலையிழந்த ஊழியர்களுக்காக வருத்தப்படுவதோடு நில்லாமல்,எங்கள் நிறுவனத்தில் அவ்வாறு எல்லாம் இல்லை; எங்கள் நிறுவனம் ஒப்பீட்டளவில் நன்றாகவே நடத்துகிறது என்று நிறுவனப் பெருமை பேசுவதில் இருந்து வெளியில் வந்து தகவல் தொழில் நுட்பத் துறை ஊழியர்களாக ஒருங்கிணைவதன் அவசரமும், அவசியமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

வேறொரு நிறுவனத்தில் பணிநீக்கம் செய்தால் நான் ஏன் கவலைப்பட வேண்டும், என்னுடைய வேலைக்கு பங்கம் வந்தால்தான் கோபப்படுவேன் என்று இருந்தால் நாம் கோபப்பட்டு கொந்தளிக்கும் வேளையில் நமக்காக பேச யாரும் வரமாட்டார்கள் என்பதை ஒருமுறை நாம் மனதில் இருத்தி சிந்திக்க வேண்டும்.

நம்முடைய உரிமைகளை பாதுகாக்கவும், வென்றெடுக்கவும் தகவல் தொழில் நுட்பத் தொழிலாளர்கள் ஒன்றிணைவதின் அவசியத்தை இது போன்ற ஆட்குறைப்பு நடவடிக்கைகள் நமக்கு அறிவிக்கின்றன என்பதை உணர்ந்து செயல்படுவோம்.

கதிரவன்

Wednesday, July 16, 2014

என்ன நடக்கிறது பாலஸ்தீனத்தில்.....


இன்று பாலசுதீனத்தில் என்ன நடக்கின்றது என்பதைத் தெரிந்து கொள்ளும் முன்பு, வரலாற்றைச் சற்று பார்த்துவிட்டு வந்துவிடுவோம். பின்வரும் இவ்வரைபடம் 2010 வரையிலான பாலசுதீனத்தின் வரலாற்றை விவரிக்கின்றது. ஆயிரம் வார்த்தைகள் சொல்ல வேண்டியதை இந்த ஒரு படம் சொல்லிச் செல்கின்றது.



இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் யூதர்கள் தங்களுக்கென்று ஒரு நாட்டை(இசுரேல்) பாலசுதீன பூமியை பிழந்து பெறுகின்றார்கள். 1946ல் இசுரேல் உருவானது முதல், இன்று வரை பாலசுதீனம் கொஞ்சம், கொஞ்சமாகச் சூறையாடப்பட்டு இன்று ஜெருசெலமை ஒட்டிய சில நிலப்பரப்புகளும், மேற்கு கரைப்பகுதி மட்டுமே பாலசுதீனமாக உள்ளது. இதில் மேற்கு கரைப் பகுதி முற்றிலுமாக உலகத்தொடர்புகளற்று உள்ளது. சென்ற ஆண்டு மேற்கு கரைப்பகுதிக்கு உணவு கொண்டு வந்த ஒர் ஐரோப்பிய கப்பல், நடுக்கடலிலேயே இசுரேலியர்களினால் தாக்கப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டதை உங்களுக்கு நினைவு கூறுகின்றேன். உணவு வழங்கு வந்த தொண்டு நிறுவன கப்பலுக்கே இந்தக் கதி என்றால், அங்கு வாழும் மக்களின் நிலை என்ன என்பதை உங்களின் முடிவுக்கே விட்டு விடுகின்றேன்.


என்ன நடக்கிறது இன்று:

சில வாரங்களுக்கு முன்னர் மேற்கு கரை(காசா) பகுதியில் மூன்று இசுரேலிய மாணவர்கள் காணாமல் போகின்றார்கள், மேற்கு கரைக்குள் நுழைந்து இசுரேலிய படையினர் தேடியதில் மூவரின் உடல்களும் குண்டடிப்பட்ட நிலையில் கிடைக்கின்றன, இதற்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. அதற்கடுத்த நாள் காதீர் என்ற பாலசுதீன இளைஞர் இசுரேலிய வலது சாரி இயக்கத்தைச் சேர்ந்தவர்களால் உயிருடன் கொளுத்தப்படுகின்றார். பின்னர்  காதீரின் 15 வயது சகோதரன் இசுரேலிய காவல்துறையால் அழைத்துச் செல்லப்பட்டுக் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகின்றான், இதனைத் தொடர்ந்து ஹமாஸ் இயக்கம் இசுரேலின் மீது ஒர் ஏவுகணைத் தாக்குதலை நடத்துகின்றது, இசுரேல் ஹமாஸ் இயக்கத்தின் மீதான போர் என்ற பெயரில் கடந்த இரண்டு வாரங்களாக தோராயமாக‌ 200 பாலசுதீனர்களைக் கொன்றுள்ளது, கொல்லப்பட்டதில் பெரும்பகுதியினர் சிறு குழந்தைகள். பின்வரும் படத்தில் ஹமாஸ் வீசும் ஏவுகணையும், அதன் பாதிப்பும். இசுரேல் வீசும் ஏவுகணையும் அதன் பாதிப்பும் உள்ளன.



உலகின் அதி நவீன ஆயுதங்களை உற்பத்தி செய்து உலக நாடுகளுக்கு விற்பனை செய்யும் இசுரேலின் குண்டுகளுக்கும், ஏவுகணைகளுக்கும் முன்னால், ஹமாஸ் வீசும் ஏவுகணைகள் ஒரு தூசு, மேலும் ஏவுகணைகளைத் தாக்கி அழிக்கும் ஆயுதங்களை ஆயிரக்கணக்கில் குவித்து வைத்திருக்கின்றது இசுரேல். இதில் ஹமாஸ் வீசும் ஏவுகணைகள் ஒரு கட்டடித்தின் மீது வீசப்பட்டால் ஒரு சில செங்கல்களைச் சேதப்படுத்தலாம், மேலும் ஹமாஸ் வீசிய ஏவுகணைகள் லேசான சிராய்ப்புக் காயம் மட்டுமே ஏற்படுத்தக்கூடியவை, இதனால் இதுவரை ஒரு யூதர் கூடக் கொல்லப்பட்டதில்லை. ஆனால் இசுரேல் மேற்கு கரை மீது வீசிய குண்டுகள் என்பவை போரில் பயன்படுத்தப்படும் அதிபயங்கரக் குண்டுகள். விழும் இடத்தில் புல் பூண்டுகள் கூட மிஞ்சாது (படத்தைப் பார்க்கவும்) . அது மட்டுமின்றிப் போரில் தடை செய்யப்பட்டுள்ள வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளைக் கூடப் பாலசுதீன மக்கள் மீது இசுரேல் அனுதினம் வீசி வருகின்றது. பாஸ்பரஸ் எளிதில் தீப்பற்றிக்கொள்ளும் தன்மையுடைய வேதி பொருள், இந்தப் பாஸ்பரஸ் குண்டுகள் வீசப்படும் இடம் முழுவதும் தீப்பற்றிக்கொள்ளும் இதனால், அந்தப் பகுதியில் இருக்கும் அனைவரும் தீயில் கருகி எரிந்து விடுவார்கள். இந்தக் குண்டுகளை ஐ.நா வாகனங்கள் மீதும், பாலசுதீனப் பள்ளிக்கூடங்கள் மீதும் பலமுறை வீசியுள்ளது இசுரேல்...



இனப்படுகொலை:

இரண்டாம் உலகப்போருக்கு முன்னர் ஹிட்லரால் இனப்படுகொலைக்குள்ளாக்கப்பட்டவர்கள் யூதர்கள், இதைச் சித்தரிக்கும் பல திரைப்படங்கள் வந்துள்ளன. ஆனால் இந்தத் திரைப்படங்கள் வந்த காலங்கட்டங்களில் யூதர்கள் பாலசுதீனர்கள் மீதான இனப்படுகொலையைத் தங்களது அரசு மூலம் நடத்தத் தொடங்கிவிட்டனர். ஒர் இனப்படுகொலைக்குள்ளான ஒரு சமூகம் எப்படி இன்னொரு சமூகத்தை இனப்படுகொலை செய்கின்றது என்ற கேள்வி எழுப்பப்பட வேண்டும். இசுரேலின் அனுதினத் தாக்குதல்களுக்கு நடுவே பாலசுதீனர்கள் உயிர் வாழ்வதே ஒரு போராட்டம் தான். இக்கட்டுரையில் முதல் வரைபடத்தில் ஒவ்வொரு ஆண்டும் இசுரேல் பாலசுதீனப் பகுதியை விழுங்கி வளர்ந்தது கண்கூடாகத் தெரியும், இதை எதிர்த்து போராடிய பல்லாயிரம் மக்கள் கொல்லப்பட்டனர். பாலசுதீன கைதிகளைச் சோதனை எலிகளைப் போலப் பயன்படுத்துகின்றது இசுரேல் ஆராய்ச்சித் துறை, அதுமட்டுமின்றிப் பாலசுதீன கைதிகளின் உடல் உறுப்புகளை இசுரேல் திருடியும் வருகின்றது. ஒவ்வொரு மாதமும் குறைந்தது நூறு பேராவது கொல்லப்பட்டு வருகின்றனர். தங்களைக் காத்துக் கொள்ளக் காவல்துறை கூட இல்லாத பாலசுதீனியர்களின் மீது போர் புரிகின்றோம் என இசுரேல் கூறுவதும், நாங்கள் பாலசுதீனியர்களை இனப்படுகொலை செய்கின்றோம், செய்வோம் என்பதும் வேறு வேறல்ல....



உலக நாடுகளும் ஊடகங்களும்:

இன்றைய உலக ஒழுங்கு என்பது 90க்குப் பின் மாறியதாகத் தோற்றம் கொண்டிருந்தாலும், இன்றும் அமெரிக்காவைச் சுற்றியே இயங்கி வருகின்றது. சீனா, இரசியா ஒரு புறம் வளர்ந்து வந்தாலும் இன்னும் உலக ஒழுங்கு மாறவில்லை. அமெரிக்காவின் செல்லப்பிள்ளை இசுரேல் என்பது அரசியலறிந்த அனைவருக்கும் தெரிந்த செய்தி. ஐ.நாவில் இசுரேலின் மீது கொண்டு வரப்படும் எந்த ஒரு தீர்மானத்தையும் அமெரிக்கா, இசுரேல் கூட்டணி தோற்கடிக்கும், அதையும் மீறி ஐ.நாவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களைக் கால் தூசளவிற்குக் கூட இசுரேல் மதித்ததில்லை. பாலசுதீனியர்கள் இசுலாமியர்கள் தானே, இந்த அரபு நாடுகள் எல்லாம் இவர்களுக்கு ஆதரவளிக்கும் தானே என்று கேள்வி கேட்கும் பொதுமக்களுக்கு அரபு நாடுகளில் ஈரான், சிரியா தவிர்த்து எல்லா நாடுகளும் அமெரிக்காவின் அரசியலையே பின்பற்றுகின்றன அல்லது பின்பற்ற வைக்கப்படுகின்றன என்பதையும் இங்கே நினைவு கூறுகின்றேன். அருகிலுள்ள எகிப்து மட்டும் தற்சமயம் இந்தப் போரை (இனப்படுகொலையை) ஒர் அமைதி உடன்படிக்கையின் கீழ் நிறுத்தும் முயற்சியின் கீழ் செயல்பட்டு வருகின்றது, இதற்கு அமெரிக்கா, இசுரேல் எப்படிப் பதிலளிக்கும் என்பது கேள்விகுறியே....



உலக ஊடகங்களில் 90 விழுக்காட்டுக்கும் மேலாக யூதர்களின் கட்டுப்பாட்டிலே தான் உள்ளது, அதனால் எந்த ஊடகங்களிலும் பாலசுதீனர்கள் கொல்லப்பட்டது வராது, வேண்டுமென்றால் ஹமாசின் ஏவுகணை தாக்குதலில் யூதர் ஒருவருக்குக் காலில் லேசாகச் சிராய்ப்பு ஏற்பட்டது வேண்டுமானால் செய்தியாக வரலாம். ஊடகங்களில் வருவது மட்டும் தான் சரியான செய்தி என்று நம்பிக்கொண்டிருக்கும் பெரும்பான்மை மக்களுக்குப் பாலசுதீனியர்கள் தீவிரவாதிகளாகவும், இசுரேல் நல்லரசாகவும் காட்சியளிக்கும் .( புலிகள் தீவிரவாதிகளாகவும், இலங்கை அரசு நல்லரசாகவும் இந்திய ஊடகங்கள் இந்தியர்களிடையே கட்டமைத்தது போல....) மற்ற படி ஊடக அறமெல்லாம் அமெரிக்காவுக்கும், இசுரேலுக்கும் ஆதரவாகக் கூவுவது மட்டுமே. இதில் அத்திப் பூத்தார் போல அல்ஜசீரா போன்ற சில ஊடகங்கள் உள்ளன. இவர்கள் தான் இலங்கையின் உண்மை முகத்தையும் காட்டியவர்கள், இன்று இசுரேலின் உண்மை முகத்தைத் தொடர்ந்து பதிவு செய்து வருகின்றவர்கள்....


இந்தியாவும், தமிழர்களும்......

உலகில் சீனாவிற்கு அடுத்து மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியா, உலகின் மிகப்பெரிய சனநாயக நாடு என்று ஊடகங்களால் விதந்தோதப்படுவதுமுண்டு. 110 கோடி மக்கள் தொகை கொண்ட இந்த நாடு, இதுபோன்ற இனப்படுகொலை நடக்கும் பொழுது யாருக்கும் ஆதரவாகப் பேசுவதில்லை என்பதையே முடிவாகக் கொண்டு இயங்கிவருகின்றது. "ஒரு இனப்படுகொலை நடக்கும் பொழுது நடுநிலைமை என்பது, இனப்படுகொலை செய்பவர்களுக்கு ஆதரவேயன்றி வேறல்ல" என்ற டெஸ்மாண்ட் டூட்டுவின் வரிகளின் படி, இந்தியா இசுரேலின் இனப்படுகொலையைத் தனது கள்ள மௌனம் மூலம் ஆதரித்து வருகின்றது என்பதே உண்மை. அதுமட்டுமின்றித் தில்லியிலும், காசுமீரிலும் இசுரேலை கண்டித்து ஊர்வலம் சென்றவர்களின் மீது காவல்துறை தாக்குதலை நடத்தி, இந்துத்துவமும், சியோனிசமும், பாசிசமும் வேறு வேறல்ல, எல்லாம் ஒன்றே என நமக்குத் தெளிவுபடுத்துகின்றது.


இசுரேலுக்குத் தனது கள்ள மௌனம் மூலம் ஆதரவளிக்கும், இந்திய அரசை எதிர்த்து போராடுவதே ஒவ்வொரு இந்திய, தமிழக மக்களின் சனநாயகக் கடமையாகும்.



உலகெங்கும் நடக்கும் போராட்டங்கள்:

இசுரேல் பாலசுதீனர்கள் மீது நடத்தி வரும் இனப்படுகொலை எதிர்த்து உலகெங்கிலும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அரசுகள் எப்பொழுதும் மற்றொரு அரசைத் தான் ஆதரிக்கும், அவர்கள் இனப்படுகொலை செய்யும் பொழுதும், அதே நிலை தான், உலகெங்கும் உள்ள மக்கள் நடத்தும் போராட்டங்கள் தான் அரசை அச்சுறுத்தும் ஒரே ஆயுதம், ஒவ்வொரு நாட்டில் உள்ள மக்களும், அந்தந்த நாடுகளின் அரசை எதிர்த்துப் போராடி, அவ்வரசுகளின் நிலைப்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கி அதை மாற்றச்செய்ய வேண்டும்.

மனித குலத்திற்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இசுரேல் உள்ளிட்ட அரசுகள் தான் உலகில் மிகப்பயங்கரமான அமைப்புகளாகும்.  இவற்றைப் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் பணியை உலகெங்கிலும் உள்ள எல்லா சனநாயக, மனித உரிமை, இடதுசாரி இயக்கங்களும் தங்கள் முதல்பணியாக எடுத்துச் செயல்பட வேண்டும்.எப்படி அரசுகள் தங்களுக்குள்ளே ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளனவோ, அது போல உலகெங்கும் வாழும் மக்களும், அரசுகளற்ற தேசிய இனங்களும்(பாலசுதீனம், காசுமீர், ஈழம்........) ஒரு கூட்டணியை உருவாக்கித் தொடர்ந்து போராடி சனநாயகத்தையும், தேசிய இனங்களின் தன்தீர்வுரிமையையும் மீட்டெடுப்போம், இனப்படுகொலை இல்லா மனித சமுதாயத்தை நோக்கி பயணிப்போம்.


நற்றமிழன்.ப

Monday, July 14, 2014

தமிழக அரசே உன் சாதி என்ன?




அன்புமணி அமைச்சராகவும், சில பா.ம.க-வினர் எம்.எல்.ஏ, எம்.பி ஆவதற்காக‌ பா.ம.க திட்டமிட்டு நடத்திய காதல் எதிர்ப்பு பிரச்சாரத்தினூடாகக் காதல் திருமணம் செய்திருந்த இளவரசன், திவ்யா இவர்களைப் பிரிக்க வேண்டியும், பா.ம.கவினர் நடத்திய சாதி வெறி வன்முறையில் நத்தம் காலணி, கொண்டாடம் பட்டி, அண்ணாநகர் என்ற மூன்று கிராமங்களில் இருந்த 400க்குமதிகமான வீடுகள் நாட்டு வெடிகுண்டு வீசி அழிக்கப்பட்டன, இத்தோடு நிறுத்தாமல் திருமணமான இளவரசன்- திவ்யா இணையரை பிரித்து(இதில் நீதிமன்றத்தின் பங்குமுண்டு) இளவரசனை கொலை செய்து வட மாவட்டங்களில் சாதி வெறியை தங்களது சுயநலத்துக்காகத் தூண்டி விட்டது பா.ம.க . இந்த ஆதிக்கச் சாதி வெறியை பா.ம.க சென்ற நாடாளுமன்றத்தேர்தலில் வாக்குகளாக அறுவடையும் செய்தது. அன்புமணி தர்மபுரியில் வெற்றி பெற்றார், சிலர் இரண்டாமிடம் பிடித்தனர், பலர் மூன்றாமிடம் பிடித்தனர். "ருசி கண்ட பூனை சும்மா இருக்காது" என்பது போல அண்மையில் மதுராந்தகம் அருகிலுள்ள நுகும்பல் என்ற கிராமத்தை திட்டமிட்டு அழித்துள்ளது இந்தக் கும்பல். அதுமட்டுமின்றி வட மாவட்டங்களில் பல சாதி வெறித் தாக்குதல்களை ஒடுக்கப்பட்ட மக்கள் மீது அன்றாடம் நிகழ்த்தி வருகின்றனர்.


2011ல் தோழர்.இம்மானுவேல் சேகரன் அவர்களது நினைவுதினத்தன்று அவருக்கு அஞ்சலி செலுத்த கூடிய மக்களின் மேல் திட்டமிட்ட வகையில் அரச வன்முறையை ஏவப்பட்டு ஆறு பேர் கொல்லப்பட்டனர். கடந்த ஆண்டு முத்துராமலிங்கத்தின் நினைவு தினத்தன்று ஜெயலலிதா அவரது சிலைக்குத் தங்க கவசம் அணிவித்தார். 2012 சித்திரை முழு நிலவு மாநாட்டில் சாதி வெறியைத் தூண்டும் வகையில் பேசிய காடு வெட்டி குரு, இராமதாஸ் போன்றோர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டம் பதியாமல், கொடுக்கப்பட்ட நேரத்திற்கு அதிகமாகக் கூட்டம் நடத்தினார்கள் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிந்ததன் மூலம், நாங்கள் உங்களுக்கு ஆதரவாகத் தான் உள்ளோம் என்று அவர்களுக்குச் சமிஞ்சை கொடுத்தது தமிழக அரசு. இதைத் தொடர்ந்து நவம்பரில் நத்தம் காலணி, கொண்டாடம்பட்டி, அண்ணா நகர் உள்ளிட்ட மூன்று கிராமங்கள் சாதி வெறியர்களினால் அறு மணி நேரத்துக்கும் மேலாகக் கொள்ளையடிக்கப்பட்டும், ஒவ்வொரு வீடும் பெட்ரோல் வெடிகுண்டுகள் வீசி அழிக்கப்படும் வரை தமிழக அரசும், காவல் துறையில் கைக்கட்டி வேடிக்கைப் பார்த்தன. அதுமட்டுமின்றி ளை திட்டமிட்டு வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யாமல் அவர்கள் மேலும் பல வன்முறைகளில் ஈடுபட ஊக்குவித்தும் வருகின்றது. இப்பொழுது இளவரசன் நினைவு தினத்தை ஒரு கருவியாகப் பாவித்து அரசு தொடர் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

முதலில் தர்மபுரி மாவட்டம் முழுக்க 144 தடையுத்தரவு, சாதி வெறியர்கள் மூன்று கிராமத்தை தாக்கும் போதும், அங்குப் பதட்டமான சூழ்நிலை நிலவிய போதெல்லாம் அதை மௌனமாக ஆதரித்து , ஊக்குவித்த அரசு, இன்று இளவரசனின் நினைவு தினத்தில் யாரும் கலந்து கொள்ளக்கூடாதென்று 144 தடையுத்தரவை விதித்தது. அடுத்து சூன் 28ஆம் திகதி ஊர்த்தலைவர் உள்ளிட்ட ஐவரைக் கைது செய்தது, , அடுத்து ஊரில் உள்ள இளைஞர்கள் இளவரசன் நினைவுதினத்தன்று குண்டு வைக்கத்திட்டமிருந்தார்கள் என்று பொய்ப்புகார் சுமத்தி பலரைக் கைது செய்தனர், இத்தோடு நிறுத்தாமல் நத்தம்காலணியிலிருந்து பிழைப்பிற்காகப் பெங்களூர் வந்து பணிபுரிந்து கொண்டிருந்த ஐந்து நபர்களைப் பெங்களூர் பதுங்கியுள்ளனர் என்ற குற்றம் சாட்டி கைது செய்யப்பட்டுள்ளனர்.





இப்பொழுது இளவரசன் நினைவு தினத்தை ஒரு கருவியாகப் பாவித்து அரசு தொடர் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. முதலில் தர்மபுரி மாவட்டம் முழுக்க 144 தடையுத்தரவு, சாதி வெறியர்கள் மூன்று கிராமத்தை தாக்கும் போதும், அங்குப் பதட்டமான சூழ்நிலை நிலவிய போதெல்லாம் அதை மௌனமாக ஆதரித்து , ஊக்குவித்த அரசு, இன்று இளவரசனின் நினைவு தினத்தில் யாரும் கலந்து கொள்ளக்கூடாதென்று 144 தடையுத்தரவை விதித்தது. அடுத்து சூன் 28ஆம் திகதி ஊர்த்தலைவர் உள்ளிட்ட ஐவரைக் கைது செய்தது, , அடுத்து ஊரில் உள்ள இளைஞர்கள் இளவரசன் நினைவுதினத்தன்று குண்டு வைக்கத்திட்டமிருந்தார்கள் என்று பொய்ப்புகார் சுமத்தி பலரைக் கைது செய்தனர், இத்தோடு நிறுத்தாமல் நத்தம்காலணியிலிருந்து பிழைப்பிற்காகப் பெங்களூர் வந்து பணிபுரிந்து கொண்டிருந்த ஐந்து நபர்களைப் பெங்களூர் பதுங்கியுள்ளனர் என்ற குற்றம் சாட்டி கைது செய்யப்பட்டுள்ளனர்.


தமிழகத்தின் வரலாறெங்கிலும் எந்த அரசும் ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் துணை நின்றதில்லை, அது காங்கிரசாக இருந்தாலும் சரி, திமுகவாக இருந்தாலும் சரி, அதிமுகவாக இருந்தாலும் சரி. கீழ் வெண்மணியும், தாமிரபரணியும், திண்ணியமும் நமக்கு உணர்த்துவது இதைத் தான். ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் துணை நிற்கவேண்டிய அரசு, ஒடுக்குபவர்களுக்குத் துணை நின்று, தன் பங்குக்கு மேலும் ஒடுக்குகின்றது. இங்கே நத்தம் காலணியில் முன்பு நக்சல்கள் இருக்கும் பொழுது இது போன்ற சாதிய ஒடுக்குமுறைகள் இல்லை, ஒரு சமத்துவமான சமூகமாக மக்கள் வாழ்ந்து வந்தனர். தமிழக அரசு நக்சல்களை அழித்த பிறகு சாதிய பிரச்சனைகள் உருவாகின்றன. முன்பு நக்சல்பாரி கிராமங்களான இம்மூன்று கிராமங்களூம் தாக்கப்பட்டதில் அரசிற்கும், சாதி வெறியர்களூக்கும் கள்ள கூட்டு உள்ளது என்பது திண்ணம்.


வட தமிழகத்தில் வரவிருக்கும் அனல் மின்நிலையங்கள், மிகப்பெரிய தொழிற்சாலைகள், சாயப்பட்டறைகள் போன்றவற்றினால் வாழ்வாதாரத்தை இழக்கவிருக்கும் பெரும்பான்மை மக்கள் ஒன்றிணைந்து போராடினால் அரசுக்குப் பிரச்சனை என்பதால் இங்கே சமூகப் பிளவை சாதி வெறி மூலம் அரசு திட்டமிட்டு வளர்ந்து வருகின்றது . இதைத் தமிழகத்தின் எதிர்கட்சியாகக் கருதப்படும் திமுகவோ, கைகட்டி வேடிக்கைப் பார்க்கின்றது. சனநாயக ஆற்றல்களும், இடதுசாரி இயக்கங்களும், திராவிட இயக்கங்களும் ஒன்றிணைந்து இதை முறியடிப்போம். உழைக்கும் மக்களே உங்களைச் சாதி வெறியூட்டி அதன் மூலம் அரசியல் இலாபமடையை நினைக்கும் இராமதாசையும், ஜெயலலிதாவையும் புறக்கணிப்பீர், ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தந்து வட தமிழகத்தில் பாசிசத்திற்கும், பெரு முதலாளிச் சுரண்டல்களுக்கும், சாதி வெறிக்கும் எதிரான போராட்டத்தை முன்னெடுப்பீர்.

"அரசு அதிகாரம் என்பது ஆளும் வர்க்கங்கள், நிலவுடைமையாளர்களும், முதலாளிகளும் தங்களுடைய சமூகச் சலுகைகளைப் பாதுகாப்பாதற்குத் தமக்கென்று ஏற்படுத்திக் கொண்டுள்ள அமைப்பு முறை என்பதைக் காட்டிலும் கூடுதலான வேறு ஒன்றல்ல - ஏங்கல்ஸ்  (தேர்வு நூல்கள் தொகுதி 4, பக்கம் எண்-185)"

நற்றமிழன்.ப‌